அறியப்படாத தமிழகம்/தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்

விக்கிமூலம் இலிருந்து

5. தமிழகப் பௌத்தம் : எச்சங்கள்

தமிழ்நாட்டில் இன்றும் படித்தவர்கூட இப்படித் தான் சொல்கிறார்கள்: “சமணமும் பௌத்தமும் வட நாட்டில் பிறந்து வளர்ந்த மதங்கள். தமிழ்நாட்டிற்கும் அவற்றிற்கும் சம்பந்தம் இல்லை." உண்மையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். கடைக்கோடிச் சிற்றூர்வரை அவை பரவி இருந்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் தோன்றிய பிறகு பௌத்த மதம் படிப்படியாக மறைந்தது. இன்றளவும் வடமாவட்டங்களில் குறிப்பாக, திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சமணர்களாக வாழ்கிறார்கள். இப்பகுதியில் சமணக் கோயில்கள் உள்ளன. இச்செய்திகூடப் பலர் அறியாததாக இருக்கலாம்.

ஆனாலும் ஒரு காலத்தில் தமிழக மக்களின் பெரும் பகுதியினர் சமண பௌத்த மதங்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தனர். இந்த உண்மையைக் காட்டும் தொல்லெச்சங்கள் இன்றும் இருக்கின்றன. சைவ, வைணவ, சுமார்த்தத் துறவிகள் துறவுக்கு அடையாளமாகச் சிவப்பு ஆடை அணிகின்றனர். துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவை சமண பௌத்த மதங்கள்தாம். பௌத்த மதத்தின் துறவிகள்தாம் முதலில் செவ்வாடை அணிந்தவர்கள். ‘சீவர’ ஆடை அணிந்தவர்கள் என்று அவர்களைத் தேவாரம் கண்டிக்கிறது. பௌத்த மதம் அழிந்த பிறகு சைவ, வைணவ, சுமார்த்தத் துறவிகள் சிவப்பு ஆடை அணியத் தொடங்கினர். துறவிக்குச் செவ்வாடை என்பது பௌத்த மதம் தந்ததாகும்.

பௌத்த மதம் தந்த மற்றொரு வழக்கம் தலையினை மொட்டையடித்துக் கொள்வது. வேத, புராணங்களிலோ தேவார, திவ்வியப் பிரபந்தங்களிலோ இவ்வழக்கத்தைப் பற்றிய பேச்சே இல்லை. திருப்பதி, பழநி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் சென்று மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் மக்களிடையே பரவலாக உள்ளது. (ஆனால் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் இவ்வழக்கத்தை ஏற்றுக்கொள்ள வில்லை என்பது குறிக்கத்தகுந்தது.) தலை முடியினைப் பௌத்தத் துறவிகள் மழிகத்தியினால் களைந்து கொள்வார்கள்.

பௌத்த மதத்தின் துறவிகள் கையில் வைத்திருக்கக்கூடிய எட்டுப் பொருள்களில் தலைமழிக்கும் கத்தியும் ஒன்று. மதத்தின் பெயரால் தலைமுடியைப் புனிதத்தலங்களில் மழித்துக் கொள்ளும் வழக்கத்தைப் பௌத்தத் துறவிகளிடமிருந்துதான் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டனர்.

அரச மரம் பௌத்தர்களுடைய புனிதச் சின்னமாகும். பௌத்த மதத்தில் அரசமரம் ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. அதைப் பின்பற்றித் தமிழர்களும் அரசமர வழிபாட்டினைக் கைக்கொண்டிருக்கிறார்கள். பௌத்த மதம் தமிழ்நாட்டில் செழித்திருந்த ஊர்களில் ஒன்று போதி மங்கை எனப்படும். ‘சாக்கியர்தம் போதிமங்கை' என்று இந்த ஊரை அப்பர் தேவாரம் குறிப்பிடுகின்றது. போதிமரம் என்பது அரசமரத்தைக் குறிக்கும்.

தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் ‘பட்டிமண்டபம்’ என்ற கலைவடிவம் பௌத்த மதத்திலிருந்து பிறந்தது. பிற மதவாதிகளோடு வாதம் நடத்திவென்று தங்கள் மதத்தைப் பரப்புவது பௌத்தத் துறவிகளின் வழக்கம். ஒரு ஊருக்குள் நுழைகின்ற பௌத்தத் துறவி, ஊர்ப்பொது இடத்தில் அரசமரத்தின் கிளை ஒன்றினை நாட்டிவிட்டுப் பிற சமயவாதிகளை வாதத்திற்கு அழைப்பது வழக்கம். 'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என்று வரும் மணிமேகலை அடிகள், ‘பட்டிமண்டபம்’ என்பது சமயக் கருத்துக்களை விவாதிக்கும் இடம் என்று காட்டுகின்றன.

