ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்/1
பண்டைக்காலத்தில் வாரணாசி என்ற சிறப்புப் பெயர் பெற்ற காசிமா நகரத்தில் 'அபஞ்சிகன்’ என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் இளம் பருவத்திலேயே நல்லாசிரியரை அடைந்து, வேதங்களையெல்லாம் வழுவறக்கற்று வேதபாரங்கதனாய், 'ஆரண உபாத்தியாயன்’ என்னும் பட்டமும் பெற்றான். பின்பு அவன் ஆசிரியர் அநுமதியால் நல்லறமாகிய இல்லறம் நடத்தக்கருதி, வாழ்க்கைத் துணையாகச் சாலினி என்னும் ஒரு பார்ப்பனியை மணந்து வாழ்ந்துவந்தான்.
அங்ஙனம் வாழுநாளில், அவன் மனைவியாகிய சாலினி, மகளிர்க்கு இன்றியமையாத கற்பொழுக்கத்தினின்று வழுவிக் கணவனுக்குப் பெருந்தீங்கிழைத்தவளானாள். அது பற்றி அவள் அச்சமும், நாணமும், துக்கமும் கொண்டு, அப்பாவத்தைத் தீர்த்துக் கொள்ளக்கருதி, குற்றம்செய்த குலமகளிர் அக்குற்றத்றைப் போக்குதற்குக் குமரித் தீர்த்தம் ஆடச்செல்லும் அக்கால வழக்கப்படி தான் கன்னியாகுமரியில் நீராடவேண்டுமெனத் துணிந்தாள். துணிந்தபடியே தான் கர்ப்பிணியாயிருந்தும் அதனையுங் கருதாது, ஒருவரும் அறியாவண்ணம் அவள் அகத்தைவிட்டு வெளியேறிப் பிரயாணமானாள். அங்ஙனம் புறப்பட்ட பார்ப்பனி, பல ஊர்களையுங் கடந்து வருகின்றவள் பாண்டியநாட்டுக் கொற்கை நகரத்துக்கருகிலுள்ள ஆயர் சேரிக்கு அருகில் வரும்பொழுது ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். பெற்ற அவள்,
- "கடந்த ஞானியும் கடப்பரோ மக்கள்மேற் காதல்"
எனப் பெரியோர் கூறியிருக்கவும், தாய்க்குப் பிள்ளைகள் மீது உண்டாகும் இயற்கை அன்பும், இரக்கமும் ஒரு சிறிதும் இல்லாது, அக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டு விட்டுக் குமரித் துறையை நாடி நீங்கினள். நீங்கவே அக்குழவி உணவு பெறாமையால் பசிமிகுந்து வருந்தி அழுதது. அச்சமயம் அத்தோட்டத்தின் பக்கத்தில் பசும்புல் மேய்ந்து நின்ற ஒரு பசுவானது, அக்குழந்தையின் அழுகை யொலியைக்கேட்டு, அருகில் வந்து, அதன் வருத்தம்தீர நாவால் நக்கித் தன் பால் மடி.யைக் குழந்தையின் வாயிலிட்டுப் பாலூட்டி, ஏழு நாள் வரையும் அப்புறம் இப்புறம் செல்லாது, அன்போடு பாதுகாத்துக் கொண்டிருந்தது.
