ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/ஆண்டவன் வடிவில் ஓர் ஐயம்
ஆண்டவன் வடிவிலே ஒரு ஐயம்!
இன்று இறை வழிபாட்டில் நம்பிக்கையுடைய அன்பர்கள் எல்லாம் அவரவர் வீட்டில் விக்ரஹங்களையோ, இல்லை. திரு உருவப் படங்களையோ வைத்துப் பூசை செய்து வருகிறார்கள். இந்த ஆத்திக அன்பர்கள் இடையே ஒரு பிரச்சனை, யார் யார் படங்களைப் பூசைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று; இதைவிட யார் யார் திரு உருவை வைத்துக் கொள்ளக் கூடாது என்று; விநாயகரை வைத்துக் கொள்ளலாம், வள்ளி தெய்வானையோடு கூடிய குமரனை வைத்துக் கொள்ளலாம், அன்னை மீனாட்ஷியை, அகிலாண்டேஸ்வரியை இன்னும் தாயான அம்பிகை பலரையும் வைத்துக்கொள்ளலாம்.
கலைமகளை வைத்துக் கொள்ளலாம் அலைமகளை வைத்துக் கொள்ளலாம், ஆனால், நடராஜனையோ, பிக்ஷாடனனையோ, கஜசம்ஹாரனையோ இல்லை பழனியாண்டவனையோ வைத்துக் கொள்ளலாமா? என்பது கேள்வி. நடராஜன் ஒரு காலைத் தூக்கி இருக்கிறானே நம்மையும் காலை வாரி விட்டு விடுவானோ என்னவோ? என்று ஓர் அச்சம் பலருக்கு.
சம்ஹார மூர்த்தியையோ, பிச்சைக்குப் புறப்படு பவனையோ, எங்கு வைத்தாலும் வீட்டில் வைத்துக் கொள்ளுதல் கூடாது என்று ஒரு எண்ணம் சிலருக்கு. இந்தப் பழனியாண்டியோ, மொட்டை அடித்து, கோவணம் மாத்திரமே கட்டிக் கொண்டு கோலூன்றி எல்லாவற்றையும் துறந்த நிலையிலே அல்லவா நிற்கிறான். அவனை வீட்டில் வைத்து வழிபட்டால் நம்மையுமே மொட்டை அடித்து எல்லாவற்றையும் துறக்கும்படி செய்து விடுவானோ என்னவோ என்ற பயம். ஆதலால் யார் படத்தைப் பூசையில் வைத்திருந்தாலும் பழனியாண்டவன் படத்தை வைத்திருத்தல் கூடாது. இப்படி ஒரு எண்ணம்.
இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பதைக் காட்டவே இச்சிறு கட்டுரை. இறைவனை எந்த மூர்த்தத்தில் வேண்டுமானாலும் வைத்து வணங்கலாம். 'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடித்தெள்ளேனம் கொட்டத்' தெரிந்தவன் தமிழன்.
'இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் இறைவன், என்று எழுதிக் காட்ட ஒண்ணாத ஒருவனைப், பல கோலங்களில் கல்லிலும் செம்பிலும் ஆக்கி நாடு முழுவதும், கோயில்கள் தோறும் நிறுத்தத் தெரிந்தவன் தமிழன். 'கற்பனை கற்பிக்கும் கடவுளின்’ கோலத்தில் எந்தக் கோலமும் வந்தித்து வணங்கி வழிபாடு செய்வதற் குரியதே.
அதிலும் இளைஞனாக, அழகனாக, வீரனாக எல்லாம் காட்சிகொடுப்பவன் முருகன். மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டுபவன் அவன். அவன் வடிவங்களில் ஒருவடிவமான பழனியாண்டவன் திருக்கோலம் எப்படி எழுந்தது என்று அறியலாம் தானே.
முருகன் இளைஞனாக, அழகனாக மட்டும் இருக்கிறவனில்லை. சிறந்த வீரனாகவும் இருப்பதை தேவ சேனாபதித் திருக்கோலத்திலே பார்க்கிறோம். இத்துடன் சிறந்த அறிஞனாகவும் இருக்கிறான். ஞானப் பழமாகவே அன்னைக்கும், ஞான குருவாகவே தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.
அன்றொரு நாள் காலையிலே, அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் அமர்ந்திருக்கிறார்கள் கயிலை மலையிலே. அங்கு வந்து சேருகிறார் நாரதர். அவர் சும்மா வரவில்லை, கையில் ஒரு மாங்கனியையும் கொண்டு வருகிறார். அதை ஐயனிடம் கொடுத்து அவன்றன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம்.
அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்க வேண்டும் ஓர் அற்புத உண்மை. நாரதர் தந்த கனியைச் சிவபெருமான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஒர் ஆசை. மக்கள் இருவரையும் அழைத்து எல்லோரும் சேர்ந்து உண்ணலாமே என்று. மக்களும், ஆம் விநாயகரும் முருகனும் தான், வந்து சேருகின்றனர்.