ஆங்கிலக் கல்வி வருவதற்கு முன்னர் குருகுலங்களே பள்ளிகளாக இருந்தன. இக்குருகுலங்களில் பௌத்தத் துறவிகளும் கற்றுக்கொடுத்தனர். இக்குருகுலத்து மாணவர்களுக்கு அமாவாசை (கார் உவா) நாளும், பௌர்ணமி (வெள் உவா) நாளும் விடுமுறை நாள்களாகும். இந்த நாள்களில் ஒரு வட்டாரத்தில் உள்ள பௌத்தத் துறவிகள் அனைவரும் கூடிச் சங்கக் கூட்டம் நடத்துவர். பௌத்தத் துறவிகள் அதற்குச் செல்லவேண்டி இருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பௌத்தம் தமிழ்நாட்டில் மறைந்த பிறகும் திண்ணைப் பள்ளிகளில் இந்த நாள்களே விடுமுறையாகக் கொள்ளப்பட்டு வந்தன. இந்த உவா நாள்களில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அரிசியையும், காய்கறிகளையும் காணிக்கையாகக் கொண்டு கொடுத்தனர். இதுவே வாவரிசி (உவா அரிசி) எனப்படும் காணிக்கை யாகும். இன்றும் இலங்கையில் வாழும் பௌத்தச் சிங்களர் 'போயா தினம்’ என்று இந்த நாட்களை அறிவிப்பதை இலங்கை வானொலி மூலம் அறியலாம்.

உவா நாள் கூட்டங்கள் நடந்த மலைப்பகுதிகளுக்கு உவாமலை அல்லது ஓவாமலை என்று பெயர். இன்றும் தமிழ்நாட்டில் எண்ணற்ற மலைப்பகுதிகளுக்கு உவாமலை அல்லது ஓவாமலை என்று பெயர் வழங்கப்படுகிறது.

இவையெல்லாம் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த பௌத்த மதத்தின் எச்சங்கள் ஆகும். இவைமட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் உலகில் சூறாவளியாகக் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' ஆகிய சொற்கள் உருவெடுத்தன. இவை புத்தம், தர்மம், சங்கம் ஆகிய பௌத்த மும்மைக் கோட்பாட்டின் மறுபிறவியேயாகும் என்பதைக் கூர்ந்து சிந்தித்தால் உணரலாம்.

சமணம்

‘பள்ளி' என்ற சொல்லுக்குப் படுக்கை என்று பொருள். 'பள்ளியறை’ என்றால் படுக்கையறை. 'பள்ளி கொள்ளுதல்' என்றால் உறங்குதல். இந்தச் சொல் எப்படிக் கல்வி நிலையத்தைக் குறிப்பதாயிற்று?

கிறித்துவுக்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகம் வந்த சமண மதத்தின் திகம்பரத் துறவிகள் மலைக்குகைகளில் தங்கத்தொடங்கினர். சமண மதத்தின் கொடையாளர்கள் இவ்வகையான ஆடையில்லாத் துறவிகளுக்காக அவர்கள் தங்கும் குகையின் தரைப் பகுதியைப் படுக்கைபோலச் சமதளமாகச் செதுக்கிக் கொடுத்தனர். அந்தக் குகைகளுக்கு அருகில் மழைத் தண்ணீர் தேங்குவதற்கு ஒரு சிறிய குழி வெட்டப்பட்டிருக்கும். அந்தத் துறவிகளிடம் நீருண்ணும் பாத்திரம்கூடக் கிடையாது. அவர்கள் எட்டு நாள் (அட்டோபவாசம்), பதினாறு நாள் (சோடசோபவாசம்) உண்ணா நோன்பு இருக்கும் வழக்கம் உடையவர்கள். உண்ணா நோன்புக் காலத்தில் அருகில் இருக்கும் குழியிலுள்ள மழைநீரைக் கையினால் சேந்தி அருந்துவார்கள். மக்களின் மருத்துவ உதவிக்காகச் சில மூலிகைகளும் ஏடுகளும் மட்டும் அந்தக் குகையில் இருக்கும். காலத்தால் முற்பட்ட தமிழ் (தமிழி தமிழ் பிராமி) எழுத்துக்கள் இவ்வகை சமணக் குகைத் தளங்களிலிருந்தே இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இப்படிப்பட்ட குகைத் தளங்களை மதுரைக்கருகில் அழகர் மலை, ஆனைமலை,திருப்பரங்குன்றமலை, திருவாதவூர், சமணமலை, நாகமலை (மதுரை காமராசர் பல்கலைக்கழக மலையின் மேற்குப் பகுதி) ஆகிய டங்களில் இன்றும் காணலாம். நாகமலையிலுள்ள புளியங்குளம் குகையில் மட்டும் ஐம்பது படுக்கைகளுக்கு மேலாக வெட்டப்பட்டுள்ளன.

ஆடையில்லாச் சமணத் துறவிகள் பசித்த நேரத்தில் மட்டும் அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து கையினிற் பிச்சை ஏற்று உண்டு செல்வர். கல்வி, மருந்து, உணவு ஆகிய மூன்று கொடைகளும், அடைக்கலம் அளித்தலும் சமண மதத்தின் தலையாய அறங்கள் ஆகும். இவற்றுள் சோற்றுக் கொடை (அன்ன தானம்) இல்லறத்தார்க்கு மட்டுமே இயலும்.

‘ஞானதானம்’ செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு ஆடையில்லாத் துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். குகைத்தளத்தில் பிள்ளைகள் அமர்வதற்கு வேறு இடம் கிடையாது. பள்ளித் தளத்தின் (கற்படுக்கைகளின்) மீதுதான் அமர்ந்திருக்க இயலும். பள்ளிகளின்மீது பிள்ளைகள் அமர்ந்து கற்றதனால் கல்விக் கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று.

