ஆசிரியர்:மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்

விக்கிமூலம் இலிருந்து
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்
(1937—)
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் (9-ஜூன்-1937ல் பிறந்தவர்) ஒய்வு பெற்ற நல்லாசிரியர் மற்றும் தமிழ் புலவர் ஆவர்.

இந்நூல் ஆசிரியரின் இயற்பெயர் அ.மு.சண்முகம். தந்தையார் மெய்வழி முத்துசாமி, தாயார் மெய்வழி காளியம்மா. நாமக்கல் மாவட்டம் அரசம்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தூலத் துணைவியார் மெய்வழி சௌந்தரவல்லி அனந்தகி. 1957 முதல் 1996 முடிய 39 ஆண்டுகள் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

  • இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் இயற்கையாக அமைந்திருந்ததால், தமது குருபிரானின் போற்றுதற்குரிய பெருமையைக் கவிதைகளாகவே எழுதியெழுதி 108 சிற்றிலக்கியங்களில் எழுதி வெளியிட்டவர்.
  • 108 சிற்றிலக்கியங்களையும், ஒரே புலவர் இயற்றியதும், ஒருவரை மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதி வெளியிட்டிருப்பதும், இதுவரை இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகை பிரபந்தங்களுக்கு இலக்கியம் இயற்றியதும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதன் முறை ஆதலால், இவரது இலக்கியத் தொண்டை ஆதரிக்கும் விதமாக இவருக்கு ‘சிற்றிலக்கிய மகாகவி’ என்ற விருது, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்களால் 12-2-2020 அன்று 'அனைத்துலக தமிழ் சிற்றிலக்கிய மாநாட்டில்' வழங்கப்பெற்றது.
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் தம்பதிகள்


படைப்புகள்[தொகு]

இவரின் படைப்புகள் படைப்பாக்கப் பொதுமம் CC-BY-SA 4.0 international இல் வெளியிடப்பட்டுள்ளது.

மரபுக் கவிதை நூல்கள்[தொகு]

  1. திவ்வியப் போற்றி மலர்கள்
  2. திவ்வியப் பிரபந்தத் திரட்டு
  3. தெய்வப் பிரபந்த மணிகள்
  4. தெய்வக் கீர்த்தனைகள்
  5. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108

இசை வடிவப் பதிவுகள்[தொகு]

  1. மெய்வழி தெய்வ கீர்த்தனைகள் (பத்து பாகங்கள்)
  2. வில்லுப் பாட்டு
  3. சரித்திரக் கீர்த்தனைகள்
  4. ஸ்தோத்திரக் கீர்த்தனைகள்
  5. பஞ்சரத்ன கீர்த்தனைகள்

உரைநடை நூல்கள்[தொகு]

  1. பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவரலாறு
  2. ஸ்ரீவித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மகாமகத்துவம்


ஆசிரியரின் சுயசரிதம்[தொகு]

(மூலம் : ஆசிரியர் இயற்றிய "ஸ்ரீவித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மகாமகத்துவம்" நூல்.)

ஸ்ரீ வித்துநாயகமும் கொத்தடிமையும்

வாக்குமூலம்:

இதில் கூறப்படுவன எல்லாம்  உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை. கற்பனை இல்லை. தற்புகழ்ச்சி இல்லை. கண்டு, கேட்டு, உணர்ந்து அனுபவித்த உண்மைச் செய்திகள்.


   ஸ்ரீ வித்துநாயகம் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் இந்த அகில மனுக்குலமும் ஜென்ம சாபல்யம் பெரும் பொருட்டாய் இறுதி நீதித் தீர்ப்பராக, கலியுக வரதராக, புதுயுகம் புரப்பிக்கும் ஆதி பிரம்மமாக, மனுப்போலே ஒரு திருமேனி தாங்கி மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் என்ற திருநாமத்திலேறி அவதாரம் செய்தருளினார்கள். அந்நாட்டினுக்கு வித்தெடுக்க வந்த அந்த ஆதிநாயகம் இந்நாட்டில் தங்கள் திருவடி சார்ந்த இன்னுயிர்களை எமபயம் கடத்தி ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு தவ ஞான சிங்காதன பீடமேறி அருளாட்சி நடாத்திக் கொண்டிருந்த காலத்தில் ஒரு எளிய தம்பதியினர் சுமார் இருபது ஆண்டுகட்கு மேலாக குழந்தைப் பேறின்றி நெய்விளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செய்தும் நிலச்சோறு உண்டும் விரதமிருந்தும் தெய்வத்தை வேண்டியும் வரங்கேட்டனர். தெய்வத் திருவுள்ளம் இரங்கியது.தங்கள் திருவடியில் படிந்திருந்த ஒரு துகளை அவர்கள் கருவில் விதைத்தார்கள். அது ஆண் கருவாகி உருவாகி ஈஸ்வர வருஷம். மாசி மாதம் 29-ஆம் தேதி. 12-3-1938 சனிக்கிழமை. பூச நட்சத்திரம். சுக்ல பட்சம். ஏகாதசி திதி அன்று இப்பூவுலகில் விழுந்தது. அதன் பெற்றோர் திரு.முத்துசாமி, திருமதி.காளியம்மாள். அக்குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் கருப்பன். ஆசிரியர் சூட்டிய பெயர் சண்முகம். இந்தக் குழந்தைக்கு 10-ஆம் இடத்தில் குரு நீசம். 12-ம் இடத்தில் புதன் மறைவு. எனவே கல்வி கற்க மாட்டான். ஒழுங்காகத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று ஜோதிடர் கூறினார். இனி அவன் வாக்கு மூலமாகவே கேளுங்கள்.

   ஆனால் தெய்வம் தாங்கள் விதைத்த வித்தைச் சொத்தையாக விடவில்லை. முதல் தகுதியிலேயே வரும்படி கல்வி கற்பித்தார்கள். பள்ளி இறுதி வகுப்பிலும் முதல் மாணவனாகவே தேர்ந்தேன். ஆசிரியர் பயிற்சியும் பெற்றேன். ஆசிரியர் பணியும் ஏற்றேன். வினா தெரிந்த காலம் முதலே தந்தையாருடன் சனி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருத்தல் காலையில் எழுந்து குளித்து விநாயகர் பூஜை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டேன். பள்ளியில் கண்ணப்ப நாயனார், நந்தனார், துருவன், ஏகலைவன் ஆகியோர் சரித்திரங்களைப் படித்ததால் கடவுளைக் காண வேண்டும் என்ற ஆசையால் முதியோர்களையும் சாமியார்களையும் தேடித் திரிந்தேன்.விட்ட குறையைத் தொட்டு முடிக்க வேண்டும் அல்லவா. யோகாசனங்கள் செய்தேன். எந்தத் தீய பழக்கமும் என்னை அடிமை கொள்ளவில்லை. ஏனெனில் அடியேன் ஆண்டவர்களின் கொத்தடிமை. அந்த முத்திரை என் உயிரில் பதிக்கப்பட்டு விட்டதால் மற்றவைகள் என்னைத் தீண்டவில்லை. ஆசிரியர் பயிற்சி பெற்ற காலத்தில்(1955-1957) நெற்றியில் பட்டையாக விபூதி தரித்திருந்தேன். சக மாணவர்கள் பட்டை, பட்டை என்று கேலி செய்தார்கள். நம்மைப் படைத்தது கடவுளானால், கடவுளைப் படைத்தது யார்? என்றெல்லாம் வாதுக்கு இழுத்து என்னை வம்பு செய்தார்கள். எனவே நாத்திகம் என்னும் விஷக் குளிர் காய்ச்சலோடு வெளியே வந்தேன். அந்தக் காய்ச்சல் சுமார் நான்கு ஆண்டுகள் நீடித்தது. மேட்டுப்பாளையம் என்னும் ஊரில் பணி ஏற்றேன். நான்காண்டுகளுக்குப் பின் முஞ்சனூர் என்னும் ஊருக்கு மாறுதல் பெற்றேன். என்னைப் பற்றிய காய்ச்சல் நோய் தீரும் நாளும் வந்துற்றது.

   நான் பணியாற்றிய பள்ளியில் தேவகுமாரர்கள் இருவர் நடராஜ், துரைராஜ் (பிற்காலத்தில் மெய்வழி நடராஜ கவுண்டர், மெய்வழி துரைராஜ கவுண்டர்) என்பவர்கள் முறையே மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் படித்து வந்தார்கள். நடராஜனிடம் பாடம் நடத்துவதற்காகப் புத்தகம் கேட்டேன். நடராஜன் யாரும் கவனிக்கத் தகுந்த செவ்வாழைக் குருத்து போன்ற அழகிய மேனியன். பாடப்புத்தகத்தை வாங்கினேன். மேலட்டையில் அழகான பொன் மொழிகள் அச்சிட்டிருக்கக் கண்டேன். பிரித்துப் பார்த்த போது ரிஷிகேசத்து சிவானந்த சரஸ்வதி என்பவரின் பொன் மொழிகள் என்று இருந்தது. இளநீலப் பேப்பரில் ஒருபுறம் பொன் மொழிகளும் ஒருபுறம் அனுஷ்டானங்களும் அச்சிடப்பட்டிருந்தன. “தம்பீ! இதென்ன இப்படிப்பட்ட அறிவுரைகள் உள்ள தாளைப் புத்தகத்திற்கு மேலட்டையாகப் போட்டிருக்கிறாயே!” என்றேன்.

   அதற்கு நடராஜன், “இதில் என்னங்கய்யா இருக்கிறது. இதில் ஒன்றுமில்லைங்க ஐயா, எங்கள் வீட்டில் இது போன்று நிறைய தாள்கள் கேட்பாரற்றுக் கிடக்கிறதுங்க ஐயா!”, என்றான். “நிறைய கிடப்பதால் இதை இப்படிப் பயன் படுத்தலாமா? நீ மூன்றாம் வகுப்புப் படிக்கிறாய், இதை எழுதியவரோ பெரிய மேதை, இவ்வளவு அலட்சியமாகச் சொல்கிறாயே?”, என்றேன். அதற்கு நடராஜ், “ஐயா எங்கப்பா இதைப் பெரியதாக எண்ணித்தான் எல்லோருக்கும் இலவசமாக அச்சுப் போட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் இல்லாத சாமி படமே இல்லை. தினமும் பூஜை செய்து கொண்டே இருப்பார். பிறகு யார் மூலமோ மெய்வழிச் சாலைக்கு தெய்வம் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்குபோய் தெய்வத்தைக் கண்டார். அதன் பின் சாமி படங்களையும், இந்தக் காகிதங்களையும் ஓரம் கட்டிவிட்டார். கடவுளையே நேரில் கண்டபின் இதெல்லாம் எதற்குங்க ஐயா!” என்று தெளிவாகவும், உறுதியாகவும் கூறினான். எனக்கோ வியப்பு. என்னப்பா உன் தந்தையார் கடவுளைக் கண்டிருக்கிறாரா? கடவுள் பூமிக்கு வந்திருக்கிறாரா? நம்பவே முடியவில்லையே. சரி, சரி, இது போன்றதொரு தாளை நாளைக்கு அப்பாவிடம் கேட்டு வாங்கி வா”, என்றேன்.

   நடராஜன் போய் தன் தந்தை, மெய்வழி சுப்பராய அனந்தரிடம் இதைச் சொன்னதும் அவர் ஒரு நல்ல தாளை எடுத்து, அதன் பின் பக்கம் கீழே கண்ட பாடல்களை எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்.

 பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
 துறப்பதாம் தூநெறிக்கட் சென்று.

 உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
 உடம்பினுள் உத்தமனைக் காண்.

 கேட்டாயோ தோழி கிறி செய்த வாறொருவன்
 தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதனவெல்லாம் காட்டிச் சிவம் காட்டித்
தாள் தாமரை காட்டித் தன்கருணைத்தேன் காட்டி
நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடெய்த
ஆள்தான் கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்
காலமுண்டாகவே காதல் செய் துய்மின் கருதரிய
ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண்டானெங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின் றார்வந்து முந்துமினே.
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக
கடபடமென் றுருட்டுதற்கோ கல்லாலெம்மான்
குற்றமறக் கைகாட்டும் குறிப்பைக் கண்டு
குணம் குறியற்று இன்பநிட்டை கூடவன்றோ.

என்றெழுதி இவற்றின் விபரம் தெரிந்து கொள்ள நம் தோட்டத்திற்கு வரவும் என்று எழுதியிருந்தார்.


   அன்று மாலையே அவருடைய தோட்டத்திற்குச் சென்றேன். தெய்வம் என்னைத் தடுத்தாட்கொள்ள அனுப்பிய தேவ தூதரான மெய்வழி சுப்பராய அனந்தரை அன்று கண்டேன். காட்சிக்கு எளிய விவசாயிதான். பள்ளியில் சேர்ந்து படித்தது ஐந்தாம் வகுப்புதான். ஆனால் பள்ளியில் சேராமல் படித்தவை பதினெட்டு புராணங்கள், பகவத் கீதை, திருக்குறள், நூற்றியெட்டு உபநிஷத்துக்கள், ஞானக்கோவை, சித்தர் நூல்கள், நாலடியார், வைத்திய நூல்கள் எனப் பல. அன்று தொடங்கியது என் மெய்வாழ்வு.


