அறியப்படாத தமிழகம்/பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும்

விக்கிமூலம் இலிருந்து

6. பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும்

தமிழ் இலக்கியம்போலத் தமிழ் இலக்கணமும் பழமையானது. செவ்விலக்கியங்களை உடையதேனும் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பு பெரும்பாலும் இன்றைய பேச்சு மொழியோடு ஒத்திசைவதாகவே அமைந்துள்ளது. வழக்கு, செய்யுள் என்ற இரண்டையும் கணக்கில்கொண்டே தமிழில் எழுத்திலக்கணமும், சொல் இலக்கணமும், பொருள் இலக்கணமும் செய்யப்பட்டன என்று தொல்காப்பியத்தின் பாயிரம் கூறுகின்றது.

இன்றைய பேச்சுத் தமிழில் அமைந்துள்ள சில இலக்கணக் கூறுகள் தொல்காப்பியர் காலந்தொட்டே நிலவி வந்திருக்கின்றன. எனவே, தொல்காப்பியம் இன்றைய பேச்சுத் தமிழுக்கும் இயைபுடையதாக இருக்கின்றது. தமிழ் மொழி சமூகத்தோடு கொண்டுள்ள உயிர்ப்பாற்றல் மிக்க உறவினை எடுத்துக்காட்டும் சான்றுகளாக அவற்றைக் கருதலாம்.

பேச்சு மொழியில் பிறமொழியாளர்களின் பட்டறிவும், கண்டுபிடிப்புகளும், கருவிகளும், சொற்களும், உறவும், ஆதிக்கமும் எதிரொலிப்பது இயல்பு. அவ்வாறு கலந்த பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போதும் கூட தமிழின் இலக்கண அடிப்படை சிதையாமல் நிற்கின்றது. இவ்வுண்மையைச் சில சான்றுகளால் விளக்கலாம்.

1) நிலைமொழி இறுதியிலுள்ள உயிர் ஒலி வருமொழி முதலில் உள்ள உயிர் ஒலியோடு சேருமானால் உடம்படு மெய் புதிதாகத் தோன்றும். (எ டு.) கோ + இல் கோயில் அல்லது கோவில். ஆங்கிலச் சொற்களான co, operation என்ற இரண்டு சொற்களையும் இணைத்து cooperation, cooperative, கோவாப்பரேசன், கோவாப்பரேட்டிவ் என்றே வகர உடம்படு மெய்யுடன் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

2) நெடில் தொடர்க் குற்றியலுகரம் (காடு, வீடு) உருபேற்கும் போது காட்டை, வீட்டில் என்று இரட்டித்து வருவது தமிழ் இலக்கணம் கூறும் வழக்கு. ஆங்கிலச் சொல்லான ரோட் என்பதை ரோடு எனப் பேச்சுத் தமிழில் நெடில் தொடர்க் குற்றியலுகரமாக வழங்குகின்றனர். இந்த ஆங்கிலச் சொல்லும் தமிழ் விதிப்படியே ரோட்டை, ரோட்டுக்கு, ரோட்டில் என்றே உருபேற்று வருகிறது.

3) மகர ஈற்றுச் சொற்கள் அத்துச் சாரியை பெறும் என்பது தமிழ் இலக்கண விதியும் பேச்சு மொழிப் பண்பும் ஆகும். இதன் படியே 'மீடியம்', 'ஸ்டேடியம்' என வரும் (கிரேக்க) ஆங்கிலச் சொற்களும் மீடியத்தில், ஸ்டேடியத்தில் என அத்துச்சாரியை பெற்றே பேச்சுத் தமிழில் வழங்கி வருகின்றன. இவைபோன்றே இன்னும் சில சான்றுகளையும் காட்டலாம்.

அடி என்ற சொல் தமிழில் இடப்பொருண்மையைக் குறிப்பதாகும். குழாயடி, கிணற்றடி, வேம்படி என்ற சொற்களைப் போல ஆங்கிலச் சொல்லான இரயில், போர்த்துக்கீசியச் சொல்லான குரூஸ் (சிலுவை) ஆகிய சொற்களோடு அடி என்ற சொல்லைக் கூட்டி இரயிலடி, குருசடி எனத் தமிழ் மக்கள் பேசி வருகின்றனர். இதுமட்டுமன்றி அயல் மொழிச் சொற்களைத் தமிழ்மைப்படுத்தி வழங்குவதிலும் தமிழிலக்கண அடிப்படை மக்களின் பேச்சு வழக்கினால் பேணப்பட்டுள்ளது. ஈசுக்சூசூக்சு (மருந்திட்டுக் கட்டுபவர்) என்னும் ஆங்கிலச் சொல்லைக் குமரி மாவட்ட மக்கள் 'தெரசர்' என்றே குறிக்கின்றனர். இந்தத் தமிழ்மைச் சொல் கவிமணியின் ‘மருமக்கள்வழி மான்மியம்' நூலிலும், புதுமைப்பித்தனின் ‘நாசகாரக் கும்பல்' சிறுகதையிலும் இடம் பெற்றுவிட்டது.

