ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்/3
துதித்து நின்றாள். இங்ஙனம் நின்ற மணிமேகலைக்குத் தீவதிலகை, உயிர்களுடைய பசித்துன்பத்தையும், அதனை நீக்குவோருடைய பெருமையையும் சொல்லப் புகுந்து, "பசியென்னும் பாவி, மக்களுடைய குடிப்பிறப்பின் பெருமையை அழிக்கும்; பலவிதச் சிறப்புக்களையும் நீக்கும்; ஆதாரமாகக் கொண்ட கல்வியாகிய தெப்பத்தையும் கை விடச்செய்யும்; நாணத்தைக் களையும்; அழகைக் கெடுக்கும்; மனைவி மக்களோடு அந்நியன் வீட்டுவாசலில் கொண்டு போய்நிறுத்தும். இப்படிப்பட்ட கொடிய பசியைத் தீர்ப் போரது புகழை அளவிட்டுச் சொல்ல முடியாது. செல்வ முடையோர்க்கு ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவது, அவர்களிடமிருந்து மற்றொரு உதவியை எதிர்பார்ப்பதாக முடியுமாதலின், அது தருமத்தை விலைக்கு விற்பதாகும். ஏழைகளுடைய பசியை நீக்கிக் காக்கின்றவர்களே நல்ல வாழ்க்கை யுடையவர்களாவார்; பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்களை, அவர்களுக்கு உயிரைக் கொடுப்பவர்களென்றே சொல்லலாம்; ஆதலால், பசியைத் தீர்த்து, உயிரைக் கொடுப்பதாகிய அறத்தைச் செய்வாய்” என்று கூறினாள்.
இதனைக் கேட்ட மணிமேகலை, "குழந்தையின் முகத்தைக்கண்டு பால்சுரந்தளிக்கும் தாய்போல், ஏழைகளது முகத்தைக்கண்டு இரங்கி இப்பாத்திரம், மேன்மேலும் அவர்களுக்கு அமுதசுரங்களிக்கும் அற்புதத்தைக் கானும் விருப்புடையேன்” என்றுகூறித் தீவதிலகை யோடு சிறிது நேரம் அளவளாவியிருக்து, அவளைப் பணிந்து விடைபெற்று, புத்த பீடிகையைத் துதித்து ஆகாயகமன மந்திரத்தை ஜெபித்து, மேலெழுந்து ஆகாய வழியாகப் போய்ப் புகார் நகரத்தை அடைந்து தன் வரு-
2 -கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாதவி சுதமதிகளைக் கண்டாள். அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுக்கு, முற்பிறப்பைத் தான் அறிந்தபடியே உணர்த்தி, "இது ஆபுத்திரனது திருக்கரத்திலிருந்த அமுதசுரபி, இதனைத் தொழுமின்” என்று அக்ஷய பாத்திரத்தைச் சுட்டிக் காட்டித் தொழும்படி செய்தாள். பின்னர் அறவணவடிகளை அடைந்து தவவழியைப் பெறும்பொருட்டு மாதவி சுதமதிளை அழைத்துக்கொண்டு அவரிருக்குமிடத்தை விசாரித்தறிந்து சென்று அவரைத் தரிசித்துப் பணிந்தாள். பின்பு, தான் உவவனஞ் சென்றது முதல், மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையைத் தரிசித்துப் பழம் பிறப்புணர்ந்து அமுதசுரபியைப் பெற்றது வரையுமுள்ள நிழ்ச்சிகளைக் கூறித், தனக்குத் தரும உபதேசம் செய்து ஆபுத்திரன் வரலாற்றையும் தெரிவிக்கும்படி வணங்கிக் கேட்டாள். அதற்கு அம்முனிவன் மகிழ்ந்து, "சிலநாள் சென்று உனக்குத் தருமோபதேசம் செய்வேன்; நீ உயிர் மருந்து போன்றதாகிய இவ்வமுதசுரபியைக் கொண்டு பசிப்பிணியை உலகில் ஒழிப்பாயாக" என்று கூறிப் பின்பு மணிமேகலை விருப்பப்படி ஆபுத்திரனது வரலாற்றைக் கூறத்தொடங்கி, அவன் பிறந்ததும், வளர்ந்ததும், அமுதசுரபி பெற்றதும், மணிபல்லவத்தில் இறந்ததும், பின் சாவககாட்டில் புண்ணியராஜனாய் அரசு செய்வதுமாகிய வரலாறு முழுதையும் மகிழ்வுடன் அவளுக்கு விரித்துக் கூறினார்.