   தினமும் பள்ளி முடிந்ததும் அவர் தோட்டத்திற்குப் போய்விடுவேன். மூன்று மாதங்கள் ஏராளமாகப் பேசினார். எப்போது சாலைக்குப் போவோம் என்ற ஏக்கமே மிகுந்தது. அக்டோபர் மாதம் விஜயதசமி விடுமுறை வந்தது. அவரிடம் சாலைக்குப் போகலாம் என்றேன். அவர் அதற்கு திடமான வைராக்கியம் வேண்டும்; தடைகள் வரும். மீறித் துணிச்சலுடன் வந்தால்தான் இதில் நிலை நிற்க முடியும் என்றார். அவர் கூறியபடியே என் தந்தையைப் பெற்ற பாட்டி இறக்கும் நிலை ஏற்பட்டது. என் தந்தையாரிடம் அப்படிப் பாட்டி காலமானால் எடுத்து அடக்கம் செய்து விடுங்கள். நான் சாலைக்குப் போகிறேன் என்று புறப்பட்டு மெய்வழி சுப்பராய அனந்தருடன் சாலைக்கு வந்து சேர்ந்தேன். அதுவரை காஷாய ரட்சிப்புச் சீரா, இடைக்கச்சு, காஷாய உடை இருப்பதை அவர் சொல்லவே இல்லை. கை கால் சுத்தி செய்து கொண்டு காஷாய உடைகளை அணிந்தார். இது நாம் எப்போதோ விட்டு வந்தது என்ற உணர்வு எனக்கு வந்தது. பின்னர் தெய்வ சன்னிதிக்கு வந்து தெய்வ தரிசனம் செய்தோம். நான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன். எழுந்து நின்றேன்.

தெய்வம் : (அவரை அழைத்து) யாரிது?,என்று கேட்டார்கள்.
மெ.சுப்பராய அனந்தர் : என் குழந்தைகளின் ஆசிரியர் என்றார்.

(விட்டு வந்த தெய்வத்தைத் தொட்டுக் கொண்டேன்.)

தெய்வம் : (என்னைப் பார்த்து) உனக்கு உயிரெழுத்து தெரியுமா? என்றார்கள்.
நான் : எனக்கு எதுவும் தெரியாதுங்க. என்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டால் போதும் என்று விண்ணப்பித்தேன்.
தெய்வம் : திருமணம் ஆகிவிட்டதா?
நான் : இல்லைங்க தெய்வமே.
தெய்வம் : திருமணம் செய்து கொண்டு வா.
நான் : உத்தரவு


   என்று சொல்லிவிட்டு வந்து அமர்ந்தேன். என் உயிருக்கு உயிரானவரைக் கண்டேன். மாலை இரவு வணக்கங்களில் கலந்து கொண்டேன். அன்று இரவு கடுமையான மழை.தூக்கம் வரவே இல்லை; மயில்களின் அகவல், பாரா வணக்கம் பார்ப்பவர்களின் பாடல் சப்தம், விசில் சப்தம் கேட்ட வண்ணம் இருந்தது. விடியற் காலம் பஞ்சணை எழுச்சி. சரியாக சூரியோதயத்தின் போது தவமாளிகையின் முகப்பில் நின்று தவதரிசனம் பெற்றேன். கம்மாய் கரை உடைப்பு எடுத்தது. ஆலயத்தின் மேற்கில் இருந்த வாவியின்(கிணற்றின்) சுற்றுச் சுவர்கள் கரைந்து கற்கள் உள்ளே நீரில் விழுந்தன. மெய்வழி சுப்பராய அனந்தர் “இதுவரை அங்கு செய்தது தெருப்பணி இதுதான் திருப்பணி”, என்றார். திருப்பணியில் கலந்து கொண்டேன். வாவியின் சுற்றுச் சுவரை பெரிய மூங்கிலில் இருபுறமும் வடம் கட்டி சுவற்றின் உள்புறம் போட்டு தேர் வடம் பிடிப்பது போல் பிடித்து எல்லோரும் ஒரு சேர இழுக்க வேண்டும் என்று உத்தரவாயிற்று. அப்படி வடம் பிடிக்கும் போது தெய்வம் என்னைத் தங்கள் பின்னால் வந்து நின்று வடம் பிடிக்கச் சொன்னார்கள். அப்படியே செய்தேன். வடம் இழுக்கும் போது அந்த பொன்னார் திருமேனி செண்பக மலர் மணம் கமழும் வாசத்திருவுருவம், தந்தம் இழைத்து உருவாக்கிய அழகிய மணி விம்பம், தவமே உருவெடுத்த தனித்த வடிவழகு, எளிய, பேதை நாயேன் கடைச் சிறியேன் மீது படிந்தது. என் பவவினைகள் மடிந்தன. முதன் முதலாக ஸ்பரிச தீட்சைப் பாக்கியம் வாய்த்தது. தன்யனானேன். கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத பேரதிர்ஷ்டம். மறுநாள் ஊருக்குப் புறப்பட உத்தரவு கேட்கச் சென்றேன். திருச்சன்னிதி முன் நின்றேன். கேட்க நாவெழவில்லை. கண்ணீர் பெருகுகிறது. உள்ளம் உருகுகிறது. ஏனிந்த உணர்வு? புரியவில்லை. தெய்வம் இரக்கம் அடைபடுத்த இருதிரு அருட்பார்வையால் என் இதயத்துட் புகுந்தார்கள். “போய் வா. போய் திருமணம் செய்து கொண்டு வா”, என்று உத்தரவிட்டு அருளினார்கள். அப்போது ஒரு மரபு இருந்தது. தெய்வ உத்தரவு கேட்டு வெளியேவரும் போது அங்கு இருப்பவர்களிடம், “சென்று வருகிறேன் ஜீவப் பிறவியரே”, என்று நமஸ்காரம் சொல்ல வேண்டும். அவர்கள் “சென்று வாருங்கள் ஜீவப் பிறவியரே”, என்று நமஸ்காரம் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டு வெளியே வந்த போது ஒரு அற்புதம் நடந்தது. (கற்பனையுமல்ல வெறும் பிரமையும் அல்ல). அது அகக் கண்ணால் காணும் காட்சி.


   ஒரு வெண் புரவியில் (வெள்ளைக்குதிரையில்) தெய்வமவர்கள் ஆரோகணித்து முன் செல்வது போன்ற காட்சி. திரும்பிய பக்கமெல்லாம் இதே காட்சி. பஸ்ஸில் ஏறினாலும் முன்னே இந்த காட்சி. இது எளிய பேதை நாயேனது இதயத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. என் உயிரினில் ஆழப் பதிந்து விட்டது. தெய்வம் கண்ணுட் புகுந்து, கருத்தில் நிறைந்து, நிலைத்து விட்டார்கள். திருமணத்திற்குப் பெண் தேடினேன்.ஏனோ பெண் அமையவில்லை. ஓராண்டு உருண்டோடியது. எல்லாத் திருவிழாவிலும் கலந்து கொண்டேன். ஒவ்வொருவிழாவிலும் விண்ணப்பிப்பேன். திருமணம் ஆகிவிட்டதா என்பார்கள். இல்லையென்பேன். திருமணம் செய்துகொண்டுவா என்பார்கள். இறுதியாக ஒரு திருவிழாவில் கேட்ட போது, “நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டு வா என்கிறேன், நீ செய்து கொள்ளாமலே வந்து கேட்கிறாய். நான் சொன்னபடி நீ கேட்கிறாயா அல்லது நீ சொன்னபடி நான் கேட்க வேண்டுமா?”, என்றார்கள். “மன்னித்தருளுங்கள் தெய்வமே”, என்று சொல்லிவிட்டுப் போய் அமர்ந்துவிட்டேன். எல்லோரும் போய்விட்டார்கள். அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அழுது கொண்டிருந்தேன். தெய்வம் இதனைக் கவனித்து விட்டார்கள். “டேய் இங்கே வா”, என்றார்கள். சன்னதிமுன் போய் வணங்கி நின்றேன். “ஏன் அழுகிறாய்?” என்றார்கள். “தெய்வமே! திருமணமும் அமையவில்லை, தாங்களும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். எனக்குத் திருமணமே வேண்டாம் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அழுதேன்.
“அடே! உன்னைச் சேர்த்துக் கொள்வேன். உடனே நீ காஷாயம் கேட்பாய். தலைப்பாகை கட்டிக் கொள்வாய். அதைப் பார்த்தவர்கள் பெண் கொடுக்க மறுப்பார்கள். அப்போது நீ 'திருமணம் செய்து கொண்டபின் சபையில் சேர்ந்திருக்கலாமோ’ என்று எண்ணினால் பெற்ற பெரும் பலன் போய்விடும். நீ வந்த அன்றைக்கே உன்னை நான் சபையில் சேர்த்துக் கொண்டேன். ஏட்டில்தான் எழுதவில்லை. திருமணம் ஆகும் போய் வா”, என்று ஆசீர்பதித்து அருளினார்கள். அன்றும் அந்த வெண்புரவியில் ஆரோகணித்துச் செல்லும் திருக் காட்சி.

தாயுமானவர்
   சாலையிலிருந்து வந்த மறுநாள் நூலகத்திற்குச் சென்றேன். வழியில் என்னுடன் பயின்ற நண்பர் சீனிவாசன் என்பவரைச் சந்தித்தேன். அவரிடம் சீனு எனக்கு ஒரு பெண் பாரேன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றேன். அவர்,“படித்து ஆசிரியர் பணியில் இருக்கும் பெண் வேண்டுமா? படிக்காத பெண் வேண்டுமா?”, என்று கேட்டார். நல்ல பண்புள்ள ஒரு குடும்பப் பெண் வேண்டும். எழுத்தறிவு இருந்தால் போதும். உத்தியோகம் அவசியமில்லை என்றேன். அப்படியானால் என் கொழுந்தி இருக்கிறாள். எட்டாம் வகுப்புப் படித்தவள் என்றார். நாளையே போய் பார்ப்போம் என்றேன்.

   மறுநாள் பெண் பார்க்க அவரும், நானும் புறப்பட்டோம். பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன் வண்டிக்கு முன்னால் தெய்வம் வெண்புரவியில் ஆரோகணித்துச் செல்லும் திருக்காட்சி கிடைத்தது. தெய்வம் நம்முடன் வருகிறார்கள் என்ற தெம்புடன் போய்க் கொண்டிருந்தேன்.

   எனக்கு உடன் பிறப்பு யாரும் இல்லை. மலேசியாவிலிருந்து என் சிற்றன்னையின் மகளை வரவழைத்து என் தாய் மாமனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தேன். அந்த தங்கை(பெயர் அமிர்தம்) கர்ப்பமாகி பேறுகாலத்திற்காக என் வீட்டிற்கு வந்திருந்தாள். இது பிரசவிக்கும் மாதம். பஸ்ஸில் போகும் போது நாம் பார்க்கப் போகும் பெண் பிடித்திருந்தால் தங்கையின் பிரசவத்திற்குப் பின்தானே திருமணத்தேதி வைக்க முடியும் என்று எண்ணினேன். “ஒரு பத்து நாள் பொறு”, என்று ஒரு சப்தம் கேட்டது. அருகிலிருப்பவர்களைக் கேட்டால் நாங்கள் ஏதும் சொல்லவில்லை என்றார்கள். ஒரு வேளை இது ஆண்டவர்கள் திருவாக்காய் அசரீரியாய் இருக்குமோ என்று எண்ணினேன். அதன்படியே ஒன்பதாம் நாள் என் தங்கைக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. தங்கையைத் தங்க வைத்திருந்தது வடக்குப் பார்த்த ஓட்டு வீடு. வெளித் திண்ணைப் பகுதியில் தென்னைக் கிடுகு மறைப்புக் கட்டி பிரசவிக்கும் பெண், என் சிற்றன்னை, மருத்துவச்சி, இன்னொரு அம்மா ஆகிய நால்வரும் உள்ளிருந்தனர். மாலை மூன்று மணிக்கு வலி பிடித்தது 6 மணி ஆகியும் பிரசவம் ஆகவில்லை. ஊர்ப் பெண்கள் “வாத்தியாரே! இது சண்டிவலி நாளைக்குத்தான் பிரசவம் ஆகும்”, என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். எந்நேரம் பிரசவம் ஆகுமோ தெய்வமே என்று எண்ணினேன். அன்று பத்து நாள் பொறு என்று அசரீரி கேட்டது. அது பலித்துவிட்டது. இன்று எப்படியாகுமோ? என்று எண்ணினேன். “பத்து மணி வரை பொறு”, என்ற அசரீரி கேட்டது. மணியைப் பார்த்துக் கொண்டே வெளியில் படுத்திருந்தேன். இரவு மணி 9.45. அப்போது “என் அண்ணன் ஒரு தெய்வக் கோயிலுக்குப் போகிறாரே அந்த தெய்வத்திற்குக் கூட என்மேல் இரக்கமில்லையா?” என்று என் தங்கை வாய்விட்டு அழுதாள். அடுத்த கணம் தெய்வம் தங்கள் திருக்கையில் பிரம்புடன் மேற்கூரையிலிருந்து இறங்கி வந்து வீட்டினுள் போவது போல ஒரு காட்சி ‘திடுக்’ கென எழுந்து பார்த்தேன். என் தங்கையும் மற்ற மூவரும் வீட்டினுள் சென்றார்கள். கதவைச் சாத்தினார்கள். சுகப்பிரசவம் ஆகிவிட்டது. ஆண் குழந்தை. சிறிது நேரம் ஆயிற்று. என் தங்கை “அண்ணா!” என்று அழைத்தாள் ‘என்னம்மா’ என்றேன்.

   “அண்ணா! நான் வெளி வராந்தாவில் பிரசவ வலியால் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் மேற்கூரைப் பகுதியிலிருந்து இறங்கி வந்தார்கள். அவர்கள் தலையில் வங்காளி மாதிரி தலைப்பாகை கட்டியிருந்தார்கள். ஐயர் மாதிரி பட்டைக் கோவணம்(பஞ்சகச்சம்) போட்டு வேட்டி கட்டியிந்தார்கள். மேலே கருப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் கையில் பிரம்பு வைத்திருந்தார்கள் உள்ளே போம்மா என்று சொன்னார்கள். உள்ளே வந்தேன். ஒரு கஷ்டமும் இல்லைங்க அண்ணா! சுகப்பிரசவம் ஆகிவிட்டதுங்க அண்ணா! என்று சொன்னாள்”. நான் கண்ட அதே காட்சியை என் தங்கையும் கண்டிருக்கிறாள்.

