ஆண் சிங்கம்/பெரியவன்

விக்கிமூலம் இலிருந்து

}}}}


ராமலிங்கத்துக்கு அந்த உண்மை அதிர்ச்சி தருவதாகத்தான் இருந்தது.

அதுபோன்ற அதிர்ச்சியும் தன் வாழ்க்கையில் ஏற்படக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தவனே அல்லன். எதிர்பார்க்கவும் முடியாதுதான்.

ஏமாற்றங்களும் வேதனைகளும் ராமலிங்கத்துக்குப் புதியன அல்ல. குடும்பம் எனும் சிலுவையில், பொறுப்புகள் என்கிற ஆணிகளால் அறையப்பட்டு, தனது வேதனைகளை மெளனமாய்த் தாங்கிக் கொள்ளும் ஆத்ம பலம் பெற்றிருந்தவன் அவன். வீட்டுக்கு மூத்த பிள்ளை, குடும்பத்தின் முதல்வன்.

அவனுடைய தந்தை பாண்டியன் பிள்ளை எல்லாத் தந்தையரையும் போலவே, தனது பிள்ளையாண்டான் வளர்ந்து பெரியவணாகி, ‘செயம் செயம் என்று போட்டு அடித்து’ சுகத்தோடும் செல்வத்தோடும் வாழப் போகிறான் என்று கனவு கண்டார். ஆசைப்பட்டார். அவனது ஐந்தாவது வயசு வரைதான் அந்தச் செல்லம் எல்லாம்.

அப்பொழுது ஒரு பையன் பிறந்து, ராமலிங்கத்தின் அதிர்ஷ்டத்தை அபகரித்துக் கொண்டான். இரண்டாவது மகனால்தான் தன்னுடைய வாழ்வு வளம் பெறும் என்று நம்பிய பாண்டியன் பிள்ளை, அவனுக்கு ‘பிறவிப்பெருமாள்’ என்று பெயரிட்டார். அந்தக் குழந்தை நோஞ்சானாகத்தான் பிறந்து வளர்ந்தது. அதனால் அவன் மீது அப்பாவுக்கும் அம்மைக்கும் அபரிமிதமான பாசமும் பற்றுதலும் ஏற்பட்டிருந்தன.

ராமலிங்கத்துக்கு ஆரம்பத்தில் ‘எலிக் குஞ்சுப் பயல்’ மீது உண்டான பொறாமை, நாளடைவில் அனுதாபமாகவும் அன்பாகவும் பரிணமித்தது. குஞ்சுத் தம்பி – குட்டித் தம்பி என்று அவனை வாஞ்சையோடு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதும், விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்வதும், யாராவது அவனைக் கேலி செய்தால் அவரோடு சண்டைக்குப் போவதுமாக வளர்ந்தான் பெரியவன். சின்னவனுக்கு அவனே துணை; தோழன்; நல்ல பாதுகாப்பு.

பிறவிப்பெருமாள் பிறவி முதலே மெலிந்தவனாகி விட்டதால் பெற்றோர் அவ்னிடம் அதிகமான செல்லம் காட்டினர். அதனால் அவன் பிடிவாதமும் கர்வமும் அடங்காப்பிடாரித் தனமும் பெற்றவனாக வளரலானான் நோஞ்ச மாட்டின் மேல்தான் ஈ அரிக்கும் என்பது போல அவனுக்கு அடிக்கடி ஏதாவது சீக்கு வந்து தொல்லை கொடுக்கும். இப்போ இவ்வளவு கஷ்டப்படுகிறதுக்கு, பின்னாலே அவன் போடு போடென்று போடுவான். அதிர்ஷ்ட ஜாதகம் அவனுக்கு!’ என்று பாண்டியன் பிள்ளை பெருமையோடு பேசுவார்.

