ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/கொடியடியில் மடக் கொடி
அயோத்தி நகரிலிருந்து மிதிலைக்கு, அங்கு நடக்க இருக்கும் சீதா கல்யாணத்தைக் காண ஒரு கூட்டம் புறப்படுகிறது. அக்கூட்டத்தில் ஆண்களும், பெண்களும், சக்கரவர்த்தி தசரதனையும், அவனது தேவியரையும் தொடர்ந்து செல்கிறார்கள். தங்கள் அபிமானத்திற்குரிய சக்கரவர்த்தித் திருமகனான இராமன் அல்லவா சீதையை மணம் முடிக்கப் போகிறான் என்று குதூகலித்த உள்ளத்துடன் நடக்கிறார்கள் எல்லோரும். வழியெல்லாம் ஒரே கும்மாளம். பூக்கொய்கிறார் சிலர். நீர் விளையாடுகிறார் சிலர். ஏன், உண்டே மகிழ்கிறார் பலர்.
இப்படி, கூட்டம் சென்று கொண்டே இருக்கிறது. இக்கூட்டத்தைக் காண்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவனது கற்பனையில் எத்தனை எத்தனையோ காட்சிகள். அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டே பலபல உண்மைகளை மிக எளிதாகக் கூறிவிடுகிறான் அவன். அப்படி, அவன் கண்ட காட்சியில் ஒன்று, கற்பனையில் கண்ட காட்சிதான், கவிதை உருவில் வெளிவருகிறது.
நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுதினும் நயந்து நோக்கி
கெஞ்சவே கமலக் கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தம் சிலம்பு அடியில் மென் பூச்
சொரிந்து உடன் தாழ்ந்த எனின்
வஞ்சி போல் மருங்குலார் மாட்டு
யாவரே வணங்கலாதார்
என்பது பாட்டு. உண்மைதானே. இந்த நில உலகில் எந்த ஆடவன்தான் பெண்மைக்கு அடங்கி, ஒடுங்கி, வணங்கி வாழாதவனாக இருக்கிறான்? அப்படி ஆடவரை அடிமை கொள்ளும் பெண்கள் நீண்டு வளர்ந்த கொம்புகளை வளைத்துப் பிடிக்க வேண்டியதுதான். அந்தக் கொம்புகளும் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவர்கள் காலடியிலேயே மலர்களைச் சொரிந்து விடுகின்றனவே. இப்படி ஒரு காட்சி கவிஞன் கண்ணுக்குத் தோன்றுகிறது.
இந்தக் காட்சியே கல்லுருவிலும் என் கண்ணுக்குத் தோன்றுகிறது. தமிழ் நாட்டுக் கோயில்களில் பல விஜய நகர நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை என்பது பிரசித்தம். அப்படிக் கட்டப்பட்ட கோயில் வாயில்களில் எல்லாம் கல்லால் ஆகிய நிலைக்கதவுகளின் அடித்தளத்தில் இரண்டு பக்கங்களிலும், இரண்டுபெண்கள் கொடியடியில் நிற்பதைக் கண்டிருக்கிறோம். அவர்கள் தங்கள் தலைக்கு மேல் வளைத்துச் சுற்றியிருக்கும் கொடியே மேலும் மேலும் வளர்ந்து வளைந்து வாயிலின் முகடு வரை சென்றிருப்பதையும் கண்டிருக்கிறோம். இவ்விதம் கொடியடியில் நிற்கும் மடக்கொடிகளாய் நிற்பவர்களையே 'விருஷிகர்' என்று இலக்கியங்கள் பேசுகின்றன.
இப்படி கொடியும் கொம்பும் ஆக நிற்கும் பெண்களையே மகாபாரதத்தில் விருக்ஷிகா, விர்த்திகா, விர்க்ஷி என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்களையே சமஸ்க்ருத இலக்கியங்கள், சலபாஞ்சிகைகள் என்று அழைக்கின்றன. பாணரது ஹர்ஷ சரிதம் இந்த சலபாஞ்சிகைகளை, கல்தம்ப புத்திரிகளை வர்ணிக்கிறது. இன்னும் கிருஷ்ண மிகிரர் எழுதிய பிரபோத சந்திரோதயத்திலும் இந்த சலபாஞ்சிகைகளைக் காண்கிறோம்.
சிற்பக்கலை உலகில் நுழைந்தாலும், இந்த சலபாஞ்சிகளைப் பல கோலங்களில் காணலாம். பர்ஹீத், சாஞ்சி ஸ்துபங்களிலும் இந்த மடக்கொடியார் இருப்பதைக் காண்போம். சாஞ்சியில் உள்ள கீழ்ப்பக்கத்து வாயிலில், அசோக மரத்துக் கொம்பு ஒன்றைப் பற்றி, ஒயிலாகச் சாய்ந்து நிற்கும் பெண் கொடியையே பார்க்கிறோம்.