   அளப்பரும் கருணைவாரிதியே! தாயினும் மிக்க தயவுடைக் கடவுளே! இரக்கமே ஒரு திருவுருவான என் அம்மா! என் ஐயா! அன்பெல்லாம் திரண்டு அருள் கனிந்தவடிவமே! என் சாமி! என் துரையே! என்னுயிர் நாயகமே! நான் உங்கள் சபையில் கூடச் சேரவில்லை. உங்களை நம்பியிருந்தேன். என்னை நம்பிய என் தங்கைக்கு பிள்ளைப் பேறுக்கு பிரசவத்திற்கு உதவினீர்களே! கர்ப்பஸ்திரீகள் ஏழு மாதத்திற்கு மேலும் பிரசவித்த நாற்பதாம் நாள் வரையிலும் ஆலய வளாகத்திற்குள் வரக்கூடாது என்ற விதிமுறை வகுத்த தாங்கள் பிரசவ வீட்டிற்கே வந்தீர்களே! இந்தப் பேரிரக்கத்திற்கு என் செய்யக் கடவேன் எவ்வாறு புகழ்வேன்! அக்காலத்தில் திருச்சியில் தாய் காவிரியின் இக்கரையில் இருக்க மகள் அக்கரையில் பிரசவ வேதனைப் பட்டிருக்க, அந்த பாதரவு நேரத்திலே தாய் போல் வடிவெடுத்துப் பிரசவம் பார்த்து அருளியதால் தாயுமானவர் என்ற பெயரெடுத்த தயாநிதியே! இந்தக் காலத்திலும் அந்தத் திருச்செயலைச் செய்தீர்களே என்று எண்ணி நெக்குருகி அழுதேன்.
   (நாமக்கல்லுக்கு என் சாமி விஜயம் செய்தருளிய போது என் தங்கையை அழைத்துச் சென்று உன் பிரசவத்திற்கு வந்து உதவியவர்கள் யாரென்று காட்டு என்று கேட்ட போது தெய்வத்தைச் சுட்டிக் காட்டினாள். அந்தப் பையனுக்கு திருஞான சம்பந்தன் என்று பெயர் சூட்டினேன். அந்தத் தாயும், மகனும் மலேசியா போய்விட்டார்கள்.)
அதன் பின் என் திருமண ஏற்பாடுகளைத் தொடர்ந்தேன். பெண் வீட்டார் வந்தார்கள். பெண்ணின் தாயார் என் நூலகத்தைப் பார்த்து மிகவும் திருப்தியுற்றார்கள்.அவர்கள் இங்கு வருகிறார்கள் என்று தெரிந்த சிலர், அவர்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். எனவே பெண்ணின் தாயார் உங்களை சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்கள். நன்றாக கேளுங்கள் என்றேன். நீங்கள் மெய்வழிச் சாலைக்குப் போகிறீர்களாமே?

நான் : ஆமாம் போகிறேன்.
அவர்கள் : அங்கே போனால் செத்துப் போய்விடுவார்களாமே.
நான் : உங்கள் தகப்பனார் இருக்கிறார்களா?
அவர்கள் : இல்லைங்க செத்துவிட்டார்கள்.
நான் : இங்கேயே செத்தார்களா? மெய்வழிச் சாலைக்குப்போய் செத்தார்களா?
அவர்கள் : இங்கேயேதான் செத்தார்கள்.
நான் : சாகிறவர்கள் எல்லாம் மெய்வழிச் சாலைக்குப் போய்த்தான் சாகிறார்களா?
அவர்கள் : அப்படியெல்லாம் இல்லைங்க.
நான் : தாயே! நானும் ஒருநாள் இந்த தேகத்தை விட்டுப் போகத்தான் போகிறேன். அதில் நல்லது கெட்டது உண்டு. அந்த நல்லதைப் பெறத்தான் சாலைக்குப் போகிறேன். உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக இப்படியே இருப்பேன் என்றெல்லாம் வாக்குறுதி தரமுடியாது.
அவர்கள் : என்னமோ அங்கே போனால் பைத்தியம் பிடித்துக் கொள்ளுமாமே.
நான் : உங்கள் ஊரில் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானா?
அவர்கள் : ஆமாம் இருக்கிறானுங்க.
நான் : அவனுக்கு பைத்தியம் இங்கே பிடித்ததா?, மெய்வழிச்சாலைக்குப் போய் பிடித்ததா?
அவர்கள் : இங்கேதான் பிடித்ததுங்க.
நான் : பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் பைத்தியங்களுக்கு அவரவர் ஊரில் பைத்தியம் பிடித்திருக்குமா? மெய்வழிச்சாலைக்குப் போய் பைத்தியம் பிடித்திருக்குமா?.
அவர்கள் : அவரவர் ஊரில்தான் பிடித்திருக்குமுங்க.
நான் : அம்மா என்னை நன்றாகப் பாருங்கள்.நான் பைத்தியம் பிடித்தவனைப் போல் உளறுகிறேனா? நன்றாகப் பேசுகிறேனா? சட்டையெல்லாம் தாறுமாறாக கிழித்துக் கொண்டிருக்கிறேனா? நன்றாகப் பாருங்கள்.
அவர்கள் : நல்லாத்தான் இருக்கிறீங்க.
நான் : அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இப்படிக் கேட்காதீர்கள்.விரும்பினால் பெண் கொடுங்கள். இல்லாவிட்டால் எனக்கு வேறு பெண்ணும் கிடைக்கும் உங்களுக்கு வேறு மாப்பிள்ளையும் கிடைக்கும்.நான் சாலைக்குப் போவதற்காகத்தான் திருமணம் செய்து கொள்கிறேன். திருமணம் ஆனவுடன் உங்கள் பெண்ணையும் சாலைக்குக் கூட்டிக் கொண்டு செல்வேன். உங்கள் பெண்ணுக்கு சம்மதமா என்று கேட்டு பின் முடிவு சொல்லுங்கள்.
அவர்கள் : உங்களுக்குப் பெண் கொடுப்பதென்று தீர்மானித்துவிட்டோம்.


   அதன்பின் திருமணம் நிச்சயமாயிற்று. திருமண அழைப்பிதழ் அச்சிட்டு முதலில் தெய்வ சன்னிதியில் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தேன்.

   என் சாமி ! என் தங்க மகா மேரு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். அருகிலிருந்தவர்களை அழைத்து, “அடே! மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, புஷ்பம் எல்லாம் கொண்டு வாருங்கள்”, என்றார்கள். அதனை ஆசீர்பதித்து இதைத் திருமணப் பெண்ணின் மடியில் கட்டி அதன் பின் தாலி கட்டு என்று உத்தரவாயிற்று. அதன்படியே செய்தேன். திருமணம் நிறைவேறிற்று. மணமகன், மணமகள் வீட்டுக்குப் போக்குவரவெல்லாம் பதினெட்டு நாட்களாயின. பத்தொன்பதாம் நாள் சாலைக்குப் புறப்பட்டுவிட்டேன். என் மனைவியை சாலைக்கு அழைத்துச் செல்வதை என் தாயார் தடுத்தார்கள். அதற்கு அம்மா! நான் பிறந்த நாள் முதல் இது நாள் வரை உங்கள் சொல்லைத் தட்டி நடந்ததில்லை. இனியும் தட்டி நடக்கமாட்டேன். இந்த தெய்வீக விஷயத்தில் ஏதும் மறுப்புக் கூற வேண்டாம் என்றேன். அவர்கள் மருமகளை அழைத்துச் சென்று காதில் ஏதோ கிசுகிசுத்தார்கள். பின் சாலையம்பதிக்கு வந்து சேர்ந்தோம். தெய்வத்தை தரிசித்தோம். அந்தக் காலகட்டத்தில் சாலை வாசிகளாக இருந்த உத்தமப் பிரபுக்கள் அனைவருக்கும் சந்தோஷம். எல்லோரும் வந்து கூடிக் கொண்டார்கள். தெய்வ சன்னிதிமுன் எழுந்து பணிந்து வணங்கி நின்றேன். தெய்வம் எளியேனை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

தெய்வம் : ஏன்? என்ன?
எளியேன் : (கண்கள் நீரைப் பொழிந்தன.நா தழு தழுத்தது) தெய்வமே! என்னையும் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
தெய்வம் : நான் என்ன சொல்லியனுப்பினேன்.
எளியேன் : திருமணம் செய்து கொண்டு வா என்று.
தெய்வம் : (திருமுகத்தில் இளநகை பிறங்க ) சரி திருமணம் செய்து கொண்டு வந்து விட்டாய். இப்போது இன்னொன்று சொல்லப் போகிறேன். ரெண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு வா. அப்போதுதான் சபையில் சேர்த்துக் கொள்வேன்.
எளியேன் : தெய்வமே! தெய்வமே! இதற்கே ஒரு வருடத்திற்கு மேலாச்சுங்க தெய்வமே.
தெய்வம் : அதெல்லாம் முடியாது. சொன்னது சொன்னதுதான். இரண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு வந்தால்தான்.


   தெய்வமிப்படிச் சொல்லிவிட்டு ஆசனத்தில் அந்தப் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டார்கள். அந்தப் பக்கம் போய் தெய்வமே! தெய்வமே! என்றால் இந்தப் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டார்கள். நானோ அழுகிறேன்.
அப்போது அங்கு சபையில் அமர்ந்திருந்த உத்தமச் சான்றோர்கள் எல்லோரும் எழுந்து ஒரு சேர, “தெய்வமே! இந்த பிள்ளையாண்டான் நல்ல பையன் தெய்வமே. சபையில் சேர்ந்தவர்களைக் கூட எங்களுக்கு அடையாளம் தெரியாது. இந்தப் பிள்ளையாண்டனை எங்களுக்கு நல்லாத் தெரியும்ங்க தெய்வமே.இவனைச் சபையில் சேர்த்துக் கொள்ளுங்கள் தெய்வமே”, என்றார்கள்.

தெய்வம் : திரும்பி நேராக ராஜகம்பீரமாக அமர்ந்து திருமுக மண்டலத்தில் இளநகை பொங்க)

அப்படியா! இவன் நல்லவனா! உங்களுக்கெல்லாம் இவனைப் பிடிக்கிறதா? இவனைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டுமா? (என்னை நோக்கி) “ஹூம்! ஏண்டாப்பா, இத்தனை பேரைச் சிபாரிசுக்குக் கூட்டி வந்து விட்டாய். உன்னைச் சேர்த்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது. சரி போய்ச் சேர்ந்து கொள். விண்ணப்பபாரம் கொடய்யா என்றார்கள்.


   நான் விண்ணப்ப பாரம் எழுதப் போய் விட்டேன்.
என் மனைவி (சௌந்தரவல்லி) எழுந்து தெய்வ சன்னிதிமுன் நின்றாள்.

தெய்வம் : ஏன்? உனக்கென்ன?
அவள் : தெய்வமே! என்னையும் உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
தெய்வம் : ஏன் உன் புருஷன்தான் சேர்ந்து கொண்டானே, நீயும் சேரணுமா?
அவள் : ஆமாங்க, அவுங்க அவங்களுக்கு சேர்ந்து கொண்டார்கள். நான் எனக்கு சேர்ந்து கொள்ளணுங்க.
தெய்வம் : அப்படியா! நீ உனக்காக சேர்ந்து கொள்ள வேண்டுமா?. அப்படிக் கேட்கச் சொல்லி உன் புருஷன் சொல்லிக் கொடுத்துக் கூட்டி வந்தானா.
அவள் : இல்லீங்க, நானேதான் கேட்கிறேன்.
தெய்வம் : (அவளைப் பார்த்துவிட்டு சபையை நோக்கி) இது பாருங்கடா நம்ம பழைய வித்தோடு சேர்ந்து வந்து, தானும் சேர்ந்துகொண்டது. சரி போய் சேர்ந்துகொள்.


   இருவரும் விண்ணப்ப பாரம் படித்துச் சேர்ந்து கொண்டோம்.இருவரும் காஷாய தீட்சைக்கு விண்ணப்பித்தோம் உத்தரவாயிற்று. காஷாயமும், மூல மந்திர தீட்சையும் பெற்றுக் கொண்டோம்.

தெய்வம் : (என் மனைவியை அழைத்து) இதோ பார் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன் பெற்றுக் கொள். உன் புருஷனுடைய காரியங்களில் அவனுக்கு மாறு செய்யாமல் இணங்கி ஒத்துழைப்பாயானால் அவன் செய்கிற தவத்தில் பாதியை உனக்கு அளிப்பேன். என்ன அப்படி இருப்பாயா?
அவள் : இருப்பேனுங்க தெய்வமே.
தெய்வம் : (என்னை அழைத்து) டேய்! தலைப்பாகையை தீரமாகக் கட்ட வேண்டும்.என்ன? எவனெவனோ வேலிக்கு வெளியே போகும்முன் தலைப்பாகையைக் கழற்றிப் பைக்குள் வைத்துக் கொள்கிறானாம். நீ தீரமாகக் கட்ட வேண்டும் என்ன?
எளியேன் : உத்தரவு தெய்வமே.
தெய்வம் : மாமன், மச்சான், ஹோட்டல் என்று எங்கும் பசியாறக்கூடாது. சரி பொங்கலுக்கு இன்னும் சில நாள்கள்தானே இருக்கிறது. கட்டாயம் அவளைக் கூட்டிக் கொண்டு வா. எங்கே பார்த்திருப்பாள் இப்படிப்பட்ட பொங்கலை?. சரி போய் வா. (பிறகு என்னை அனந்தர்கள் சிலர் அழைத்து, “தம்பி உன்னை தங்கள் பழைய வித்தென்று தெய்வம் சொல்கிறார்கள்” என்று அன்பு கனிய பாரட்டினார்கள்)


   உத்தரவு கேட்டுப் பிரியா விடை பெற்றுச் சென்றோம். நேராக ஈரோடு வந்து ஒரு தலைப்பாகை எடுத்து வீட்டில் ஓயாது கட்டிக் கட்டிப் பார்த்து ஒரு சீராக வந்தவுடன் வெளியே கட்டிக் கொண்டு வரலானேன்.ஊர்ப் பெருமக்கள் எதிர்ப்பு, உயர் அதிகாரிகள் எதிர்ப்பு எல்லாம் முனைந்து வந்தன. தெய்வ தயவால் அனைத்தும் விலகின. கேலிகள், கிண்டல்கள் புயல் கண்ட பூனையாயின.(அது ஒரு தனி சரித்திரம்).

