உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண் சிங்கம்/சக்தியுள்ள தெய்வம்

விக்கிமூலம் இலிருந்து

சக்தியுள்ள தெய்வம்

பெருங்குளம் கிராமத்திலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லும் ஆறு மைல் நீள ரஸ்தா அநேக இடங்களில் நீண்டும் நெளிந்தும் பல வளைவுகளாகக் கிடப்பதுடன், நெடுகிலும் விரிந்து கிடக்கிற பெரிய குளங்களின் உயர்ந்த கரையாகவும் திகழ்கிறது. ரஸ்தாவின் ஓரங்களில் சில இடங்களில் ஆலமரங்கள் உண்டு. சில இடங்களில் கொடிக்கள்ளி மரங்கள் தலைவிரித்து நிற் கும். தென்னை அல்லது பனை ஆங்காங்கே தென்படுவதும் உண்டு. இந்த வழியின் நடு மத்தியில் இருக்கிறது ‘செவளை, செவளை’ என்று பேச்சு வழக்கில் அடிபடுகிற சிவகளை கிராமம்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வந்தால் சிவகளைக்குள் புகும் வழியில் - பெருங்குளத்திலிருந்து வந்தால், சிவகளையைத் தாண்டிச் செல்லும் இடத்தில்-இடைஞ்ச லான வளைவும் திருப்பமுமாக ரோடு நெளிந்து கொடுக் கும். அந்த இடத்தில் ரோடு சிறிது குறுகலாக இருப்ப தோடு, இருபக்கங்களிலும் நெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. மரங்களென்றால் சாதாரண மரங்கள் அல்ல. வயசான மரம். வட்டமிட்டு கப்புங் கவருமாகி, பூமியைத் தொடும்படி விழுதுகள் வீசி வளர்ந்து நிற்கும் மரங்கள். இருட்டின் இதயம் போலிருக்கும், அந்திவேளேயிலேயே அதன் அடியிலே. இரவில் கேட்கவா வேண்டும்?

ஒருபுறம் குளம். இந்தப் பக்கம் ஒரு பள்ளம். அவ்விடத்திற்கு வந்தவுடன் , திறமைசாலியான வண்டிக்காரன்கூட, விழித்த கண் விழித்தபடியிருந்து லாகவமாக ஓட்ட முயல்வது சகஜம். இரவில் யாருக்குமே சற்றுக் கிலிதான். காளைகள் - எவ்வளவு உயர்ந்த ரக மாடுகளாக இருந்தாலும் - ஆந்த இடத்திற்கு வந்ததும் சற்று மிரளத்தான் செய்யும் கலைகிற சுபாவமுள்ள மாடுகளானால் வெருவிப் பதறி ஆடும். மூக்கணாங் கயிறைச் சுண்டி இழுத்து, தலைப்புக்கயிறை இறுக்கிப் பிடித்து சாரத் தியம் செய்ய வேண்டியது அவசியம் என்பது வண்டிக் காரர்கள் அறிந்த வித்தையே.

பொதுவாக, இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அந்த இடத்திற்கு வரக்கூடாது என்றுதான் வண்டிக்கார்ர்கள் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இரவுப் பிரயாணம் தவிர்க்க முடியாததாகி விட்டால், முன்னிரவிலேயே அவ்விடத்தைத் தாண்டிவிடத் தவிப்பார்கள். அல்லது மூன்று மணிக்கு மேலே வண்டி போட்டுக்கொண்டு கிளம்பலாமே என்று காலங் கடத்துவார்கள்.

இதற்கு முக்கிய காரணம் உண்டு. ஆலமரத்தடியில் அரசு செலுத்தும் சாலைக்கரையான் ரொம்பப் பொல்லாத தேவதை, சக்தி வாய்ந்த சாமி என்பது அந்த வட்டாரத்தில் பிரசித்தமான சேதி.