இதற்குள் சிவபெருமான் நினைக்கிறார், இந்தக் கனிமூலம் ஒரு போட்டிப் பரீகூைடியே நடத்தலாமே' என்று. 'உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இக்கனி' என்கிறார் சிவபெருமான்.
இந்தப் போட்டியில் தனக்குத் தான் வெற்றி என்று மார் தட்டிக்கொண்டு மயில் வாகனத்தில் ஏறி ககன வீதியிலே புறப்பட்டு விடுகிறான் முருகன். விநாயகருக்கோ, தம் மூஷிக வாகனத்தில் ஏறிக் கொண்டு தம்பியுடன் போட்டிபோட முடியாதுதான். ஆனால், அவர் சாவதான மாக அன்னையையும் அத்தனையும் சேர்ந்தே ஒரு சுற்றுச் சுற்றுகிறார். 'உலகம் உங்களிடம் தோன்றி, உங்களிடம் நிலைத்து, உங்களிடம் தானே ஒடுங்குகிறது. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியதாகத் தானே அர்த்தம். கொடுங்கள் கனியை என்கிறார்.
மறுக்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார்கள் அம்மையும் அப்பனும் விநாயகரிடம். உலகத்தை எல்லாம் சுற்றி, அலுத்து வந்த பிள்ளை விஷயம் அறிந்து தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கோவணாண்டியாக வெளியேறி விடுகிறான் கயிலையை விட்டு. தாயாகிய பார்வதி, அப்பா! நீயே ஞானப்பழமாக இருக்கும்போது உனக்கு வேறு பழம் நாங்கள் தர வேண்டுமா?’ என்று கூறி சமாதானப் படுத்துகிறாள். இப்படித் ஞானப் பழமாகவே இருக்கும் பழனியாண்டவன் - பழனி மலை மீது ஏறி நின்று கொண்டிருக்கிறான் என்பர் புராணிகர்கள்.
இத்துடன் இன்னொரு கதை. மூவர்க்கும் முதல்வனான முருகனை, ஏனோ ஒரு நாள் பிரமன் மதியாது நடந்திருக்கிறான். அவ்வளவுதான், அவனை அழைத்து அவன் செய்யும் சிருஷ்டிக்கே அடிப்படையான பிரணவத்தின் பொருள் சொல்லச் சொல்லியிருக்கிறான் முருகன். பிரமன் சொல்லமுடியாமல் விழித்திருக்கிறான். உடனே அவனைக் காதைப் பிடித்து இழுத்து தலையிலே குட்டி, 'பிரணவத்தின் பொருளை அறியாத நீ, சிருஷ்டி செய்ய அருகதை உடையனில்லை’ என்று கூறிச் சிறையிலேயே அடைத்து விடுகிறான் முருகன். விஷயம் அறிகிறார் சிவபெருமான்; மகனிடத்து வருகிறார். 'உனக்குத் தெரியுமா பிரணவத்தின் பொருள்?’ என்று கேட்கிறார். 'ஓ! தெரியுமே, ' என்று எகத்தாளமாகச் சொல்கிறான். 'இப்போது சொல் பார்ப்போம் என்கிறார். சளைக்க
ஆ.பெ.அ.நெ-7 வில்லை முருகன். 'கேட்கிறபடி இருந்து கேட்டால் சொல்லுவோம்', என்று அமுத்தலாகவே கூறுகிறான்.
பார்த்தார் சிவபெருமான் வேறு வழியில்லை. தன் பிள்ளையின் காலடியிலே சிஷ்யனாக அமர்ந்து, கை கட்டி வாய் பொத்தி, பிள்ளை மூலமாகவே பிரணவ மந்திர உபதேசம் பெறுகிறார். இப்படித் தான் 'குருவாய் அரனுக்கும் உபதேசித்தான் குகன்' என்பர் அறிஞர்கள். இந்த ஞானபண்டிதன்தான், சுவாமிநாதன் என்ற பெயரோடு அந்தப் பழைய ஏரகம் - இன்றைய சுவாமி மலையில் இருந்து, தன் தந்தைக்கு மாத்திரம் அல்ல, உலகில் உள்ள மக்கள் எல்லோருக்குமே, ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறான்.
இதில் ஒரு வேடிக்கை - ஞானப்பழமாக நிற்கும் பழநியாண்டவனும், ஞான பண்டிதனாக விளங்கும் சுவாமி நாதனும், கோவணாண்டியாகவே நிற்கின்றனர். கையில் தண்டு ஒன்றை மட்டும் ஏந்திக் கொண்டு, ம்ற்றைய உடைமைகளை எல்லாம் துறந்து விடுகிறார்கள், சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கும்போதே. ஏன் இப்படி இந்த இரண்டு மூர்த்திகள் மட்டும் முற்றும் துறந்த முனிவர்களாக இருக்கிறார்கள் இந்த இளவயதிலேயே?’ என்று கேட்டேன் பலரிடம்.