பின்னரும் அறவணவடிகள் மணிமேகலையைப் பார்த்து, "காவேரி நதி மாறாது நீர் பெருகி நாட்டை வளமுண்டாகச் செய்தும் யாது காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்துகின்றன. இந்த அமுதசுரபியை, நீ இனிச்சும்மா வைத்திருத்தல் தகுதியன்று” என்று சொன்னார். உடனே மணிமேகலை பிக்குணிக் (சந்நியாசினி) கோலம் பூண்டு, பிச்சைப் பாத்திரத்தைக் கையிலேந்திக்கொண்டு, கண்டோர் யாவரும், ஆச்சரியமும், துக்கமும் கொள்ளும்படி வீதியை அடைந்தாள்.
அடைந்த மணிமேகலை, “முதல் முதல் கற்புடைய மாதர் இடும் பிச்சையையே ஏற்றுக்கொள்ளுதல் தகுதி” என்று கருதி, அந்நிய நாட்டுக்குச் சென்றிருந்த தன் கணவன், 'இறந்து போனான்' என்று பிறர் தவறாகக்கூறிய செய்தியைக் கேட்ட அளவிலே, தீக்குழியில் பாய்ந்த தீயால் சுடப்படாதவளாய் எழுந்த ஆதிரை என்பவள் வீட்டில் புகுந்து பிச்சையிடப்பெற்றாள். பிச்சைப் பாத்திரத்தில் சோறு எடுக்க எடுக்கக் குறையாது வளர்ந்து, வந்தோரது பசியைப் போக்கி விளங்கிற்று. விருச்சிகன் என்னும் முனிவர் உண்ணுதற்கு வைத்திருந்த காவல் கனியை மிதித்துக் கெடுத்த குற்றத்திற்காக அவரால் சபிக்கப்பட்டுத் தீராப் பசியாகிய யானைத்தீ என்னும் நோயை அடைந்த காயசண்டிகையென்னும் வித்தியாதர மங்கையும் இப்பாத்திரத்திலிருந்து ஒரு பிடி அன்னம் வாங்கி உண்ட அளவில் நோய் நீங்கிச் சுகமுற்றாள். பின்னும் மணிமேகலை இப்பாத்திரத்தைக்கொண்டு பல விசேட நிகழ்ச்சிகளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்திவிட்டு, அமுதசுரபிக்குரியவனாகிய ஆபுத்திரனைக் கண்டு, புத்த பீடிகையைத் தரிசிக்கச்செய்து, அவனுக்கு அவனது பழம்பிறப்பை உணர்த்தி, நல்வழிப் படுத்தக் கருதினாள். அதனால் அவள், அறவணவடிகள், மாதவி, சுதமதி இவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆகாயவழியே சென்று, சாவக நாட்டில் புண்ணியராஜனது நகர்ப்புறத்தில் ஒரு சோலையை அடைந்து, அங்குள்ள ஒரு முனிவனை வணங்கி, "இந்நகரின் பெயர் யாது? இதனை ஆளும் மன்னவன் யார்"? என்று வினவினாள். அம்முனிவன், "இந்நகரின் நாமம் நாகபுரம் என்பது. இதனை ஆள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராஜன். இவன் பிறந்த நாள்தொட்டு இந்நாட்டில் மழைவளம் குறைந்ததில்லை. பூமியும் மரமும் பலபலன்களைச் சுரந்தளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாய் வாழ்கின்றன” என்று அவ்வரசன் பெருமை முதலியவற்றை அவளுக்கு விளங்க விரித்துக் கூறினான்.