அவருடைய வாழ்க்கையில் வறட்சி மிகுந்தது. அவருக்கு அர்த்தமற்ற ஆங்காரமும், காரணமற்ற கோபமும் தலை யெடுத்தன. மூத்த பையனின் கிரகக் கோளாறுதான் தமது தரித்திரத்துக்குக் காரணம் என்று நம்பி, அவர் அவனை ஏசுவார். அவன் சிறு தவறு செய்தாலும் பேயறை அறைவார். சின்னவனுக்கு ஒரு தடவைகூட அடி விழுவதில்லை. அவர் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்ததும், அவன் அம்மாவிடம் ஓடி, அவள் அரவணைப்பில் தன்னை மறைத்துக் கொள்வான். அவன் செய்யாத குற்றங்களுக்காக ராமலிங்கம் தண்டனை பெற நேர்ந்த சமயங்கள் பல பலவாகும்.

இளையவன் வளர வளர, குறும்புகள் செய்து மகிழக் கற்றுக்கொண்டதும், அவன் செய்யும் கல்லுளித்தனத்தி னால் உதை கிடைக்கும் என்று நிச்சயமாகப் படுகிறபோது, அண்ணன் தலையில் பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக் கொள்ளத் தயங்கி 

யதுமில்லை. அடியும் ஏச்சும் வாங்கிக் கட்டுகிற வேளையில் அண்ணன் மனம் கசந்த போதிலும் தொடர்ந்து அவன் தம்பியை வெறுப்பதில்லை. வெறுக்க முடியாது அவனால். இயல்பாகவே அவன் நல்லவன்.

ராமலிங்கம் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது பாண்டியன் பிள்ளை இறந்துபோனர். அவர் இறக்கும் தருணத்தில், ராமு. உன் தம்பியைக் கவனித்துக்கொள். அவனை முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு என்று_சொல்லி வைத்தார். அதைப் பெரியவன் மறந்தது கிடையாது.

‘தம்பி படிக்க வேண்டும்; அவனுக்கு எந்தவிதமான குறையும் ஏற்படக் கூடாது’ என்பதற்காகவே ராமலிங்கம் த்ன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தான். ஒரு கடையில் வேலைக்கு அமர்ந்தான். குடும்பப் பொறுப்புகளை நன்கு கவனிக்கலானான். அவன் தனது வயசுக்கு மீறிய பொறுமையோடும் திறமையோடும் காரியங்களை நிர்வகித்து வந்ததைக் கண்டு மெச்சாதவர்கள் இல்லை என்றாயிற்று.

பையன் ஒவ்வொரு வகுப்பிலும் புதிய புதிய புத்தகங்களே வாங்க வேண்டும் என்று அடம்பிடிப்பான். அது அதிகப்படியான செலவு எனக் கருதும் அண்ணன், மலிவான விலையில் பழைய புத்தகங்கள் வாங்கிப் படித்தால் படிப்பு வரமாட்டேன் என்றா சொல்லும்?’ என்று குறிப்பிடுவான். அண்ணன் புஸ்தகம் வாங்கித் தரமாட்டேன்கிறான்’ என்று இளையவன் அன்னையிடம் முறையிடுவான். அவள் பெரியவன் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் கூட, சின்ன மகனுக்காகத்தான் பரிந்து பேசுவாள். அவனையும் உன்ன்ப்போல முட்டாள் மூதியாக்கி, மூட்டை சுமக்கிற வேலைக்கு அனுப்பனுமின்னு நினைக்கிறாயா? பொஸ்தகம் வாங்கிக் கொடுக்கலேன்னு, சொன்னா, அவன் எப்படிப் படிப்பான்? என்று குறை கூறுவாள்.

அவள் கூற்று மூத்த மகனின் இதயத்தில் குத்தும் கூர்முனை ஊசியாக இருப்பதை அவள் அறியமாட்டாள் போலும். பெரியவனும் மறுப்பு எதுவும் கூறாது, தன் இதய வேதனையை நெடிய சோக மூச்சாக மாற்றியபடி அகன்று விடுவான். கடன் வாங்கியாவது தம்பியின் ஆசையைப் பூர்த்தி செய்து வைப்பான். தனது தேவையைக் குறைத்துக்கொண்டாவது தம்பியின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்ற கொள்கையைப் பெரியவன் மேற்கொண்டான்.