பெருங்குளத்துக்குப் புதிதாக மாற்றலாகி வத்திருந்த ஸப் இன்ஸ்பெக்டர் முத்தைய பிள்ளையிடம் அவரது வண்டிக்காரன் மாடசாமி இந்த விஷயத்தைப் பணிவுடன் சொன்னபோது, பிள்ளைவாள் அட்டகாசமாகச் சிரித்தார். ‘மாடசாமி! உனக்கு இந்த முத்தைய பிள்ளைவாளைப் பற்றி ஒன்றும் தெரியாது. சக்தியுள்ள சாமிகளையே ஆட்டி வைக்கும் ஆசாமி ஐயாவாள்.தெரிஞ்சுக்கோ!’ இப்படிச் சொல்லி விட்டு பலமாகச் சிரித்தார். சிரிப்பா அது! அடித் தொண்டையிலிருந்து கிளம்புகிற மிடுக்கான கணைப்பு.

மாடசாமிக்கு நெஞ்சு ‘திக்திக்'கென்றது. மானசீகமாக சாலைக்கரையானை நினைத்துக் கும்பிடு போட்டான்.

‘ஐயா பூடம் தெரியாமச் சாமி ஆடப் பார்க்கிறாக, சாலைக்கரையானப் பற்றிக் கேவலமாப் பேசின. யாரு தான் பிழைச்சாக? நம்ம வடக்குத் தெரு காரைவீட்டுப் பிள்ளைவாள் புதுப் பணம் கிடைத்த ஜோர்லே என்ன தான் சொல்லவில்லை? சாலைக்கரைச் சாமி சும்மா விட்டுதா? புது வில்வண்டி அருமையான மாடுக. அந்த இடத்திலே வரும் போது, குடை வண்டி சாஞ்சு, பிள்ளைவாள் பிழைச்சது மறுபிழைப்பில்லையா! ஐயா ஸப் இனிஸ்பெக்டர்னு சாமிக்கு என்னங்கேன்? அது சக்தியுள்ள தெய்வமில்லா!’ என்று முனங்கிக் கொண்டான். அதுக்காக, தான் வண்டி ஒட்டி வர முடியாது என்று சொல்லிவிட முடியுமா? வயிறு கழுவ வேலை பார்த்தாக வேண்டுமே.

தன் குலதெய்வங்களையெல்லாம் கும்பிட்டுக் கொண்டு, சாலைக்கரையானையும் நூறு தடவை நினைத்துக்கொண்டு, வண்டியில் காளைகளைப் பூட்டி னான். அந்தக் காளைகளை ஒட்டிச் செல்வதென்றாலே தனி குஷி. நல்ல போஷிப்பில் அருமையாக வளர்ந்த கருஞ் செவலைக் காளைகள். கழுத்திலே இரண்டிரண்டு வெண்கல மணிகள். நாதம் கணிரென்று கேட்கும். கால் மைலுக்கப்பால் வண்டி வரும்போது இன்ஸ்பெக்டர் பிள்ளைவாள் வண்டி வருது என்று காட்டிக் கொடுத்துவிடும். மாடுகளோ மணி மணியானவை. குறிப்பறிந்து போகும். சாட்டைக் கம்பின் பிரயோகம் தே வையே இல்லை. ’ந்தா...இந்தாலே’ என்று அதட்டினால், துாள் பறக்கும்படி ஒடும். இவற்றில் ‘இடத்தன் காளை பரமசாது. வலத்தன் கொஞ்சம் திமிரு பிடித்தது. மோட்டார் விளக்குகளைக் கண்டால் சிறிது மிரளும். ஆனல் எந்த இருட்டாக இருந்தாலும் சரி, தானகவே தடமறிந்து நடக்கக் கூடிய மாடுகள் அவை ·

என்றாலும், அன்று வண்டி பூட்ட அவனுக்குச் சம்மதமே யில்லை. நாளைக்குப் போனால் என்ன, எசமான்? என்று கேட்டான்.

‘சர்க்கார் சோலி பெரிசா? உன் சாமிபயம் பெரிசா? வண்டியைப்போடு. வீணாக நேரத்தை ஓட்டியடைச்சுக் கிட்டிராதே’ என்று உறுமினார் பிள்ளை.