இச்சமயத்தில் புண்ணியராஜன், தன் பட்டத்துத் தேவியோடு அச்சோலைக்கு வந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிபுங்கவரை வணங்கித் தருமோபதேசங் கேட்டு, அங்கிருந்தான், அவன், முனிவர் அருகிலிருக்கும் மணிமேகலையை நோக்கி, "ஒப்பற்ற பேரழகினள், கையிற் பிச்சைப்பாத்திர முடையவளாய் அறவுரை கேட்கின்றாள்; இவள் யார்?" என்று வினவினான். அதற்கு அருகே நின்ற சட்டையிட்ட பிரதானி, அரசனை வணங்கி, "இந் நாவலந் தீவில் இங்நங்கையை ஒப்பார் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளிவளவனுேடு நட்புச்செய்யக் கருதிக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு நான் தூது சென்றிருந்த காலத்தில் அங்கேயுள்ள அறவணவடிகள் என்பார், இவள் வரலாற்றை விளங்கக் கூறினர், என்று முன்னமே உரைத்திருந்தேனல்லவா? அவளே இவள்" என்று கூறினன். கூறலும் மணிமேகலை அரசனே நோக்கி, “அரசே! உன் கையிலிருந்த பிச்சைப் பாத்திரமே இது, இப்போது என்கையிற் புகுந்தது; செல்வக்களிப்பால் தெரியாது மயங்கினைபோலும், சென்ற பிறப்பையும், இப்பிறப்பையும் நீ அறிந்திலை; என் செய்தனை! மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையை வலங்கொண்டு தொழுதாலன்றி, உனது, பழம்பிறப்பின் செய்தியை நீ அறியாய்; ஆதலால், அரசே! அங்கே விரைந்து வருவாயாக’’ என்று சொல்லிவிட்டுத் தான் எழுந்து ஆகாயவழியேசென்று, சூரியன் அஸ்தமிக்கு முன்னரே மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுதாள். அது வழக்கம்போல் அவளது பழம்பிறப்பை அறிவித்தது. அதனைவியந்து அங்கே தங்கியிருந்தனள்.
புண்ணியராஜன், மணிமேகலை கூறிய செய்தியைக் கேட்ட அளவில் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இப்பிறப்பின் வரலாற்றையும் சென்ற பிறப்பின் வரலாற்றையும் அறிய வேண்டுமென்ற ஆசை தூண்டுதலால், அவன் அச்சோலையினின்றும் உடனே புறப்பட்டு நகரையடைந்து, தன்னை வளர்த்ததாயாகிய அமரசுந்தரியைக் கண்டு, தனது பிறப்பு வரலாற்றை உரைக்கும்படி கேட்டான். அவள் , அவன் வரலாறு முழுவதையும் கூறினாள். அதனைக் கேட்டு அவன் வருத்தமுற்று, அரசாட்சியில் வெறுப்புக்கொண்டு, தான் துறவியாய் மணிபல்லவம் செல்வதற்குத் துணிந்து, தன் கருத்தை வெளியிட்டான். அதனேக்கேட்ட சனமித்திரன் என்னும் மந்திரி, புண்ணியராஜனை வணங்கி, "அரசே! வாழ்க; என் சொற்களைக் கேட்டருள வேண்டும்; உன்னை நமது அரசன் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் அதனால் வறுமை மிகுந்தது; உயிர்களெல்லாம் பசியால் வருந்தின; அப்போது நீ கோடைமழை