ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்/2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அதனால் அவன் பட்சிசாலம் பயன் கொள்ளப் பழுத்த ஆலமரம்போல் விளங்குவானாயினான்.

இங்ஙனம் இவன் இடைவிடாது புரிந்த வரும் புண்ணியச் செயலை இந்திரன் தனது ★பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்தான். அதனால் அவன் மகிழ்ந்து, இவனுக்கு வேண்டும் வரங்கொடுப்பதற்கு எண்ணி, வளைந்த உடம்புடன் தண்டூன்றி, ஒரு கிழப்பிராமணன் வடிவங்கொண்டு வந்து, ஆபுத்திரனுக்கு முன்நின்று, "நான் இந்திரன்; உனக்கு வரங்கொடுத்தற்கு வந்தேன்; நீ விரும்புவது யாது? உன்னுடைய பெரிய புண்ணியத்தின் பயனேப் பெற்றுக் கொள்வாயாக" என்று சொன்னான். அதற்கு ஆபுத்திரன், விலாக் குலுங்கும்படியாக நகைத்துப் பரிகசித்து, "ஈவாரும் ஏற்பாரும் இல்லாமையால் ஈந்த உவக்கும் இன்பமும், தவச்செய்கையும் இல்லாத தேவர்நாட்டுத் தலைவனே! வாடியமுகத்துடன் வருந்தி வந்தவர்களது கடும்பசியைத் தீர்த்து, அவர்களது இனிய முகத்தை யான்காணும்படி செய்து, மிகுந்த இன்பம் அளிக்கின்ற எனது இத்தெய்வப் பாத்திரம் ஒன்றுமே போதும். நான் தருமத்தை விலக்கு விற்கும் வியாபாரியல்லன்; உன்னிடம் நான் பெறவேண்டுவது ஒன்றுமில்லை" என்று மிடுக்காய் மதியாது கூறினான்.

கூறவே இந்திரன் கோபித்து, "இவனது அஷயபாத்திரம் ஏமாந்திருக்க உலகத்தில் பசியால் வருத்துவோர் இல்லையாகும்படி செய்வேன்" என்று தன்னுள் நினைந்து, நாடு முழுவதும் வளத்தால் மலியும்படி மேகங்களை ஏவி,


★பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம்; இந்திரன் தனது பாண்டு கம்பளம் அசைந்தால் உலகில் நிகழும் விசேட நிகழ்ச்சியை அறிந்துகொள்வானென்று கூறுதல் பெளத்தரது வழக்கம். மழை பெய்வித்து மிக்க செல்வத்தை உண்டாக்கினான். அதனால் பன்னிரண்டு வருடம் பஞ்சத்தால் வருந்திய பாண்டிய நாடு, மழைவள மிகுந்து மாநிலஞ்செழித்தது. ஆகவே பசித்துவருவோர் இல்லாமல் அம்பலம் ஊனுண்னும் ஒலி அடங்கி, துஷ்டரும் கெட்ட ஒழுக்கமுடையவர்களும் விகட புத்தியுள்ளவர்களும் பிரயாணிகளும் கூடி, வட்டும், சூதும், வம்பும் ஆடுதற்குரிய இடமாய்விட்டது. அதுகண்டு, ஆபுத்திரன் அம்பலத்தை விட்டு நீங்கி, ஊர்தோறுஞ் சென்று சென்று, "உண்போர் யாரேனும் உண்டோ?" என்று வினாவத் தொடங்கினான். அதுதெரிந்து, செல்வக்களிப்பால் இறுமாப்புற்றோர் யாவரும் இவன்யார் பித்தன்?’ என்று இகழத்தொடங்கினார்கள். அதனால் ஆபுத்திரன், பெருஞ் செல்வத்தைக் கடலில் கவிழ்த்தவன்போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்திலிருந்து இறங்கிவந்த பிரயாணிகள் சிலர், வழியிடையில் அவனைக்கண்டு, வணங்கி, "சாவகநாடு மழையின்றி மிக்க வறுமையுற்று உயிர்கள் பசியால் வருந்தி மடிகின்றன. நீ அங்கு செல்லுதல் நலம்" என்று கூறினார்கள். அதுகேட்டு, அவன், நீரில் வீழ்ந்து ஆழுவோரை எடுக்கப்போவார்போல் விரைந்து சென்று, தேச சஞ்சாரிகளோடு சாவகத்தீவுக்குச் செல்லும் மாக்கலத்தில் ஏறினான், கலமும் பாய்விரித்துப் புறப்பட்டுச் சென்றது. சிலகாத துாரம் சென்றதும் கடலானது காற்றினல் கொந்தளிப்பாயிருந்தமையால் சென்ற கப்பல், பாய் இறக்கி, மணி பல்லவம் என்னும் தீவினருகில் ஒருநாள் தங்கியது.