அயல்மொழியினர்வழி ஏற்படும் உறவுகளைத் தமிழ் மக்கள் விருப்பத்துடன் ஏற்றுள்ளனர். இருப்பினும் உள்ளூரில் உள்ள ஒரு பொருள் அல்லது அமைப்பு பிற மொழியினர் வழி வருவதாக இருந்தால் அதன் உள்ளூர்த் தன்மையைக் குறிக்க 'நாடு' என்ற சொல்லையும் வெளியூர்த் தன்மையைக் குறிக்கச் 'சீமை' என்ற சொல்லையும் பயன்படுத்தி உள்ளனர். நாட்டுச் சருக்கரை, நாட்டுத் தென்னை, நாட்டுக் கருவேல், நாட்டையர் (உள்நாட்டுக் குருமார்), சீமைச் சருக்கரை, சீமைத் தண்ணீர், சீமைக் கருவேல், சீமை மருத்துவம் ஆகிய காட்டுக்களைப் பேச்சுத் தமிழில் காணலாம்.

பேச்சு வழக்கினைத் தன் அடிப்படையாக ஆக்கிக் கொண்ட காரணத்தால்தான் தமிழிலக்கணம் இன்றுவரை கட்டுடை படாமல் தன்னைக் காத்துக்கொண்டிருக்கிறது; உயிர்ப்பாற்றல் மிக்கதாக விளங்குகிறது.

வாய்மையும் கடவுளும்

பன்னூறாண்டுகளாக நமது சமுதாயத்தில் கடுமையான குற்றங்களாக மக்களால் கருதப்பட்டு விலக்கப்படுவன பொய், களவு, கொலை, காமம், கள் ஆகிய ஐந்துமே. இவை குற்றங்களாக மட்டுமல்லாமல் 'பாவங்களாகவும்’ கருதப்பட்டுள்ளன. வடமொழியாளர் இவற்றை 'மாபாதகம்' என்றே குறிக்கின்றனர். இந்த ஐவகைத் தவறுகளையும் தொகுத்துச் சொல்லும் வழக்கம் வேதங்களிலும் உபநிடதங்களிலும் இல்லை. இந்த ஐந்து வகையான செயல்களும் கடியப்பட்டு, இவற்றுக்கு எதிரானவை தொகுப்பு அறமாகக் கொள்ளப்பட்டமை சமண மதத்தின் செல்வாக்கினால் ஆகும். நல்ல அறிவைவிட நல்ல ஒழுக்கமே சமணர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்பதே இதற்குக் காரணமாகும்.

இந்த ஐந்து ஒழுக்கங்களில் கள் விலக்குவதைத் தவிர்த்த ஏனைய நான்கும் இன்றளவும் அடித்தளத்து மக்களால் விலக்கிப் போற்றப்படுகின்றன. இந்த அறங்களே 'சமூக மதிப்பீடுகள்’ என்பதாகக் காலப்போக்கில் வளர்ந்து நிற்கின்றன.

வாய்மை அல்லது மெய்ம்மை என்பது தமிழ்ச் சமூக மதிப்பீடுகளில் ஒன்றாகும். சமூக வாழ்வில் இந்த மதிப்பீடு பிற மதிப்பீடுகளைவிடப் பேரழுத்தம் பெற்று விளங்குகிறது. நடைமுறையில் வாய்மை என்பது உண்மையைப் பேசுதல், சொன்ன சொல்லை என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றுதல் என இரண்டு வகையாக அமைகிறது.

தமிழரால் பெரிதும் மதிக்கப்பெறும் திருக்குறள், 'உண்மை பேசுதல்’ என்பதைப் பலபட விரித்தும் சிறப்பித்தும் பேசுகிறது. நல்லன சொல்லுவது, நன்மை விளையுமாறு சொல்லுவது என்று உடன்பாட்டால் இந்த அறத்தை விளக்குகிறார் திருவள்ளுவர். இதனையே பயனில்லாதவற்றைச் சொல்லாதிருப்பது, தீமை தருவனவற்றைச் சொல்லாதிருப்பது, பொய் சொல்லாதிருப்பது என்று எதிர்மறையாலும் விளக்கிக் காட்டுகிறார். இந்த உத்தியினை மேலோர் இலக்கிய மரபு எனச் சொல்லலாம்.

