அறிவியல் வினா விடை-இயற்பியல்/காற்று வெளியும் வானிலையும்
1. காற்று என்றால் என்ன?
- பல வளிகளின் கலவை.
2. காற்றுவெளி என்றால் என்ன?
- புவியைச் சூழ்ந்துள்ள வளியடுக்கு. காற்று மண்டலம் என்றுங் கூறலாம்.
3. காற்று வெளியிலுள்ள அடுக்குகள் யாவை?
- கீழ் வெளி, அடுக்கு வெளி, அயனி வெளி, மேல் வளி.
4. அயன வெளியின் சிறப்பு யாது?
- மின் காந்த அலைகளை மறித்து வானொலிச் செலுத்துகை நடைபெற உதவுவது.
5. காற்றுகளின் வகைகள் யாவை?
- 1. வாணிபக் காற்றுகள். 2. பருவக் காற்றுகள். 3. முனைக் காற்றுகள். 4. நிலக் காற்றுகள். 5. கடல் காற்றுகள்.
6. காற்றின் வேலைகள் யாவை?
- 1. அரித்தல், 2. கடத்தல். 3. படிய வைத்தல்.
7. காற்று வெளி இரைச்சல் என்றால் என்ன?
- காற்று வெளித் தடையினால் வானொலி ஏற்பியில் உண்டாகும் இரைச்சல்.
8. மின் வெளியேற்றங்கள் என்றால் என்ன?
- இவை காற்றுவெளியில் உண்டாகி, வானொலிப் பெறுவிகளில் கரமுரா என்னும் இரைச்சலை உண்டாக்கும்.
9. காற்றுவெளி அழுத்தம் என்றால் என்ன?
- புவிமேற்பரப்பில் எப்புள்ளியிலும் காற்று எடையினால் அதற்கு மேல் உண்டாக்கப்படும் அழுத்தம்.
10. இதன் அளவென்ன?
- கடல் மட்டத்தில் 76 செ.மீ. பாதரசக் கம்பத்தைக் காற்று வெளி தாங்கும். மலை உயரத்தில் இது குறைவு. கடலாழத்தில் அதிகம்.
11. பாரமானி என்றால் என்ன?
- காற்றழுத்தத்தை அளக்க உதவுங் கருவி.
12. அழுத்தச் சமைப்பி என்றால் என்ன?
- காற்றுவெளி அழுத்த அடிப்படையில் உணவுப் பொருள்களை வேகவைக்கும் சமையல் கருவி.
13. திட்ட அழுத்தம் என்றால் என்ன?
- 76 செ.மீ. நீளமுள்ள பாதரசக் கம்பத்தின் அழுத்தம், இதன் மதிப்பு 101325. பா.
14. இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும் என்றால் என்ன?
- இயல்பு வெப்பநிலை 2730 k இயல்பு அழுத்தம் 76 செ.மீ.
15. அழுத்த அளவி என்றால் என்ன?
- அழுத்தத்தை அளக்கும் கருவி.
16. வெற்றிடம் என்றால் என்ன?
- ஒரு வளி காற்று அழுத்தத்திற்குக் கீழ்க் கொண்டுள்ள இடம்.
17. வெற்றிட வகைகள் யாவை?
- மென்வெற்றிடம், வன்வெற்றிடம், மீவெற்றிடம், டாரிசல்லி வெற்றிடம் (பாரமானி).
18. வானிலை இயல் என்றால் என்ன?
- வானிலை பற்றி விரிவாக ஆராயுந் துறை. இதற்குச் செயற்கை நிலாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.
19. வானிலை என்றால் என்ன?
- இது காற்றுவெளிநிலைமை, கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது.
20. வானிலை முன்னறிவிப்பு என்றால் என்ன?
- அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்தநாள் வானிலை எவ்வாறு இருக்கும் என முன்கூட்டித் தெரிவிப்பது.
21. வானிலை முன்னறிவிப்பிற்குத் தற்காலத்தில் நிலையாகப் பயன்படுபவை யாவை?
- வானிலை நிலாக்கள். எ.டு. இந்திய இன்சட்.
22. தாழ்வழுத்தம் என்றால் என்ன? இதன் விளைவு யாது?
- காற்று மண்டல அழுத்தம் 76 செ.மீக்குக் கீழ்ச் செல்லுதல். இதனால் மழையும் புயலும் ஏற்படும்.
23. இடி என்றால் என்ன?
- மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் காதுக்கு ஒவ்வாத இரைச்சல், அழுத்த அலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வுகளும் உண்டாகும். இவையே இடி ஒசையை எழுப்புபவை.
24. மின்னல் என்றால் என்ன?
- ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்றுவெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கண்கூசும் ஒளி. இது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. இதைத் தொடர்வது இடி.
25. மின்னல் தடுப்பான்கள் என்றால் என்ன?
- இவை கட்டிடங்களில் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும். இவை மின்னலிலுள்ள மின்சாரத்தை
- நிலத்திற்குக் கடத்திக் கேட்டைத் தவிர்க்கும்.
26. புயல் என்றால் என்ன?
- முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக்காற்று சுழியிட்டுச் செல்லும். இவ்வாறு சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதியே புயல்.
