ஆண் சிங்கம்/ரொம்ப வேண்டியவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ரொம்ப வேண்டியவர்


ஞானப்பிரகாசம் ஒரு எழுத்தாளர்.

அவர் எழுதினால், கதை கட்டுரைகள் ஏதாவது பத் திரிகைகளில் வந்தாலும் வரும்; வராமலும் போகும்.

அவர் எழுத்துக்கள் பத்திரிகைகளில் வந்தால் அவருக்கு ஏதாவது பணம் கிடைத்தாலும் கிடைக்கும்; கிடைக்காமலும் இருக்கும்.

எழுத்தாளர் ஞானப்பிரகாசத்தைத் தேடி ஒருவர் வந்தார். அவர் புதிதாகப் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னார்.

‘நமக்கு வேண்டியவங்க நீங்க. உங்க உதவி எப்பவும் இருக்கணும். ஒவ்வொரு இதழுக்கும் நீங்க தயவு செய்து கதை அனுப்பணும். உங்களுக்குத் தெரியாதா என்ன! ஆரம்பத்திலே பணம் கொடுக்க முடியாது தானே! இருந்தாலும் உங்க விஷயத்தை நான் மறந்து விட மாட்டேன் ஸார்’ என்றார் மணிக்கணக்கிலே தொணதொணத்தார். போனார்.

ஞானப்பிரகாசம் கதை எழுதி அனுப்பத் தவறவில்லை.

பிரசங்கி ஒருவர் புதிதாகப் பத்திரிகை தொடங்கினார். ‘நம்ம எழுத்தாளர் ஞானப்பிரகாசத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க, கட்டுரை வேனும் என்று கேட்டு என்றார்,

‘பணம்? அவர் பணத்துக்காகத் தானே எழுதுவார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார்.

‘ஞானப்பிரகாசம் நமக்கு ரொம்பவும் வேண்டியவர் ஐயா! நம்மிடம் அவர் பணம் கிணம் ஒண்னும் எதிர் பார்க்க மாட்டார். நீங்க கடிதத்தை அனுப்புங்க' என்று பத்திரிகை ஆசிரியர் அதிகப் பிரசங்கி திடமாக அறிவித்தார்.

அவர் ஏமாறவில்லை.

கடிதம் போய்ச் சேர்ந்த சில தினங்களிலேயே ஞானப்பிரகாசம் கட்டுரை எழுதி அனுப்பிவிட்டார்.

ஞானப்பிரகாசத்துக்கு ஒரு கடிதம் வந்தது. ஒரு பத்திரிகைக்காரர்தான் எழுதியிருந்தார். ‘நாம் ஏன் பத்திரிகை நடத்துகிறோம் என்று நமக்கே புரியவில்லை. பத்திரிகையை நிறுத்தி விடலாமா என்றுகூட நாம் சில சமயம் நினைப்பது உண்டு. என்றாலும், பத்திரிகை நமது உயிர் மூச்சு மாதிரி இருப் பதால் அதை விடவும் மனமில்லை. பத்திரிகையில் நல்ல கதைகள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற அப்பாவிகளும் இருக்கிறார்கள். அதனல், உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களைப் போன்ற எழுத் தாளர்களுக்குப் பணம் அளிக்கவேண்டிய அவசியத்தை நாம் அறியாமல் இல்லை. ஆனாலும் நமது பொருள் நிலை சரியாக இல்லை. தயவு செய்து அவ்வப்போது விஷயதானம் செய்து பத்திரிகையைக் காப்பாற்றுங்கள் நமக்கு ரொம்ப வேண்டியவர் நீங்கள் என்பதனாலேயே இவ்வளவு தூரம் எழுதுகிறோம்.

ஞானப்பிரகாசம் விஷயதான வள்ளலாக விளங்கத் தயங்கினாரில்லை.

‘கேளுங்கள்; கொடுக்கப்படும்’ என்ற கொள்கை உடைய தங்களிடம் மீண்டும் கேட்கிறோம், கேட்டது கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு. நமது மகத்தான பத்திரிகையின் மகோன்னதமான மலர் தயாராகிறது. வழக்கம் போல் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் அனுப்பி உதவுக. நமக்கு வேண்டியவர் என்ற உரிமை யோடு நாம் ஆனுப்பும் கோரிக்கை இது...இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார். அவர் கேட்டவற்றை எழுத்தாளர் கொடுக்கத்தான் செய்தார்.

யார் யாரோ புதுசு புதுசாகப் பத்திரிகை ஆரம்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

நடத்தும் பத்திரிகையை நிறுத்திவிட மனமில்லாத எவராவது விடாது பிழைப்பை நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

எப்பவாவது எவராவது விசேஷ மலர் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்

அவர்கள் எல்லோருக்கும் ஞானப்பிரகாசம் தெரிந் தவராய், ‘வேண்டிய மனிதர்’ ஆகத்தான் இருந்தார்.

அவர்கள் நேரிலே கண்டு கேட்டார்கள். ஆள் அனுப்பிக் கேட்டார்கள். தபால் மூலம் கேட்டார்கள்.

வேண்டியவற்றைப் பெற்றார்கள். ஏனெனில் எல்லோருக்கும் ‘ரொம்ப வேண்டியவர்’ ஆக விளங்கினார் எழுத்தாளர் ஞானப்பிரகாசம்.

காலம் ஓடியது.

பத்திரிகைகள் பிறந்தன. தவழ்ந்தன. நடந்தன. படுத்தன. சில எழுந்து நின்றன. பல தோன்றின– ஞானப்பிரகாசம் எழுதிக் கொண்டேயிருந்தார்.

அவர் எழுத்தாளர் இல்லையா? ஆகவே, அவர் சுத்த சோம்பேறியாகவும் இருந்தார். இதில் அதிசயம் எதுவுமில்லை.

அவர் எழுத்தைப் பிழைப்பாக ஏற்றிருந்தார். ஆதலின் அவர் பிழைப்பு ஒழுங்காக_நடக்கவில்லை, அவரது பொருளாதாரம் படுவறட்சி என்ற அந்தஸ்தை எட்டியது. அவர் எண்ணிப் பார்த்தார். கதை கட்டுரைகள் அனுப்பிக் காசு பெற முயன்றார், வெளியான கதைகளுக்குப் பணம் தருவதாகச் சொல்லி வாளா இருந்துவிட்ட பத்திரிகைப் பெரியார்களுக்கு ‘பில்’ தயாரித்து அனுப்பினார். ‘ரிமைண்டர்’ எழுதினார். அவரை ரொம்பவும் வேண்டியவர் என உரிமை கொண்டாடிய அன்பர்களுக் கெல்லாம் கடிதம் எழுதினார்.

பதில்கூட வரவில்லை. அப்புறம் அல்லவா பணம் பற்றிய பிரஸ்தாபம்!

‘ஆகவே, நாம் எல்லோருக்கும் வேண்டியவராக வாழ்ந்தோம். நமக்கு வேண்டியவர் ஒருவருமில்லை’ என உணர்ந்தார் ஞானம்பிரகாசம். உடனே பாத யாத்திரை தொடங்கினார்.

அப்பொழுதும் அந்த எழுத்தாளரின் லட்சியம் மிக உயர்ந்ததாகத்தான் இருந்தது. இமயமலையை நோக் கித்தான் நடந்தார் அவர்.*


சிறுகதைகள்ஆண் சிங்கம்வல்லிக்கண்ணன்