அவருக்குக் கோபம் வந்தால் ‘கண்ணு மூக்குத் தெரியாது.’ கையிலே அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வெளும்பச் சாத்தி விடுவார். விளாசு விளாசென்று விளாசித் தள்ளி விடுவார். ‘முரட்டு முத்தைய பிள்ளை என்றே பெயர். யாரையும் மதிக்கமாட்டார். ‘அடி உதவுத மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் வே என்று அடிக்கடி சொல்லுவார். எசமான் குணம் வேலைக்காரனுக்குத் தெரியாதா!

ஸ்ரீவைகுண்டத்தில் வண்டி பூட்டும் போதே இரவு பத்து மணி ஆகிவிட்டது. எவ்வளவு போனலும் பன்னிரண்டு மணிக்கு முந்தி வீடு போய்ச் சேரமுடியாது. சாம வேளையிலே சாலைக்கரையான் பூமியில் போகவா? அதிலும் அன்று!

அன்றைக்கு அமாவாசை, தை அமாவாசை, அத்துடன் செவ்வாய்க்கிழமை–தலைச் செவ்வாயும் கூடிக் கொண்டது. இது சாமிகளுக்கு உகந்த உக்கிர மான நாளு என்று அவன் கேள்விப் பட்டிருக்கிறான். வேறு எந்த வண்டியாக இருந்தாலும்கூட அவன் இவ்வளவு கலவரம் அடையமாட்டான்.

இன்ஸ்பெக்டர் எசமான் சாமியைச் சாமின்னு மதியாமல் எக்காளம் கொழிச்சிட்டாக. அதிலும் வாறபோது வேறே அகங்காரமா... ‘ஏ மாடசாமி, இதுதானே நீ சொன்ன பூடம்! எல்லாப் பூடங்களையும் போல செங்கல்லும் மண்ணுமாகத்தானே இருக்கு. இது என்ன சக்திவாய்ந்த சாமியோ புரியலே. ஏம்பா மாடசாமி! இந்தப் பக்கத்தி லேதான் முழத்துக்கு மூணு, பூடம்: சானுக்கு ஒரு சாமி யின்னுயிருக்குதே, இதையெல்லாம் கண்டு பயப் படனும்னு சொன்னா, மனிசன் வீட்டை விட்டே வெளியே வரப்படாது. தெரியுதா? பூடம் தெரியாமச் சாமி ஆடுகிறது என்பாக. நான் சொல்லுதேன். ஆசாமியைக் கவனிச்சுக்கிட்டுத்தான் சாமியும் ஆட்ட பாட்டம் பண்ணும். ஐயாப் பிள்ளையிடம் எந்தச் சாமியும் வாலாட்டமுடியாது’ என்றாக. இப்படியா பேசுறது? அவன் அதை மறக்க முடியுமா?

அப்போதுதான் வண்டி ஆலமரத்தடியில்–பந்தல் வளைவுபோல் அடர்ந்து நின்ற கிளைகளின் அடியில் ஊர்ந்து கொண்டிருந்தது. ‘பகடக பகு பக்’ என்று ஒசை கேட்டது. ரொம்பத் தெளிவாக, யாரோ ஏளனச் சிரிப்பு சிரிப்பது போல், ஒலித்தது. கெளளி...கேட்டீகளா? நீங்க இப்படியெல்லாம் பேசப்படாது எசமான்’ என்றான் மாட்சாமி.

‘பல்லி வயித்துக்கில்லாம, பசியினாலே கத்தும் சவம்’ என்றார் பிள்ளை.

மீண்டும், முன்னைவிட பலமாக, பக பக பக்’ என்று சிரித்தது கெளளி. சாலைக்கரையானே விஷமச் சிரிப்பு சிரிப்பது போலிருந்தது.

கெளளிக்கு எதிரொலி கொடுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தால் தோஷம் எனும் நம்பிக்கையுடைய மாடசாமி நாக்கினுல் வாய்க்குள் டொக் டொக்” என்று அடித்துக் கொண்டான். ஏந்தான் ஐயா இந்தப் போக்கு போறாகளோ, தெரியலே. இது நல்லதுக்கில்லே என்று அவன் உள்ளம் புலம்பியது. ‘அச்சானியத்தை ஒடுக்க த்தா...இத்தாலே என்று கதறவும், காளைகள் வேகமாக ஒடத் தொடங்கின. மணி நாதமும், சக்கரங்களின் கடகடப்பும் அவன் மன அரிப்பை ஒடுக்க உதவின.

