அவள் ஒரு எக்ஸ்ட்ரா/1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அவள் ஒரு எக்ஸ்ட்ரா !
1

 அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.

திடீரென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள் ‘அகதி’கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் செல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள்.

முதலில் அவளையும் அப்படித்தான் எண்ணினேன். ‘அகதி’கள்தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்த நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிந்திருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும்போது ‘இவர்கள் எல்லாம் அகதிகள்தானா? அப்படியென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். பகவதி பிஷாந்தேஹிப் பிழைப்பிலாவது நல்ல காசு கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வேலையில் ஒரு மண்ணும் கிடைப்பதில்லை’ என்று நினைப்பதுண்டு... உம், அது வேற விஷயம்! அவள் நாகரிகமானவள் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பியது நன்றாகத் தெரிந்தது. அவள் மின்னல் சிரிப்பு ஒன்றை உகுத்தாள்.

‘என்ன? என்ன வேணும்?’என்று கேட்கலாமா என யோசிக்கும் வேளையிலே, அவள் கேட்டு விட்டாள் ‘டைரக்டர் ஸார் இல்லையா?’ என்று.

‘டைரக்டர் ஸாரா? அப்படி இங்கே ஒருத்தருமில்லையே’ என்றேன்.

‘இல்லே...வந்து...எனக்கு சினிமாவிலே சான்ஸ் - கிடைக்குமான்னு.... ......’ என்று வார்த்தைகளை மென்று விழுங்கித் துப்பினாள் அவள்.

‘இது சினிமாவுக்கு ஆள் சேர்க்கிற இடமில்லை. பேப்பர் ஆபிஸ். இங்கே டைரக்டர் கியரெக்டர் யாரும் கிடையாது’ என்று சொன்னேன்.

‘இங்கே போய் விசாரித்தால் தெரியும்னு சொன்னாங்களே’ என்றாள் அவள்.

அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது.

‘இங்கே அதெல்லாம் விவரம் தெரியாது. ஏதாவது படக் கம்பெனிகளிலோ, ஸ்டுடியோவிலோ போய் விசாரியுங்கள்-- என்றேன்.

அவள் அசையா மடந்தையாக நின்றாள். அங்கு மிங்கும் பார்த்தாள். பிறகு கைக்கட்டை விரலின் நகத்தைக் கடித்துக் கோண்டே பேசினாள். 'நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். சினிமாவிலே சேரவேணும்னு ஆசை. இங்கே யாரையும் தெரியாது. நீங்க யாருக்காவது சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் ....... -

அவள் சீக்கிரம் வெளியேறினால் போதும் என்று பட்டது எனக்கு, ‘சினிமாவில் சேருவது நீங்கள் நினைப்பது போல் லேசான காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை. சினிமா உலகத்தில் எனக்கு யாரையுமே தெரியாது. அதனாலே நீங்க போகலாம்’ என்து வழியனுப்பி, வைத்தேன். இப்படி வீணாகக் கெட்டுப் போகிறார்கள் எத்தனையோ பேர். சினிமாவில் சேர்ந்தால் பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கும் என்ற எண்ணம் போலும். இவளுக்கு வயது பதினெட்டு, பத்தொன்பது தான் இருக்கும். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடி வந்து விட்டாள். பட்டணத்துக்குப் போன உடனேயே சினிமா ஸ்டார் ஆகி விடமுடியும் என்று வெளியூரில் உள்ள சிங்காரிகளும் ஒய்யாரிகளும் சில யுவதிகளும் எண்ணிக் கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது.... கட்டவிழ்ந்து புரண்டு நெளியத் தொடங்கிய சிந்தனைக்கு தடை விதிக்க வேண்டியதாயிற்று. வேறு அலுவல் குறுக்கிட்டதால்.

அப்புறம் நான் அவளைப்பற்றி கவலைப்படவேயில்லை. அவளின் சாயை நினைவுப் பரப்பிலிருந்து மங்கி மாய்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குத் துணைபுரிந்த நீண்ட இடைவேளைக்குப் பின் மறுபடியும் அவளை நான் சந்திக்க முடிந்தது.

எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்திலே தான்.

புதிதாகத் திரைக்கு வரத் தயாராகிவிட்ட படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சிக்கு எனது நண்பர் ஒருவரோடு நானும் போயிருந்தேன்.

படம் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் தானிருந்தது. வாசலை மறைக்கத் திரை தொங்கவிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தவனிடம் யாரோ கனத்த குரலில் பேசுவது கேட்டது. அதட்டலாக விழுந்தது. ‘ நாங்கள் உள்ளே போகணும், வழிவிடு!’ என்று. அவன் இடமில்லை; உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொன்னான். ‘ ஏன் முடியாது ? நாங்க ஆக்ட்ரஸ்களாக்கும்!’ என்றாள் முதலில் பேசியவள்.