ஆனால் நாட்டார் மரபுகளில் 'சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல்' என்பது, எவ்வளவு பெரிய இழப்பு நேர்ந்தாலும் பிறருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் ஆகும்.இவ்வாறு தெய்வங்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள் 'நேர்த்திக் கடன்’ எனப்படும். தெய்வத்தை நினைத்துக்கொண்டு அவையே மனிதனுக்கு அளிக்கப்பட்டால்,'சத்தியம் செய்தல்' எனப்படும். வாக்குறுதி தப்பிய ஒருவன் வாழும் இடத்தில் மழை பெய்யாமல் இயற்கை தண்டிக்கும் என்பது பழங்குடி மக்களின் நம்பிக்கை. வேட்டுவர்கள் தங்கள் குல "தெய்வமான தொல்குடிக் குமரித் தெய்வமான சாலினிக்கு நேர்த்திக் கடன் பிழைத்தனர்” எனவே அந்த மறக்குடி வறுமைப்பட்டது என்கிறது சிலப்பதிகாரம்.

‘பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி' (வேட்டுவ வரி) என்று நேர்த்திக் கடனைப் ‘பழங்கடன்’ என்று குறிக்கிறார் ளங்கோவடிகள். இன்றளவும் மதுரைப் பகுதியில் பாடப்படும் அழகர் வருணிப்புப் பாடல்களில் நேர்ந்த கடனை (கொடுத்த வாக்குறுதியை) நிறைவேற்றாத மனிதர்களைத் தெய்வம் அதிகாரம் செய்து மீளக் கேட்கும் செய்தி இடம்பெற்றுள்ளது.

"இத்தனையும் செய்யாது பயலே என்னைமிக மறந்தாய்
பத்தினி பசுப்போல் பயலே வைத்ததும் நானேதான்”
"பெற்றபிள்ளை செய்ததொரு அடே குற்றமெலாம் நான்பொறுப்பேன்
அச்சப்படாமலிரு உனக்கு ஆண்குழந்தை நான் தாரேன்"

இதுபோலவே 'உன் வீட்டில் பெண் எடுப்பேன்', 'உன் கடனைத் திருப்பித்தருவேன்’ என்று கொடுத்த வாக்குறுதிகளை மறுத்துரைக்கும் போதும், பிறன் பொருளைத் திருடிவிட்டு இல்லையென்று மறுத்துரைக்கும் போதும் தெய்வங்களின் முன் சத்தியம் செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்களால் இழுத்து வரப்படுகின்றனர். எழுத்தறிவு பெறாத மக்கள் இன்றளவும் எழுத்தைவிட வாக்குறுதிகளையே நம்புகின்றனர். எனவே தெய்வத்தின் முன்னால் ஒருவன் சத்தியம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் நிலப்பகுதிகளில் சத்தியப் பிரமாணம் செய்வதற்காகவே சினம் மிகுந்த சிறு தெய்வங்கள் சிலவற்றைப் படைத்து வைத்துள்ளனர். மதுரைக்கருகில் அழகர்கோயிலில் பதினெட்டாம் படிக் கருப்பசாமி சந்நிதி, மதுரை மாவட்டம் கருமாத்தூர் மூணு சாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் அருகே ஆறுமுகமங்கலம் சுடலைமாடன் கோயில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கு அருகில் பத்மநேரி, சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடி காளியம்மன் கோயில் ஆகியவை இவ்வாறு இன்றளவும் சத்தியப்பிரமாணம் நடைபெறும் கோயில்களில் சில. கி.பி. 1273இல் வீரபாண்டியனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் குடுமியான்மலைக் கோயில் நகைகளைச் சிவப் பிராமணர் சிலரும் கல்தச்சர் சிலரும் சேர்ந்து திருடிக்கொண்டனர். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க ஊர்ச்சபை கூடியது. குற்றம் புரிந்தவர்களில் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சிலர் மறுத்தனர். மறுப்பவர்கள் 'கொழு உருவிப் பிரத்தியம்’ செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்து உருவச் சொல்லப்பட்டது. அவ்வாறு கொழு உருவியவர்களின் கை புண்ணானது. அதனால் அவர்கள் குற்றவாளிகளே எனத் தீர்மானிக்கப்பட்டது (புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண் 601).

இதேபோல் புதுக்கோட்டைப் பகுதியில் மேலத்தணியம் என்னும் ஊரில் பள்ளர் இனத்தினர் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழை, கரும்பு வேளாண்மை செய்ய உரிமை பெற்றிருந்தனர். அதை மறுத்துப் பறையர் தங்களுக்கே அவ்வுரிமை என்றனர். இதை மெய்ப்பிக்க நன்கு காய்ச்சிய நெய்யில் கையினை முக்கிச் சூடுபடாமல் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். பள்ளருக்குக் கை சுடவில்லை. பறையருக்குச் சுட்டது. எனவே பள்ளருக்கே அவ்வேளாண்மை உரிமை என முடிவு செய்யப்பட்டது (புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண் 929).