இது மத்தியானம் நடந்தது. திடீரென்று ஸ்ரீவைகுண்டத்துக்குக் கிளம்பினார் பிள்ளை. காலையில் புறப்பட்டுப் போய், சாயங்காலமே திரும்பி விடலாம் என்று எண்ணினார். தை அம்மாசையில்லா இன்னிக்கு! அமாசை விரதமும் அதுவுமா...’ என்று வீட்டம்மா இழுக்கவே, ‘ஸேரி, மத்தியானச் சாப்பாட்டுக்கு மேலே போறேனே” என்று ஒத்திப்போட்டார். ‘போய்விட்டு எந்த ராத்திரியானாலும் சரி, வீடு திரும்பிரணும். நாளைக்கு இந்த ஊரிலே முக்கிய சோலியிருக்கு என்றார் அவர். ஸ்ரீவைகுண்டம் சேரும் பொழுது மணி மூன்றாகி விட்டது அவரைப் பார்த்து, இவரைப் பார்த்து, அங்கே காரியம் கவனித்து, இங்கே வம்பளந்து என்று அப்படியும் இப்படியுமாக நேரம் ஓடிவிட்டது. இராச் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தான் போகணும் என்று நண்பர் கட்டாயப்படுத்தவே, தங்கிவிட்டார். அதிகாலையில் எழுந்து போகலாமே என்ற யோசனையை மறுத்துவிட்டார். அதனால் வண்டி பூட்டவேண்டியதாயிற்று: வண்டி போடும் போதே மாடசாமிக்குத் திகில் தான். வண்டி புறப்படும்போது சகுனம் சரியில்லை’ என்று அவிழ்த்துப் போட்டுவிட்டு, கால் மணி நேரம் கழித்துப் பூட்டினான்.

“சரி. போயிட்டு வாறேன்’ என்று சொல்லி வண்டி யிலேறினார் பிள்ளை.

அப்போது பக்கத்து வீட்டிலே எவளோ ஒருத்தி தன் மகனுக்கு வாழ்த்து பாடிக் கொண்டிருந்தாள் : ‘கரி முடிஞ்சு போவான், நீ ஏன் இந்தப் போக்கு போறே?

பிள்ளை காதில் இது விழுந்ததோ என்னவோ! மாடசாமி தெளிவாகக் கேட்டான். அதற்கு மேல் கேட்க விடாமல் வண்டி கடகடத்து உருண்டது. மாட்டு மணிகள் கணீரிட்டன. நிமித்திகங்களில் நம்பிக்கை குன்றாத மாடசாமி நல்ல நிமித்தமாகயில்லையே. இன்னைக்கு நல்லபடியாக வீடு போய்ச் சேரனும், தெய்வமே என்று நினைத்து, தனக்குத் தெரிந்த தெய்வங்களேயெல்லாம் வேண்டிக்கொண்டான். சாலைக் கரையானுக்கு விசேஷ வேண்டுதல்,

“அப்பனே, சாலைக்கரையா, நான் புள்ளை குட்டிக் காரன். நீதான் காப்பாத்தனும். கடைசிச் செவ்வா யன்னேக்கு உனக்குச் சேவல் கொண்டாந்து பலியிடு தேன்’ என்று நேர்ந்துகொண்டான். கோசுப் பெட்டி லுள்ளிருந்த திருநீறையெடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டான். வண்டியை வேகமாக ஒட விட்டான்.