‘அட யாரடா அவ? ’ஆக்ட்ரஸாமே!’ என்ற மனக் குறிப்பு வழிகாட்ட பார்வை வாசல் பக்கம் உருண்டது பலருக்கு. நானும் திரும்பிப் பார்த்தேன்.

பகட்டாக ஆடை அணிந்த ‘அக்காள்’ ஒருத்தி, அவள் அருகில் நின்றாள். ஒரு ‘தங்கச்சி,’ சிறியவள் தோற்றம் தான் என்னைத் திடுக்கிட வைத்தது. அவள் பல மாதங்களுக்கு முன்பு சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆசையோடு வந்த சகோதரிதான்.

‘பரவால்லேயே ! சினிமா சான்ஸ் கிடைத்து விட்டது போலிருக்கு. எப்படிக் கிடைத்தது? யாரைப் பிடித்து எப்படி .....’என் மனம் கேள்விகள் எழுப்பியது. பார்வை வாசல் பக்கம் நடந்த நாடகத்தை இரசித்தது.

வாசல் காத்து நின்றவன் அவர்களை அனுமதிக்க முடியாது என்றான். பெரியவள் உரிமைக் குரலில் வாதாடி நின்றாள். பிறகு அவசரமாகப் போய் யாரையோ பார்த்துப் பேசி, தாராளமாக உள்ளே நுழைந்து விட்டாள். மற்றவள் அவளை விட்டு நீங்கா நிழலாகவே இயங்கினாள்.

‘போகும் இடமெல்லாம் லட்சியசித்தி தான் போலிருக்கு, பேஷ் !’என நினைத்தேன்

இரண்டு ‘ஆக்ட்ரஸ்’களும் கர்வமாக நடந்து, எல்லோரையும் பார்த்தபடி - எல்லோரும் தங்களைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்போடு-முன்னேறி இடம் பிடித்தார்கள்.

படம் முடிந்து வெளியே வரும்போது, கும்பல் கலையட்டுமே என்று நான் பின் தங்கி நின்றேன். அந்தப் பக்கமாக வந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும். ‘எப்பவோ ஒரு தடவை பார்த்தது, மறந்திருப்பா’ என்று நினைத்தேன். அது தப்பு என்று சுட்டிக் காட்ட விரும்பியது போல் துடித்தது அவள் பார்வை. செஞ்சாயம் மிகுந்திருந்த உதடுகளில் சிரிப்பு பூத்தது. அவள் அங்கேயே நின்று விட்டாள்.

‘நமஸ்காரம்’ என்றாள்.

அநேகம் ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் நீந்தியதில் வியப்பு என்ன இருக்க முடியும் ?

குறும்பாகச் சிரித்த படி அவள் கேட்டான்: 'என்னை ஞாபகம் இருக்கிறதா, ஸார் ? நான் சினிமாவில் சேர்ந்து விட்டேன்."

‘ஓ! சந்தோஷம்’ என்றேன். "அது தான் ஆளைப் பார்த்தாலே தெரியுதே. உன் கூட. நிற்பவளே அரைகுறையாப் பார்த்தாலே போதுமே :- இப்படி நான் சொல்லவில்லை. எண்ணிக் கொண்டேன்.

எப்படிச் சேர்ந்தாள் ; சினிமா அனுபவம் எப்படி யிருக்கிறது ; அவள் எதிர்பார்த்தபடி உள்ளதா எவ்வளவோ கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இடம், பொருள், ஏவல் என்கிறார்களே. அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் மெளனமாக நின்றேன். தோழி துரிதப்படுத்தியதால் அவளும் நகர்ந்து கூட்டத்தில் கலந்தாள்.

பிறகு அவளை நான் சிலசமயம் பார்த்தது .உண்டு. அவளும் தோழியும் பீச்சிலோ, மெளண்ட் ரோட்டிலோ, சென்ரல் ஸ்டேஷன் சமீபத்திலோ நடந்து சென்ற போது பார்த்திருக்கிறேன். எதிரும் புதிருமாகச் சந்தித்தது இல்லை.

பலப்பல மாதங்களுக்குப் பின்னர் சந்தர்ப்பம் மீண்டும் அவளை என் முன் கொண்டு வந்து சேர்த்தது.

படக் கம்பெனி ஒன்றிலே தான். படமுதலாளி ஒரு வரைக் காணச்சென்ற எனது நண்பரோடு நானும் சும்மா போயிருந்தேன். நண்டர் ஆபீஸ் அறைக்குள் போனபோது, நான் வெளி ஹாலில் உட்கார்ந்திருந்தேன். வீணாக .உள்ளே போவானேன் என்றுதான். அப்போதுதான். அவளைக் காண முடிந்தது.