இக்காலத்தில் ஒவ்வொரு இடத்திலும் சத்தியம் செய்யும் முறை சற்றே வேறுபடுகிறது. அழகர்கோயில் பதினெட்டாம் படிக் கருப்பசாமி கோயிலில் சத்தியம் செய்வோர் சந்நிதியாகக் கருதப்படும் பதினெட்டுப் படிகளிலும் மேலிருந்து கீழே இறங்க வேண்டும். இதற்கெனக் கோயிலுக்கு 1.5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கருமாத்தூர் மூணுசாமி கோயிலில் ஒரு காலத்தில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்டுச் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் சத்தியம் செய்வோர் ஒரு செப்பு நாணயத்தை இரண்டாக வெட்டிப்போட வேண்டும். ஆறுமுகமங்கலம் சுடலைகோயிலில் ஒன்றேகால் ரூபாய் கோயிலுக்குக் காணிக்கை செலுத்திவிட்டு வெற்றிலைச் சுருளின்மீது கையடித்துச் சத்தியம் செய்தால் போதும். செய்யும் முறை வேறுபட்டாலும், சொன்ன சொல் தவறாமை என்பது சமூகத்தால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு மதிப்பீடு.

தத்துவப் போர்

இப்பொழுது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது அறிவுலக முன்னோடிகள் எப்படியெல்லாம் அஞ்சியிருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் (1880க்குப் பிறகு தமிழ்ச் சைவ சமய அறிஞர்கள் ஒரு நெருக்கடியை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு புறத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த கர்னல் ஆல்காட், பிளவட்ஸ்கி அம்மையார் ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தியாசபிகல் சொசைட்டி என்னும் பிரம்மஞான சபையைத் தொடங்கினார்கள். "ஆர்யா வர்த்தத்தின் பூர்வீக தர்மமான ஹிந்து தர்மத்தைப் புனருத்தாரணம்” செய்வது அவர்களுடைய நோக்கம். மற்றொரு புறத்தில், நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சம்பேரை மிக எளிதாகக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிவிட்டார் பேராயர் கால்டுவெல்.

வைதிக நெறி தந்த நெருக்கடியும் கிறித்தவம் தந்த நெருக்கடியும் சைவ அறிஞர்களைத் தத்துவப் போர்க்களத்தில் இறக்கிவிட்டன. அக்காலத்தில் அறிஞர்களைப் பொறுத்தமட்டில் ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாகவே இருந்தன.

அஞ்சாத சைவர்களான மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, கனகசபைப் பிள்ளை போன்றோர் தமிழர்களின் இழந்த பெருமையை மீட்டெடுக்கத் தொடங்கினர். ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை வைதிக நெறிக்கு மாறாகச் சைவத்தின் மேன்மையை விளக்க, 'சித்தாந்த தீபிகை' என்னும் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார்.

ஆறுமுக நாவலர், அவர் மாணவர் காசிவாசி செந்தில் நாதையர், யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் போன்றோர் கிறித்தவர்களோடு தத்துவச் சண்டையில் இறங்கினர். இவர்கள் மூவருமே ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசித்தவர்கள்.

இவர்களை யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கமும், தமிழ் நாட்டில் புரொட்டஸ்டண்ட் கிறித்தவமும் எதிர்கொண்டன. துண்டறிக்கைகளாகவும், பத்திரிகைக் கட்டுரைகளாகவும் இந்தத் தத்துவச் சண்டை தொடங்கி நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கத்தோலிக்கக் கிறித்தவர்களின் 'சத்தியவேத பாதுகாவலன்' என்ற இதழும், 'ஞானசித்தி’, 'இந்து சாதனம்' ஆகிய இரு சைவ இதழ்களும் அங்கே மோதிக் கொண்டன. தமிழ்நாட்டில் 'இரட்சணிய சேனை' என்னும் புரொட்டஸ்டண்ட் பிரிவினர் நடத்திய 'போர்ச்சத்தம்' என்னும் பத்திரிகையும், சிதம்பரத்திலிருந்து வெளிவந்த 'பிரம்ம வித்யா' என்னும் பத்திரிகையும், சென்னையிலிருந்து வெளிவந்த 'ஆரிய ஜன பரிபாலினி' என்னும் பத்திரிகையும் இந்தத் தத்துவச் சண்டையில் முனைந்து நின்றன.

யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கக் கிறித்துவத் துறவியும் நல்ல தமிழ் அறிஞருமான ஞானப்பிரகாச அடிகளார் (வண. பிதா. ஞானப்பிரகாசர்) கொள்கை பரப்பு நூல்களாகவும், மறுப்பு நூல்களாகவும் பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறார். 'மறுபிறப்பு ஆட்சேபம்', 'மறுபிறப்பு சமாதானம்', ‘சைவ ஆட்சேப சமாதானம்', "கிறிஸ்துவின் கடவுட்டன்மை', 'விக்ர காராதனையும் சுரூப் வணக்கமும்' ஆகியன அவர் சைவர்களுக்கு எழுதிய மறுப்பு நூல்களாகும். இந்தப் புத்தகங்களை இன்றைக்குப் படிக்கும்போது ஞானப்பிரகாச அடிகளாரின் தமிழ் உணர்வும், சைவ சித்தாந்த அறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. இவரது மறுப்பு நூல்கள் வெளிவந்த காலம் பெரும்பாலும் 1905 முதல் 1915 வரை ஆகும். அவருடைய விளம்பரங்கள் குறிக்கின்றபடி, "இனிய தமிழிலே நட்பிலக்கணந் தவறாத நடையிலே” இவை எழுதப்பட்டிருக் கின்றன.

இது தத்துவச் சண்டையின் இரண்டாம் கட்டமாகும். தத்துவச் சண்டையின் முதற்கட்டம் புரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களுக்கும் சைவர்களுக்கும் தமிழ்நாட்டில் அரங்கேறியது.

காசிவாசி செந்தில்நாதையர் 1883இல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அருகிலுள்ள டோனாவூரிலிருந்த கிறித்தவ மதப் பிரசாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இதற்குச் சரியான மறுமொழி கிடைக்கவில்லை. எனவே செந்தில்நாதையர் 'விவிலிய குற்சிதம்' என்றொரு நூலை எழுதுகிறார். அதற்கு மறுப்பாகக் கிறித்தவர்கள் ‘விவிலிய குற்சித கண்டனம்' என்னுமொரு நூலை வெளியிடுகின்றனர். காசிவாசி செந்தில்நாதையர் அதற்கு மறுப்பாக ‘விவிலிய குற்சித கண்டன திக்காரம்' என்றொரு நூலை எழுதுகிறார்.

புரொட்டஸ்டண்ட் கிறித்தவர்கள் 'சிவனும் தேவனா' என்றொரு நூலை வெளியிடுகின்றனர். இதற்கு மறுப்பாக 'சிவனுந்தேவனா என்னும் தீயநாவுக்கு ஆப்பு' என்றொரு நூலைச் சைவர் வெளியிட்டனர். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து 1888இல் ‘வஜ்ரடங்கம்' (வயிரக் கோடரி) என்னும் நூலை கி. கா. சூ. என்பவர் வெளியிடுகின்றார்.

அப்போதும் சைவர்களின் சினம் அடங்கவில்லை. 1889 தொடக்கத்தில் சென்னை இந்து டிராக்ட் சொசைட்டியார் ‘ஏசு கிறிஸ்துவும் கடவுளா' என்றொரு 'சிறுபத்திரம்' 15000 பிரதிகள் வெளியிட்டனர். இதற்குக் கிறித்துவர்களின் ‘சத்திய தூதன்' 1889 மார்ச் இதழில் மறுப்பு வெளியாயிற்று. இதே காலத்தில் கிறித்தவர்கள் அரக்கோணத்திலிருந்து 'விக்கிரக வணக்கம் பேதைத்தனம்' என்றொரு சிறுநூலை வெளியிட்டுள்ளனர். 1898இல் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை ஆழ்ந்த தத்துவ விளக்கங்களோடு 'இரட்சணிய சமய நிர்ணயம்' என்றொரு நூலை எழுதியுள்ளார். ஞானப்பிரகாச அடிகளாரைப்போல இவரது விவாதங்களும் நாகரிகமான முறையில் அமைந்துள்ளன.