காய்ச்சல்
   பொங்கல் திருவிழா நெருங்கியது. என் மாமியார் மகளையும், என்னையும் பொங்கலுக்கு அழைத்துப் போக வந்தார்கள். அம்மா!, “நாங்கள் மெய்வழிச் சாலையில் பொங்கல் வைக்க வேண்டும் என்று தெய்வம் உத்தரவாகியுள்ளது. உங்கள் மகளைக் கூட்டி செல்லுங்கள். நான் அங்கு வந்து சாலைக்கு அழைத்துச் செல்கிறேன்”, என்றேன். அவர்களும் அப்படியே செய்தார்கள். நான் பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னதாகவே மாமியார் வீடு சென்றேன்.

   அங்கு சென்று பார்த்தால் என் மனைவி காய்ச்சல் மிகுதியால் படுத்த படுக்கையாய் நினைவிழந்து கிடந்தாள். எந்த வைத்தியத்திற்கும் கட்டுப் படவில்லை. எனக்கோ பெரிய வருத்தம். தெய்வம் பொங்கலுக்கு அழைத்து வரச் சொன்னார்களே இப்படி கிடக்கிறாளே என்று புலம்பிக் கொண்டே இருந்தேன். என் மைத்துனர் அசாத்தியக் கோபக்காரர். “மாப்பிள்ளைக்கு, மனைவி இப்படி இருக்கிறாளே எந்த ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்ன செய்யலாம் என்ற யோசனை வரவில்லையே? பொங்கலுக்கு எப்படிப் போவேன் என்றே புலம்புகிறாரே? சாமி எங்கே போகிறது? பொங்கல் எங்கே போகிறது? அடுத்த வருடம் பொங்கல் வைத்துக் கொண்டால் போகிறது”, என்று கோபமாகப் பேசினார். அதை நான் பொருட்படுத்தவில்லை. அந்த ஊரிலிருந்து 4 மைல் போனால் தான் பஸ் ஏற முடியும். “நானாவது சாலைக்குப் போகிறேன் கொண்டு வந்து விடுங்கள்”, என்று அவரைக் கேட்டேன். என் மனைவி(அவருடைய தங்கை) அருகிலேயே நான் இருக்காமல், சாலைக்குப் போவதில் அவருக்கு வருத்தம். நான்கு மைல் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுவந்து விட்டார். அப்போது வந்த பஸ்ஸை ஏறுவதற்காக நிறுத்தினேன். உடனே என் நினைவு மாற பஸ்ஸைப் போகச் சொல்லிவிட்டு திரும்பி மாமியார் வீட்டுக்குப் போகலாம் என்றேன். மைத்துனர் “ஏன் அடுத்த வருஷம் போய்க் கொள்கிறீர்களா?” என்றார். “இல்லைங்க கார் வைத்தாவது அவளை சாலைக்குக் கூட்டிப் போயே தீருவேன், தெய்வ உத்தரவு”, என்றேன்.

   அவருக்கு வந்ததே விஸ்வாமித்திர கோபம். “என்ன நினைத்துப் பேசுகிறீர்கள்?. என் தங்கை கண்ணைத் திறக்காமல், தலை தூக்க முடியாமல் நினைவிழந்து காய்ச்சலில் கிடக்கிறாள் அவளைக் காரில் கொண்டு போகிறாராம் காரில். என் தங்கைக்கு ஏதாகிலும் ஆகிவிட்டால் இவர் வேறு திருமணம் செய்து கொள்வார். யோசனை போகிறது பாருங்கள்”, என்று பொரிந்து தள்ளிக்கொண்டே சைக்கிள் ஓட்டினார். அவர் பேச்சு என் காதில் ஏறவே இல்லை. மாமியார் வீட்டுக்கு வந்து விட்டேன்.

   என் மனைவி அப்படிக் கிடந்தவள், சுத்தமாகக் காய்ச்சல் நின்று தெளிவாக எழுந்து உட்கார்ந்து “மாமா வந்தார்களா? என்னை விட்டுவிட்டு சாலைக்குப் போய்விட்டார்களா? நான் கட்டாயம் சாலைக்குப் போகவேண்டுமே, என்ன செய்வேன்?”, என்று புலம்பி அழுது கொண்டிருந்தாள்.

   நான் திரும்பி வந்தவுடன் அவளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். உடனே புறப்பட்டுவிட்டாள்.மாமியாருக்கும், மைத்துனருக்கும் ஒரே ஆச்சரியம். தெய்வத்தின் மகிமையை எண்ணி நெகிழ்ந்து உருகினேன். மைத்துனரும் எங்களுடன் சாலைக்கு வந்தார். மெய்வழி ஆண்டாளம்மையார், மெய்வழி மங்களா அனந்தகி ஆகியோர் பொங்கல் வைத்து உதவினர். அதன் பின் அந்த மாதிரி காய்ச்சலே அவளுக்கு வந்ததில்லை.

பிரம்மோபதேசம்
   1963 பங்குனித் திருவிழாவில் எல்லோரும் பிரம்மோபதேசத்திற்கு உத்தரவு கேட்டார்கள். எல்லோருக்கும் உத்தரவாயிற்று. சிறு வயது என்று எனக்கு மட்டும் உத்தரவு ஆகவில்லை. நான் மனம் வருந்தி கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தேன். தெய்வம் அது சமயம் வயல் மேட்டில் அமைந்துள்ள கானக தவசு மாளிகையில் தவமிருந்து கொண்டிருந்தார்கள். யாரும் அங்கே போகக்கூடாது என்று உத்தரவு. எனக்கு பிரம்மோபதேசத்திற்கு உத்தரவாகவில்லை என்று நான் வருந்தி கண்ணீர் விடுவதை எங்கள் ஊர்ப்பகுதி பெரியவர் மெய்வழி பெரியகந்தசாமி அனந்தர் அவர்கள் கண்டார்கள்.அவர்கள் எங்கள் பகுதியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். எனக்கு ஆசிரியர் உத்தியோகம் வாங்கிக் கொடுத்ததே அவர்கள்தான்

   எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர்கள் உடனே கானக தவசு மாளிகைக்குச் சென்றார்கள்.தெய்வம் அப்போதுதான் தவம் கலைந்து எழுந்தார்கள். முகூர்த்தம் வைத்ததுபோல் இருந்தது. தெய்வத்திடம் விண்ணப்பித்து எனக்கு பிரம்மோபதேசத்திற்கு அனுமதி பெற்றுவிட்டார்கள். அவர்கள் செய்த அந்த உதவியை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க மாட்டேன்.

   பிரம்மோபதேசம் பெறச் செல்லும் முன் என் மரியாதைக்குரிய புரவலர் மெய்வழி ராஜன் அனந்தர் பெருந்தகை அவர்கள், உபதேசம் என்றால் என்ன? அப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள்.

   அந்த அற்புதப் பெருநாள் வந்தது. எண்டிசையும் கண்டறியா என் தாய் ஆதி பாரபரை என்னைத் தங்கள் திருமணிச் சூலில் கர்ப்பம் தாங்கினார்கள். சந்திரசூரியாளனைவரையும் ஈன்றெடுத்த அக்காணிமுளை ஆறுபடை வீட்டின் கருவறையிலிருந்து தீப தூபாலங்கார வாசனையுடனே மகா சுத்தமான மேடிமடி உடுபுடவையுடனே பிறக்க வைத்தார்கள்.

வெட்டாத சக்கரத்தால் மேவியவோர் வாகனத்தால்
எட்டாத மேனிலைக்கே ஏற்றினார்கள்-கிட்டாத
இன்பம் ததும்பும் இறையாத தீர்த்தத்துள்
அன்பாக மூழ்குவித்தார்கள் அங்கோர் பொருளால்
ஈரடிகள் காட்டி இனிதாக முச்சுடரில்
சேரடி என்றெற்குத் தந்தார்காண் நாற்கரங்கள்
ஐவண்ண நாதர் ஆறுபுரிக்கோட்டை
செய்வண்ண ஏழ்நிலை மாடத்துள்ளே சென்றேற்றினார்கள்
எட்டும் இரண்டும் எழிலோங்க காட்டியங்கே
மட்டில்லா இன்ப மயக்களித்தார் மாற்றாங்கே
ஒன்பான் வாயிலடைக்கும் ஓர் நிலையைக் காட்டினார்
தன்பால் பத்தென்றார் தருமதுரை.

இவ்வாறு பெற்ற பெரும்பதத்தை எப்படி எடுத்துரைப்பேன்?. விரித்துரைத்தால் தனி நூலாகப் பெருகும். எளியேன் வாழ்க்கையே அந்த தெய்வச் செல்வர் திருவிளையாடல் புரியும் ஆடுகளம். சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

   என் மனைவியும் பிரம்மோபதேசம், திருவடி தீட்சை எல்லாம் பெற்று பாக்கியசாலி ஆனாள்.

   தெய்வம் ஒரு சமயம் அமுதகலைக்ஞான போதம் இரண்டாம் காண்டம் எடுத்துப் படிக்க உத்தரவிட்டார்களாம். அப்போது “அடே! அவனில்லையே”, என்றார்களாம். யாருங்க தெய்வமே என்று அங்கிருந்தோர் கேட்கவும், “அவன்தான் சண்முகம் போனவாரம் பிரம்மோபதேசம் பெற்றானே அவன்”, என்றார்களாம். அடுத்து ஓரிரு நாட்களில் சாலைக்கு சென்றேன். அன்று தெய்வம் அமுதகலைக்ஞான போதம் இரண்டாம் காண்டம் எடுத்துப் படிக்க உத்தரவிட்டார்கள். தனிப் பெருங்கருணை இருந்தவாறு என்னே.

   மற்றொருமுறை தேடுகூடகத்திற்கு ஆட்கள் தேர்ந்தெடுத்தார்களாம். அனந்தாதி தேவர்கள் ஆட்கள் தேர்ந்தெடுத்து பட்டியலைப் படித்தார்களாம். தெய்வம், அடே அடே அவனை விட்டுவிட்டீர்களே என்றார்களாம். யாருங்க தெய்வமே என்று கேட்கவும், “அவந்தாண்டா சண்முகம் அவன் தேடுகூடகரில் ஒருவன்”, என்று உத்தரவாயிற்றாம்.

முதுகு தண்டு வலி தீர்ந்தது
   ஒரு சமயம் மாமியார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். இரவில் படுத்த நான் விடிந்து எழுந்திருக்க முடியவில்லை.முதுகுத் தண்டில் நெருப்புப் பிழம்பைச் செருகினாற்போல் வலி. குனிய நிமிர முடியவில்லை. இப்புறம் அப்புறம் திரும்ப இயலவில்லை. நின்று கொண்டே குளித்தல், பசியாறுதல் எல்லாம் செய்து கொண்டேன். பிரபலமான டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் தம்பிக்கு முதுகுத் தண்டு கோளாறு. ராய வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஆபரேஷன் செய்யுங்கள் பிழைத்தாலும் பிழைக்கலாம் போனாலும் போகலாம் என்றார். அதிகபட்சம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றார். மனைவி, மாமியார், மைத்துனர் எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். வேலூர் சென்று வைத்தியம் செய்வோம் என்றார்கள். நான் சொன்னேன், “என்னைப் படைத்த கடவுள் மெய்வழிச் சாலையில் இருக்கிறார்கள், போய் அவர்களை தரிசனை செய்துவிட்டு வந்துவிடுகின்றேன்; அதன்பின் போகலாம்”, என்று சொல்லி விட்டுத் தனியே சாலைக்குப் புறப்பட்டேன்.

   வண்டியில் ஏறியதும் தெய்வ சன்னிதிக்குப் போய் குனியாமல் எப்படி வணங்குவது? குனிய முடியாதே! யாரிடமாவது தாம்பாளத்தைக் கொடுத்துவிட்டு அப்படியே நீட்டி விழுந்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டே சென்றேன். ஏறிய வண்டி கீரனூர் தாண்டிச் செல்லும்போது மயக்கம் வந்தது. பஸ் கண்டக்டர், “மெய்வழிச் சாமி சத்தியமங்கலம் வந்தாச்சு இறங்குங்க”, என்று குரல் கொடுத்தார் 'டக்' கென எழுந்து இறங்கினேன் வலி இருந்த இடமே தெரியவில்லை. குனிந்தும் நிமிர்ந்தும் இப்பக்கம் அப்பக்கம் திரும்பியும் பார்த்தேன்.வலியைக் காணோம். சன்னிதிக்குச் சென்று தெய்வமவர்களிடம் எளியேனின் வணக்கத்தையும் நன்றியையும் கண்ணீர் பெருகச் சமர்ப்பித்து ஊர் திரும்பினேன். மாமியார் வீட்டார் வியந்தனர். மேகம் குடைபிடித்தது

   தெய்வ கிருபையால் என் மனைவி மெய்வழி சௌந்தரவல்லி அனந்தகி கருவுற்றாள். டாக்டர் பரிசோதனைக்கு சேலம் செயிண்ட் மேரீஸ் ஹாஸ்பிடலுக்கு செல்வது வழக்கம். எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் சென்றுதான் வண்டியேற வேண்டும். புறப்பட்டுச் சென்ற போது வண்டி முன்னமே சென்றுவிட்டது என்றறிந்தேன். இனி ஆறு கிமீசென்றால்தான் வண்டியேறிச் செல்ல முடியும். அவளுக்கு மாதமோ எட்டு.தை மாத வெயில் தகிக்கிறது. பாதையோ குண்டும் குழியுமாக இருக்கிறது. அன்றைக்கு விட்டால் அடுத்த வாரம்தான், டாக்டரைப் பார்க்க முடியும். என்ன செய்வது? சைக்கிளில்தான் ஆறு கிமீ செல்ல வேண்டும்.