“என்ன இருந்தாலும் பங்காளி அப்பா! நீ உனது நலனையும் கருத்தில் வைத்துக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்க முன் வந்தார்கள் சில சகுனி மாமாக்கள். ‘எது நல்லது என்று எனக்குத் தெரியும். எனக்கு உங்கள் போதனைகள் தேவையில்லை’ என்று அவன் பணிவுடன் அறிவித்து விடுவான்.

ராமலிங்கத்திற்குப் பத்தொன்பது வயதானதும், பெரியவர்கள் அவனது நன்மையை மனசில் கொண்டு, நல்வாழ்வுக்கு வழிகாட்ட நிச்சயித்தார்கள். தனித் தனியாகவும் பலராகவும் அவனிடம் பேச்சுக் கொடுத் தார்கள். உனக்கும் வயசாகிக் கொண்டே போகுது. ஒரு கலியானத்தைச் செய்துகொள். அதுக்கு நாங்கள் ஏற்பாடு பண்ணட்டுமா? என்று கேட்டார்கள்.

அவர்களிடமெல்லாம் அவன் கண்டிப்பாகச் சொல்லி விட்டான்: ‘இன்னும் மூன்று வருஷங்களுக்கு அந்தப் பேச்சே வேண்டாம். பிறவிப்பெருமாள் பத்தாவது தேறி, ஒரு வேலை ஒப்புக்கொண்டு, சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகுதான் என் கல்யாணம் பற்றி நான் யோசிக்க முடியும்!’

இவனிடம் யார் பேசுவார்கள் என்று சமூகத்தின் பெரிய மனிதர்கள் ஒதுங்கி விட்டார்கள்.

‘டவுனுமில்லாத பட்டிக்காடும் இல்லாத, இரண்டுங் கெட்டான் ஊரான’ அவ்வூரில் ஒரு ஹைஸ்கூல் இல்லை. சில மைல்களுக்கு அப்பால் உள்ள நகரத்தில் போய் கல்வி கற்க வேண்டும். ‘அதிகாலையில் எழுந்து குளித்துச் சாப்பிட்டுவிட்டு ‘அன்னக்காவடி’ சுமந்து, ரயிலுக்கு நேரமாகிவிடுமே என்று ஓடி, பிறகு மாலையில் 

இருட்டுகிற வேளைக்கு வீடு திரும்பி, சாப்பிட்டு முடித் ததும், அலுத்துப்போய் தூங்கத்தான் முடிகிறது. படிக்க நேரம் இருப்பதில்லை. இதைவிட நகரத்தில் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்ந்து, அங்கேயே தங்கினால் நன்றாகப் படிக்க முடியும்.’

‘ இப்படிப் பிறவிப்பெருமாள் சொன்னான். அதன் உண்மையை அண்ணனும் உணர்ந்தான்.

‘கொஞ்சம் அதிகமான செலவு ஏற்படும். அதுவா பெரிசு? தம்பியின் வசதியும் வளர்ச்சியும்தான் முக்கியம் என்று பேசியது அவன் உள்ளம். இளையவனின் விருப்பம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

ராமலிங்கம் பெரியவர்களிடம் வாயடி அடித்து, அவர்கள் வாயடைத்துப் போகும்படி செய்தானே தவிர, ஓடும் காலத்தையும் ஒடுங்காத உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அவன் கண்கள் பசும் வெளியில் மேயும் ஆடுகள்போல் திரிந்து கொண்டிருந் தன. அவன் உள்ளம் ஆசைக் கனவுகளை வளர்த்து வந்தது.

அவன் கண்கள் முக்கியமாக ஒரு நபரைக் காண் பதற்காக ஏங்கிப் புரளும். இனிய அந்த உருவத்தைக் காணும்போது, மகிழ்ச்சியால் மினுமினுக்கும்.