கிறித்தவர்களின் இரட்சணிய சேனைப் பிரிவினர் நடத்திய ‘போர்ச்சத்தம்' இதழிலும், சிதம்பரத்திலிருந்து வெளிவந்த 'பிரம்ம வித்யா' இதழிலும் அவ்வப்போது மறுப்புக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்தத் தத்துவச் சண்டை 1890ஆம் ஆண்டோடு முடிந்துபோய், இருதரப்பாலும் வெளியிடப்பெற்ற நூல்கள் 1929 வரை மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளன. சண்டையின் இறுதிப் பகுதியில் ‘ஞானோதய ஆபாசம்', 'திரியேகத்துவ ஆபாசம்' என எழுத்துக்களின் தரம் தாழ்ந்துபோய், "பாதிரிமார் ஸ்கூல்களில் பெண்கள் படிக்கலாமா” என்பதுவரை போயிருக்கிறது. இவையெல்லாம் சென்னையில் இயங்கி வந்த ‘இந்து டிராக்ட் சொசைட்டி'யின் வெளியீடுகள். 'சைவம்' ஆகத் தொடங்கிய சண்டை 'இந்து'வாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. சண்டை எப்போது, எவ்வாறு முடிந்தது என்பதே நமக்கு வேண்டிய செய்தியாகும்.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் தேசிய இயக்கம் பெற்ற புதிய வேகம் 'இந்துக்களுக்கு' நம்பிக்கை தந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் தோற்றம் சைவர்களுக்கு ஓரளவு நம்பிக்கை தந்திருக்கிறது. மதரீதியான மோதல்கள் பின் தள்ளப்பட்டு அரசியல் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே மதச் சண்டையின் பரிமாணங்கள் முனை மழுங்கிப் போய்விட்டன. 'இந்து' என்று தம்மை அடையாளம் காட்டிய தேசிய இயக்கத்தைவிடச் சைவர்களுக்குத் ‘திராவிடம்’ பேசிய இயக்கம் நெருக்கமானதாகப்பட்டது. 1920களின் கடைசிப் பகுதியில் திராவிட இயக்கத்தார் மெல்லிய குரலில் ஒலித்த ‘நாத்திகம்’ 1930களில் சூடுபிடித்தபோது மதச் சண்டைக்கான களம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதுமுதல் அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்நாடு மதச்சண்டைகளற்ற மற்றொரு திசையில் தன் பயணத்தை தொடங்கலாயிற்று.

அண்மைக் கால மத மோதல்களுக்கான களங்களும் காரணங்களும் முற்றிலும் வேறானவை. அவை தனித்துப் பேசப்பட வேண்டும்.

ஆங்கிலேயப் பாண்டியன்

ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுக்காலம் நிலை பெற்றிருந்தனர். நாட்டு மக்களை அடிமைப்படுத்திய வல்லாண்மை அரசாக அவர்களுடைய அரசு இருந்தது. 'அதிகாரம்' என்ற எல்லையினைக் கடந்து தமிழ் மொழியோடும் மக்களோடும் கலந்த மனிதர்கள் சிலரும் அவருள் இருந்தனர். அதிகாரிகள், அதிகாரமுடைய மத குருக்கள் என்ற எல்லையினை மீறித் தமிழ் மக்களும் அவர்களோடு கலந்து பழகினர். அதன் விளைவாக அரசியல் நிறுவனங்களையும் ஆவணங்களையும் தாண்டி எளிய மக்கள் நெஞ்சில் இடம்பிடித்த ஆங்கிலேயர் சிலரும் உண்டு. சாயர்புரம்(Sawyer), கேம்பலாபாத் (Camphell), காலன் குடியிருப்பு (Collins), பீசர் பட்டணம் (Ficher), காசிமேஜர் புரம்(Cassa Major) டக்கர் அம்மாள்புரம் (Tucker), பர்கிட் மாநகரம் (Burkit) பேட் மாநகர்(Pate) முதலிய ஆங்கிலேயர் பெயரில் அமைந்த சில ஊர்ப் பெயர்கள் இதற்குச் சான்றாகும். தனிப்பட்ட ஆங்கிலேயரின் உதவியினைப் பெற்ற தமிழர் சிலர் சாதி, மத, இன, மொழி எல்லைகளைத் தாண்டி ஆங்கிலேயர் பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு இட்டு வழங்கியதும் உண்டு. ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பில் இறுதி வரை முனைமழுங்காமல் நின்ற வ.உ.சி. தமக்கு உதவிசெய்த ஆங்கில நீதிபதி வாலஸ் (Wallace) பெயரை வாலேசுவரன் எனத் தன் மகனுக்கு இட்டார். கட்டுரையாளரின் உறவினரான ஒரு மூதாட்டிக்கு கயிட்டாள் என்று பெயர். இது, அக்குடும்பத்திற்கு உதவி செய்த கயிட்டா (Gaita) என்ற ஆங்கிலப் பெண்மணியின் பெயராகும்.