தோன்றினாற்போல் தோன்றினை. அங்ஙணம் நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின; உயிர்கள் பசித்துன்ப முதலான துன்பங்களில்லாமல் வாழ்வனவாயின; நீ இச்சமயம் இந்நாட்டை விட்டு நீங்குவையாயின் எல்லா உயிர்களும் தாயைப்பிரிந்த குழந்தைகள்போல் கூவி அழாநிற்கும். இத்தன்மையுடைய இவ்வுலகத்தை, நீ காவாமல் உனது நலத்தையே கருதிச் செல்லுதல் தகுதியன்று; எந்த நன்மையையும் தன்னுயிர்க் கென்று நினையாது பிற உயிர்களுக்கேயென்று கருதி உழைக்கும் புத்ததேவனது அறம் இஃதல்லவே" என்று கூறினான். அரசன் கேட்டு, "மணிபல்லவத்தை வலங்கொண்டு வணங்கவேண்டுமென்று என்னுள்ளத்தில் எழுந்த வரம்பு கடந்த ஆசையைத் தணித்தல் அரிது; ஆதலால் நான் அங்கு சென்று வருவேன்; யான் வருவதற்குப் பிடிக்கும் ஒருமாத காலம் வரை, இந்நரைப் பாதுகாப்பது உனது கடமையாகும்” என்று மந்திரியை நோக்கிக் கூறி விட்டுப் புறப்பட்டு, வழிக்கொண்டு கடற்கரையை அடைந்து, கப்பலேறி, மணிபல்லவத்தை அடைந்தான்.
மணிமேகலை புண்ணியராசன் கப்பல் வருவதை அறிந்து எதிர்வந்து அழைத்துச் சென்று, அவைேடு அத்தீவை வலமாகச் சுற்றிப் புத்தபீடிகையருகில் வந்து, பழம் பிறப்பை அறிவிக்கும் தருமபீடிகை இது என்று காட்டினாள்; அவ்வளவில் அரசன், அதனைத் தரிசித்து, அன்போடு வலம் வந்து துதித்தான். துதிக்கவே அப்பீடிகை, முன்பு அவனுக்கு அவன் ஆபுத்திறனாய்ப் பிறந்திருந்த செய்திமுழுவதையும் நன்றாகத் தெரிவித்தது. அவன் அதனைத் தெரிந்து வியப்படைந்து, தனக்கு முற்பிறப்பில் ஒருநாள் இரவில் அமுதசுரபியென்னும் அக்ஷயபாத்திரத்தை அளித்த சிந்தாதேவியைச் சிந்தித்து, 'அக்ஷயபாத்திரத்தை என் கையில் கொடுத்து எனக்குப் பெரும்புண்ணியத்தை அளித்த தேவியே! உனது திருவடிகளை நான் பிறக்கும் பிறவிகள் தோறும் மறவாது துதித்து வணங்குவேன்' என்று ஏத்தித் துதித்தான். பின்னர் அவன், மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்குத் திசையிற் சென்று, கோமுகிப் பொய்கைக் கரையில் ஒரு புன்னைமரத்து நிழலிலே இருந்தான். இருக்குங்கால், அவர்கள் வருகையை அறிந்த அத்தீவின் காவல் தெய்வமாகிய தீவதிலகை, அங்குவந்து அவர்களைக் கண்டு, ஆபுத்திரனை நோக்கிச் சில சொல்லத்தொடங்கி, "அக்காலத்தில் இத்தீவில் உன்னை மறந்து தனியே விட்டுவிட்டுக் கப்பலேறிச் சென்ற ஒன்பது செட்டிகள், பின்பு உன்னைக் காணாது வருந்தி இத்தீவிற்கு மீண்டுவந்து, உன்னைத்தேடி, நீ இறந்துபோன வரலாற்றைத் தெரிந்து தாங்களும் உடனே உண்ணா விரதம்பூண்டு உயிர் துறந்தார்கள்; அவர்களுடைய, உடல் எலும்புகள் இவை; காண்பாயாக. அச்செட்டிகளது உபகாரத்தைப் பெற்று உடன்வந்தோர் சிலர் அவர்கள் இறந்தது