முதலில் அவன் அவளைப் பாவாடை தாவணிப் பருவத்துக் குமரியாகவே கண்டான். அவன் காலையில் கடைக்குச் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்ணும் தென்படுவாள். வாய்க்காலில் தண்ணிர் எடுத்துச் செல்ல எதிரே வருவாள்; அல்லது, நிறை குடத்தோடு முன்னால் போவாள். எந்நிலையில் பார்த்தாலும் கண்ணுக்கு விருந்து அவள்.

தினசரி பார்க்கும் பழக்கம் என்கிற சாதாரண நிலை வளர்ந்து, ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர் பார்ப்பது என்றாகி, பரஸ்பரம் பார்வை பரிமாறிக் கொள்ளா விட்டால், பிரமாத நஷ்டம் ஏற்பட்டு விட்டது போல் மனம் வேதனைப்படும் அளவுக்கு அது முற்றியது. – அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவள் மத்தியான வேளையில், அவன் உணவு உண்ண வருகிற நேரத்தை அறிந்து வாசல்படி மீது ஒரு பொம்மை போலவோ, ஜன்னலுக்குப் பின் ஒரு சந்திரபிம்பம் போலவோ காட்சிதரக் கற்றுக் கொண்டாள். மாலை வேளைகளில் அவள் அழகாகத் தலையைப் பின்னிக்கொண்டு பூ முடித்து முக ஒப்பனை செய்து, படிகள்மீது குதித்தும், தெருவில் நின்றும், தண்ணீர் எடுத்தும் பொழுது போக்குகிறபோது அவன் ஒரு நாளேனும் தன்னைக் கண்டு களிப்பதற்கு வாய்ப்பு இல்லாது போயிற்றே என அவள் உள்ளம் வருந்துவது உண்டு. அவள் எண்ணம் வலுபெற்று, எண்ணியவாறே நடக்கும் விதத்தில் அவளை ஈர்த்திடும் சக்தி அடைந்தது போலும்!

ஒருநாள் ராமலிங்கம் மாலை நேரத்தில் அந்த வழியாக வந்தான். அன்று அவனுக்கு ஒய்வுநாள். அவள் அன்று சொக்கழகுப் பதுமையாக நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவாறு இருவருக்கும் காட்சி இனிமை கிட்டியதில் அளவிலா உவகைதான். அவள் பெயர் பத்மா என்று அறிந்து கொள்ள முடிந்ததில் அவனுக்கு அளப்பரிய ஆனந்தம்.

’ஏ பத்மா...ஏட்டி இங்கே வா... கூப்பிடக்கூப்பிட ஏன்னு கேளாமே அப்படி அங்கே என்னதான் செஞ்சுக்கிட்டு இருக்கியோ? என்று அவள் தாய் வீட்டுக்குள்ளிருந்து பெருங் குரல் எடுத்துக் குறை பாடியது, தெருவில் வந்தவனின் காதிலும் விழுந்தது. அவன் கடந்து செல்கிற வரை, அவள் அங்கேயே நின்றாள். அவனை ஒரு பார்வை பார்த்து சொகுசுப் புன்னகையை அன்பளிப்பாகத் தந்துவிட்டு, உள்ளே குதித்து ஒடினாள் பத்மா. –

அந்தப் பார்வையும் புன்சிரிப்பும், அவளது துள்ளலும் பின்னித் தொங்கவிடப்பட்ட கூந்தலின் துவளலும் அவனை ஏதோ இன்பலோகத்துக்கு எடுத்துச் சென்றன. ஒரு கணத்துக்குத்தான். .

மனம் உணர்ச்சிகளை ஊஞ்சலில் ஏற்றி உயர உயர ஆட்டினாலும், கனவுத் தொட்டிலிட்டு ஆசைகளை வளர்த்தாலும், சங்கோஜம் என்பது வலுப்பெற்று ஆட்சி நடத்தினால், –துணிச்சல் இன்மை என்பது உள்ளுறை பண்பாக அமைந்து உரம் பெற்றிருந்தால்–காலம் முன்னேறக் காண்பது அல்லாமல், வேறு எதில் முன்னேற்றம் காண முடியும்?