முத்தைய பிள்ளை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தா ர். சாதாரண நாளாக இருந்திருந்தால் சாப்பாடு வெறும் தோசையும் உப்புமாவுமாக முடிந்திராது. ‘தண்ணி', கோழிமுட்டை வெந்தது, புறாக்கறி யென்று நண்பர் வீட்டிலே விருந்து அமர்க்களமாயிருக்கும். சனியன் அமாவசையாக அல்லவா போச்சு! தரித்திரம் புடிச்ச எழவு’ என்று மனம் வருந்திக் கொண்டிருந்தது அவருக்கு. திடீரென்று சாட்டையின் சுளிர் அடி அவ ரைத் திடுக்கிடவைத்தது. மாடசாமி மாடுகளைத்தான் அடித்தான். அவரையே அடித்துவிட்டது போலிருந்தது. பிள்ளைக்கு மாடுகளிடம் அவ்வளவு உயிர்.

‘ஏயேய்! என்னது இது? ஏணிப்படி விரட்டு விரட்னு விரட்டுதே? மாடுகளை ஏன் அடிக்கிறே? என்று சீறினார். அதோடு சாட்டைக் கம்பை இப்படிக் கொடு மாடுகதான் தானகவே வேகமாய் போகுமே. நீ எதுக்காக அடிக்கனும்? என்று கம்பை வாங்கி உள்ளே போட்டுக் கொண்டார்.

நல்ல இருட்டு. பனி வேறு அதிகம். குளிர் காற்று லேசாக நெளிந்து கொண்டிருந்தது. பாதை நெடுகிலும் சிள் வண்டுகள் ‘விவிங்ங்’ என்று இரைந்து கொண்டிருந்தன. இருட்டில் ரஸ்தா மட்டும் வெளே ரென்று தெரிந்தது. வானத்திலே, கன்னங் கரிய வெல்வெட்டில் அருவக் கரம் ஏதோ தைத்துவிட்ட ஜிகினாப் பொட்டுகளும் புள்ளிகளும்போல நட்சத் திரங்கள் நிறைந்து கிடந்தன. அந்த ரஸ்தாவில் வண்டி தனியாகப் போய்க்கொண்டிருந்தது. வண்டியின் இருப் புச் சட்டத்தின் அருகில் போலில் கட்டியிருந்த அரிக்கன் லாந்தரின் ஒளி, தீ நிற வட்டம் வரைந்து ஒடுங்கி, இருளின் எல்லையை அதிகமாக்கிக் காட்டியது. வண்டி யின் ஒட்டத்துக்கேற்ப ஒளி வட்டம் ஆடி அசைந்தது. அந்த ஒளியின் உதவியால் மாடுகளின் கரிய நிழல் பெரிதாகத் தெரியும். மாடசாமி பயம் அரிக்கும் நெஞ்சினனாய் இருந்தான். முத்தையபிள்ளை கண்களை மூடியபடி தலையணையில் சுகமாகச் சாய்ந்திருந்தார்.

வண்டி இரட்டை ஆலமரங்களை நெருங்கிக் கொண் டிருந்தது.

இருளைக் கிழிக்க முயன்று முடியாமல், தானும் பேரிருளாய் கலந்துவிட்டது போல் இருளோடு இருளாக நின்றன மரங்கள். ஒரே இருட்டுக் கசம். தூரத்துப் பார்வைக்கு – வெள்ளிகள் சிந்திய வெளிறிய ஒளியிலே – பூத உருவில் யாரோ தலைவிரித்து, நீள் கரங்களைத் தொங்கவிட்டு நிற்பதுபோல் தோன்றும். மரத்தின் தொங்கும் விழுதுகள் நெளியும் நாகங்கள போல் மருளூட்டும் ஒரு கணம். நீண்டு தொங்கும் சடை கள் போல் தோற்றமளிக்கும்.

சாதாரணமாகவே இப்படி அரண்டு மிரண்டு வருகிற மாடசாமியின் கண்களோ இல்லாத பலவற்றை வரைந்து காட்டின. முண்டாசு கட்டிய முறுக்கு மீசையான் சவுக்கு வைத்துக் கொண்டு நிற்பது போல் தோன்றியது அவனுக்கு. இலைகளூடே ஒடுங்கிக் கிடந்த பறவைகள் படபடவென்று சிறகடித்துக்கொண்டது அவன் அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் “அப்பனே... சாலைக்கரையா! நீதான் துணை’ என்று கும்பிட்டான்.