தெரிந்து, பிரிவாற்றாது தாங்களும் உயிர் துறந்தனர்; அவர்களுடைய உடல் எலும்புகள் இவை, பார். உனக்கு அரச பதவியை அளித்த அன்புமயமான உனது பழைய உடம்பின் எலும்பு, இப்புன்னை மரத்து நிழலில் அலைகள் குவித்த மணலால் மூடப்பட்டிருப்பதையும் பார்ப்பாயாக, இங்ஙனம் தன்னுயிரையும், தனக்கிரங்கிய பிற உயிர்களையும் கொன்ற கொலைஞனுகிய நீயன்றோ, இப்போது சாவகநாட்டுப் புண்ணியராசனாய் விளங்குகின்றாய்; இஃது என்ன விந்தை"? என்று ஆபுத்திரனைப் பழிப்பவள்போல் புகழ்ந்து கூறினாள். ஆபுத்திரன், மணலைத் தோண்டித் தன்னுடைய பழைய உடம்பின் எலும்புகளைக் கண்டு ஆச்சரியமும், துக்கமும்கொண்டு மயங்கி நின்றான். ஆபுத்திரனை நோக்கி இச்செய்திகளை உரைத்த தீவதிலகை, பின்பு மணிமேகலையை நோக்கிக் கூறத் தொடங்கினாள்:- "மணிமேகலாய்! உனது பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது; அதற்குக் காரணத்-தைக் கேட்பாயாக. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப் பூம்பட்டினத்து அரசன் கிள்ளிவளவன், ஒருநாள் சோலையில், நாக நாட்டரசனாகிய வளைவனன் மகள் பீலிவளை என்பாளை எதிர்ப்பட்டுக் காதலித்துக் காந்தருவ மணம் செய்து, அவளுடன் அச்சோலையில் ஒரு மாதம் வரை வாழ்ந்திருந்தனன்; பீலிவளை, ஒருநாள் அரசனிடம் சொல்லாது தன்னிருப்பிடம் சென்று விட்டாள். அரசன் வருந்தி, அவளை எங்கும் தேடியும் காணாமல், முக்காலம் உணர்ந்த ஒரு சாரணரைக் கண்டு வினவினான். சாரணர், அவளே இப்போது நான் கண்டிலேனாயினும் அவளை இன்னாளென்று முன்னரே அறிவேன்; அவள் இனி உன்னிடம் வரமாட்டாள்; உனக்கு அவள் வயிற்றிற் பிறக்கும் மகனே உன்னிடம் வருவான்; நீ இதுபற்றி வருத்தாதே; இவ் வருத்த மிகுதியால் இந்நகரத்தில் தொன்று தொட்டு நடத்திவரும் இந்திர விழாவை நடத்துதற்கு மறந்து விடாதே; இந்திர விழாச் செய்யாது தவறுமாயின் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தால் உன் நகரத்தைக் கடல் வந்தழிப்பது தப்பாது எனச் சொல்லிப் போயினர்; அந்நாள் முதல் காவிரிப்பூம்பட்டினத்து மாந்தர்கள், எந்நாளில் இந்நகருக்கு அழிவு வருமோ என்று கலக்கமுற்றிருந்தார்கள். இஃது இங்ஙனமாக; அரசனைவிட்டுப் பிரிந்த பீலிவளை, ஒரு ஆண் குழந்தையைப் பெற்று, அக்குழந்தையோடு சில நாளைக்குமுன் இத்தீவிற்கு வந்து, புத்தபீடிகையை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி யென்னும் வணிகனது கப்பலொன்று இத்தீவின் துறையில் தங்கியது; பீலிவளை உடனே அவனிடம் சென்று ‘இவன் சோழன் மகன்; இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடன்; என்று