இந்தக் கேள்விக்கு விடைதேடிப் புரட்டினேன், பல புத்தகங்களை. விடை கிடைப்பதாக இல்லை. விளையாட்டாகச் சொன்னார் ஒரு பக்தர் ஒரு மனைவியே சற்று ஏறுமாறாய் இருந்தால் சந்நியாசம் கொள்ள வேண்டியது தானே; ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்றால் ஒருவரிடமும் கூறாமல் சந்நியாசம் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?’ என்று. ஆனால் இந்த மனைவியரை அடையும் முன்பே அல்லவா, மணம் ஆகாத அந்த இளவயதிலேயே அல்லவா முருகன் பால சந்நியாசி ஆகிவிடுகிறான்.
தமிழ் நாட்டு அறிஞன், அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான், இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபடவேண்டுமானால், இவ்வுலகத்தில் நாம் உடைமை என்று கருதுகின்ற பொருள்களில் உள்ள ஆசையை எல்லாம் விட்டு விடவேண்டும்; அப்படி ஆசையை விட விடத்தான், பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.
வேண்டின் உண்டாகத்
துறக்க, துறந்தபின்
ஈண்டு இயற்பால் பல
என்பது தானே அவன் சொன்ன அருமையான குறள். உண்மைதானே. உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன், அந்த உலகத்து உடைமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும். ஆதலால் அவன் உடைமைகளை எல்லாம் துறக்கிறான், மக்களுக்கு எல்லாம் அவர்கள் வேண்டிய பேறுகளை எல்லாம் அளிப்பதற்காகவே.
அவன் முற்றத் துறந்து கோவணாண்டியாக நிற்பதினாலேதான், நாம் பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறவியானது நம்மை எல்லாம் துறவிகளாக்க அல்ல, ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக ஆக்கத்தான். மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக் கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று, துறவு என்றெல்லாம் உண்டா? இத்துடன், அவன் வள்ளுவன் சொன்ன மற்றொரு உண்மையையுமே நன்றாக அறிந்தவன். இவ்வுலகத்தின் செலாவணி நாணயம் பொருள். அது போல பேரின்ப உலகத்திற்குச் செலாவணி நாணயம் அருள். இரண்டும் இல்லாமல் வாழ்வு பூர்த்தியாகாது.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம்
இல்லை. பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி ஆங்கு
என்று தெரியாமலா சொன்னான் வள்ளுவன். இதைத் தெரிந்து முருகனே அருளையும் பொருளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்க, ஆண்டியாக வேடம் புனைந்து ஆண்டவன் ஆகிறான்; ஞானப் பழமாக, ஞானபண்டிதனாக நின்று, நமக்கெல்லாம் ஞானம் புகட்டுகிறான்; மங்கையர் இருவரை மணந்து நல்ல மணவாளன் ஆகிறான்; செல்வம் கொழிக்கும் சீரலை வாயிலில் சிறந்த செல்வனாகவே வாழ்கிறான். எல்லாம் மக்கள் இனம் உய்யத்தான்.
இப்போது பெறுகிறோம் விடை, ஞானப்பழமாக நிற்கும் பழனியாண்டவனை நமது பூசையில் வைத்து வணங்கலாமா, வணங்கக் கூடாதா? என்ற கேள்விக்கு. இன்னும் ஆச்சரியம், பழனியாண்டவன் நல்ல மொட்டை ஆண்டி என்றுதானே நேரில் சென்று தரிசித்தவர்களும் பின்னர் கடைகளில் படங்களை விலைக்கு வாங்கியவர்களும் அறிகிறோம். உண்மையில் அவன் மொட்டை ஆண்டி அல்ல அப்பனைப் போல் சடையாண்டியே என்று சொன்னால் பலர் நம்ப மாட்டீர்கள். ஆனால் சமீபகாலத்தில், கோயில் நிர்வாகிகளின் வேண்டுகோளின்படி ஆண்டவன் அருகிலேயே சென்று அவன் திருக் கோலத்தைக் கண் குளிரக் கண்டு, அதை ஒவியமாக வடித்து. எடுத்திருக்கும் ஆனந்த விகடன் சித்ரீகர் சில்பி' அவனைச் சடையாண்டியாகவே காட்டுகிறார். அவிழ்ந்து தொங்கும் சடை அவன் தலையை அலங்கரிக்கிறது என்பதை, அவர் எழுதியிருக்கும் படத்தில் காணலாம். சரி, இனிமேலாவது அவன் நம்மை மொட்டை அடிக்கும் மொட்டை ஆண்டி அல்ல, நல்ல சடையோடு கோலாகலமாகக் காட்சி தருபவனே என்று அறியலாம் அல்லவா.
வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தரும் இந்த ஞானப் பழத்தை, இனி நெஞ்சில் மாத்திரம் அல்லாமல் பூசை அறையிலும் வைத்து, வந்தித்துச் சுவைக்க தயக்கம் ஒன்றும் வேண்டாம் தானே!