   “பின்னால் ஏறி உட்கார்”, என்றேன். அவள், “எனக்கு மாதம் எட்டுங்க, இந்த முரட்டுப் பாதையில் சென்றால் உடல் தாங்குமாங்க.வெயில் தகிக்கிறதுங்க”, என்று பரிதாபமாகச் சொன்னாள். சைக்கிள் கேரியரில் மெத்தென்று ஜமக்காளம் போட்டிருக்கிறேன்.மெதுவாக ஓட்டுவேன். தெய்வ மூல மந்திரம் சொல்லிக் கொண்டு ஏறி அமர்ந்துகொள். தலையில் துணியைப் போட்டுக் கொள் என்றேன். மூலமந்திரம் சொன்னோம். அப்படியே ஏறி அமர்ந்தாள். வண்டியை ஓட்டத் தொடங்கினேன்.பளிச்சென்று இருந்த வானத்தில் எங்கிருந்தோ மேகங்கள் வந்தன. வானம் கம்மியது.நிழலிட்டது.முன்னாலும் வெயில். பின்னாலும் வெயில்.ஆங்காங்கே வானம் மேகமூட்டம் போட்டு நிழலிட்டுக் கொண்டே வந்தது. ஆறு கிமீ இப்படியே நடந்தது.வெயிலின் கொடுமை இல்லாமல் போய்ச் சேர்ந்தோம். தெய்வத் திருவருளை எண்ணிக் கண்ணீர் சொரிந்தோம். தயாநிதியே இப்படியும் ஓர் துணையா?. தெய்வ தயவால் பெண் குழந்தை பிறந்தது. தெய்வ சன்னிதிக்குச் சென்று பெண் குழந்தை பிறந்திருக்குதுங்க தெய்வமே என்றேன். அப்போது ஒருவர் “பொட்டப் புள்ளையா”, என்று சலிப்பு தோன்ற சொன்னார். உடனே தெய்வம் அவர்கள், “யாரடா அவன்! பெண் பிறந்த வீட்டுக்கு பெட்டி வரும் பேழை வரும் பேழை நிறைய பொன்னும் வரும் ஆண் பிறந்த வீட்டுக்கு அம்பு வரும் தும்பு வரும் அவுசாரி சண்டை வரும். என்குலத்துப் பெண்களுக்கு ஏராளமான மவுசு வரும் பாருங்கடா”, என்றார்கள். அந்தப் பெண் குழந்தைக்கு சாலை லாஞ்சனை என்று நாமம் சூட்டினார்கள்.

வலிப்பு நின்றது
   அடுத்து என் மனைவி கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சாலை தவபாலன் என்று தெய்வம் நாமம் சூட்டினார்கள். சுமார் இரண்டரை வயது இருக்கும்.ஒரு நாள் இரவு 12 மணி குழந்தைக்கு அளவு கடந்த காய்ச்சல். என் மனைவி என்னை எழுப்பி குழந்தைக்கு இப்படியிருக்கிறதே. என்ன செய்வோம். தாங்க முடியாதுங்க என்று அழுதாள். ஆறு கிமீ சென்றால் ஒரு ஹோமியோபதி டாக்டரைப் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளலாம்.சரி புறப்படு என்று சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த கும்மிருட்டில் சென்றேன். 3 கிமீ சென்றிருப்போம். ஒரு அத்துவான மேடு. அந்த இடத்தில் சென்ற போது குழந்தைக்கு ஜன்னி கண்டுவிட்டது. கைகால்கள் இழுக்கின்றன.வாயில் நுரை தள்ளுகின்றது. கண்கள் மேலே செருகுகின்றன.தெய்வமே! தெய்வமே! என்று என் மனைவி கத்துகின்றாள். வண்டியை நிறுத்தினேன். தெய்வ திக்கு நோக்கி வணங்கினேன். “தெய்வமே இந்தப் பிச்சையைத் தந்தது தாங்கள். மீண்டும் எடுத்துக் கொள்வதானால் வாதனையில்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். விட்டுவைப்பதானால் வாதனையில்லாமல் விட்டு வையுங்கள் என்று கதறியழுது வேண்டினேன். அடுத்த கணம் வலிப்பு நின்றது. தெய்வ நாயகமே! வைத்தீஸ்வரரே! தேவரீருடைய திருவருட் கருணையை என்னென்று புகழ்வேன். எவ்வாறு எடுத்துரைப்பேன்?”. பிறகு டாக்டர் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து விட்டு சில மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். மீண்டும் அந்த வலிப்பு வந்ததேயில்லை.

   அடுத்தடுத்து தெய்வம் எனக்கு தீட்சைகள் வழங்கியருளினார்கள்.திருவடி தீட்சை, அருளமுத தீட்சை, தேவி(எ)உபநிடத தீட்சைகள் பெற்றேன். வாலாய அங்கத்தினரானேன். பின் பூராடம், சின்மயம், விஸ்வச்சுலா விருட்ச தீட்சை, விடையேறும் பெருமாள் தீட்சை, அகர தீட்சை, வீணா தண்டு நடுமூலம் பிண்டோற்பத்தி முதல் அறுத்தடைத்த வாசல் வரை தீட்சை, சங்கு சக்கர தீட்சை முதலியன அருளப்பெற்றேன். அஜபா தீட்சைக்கு உத்தரவாயிற்று. மெய்வழி கமலா அனந்தர், மெய்வழி பெரிய அத்தியப்ப அனந்தர், எளியேன் ஆக மூவர் அன்று தீட்சைக்கு அமர்ந்தோம். முதலில் எளியேனை அந்நிலையில் ஏற்றி என்னுள் குடியேறிவிட்டார்கள். மறுநாள் அதிகாலையில் ஆலயத்திற்கு வந்துவிடும்படி உத்தரவாயிற்று. அதன்படி சென்றேன். தெய்வம் எளியேனை முன்பு வடபுறம் இருந்த கொலுமணி மேடைக்குப் பின்னால் அழைத்துச் சென்று அமரவைத்து நேற்று உன்னை ஏற்றிய நிலையில் ஏறிக் கொள் என்று தார்படுதா போட்டு மூடிவிட்டார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரம் வரை அங்கு அன்னிலையில் இருந்தேன். இவ்வாறு மூன்று நாட்கள் தவநேரத்தில் இருக்க உத்தரவாயிற்று. அதன்படி இருந்தேன். அதன்பின் ஊருக்குப் போக உத்தரவு கேட்ட போது மறுவிலா முழு நிலவாகிய திருமுக மண்டலத்தில் இளநகை பூத்து “உனக்கு மூக்கணாங் கயிறு போட்டுவிட்டேன். நீ எங்குச் சென்றாலும் உன்னை இழுத்துக் கொள்வேன். கவலைப் படாதே என்று அருளினார்கள்,. என் சாமி என் தங்க மகாமேரு!

நாமம் சூட்டல்
   அதற்கடுத்து தெய்வ சன்னிதியில் நின்று, “எனக்குப் புதிய நாமம் சூட்டி யருள வேண்டும் தெய்வமே”, என்று வேண்டினேன். “ஏன்? பழைய சண்முகம் என்ற பெயர் நன்றாகத்தானே இருக்கிறது”, என்றார்கள். “அது பெற்றோர் இட்ட பெயருங்க தெய்வமே! தேவரீருடைய திருவாயால் புதிய நாமம் சூட்டியருள வேண்டும்”, என்று பணிவுடன் விண்ணப்பித்தேன். சரி உட்கார் என்றார்கள். அவர்கள் திருமுன் மண்டியிட்டு அமர்ந்து அவர்களின் அழகிய, அருள்கனிந்த, திருமுகமண்டலத்தையே பார்த்தேன். அவர்களின் இரக்கம் அடைபடுத்த இருதிரு விழிகளாலும், எளியேன் முகத்தை நெடுநேரம் ஊடுருவி நோக்கினார்கள். சபை நிசப்தமாய் இருந்தது. அதன்பின், “இன்று முதல் உன் பெயர், “மெய்வழி இளம் கலைக்கோட்டு அனந்தர்”, என்று அருளிச் செய்தார்கள். அமுது வழங்கினார்கள். “என் பெயர் இன்று முதல், மெய்வழி இளம் கலைக் கோட்டு அனந்தர் என்று உரக்க சபையறிய சொல்லிவிட்டு”, வெளியே வந்தேன். அங்கே சச்சா(சித்தப்பா) என்று நாங்கள் உரிமை அன்புடன் அழைக்கும் மரியாதைக்குரிய மெய்வழி குலமான் அனந்தர் அவர்கள் வந்து எளியேனைக் கட்டித் தழுவிக் கொண்டு “அப்பா அப்பா”, என்று அழைத்தார்கள்.
பெரியவர்களே, “தாங்கள் அப்படி அழைக்க நான் தகுதி உடையவனல்லன்” என்றேன். அதற்கு அவார்கள் “அப்படியில்லை அப்பா, எங்கள் குல முதல்வரின் குருநாதர் பெயர் “கலைக் கோட்டார்” அவர்கள் பெயரை உனக்குச் சூட்டினார்கள். தெய்வம் அவர்கள் நாமம் சூட்டிய நிலையை நான் பார்த்தேன் அதனால் இனி உன்னை அப்பா என்றுதான் அழைப்பேன்”, என்றார்கள். அவர்களுக்கு என் பணிவான நன்றியையும் நமஸ்காரங்களையும் சொல்லிக் கொண்டேன். மெய்வழி குலமான் அனந்தர் அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து அப்பா என்றே கூப்பிடுவதை வழக்கமாக கொண்டார்கள்.

   முதன்முதல் மெய்வழிச் சாலைக்கு வந்த போது எனது தெய்வீக வளர்ப்புத் தந்தை மெய்வழி சுப்பராய அனந்தர் அவர்கள் அங்கு செய்வதெல்லாம் தெருப்பணி இங்கே செய்வதுதான் திருப்பணி என்று சொன்னது எனது இதயத்தில் ஆழமாகப் பதிந்து நிலைத்துவிட்டது.

   அதனால் மெய்வழிச்சாலை வயலில் நடவுத் திருப்பணி அறுவடைத் திருப்பணி என்றால் மெய்வழி அல்லமா அனந்தர் அவர்கள் கடிதம் அனுப்புவார்கள். உடனே புறப்பட்டு வந்து அதில் கலந்து கொள்வோம். நான் ஏர் உழுவேன். என் மனைவி பயிர் நடுவாள். இப்போது மேற்கு விடுதிகள் இருக்கும் இடங்கள் அப்போது வயலாக இருந்தன. துவரை விளைந்து கிடக்கும். நானும் என் மனைவியும் அவற்றை வெட்டிக் கட்டிச் சுமந்து வந்து வட்டத்தில் போடுவோம். நெல் கட்டு சுமப்போம். வைக்கோல் சுமப்போம். நெல்லடிபோம்.

ஆலயம் கூரை மாற்றும் பணி
   ஆலயம் கூரை மாற்றுகிறார்கள் என்றால் உடனே புறப்பட்டு வந்து திருப்பணி செய்வேன். நான் நன்றாகக் கிடுகு கட்டுவேன். ஒருமுறை ஆலயக் கூரையை மேற்கிலிருந்து வேய்ந்து உச்சிக்கு வந்து கிடுகு கட்டிக்கொண்டிருந்தேன்.திருமாளிகையிலிருந்து வந்து நிமிர்ந்து நோக்கிய தெய்வம், “அவன் ஜொலிக்கிறான் பாருங்கடா” என்று என்னைச் சுட்டிக் காட்டினார்கள். ஏன் எதற்கு என்று இன்னும் அறியேன்.

   தெற்கு நாடான பரமக்குடி, உளக்குடிப் பக்கத்து சகோதரர்கள் மெய்வழி பாலபகவதி அனந்தர், மெய்வழி மாசானம் சேர்வை, மெய்வழி வீரமுத்து உடையார், மெய்வழி வீரப்பசாமி உடையார் போன்றோர் என்னை மிகவும் ஆதரிப்பர்.

   நம் தெய்வம் ராஜகம்பீரம், திருச்சி முதலிய இடங்களில் திருவாய் மலர்ந்தருளிய இராஜகம்பீரப் பிரசங்கம், உயிராணித் திருவசனம் முதலிய நூல்களை நிறைய வாங்கிச் சென்று சன்மார்க்க சங்கங்களில், ஆசிரியர் சங்கங்களில் தெய்வீக பக்தியுடைய குடும்பங்களில் படித்துக் காட்டுவேன். அதனால் சில தலைகள் தப்பின. எழுத்தாணிகள், மாடுகளுகளுக்குத் தலைக்கயிறுகள், கருக்கரிவாள்கள் முதலியவற்றை ஆண்டவர்கள் குறிப்பிட்டவாறு செய்து கொண்டு வந்து சமர்ப்பித்தேன்.

   ஒரு முறை ஆலயத்திற்கு மேற்கே இருந்த ஆலமரத்தை வெட்ட வேண்டியதாயிற்று. எனக்குக் கோடரி எடுத்து வெட்டிப் பழக்கமில்லை.ஆர்வம் காரணமாக கோடரி எடுத்துக் கொண்டு வெட்டினேன். ஒரு இடத்தில் வெட்டிவிட்டு மறுபடியும் அதே இடத்தில் வெட்டினால்தானே மரம் துண்டு விழும். ஆனால் நான் ஒரு வெட்டு வெட்டினால் அடுத்த வெட்டு அடுத்த இடத்தில்தான் விழும். அதை தெய்வம் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, “ஆஹா! சண்முகம் குறிவைத்து ஒரு இடத்தில் வெட்டினால் அந்த இடத்தில் மறுபடியும் வெட்டமாட்டான். குறி என்றால் குறிதான். வண்ணான் குறி போல என்று சிரித்தார்கள்.