சிரத்தையோடு சிங்காரித்து வந்திருந்த அலங்காரிகள் தனித் தனியாகவோ, இரண்டு மூன்று பேராகவோ அங்கு மிங்கும் சுழன்று கொண்டிருந்தார்கள். அவளும் நின்றாள் அங்கே. அவள் ஒரு எக்ஸ்ட்ரா என்பது அவ்ள் நடையிலே, உடையிலே, நின்ற நிலையிலே, பார்க்கும் தினுசிலே, அசையும் நெளிவிலே ஒவ்வொரு பண்பிலும் விளம்பரமாகிக் கொண்டிருந்தது. அவள் தற்செயலாக என்னைப் பார்த்தாள். பார்வையை மீட்டுக் கொண்டாள்.

"மறந்திருப்பாள். ரொம்ப நாளாச்சல்லவா!' என்று நினைத்தேன். -

அவன் மீண்டும் கவனித்தாள். என்ன நினைத்தாளோ, மெதுவாக அருகில் வந்து நிவ்வு 'நமஸ்காரம், ஸார்.. இங்கே எங்கு வந்தீர்கள்? ஏன் வெளியே உல்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டாள்.

நான் சொன்னேன், தொடர்ந்து விசாரித்தேன்; 'என்ன, சினிமா உலகம் எப்படியிருக்கு? நட்சத்திர பூமி உண்மையில் தூரத்துப் பச்சையாகத் தோன்றுகிறதா; இல்லை, தென்றலும் குளுமையும் நிறைந்த பூஞ்சோலையாக உள்ளதா?.

'என்னத்தைத் சொல்ல ? ஏன் தான் சினிமாக்காரியாக மாறணும்னு ஆசைக்பட்டேனா என்றிருக்கு எனக்கு சில சமயம். வந்தச்சு, இனி என்ன செய்வது?' என்று கூறி பெருமூச்செறிந்தாள் அவள்.

'ஏன்! அதற்குள் இந்த வாழ்க்கை அலுத்து விட்டதா?' என்று கேட்டேன். அதில் கேலி சிறுது தொனித்திருக்கலாம். ஆனால் உடனேயே அதற்காக நான் வருந்தினேன். அவள் எதிர்பார்ப்பது நையாண்டியல்ல; அனுதாபம் தான் என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.

'என்ன செய்வது? ஆசைபடுகிறோம், ஆர்வத் துடிப்போடு ஆராயாமலே குதிக்கிறோம். முன்னேற முரண்டு பிடிக்கிறோம், ஆனால் முடிவு லட்சியச் சிதைவுதான். இலகுவில் தொட்டுவிட இயல்வதில்லை, எல்லாத் துறைகளுக்கும் இது பொது' என்றேன்.

'இப்படியிருக்குமென்று நான் நினைக்கவேயில்லை' என்றாள் அவள். நான் பதில் எதுவும் சொல்லாததனால் அவளே பேசினாள்; 'பெரிய கலை, சேவை கத்தரிக்கா சேமியா என்று பேசிவிடுகிறார்கள், ஆனால் நடைமுறையில், அம்மா! பயமாக இருக்கிறது, ஸ்டார்களைப் பற்றி, கலைக் கொம்பர்களைப் பற்றியெல்லாம் பக்க பக்கமாக எழுதுகிறவர்கள் ஒரு தடவையாவது எங்கள் அபிப்பிராயங்களைக் கேட்டு எழுதினால் என்னவாம்?....' எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை. பாவம், அவள் ஆசையை வீணகக் கெடுப்பானேன்! இருந்தாலும் எதாவது சொல்லவேண்டுமே, ஆகவே'பரஸ்பர உதவிதான்' என்றேன். அவளுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது.

'படமுதலாளிகளும் வாழவேண்டும். . பத்திரிகைக்காரர்களும் வாழவேண்டும் அல்லவா! அதனால் தான் பிரமாதப் படுத்துகிறார்கள்' என்றேன். எனது பதில் 'எப்படி உருப்படும்?' என்ற கேள்வியாகத்தான் உதிர்ந்தது.

அவளாகவே சொன்னாள்:

'இன்றைக்கு ஒத்திகை உண்டு எல்லாரும் வரணும் அப்படின்னு சொன்னாங்க, வந்தோம் இங்கே வந்து இவ்வளவு நேரம் காத்திருந்த பிறகு, இன்னைக்கு ஒத்திகை வேண்டாம், இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம், எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிவிட்டாங்க, என்ன செய்யறது? இப்படி வந்துவிட்டுப் போறதுன்னு சொன்னா எவ்வளவு வீண் செலவாகுது? அதை யார் தருகிறா? ஸ்டார் வரணும்னா ஒரு தடவைக்கு ஒன்பது தடவை காரு போகுது நாங்க வெறும் எக்ஸ்ட்ராக்கள்தானே?.