'கல்லூரி' என்பது இன்று உயர்கல்வி நிலையத்தைக் குறிக்கிறது. ‘கல்லூரி நற்கொட்டிலா' (995) என்ற சீவக சிந்தாமணித் தொடரிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டது. சிந்தாமணி சமண நூலாகும்.

தென் தமிழ்நாட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சமணப் பள்ளிகள் இருந்தன. இங்கே ஆண் துறவிகளைப் போலவே பெண் துறவிகளும் ஆசிரியராக இருந்துள்ளனர். ‘கனகவீரக் குரத்தியர்', 'பட்டினிக் குரத்தியடிகள்' எனக் கல்வெட்டுக்கள் ‘குரத்தி’ (குரவன் என்பதன் பெண்பாற் சொல்) எனும் பெயரோடு இவர்களைக் குறிக்கின்றன. 'மாணாக்கன்’, 'மாணாக்கி' ஆகிய சொற்களும் சமணக் கல்வெட்டுக்களில்தாம் பெரும்பாலும் காணப்படுகின்றன. பெண் துறவிகளிடத்தில் மாணாக்கர்களும் பயின்ற செய்தியைக் கழுகுமலைக் கல் வெட்டுக்களால் அறிகிறோம். எனவே, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் குறிப்பாகப் பெண் கல்வி வளர்ச்சிக்கும் சமணம் தொண்டாற்றிய செய்தியை உணரலாம்.

சமணத்தினளவு பிற மதங்கள் கல்வியைப் பெருமைப்படுத்த வில்லை. கல்வி கற்பதற்குப் பிறப்பினை (சாதியை) ஓர் அளவு கோலாகச் சமணம் கொண்டதில்லை. எனவே அனைவர்க்குமான கல்வி என்ற கோட்பாடு சமணத்திலிருந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும்.

பிற்காலச் சமணத்தில் கல்விக்கென்றே ‘வாக்தேவி’ என்ற தெய்வமும் பிறந்தது. இதுவே வைதிக நெறியின் 'சரஸ்வதி'க்கு முன்னோடியாகும் என அறிஞர்கள் கருதுவர். ‘சரஸ்வதி'க்குரிய வெள்ளுடை என்பது சமணப் பெண் துறவிகளின் 'வெள்ளை யாடை' (சுவேதாம் பரம்) மரபிலிருந்து வந்ததாக இருக்கலாம்.

கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் சமணத்தின் பங்கு மிகப் பெரியது என்பதை இலக்கிய மாணவர்கள் அறிவர்.

தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் உண்ணா நோன்பு என்பது மிகப் பெரிய போராட்டக் கருவியாயிற்று. உண்ணா நோன்புக் காலத்தில் தண்ணீர் மட்டும் அருந்துவது சமணர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதாகும்.

புலால் உண்ணாமையை ஓர் அறமாகக் கற்பித்ததும் சமண மதமே. புலால் தவிர்ந்த உணவு சைவ உணவு என வழங்கப்படுகிறது. ஈழத்தில் அதற்கு ‘ஆரத உணவு' என்று பெயர். ஆரதர் என்பது ஆருகதர் (அருகன் அடியாரான சமணர்) என்ற சொல்லின் திரிபு.

இன்று பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறந்த நாளாகும். அதையே வைதிக மரபுகள் நரகாசுரன் அழிந்த நாள் என்கின்றன.

தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் இயக்கி வழிபாடு சமண மதத்திலிருந்து பிறந்ததாகும். சமணத் தீர்த்தங்கரர்களின் பணிமகளிர் ‘இயக்கியர்' எனப்படுவர். கையில் குழந்தையுடன் இன்று வழிபடப்படும் இயக்கி சமண மரபுகளில் அம்பிகாயக்ஷி எனப்படும். வட மாவட்டங்களில் ஜ்வாலா மாலினி (பொன்னியக்கி) என்று குறிக்கப்படும். அப்பாண்டை நாதர் உலா எனும் சமண நூல் இச்சிறு தெய்வத்தைப் “பன்னு தமிழ் வாய்ச்சி பழமறைச்சி” எனப் புகழ்கிறது. மதுரை, முகவை மாவட்டங்களில் காணப்பெறும் சாத்தன் (ஐயனார்) வழிபாடு சமண மதம் தந்ததாகும். எனவேதான் ஐயனார், ஏனைய சிறுதெய்வங்களோடு கலந்து அமர்ந்திருந்தாலும் இரத்தப் பலி பெறாத தெய்வமாகத் தனித்து விளங்குகிறார். ஐயனார் கையிலிருந்த செண்டு என்னும் (வினாக்குறிபோல் அமைந்த) கருவியை இப்போது சாட்டையாக மாற்றிவிட்டனர்.

முனீசுவரன் என்றும் தவசி என்றும் கிராமப்புறங்களில் வழிபடப்படும் நிர்வாணத் துறவிகளின் கற்சிலைகள் அனைத்தும் சமணமதத் தீர்த்தங்கரர்களின் சிலைகளே ஆகும்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு 19ஆம் நூற்றாண்டில் கிறித்தவம் தொண்டாற்றியதைப் போல கிறித்துவுக்கு முன் பின்னாக மூன்று நூற்றாண்டுக் காலம் சமண மதம் கல்வித் தொண்டாற்றியுள்ளது. சமண மதம் வடமொழி வேதத்தை ஏற்றுக்கொள்ளாத மதமாகும். எனவேதான் சம்பந்தர் போன்ற வைதிக நெறியாளர்கள் சமணத்தை எதிர்த்து நின்றனர்.