தந்தையார் சபையில் சேர்ந்தது
   என் தந்தையார் பெயர் முத்துசாமி. மூன்றாம் வகுப்பு வரை படித்தவர். பக்திமான். செவ்வாய் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார். முதல் திருமணம் செய்து 15 ஆண்டுகள் குழந்தைப் பேறில்லாததால், என் தாயை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து ஏழாண்டுகள் கழித்து தெய்வத் திருவருளால் எளியேனைப் பெற்றெடுத்தார்கள். செல்லமாக வளர்த்தார்கள். நான் எங்கே சென்றாலும் தாய் தந்தை இருவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பின்னரே வெளியே செல்வேன். மெய்வழிக்கு வந்த பின் பாதங்களைத் தொடாமல் பக்கத்தில் நின்று அனுமதி கேட்ட பின்னரே வெளியே செல்வது வழக்கம்.

   எளியேன் ஆண்டவர்கள் பிள்ளை ஆனபின் தந்தையிடம் சென்று, அப்பா நான் தெய்வத்தின் பிள்ளை ஆகிவிட்டேன். நீங்களும் நான் சேர்ந்துள்ள மெய்வழியில் சேர்ந்தால்தான் நான் கடைசி நாளில் உங்களுக்கு உதவ முடியும் என்று சொன்னேன். அவர் அதற்காகத்தானப்பா உன்னைத் தவமிருந்து தேடினேன் என்று சொல்லிவிட்டு என்னோடு மெய்வழிச் சாலைக்கு வந்தார். தெய்வத் திருச்சன்னிதிமுன் கொண்டு போய் நிறுத்தினேன். நானும் அருகில் நின்றேன்.

தெய்வம் : யாரப்பா நீ?
எளியேன் : தெய்வமே! எனது தகப்பனாருங்க.
தெய்வம் : உன்னைப் பெற்றவனா?
எளியேன் : ஆமாங்க தெய்வமே!
தெய்வம் : ஏண்டாப்பா உன் வயசு என்ன?
என் தந்தை : எந்த வயசைக் கண்டேணுங்க அதெல்லாம் தெரியாதுங்க.
தெய்வம் : உன் வயசு உனக்கு தெரியாதா? (சபையை நோக்கி) பாருங்கடா தன் வயசு தெரியாதவனெல்லாம் இருக்கிறாண்டா. இவன் என் கொங்கு நாட்டுக் காரன். கறுத்ததெல்லாம் கம்பளி, வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவன். சூது வாது தெரியாது. (என் தந்தையை நோக்கி) உனக்கு என்ன வேணும்.
என் தந்தை : சாமி என்னையும் உங்க சபையில் சேர்த்துக்குங்க.
தெய்வம் : சரி போய் சேர்ந்து கொள். (உடனே போய் விண்ணப்ப பாரம் வாங்கி எழுதிச் சபையில் படித்தார்.)
தெய்வம் : இது உன் கையெழுத்தா?
என் தந்தை : ஆமாங்க சாமி. (உட்கார்ந்து விட்டு மீண்டும் எழுந்தார்.)
தெய்வம் : ஏன் என்ன வேண்டும்?
என் தந்தை : காஷாயம் கொடுங்க சாமி
தெய்வம் : ஊம். சரி பெற்றுக் கொள்.


   காஷாய தீட்சைக்கு ஏற்பாடாயிற்று. அன்றைக்கு மட்டும் 125 பேருக்கு காஷாயம். வரிசையாக நின்றார்கள். தெய்வம் ஆசனத்திலிருந்து இருபுறமும் எம்பிப் பார்த்து விட்டு அம்புட்டு(அவ்வளவு) காஷாயத்தையும் அள்ளி வாங்கடா என்று உத்தரவாயிற்று. எண்ணிப் பார்த்தால் 121 காஷாயங்கள் மட்டுமே இருந்தன. தெய்வமே! “காஷாயம் போதவில்லை இன்னும் நாலு பேருக்கு வேணும்”, என்று சொன்னார்கள்.

தெய்வம் : என்னண்டு(என்னென்று) காஷாயம் போதவில்லையா. காஷாயம் போதாது என்கிற அளவுக்கு என் சபை பெருகுகிறதா. சரி காஷாயக் கொடியை எடுத்துவா. நாலாப் போடு. அந்த நாலு பேரும் தப்பிச்சுப் போயிடுவாங்க. போடு நாலு பேருக்கும்.


   125 பேரும் காஷாயம் பெற்றுக் கொண்டார்கள். கொடிக் காஷாயம் பெற்றுக் கொண்டவர்களில் என் தந்தையும் ஒருவர். தெய்வம் அந்த நாலு பேரையும் அழைத்து, “அடுத்த முறை வரும்போது புதுக் காஷாயம் வாங்கிக் கொள்”, என்று உத்தரவிட்டார்கள். எல்லோரும் மூல மந்திரம் பெற்றுக் கொண்டார்கள். என் தந்தையார் அதைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.


   ஒரு நாள் என் தாயாரிடம் கோபித்துக் கொண்டு தங்க அரளி விதையை(விஷ விதை) அரைத்துக் குடித்துவிட்டார். நானும் வெளியே சென்றிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்தேன். இவருக்கோ கடுமையாக பேதி ஆகிக் கொண்டு இருந்தது.டாக்டரை அழைத்து வந்து காட்டினேன். டாக்டர் 4 ஊசிகள் போட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வாருங்கள் சுத்தமாக பல்ஸ்(நாடி) இல்லை. இரண்டு நாள் தாங்கும்படி செய்கிறேன் என்றார். “நம்ம வண்டியிலேயே கொண்டு போய் விடலாம் டாக்டர்”, என்றேன். அவர் என் வண்டி பிணம் தூக்கும் வண்டி என்று நினைத்தீரோ பாதி உயிர் போய்விட்டது என்றார். இவருக்கோ நினைவிழந்து கைகால்கள் ஜில்லிட்டுப் போய் விட்டன. ஹாஸ்பிட்டலில் விட்டிருந்த சைக்கிளை எடுக்க அவர் காரில் போனேன். போகும் போது என் மனைவியிடம் தெய்வத் திருவுருவப் படங்கள்,காஷாய தீட்சைப் பிரமாணங்கள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டை கட்டி வை. என் அப்பா இன்னும் சிறிது நேரத்தில் காலமாகிவிடுவார் என்று சொல்லிவிட்டுப்போனேன். போகும் போது எண்ணினேன் “அப்பா நீங்கள் நல்லகதிக்குப் போக வேண்டும் என்று தானே கொண்டு போய்ச் சபையில் சேர்த்தேன். உங்களுக்கு ஏன் புத்தி இப்படிப் போயிற்று? மெய்வழிச் சபையில் சேர்ந்து காஷாயம் பெற்றும் இப்படி ஆகிவிட்டீர்களே! தெய்வமே நான் என்ன செய்வேன். இவர் அடக்கமாவாரோ, காலமாவாரோ தெரியவில்லையே? என்று புலம்பிக் கொண்டே சென்றேன். போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால் ஜில்லிட்டுப் போய் கிடந்த என் தந்தையின் உடல் நெருப்பாய்க் கொதித்தது. நாடி பிடித்துப் பார்த்தால் சரியாக இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். விடிந்ததும் மறுபடியும் அதே டாக்டரிடம் போனேன். “அப்பாவுக்கு கடுமையான காய்ச்சல்”, என்றேன். டாக்டர் “என்னங்க சார் சொல்கிறீர்கள்! நேற்றே அவர் இறந்து விட்டார். நீங்கள் என் வண்டியில் இங்கு கொண்டு வருகிறேன் என்றதற்கு பிணம் தூக்கும் வண்டியா”, என்று கேட்டேன். ஆச்சரியமாக இருக்கிறதே. இது உங்கள் தெய்வத்துடைய செயல்தான், என்றார். பிறகு அவர் நலமடைந்து விட்டார்.

   சில நாட்களில் அவர் உடல் நலக்குறைவால் சிரமப்பட்டார். 6 நாட்கள் இப்படியே இருந்தார். வைகாசித் திருவிழா நெருங்குகிறது. என் தந்தையின் நிலைமையை மெய்வழி பகவதி அனந்தரிடம் சொன்னேன். அவர் ஒரு மருந்துப் பொடி இரண்டு வேளைக்குக் கொடுத்தார். அதைக் கொண்டு வந்து மூலமந்திரம் சொல்லி ஒரே வேளையில் கொடுத்தேன். அரை மணி நேரத்தில் குணமானார். “தெய்வமே காப்பாற்றி விட்டீர்கள்”, என்று பிரார்த்தனை செய்து கொண்டேன். அடுத்த நாள் போய் “அப்பா நான் வைகாசித் திருவிழாவிற்குப் போகிறேன்”, என்றேன். “போகாதே அய்யா! நான் ஏதேனும் ஆகிவிடுவேன். பாட்டிபோன போதுதான் நீ இல்லை. அந்த நிலை எனக்கும் வரக்கூடாது”, என்று அழுதார்.

   “அப்பா நான் உங்களுடன் இருக்க வேண்டும் அல்லது நீங்கள் என்னோடு இருக்க வேண்டும். ஒன்று செய்வோம். நீங்கள் என்னுடன் சாலைக்கு வந்து விடுங்கள். சாலையில் அடக்கமானால் அங்கேயே மண்ணடக்கம் செய்து விடுகிறேன். வழியில் அடக்கமானால் காவிரி இருக்கவே இருக்கிறது. இல்லை இங்கே வந்து அடக்கமானால் இங்கு செய்ய வேண்டியதைச் செய்து கொள்கிறேன்”, என்றேன். உடனே அவர் சரி புறப்படு என்றார். அவர் காஷாயம் பெற்றவரல்லவா. தலைப்பாகைக் கட்டி சைக்கிளில் ஏற்றி நாமக்கல் வந்து, அங்கிருந்து புறப்படும் சாலை வாசிகள் செல்லும் டூரிஸ்ட் வண்டியில் சாலையம்பதிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். தெளிவாக இருந்தார். தெய்வ தரிசனம் செய்துகொண்டார். கொடிக் காஷாயம் போட்டுக் கொண்டு போனவர் இப்போதுதான் வந்தார். அந்தக் கொடிக் காஷாயத்தை தெய்வ உத்தரவுப்படி மாற்றிக் கொள்ளலாங்க அப்பா என்றேன். சரி என்றார். மெய்வழி நச்சேத்திர அனந்தரிடம் இதைப் போய்ச் சொன்னதும் அவர் அதை தெய்வத்திடம் போய் சொல்லிவிட்டார். தெய்வமும் அப்படியா அந்தத் தன் வயசு தெரியாத காராளன் வந்திருக்கிறானா, சரி சரி வரச் சொல் என்று உத்தரவிட்டார்கள்.

   என் தந்தைக்குத் தலைப்பாகை கட்டி, கொடிக் காஷாயத்தை அணிவித்து தெய்வத் திருச்சன்னிதிமுன் கொண்டு போய் நிறுத்தினேன். தெய்வம் புதிய ஒரு காஷாயத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை வாங்கி முக்கோணமாக மடித்து மடியில் போட்டுக் கொண்டு தங்கள் திருமுகத்தை இரு திருக்கரங்களாலும் தடவி காஷாயத்தை இருதிருக்கரங்களாலும் நீவுவார்கள். இப்படியாக சுமார் 20 முறை செய்தார்கள். பின் என் தந்தையை ஏறிட்டுப் பார்த்து இரண்டையும் போட்டுக் கொள் என்றார்கள். புதிய கஷாயமும் போடப்பட்டது. பழைய கஷாயமும் அப்படியே இருந்தது. என் தந்தை அப்படியே தெய்வத்தைப் பார்த்துக் கொண்டே நின்றார். தெய்வம், “ஏன் நிற்கிறாய்?” என்று இவரைக் கேட்டார்கள். இவர் “சும்மா பார்த்தேனுங்க”, என்றார். தெய்வம், “அப்படியா பார்த்ததும் போதும், நின்றதும் போதும், போய்ப் படுத்துக்கொள்”, என்று உத்தரவிட்டார்கள். உடனே என் தந்தையை அழைத்து வந்து விடுதியில் படுக்க வைத்தேன். அதன் பின் கால்கள் இயங்க வில்லை. அப்போதுதான் அத்தனூர் ஆயிபாளையம் மெய்வழி ராமசாமி கவுண்டர் வந்தார். என் தந்தையிடம் “முத்து நான் போய் தெய்வத்திடம் உபதேசம் வேண்டும் என்று கேட்டேன். தெய்வம் எதற்கு உபதேசம் என்று கேட்டார்கள். உபதேசம் பெற்றால்தான் முத்திக்கிடைக்குமாம் என்றேன். தெய்வம் உபதேசத்தில் முத்தியில்லை அது என் கையில் தனியாக இருக்கிறது. உனக்கு உபதேசம் வேண்டுமா முத்தி வேண்டுமா என்று கேட்டார்கள். எனக்கு முத்திதான் வேண்டும் என்றேன். தெய்வம் உனக்கு இப்போதே முத்தி கொடுத்துவிட்டேன் என்று மூன்று முறை உத்தரவிட்டு அருளினார்கள். எனக்கு முத்தி கிடைத்து விட்டதப்பா. இனி எனக்குக் கவலையில்லை”, என்றார். அதற்கு என் தந்தையார், “ராமு என்னையும் தெய்வம் நின்றதெல்லாம் போதும் போய் படுத்துக்கொள்”, என்று உத்தரவு கொடுத்துவிட்டார்கள் என்றார். இரண்டு பேரும் தாங்கள் கற்ற குறவன் குறத்திக் கூத்துப் பாட்டைப் பாடினார்கள்.

   நான் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன். அதன் பின் படுத்த படுக்கைதான். படுக்கையில்தான் எல்லாமும். காலையில் எழுந்ததும் வெந்நீர் வைத்துத் தந்தையைச் சுத்தம் பண்ணி வேறுபடுக்கை மாற்றி வாசனைப் பவுடர் போட்டுப் பத்தி ஏற்றி வைத்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்வேன். இரண்டரை மாதம் கடந்தது. படுக்கைப் புண் வந்துவிட்டது. நாற்றம் அதிகரித்தது.
   “தெய்வமே! இவர் இனி எழுந்து நடமாடப் போவதில்லை உத்தரவு கொடுத்து விடுங்கள் ஐயனே என்று வேண்டிக் கொண்டேன். வேண்டுதல் அங்கீகரிக்கப் பட்டது.