மதுரைப் பகுதியில் இவ்வாறு நாட்டுப்புற மக்களிடத்தில் பெயர் பெற்ற ஒரு ஆங்கிலேயர் ரௌஸ் பீட்டர்(எRouse Peter)என்பவராவார். இவர் 1812 - 1828 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்திருக்கிறார்; பதவியில் இருக்கும் போதே 1828இல் காலமானார். கன்னிவாடி, பெரியகுளம், போடி பகுதிகளில் அக்காலத்தில் காட்டு யானைகள் மக்களைத் தொல்லை செய்தபோது அவற்றைத் தாமே வேட்டையாடி, மக்களால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் நிறைய உதவிகள் செய்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் ஆகிய கோயில்களுக்கு மக்களின் வேண்டுகோளின் பேரில் தங்க நகைகளையும் காணிக்கையாக அளித்துள்ளார். இவரின் கொடைத்திறத்தையும் வீரத்தையும் பாராட்டி அக்காலத்தில் நிறைய நாட்டுப் பாடல்கள் வழங்கி இருக்கின்றன. பாண்டிய மன்னன் திரும்பவந்து ஆள்வதாகவே மக்கள் இவரைக் கருதி மதித்திருக்கின்றனர். பீட்டர் பாண்டியன்’ என்றே இவரை அழைத்திருக் கின்றனர். 'பீட்டர் பாண்டியன் அம்மானை' என்ற அம்மானை நூலும் அக்காலத்தில் பிறந்திருக்கிறது. அந்த அரிய நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.

பீட்டர் பாண்டியனின் இரக்க உணர்வும் கொடை உணர்வும் அளவுக்கு மீறி அமைந்திருக்கின்றன. எனவே இவர் அரசாங்கக் கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து எளிய மக்களுக்குக் கொடுத்துள்ளார். இவருடைய இரக்க உணர்வைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகள் சிலரும் அரசாங்கப் பணத்தைக் கையாடி இருக்கின்றனர். நிலைமை கட்டுமீறிப் போனதைப் புரிந்துகொண்ட பீட்டர் பாண்டியன் 1819இல் அரசாங்கப் பணத்தையும் தான் எடுத்துச் செலவழித்ததை ஒத்துக்கொண்டு ஒரு கடிதம் எழுதி அதை சீல் செய்து தன்னுடன் வைத்துக்கொண்டார். 1828இல் திடீரென்று அரசாங்க நிலைமையை உணர்ந்த பீட்டர் பாண்டியன் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவரது கடிதம் கைப்பற்றப்பட்டது. கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. முடிவில் ஏழு இலட்சத்து எழுபத்து நாலாயிரம் ரூபாய் அரசாங்கப் பணம் அவரால் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதிலே அவர் உண்மையிலேயே எடுத்தது எவ்வளவு, கீழ்நிலை அதிகாரிகள் சுருட்டிக்கொண்டது எவ்வளவு என்று தெரியவில்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் கீழ்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர். எழுபதாயிரத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களும் பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகளும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்று மதுரை மாவட்ட கெசட்டியர் (1914) குறிக்கின்றது.

இலக்கியங்கள் குறிப்பிடும் 'கொடைமடம்' என்ற சொல்லைப் பீட்டர் பாண்டியன் வாழ்க்கை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. அரசு ஆவணங்கள் என்னவாயினும் சொல்லட்டும்! மதுரைப் பகுதி நாட்டுப்புற மக்களின் உணர்வு களைப் பீட்டர் பாண்டியன் ஒரு நூற்றாண்டுக் காலம் கட்டி ஆண்டிருக்கிறார் என்ற வரலாறு நமக்குத் தெரிகிறது. இந்த நல்ல மனிதரின் வெண்சலவைக் கல்லறை மதுரைத் தெற்காவணி மூலவீதியின் மேற்குப்பகுதியில் உள்ள தேவாலயத்தில், முன் தளத்தின் கீழுள்ள ஒரு இருட்டறையில் இருக்கிறது.

இறப்புச் சடங்கும் விருந்தோம்பலும்

மரணம் என்பதை வாழ்வின் முற்றுப்புள்ளி என்று தமிழர்கள் நினைக்கவில்லை. தங்களிடமிருந்து இறந்தவர்களுக்கான உறவும் உணர்வும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டன என்றும் அவர்கள் கருதவில்லை.

சாதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் கணக்கிட்டால் தமிழர்களிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்வட்டத் திருமண அமைப்புடைய பிரிவுகள் (அகமணப் பிரிவுகள்) உள்ளன. இருப்பினும் பண்பாட்டுப் பொதுமைக் கூறுகள்தாம் இவர்களிடையே மிகுதி. அவ்வகையில் எல்லா வகையான தமிழர்களிடத்திலும் பொதுவான நம்பிக்கையை வெளிப்படுத்தும் சடங்குகள் உண்டு. இறப்புச் சடங்குகளும் அவ்வாறே. தமிழர்களுள் மிகப்பெரும்பான்மையானோர் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தையே கொண்டுள்ளனர். பிராமணர்களும் பிராமணமயப் படுத்தப்பட்ட சில இடைநிலைச் சாதியினரும் மட்டுமே இறந்தாரை எரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இறந்தாரை நீராட்டுதல், அதிலும் சிறப்பாக எண்ணெய் தேய்த்து நீராட்டுதல், புத்தாடை உடுத்தல், வாயில் அரிசியிடுதல், உண்டு முடித்தவர்கள்போல வாயில் வெற்றிலை இடுதல், நெற்றியில் அல்லது கையில் நாணயத்தை வைத்தல் ஆகிய அனைத்துச் சடங்குகளும் பெரும்பான்மையான சாதியார்களிடம் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இதன் பொருள் இறந்தவர் இல்லாமல் போகவில்லை; அவர் இன்னொரு ஊருக்குப் பயணம் செய்கிறார் என்பதுதான். எனவேதான் இறப்புச் சடங்குகள் ஒரு மனிதனை வழியனுப்பும் சடங்கு போலவே அமைந்துள்ளன.