வண்டி ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று முத்தைய பிள்ளே விவரணையற்ற, தெளிவற்ற குரலிலே, இமைபோல, உளறினர். பதறியடித்து அலறுவது போல தொனித்தது குரல்.

பயம் மாடசாமியின் புடதியிலேறி உட்கார்ந்து அழுத்தியது. திடுக்கிட்டு எசமான் என்ன எசமான்? என்று கேட்டபடி உள்ளே தலையைத் திருப்பினான் வண்டிக்காரன்.

“ஒண்னுமில்லே. கண்ணை மூடியிருந்தேனா... தூக்கக் கிரக்கம். தூங்கியும் தூங்காததுமாக இருக்கையிலே என்னென்னவோ நினைப்பு, யாரோ என்னவோ கேட்ட மாதிரியிருந்தது. என்னவோ சொல்ல வாயெடுத்தேன். அதுதான்’ என்றார்.

‘சரி சரி.தடம் பார்த்து ஒட்டு. வண்டி வேகமாகவே போகட்டும். இந்தா, சாட்டைக் கம்பு வேனும்லுைம் வச்சுக்கோ என்று அவராகவே கொடுத்தாா,

மாடசாமி வெளியே பார்வையைத் திருப்பினான். அவன் தேகம் நடுக்கிக் கொடுத்தது. உடலெல்லாம் புல்லரித்தது நடு ரோட்டில் கறுப்பாக எவனோ ஒரு சாயவேட்டிக்காரன் சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிற்பது அவன் பார்வையில் பட்டது ‘யாரய்யா அது, நடு ரோட்டிலே?” என்று கேட்க வாயெடுத்தான். துணி வில்லை. மாடுகள் முன்னே நகராமல் மிரண்டன. "ஹை...த்தா’ என்று உறுமினான். வலத்தன் காளை எதையோ கண்டு பயந்ததுபோல கலைந்தது.

‘மாடசாமி! ரோட்டோரமாக யாரும் நின்று விட்டு, வண்டியைக் கடக்க ரோட்டைத் தாண்டிக் குறுக்கே போறாகளோ?’ என்று கேட்டார் பிள்ளை. அவர் தேகம் கூட்ப் புல்லரித்தது. ‘எழவு பனிவாடை என்னமாத் தானிருக்கு’ என்று முனங்கிக் கொண்டார்.

மாடசாமி மனசுக்கு நன்ருகத் தெரியும். அது ஆள் அல்ல. சாமிதான். ஆமாம். சாலைக்கரைத் தெய்வம். ‘சாமி, நீதான் காப்பாத்தனும் என்று மனமாற வேண்டியபடி, மாடுகளின் வாலை முறுக்கினன்.

‘ஏஏய்! எதிரே மோட்டாரு வாறாப்லே தோணுதே’ என்றார் பிள்ளை. எதிரே கண்ணெறிந்த மாடசாமி ‘அப்படித் தெரியலியே. வெளிச்சமே காணோம்’ என்றான்.

‘பின்னே? பளிச்னு வெளிச்சமடிச்சுதே, நல்லாக் கவனிச்சு ஒட்டு. அந்த வளைசலிலே கண்டாத் திரும்பி யிருக்கோ என்னமோ...சே, இது சீன்ட்ரம் புடிச்ச இடமாகல்லா யிருக்கு...வலத்தனை ஜாக்கிரதையாகக் கவனிச்சுக்கோ. கழுதை மிரளப் போவுது.’

வண்டிக்காரனுக்கு வியப்பும் திகைப்பும். மோட்டார் லைட் ஒளியோ, சத்தமோ இல்லை. ஐயா மோட்டார், மோட்டார் என்கிறார்களே! அவனுக்குப் புரியவில்லை.

ஆலமரத்திலே குடியிருந்த கொக்கு இசைகேடாகக் கிளையில் நழுவியதனாலோ தூக்கம் கலைந்து விட்ட தாலோ, சிறகைப் படபடக்க வைத்து, கரகரத்த குரலில் ‘ஹர்ராங்’ என்று விசித்திரமாக ஒருதரம் கத்தியது. இரவின் ஆழத்திலே அமைதியின் கொலுவிலே, அந்த ஒற்றைக் குரல்கூடக் கோரமாகத்தான் ஒலித்தது.