ஆபுத்திரன் அத்தீவின் காட்சியைக் கண்ணுற்றுக் களிக்க இறங்கினன்; இறங்கின அவன், ஏறிவிட்டான் என்று மாலுமி எண்ணிக் கப்பலே இருட்காலத்தில் செலுத்திக்கொண்டு போய்விட்டான். அது தெரிந்த ஆபுத்திரன்

"அந்தோ! நான் எண்ணியபடி சாவகாடு செல்லுதற்கு இயலாது போய்விட்டதே என்செய்வேன்" எனப் பலவாறு கவன்று, "இவ்வமுத சுரபியை அடைவதற்கு முற்பிறப்பில் நல்வினை செய்த நான் சிறிது தீவினையும் செய்தேன்போலும்; அதனாலேதான் தனித்துத் துயருழக்கின்றேன்" என வருந்திக்கூறிப் பின்னரும் "பல உயிரைப் பாதுகாத்தற்குரிய இப்பாத்திரத்தை, வானேர் பாற்கடல் தந்த அமுதைத் தாங்களே உண்டு, ஒழிந்த மிச்சத்தை யொளித்து வைத்ததுபோல் வைத்துக்கொண்டு, என்னுயிரை மாத்திரம் பாதுகாத்து, ஒருவருமில்லாத இத்தீவத்தில் நான் இரேன்" என்று சொல்லி, அப்பாத்திரத்தைத் தொழுது, "வருடத்திற்கு ஒரு முறை நீ வெளித் தோன்றுவாயாக" என்று கூறி, அத்தீவிலுள்ள கோமுகி என்னும் பொய்கையுள்ளே விடுபவன், அதனை நோக்கி, "தயாதர்ம முடையோராய்ப் பல உயிர்களையும் பாதுகாக்கும் ஈற்குணமுடையவர் எவரேனும்வரின் அவர் கையிற் புகுவாயாக" என்று சொல்லி, அப்பொய்கையில் விட்டான். அமிழ்த சுரபியும் அமிழ்ந்தியது. ஆபுத்திரன், உண்ணா நோன்பு பூண்டு மணிபல்லவத்திலே சில நாளிருந்து, அங்குவந்த அறவணவடிகள் என்னும் பெளத்தமத ஆசிரியரைத் தரிசித்து, நிகழ்ந்தவற்றைக் கூறிவிட்டு, உயிர்துறந்து குடதிசைச் சூரியன்போல் மறைந்தான்.

முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள் வரையும் பாலூட்டி வளர்த்த நற்பசுவானது அப்புண்ணியப் பயனால், சாவக நாட்டில் தவள மலையில் தவஞ்செய்து கொண்டிருக்கும் மண்முகமுனிவனிடத்தில் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் உடையதாய்ச் சென்று, கன்றீனு முன்னமே பால் சுரந்து, எல்லா உயிர்களையும் ஊட்டிக்கொண் டிருந்தது. அதனைக்கண்டு, முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்ல அம்முனிவரன், இப்பசு வயிற்றில் உலகத்தில் மழைவளஞ் சுரக்கவும், மன்னுயிரைக் காக்கவும் ஒரு விசேட புருடன், குடலின் சம்பந்தமின்றிப் பொன்மயமான முட்டையில் தோன்றுவான்" என்று கூறினன்.