இறப்பு நிகழ்ந்த வீட்டில் அவ்வீட்டைச் சேர்ந்தவர்கள், அன்று சமையல் வேலையில் ஈடுபடுவது இல்லை. அவரது உறவின் முறையார், குறிப்பாகப் பெண் எடுத்தவர் கொடுத்தவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். பொதுவாக இறந்தவர் உடலை எடுக்கும்வரை வீட்டாரும் உறவினரும் நீர்ப்பொருள் தவிர திடப்பொருள் உணவு உண்பதில்லை. சாதிக் கட்டுப்பாடுடைய சிற்றூர்களில் அத்தெருவில் வசிப்போர் யாரும் (குழந்தைகள் தவிர) கிட உணவு உண்ணாமல் பசியினைத் தாங்கிக்கொள்கின்றனர்.

சில சாதியார்களிடத்தில் இறந்தவர் உடலை எடுக்கும் வரை இறந்தவர் வீட்டில் சமையல் வேலை செய்யாமல் அடுத்தடுத்த வீடுகளிலே சமையல் வேலையைத் தொடங்குகின்றனர். மிகச் சில சாதியாரிடத்தில் மட்டுமே இறந்தவர் உடலோடு பெண்களும் இடுகாட்டுக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது.

நவீனப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் வரை இறப்புச் செய்தி தெரிந்தது முதல் இறந்தவரை அடக்கம் செய்வது வரை உள்ள கால இடைவெளி பெரிதாக இருக்கும். இறந்தவர் உடலைப் பசியோடு சென்று அடக்கம் செய்து முடித்தவுடன், மிகுந்த களைப்பினை அடைவது இயல்பாகும். எனவே, இறப்பு நிகழ்ந்த வீட்டுக்காரர் சார்பாக, இடுகாடு அல்லது சுடுகாடு வரை நடந்து வந்தவர்க்கு உடல் களைப்புத் தீர அங்கு ஏதேனும் உண்பதற்குக் கொடுக்கவேண்டும் என்ற விருந்தோம்பல் உணர்வு தலைதூக்குகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டார் சார்பாக அவரது உறவினர்கள் சுடுகாடு அல்லது இடுகாடு சேர்ந்து சடங்குகள் முடிந்தவுடன் அங்கேயே கையில் வாங்கிச் சாப்பிடும் அளவு சிறு உணவுப் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். சில சிற்றூர்களில் சுருட்டு, பீடி, சிகரெட் போன்றவையும் தரப்படுகின்றன. மழையும் பனியும் மிகுந்த இரவுப் பொழுதாக இருந்தால் தென்மாவட்டங்களில் சுக்கும் கருப்பட்டியும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்பொழுது காரச்சேவு, ஓமப்பொடி போன்ற பண்டங்களைக் கொடுக்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் உணவிற்கே (இடு) 'காட்டுப் பண்டம்' என்று பெயர்.

தமிழ்ச் சாதியினரின் பொதுவான பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெறுவது உண்மையே. இவர்களுள் நகரத்தார் எனப்படும் செட்டியார் சாதியினர் ஏனையோரினும் ஒருபடி முன் நிற்கின்றனர். இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கு அவரது பங்காளிகள் உடனடியாக வந்து சமையல் வேலையைத் தொடங்குகின்றனர். உறவினரும் சாதிக்காரரும் உரியவரிடம் உரிய முறையில் துக்கம் விசாரித்த பின்னர் வீட்டுக்காரர் அவரைப் பசியாறுமாறு (உண்ணுமாறு) கேட்டுக் கொள்கிறார்.

தன் குடும்பத்தின் கடுமையான துயர வேளையிலும், துயரத்தில் பங்கேற்க வந்தவரின் பசி உணர்வைச் சிந்தித்துப் பார்த்து உண்ணச்செய்வது தமிழர்கள் தம் வாழ்வில் விருந்தோம்பலுக்குத் தந்த சிறப்பிடத்தைக் காட்டி நிற்கிறது.