அறிவுக் கனிகள்/முகஸ்துதி
591. அநேகமாகப் பிரமுகர்களைப் புகழ்வது அவர்களுடன் பழக்கம் உண்டு என்று காட்டிக் கொள்வதற்காகவே.
லா புரூயர்
592.இல்லாத குணங்களைக் கூறி வேந்தர்களைப் புகழ்வது தண்டனைக்கு ஆளாகாமல் அவர்களைப் பழிக்கும் முறையாகும்.
ரோஷிவக்கல்டு
593.மூடன் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான். அறிஞனோ மூடனுக்கே முகஸ்துதி செய்வான்.
புல்வெல்
594.அன்பு செய்ய முடியாவிட்டால் முகஸ்துதியேனும் செய்யக் கற்றுக் கொள். அதுவுமில்லையானால் அபஜெயம்தான்.
கதே
போப்
596.எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழ் ஆசை எப்பொழுதும் ஆட்சிசெய்து கொண்டேதான் இருக்கிறது.
யங்
597. தங்கத்தால் வாங்க முடியாததைத் தருகிறேன். அதுதான் உண்மை கூறும் கவிஞனுடைய புகழுரை.
பர்ன்ஸ்
598.அநேகர் தம்மைப் பிறர் புகழவேண்டும் என்பதற்காகவே தம்மை இழிவாகக் கூறிக்கொள்கிறார்கள்.
ரோஷிவக்கல்டு
599.அனைவரையும் ஒன்றுபோல் புகழ்வது யாரையும் புகழாதிருப்பதே யாகும்
கே
600.சிறு பொறியேயாயினும் துருத்திகொண்டு ஊதினால் பெருநெருப்பாவதுபோல் சிறிய தீமை செய்தவனே யாயினும் முகஸ்துதி பெறப் பெற அதிகக் கொடியவன் ஆகிவிடுகின்றான்.
ஷேக்ஸ்பியர்
601.ஆண்மகனை ஏதேனும் ஒருவித முகஸ்துதியால் மட்டும் வசப்படுத்தலாம். ஆனால் பெண்மகளையோ எந்த வித முகஸ்துதியாலும் வசப்படுத்திவிட முடியும்.
செஸ்ட்டர்பீல்டு
602.முட்டாளை அறிஞன் என்றும், பொய்யனை யோக்கியன் என்றும் துதித்து விட்டால் அப்புறம் அவன் உன் அடிமையே ஆகிவிடுவான்.
பீல்டிங்
603. முகஸ்துதியை முட்டாள்களின் உணவு என்று கூறுவர். ஆனால், அறிஞரும் சில சமயங்களில் அதில் சிறிது உண்பதுண்டு.
ஸ்விப்ட்
604.முகஸ்துதி என்பது பரஸ்பரம் நடக்கும் ஒரு இழிதொழில். ஒருவரையொருவர் ஏமாற்ற விரும்பினாலும் ஒருவரும் ஏமாந்து போவதில்லை.
கோல்ட்டன்
605.உண்மையான நண்பன் முகஸ்துதி செய்தால் அதைப் போன்ற அசம்பாவிதம் காண முடியாது.
போர்டு
606.குணங்களை முன்னால் கூறாமலும் குறைகளைப் புறத்தே கூறாமலும் இருந்து விட்டால் முகஸ்துதியும் அவதூறும் உலகில் இருக்கமாட்டா.
பிஷப் ஹார்ன்
607.முகஸ்துதி என்னும் கள்ளநாணயம் தற்பெருமை இருப்பதாலேயே செலாவணியாகின்றது.
ரோஷிவக்கல்டு
608.நாம் முகஸ்துதியை வெறுப்பதாகச் சில சமயங்களில் எண்ணிக் கொள்கிறோம். ஆனால், நாம் உண்மையில் வெறுப்பது நம்மைப் பிறர் முகஸ்துதி செய்யும் விதத்தையே.
ரோஷிவக்கல்டு
609.புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும்.
ப்ளூட்டார்க்
610.தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.
போப்
611.புகழுரையின் மதிப்பு அதை உரைப்போன் கையாளும் முறையைப் பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவது மற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகத் தோன்றும்.
மாஸன்
612.இகழ்வதற்கு வேண்டிய அறிவைவிட அதிகமான அறிவு, சரியான முறையில் புகழ்வதற்கு வேண்டியதாகும்.
டிலட்ஸன்
613. மனமுவந்து புகழாதவர் மட்டமான அறிவுடையவர் ஆவர்.
வாவனார்கூஸ்