இஃது இங்ஙனமாக; முன் மணிபல்லவத்தில் உயிர் விட்ட ஆபுத்திரன், சாவகநாடு சென்று தருமஞ்செய்ய வேண்டுமென்ற சிந்தனையோடு, தன்னைக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிக் காத்த பசுவை நினைந்து கொண்டே உயிர் துறந்தானாதலின்; மண்முகமுனிவன் கூறியவாறே சாவகநாட்டில் அவ்விசேட பசுவின் திருவயிற்றில் உலகுய்யத்தோன்றி, உதய சூரியன்போல் உதித்தனன. அவன் உதித்தகாலம் புத்தன் திருவவதார காலமாகிய வைகாசி மாதத்துச் சுத்த பூர்ணமைத் திதியாகும். அவன் உதிக்க அம்முகூர்த்தத்தில், சூரியனும் சந்திரனும் தீமையுருமல் ஒளிமிகுந்து விளங்கின; நக்ஷத்திரங்கள் நன்னெறியிலே இயங்கின; வானம் பொய்யாது மழை பெய்தது: நிலமுழுதும் செழித்து விளங்கின; உயிர்களெல்லாம் துன்பமின்றி வாழ்ந்தன; காற்று வலஞ்சுற்றி வீசிற்று; திசைகள் எல்லாம் சிறந்து தோன்றின: கடல் வளமிகுந்தன; புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் பருகின; கிளியும் பருந்தும் ஒரு கூண்டில் உறைந்தன; கூன், குருடு, செவிடு முதலிய அங்க ஈனர்கள் பூமியில் பிறவாதிருந்தனர்; பசுக்கள் கன்றுகளே ஊட்டிக் கலங்கள் ததும்பப் பாலைச்சொரிந்தன; பறவைகள் அயல்நாடு செல்லாது தத்தம் இருப்பிடங்களிலேயே இரையுண்டு உறைந்தன. இந்நல் நிமித்தங்கள் அனைத்தும் உலக முழுவதும் நிகழ்ந்தன. சக்கரவாளக்கோட்டம் முதலான இடங்களிலுள்ள முனிவர்கள், "இந்நிமித்த நிகழ்ச்சிக்குக் காரணமான ஒர் உத்தமபுருஷன் உலகினில் அவதரித்திருக்க வேண்டுமே; அவன் யாரோ தெரியவில்லையே” எனத் தங்களுள் ஆலோசித்து, வருங்காரியத்தை உரைக்கவல்ல கந்திற்பாவை (தூணில் கிற்கும்பாவை)யிடம் சென்று வினவினர்கள். அது, "மணிபல்லவத்தில் இறந்த ஒரு புண்ணிய புருஷன், உயிர்களைப் பாதுகாப்பதற்குச் சாவககாட்டிலுதித்தான்; அதனாலேதான் இந்த நன்னிமித்தங்கள் உண்டாயின. அவன் வரலாற்றை அறவனவடிகளிடம் கேட்டறியுங்கள்" என்று சொல்லியது. அவர்களும் அவ்வாறே கேட்டு வியந்திருந்தார்கள்.

இங்ஙனம் விநோதமாக அவதரித்திருந்த குழந்தையைச் சாவககாட்டு நாகபுரத்தரசன் பூமிசந்திரன் என்பான் அறிந்து, தனக்குப் பிள்ளைப்பேறு இல்லாததினுல் மணமுக முனிவரை அடைந்து வணங்கி இரந்து, அக்குழந்தையைப் பெற்றுக்கொண்டுபோய், புண்ணியராஜன் எனப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணியராஜனும் அரசர்க்குரிய கலைகள் பலவற்றையும் கற்றுப் பின்பு அரசுரிமை பெற்றுப் பூமியை ஆளத்தொடங்கினன். அது முதல் மழை பொய்யாத பெய்தது. மண்னும் மரமும் வளம்பல தந்தன. உயிர்கள் நோயின்றிச் சுகமுற்றன.

இவ்வாறு ஆபுத்திரன், புண்ணிய ராஜன் என்னும் பெயருடன் சாவக நாட்டில் அரசு செலுத்திக்கொண்டிருக்கும் நாளில், சோழவள நாட்டிலே காவேரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமுகத்துறையிலேயுள்ள சோழரது ராஜதானியாகிய காவிரிப்பூம்பட்டினத்திலே கோவலன் என்னும் வணிகர் குலதிலகனுக்கு, மாதவி யென்னும் நாடகக் கணிகை வயிற்றிற் பிறந்த 'மணிமேகலை’ என்னும் கன்னிகை, தன் தந்தையாகிய கோவலன் மதுரையில் பாண்-டியராஜனல் கொலையுண்டிறந்த செய்திகேட்டு, மிக வருந்தினாள். அவ்வருத்தத்தை ஒரு வகையாக மாற்ற நினைத்த அவள் தாய் மாதவி, மணிமேகலையை நோக்கி, "நீ தொடுக்கும் பூங்கண்ணி கண்ணிர்பட்டமையான் கடவுள் பூஜைக்கு ஆகாது; ஆகையால் சோலைக்குச் சென்று புதுமலர் கொணர்ந்து வேறு மாலை தொடுப்பாயாக" என்று கூறினுள். கூறவும் அங்ஙனமே மணிமேகலை சுதமதி யென்னும் தோழியோடு மலர் பறிப்பதற்கு உபவனம் என்னும் சோலைக்குச் சென்றாள். முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகர்த்தரசன் கிள்ளிவளவன் புத்திரன் உதயகுமாரன் என்பான் இவள் சோலைக்குச் செல்வதை அறிந்து, அவளைச் சோலையினின்று வலிதிற் கவர்ந்துவர இதுவே தக்க சமயம், எனக் கருதித் தேரேறி வந்தான். அங்ஙனம் அவன் வருவதையுணர்ந்த சுதமதி என்னும் தோழி, மணிமேகலையைப் பாதுகாப்பதற்கு அச்சோலையிலுள்ள ஒரு பளிங்கறையுள் புகச்செய்து, உதயகுமாரனுக்குப் பல நீதி மொழிகளைக் கூறி, மணிமேகலையைக் கவரவிடாது தடுத்தாள். அவன், "இவளை நான் இவள் பாட்டி சித்திராபதியால் அடையவுங்கூடும்” எனக் கூறிப் போய்விட்டான்.