குழந்தையைச் செட்டிகையிற் கொடுத்தாள்; அவனும் மகிழ்ச்சியுடன் குழந்தையை தாங்கிக்கொண்டு, கப்பலைச் செலுத்தி வருங்கால், இடை வழியில் கப்பல் உடைந்து போயிற்று; பலர் மாண்டனர்; தப்பிப்பிழைத்தோர் சிலர், காவிரிப்பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை, செட்டியிடம் ஒப்புவித்ததும், கப்பல் உடைந்ததுமான செய்தியைச் சொல்லினர் அரசன் மிக்க வருத்தமுற்றுக் கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித்திரிந்தான்; இங்ஙனம் தேடித்திரிந்தமையால், இந்திரவிழாச் செய்யவேண்டிய நாளில் செய்யப்படாமல் போயிற்று; போகவே மணிமேகலா தெய்வம் சபித்தமையால், கடல் பொங்கிவந்து புகார் நகரமாகிய நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக்கிவிட்டது; அரசன் முதலானவர்கள் வேறிடம் சென்றனர்; அறவணவடிகளோடு உனது தாய் மாதவியும், சுதமதியும் யாதொரு வருத்தமுமின்றிச் சேரனது நகரமாகிய வஞ்சிமாநகரம் புகுத்தனர்; இனி நீயும் வஞ்சி மாநகரம் செல்வாயாக’ என் சொல்லிப் போய்விட்டாள்.
இவற்றையெல்லாம் கேட்டு வஞ்சிமாநகரம் செல்லக் கருதிய மணிமேகலை, பழைய உடம்பின் எலும்பைக் கண்டு மயங்கிய ஆபுத்திரனுக்குச் சிறந்த அறநெறியை உபதேசித்துத் தேற்றி, அவனை அவனது நகரத்துக்குச் செல்லும்படி சொல்லிவிட்டுத் தான் ஆகாய கமனமந்திரத்தை ஜெபித்துக்கொண்டு மேலெழுத்து சென்றாள். சென்றவள், வஞ்சிமாநகரத்தின் பக்கத்தில் இறங்கித் தன் பெரிய தாயாகிய கண்ணகிதேவியின் பத்தினிக் கோயிலை அடைந்து,வணங்கித் தொழுது வஞ்சிமாநகருள் புகுந்தாள். அங்கு பல மதவாதிகளோடு பல மதங்களைப்பற்றி விசாரித்தறிந்து கொண்டு, தன் தாய் மாதவியும்,சுதமதியும் அறவணவடிகளும் காஞ்சிமா நகரம் சென்றிருப்பதைத் தெரிந்து, அங்கு சென்று, அந்நகரத்தின் பஞ்சத்தை அக்ஷயபாத்திரத்தால் நீக்கிவிட்டு அறவணவடிகளைக் கண்டாள். அவர் அவளுக்கு பௌத்த தருமத்தை உபதேசித்தார்.
அவள் அவ்வுபதேசங்களைக் கேட்டுப் "பிறவித்துன்பம் ஒழிவதாக" என்று அந்நகரிலேயே தவம் செய்து கொண்டிருந்தாள். புண்ணியராசனாகிய ஆபுத்திரன் மணிபல்லவத்தினின்றும் மரக்கலம் ஏறிப் புறப்பட்டுச் சாவகநாடு (Java Island) சேர்ந்து, தன் நகரம் புகுந்து, சிலநாள் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்து, பழம்பிறப்பின் நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணி, மணிமேகலையின் உபதேசப்படி துறவற புகுந்த, பின்னர் நிருவாணம் (முத்தி) அடைந்தான்.
- ஆபுத்திரனா யவதரித்த அன்பினன்பின்
- கோபுத் திரனாய்க் குலவியதும் - ஆபத்தில்
- புண்ணியத்தின் நற்பயனுற் போந்ததே மாநிலத்தீர்
- எண்ணுமின் செய்மினற மே,