தந்தையார் அடக்கம்
துர்நாற்றம் நறுமணமானது
   அதுசமயம் பஞ்சாயத்து போர்டு தேர்தல் நடக்க இருந்தது. என்னைத் தேர்தல் நிலையத் தலைமை அதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

   அன்று நான் சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள சக்கராம்பாளையம் என்னும் ஊருக்குச் செல்ல வேண்டும். என் தந்தையிடம் எப்போதும் சொல்லிவிட்டுப் போவதுபோல், “அப்பா நான் தேர்தல் பணிக்குப் போய்வருகிறேன்”, என்று சொன்னேன்.

   என் தந்தையார், “போகாதே அய்யா நான் இன்று புறப்படப் போகிறேன்”, என்றார். அதற்கு நான், “அப்பா இது அரசாங்க உத்தரவு. கட்டாயம் போயே ஆக வேண்டும் எட்டு கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறேன். ஏதும் கஷ்டமாய் இருந்தால் தகவல் கொடுக்கச் சொல்லுங்கள் உடனே வந்து விடுவேன்” என்றேன். அவர் தீர்க்கமாக, “நான் சொல்கிறேன் வேண்டாமென்று, மீறிப்போவதாக இருந்தால் போ”, என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார்.

   நான் புறப்பட்டு தேர்தல் சாவடிக்குப் போனேன். அங்கு போட்டியில்லாமல் ஏகமனதாகத் தலைவரைத் தேர்ந்தெடுத்து விட்டபடியால் வேலை இல்லை என்று சொல்லிவிட்டு, அதிகாரிகள் வாக்குச் சீட்டுகள் பெட்டிகள் முதலான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, தேர்தல் பணிக்கான ஊதியத்தையும் தந்து அனுப்பிவிட்டார்கள். உடனே திரும்பி வீடு வந்து சேர்ந்தேன். தந்தையிடம் போய், “அப்பா! அங்கு தேர்தல் நடக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. நான் உங்களோடே இருப்பேன்”, என்றேன். என் தந்தையின் முகத்தில் திருப்தி நிலவியது. சரி இன்று இரவு புறப்பட்டுவிடுவேன். அடிக்கடி எழுப்பிப்பார் என்றார்கள்.

   தெய்வ தயவால் ஒவ்வொரு மணிக்கும் தூக்கம் தெளியும். போய் “அப்பா!” என்று அழைத்தால் “என்னைய்யா?” என்பார். 9,10,11,12,1,2,3 மணி நேரங்களில் போய் எழுப்பிப் பார்த்தேன். சரியாக நாலரை மணிக்குப் போய் எழுப்பிய போது பேச்சில்லை.கொட்டகையில் மூத்திர வாடையும் இல்லை. அங்கே மாட்டியிருந்த லாந்தர் விளக்கும் அணைந்து விட்டது. வீட்டின் வெளியே போட்டிருந்த பல்பும் ப்யூஸ் ஆகிவிட்டிருந்தது. இருட்டில் கைதுழாவாகத் தடவிப் பார்த்தேன். நெற்றியில் சூடு இருந்தது. மனைவியை விளக்கேற்றி வரச் சொல்லிப் பார்த்தபோது பரிபூரணமாக அடங்கி விட்டிருந்தார். ஜீவப் பிரயாணம் ஆகிவிட்டார். எப்போதும் சுருண்டு கிடக்கும் கால்களை நீட்டிப் படுத்திருந்தார். படுக்கைப் புண் வாடையோ மூத்திரக்கவிச்சியோ இல்லை. லேசாக துளசி மணம் வந்தது. சிரித்துக் கொண்டே அடக்கமாகியிருந்தார். கண்கள் இலேசாகத் திறந்திருந்தன. உடல் துவண்டு கிடந்தது.

   உடனே எடுத்து ஆடைகளை மாற்றித் தலைப்பாகை கட்டி அணிவித்துப் பலகையில் படுக்க வைத்து விட்டேன். ஏற்கனவே சாலையம்பதியிலிருந்து வாங்கிச் சென்று வைத்திருந்த தீர்த்தத்தைக் கொடுத்தேன். ஏற்றுக் கொண்டார்.

   கிராமத்துப் பெண்கள் சாலை நடைமுறை தெரியாதவர்கள். ஒப்பாரி பாடத் தொடங்கினார்கள். “அம்மா! அம்மா! அதெல்லாம் செய்யாதீர்கள். அவர் தெய்வ பதவி அடைந்திருக்கிறார். அமைதியாக இருங்கள்”, என்று சொல்லிவிட்டு மெய்வழிச் சபையைச் சேர்ந்த சுற்றுவட்டார ஊர்களில் இருக்கும் சகோதரர்களுக்கு மட்டும் செய்தி தெரிவித்தேன். உள்ளூர் முக்கியஸ்தர்களுக்கும் செய்தி தெரிவித்தேன். ஒரு பெரிய கவலை. எங்களூரில் இந்த மாதிரி செய்தி கேட்டவுடன் வருகிறவர்கள் ஆளுக்கொரு கட்டையைத்(தகனம் செய்ய) தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். நெருப்பில் தான் போட வேண்டும் என்றால் என்ன செய்வது? மேளம் கொட்ட வேண்டும், தேர் கட்ட வேண்டும், ரேடியோ வைக்க வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், கொள்ளிவைக்க வேண்டும், என்றால் என்ன செய்வது என்று கவலைப் பட்டேன். தெய்வமே காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டேன். தெய்வத் திருக் கடைக்கண் நோக்கம் என் மீது திரும்பியது. பள பள வென்று விடிந்தது. அன்று தேர்தல் நாள். பஞ்சாயத்துத் தலைவருக்கு நிற்பவர் பக்கத்துத் தோட்டக்காரர். அவர் ஓடோடி வந்தார். வாத்தியாரே! உங்களப்பன் புறப்பட்டு விட்டாராமே. செய்தி தெரிந்தால் நம் கிராமம் பூராவும் இங்கே வந்து கூடி விடுவார்களே! நான் இங்கு வந்து வந்தா வாக்காளர்களைக் கூட்டிப்போக முடியும்? ஒன்று செய்வோம். உடனே எடுத்து அடக்கம் செய்து விடுவோம் என்றார். எனக்கோ உள்ளூரப் பெருமகிழ்ச்சி. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், நான் ஒரே மகனுங்க உறவினர்கள் வரவேணும், தேர் கட்ட வேணும், ஒரு நாள் வைத்திருந்து அடக்கம் செய்ய நினைக்கிறேன் என்றேன் பாவனைக்கு.

   அவரோ “சும்மா இருங்க வாத்தியாரே! உங்கப்பா எழுந்து தேரையும் பார்க்க மாட்டார். ரேடியோப் பாட்டையும் கேட்கமாட்டார். இந்த எலெக்க்ஷன் நேரத்தில் குழப்பாதீர்கள்” என்று சொல்லிவிடு, “டேய் யாரடா அங்கே? ஓடு ஓடு குழிவெட்டு, தம்பீ நீ வா போய் மூன்று கோடித் துணிகள் எடுத்து வா!” என்றார். ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயார் நம் சகோதரர்கள் எல்லாம் வந்து விட்டனர். மிக முக்கியமான உறவினர்கட்கு மட்டும் தகவல் கொடுத்தேன். அவர்களும் வந்து விட்டார்கள். பிம்பத்தை வெளியே எடுத்து வரும் போது கண்கள் திறந்து கொண்டன. இதென்ன முத்துவின் கண்கள் திறந்து கொண்டன என்றார் ஒருவர். மற்றொருவர் கண்களின் இமையை மூடினர் மூடிக் கொண்டது. அங்கிருந்தவர்கள் இதென்ன அதிசயம் கண்கள் திறக்கின்றன மூடுகின்றன என்றார்கள். பஞ்சாயத்துத் தலைவருக்குப் போட்டியிடுகிறவர் அதெல்லாம் குளிப்பாட்ட வேண்டியதில்லை. சாங்கியத்திற்கு காலை மட்டும் கழுவுங்கப்பா போதும் என்றார்.அப்படியே செய்தார்கள். அதற்குள் மேளக்காரர்கள் வந்து மேளம் அடிக்கத் தொடங்கினார்கள். தலைவர் போதும் நிறுத்துங்கடா என்று சொல்லி விட்டு தூக்கு தூக்கு என்று சொல்லி மயானத்திற்குக் கொண்டு சென்றார்கள். என் மரியாதைக்குரிய உத்தமர் பிரம்மத்தை அறிந்த மெய்வழி சுப்பராய அனந்தர் அவர்கள் தீர்த்தம் கொடுத்தபின் என் தந்தையின் பிம்பம் மண் மறைவு செய்யப் பெற்றது. என் தந்தையார் இடுப்பில் வெள்ளி அரைஞாண் போட்டிருந்தார். அதைக் கழற்றும் போது இடுப்பை வளைத்துக் கொடுத்தது போல் இருந்ததாம். காலை ஏழரை மணிக்குள் எல்லாம் பூர்த்தியாயின. தேர்தல் நேரமாதலால் எங்கும் போக முடியவில்லை. என் தந்தை ஜீவப் பிரயாணமான செய்தியை மெய்வழி நச்சேத்திர அனந்தருக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தேன். அவர் தெய்வத்திடம் இதை விண்ணப்பிக்கவும் தெய்வம் “என்னடா நாறிக்கிடந்தவன் அடக்கமானபின் மணந்தானா?” இது பதினோறாவது அடையாளம். காலமெல்லாம் பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருந்தவனெல்லாம் செத்தபின் நாறுகிறான். நாற்றமெடுத்தவன் மணக்கிறானாமே! கேளுங்கள். நம் கிரணக்கரங்கள் ஆயிரம் ஆயிரமாக வீசிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றில் இளம் கலைக் கோட்டு அனந்தனின் தகப்பன் அகப்பட்டுக் கொண்டானடா. அவனுடைய விசுவாசத்திற்கு அவன் தந்தைக்குப் பரிசு”, என்று உத்தரவாயிற்றாம். என் தந்தையாருக்கு தெய்வத் திருச்சன்னிதானத்தில் 40ஆம் நாள் ஆன்மசஞ்சார உரிமைக்காட்சி வைபவத்தைக் கொண்டாடினேன். இது 1971ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

   என் தாயாரும் மெய்வழியில் சேர்ந்து காஷாயம் பெற்றிருந்தார்கள். என் தந்தையார் ஜீவப் பிரயாணமாகி 30 ஆண்டுகள் கழித்து 2001ல் அதே மாதத்தில் ஜீவப் பிரயாணம் ஆனார்கள். சாலையம்பதியிலிருந்து காஷாய தீர்த்தம் கொண்டு வந்து கொடுக்கப் பெற்று என் தந்தையின் படுக்கைக்கு அருகிலேயே மண்ணடக்கம் செய்யப் பெற்றார்கள். அடக்கத் தொட்டி தோண்டும் போது என் தந்தையார் மீது போர்த்தியிருந்த காஷாயத் துணி மட்காமல் இருந்ததைக் கண்டவர்கள் வியந்தார்கள்.
1976ம் ஆண்டு பொங்கல் திருவிழாத் திருமுகத்தில் இறுதிப் பெரிய முகூர்த்தத்தை அறிவிக்கிறோம் என்று அறிவிக்கப்பெற்றிருந்தது. அது சமயம் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். பேறு மாதம்.
   என் மனைவியின் அக்காள் கணவர் சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அவர்கள் வீட்டில் கொண்டுபோய் என் மனைவியை விட்டுவிட்டு, பிரசவ வலி எடுத்தால் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுங்கள் என்று சொல்லி விட்டு பொங்கலுக்கு சாலைக்கு வந்துவிட்டேன்.

   “இறுதிப் பெரிய முகூர்த்தம் கற்பகத்தரு குண்டலினி தீட்சை நடக்கும்”, என அறிவிக்கப் பெற்றது. கடைச்சிறியேனாகிய எனக்கும் அதைப் பெரும் வாய்ப்புக் கிட்டியது. சுமார் 15 பேருக்குள்தான் இருக்கும். திருமாளிகையிலேயே தீட்சை நடைபெறலாயிற்று. தெய்வமவர்கள் உலகம் இவ்வளவுதானா? என்று கேட்டார்கள். “அதன்பின் என்னைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று திருவுளம் கனிந்து சொன்னார்கள்.பின்னர் அந்நிலைக்கு ஏறும் வகை துறைகளை அருளிச் செய்தார்கள்.

   எப்பொழுதுமே மாலை நேரத்தில் வைக்கும் பொங்கலைக் காலை நேரத்தில் வைக்கும் படி உத்தரவாயிற்று. பகல் பனிரெண்டு மணிக்குள் பொங்கல் பூர்த்தியாயிற்று (இந்த மாற்றம் கடைச்சிறியேனாகிய எனக்காகவென்றே கருதுகிறேன்)

   ஆண்டாண்டுதோறும் பொங்கல் முடிந்தவுடன் ஊருக்குச் செல்லமாட்டேன். மாட்டுப் பொங்கலும் முடிந்தபின் வணக்க மைதானம் முழுவதும் இறைந்து கிடக்கும் கரும்புத்தோகைகள், காகிதக் குப்பைகளெல்லாவற்றையும் துடைப்பத்தை எடுத்துப் பெருக்கிச் சுத்தம் செய்த பின்னரே ஊருக்குச் செல்லுவேன். ஆனால் அன்று மட்டும் பொங்கல் முடிந்தவுடன் போய் ஊருக்குப் போக உத்தரவு கேட்டேன். தெய்வம் என் முகத்தை ஊடுருவி நோக்கினார்கள். அத்திருநோக்கு என்னை என்னவோ செய்தது. எளியேனை இரக்கம் கனியப் பார்த்தார்கள். “ஊருக்குப் போகிறாயா? போய் வா! நான் ஒரு சத்தம் கொடுப்பேன். உடனே குடும்பத்துடன் புறப்பட்டு வந்துவிடு”, என்று மூன்று தடவை உத்தரவாயிற்று. கண்ணீர் பெருகியது எனக்கு.
உடனே புறப்பட்டு நேராக சேலம் வந்து பொங்கல் அமுது கொடுத்தவுடன் என் மனைவிக்குப் பிரசவ வலி பிடித்து சுகப்பிரசவம் ஆயிற்று. குழந்தை பிறந்து 30 நாட்களாயின. 30 நாள் குழந்தைக்கு அம்மை வார்த்து விட்டது.