பின்பு பளிங்கறையிலிருந்து வெளிவந்த மணிமேகலை, சுதமதியிடம் "உதயகுமாரன்மீது எனக்கு உண்டாகும் அன்புக்குக் காரணம் என்ன?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கோவலனது பழைய குலதெய்வமாகிய மணிமேகலாதெய்வம், தன்னிடத்தில் பக்திபூண்டிருந்தவனகிய கோவலன் மகள் மணிமேகலைக்கு உதயகுமாரன் மீது செல்லும் மனத்தைத் தடுத்து, அவளைப் பெளத்த சமயவழியிற் செலுத்தி, நற்கதிபெறச் செய்யக் கருதி, அவர்கள் அறிந்த ஒரு மடந்தை வேடங்கொண்டு அங்கு வந்தது. வந்து, அவர்களை நோக்கி "நீங்கள் இங்கிருந்தால் மீளவும் உதயகுமாரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும்; ஆகையால் முனிவர்கள் வசிக்கும் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்’’ என்று கூறி, அவர்களை அடுத்துள்ள சக்கரவாளக் கோட்டம் என்னும் இடத்திற்குச் செல்லும்படி செய்தது. அன்றிரவில் சுதமதியும் மணிமேகலையும் அங்கு தூங்கும்போது மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மாத்திரம் மயக்கித் தழுவி எடுத்துக் கொண்டு, ஆகாயவழியே முப்பது யோசனை தூரம் தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணிபல்லவம் என்னும் தீவில் வைத்துவிட்டுச் சக்கரவாளக் கோட்டத்துக்குத் திரும்பி வந்து, சுதமதியைத் துயிலெழுப்பித் தான் மணிமேகலையைத் தூக்கிச் சென்றதையும், அவள் பூர்வஜென்ம உணர்ச்சிபெற்று இன்றைக்கு ஏழாவது நாளிலே வருவாள் என்பதையும் சொல்லிப்போனது.

அப்பால் சுதமதி நித்திரை தெளிந்து, மணிமேகலையைக் காணாது வருந்திப் புலம்பிப் பொழுது புலர்ந்தபின் வருத்தத்தோடு நகரம் புகுந்து, மாதவியை அடைந்து நிகழ்ந்தவற்றைக்கூறி, இருவரும் மணியிழந்த நாகம்போல் துன்பத்துள் மூழ்கியிருந்தார்கள்,

இவர்கள் இங்ஙனம் வருந்திக்கொண்டிருக்க, மணி பல்லவத்தில் கடலருகே மணலில் துயின்ற மணிமேகலை, கண்விழித்துச் சுதமதியைக் காணப்பெறாது, இடமும் தோற்றங்களும் வேறாயிருப்பதை அறிந்து திகைத்தாள். சுதமதியை அத்தீவத்துப் பலவிடங்களிலும் தேடினாள்; தேடியும் அவளை அடையப்பெறாமையால், பல சொல்லிப் பிரலாபிக்கின்றவள், மதுரையில் கொலையுண்டிறந்த தன் தங்தை கோவலனை நினைந்து, புலம்பிக்கொண்டிருந்தாள். அங்ஙனம் புலம்பிக்கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பெற்றதும் பழம்பிறப்பை உணர்த்துவதுமான புத்தபீடிகை அவள் கண்ணுக்குத் தோன்றியது. தோன்றவும் மணிமேகலை ஆச்சரியங்கொண்டு பரவசமாகிக் கரங்கள் தலைமேற்குவிய, ஆநந்தக்கண்ணிர் சொரிந்து, பீடிகையை மும்முறை வலம்வந்து தொழுது, தன் பழம் பிறப்பு நிகழ்ச்சிகளையும் தெய்வம் தன்னை அங்கு தூக்கிக் கொண்டு வந்ததையும் உணர்ந்து, அத்தெய்வத்தின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொது மணிமேகலா தெய்வம், மணிமேகலையின் பக்குவத்தை அறிந்து, ஆகாயத்தினின்றும் இறங்கிவந்து, அவளுக்கு முற்பிறப்பில் கண்வனாயிருந்த இராகுலன் வரலாற்றையும் அவனே இப்போது உதயகுமாரனாய்ப் பிறந்திருக்கிறான் என்பதையும் கூறிப் பின்பு ஆகாயவழியே சஞ்சரிக்கச் செய்வதும், உணவின்றி யிருக்கச்செய்வதும், வேற்று வடிவம் அளிப்பதுமாகிய மந்திரங்கள் மூன்றை அவளுக்கு உபதேசித்து விட்டுச் சென்றது.