கடுமையான துறவை வலியுறுத்தியதும், தொல்பழைய சடங்குகளை நிராகரித்ததும், ஆடல் பாடல் போன்ற நுண் கலை உணர்வுகளை ஏற்றுக்கொள்ளாததும், புலால் உணவை முற்றிலுமாக மறுத்ததும், பாண்டிய, சோழப் பேரரசுகள் வேத நெறிக்கு ஆதரவு அளித்ததும் சமண மதம் தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடையக் காரணங்களாயின.

துறவு

துறவு என்னும் சொல் திருமணம் வேண்டாத வாழ்க்கையைக் குறிப்பதாகவே தமிழர்களால் இதுவரை கருதப்படுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியப் பகுதியில் பிறந்த சமணம், பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களே உலகத்தில் முதன்முதலாகத் ‘துறவு’ நெறியை வலியுறுத்தியவையாகும்.

சமண பௌத்தத்திற்கு முந்திய வைதிக நெறியில் திருமணம் வேண்டாத வாழ்க்கைக்குத் தனித்த மரியாதை எதுவும் கிடையாது. பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என வரிசைப்படுத்தி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் குடும்ப வாழ்க்கையினையும் விட்டுவிடுவது ஒரு நெறியாகச் சொல்லப்பட்டது. இன்றளவும் பிராமணர்களில் சிலர் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் சந்நியாசம் வாங்கிக் கொள்கின்றனர். இறப்பதற்கு ஒன்றிரண்டு நாளைக்கு முன்பாகவோ சில மணி நேரங்களுக்கு முன்பாகவோகூடப் பார்ப்பனர் சந்நியாசம் வாங்கிக்கொள்வது உண்டு. இதற்கு 'ஆபத் சந்நியாசம்' என்று பெயர்.

சமணமும் பௌத்தமும்தாம் தமிழ்நாட்டிற்குத் துறவு நெறியை அறிமுகப்படுத்தின. அறிமுகப் படுத்தப்பட்ட காலந் தொட்டே துறவு நெறி ஒருபோதும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றதில்லை.சமூகத்தின் மிகச்சிறிய அசைவுகளில் ஒன்றாக அதுவும் இருந்தது. அவ்வளவே. தொல்காப்பியம் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்கூடக் கணவனும் மனைவியும் இணைந்தே அறஞ்செய்ய வேண்டும் என்று வரையறை செய்கிறது.

தமிழில் முதன்முதலில் துறவு நெறியைப் பெருமைப்படுத்திப் பேசியவர் திருவள்ளுவரே. வள்ளுவர் வகுத்த அறங்களில் தமிழரை வெற்றிகொள்ள முடியாமற் போனவை கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, துறவு ஆகிய மூன்று மட்டுமே.

உலக அரங்கில் சமண பௌத்தத்திற்குப் பின்னரே ஏனைய மதங்கள் துறவு நெறியைப் பெருமைப்படுத்தின.

கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னரே கிறித்துவமும் துறவு நெறியை ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டுச் சைவம் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் மடங்களை உருவாக்கியபோது துறவு நெறியை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதைக் கொள்கையாகப் பரப்ப வில்லை. தமிழ்நாட்டு வைணவத்தில் மடங்களின் ஜீயராகப் பொறுப்பு ஏற்பவர்கள் அப்பொழுது முதல் குடும்பத்தைவிட்டு விலகவேண்டும் என்பதே வழக்கமாக இருக்கிறது.

சமண பௌத்தங்கள் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று ஆகும். எனவேதான் சிவபெருமானை உமையொருபங்கனாகச் சைவம் காட்டியது. வைணவம் “அகலகில்லேன் இறையும் என்று அவர்மேல் மங்கை உறைமார்பன்” ஆகக் காட்டியது. அத்துடன் வைணவத்தின் வடகலையார், 'திருமாலைப்போலத் திருமகளும் முத்திப் பேறு அளிக்கவல்லள்' என்று கூறினர்.

வள்ளுவருக்குப் பிறகு தமிழ் இலக்கியங்களும் துறவின் பெருமையினை விரித்தோ விதந்தோ பேசவில்லை. வாய்மொழி இலக்கியங்களும் துறவினைப் பெருமைப்படுத்திப் பேசவில்லை. 'இறப்பிற்குப் பின்னரும் துறவிகள் வணக்கத்திற்கு உரியவர்கள்' என்ற உணர்வு மட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது.