அவ்விதமிருக்கையில், வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து தன் மனைவியோடு வழிவருகின்ற 'பூதி' என்னும் அந்தணன் ஒருவன் அக்குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டுச்சென்று, யாருமின்றித் தனியே கிடக்கும் அதைக் கண்டு மிக்க துன்பத்தோடு கண்ணீர் உகுத்து, 'இவன் பசுமகன் அல்லன்; என்மகனே' என்று சொல்லி, வறியோர் புதையற்பொருள் பெற்றதுபோல் பெருமகிழ்வுபூண்டான்; பின்பு புத்திரசெல்வத்தை வழியிடையே கொடுத்து உதவிய இறைவன் திருவருளைச் சிந்தித்துத் தொழுது, அக்குழந்தையை எடுத்துத் தோள்மீது அணைத்து, உவகை யோடு விரைந்து தன்னூர் சென்று, வீடு சேர்ந்தான். சேர்ந்த அவன், அப்பிள்ளைக்கு 'ஆபுத்திரன்' என நாமம் சூட்டி, அதனை மிகுந்த ஆசையுடன் 'வறியன் ஒரு செய்வாளன் அச்செய்விளையக் காக்கும் அதுபோலப் போற்றிப்புனைந்து வளர்த்துவந்தான், குழந்தை இளம்பிறை போல் வளர்ந்து, ஐந்தாண்டு நிரம்பியது. பூதியும் புதல்வனை உபநயனம் செய்வதற்கு முன்னரே எல்லாக் கலைகளையும் வேதங்களையும் நன்கு பயில்வித்தான். ஆபுத்திரனும் அவற்றையெல்லாம் ஐயம் திரிபு முதலிய குற்றமறக்கற்று, அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முதலிய நற்குணங்களையே பொற்கலனாகப் பூண்டு ஒழுகுவானாயினான்.
இங்ஙனம் அவன் ஒழுகிவருநாளிலே அவ்வூரிலுள்ள ஓர் அந்தணன் வேள்வி செய்யக்கருதி, ஒரு பசுவைக் கொண்டு வந்து தன் வீட்டினுள் கட்டிவைத்திருந்தான். இதனையறிந்த ஆபுத்திரன் அப்பசுவை அம்மரண வேதனையினின்றும் விடுவிக்கக் கருதி, அவ்வந்தணன் அகத்தினுள் புகுந்தான். புகுந்த அவன், யாக சாலைக்கருகில் மாலை சுற்றிய கொம்புகளையுடையதாய்த் தனக்கு நேரவிருக்கும் மரண துன்பத்தைக் கருதி, அஞ்சிக் கதறி, வேடர் வலையில் அகப்பட்ட மான் பிணைபோல் வருந்திக்கொண்டிருந்த அப் பசுவைக் கண்டான், கண்டவுடன் 'அந்தோ! என்னே ! இந்த அந்தணர் தம் செந்தண்மை' என மனம் இரங்கி, 'இப் பசுவை மரணவேதனையினின்றும் நீக்குமாறு களவால் நடு இரவில் கவர்ந்து செல்வேன்' எனத் தனக்குள் நினைத்தான். அங்ஙனமே அவ்வந்தணன் வீட்டில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, அன்றிரவில் பசுவைக் கைப்பற்றிப் பருக்கைக் கற்கள் நிரம்பிய காட்டு வழியாக ஊருக்குப் புறத்தே சிறிதுதூரம் கொண்டுபோய் விட்டான். பின்பு அந்தணர் கள், யாகப் பசுவைக் காணாது துணுக்குற்று, நாற்புறத்தும் தேடி அலைந்து, ஓரிடத்தில் அப்பசுபாலகனேப் பசுவோடு அகப்படுத்திக்கொண்டார்கள், பின்னர் அவர்கள், ஆபுத்திரன் கருத்தை அறியாமல், அவனே நோக்கிப், "புலைச்சிறுவா! இப்பசுவை இரவில் எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தாய்?" நீ செய்த இத்தொழில் தீயதொழில் அல்லவா?’ எனப் பலவாறு வெறுத்துரைத்துக் கோலால் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினர்கள். அப்பொழுது ஆபுத்திரனே அதிகமாக அடித்து வருத்தும் ஒர் அந்தண உபாத்தியாயனைப் பசு, தன் கொம்பால் குத்திக் குடரை வெளிப்படுத்திவிட்டுக் காட்டிற்குள் பாய்ந்து விரைந் தோடிவிட்டது.