27. புயல் வழியறிதல் என்றால் என்ன?
- திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் தீய விளைவை அறிவித்தல். இதற்கு வானிலை நிலாக்கள் பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நவம்பர் புயல் மாதம்.
28. முகில்கள் என்றால் என்ன?
- இவை ஒருவகையில் உயர்மட்டத்தில் தோன்றும் மூடுபனியே. காற்றுவெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. நடப்பிலிருக்கும் வானிலை நிலை மைகளை எடுத்துக் காட்டுபவை.
29. முகில்களின் வகைகள் யாவை?
- 1. மேல்மட்ட முகில்கள். 2. இடைமட்ட முகில்கள். 3. கீழ்மட்ட முகில்கள். 4. செங்குத்து முகில்கள்.
30. கூழ்மப் படலம் (ஏரோசால்) என்றால் என்ன?
- இது ஒரு கூழ்மத் தொகுதி. இதில் சிதறிய ஊடகம் வளி. எ.டு. மூடுபனி, பனி.
31. பனி என்றால் என்ன?
- குளிர்ந்த பரப்பில் காற்றிலிருந்து நீர்த்துளிகள் சுருங்குதல் காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று நீராவி படிகமாக உறைவது.
32. பனிநிலை என்றால் என்ன?
- காற்றிலுள்ள நீராவி நிறைவுறும் வெப்பநிலை. வெப்பநிலை குறையும்பொழுது இந்நிலையில் நீராவி குளிர்ந்து நீர்த்துளிகள் ஆகும்.
33. ஈரநிலைமானி என்றால் என்ன?
- காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்குங் கருவி.
34. ஈரநிலைநோக்கி என்றால் என்ன?
- காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி.
35. பனிநிலை ஈரநிலைமானி என்றால் என்ன?
- பனிநிலையை உறுதி செய்யுங் கருவி.
36. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?
- இதில் ஆவி குளிர்ச்சி செய்யப்படும் பொழுது, அது எவ்வெப்ப நிலையில் சுருங்குகிறதோ அவ்வெப்ப நிலையை அளந்து இதை உறுதி செய்யலாம்.
37. ஈரநிலை என்றால் என்ன?
- ஈரப்பதம். காற்றுவெளியில் நீராவியின் செறிவு இது.
38. இதன் வகைகள் யாவை?
- 1. தனி ஈரநிலை, 2. ஒப்புஈரநிலை.
39. தனி ஈரநிலை என்றால் என்ன?
- ஓரலகு காற்றுப் பருமனிலுள்ள நீராவியின் நிறை.
40. ஒப்பு ஈரநிலை என்றால் என்ன?
- காற்றிலுள்ள ஈரத்திற்கும், ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் காற்று நிறைவுறுமானால் அதில் அப்பொழுதுள்ள ஈரத்திற்குமுள்ள வீதம். இது விழுக்காடாகத் தெரிவிக்கப்படும்.
41. ஈரமாக்கி என்றால் என்ன?
- காற்றுக்கு ஈரத்தை அளித்துத் தேவையான ஈர நிலைமைகளை நிலைநிறுத்துங்கருவி.
42. மூடுபனி என்றால் என்ன?
- இதை மஞ்சு எனலாம். புழுதித்துகள்களில் நீர்த்துளிகள் சுருங்குவதால் உண்டாவது.
43. உறைபனி என்றால் என்ன?
- உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவ தால் உண்டாகும் பனிக்கட்டியுறை.
44. உறைபனிக்கட்டு என்றால் என்ன?
- மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி முதலியவை. பனிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்படுவது.
45. புகைப்பனி என்றால் என்ன?
- இதில் தடித்த கரும் புழுதியும் புகைக்கரி படிந்த கந்தகமும் இருக்கும். சாதகக் காற்று வெளி நிலைமைகளில் தொழிற்சாலை நகரங்களில் காற்றை மாசுப்படுத்துவது. நுரையீரல்களைப் பாதிப்பது.
46. புகை என்றால் என்ன?
- வளியிலுள்ள நேர்த்தியான திண்மத் துகள்களின் தொங்கல். நிலக்கரிப்புகை முதன்மையாகக் கரித் துகள்களாலானது. மாசுபடுத்துவது.
47. பனிமூட்டம் என்றால் என்ன?
- வளிநிலையிலுள்ள கூழ்மத் தொங்கல். குளிர்ந்த நீர்த்துளிகளாலானது.
48. பனிப்புயல் என்றால் என்ன?
- காற்றுவெளியின் உயர்பகுதிகளிலுள்ள காற்று விரைந்து குளிர்ச்சியடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலாக மாறுபவை.
49. மழை என்றால் என்ன?
- காற்றுவெளி ஈரம் சுருங்கி நீர்த்துளிகளாக விழுவது.
50. கோரியாலி விசை என்றால் என்ன?
- காற்று, நீர், எரிபொருள்கள் முதலிய சுழல்தொகுதிகளில் கணக்கீடுகளை எளிமையாக்கச் சில சமயங்கள் பயன்படும் கற்பனை விசை. பிரஞ்சு இயற்பியலார் கோரியாலி 1835இல் முதன்முதலில் இக்கருத்தைப் பயன்படுத்தினார்.