திருமணமும் திருமணச் சடங்குகளும் விருப்பத்திற்கும் பெருமைக்கும் உரியனவாக இன்றளவும் தமிழர்களால் கொள்ளப் பெறுகின்றன. திருமணம் மனித வாழ்வை முழுமையாக்குகிறது என்னும் கருத்து இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகிறது. கிராமப் புறங்களில் ஊர்க் கோவில் அல்லது சாதிக்குரிய கோயில் அல்லது சாதிப் பஞ்சாயத்து இவற்றிற்கான வரியில் திருமணமாகாத ஆண்களிடம் இருந்து அரை வரியே வசூலிக்கப்படுகிறது. இது அவன் முழு மனிதனல்லன், அரை மனிதனே என்பதற்கான அடையாளமாகும். திருமண வயதுக்குரிய இளைஞர்கள் இறந்துபோனால் 'வாழைத்தாலி' என்னும் சடங்கு தென் மாவட்டங்களில் பிராமணர் தவிர்ந்த மற்ற சாதியாரிடத்தில் காணப்படுகிறது. பிணத்திற்கு முன் ஒரு குமரி வாழையினை (ஈனாத வாழை) நிறுத்தி, பிணத்தின் கையில் செம்பினாலான தாலி ஒன்றை வைத்து எடுத்து வாழை மரத்துக்குத் தாலி கட்டுகின்றனர். பின்னர் இறந்தவருக்கு வாழை மரம் தாலி அறுப்பதுபோல அந்தத் தாலியினை அரிவாளால் அறுத்தெறிகின்றனர். இறந்தவர் மணமாகிவிட்ட முழு மனிதனாகிவிட்டார் என்பதே இதற்குப் பொருளாகும்.

சமண பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கு இழந்து போனமைக்கு அவை துறவு நெறியைப் பெரிதும் வற்புறுத்தியது ஒரு காரணமாகும். துறவுக்குரிய தெய்வங்களோ துறவியான தெய்வங்களோ தமிழர் மரபில் இல்லை. ரிஷி, முனி, முனிசாமி, தவசி (தவஞ்செய்பவன்) என்ற பெயரில் இறப்புக்குப் பின் தெய்வமாக்கப் பட்டவர்கள் சிறு தெய்வக் கோயில்களில் பத்தோடு ஒன்றாகவே வணங்கப்படுகின்றனர்; தனித்த மரியாதை பெறுவதில்லை.

கிறித்தவ மதம் நுழையும்வரை பெண் துறவி என்ற கருத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் சில சமண மதத்துப் பெண் துறவிகள் அங்கங்கே இருந்ததனைக் காட்டுகின்றன. இவர்கள் சிறிய அளவில் சமண மதக் கல்விப் பணி செய்து வந்ததாகத் தெரிகிறது. சைவ மடங்களுக்கும் கிறித்தவ மடங்களுக்கும் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இன்றளவும் அதனை முழுமையான ஈடுபாட்டோடும் மன மகிழ்ச்சியோடும் செய்வதில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

அஞ்சுவண்ணம்

‘அஞ்சுவண்ணம்’ என்ற சொல் முதன்முதலில் தமிழ்க் கல்வெட்டுக்களில்தான் காணப்படுகிறது. இந்தச் சொல் ‘நானாதேசிகள்', 'மணிக்கிராமத்தார்’, ‘திசை ஆயிரத்து ஐநூற்றுவர்' ஆகிய சொற்களோடு கலந்துதான் வழங்குகின்றது. எனவே, நானாதேசிகள், மணிக்கிராமத்தார் என்பது போல கி.பி.13ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டிலிருந்த ‘வணிகக்குழு' (merchant guide) ஒன்றின் பெயர் இது என அறிஞர் முடிவு கட்டினர்.

கல்வெட்டறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ‘பல்சந்த மாலை' என்ற அறியப்படாத நூல் ஒன்றில் இப்பெயர் வருவதைக் கண்டுபிடித்தார். நாகப்பட்டினத்தைப் புகழும் தனிப்பாடல் ஒன்றில் ‘அஞ்சுவண்ணமும் தழைத்து அறம் தழைத்த வானவூர்’ என வருவதையும் அவர் எடுத்துக்காட்டி, துறைமுக நகரான நாகப்பட்டினத்தில் அஞ்சுவண்ணத்தவர் இருந்த செய்தியை உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் ‘பல்சந்த மாலை' என்ற பெயரில் கிடைத்த சில பாடல்களை விரித்து எழுதியவர் தமிழ் இலக்கிய வரலாற்றறிஞரான மு. அருணாசலம்.

யவனராசன் கலுபதி தாமுதல் எண்ண வந்தோர்
அயல்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தவர்
என்பது பல்சந்த மாலைப் பாடல் பகுதி. இசுலாமியரின் சமய, அரசியல், ஆட்சித் தலைவராக விளங்கிய கலிபாக்களைக் (caliph) குறிக்கும் சொல்லே 'யவன ராசன் கலுபதி' எனக் கண்டறிந்தனர்.

‘ஈசுப்பு ராப்பனுக்கு மணிக்கிராமமும் அஞ்சுவண்ணப் பேறும் கொடுத்தோம்' என்று பாஸ்கர ரவிவர்மனின் கோட்டயம் செப்பேடு குறிப்பிடுகிறது. இச்செப்பேட்டின் காலம்

கி.பி. 8ஆம் நூற்றாண்டாகும். 'அஞ்சு வண்ணப்பேறு' என்பது அஞ்சு வண்ணத்தார்மீது விதிக்கப்பட்ட ஒருவித வரியினைக் குறிப்பிடுகின்றதுபோலும். எனவே, அஞ்சு வண்ணத்தார் கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் வணிகம் செய்த ‘இசுலாமிய வணிகக் குழுவினர்’ என்று தெரிகிறது. இதன் பின்னர் அஞ்சுவண்ணத்தார் குறித்த ஆய்வுகள் தொடரவில்லை.

முகவை மாவட்டம் திருவாடானைக்கு அருகிலுள்ள தீர்த்தாண்ட தானத்தில் கிடைத்த கல்வெட்டு அவ்வூரில் அஞ்சுவண்ணத்தார் இருந்ததனைக் குறிப்பிடுகிறது.