எனக்கு அன்று -- படம் ஒன்றின் பிரத்தியேகக் காட்சியின்போது, -- தியேட்டரில் நடந்ததும், ' நாங்கள் ஆக்ட்ரஸ்கள்', என்ற கர்வ அறிமுகமும் நினைவில் எழுந்தன. அவர்கள் நகர்ந்ததும், வாசலில் நின்றவன் முனகியதும் ஞாபகத்திற்கு வந்தது. பெரிய இவளுக! ஆக்ஸ்ட்ரஸ்களாமில்ல, ஆக்ஸ்ட்ரஸுக! தெரியாதாக்கும், எக்ஸ்ட்ராஸா இருப்பாளுக, இருந்தாலும் ஜம்பத்துக்குக் குறைச்சல் இல்லை!' அன்று அவளிடம் மிடுக்கும் பெருமையும் இருந்தன. இன்று துயரமும் ஏக்கமும் அதிகமிரும்ந்தன, ஏன்? காரணம் என்ன ?

அவளிடமே கேட்டேன்.

'எக்ஸ்ட்ராப் பிழைப்பைப் பற்றி என்ன சொல்ல? எப்படியாவது உயிர்வாழ வேண்டியிருக்குதே' என்று அலுப்பாக மொழிந்தாள் அவள்.

சினிமா உலக 'எஸ்ட்ரா' நடிகைகளின் வாழ்க்கையைப் பற்ற ஆராய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு, பணம் 'தண்ணீர் பட்ட பாடு' படுகிற அந்த உலகத்தின் கீழ்ப்படியில் உள்ளவர்கள் நிலை எப்படி - யிருக்கிறது; நட்சத்திரங்களைப் போல் பகட்டும் படாடோபமுமாக வாழ முடியாவிட்டாலும், சௌக்கியமாகக் காலந்தள்ள வசதிகள் கிடைக்கின்றனவா என்றறிய வேணும் என்ற அவா உண்டு எதற்குமே வெளியே புலனாகாத 'மறுபுறம்' ஒன்று உண்டல்லாவா? இந்தக் கலையுலகின் மற்றோர் புற மர்மங்களை அறிய வேண்டும் என்ற நினைப்பு எனக்கு உண்டு..

அவள் மூலம் ஒரு சிரிதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினத்தேன், அதனால் மற்றவர்வகள் அர்த்தம் நிறைந்த பார்வை பரிமாறிக் கொள்வதையும், குறும்பாகச் சிரித்துக் கொள்வதையும், மெல்லொலி பரிமாறி ரகசியம் பேசுவதையும் உணரமுடிந்தாலும் கவனியாதது போல் ஒதுங்கி விட்டேன்.

மற்றவர்கள் கண்ணெறிந்தபடி நகர்ந்தார்கள், ஒரு 'எக்ஸ்ட்ரா' 'ஏண்டி புஷ்பா, இப்ப வரப்போறியா? இல்லே, உனக்கு ஜோலி இருக்குதா?' என்று குத்தலாகக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

அவளுடைய தோழி வரவும், அவளும் சென்றாள். 'புஷ்பா யாரடி அது? பழைய சினேகமா? அல்லது புது நட்பா?' என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் தோழி.

'போடி!' என்று அவள் கண்டித்த குரலும் காதில் விழுந்தது. எனக்கு எக்ஸ்ட்ரா 'க்கள் மீதும் அதிக வெறுப்பு ஏற்பட்டது, சினிமா, படவுலக பிரம்மாக்கள், ஸ்டுடி.யோ பூமி, நட்சத்திரங்கள், எக்ஸ்ட்ராஸ் எல்லோர் மீதும், எல்லாவற்றின் மீதும் வெறுப்பும் ஆங்காரமும் அதிகரித்தன.

'ரொம்ப நேரமாக என் கூடப் பேசிக் கொண்டிருந்தாளே, அது யாரப்பா அவ?' என்று கேட்டபடி வந்து சேர்ந்தார் நண்பர்.

'அவள் ஒரு எக்ஸ்ட்ரா?' என்று நான் சொன்ன தோரணியே நண்பரை வீண் பேச்சு வளர்க்க விடாமல் தடுத்துவிட்டது.

'ஓ! அவளா ? முன்பே பார்த்திருக்கிறோமே' என்று சமாளித்துக் கொண்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அவள்_ஒரு_எக்ஸ்ட்ரா/1&oldid=1062448" இருந்து மீள்விக்கப்பட்டது