ராமலிங்கம் சங்கோஜ குணம் மிகுதியாகப் பெற் நிருந்தான், பத்மாவைக் காணும் போதெல்லாம் பார்ப்பதும் வெறும் புன்னகை பூப்பதுமாக – அதிலேயே திருப்தி கொள்பவனாக–இருந்தான். ‘பத்மா!’ என்று அன்பு குழைய அழைத்து, இன்சொல் கலந்து உரையாட அவனுக்கு ஆசை இல்லாமலா இருந்தது? அருகே நின்று அவள் உதிர்க்கும் கிண்கிணிச் சிரிப்பையும், தேன் மொழிகளையும் செவிமடுக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பவில்லையா என்ன?

ஆலுைம், காலம் ஒடிக்கொண்டிருந்ததே தவிர, ‘பத்மா’ என்று ஒருதரம்கூட அவளை அழைத்து நிறுத்த அவன் துணிந்ததில்லை.

பத்மா பாவாடைப் பருவத்தை மீறி, வர்ண வர்ணச் சீலைகள் கட்டி உலவும் ஒவியமாக மாறினாள். அவள் நடையில் ஒர் அமைதி, அசைவுகளில் தனி எழில்; பார்வையில் பேசாத பேச்சின் பொருள்கள் எவ்வளவோ கூடின.

அவன் பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் தன்னவளாக வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். எனினும், எல்லா ஆசைகளும், எல்லா ஏக்கங்களும் தனது மனக் குகையினுள்ளே மறைந்து கிடக்கும்படி கவனிப்பதிலேயே அவன் ஆர்வம் செலுத்தினான். அதற்கு அவனுடைய சங்கோசம்தான் முக்கிய காரணம். இருப்பினும், ‘தம்பியை முன்னுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. பிறவி படித்து முடித்து ஓர் உத்தியோகம் தேடிக் கொள்ளட்டும். அதன் பிறகு நம்ம கலியாணத்தையும் அவன் கலியாணத்தையும் சேர்த்து நடத்தி விடலாம் என்று தனக்குத்தானே அவன் கூறிக் கொள்வான், பத்மாவுக்கு அநேக இடங்களில் முயன்று பார்த்தும் நல்ல மாப்பிள்ளையாக யாரும் கிடைக்கவில்லை என்ற செய்தி அவ்வப்போது அவன் காதுகளில் விழுந்தது. அவன் அம்மாவே அதைச் சொல்லுவாள். அப்போதுகூட தன் உள்ளக் கிடக்கையை வெளியிடலாம் என்ற துணிவு ராமலிங்கத்துக்கு வந்ததில்லை. ‘பத்மா எனக்காகத்தான் இருக்கிறாள், உரிய காலம் வந்ததும் நான் இதைச் சொல்லுவேன்’ என்று அவன் பெருமையாக எண்ணுவதுண்டு.

பிறவிப் பெருமாள் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். ‘தம்பிக்கு அதிர்ஷ்ட ஜாதகம். அப்பாவே அடிக்கடி சொல்லுவார்களே. அவன் பாஸ் பண்ணக் கேட்கணுமா?’ என்று அண்ணன் சொல்லி மகிழ்ந்தான். இளையவன் பரீட்சையில் தேறியது மட்டுமல்ல; உறவினர் ஒருவரின் சிபாரிசு மூலம் அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பெரியவன் சத்தோஷம் அடையாமல் இருப்பானா?

பிறவிப்பெருமாள் அண்ணனை விட முற்றிலும் மாறுபட்டவன். நாகரிக மோகமும், மிடுக்கான தோற்றமும், உல்லாசப் போக்கும் கொண்டவன். என்னவே மைனர்!’ என்றுதான் அவனை அறிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். சைக்கிளில் வீதிகளை வளைய வளைய வருவதில் அவனுக்கு உற்சாகம் அதிகம். நல்ல வேளே! அவனுக்கு சீக்கிரமே வேலை கிடைத்துவிட்டது. சும்மா இருந்தால் பையன் கெட்டு அல்லவா போவான்’ என்று கிசுகிசுத்தது அண்ணனின் மனக்குறளி.