இன்றும் தென் மாவட்டங்களில் இசுலாமியர் வாழும் ஊர்களில், சில பள்ளிவாசல்கள் 'அஞ்சுவண்ணப் பள்ளி' என்று வழங்குகின்றன. நெல்லை மாவட்டத்துத் தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்துக் குலசேகரன்பட்டினம், குமரி மாவட்டத்துத் தக்கலை ஆகிய ஊர்ப் பள்ளிவாசல்களை எடுத்துக்காட்டுக்களாய்க் குறிப்பிடலாம். இப் பள்ளிவாசல்களைச் சேர்ந்தவர்களின் மூதாதையர்கள் பெரும்பாலும் நெசவுத் தொழில் செய்தவர்களாக இருந்துள்ளனர். இன்றும் தமிழ் நாட்டில் பாய் நெசவு செய்வோரில் 90 விழுக்காடு இசுலாமியராகவே இருந்து வருவதும் கண்கூடு.

அஞ்சுவண்ணம் ஓர் இசுலாமிய வணிகக்குழு என்பது கல்வெட்டு, இலக்கிய ஆய்வு முயற்சிகள், கள் ஆய்வுச் செய்திகளால் உறுதிப்படுகிறது.

நிர்வாணம்

நிர்வாணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக அம்மணம் என்பது வழங்கப்படுகின்றது. அம்மணம் என்ற சொல் அந்தப் பொருளில் தமிழிலக்கியத்தில் எங்கும் காணப்படவில்லை. 'அம்மணம் பட்டிலாவையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி' என்று சிலப்பதிகாரம் (வரந்தரு காதை) இந்தச் சொல்லை எடுத்தாளக் காண்கிறோம். இந்தச் சொல் குறைவு என்ற பொருளில் மட்டுமே அந்தக் காலத்தில் வழங்கியுள்ளது. ‘ஆடையின்றி' என்ற பொருளில் மக்கள் வழக்கில் மட்டுந்தான் காணப்படுகிறது; இலக்கியங்களில் காணப்படவில்லை.

குறைந்தது கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண மதம் நுழைந்து செல்வாக்குப் பெற்றுவிட்டதென்று சங்க இலக்கியம் காட்டுகின்றது. ஆனாலும் தமிழிலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்களிலேயே ஜைனர்களைக் குறிக்கச் சமணர், அமணர் ஆகிய சொற்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சமண மதம் துறவினைப் பெருமைப்படுத்திய மதமாகும். சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர்; பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதாம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக்குகைளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர். அம்மணம் என வழங்கும் சொல் ஆடையில்லா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது.

நிர்வாணம் என்ற செயலையும் கோட்பாட்டையும் தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது. சைவக்குடியில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதம் புகுந்தார். மீண்டும் சைவத்திற்குத் திரும்பினார். சமண மதத்தில் தாம் திகம்பரத் துறவியாக வாழ்ந்த கதையை நினைத்து, அவர் வருந்திப் பாடுவதைத் தேவாரப் பாடல்களில் காண்கிறோம்.

ஆடையில்லாச் சமண துறவிகள் பசித்தபோது மட்டும் பிச்சையேற்று உண்ண வேண்டும். கலத்திலே பிச்சை ஏற்கக் கூடாது. கையிலேதான் பிச்சை உணவை ஏற்கவேண்டும். நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும். அமர்ந்து உண்ணக் கூடாது. உண்ணும்போது யாரோடும் பேசக் கூடாது. இவை திகம்பரத் துறவிகளுக்குச் சமண மதம் விதித்திருந்த கட்டுப் பாடுகள்.

என்னதான் துறவிகளாக இருந்தாலும் ஆடையில்லாச் சமணத் துறவிகள் பிச்சைக்கு வரும்போது பெண்கள் கேலியாகச் சிரித்திருக்கிறார்கள். சிலர் வெட்கத்தினாலே ஓடிப்போய் வீட்டுக்கதவைச் சாத்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சைவரானபோது திருநாவுக்கரசர் இந்தக் காட்சிகளை நினைத்து, "குவிமுலையார் நகை நாணாது உழிதர்வேனை” என்றும், “காவிசேர் கண்மடவார் கண்டோடிக் கதவடைக்கும் கள்வனானேன்” என்றும் வருந்திப் பாடுகிறார். இப்படி வருந்தியவர் சமண மடத்தை விட்டு வெளியேறும்போது, “வெண்புடைவை மெய் சூழ்ந்து” வந்ததாகப் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்குச் சமணர்களின் திகம்பரக் கோலம் அவர் மனத்தை உறுத்தியிருக்கிறது.

பெண்களால் ஏற்கப்படாத நெறிகளை உடைய மதம் எவ்வாறு வாழமுடியும்? தமிழ்நாட்டில் சமண மதம் வீழ்ச்சியடைந்தற்குச் சமணர்களின் நிர்வாணக் கோட்பாடும் ஒரு காரணமாகும்.