மாடுகள் இக்கட்டான திருப்பத்தை–ஆலமர அடியை– நெருங்கிக் கொண்டிருந்தன. 'எசமான், காரு வாறது போலத் தானிருக்கு’ என்றான் மாடசாமி.

‘காரு வறலே போலிருக்கே. அங்கேயே நிற்குதுன்னு நினைக்கிறேன். லைட்டை அணைச்சு அணச்சுப் பொறுத்துதானா?...வெறும்பய எவன்லேய் அது?’ என்று கத்தினர் பிள்ளை.

‘எசமான்!” என்று பயக்குரல் கொடுக்க நாவசைத்தான் மாடசாமி.

‘பகடகபக்'–பல்லி சிரித்தது.

‘ஏ சுருட்டு! நடுரோட்டிலே நின்றுதான் சுருட்டுக் குடிக்கனுமோ?...காரு என்ன ரிப்பேராயிட்டுதா என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். –

சுருட்டுப் பொறி செக்கச் செவேரிட்டு ஜொலித்தது. அதைவிட ஜோராக ‘கணகண’ வென்று நெருப்புக் கங்கு கள் போல் ஒளிர்ந்தன அந்த ஆளின் கண்கள். அவன் சிரித்தான். அந்த இருட்டில்கூட நட்சத்திரங்கள் மாதிரி டாலடித்தன பற்கள். பற்களுக்கு அவ்வித ஒளி எங்கி ருந்துதான் வந்ததோ!

பல்லி மிகவும் பலமாகச் சிரித்தது.

முத்தையபிள்ளையின் உள்ளத்தில் உதைப்பு எடுத்தது. எதிரே நின்றது மனிதனல்ல என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவர் என்னவோ சொல்ல நினைத்தார்.

ஆனல் சொல்லவில்லை. அந்தக் கணத்திலே பல காரியங்கள் ஒரேயடியாக நிகழ்ந்தன.

மாடசாமி பளீரென்று சாட்டையடி கொடுத்தான் வலத்தன் காளைக்கு. பளிரென ஒளி வெள்ளம் அக்காளையின் மூஞ்சியில் பட்டுத் தெறித்தது. சடக் கென மூலை திரும்பிய மோட்டாரின் ஹெட்லைட் வெளிச்சம்போல் தெரிந்தது. மாடு மிரண்டது. அடிபட்ட வெறி. கலைசல், மிரண்டு துள்ளியது. வண்டியை இழுத் துக்கொண்டு துடித்து விலகியது.அது போனப்போக்கி லேயே சென்றது ஜோடிக்காளையும். மாடுகளை இழுத்துப் பிடிக்க முயன்றான் மாடசாமி. அவ்வேளையில் ‘த்தா...இந்தாலே’ என்ற அதட்டல் கேட்டது.

‘ஏஏ...மடையா, இப்பவா அதட்டது?’ என்று சீறி ஞர், பிள்ளை.

‘நான் அதட்டலே. நான் சத்தமே கொடுக்கலியே’ என்றான் வண்டிக்காரன்.

‘பகபகபக்’ என்று கெளளி கனைத்தது. சடாரென்று வண்டி குடை சாய்ந்து, பள்ளத்தில் சரிந்தது.

‘எசமான்’ என்று கதறியபடி துள்ளி, இருப்புச் சட் டத்திலிருந்து கீழே குதித்துவிட்டான் வண்டிக்காரன்.

முத்தையபிள்ளைக்கு ஒன்றுமே புரியவில்லை. கூண் டிலே சடாரென அவர் மண்டை மோதிக்கொண்டதும், மூளையில் பொறி தெறிப்பது போல–மூளையே கலங்கிப் போனது போல்–இருந்தது அவருக்கு. வண்டி அந்தரடித் தது. தும்பு தெறிபட்டு, மாடுகள் விலகி ஒடி ‘அம்மாவ்’ என்று கதறின.