அப்பால் மணிமேகலை அத்தீவிலுள்ள மணற்குன்றுகளையும், பொய்கைகளையும், பூஞ்சோலைகளையும் பார்த்துக்கொண்டே உலாவிவருகையில் பெண் ஒருத்தி எதிர்ப்பட்டாள். எதிர்ப்பட்டவள், மணிமேகலையை நோக்கி, "மிக்க துயரத்தோடு தனியே திரியும் நீ யார்"? என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை தன்னுடைய சென்ற பிறப்பின் செய்திகளையும், இப்பிறப்பின் வரலாற்றையும் கூறி, 'உன் வரலாறு யாது’ எனக்கேட்டாள். அவள் "இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்திலே மிகவுயர்ந்து விளங்கும் சமந்தகூட மலையின் உச்சியிலேயுள்ள புத்ததேவரது பாதபங்கயங்களைத் தரிசித்துவிட்டு இத்தீ-விற்கு முன்னுெரு காலத்தில் வந்தேன்; அதுமுதல் இந்திரன் கட்டளையால் இத்தரும பீடிகையைக் காத்துக்கொண்டு இங்கிருக்கின்றேன்; என் பெயர் தீவதிலகை" என்று தன் வரலாறுகூறிப் புத்தபீடிகையின் மகத்துவத்தையும் அதனைத் தரிசித்து மணிமேகலை பழம்பிறப்புணர்ந்ததையும் புகழ்ந்துகூறினாள்.

கூறியவள், பின்பு ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் முன்விட்ட அக்ஷயயபாத்திரத்தை மணிமேகலையின் கையில் சேர்க்க எண்ணி, "இப்பீடிகைக்கு முன்னே மாமலர்க் குவளையும் நெய்தல் பூக்களும் மிகுந்து, கோமுகி என்னும் பொய்கை ஒன்றுள்ளது; அப்பொய்கையுள் ஒரு அமுதசுரபி யென்னும் அக்ஷயபாத்திரம் அமிழ்ந்திக் கிடக்கின்றது; அது ஒவ்வொரு வருடத்திலும் புத்ததேவர் அவதார காலமாகிய வைகாசசுத்த பூர்ணமை நாள்தோறும் மேலே வந்து தோன்றாநிற்கும்; அந்தநாள் இந்நாளேயாம்; அது தோன்றும் வேளையும் இதுவே; இப்போது அப்பாத்திரம் அருள்.அறம் பூண்ட உனது கரத்தில் வருமென்று கருதுகின்றேன்; அதில் எடுக்கும் அன்னம் எடுக்க எடுக்க மேன்மேலும் வளர்ந்து கொண்டே வரும்; அதன் வரலாற்றைப் பின்பு புகார் நகரத்த அறவணவடிகளிடம் கேட்டுணர்வாயாக" என்று மணிமேகலைக்குச் சொன்னாள்.

இவற்றைக்கேட்ட மணிமேகலை அதனே விரைந்து பெறுவதற்கு விரும்பிப் புத்தபீடிகையை வணங்கிக் கோமுகிப் பொய்கையை அடைந்து, வலமாக வந்து நின்றாள்; அவ்வளவில், அப்பாத்திரம் மணிமேகலை கையை அடைந்தது. உடனே அவள் அளவுகடந்த மகிழ்ச்சியடைந்து, புத்ததேவாது திருவடிகளைப் பலவாறு புகழ்ந்து,