சைவத்திற்குத் திரும்பிவந்த திருநாவுக்கரசருக்கு, சிவ பெருமான் நிர்வாணமாகப் பிச்சை எடுக்க வந்த பிட்சாடனர் திருக்கோலத்தையும் ஏற்க முடியவில்லை. 'துன்னத்தின் கோவணம் ஒன்றுடுப்பார் போலும்' என்று சிவபெருமானைக் கோவணம் கட்டியவராகக் காண முயல்கிறார். 'கையிலே கபாலமேந்திப் பிச்சை எடுக்கும் பெருமானே! உமையவளை நீர் திருமணம் செய்த நாளிலும் இடுப்பிலே கோவணம் மட்டும்தான் உடுத்தியிருந்தீரோ!'

நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ

என்று நகைச்சுவை உணர்வோடு வினவுகிறார்.

ஆனால் சைவ மரபுக் கதைகளிலும் சிற்பங்களிலும் திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்னும் பின்னும் சிவபெருமான் கோவணம் கட்டியவராக எங்குமே காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவேயன்றித் திகம்பர சமணத் துறவிகளின் உடற்சுத்தம் பேணாத தன்மையும், உள்ளத்தளவில் அவர்களைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப் படுத்தியது. சில மரப்பட்டைப் பொடிகளை வாயில் இட்டுக் கொள்வதைத் தவிர அவர்கள் பல் விளக்குவதில்லை; எனவே 'ஊத்தை வாயர்' என்று தேவாரம் அவர்களைக் குறிப்பிடுகிறது. அவர்கள் கண்களில் பீழைகட்டி, கொசு (கொதுகு) மொய்த்துக் கொண்டிருந்ததாகவும் தேவாரத்தில் குறிப்புக்கள் கிடைக்கின்றன. திகம்பர சமணத் துறவியர் உடம்பிலுள்ள அத்தனை மயிர்க்கால்களையும் (புருவத்திலும், இமையிலும் உள்ள மயிரையும்கூட) கையினால் பறித்தெடுக்கும் ‘லோச்சனம்' என்னும் நோன்பினையும் நோற்றிருக்கிறார்கள். 'கண்ணழலத் தலைபறித்து' எனத் தேவாரம் இதனைக் குறிப்பிடுகிறது. இத்தகைய கடுமையான துறவு நெறியும்கூடச் சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணமாகும்.

சித்தர்கள்

சித்தர்கள் என்போர் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கிய ஒரு கூட்டத்தாராவர். 'சித்து வேலை அறிந்தவர்கள்' என்பது இந்தச் சொல்லுக்குப் பொருள். நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் நடப்பது, குளித்தல், உணவு உடைத் தேவைகளைப் பொருட்படுத்தாமல் வாழ்வது, ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவது, துறவிகளாகவும்,எதற்கும் கட்டுப்படாதவர்களாகவும் வாழ்வது, தேவைக்கேற்ப உடலை உருமாற்றிக் கொள்வது முதலியன சித்தர்கள் செய்துகாட்டும் சித்து வேலைகளாகும்.

கிராமப்புறங்களில் இன்றுவரை ஆங்காங்கு வாழ்ந்த சித்தர்களைப் பற்றி நூற்றுக்கணக்கான கதைகள் வழங்கி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் சித்தர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் கோயில் ஆக்கப்பட்டிருக்கிறது.

நாட்டுப்புற மக்களிடையே சித்தர்கள் மரியாதைக் குரியவர்களாக விளங்கியதற்குக் காரணம் அவர்களின் பற்றற்ற வாழ்க்கையும், அவர்களின் மருத்துவ அறிவும் ஆகும். மண்ணையும் மருந்தாக மாற்றும் வல்லமை சித்தர்களுக்கு உண்டு என்பது மக்களின் நம்பிக்கை.

செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படாத அவர்களது வாழ்க்கை எளிய மக்களின் உள்ளத்தில் உறங்கிக் கிடக்கும் விடுதலை உணர்வுக்கு வடிகாலாக விளங்கியது.

சித்தர் பாடல்கள் என்று வழங்கும் பாடல்களின் எண்ணிக்கை பல்லாயிரம் இருக்கும். கடந்த நூற்றாண்டில் அச்சு எந்திரங்களின் வருகையோடு செவிவழியாக வழங்கிய பாடல்களையெல்லாம் அச்சிலேற்றிப் பதினெண் சித்தர்கள் என்று பெயர் கொடுத்தனர். அது முதலாகச் 'சித்தர் என்போர் பதினெட்டுப் பேர்' என்ற தவறான கணக்கு மக்கள் மனத்தில் பதிந்துபோனது. உண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சித்தர்களின் பாடல்களைப் படிக்கும் போது அவர்களில் நான்கைந்து பிரிவினர் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