வண்டி ரோட்டுச் சரிவில் நழுவிப் புரண்டது. உள்ளேயே குலுக்கி எடுக்கப்பட்ட பிள்ளை வெளியே வந்து விழுந்தார். அவர் காதில், முண்டாசுப்பேர்வழி சிரிப்பது, கெக்கலித்துக் கேலி செய்து சிரிப்பது–பலமாக விழுந்தது. அருவி ஒலி போல் ஆரவாரித்துக் கொப்புளித்துக் குமிழியிட்டுத் துள்ளியது சிரிப்பொலி. அவர் தன் சுய நினைவை இழந்தார்.

மாடசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு சிறு அடிகூடக் கிடையாது. மாடுகள் காயம் படாமலே தப்பி விட்டன. வண்டிக்குக் கூடச் சேதமேற்பட வில்லை. அரிக்கன் லாம்புச் சிமினி தூள்தூளாகியிருந்தது தான் நஷ்டம். ஆனல் முத்தைய பிள்ளைக்கு பலமான அடி. –

வண்டிக்காரன் தன்னைச் சமாளித்துக் கொண்டதும், முதலில் செய்த காரியம் சாலைக்கரையான விழுந்து கும்பிட்டதுதான். பிறகு ஒடிப் போய், சிவகளை கிராமவாசிகள் பலரை எழுப்பி, கூட்டி வந் தான். எல்லோரும் சேர்ந்து வண்டியைத் தூக்கி ரோட்டில் விட்டனர்.

இன்ஸ்பெக்டர் தானகவே எழ முயன்றும் முடியவில்லை. இடுப்பில் பலமான காயம். மண்டையிலும் அடிபட்டிருந்தது. ‘ஸ்...அம்மா’ என்று படுத்துவிட்டார். அவரை மெதுவாகத் தூக்கி யெடுத்து வண்டியில் கிடத்தினர். தலையணையைப் பதனமாக அண்டைக் கொடுத்து அவருக்கு உதவி புரிந்தனர்.

மாடுகள் ஒரத்திலேயே நின்றன. பிறகு அவை கலையவே இல்லை. அவற்றை வண்டியில் பூட்டி, மெது வாக ஓட்டத் தொடங்கினான் மாடசாமி. இப்போது அவன் உள்ளத்தில் திகில் இல்லை. வியப்பும் பக்தியும் தான் மேலிட்டிருந்தன.

“என்னயிருந்தாலும், இது சக்தியுள்ள தெய்வம் தான். சாமி கருணையுள்ள சாமியும்கூட. ஆளைச் சாகடிக்கிறது கிடையாது. சரியானபடி பாடம் கற்பித்து, வாழ்வு பூராவும் தன்னை மறக்கவிடாமல் செய்து விடுவதுதான் சாலைக்கரையான் குணமாக இருக்கு’ என்று நினைத்துக்கொண்டான் அவன்.

கடைசிச் செவ்வாயன்று கோழி கொடுப்பது மட்டுமல்ல, பொங்கலும் இட்டுவிடவேண்டியதுதான்; தனக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாதது தெய்வக் கருணைதானே என்று மகிழ்ந்து போனான்ன் மாடசாமி.

முத்தையபிள்ளைக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான காயம் அவரைப் படுக்கையில் கிடத்திவிட்டது. அவர் டாக்டர் ஸர்டிபிகேட் பெற்று, வாதம் பலமாகப் பிடித்து படுக்கையில் தள்ளிவிட்டதால் வேலை செய்ய இயலவில்லை என்று மூன்று மாத லீவுக்கு மனுச் செய்து விட்டார்.

அத்துடன், மேலதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் எழுதினர். தன்னை வேறு இடத்துக்கு மாற்றிவிட வேண்டுமென்று தயவாகக் கோரியிருந்தார் பிள்ளை "சாலைக்கரையான் சக்தியுள்ள தெய்வம்தான். சந்தேகமேயில்லை என்று தெளிவாகப் புரிந்தது அவருக்கு. தன்னைக் கொல்லாமல் விட்டதற்காக நன்றி செலுத்தி பிரமாதமான பூஜை போட்டார், அந்தத் தேவதைக்கு.

*