ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/காதல் கடவுள் கல்லுருவிலே

விக்கிமூலம் இலிருந்து
காதல் கடவுள் கல்லுருவிலே

காதல் என்றால் என்ன? அது என்ன ஒரு பண்டமா? கடைச்சரக்கா! விலைக்குக் கிடைக்குமா? இல்லை விலை மதிக்க முடியாத ஓர் அற்புதப் பொருளா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை எளிதாகக் கூறி விட முடியுமா என்ன! அப்படி முடியாதுதான். ஒருத்தி ஆம், காதல் நோயால் தவிப்பவள் தான், தன் தோழிக்கு விளக்க முனைகின்றாள். அவனோ கட்டழகன் மதுரை வீரனிடத்து தணியாதக் காதல் கொண்டவள். அவன் அவளுக்குத் தந்த காதல் நோயை அழகாக வர்ணிக்க முற்படுகின்றான்.

மைக்கருங் கண் மாதரார்
மனங் கவர்ந்த மார வேள்
மதுரை வீர தஞ்சுகன்
மணந்து தந்த காதல் நோய்

என்று அழகான முன்னுரையோடு ஆரம்பிக்கிறாள். பின்னும் பேசுகிறாள், அந்தக் காதல் நோய்.

கைக்குள் வந்தகப்படாது
கண்முன் நிற்கும்;
ஒருவரால் காணொனாதது;
தானும் என்று காட்டொணானது

என்றெல்லாம் திணறித் திணறிச் சொல்லிவிட்டு பின்னும் சொல்கிறாள்.

அது அன்றியும்
ஒக்கும் என்றும் உரைக்கலான
உரையும் இல்லை . என்றே முடிவு கட்டி விடுகிறாள். அப்படி எல்லாம் பேசியவள்தான், கடைசியாக. அந்தக் காதல் நோயை - இருவரும்

உள மறிந்த தன்றி மற்று இவ்

ஊரறிந்த தில்லையே,

என்று முடிக்கிறாள் - உண்மைதானே! காதலை கைக்குள் அடக்கிக் காட்டிவிட முடியுமா, இதோ அதைப் பாருங்கள் என்று. அதன் காதைப் பிடித்து திருகி. எல்லோருக்கும் காதல் என்றால் என்னவென்று தெரியும். என்றாலும் ஒருவர் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட முடியுமா? இல்லை. அதைப் போலத்தான் இருக்கும் என்று உவமையாவது கூறி விளக்க முடியுமா? முடியாது தானே. அதன் தன்மையை இருவர் உள்ளம் மட்டுமே அறியும். ஊரார் அறிவது என்பது சாத்தியமா என்ன?

அப்படி அறிந்து விட்டால் அதைப் பற்றிதான் இத்தனை பேச்சேது? அதனைச் சுற்றிச் சுற்றி இத்தனை காவியங்கள் எழுவது ஏது? இதை யெல்லாம் தெரிந்து தானோ என்னவோ காதல் கடவுள் காமனையும் உருவமில்லாத ஒருவன் என்று வர்ணித்து விட்டார்கள் கவிஞர்கள். இப்படி உருவமில்லாத ஒருவன் சும்மா இருக்கிறானா என்றால், அதுவும் தான் இல்லையே.

தென்றல் தேரில் ஏறிக் கொள்கிறான். கரும்பை வில்லாய் வளைக்கிறான். மலர் அம்பை விடுகிறான். இரண்டு இதயங்களைச் சேர்க்கிறான். இல்லை ஒருவரது இதயத்தை மற்றொருவரிடமிருந்து பிரித்து இருவரையும் துடிதுடிக்க செய்கிறான். உருவமில்லாத போதே இத்தனை செய்கிறானே. அவனுக்கு உருவமும் இருந்து விட்டால்!

இந்த உருவமில்லாத காதற் கடவுளை உருவாக்குகிறான், தமிழ் நாட்டில் சிற்பி ஒருவன். ஒரே குதிரையும் ஒரே சக்கரமும் பூட்டிய கல் தேர் ஒன்று. அந்தத் தேர்த் தட்டில் அற்புத அழகோடு கூடிய தன் காதலி ரதியையும் அணைத்துக் கொண்டு கரும்பு வில்லையும் ஏந்திக் கொண்டு புறப்படுகிறான். போர்க்கோலத்தில் இப்படி ஒரு சிலை இன்று தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக்கிறது. அதைத்தான் பார்க்கிறீர்கள் படத்திலே பார்க்கிறீர்கள் படத்திலே - இந்தச் சிலா உருவைக் கண்ட ஒரு கவிஞன்.

காதற் கடவுள் காமனுமே
காதலி ரதியுடன் தேர் ஏறி
காதலை வளர்க்க விரைகின்றான்

என்று பாட ஆரம்பித்தவன் கடைசியில், இனி வேதனை உறுபவர் எத்தனையோ என்று முடிக்கிறான். ஆரம்பத்தில் வேதனைப்பட்டுத் தானே பின்னால் இன்பம் காண முடியும். அதுதானே காதல் தத்துவம்.

மேலும் இந்தச் சிலை உருவில் காமனையும் ரதியையும் ஒன்றாக இணைத்திருப்பது ஓர் அற்புதமான உண்மையை விளக்குகிறது. இரண்டு இதயங்கள் சேராத இடத்து காதல் இல்லை. மன்மதன் இல்லாமல் ரதி இல்லை. ரதி இல்லாமல் மன்மதன் இல்லை. இருவரும் பிரிந்து நின்றால் காதலே இல்லை. இணைந்து நின்றால் காதல் மட்டும் தானா எல்லாம் உண்டுதான். காதலின் தத்துவத்தை அற்புதமான ஒரு ஆங்கிலப் பாடலில் வெளியிடுகிறான் - காதல் கவிஞன் - ஷெல்லி. அந்த ஆங்கிலக் கவிதை மலரை தமிழ் மணத்துடன் அளிக்கிறான் ஒரு கவிஞன், ஆம் தமிழர்களுக்குத்தான்

நீண்டு வளர்ந்த நெடு முடியை நிதம்
நீருண்ட மேகம் தழுவலையோ
நீலக் கடலிற் புரண்டு வரும் திரை
போய் ஒன்றொன்றனை கவ்வலையோ
ஓடும் சிறு நதி ஆடி வந்தே கடல்
ஓடு கலந்து குலாவலை யோ
ஓல மிடும் வண்டும் கோல மலர்களில்
ஒன்றியிருந்து தேன் உண்ணலையோ
இந்நிலம் தன்னிலே தன்னந் தனியாக
எய்திடும் ஒருயிர் எங்கு முண்டே
என்னைக் கலந்து நீயின்பந் தராவிடில்
யாது பொருள் இந்தக் காதலுக்கே
என்றெல்லவா கேட்கிறான். அப்படித் தன் காதலியைக் கேட்டுக் கொண்டேதானே காதற்கடவுள் - கல்லுருவில் காட்சி கொடுக்கிறான்.