சித்தர்களின் பாடல்களில் சில மருத்துவப் பாடல்கள். இந்தப் பாடல்களின் பல சொற்கள் குறியீடாக (பரிபாஷையாக) அமைந்திருக்கின்றன. சில பாடல்கள் மருந்துப் பொருள்களின் பெயரைச் சொல்கின்றன. வேறு சில மருந்து செய்முறை களைப் பேசுகின்றன. 'முப்பூ', 'குரு' என இப்பாடல்களில் வரும் சொற்களுக்குச் சிலர் மனம்போன படியெல்லாம் பொருள் விளக்கம் தந்துகொண்டிருக்கிறார்கள். இந்த வகைச் சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் மறைவாக ஈடுபட்டிருந்திருக்கின்றனர். இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கிறது. இன்னொரு வகைச் சித்தர்கள், 'உலகம் நிலையில்லாதது' என்னும் கொள்கையோடு ஆன்மீகத் தேட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இசுலாமியப் படையெடுப்பின்போது கஞ்சா புகைக்கும் வழக்கமும், அபினி உண்ணும் வழக்கமும் அறிமுகமாயின. இவற்றில் ‘லயித்துக்கிடந்த' சிலரையும் மக்கள் சித்தர் என்ற கணக்கில் அடக்கியிருக்கிறார்கள்.
சித்தர்களின் மற்றொரு வகையினர் சிலை வழிபாடு, பூசனை, பார்ப்பனர், புனிதமாகக் கருதப்பட்ட வேதம், கோயில், குளம், சாதிய ஒடுக்குமுறை என எல்லா வகை நிறுவனங்களையும் எதிர்த்துக் கலகக்குரல் எழுப்பி இருக்கின்றனர். பொதுவாகச் சித்தர் பாடல்களில் இந்தக் கலகக்குரலே ஓங்கி ஒலிக்கிறது.

கி.பி.13ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் தான் இந்தக் கலக மரபு தொடங்கியது. அரசும், கோயிலும், நிலமும் பார்ப்பனர்வசம் இருந்தன. பார்ப்பனர்க்கும் வேளாளர்க்குமான முரண்பாடுகள் முற்றிப்போய் வேளாளர்கள் தங்களுக்கெனச் சைவ மடங்களைத் தொடங்கினர். நிலத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உறவுகள் சீரழியத்தொடங்கின. அதனால்தான் கலக மரபுக்காரர்கள் பார்ப்பனர்களையும் வேதத்தையும் மட்டுமல்லாது கோயில்களையும் எதிர்த்து நின்றனர்.

"சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்ப்பு இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமா?"
"குலம் குலம் என்பதெல்லாம் குடுமியும் நூலும்தானா ?'
"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா"

முதலிய பாடல்களை மேற்குறித்த பின்னணியில் தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சித்தர் பாடல்களுக்குப் பொதுவாகக் காலவரையறை இல்லை. இவை அனைத்தும் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்பது மட்டும் உறுதி. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், சிவவாக்கியர் ஆகியோர் பாடல்களே எழுத்தறிவு பெறாத எளிய மக்களின் நடுவில் செல்வாக்குப் பெற்றுள்ளன. பதினெண் சித்தர் பாடல்களில் சேர்க்கப் பெறாத பாய்ச்சலூர்ப் பதிகம் எனும் பத்துப் பாடல்களை எடுத்துக்காட்டும் மு. அருணாசலம் அதன் காலத்தைக் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என வரையறை செய்கிறார்.

இசுலாமியச் சமயத்திலும் ஒரு சித்தர் மரபு உண்டு. இந்தச் சித்தர்களை ‘சூஃபிகள்' என்று குறிப்பிடுவர். இந்த சூஃபி மரபு கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பாக்தாதில் பிறந்ததாகும். தமிழ் நாட்டிலும் இவ்வகையான சூஃபிகள் வாழ்ந்து பாடல்கள் இயற்றியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் காலங்குடியிருப்பு மச்சரேகைச் சித்தர், குமரி மாவட்டத்தில் தக்கலை பீர் முகம்மது வாப்பா, முகவை மாவட்டத்தில் இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள், கடந்த நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகியோர் இசுலாமிய சூஃபி மரபைச் சார்ந்தவராவர். பதினெண் சித்தர்களில் ஒருவரான கம்பளிச் சட்டை முனிவரை சூஃபி என்று சிலர் குறிப்பிடுவர். ‘சூஃப்' என்ற அரபுச் சொல்லுக்குக் கம்பளிச் சட்டை என்றே பொருளாம்.

தமிழ்நாட்டு வைணவத்தில் சாதிய இறுக்கத்தை இராமானுசர் தளர்த்தி வைத்திருந்ததனால் வைணவத்தில் சித்தர் மரபு தோன்றவில்லை என்று எண்ண இடமுண்டு.

சித்தர்கள் மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் சில உண்டு. சித்தர்களின் குரல் பெரும்பாலும் சாதியாலும், சமயத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தது. சித்தர்கள் அதிகாரங்களுக்குக் கட்டுப்படாதவர்களாக இருந்தார்கள். அவர்களின் பாடல்கள் எழுத்தறிவில்லாத மக்கள் மனப்பாடம் செய்யுமளவுக்கு அவர்களது மொழியில் அமைந்திருந்தன.

வடநாட்டில் இடைக்காலத்தில் 'நாதசித்தர்' என்ற ஒரு மரபு தோன்றியது. இந்த மரபு தமிழ்நாட்டுச் சைவ மரபுகளுக்கு உள்ளாக ஊடுருவியது. சைவ மடாதிபதிகள் ‘ஸ்ரீலஸ்ரீ' என்ற பட்டம் இட்டுக் கொள்வது, ‘ஸ்ரீலட்சாயதஸ்ரீ” என்பதன் சுருக்கமாகும். ‘லட்சாதய’ என்பது வடநாட்டின் நாதசித்தர் மரபின் தலைமையிடமாகும். இதன் விளைவாகவே குருமார்களை அடக்கம்செய்த இடத்தில் கோயில் கட்டிக் ‘குருபூசை' செய்யும் மரபும் தமிழ்ச் சைவத்தில் இடம்பெற்றது.