   அப்போது “Start immediately with family”, என்று தந்தி வந்தது. பொங்கலன்று தெய்வம் உத்தரவிட்ட அதே வார்த்தைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பாய் அதனைக் கண்டேன். அருகில் உள்ள சகோதரர்கட்குச் செய்தி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன். என் மனைவி, “குழந்தைக்கு அம்மை வார்த்திருக்கிறது’, என்றாள். “ஏதும் சொல்ல வேண்டாம், குழந்தையை எடுத்துக்கொள். அது உயிரோடிருந்தாலும் சரி, அங்கேயே அடக்கமாகிவிட்டாலும் சரி”, என்று சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு கீரனூர் வந்து சேர்ந்தேன். எல்லா வண்டிகளும் போய் விட்டன. அங்கே ஒரு டாக்ஸி நின்றது. சில பிறவியர்கள் நின்றிருந்தனர். அந்தப் பிறவியர்களும் என் குடும்பமும் அந்த டாக்ஸியில் ஏறி சாலைக்குப் புறப்பட்டோம். டிரைவர் வண்டியை எடுத்தவுடன் டேப் ரிகார்டரில் ஒரு சினிமா பாட்டு போட்டான். அது

கதறிச் சிவந்ததே நெஞ்சம்
வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்
கதறிச் சிவந்ததே வதனம்
கலங்கி நொறுங்கிச் சிவந்ததே மேனி
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ -கண்கள்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது செல்லக் காணேன் -கண்கள்
சென்ற இடம் யாவும் நிழல் போலத் தோன்றுதே
அன்று சொன்ன வார்த்தை அலைபோல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்வாழ்வதெங்கே -கண்கள்


   என் இதயம் நெக்குருகியது. கண்கள் ஆறாகப் பெருகின. ஏனோ பிழிந்து பிழிந்து அழுது கொண்டே வந்தேன். சாலை வந்து சேர்ந்ததுமே நமது அருட் பெருஞ்சோதியர், ஆதி நாயகர், இன்கருணை வாரிதி, ஈடிணையில்லா தெய்வத் தாய், உத்தம மகா மேரு, ஊழி பெயர்த்தெறி ஆழிவாழ் ஐயர் ஆன்ற கன்னி விராட்தவத்தில் ஆழ்ந்துவிட்டார்கள் என்றறிந்தேன். ரூபத்திருமேனி கொண்டு அருளரசாட்சி, ஞானச்செங்கோல் ஓச்சிய பெருமான் அரூபத்தில் நின்று யுகத்தீர்ப்பு நடாத்திப் புதுயுகம் புரப்பிக்கத் திருவுளம் கொண்டு அந்நாட்டினிற்கு ஏகிவிட்டார்கள்.

தங்க மகாமேருவே தனித்த வடிவழகே
சிங்க நடையழகே திருக்காண்பதெக்காலம்
பொங்கிவரும் பேராறே பூரணமே காரணமே
தங்கள் திருமேனி தரிசிப்பதெக்காலம்
எங்கள் குருமணியே ஈடில் ஒளிமலையே
மங்கா மணிவிளக்கே மணிவாணி மன்னாவே
எங்கெங்கு நோக்கினும் நும் ஈடில் அழகு ருவம்
அங்கங்கே கண்டு வந்து அகம் களிப்ப தெக்காலம்
ஏலமாமலையாம் எந்தை பிரானவர்கள்
தூலப் பிரிவெண்ணி சிந்தை கலங்கி நின்றேன்


   இப்படிப் பாடி பாடி இதயம் நெக்குருகினேன். என் மனைவியிடம் பணம் கொடுத்து குழந்தைகளும் நீயும் வேண்டியதை வாங்கிப் பசியாறிக்கொள்ளுங்கள். என்னை அங்கே எதிர்பார்க்க வேண்டாம் . என்று சொல்லிவிட்டு என் சாமி என்னுயிர் நடநாயகரின் திருமேனி பிம்பத்தின் அருகிலேயே காத்துக் கிடந்தேன். இந்தக் கடைச் சிறியேன் தவமாளிகையில் திருமேனியை வைத்த பின்னர்தான் விடுதிக்கு வந்தேன்.

   ஆரம்பகாலங்களில், “உன்னை நான் கொண்டு போய் ஒரு முரட்டு சமூகத்தில் விதைத்து விட்டேனே அங்கே நீ எப்படி நடந்து கொண்டு இருக்கிறாய்”, என்று கேட்டார்கள். என் நடைமுறைகளைச் சொன்ன போது, “அப்படித்தான் இருக்க வேண்டும். நீ எங்குச் சென்றாலும் பிழைத்துக் கொள்வாய்”, என்று ஆசீர்பாதத் திருவாய் மலர்ந்ததை எண்ணுவேன். உபதேசம் வழங்கும் காலத்தில் அவர்கள் கூறியருளும் குறிப்பை உணர்ந்து புரிந்து பற்றிக் கொள்ளும் போது “புரிந்து கொள்கிறான் பார்” என்று ஆர்வமூட்டும் ஆதரவை எண்ணி அகம் நெகிழ்வேன்.


தேடாத்திரவியமே!தேனாறே! வான்மேரே!
வாடாத கற்பகத்தின் மணமலரே! மாற்றறியா
ஆடகப் பொன்னாலியன்ற அழகார் திருவுருவே!
பாடனைத்தும் தங்களுக்கு பலனெல்லாம் எங்களுக்கு
என்றளித்த என் சாமி! என் துரையே! என்னுயிரே!
குன்றாப் பெருநிதியே! கோதில்லா ரத்தினமே!
பொன்றாத வாழ்வு தந்த பொதிகைமலைப் பூங்காற்றே!
அன்னையாய் நின்றிலங்கி அமுதளித்து ஆதரித்த
பொன்னையா! தந்தையெனப் போற்றிவளர் மன்னவரே!
என்னையும் ஏற்றருளி என்றும் சாகாதகலை
தன்னையும் கற்பித்த சற்குருவே தெய்வமே
வேதமெலாம் கற்பித்த வேதாந்த தேசிகரே!
போதமெலாம் செய்தருளும்பொற்பதமே நற்பதமே!
நீதமெலாம் நெஞ்சினிலே நீங்காது அறமுரைத்த
ஆதரவே! என்னை அணைத்து வளர் அற்புதமே!
சீதனம் தந்து எற்குச் சிறப்பளித்த நற்பரிசே!
மாதனமே! மாமணியே! வானகமே தேனகமே!
ஆதி முழுமுதலே! அம்மா அடைக்கலமே!
நீதித் திருவுருவே! நின்தாளே தஞ்சமம்மா
அட்டாங்க யோகம் அளிக்கும் அருட்குருவே!
பட்டாங்கமே! மெய்ப்பயனே! விலைமதியாக்
கட்டாணி முத்தே! கனவயிர மாமலையே!
தொட்டனைத்துப் பேரின்ப சுகமளிக்கும் தோன்றலரே!
ஆத்தாளாய் ஏழையெனை ஆதரிக்க வேணுமம்மா;
காத்தருளி வாழ்நாள் கடைவரைக்கும் நற்றுணையாய்ப்
பூத்தருளி நெஞ்சில் புகுந்து நினைப்பாட
நாத்திறமும் தந்தருள்வாய், நன்மணியே போற்றிநின்றேன்.


   இப்படிப் பாடிப்பாடி வருந்தினேன். திரும்ப ஊர் வந்து சேர்ந்தேன். ஊழிவிதியோ உலுத்தர்களின் சதியோ சாலையம்பதியில் ரெய்டு வந்தது.பத்திரிக்கைக்காரர்கள் இல்லாததும் பொல்லாததும் எழுதித் தாறுமாறாகச் செய்தி வெளியிட்டார்கள். அதுசமயம் இருபதாண்டு ஆசிரியர் பணி முடிந்திருந்தது. B.A தேர்ச்சிபெற்றிருந்ததால் B.ED பயிற்சி பெற குமாரபாளையம் சென்று பயிற்சிக் கல்லூரியில் பயின்றேன். ரோட்டரி கிளப், ரோட்டரேக்ட் கிளப், இன்டரேக்ட் கிளப், இலக்கிய மன்றம் போன்றவற்றில் உரையாற்ற அழைத்தார்கள். மெய்வழி பற்றி ஆங்காங்கு கேட்கப்பட்ட நேர்மையான அபத்தமான கேள்விகட்கு என் ஐயன் என் நாவில் நின்று விடையளித்தார்கள்.

   ஒரு தமிழ்ப் பேராசிரியர், மெய்வழிச் சபையினர் தங்கக் கடத்தல் காரர்கள், மஸ்தான் கூட்டாளிகள், திருடர்கள், என்று சொன்னபோது அவருக்குத் தக்க விடையளித்தேன். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அது சமயம் உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் எம். ஏ; எம்,எட்; பட்டம் பெற்றிருக்கிற ஆணவத்தால் மெய்வழியைப் பற்றிக் குறை கூறி விட்டீர்கள். அடுத்த ஆண்டு எம்.ஏ பட்டம் வாங்கிக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சவால் விட்டு வந்து விட்டேன்.

   எம்.ஏ இரண்டாண்டுப் படிப்பு. பலவகைப்பட்ட இடையூறுகட்கிடையில் தெய்வக் கிருபையால் அதை ஒரே ஆண்டில் எழுதித் தேர்ச்சி பெற்றேன். எம்.எட். படிப்பும் படித்தேன். ஆண்டவர்கள் தயவால் 1980ல் மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றேன். மிகுந்த மரியாதைக்குரிய மெய்வழி ராஜன் அனந்தர் அவர்கள் ஊக்குவிப்பால் தெய்வத்தை ஸ்தோத்தரித்து பாசுரங்கள் இயற்றலானேன். போற்றிகள், கும்மி, காவடிச்சிந்து, கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள், சிற்றிலக்கியங்கள் என முறையான மரபுக்கவிதைகள் இயற்றி திவ்வியப் போற்றிமலர்கள், திவ்வியப் பிரபந்தத் திரட்டு, தெய்வக் கீர்த்தனைகள், தெய்வ பிரபந்த மணிகள் என்னும் நான்கு தொகுதிகள் வெளியிட்டேன். சென்னை வாழ் அனந்தர்கள் மற்றும் தமிழறிஞர்களும், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையினரும், வில்லிவாக்கம் சத்குரு சங்கத்தாரும் பாராட்டு விழாக்கள் நடத்திப் பட்டங்களும், பரிசுகளும் வழங்கினார்கள்.

   நூல்கள் வெளியீட்டு விழா நடத்த மெய்வழி பத்மநாத அனந்தர், மெய்வழி சோமசுந்தரம் செட்டியார், மெய்வழி கிருஷ்ணப்ப அனந்தர், மெய்வழி அங்குராஜ பிள்ளை, சாலை ராஜ்குமார், சாலை ரேவதி, போன்றோர் பெரும் துணை ஆற்றினர். திரு. சாலை கிருஷ்ண ஐயங்கார் அவர்கள் எனது 100 சங்கீதக் கீர்த்தனைகளை இசை வடிவம் கொடுத்து சி‌டி கேசட்டுகள் வெளியிடப் பெருந்துணையாக இருந்தார். இன்னும் எளியேனுக்கு அருந்துணை செய்து வருகின்றார்.

   என் மூத்த மகள் சாலை லாஞ்சனையை, மெய்வழி கனகமணி அனந்தருக்கும், மகன் சாலை தவபாலனுக்கு சாலை சுந்தரியையும், இரண்டாவது மகள் சாலை நித்திலத்தம்மாவை சாலை தனராஜ் என்பவருக்கும், மூன்றாவது மகள் சாலை தவமாணிக்கத்தை சாலைக் காதலன் என்பவருக்கும் திருமணம் செய்வித்தேன். எல்லோரும் மக்கட்பேறு பெற்று நல்வாழ்வு வாழ்கின்றார்கள்.

   2001-ல் சாலைவாசியானேன். பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவரலாறு என்னும் நூலையும் வெளியிட்டேன். எஞ்சிய என் வாழ்நாளில் என் பேச்சும், மூச்சும், நினைவும், உணர்வும், சிந்தையும் செயலும் என் தெய்வத்திற்காகவே பயன்படவேண்டும். என் ஐயனைப் பாடிப் பரவுவதே என் தொழிலாக லட்சியமாக இருக்க வேண்டும். மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பொற்பாத மலர்களிலிருந்து வாழும் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சாலையம்பதியில் வாழ்ந்து திருப்பணி ஆற்றி வருகின்றேன்.

ஆண்டவர்கள் தயவு!
குரு வாழ்க! குருவே துணை!!

இந்த ஆசிரியரின் சில அல்லது அனைத்து படைப்புகளும் Creative Commons Attribution-Share Alike 4.0 International உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், இதே உரிமத்தைத் தொடர்ந்து நீங்களும் பயன்படுத்தினால், மூல ஆசிரியரைக் குறிப்பிட்டு, பொருத்தமான மூலத்திற்கான இணைப்பைக் கொடுத்து, உங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கவோ, இலவசமாக அல்லது வணிகரீதியாக விநியோகிக்கவோ அனுமதி வழங்கப்படுகிறது.