‘சீக்கிரமே அவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணிவிட வேணும் என்று பெரியவன் தீர்மானம் செய்து கொண்டான். தனக்குத் தானே தேர்ந்து முடிவு செய்துள்ள பத்மாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லி, முயல்வதற்குரிய வேளை வந்து விட்டது என்றும் அவன் கருதினன்.

தாய் ஆவுடையம்மாளே மகனிடம் அந்தப் பேச்சைத் துவக்கிவிட்டாள். ‘உனக்கும் வயசாயிட்டுது. தம்பிக்கும் ஒரு கலியாணத்தைப் பண்ணி 

வைத்தால் நல்லது. அவன் உன்னை மாதிரி அமரிக்கை யாய் இருக்க மாட்டான். ஊரிலே நாலு பேரு நாலு சொல்றதுக்கு முன்னாலே நாமே அவனுக்கு ஒரு கால் கட்டைப் போட்டு வைப்பது நல்லதில்லையா? என்று அவள் சொன்னாள். பிறவி ஒரு பெண்ணைக் காதலிக் கிருனாம்; அவளையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என்றும் அவள் இங்கிதமாக அறிவித் தாள்.

தம்பியின் தீவிரம் அண்ணனுக்கு வியப்பைத் தந்தது. அம்மா சிரித்தாள்.'எல்லாரும் உன்னைப் போலவே இருப்பார்களா? நீ குனிந்த தலை நிமிராத தருமரு. இந்தக் காலத்துப் புள்ளெக கணக்காகவா நீ இருக்கிறே?’ என்றாள்.

தனது ஆசையைத் தாயிடம் தெரிவிப்பதற்கு இப்பொழுது கூடத் தயங்கினான் ராமலிங்கம். இளையவன் மனசைக் கவர்ந்த பெண் யாரோ, எந்த ஊரோ என்று அறிந்து கொள்ள முந்தினான்.

‘இதே தெருவில்தான் இருக்கிருள். நீ கூட எப்பவாவது அவளைப் பார்த்திருப்பாய். பத்மா, பத்மா என்று ஒரு பெண்ணைப்பற்றி நான்கூட உன்னிடம் இரண்டு மூன்று தடவை சொல்லவில்லையா?...’

எத்தகைய கூரிய கருவியைத் தன் மூத்த மகனின் இதயத்தில் பாய்ச்சுகிரறோம் எனும் உணர்வு ஒரு சிறிதும் இல்லாமலே அவள் பேசினாள். எதிர்பாராத தாக்குதலால் ராமலிங்கம் திக்குமுக்காடினான். ஒரு நம்பிக்கை ஊசலிட, அதைப் பற்றிக்கொண்டு நிற்க முயன்றான் அவன்.'அந்தப் பெண் வந்து...’ என்று வார்த்தைகளை மென்று விழுங்கலானான்.

‘அதுக்கும் இஷ்டம் இருக்குமின்னுதான் தோணுது. பிறவி அடிக்கடி தெருவில் போகிறபோது அது அவனைப் பார்த்திருக்கும் போலிருக்கு. அவள் அப்பாவுக்கும் சம்மதம்தான். நம்ம பிறவிக்கு என்ன குறை? படிச்சிருக்கான். நல்ல சம்பளத்திலே வேலை பார்க்கிருன் அழகாக இருக்கிருன். எந்தப் பெண் தான் அவனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதிக் காது? பத்மாவுக்கு, பிறவியை விட உயர்ந்த மாப் பிள்ளை வேறே யாரு, எங்கிருந்து வந்து குதித்து விடப் போகிருனாம்? ஆவுடையம்மாள் அவள் இயல்புப்படி அடுக்கிக் கொண்டிருந்தாள்.

ராமலிங்கத்துக்கு இதுதான் பேரிடியாக அதிர்ச்சி தந்தது. பத்மா~ அந்தப் பெண்; அவளும் இப்படிச் செய்வாளா?...பத்மா ஒரு துரோகி என்று கத்த வேண்டும் போலிருந்தது...அவனுடைய உள்ளமே அவனைக் கண்டித்தது. அவளேக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நீ அவளை மணம் புரிய ஆசைப்படுகிருய் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?