பின்னும் அதிகமாக வருத்திய அவர்களை நோக்கி, ஆபுத்திரன், "வருத்தாதீர்கள்: யான் சொல்வகைக் கேளுங்கள்; நீங்கள் இப்பசுவை வருத்தத் துணிந்தீர்களே ! இது உங்களுக்கு யாது குற்றஞ் செய்தது? மேய்ச்சல் புலங்களில் தானாக வளர்ந்த புல்லைத்தின்று, உலகத்து மாந்தர்கட்கெல்லாம் தான் பிறந்த நாள் முதலாகச் சிறந்த தன் தீம்பாலை இளகிய மனத்தோடு சுரந்தளித்து உண்பிக்கும் இப்புண்ணிய ஜெந்துவாகிய பசுவுடன் உங்களுக்கு உண்டான பகை என்ன? பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்வி செய்து அடையும் பயனை ஓர் உயிரையும் கொல்லாமையாகிய தருமத்தால் அடையலாமே! இச்செயலை நீங்கள் கடைப்பிடியீராயின் உங்களுக்கு அந்தணர் என்னும் பெயர் எவ்வாறு பொருந்தும்?" எனப் பலவிதமான நீதிகளைக் கூறி, அவர்களை அருள்வழியில் ஒழுகுமாறு செய்ய முயன்றான்.
அந்தணர்களோ, அவனது சொற்களுள் ஒன்றையுங் கேளாது, அவனே நோக்கி, "நீ வேதங்களைக் கற்றுணர்ந்தும் வேத வேள்வியை நிந்தனை செய்யும் பேதையாய் இருக்கின்றாய். ஆதலால், நீ பசுமகன் என்பதற்குச் சாலவும் பொருத்த முள்ளவனாகக் காணப்படுகின்றாய்" என்று இகழ்ந்து கூறினார்கள். அவ்விதம் கூறலும் ஆபுத்திரன், "பசுவின் மகன் அசலமுனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன்; இவர்களை நீங்கள் உங்கள் குலத்து முனிசிரேஷ்டர்களென்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்ததால் வந்த இழிவு யாது? 'கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்' என்ற மூதுரையை நீங்கள் அறிவீர்களோ? என்று கூறித் தன்னை இகழ்ந்த அவர்கள் வாயை அடக்கினான்.
அப்போது அங்குள்ள அந்தணர்களுள் ஒருவன், "ஒ! இவன் பிறப்பின் வரலாற்று முறையை நான் அறிவேன்; முன்னொரு நாள் குமரித் தீர்த்தத்தில் விதிப்படி மூழ்கிக் குமரித்தெய்வத்தை வணங்கிவிட்டு, வருத்தமிகுந்து, வரும் சாலி என்னும் ஒரு பார்ப்பனியைக் கண்டு, 'உன் ஊர் யாது ? நீ எதற்காக இங்கு வந்தாய்? வாட்டத்திற்குக் காரணம் என்ன?' என்று நான் கேட்டதற்கு அவள், 'யான் வாரணாசி என்னும் ஊரிலுள்ள ஆரண உபாத்தியாயன் அபஞ்சிகன் என்னும் அந்தணனது மனைவி; யானொழுகிய தீய ஒழுக்கத்தால் கணவனைப் பிரிந்து, கன்னியாகுமரிக்கு நீராடச்சென்றேன்; செல்லுகையில் பாண்டியரது கொற்கை நகரத்துக்கு அப்பால் ஒருகாத தூரத்திலுள்ள ஆயர்பாடியிலே ஆண் மகவு ஒன்றைப்பெற்று, இரக்கமின்றி அதனை ஆங்குள்ள ஒரு தோட்டத்தில் இட்டுச்சென்றேன்; இப்படிப் பட்ட தீவினையாட்டியாகிய எனக்கு நற்கதியும் உண்டோ?' என்று மிகத் துன்பமுற்று அழுதாள்; அவள் பெற்ற அந்த மகனே இவன்; இதில் சிறிதும் ஐயம் இல்லை; இதைவெளிப் படுத்தலால் யாது பயன்’ எனக்கருதி, இதுகாறும் உங்களுக்குச் சொல்லாதிருந்தேன்; அசுத்தனாதலால் இவனைத் தீண்டாது நீங்குங்கள்" என்று சொன்னான்.
ஆபுத்திரன் அதுகேட்டு, ”முனி சிரேஷ்டர்களாகிய அகஸ்தியரும் வசிஷ்டரும் தேவகணிகையாகிய திலோத்தமையின் புத்திரர்கள் என்பதனை அறியீர்களோ ? சாலிக்குத் தவறுகூறத் துணிந்தீர்களே' என்றுகூறி, அவர்களை நோக்கி நகைத்தான்.
