உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/தத்துவ ஞானம்

விக்கிமூலம் இலிருந்து
கோல்ரிட்ஜ்


11. தத்துவ ஞானம்


229. தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.

கோல்ரிட்ஜ்

230.நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம்.

தோரோ

231.வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானம் தரும்.

ப்ளூட்டார்க்

232.உண்மையைக் காண்பதும் நல்வழியில் நடப்பதுமே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள்.

வால்டேர்

233.உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும்.

கலின்

234. தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் துய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில்.

ஹாமில்டன்

235.தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம்.

பீட்டர் பெயின்

236.அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப்படுவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே.

ப்ராட்லி

237.தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும்.

மாக்ஸ்முல்லர்

238.தத்துவ ஞானிபோல் பேசுவதும் எழுதுவதும் எளிது; ஆனால் அறிவோடு நடப்பது—அங்குதான் கஷ்டம்!

ரைவ ரோல்

239.தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்து விட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம்.

பாரடே



240. தத்துவ ஞானம் கற்பது என்பது, ‘தான்’ சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று.

ஸிஸரோ

241.தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.

ஷில்லர்

242.நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு.

ஷேக்ஸ்பியர்

243.ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும்.

வால்டேர்