‘என்னுடைய ஆசையை நான் எனது ஆசைக்கு உரியவளிடம்கூட வெளிப்படையாகத் தெரிவிக்கத் துணியவில்லையே! என்று வருந்தினான் அந்த சங்கோஜி.

அதிர்ஷ்டம் துணிச்சல்காரர்களுக்கே துணைபுரியுமாம். காதல்கூட துணிவுள்ளவர்களுக்குத்தான் இனிய வெற்றி தரும். எவருக்கும் காத்து நிற்காத காலத்தையும், அலையையும் போலவே காதலும் காத்துக் கிடப்ப தில்லை. அதன் வேகத்தோடு இணைந்து முன்னேறத் தயங்குகிறவர்கள் அதன் அருளைப் பெறாமல், அதையே இழந்து விடுகிறார்கள்...

ராமலிங்கத்தின் மனம் ஞானஒளி பெற்றுக் கொண்டிருந்தது. அவன் காதுகளில் தாயின் பேச்சு விழாமலில்லை.

‘உனக்கும் ஒரு இடத்திலே பெண் பார்த்திருக்கிறேன். பத்மா போல் அழகாக இல்லாவிட்டாலும், நல்ல குனம்! வீட்டு வேலை எல்லாம் நன்முகச் செய்யும்...’

‘பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு வெளியேறினான் ராமலிங்கம்.

‘இனிமேல் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?’ என்று கனத்தது அவன் மனக் குறளி, உரிய காலத்தில்  எண்ணங்களை வெளியிடாததனாலே பல அரிய காரியங் கள் நிகழ முடியாமலே போகின்றன; சீரிய ஆசைகள் கர்ப்பத்திலேயே அழிந்து மடிகின்றன என்று அவன் உள்ளம் முனங்கியது. அவன் யாரையும் குறை கூறத் தயாராக இல்லை.

மேலும், பிறவிப்பெருமாள் யார்? அவனுடைய தம்பிதானே? அவனுக்கு எவ்விதமான குறையும் ஏற் படாமல் கவனிக்க வேண்டிய கடமை தனக்கு இருக்கிறதே...

ராமலிங்கம் அங்குமிங்கும் அலைந்து சில முக்கிய காரியங்களைக் கவனித்து முடித்தான். முதலாளி அவர்களின் அதிமுக்கியமான பிஸினஸ் ஒன்றைக் கவனித்து முடிப்பதற்காக அவர்கள் என்னைக் கொழும் புக்கு அனுப்புகிறார்கள். முதலாளியின் கொழும்புக் கடையை நிர்வகிக்க நம்பிக்கையான ஆள் தேவைப் படுவதால் என்னை அங்கேயே இருக்கும்படி வற்புறுத் துகிறார்கள். ஆகவே என்னை எதிர் பார்க்காமல் தம்பியின் கலியாணத்தை நடத்தவும். என் கலியாணச் செலவுக்கு உதவும் என்று நான் சேமித்த சிறு தொகையை தம்பிக்கு அளிக்கிறேன். பணம் இத்துடன் இருக்கிறது என்று சீட்டு எழுதிப் பெட்டியில் வைத்துவிட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவன் வெளியேறினன்.

குடும்பம் என்கிற சிலுவையில் கட்டுண்டு, கடமை, பொறுப்பு ஆகிய ஆணிகளால் அறையப்பட்டு, வேதனையை மெளனமாகத் தாங்கிக் கொள்ளும் போதே, தலைமீது குவிகிற தரும சோதனை எனும் முள் கிரீடத்தையும் ஏற்று._பொறுமையோடு சகித்துக் கொள்ளும் திராணி பெற்றுள்ள எத்தனையோ சாதாரண மனிதர்களில் ஒருவன்தான் அந்தப் பெரியவன். - ~


*
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்_சிங்கம்/பெரியவன்&oldid=1071114" இலிருந்து மீள்விக்கப்பட்டது