ஆனால் இந்த சலபாஞ்சிகைகளின் சிறந்த வடிவினைக் காண, நாம் தமிழ்நாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும். நேரே கும்பகோணம் போய், அங்கிருந்து வடக்கே மூன்று மைல் சென்று திரிபுவனம் என்ற தலத்திற்கு வரவேண்டும் அங்கே திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அபிஷேகப் பெயர் சூடிக் கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய கம்பஹரேஸ்வரர் கோவிலுக்கே செல்ல வேண்டும். அங்கு மூலக் கோயிலில் இருக்கும் நடுக்கம் தீர்த்த பெருமாளையும், அவரது துணைவியாம் தர்மசம்வர்த்தனியையும் கண்டு தொழுவதை ஒத்திப் போட்டு விட்டு, கோவிலின் வடபக்கத்தில் கட்டப்பட்டுள்ள சரபர் சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி சென்று சேர்ந்தால் அங்குள்ள முக மண்டபத்தில் சரபர் சந்நிதி வாயிலில், இரண்டு பெண் வடிவங்கள் நிற்பதைக் காண்போம். இவைதான் சலபாஞ்சிகை வடிவங்களிலேயே சிறந்த வடிவங்கள் என்று நான் கூறாமலேயே நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்!
இருவரும் கொடி தாங்கி நிற்கும் கொடிகளாக இருப்பதையுமே பார்ப்பீர்கள். இருவரும் நான்கு நான்கரை அடி உயரத்தில் நல்ல உயிர் ஓவியங்களாக நிற்கின்றனர். ஒருத்தி இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, தன்னை ஒட்டி வளர்ந்திருக்கும் பூங்கொம்பை வளைத்து பிடித்து ஒயிலாக நிற்கிறாள். மற்றொருத்தியோ ஒரு காலைத் தரையிலே ஊன்றி, மற்றொரு காலை மடித்து, மரத்தினையே மிதித்து, மிக்க வலுவுடன் இரண்டு கையாலும் சேர்த்துக் கொடியினை வளைத்து நிற்கிறாள்.
இருவரும் அரை வரையிலேயே ஆடை அணிந்திருக்கின்றனர். மேலாடை ஒன்றும் அணியாதவராய் கன்னங் கருத்த வடிவில், பொன்னம் பெருத்த தனங்களுடன், காணும் ஆடவர் உளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும் வஞ்சிகளாக நிற்கின்றனர்.
கழுத்தில் அணிந்திருக்கும் கண்டசரங்கள்தான் எத்தனை எத்தனை வகை கூந்தலையெல்லாம் வாரி முடித்து, அவைகளைச் சுற்றி முத்துமாலைகளைக் கோத்துக்கட்டி. அந்தக் கொண்டையிலே மகரிகைகள் என்னும் அணியை அணிந்து சர்வாலங்கார கோதைகளாக நிற்கும் அவர்தம் அழகுதான் என்னே! காதிலே அணிந் திருக்கும் விராட குண்டலங்கள்தான் எத்துணை அழகு! இடுப்பிலே அணிந்திருக்கும் அந்தரீயம், காலிலே அணிந்திருக்கும் அப்பைநீளம் வரையல்லவா, மடிமடியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சலபாஞ்சிகை வடிவங்களைக் கண்டால்,
"மெலியும் இடை தடிக்கும் முலை
வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர்”
என்று கம்பன் போன்ற மகாகவிகள், சொல்லால் உருவாக்கிய கன்னியை அல்லவா இந்தச் சிற்பிகள் கல்லில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள் என்று தோன்றும் . இன்னும்,
பாவையர் கை தீண்ட
பணியாதார் யாவரே
பூவையர் கை தீண்டலும்
அப்பூங்கொம்பு மேவி அவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே
என்று புகழேந்தி பாடியது போல, கொடியடியில் நிற்கும் மடக்கொடியார் பிடிப்பதற்கு முன்னமேயே வளைந்து கொடுத்துத் தாழும் கொம்புகளையும் அல்லவா சிற்பி அழகுற வடித்திருக்கிறான். இந்த வடிவங்களையே பார்க்கிறீர்கள் பக்கத்தில் உள்ள படங்களில்.
இத்தகு சலபாஞ்சிகை வடிவங்கள் இரண்டு தமிழகத்தில் உருவாகி எழில் ஒவியங்களாக நிற்பதைக் காணவே ஒரு நடை கட்டலாம் திரிபுவனத்தை நோக்கி. இனி நான் வேண்டாம் என்றாலும் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?