வளர்த்த பூதி அந்தணனும் அவனைப் புலைமகளென்று தன் அகத்துக்கு வரவொட்டாது தடுத்துவிட்டான். பின்னர் ஆபுத்திரன், ஆதரிப்பார் ஒருவருமின்றி, இரந்துண்டு காலங்கழிக்கக்கருதி, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்தி, வீடுகள் தோறுஞ் சென்றான். அவனே அந்தணர்கள் 'பசுவைத் திருடின கள்வன்' என்று இகழ்ந்து, தங்கள் ஊர்களில் எல்லாம் அன்னம் இடாமல் பிச்சைப் பாத்திரத்தில் கல்லைப்போடத் தொடங்கினர்கள். அதனல், அவன் வேறு புகலின்றிப் பாண்டியரது இராஜதானியாகிய மதுரையம்பதியை அடைந்து, ஆங்குள்ள சிந்தாதேவியின் (சரஸ்வதி) கோயிலாகிய கலைநியமத்தின் எதிரேயுள்ள அம்பலப் பீடிகையைச் (பொதுநிலையம்) சேர்ந்து, அதனையே தனக்கு உறைவிடமாகக்கொண்டு, கையிற் பிச்சைப்பாத்திரமேந்தி, இல்லங்கள் தோறும் சென்று சென்று, வாங்கி வந்த உணவை, அவ்வம்பலத்தில் அமர்ந்து “எ! அந்தகர்களே! முடவர்களே! அகதிகளே! நோயாளிகளே யாவரும் வம்மின், வம்மின்” என இரக்கத்துடன் கூவி அழைத்து, அவர்களை அன்புடன் உண்பித்து, எஞ்சிய மிச்சத்தையே தானுண்டு, பிச்சைப் பாத்திரத்தைத் தலையணையாக வைத் துக்கொண்டு, இரவில் அவ்வம்பலத்திலேயே நித்திரை செய்து காலங்கழித்து வந்தான்.
அங்ஙனம் அவன் காலங்கழித்து வருநாளிலே ஒரு நாள் மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவில் சிலர் வந்து, ஆபுத்திரனிடம் “எங்களைப் பசி வருத்துகின்றது" என்று வருந்திக்கூறினர்கள். யாசக உணவல்லாமல் வேறு உணவு இல்லோனாகிய ஆபுத்திரன், அவரது பசியாற்றும் ஆற்றல் இல்லாதவனாய் மிகவருத்தமுற்றான். அச்சமயத்தில் கலை நியமத்தில் கோயில்கொண்டிருக்கும் சிந்தாதேவி, எழுங்தருளி வந்து ”எட! வருந்தாதே; இதனைக் கொள்வாயாக; காடெல்லாம் மழைவளங்குன்றிப் பஞ்சம் உற்றாலும் இந்த ஓடுவறுமையை அடையாது; கொடுக்கக் கொடுக்க உணவு வளர்ந்துகொண்டே வரும்" என்று சொல்லித் தன்கையிலுள்ள அக்ஷயபாத்திரம் என்னும் ஓர் பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்தாள். உடனே அவன் அதைப்பணிவுடன் வாங்கி எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து,
“சிந்தா தேவி செழுங்கல நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானேர் தலைவி! மண்ணுேர் முதல்வி
ஏனேர் உற்ற இடர் களைவாய்!”
என்று துதித்து, அத்தேவியைத் தொழுது, பசியால் வருந்தித் தன்னிடம் வந்த அவர்களே உண்பித்து, அந்நாள் தொட்டு, முட்டின்றி எல்லா உயிர்க்கும் உணவளிப்பானாயினான். உண்பதற்காக மனிதர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பறவைகளும், விலங்குகளும் அவனே விட்டகலாது அன்புடன் சுற்றிக்கொண்டன. இவன் உணவூட்டும் ஒசை இடையின்றி ஒலித்துக்கொண்டேயிருந்தது;