ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to searchஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்

மனிதன் எந்தச் சிறு காரியமானாலும் திட்டமிட்டே செய்வான். திட்டமிடாமல் செய்யும் காரியம் எதுவும் திருப்தியாய் முடிவதில்லை. முன்கூட்டிச் சிந்தியாமல் செய்தால் வெற்றி பெற முடியாது. தோல்வியே உண்டாகும். அதற்காகவே தமிழ் மக்களுக்குத் தனிப்பெரு வழிகாட்டியாகவுள்ள வள்ளுவர்,

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

என்று எப்போதும் எச்சரித்து வருகின்றார்.

ஆனால் மனிதன் நல்வாழ்விற்காகச் செய்யும் காரியங்களில் எல்லாம் அஸ்திவாரமாகவுள்ள காரியம் ஒன்று உள்ளது. மனிதன் அல்லும் பகலும் உழைப்ப தெல்லாம் தன்னுடைய மனைவியும் மக்களும் சுகமாக வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் அதற்குரிய வழியை மட்டும் ஆராய்ந்து காண்பதில்லை. ஆராய்ந்து கண்டாலும் அதை மேற்கொள்வதில்லை. பிறர் ஆராய்ந்து சொன்னாலும் அதைக் கவனிப்பதில்லை.

மனிதன் மணந்து மக்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவே விரும்புகின்றான். ஆனால் எவனும் ஒரு பெண்ணை மனைவியாக மணக்கும்போதும் மணந்த பின்னரும் அவனும் அவனுடைய மனைவியும் “மணந்து கொண்டோம். மக்கள் பெறுவோம். ஆனால் எப்போது குழந்தை உண்டாக வேண்டும் ? ஒரு குழந்தை பெற்ற பின் எத்தனை ஆண்டுகள் கழித்து  அடுத்த குழந்தை உண்டாகவேண்டும்? மொத்தம் எத்தனை குழந்தைகள் பெறவேண்டும் ? இந்தக் காரியங்கள் வாழ்க்கையை இன்பமாகச் செய்யவேண்டுமானால், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்கள் எவை ? என்பன போன்ற விஷயங்களைப் பற்றிக் கனவில்கூடச் சிந்திப்பதில்லை.

ஆனால் இந்த விஷயங்களை அறிந்து அவ்வறிவின் படி நடக்கும் தம்பதிகளே சந்தோஷமாக வாழ்வார்கள். அதை எண்ணி நான் 18 ஆண்டுகட்கு முன்னர் "விவாகமானவர்கட்கு ஒரு யோசனை ” என்ற 'பெயருடன் ஒரு நூலை எழுதினேன். (சென்னை, காந்தி நிலையம் வெளியீடு). அதற்குச் சென்னை ஸ்டான்லி வைத்தியக் கல்லூரியில் தலைவராயிருந்த டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி முகவுரை எழுதினார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அந்த நூலைப் பரிசீலனை செய்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள். அது இப்போது 12-ஆம் பதிப்பாகத் தமிழ் மக்களிடையே உலவி வருகின்றது.

"இப்போது இரண்டு ஆண்டுகளாக விவாகமானவர்கட்கும் விவாகமாகாதவர்க்குமாகக் கீழ்க்கண்ட "மூன்று யோசனைகளைக் கூறி வருகின்றேன் :--

(1) உடல் நலமாக இருக்க விரும்பினால் ஆண், பெண் இருபாலாரும் உடற்பயிற்சி செய்யவேண்டும். நாடோறும் 10 நிமிஷம் ஒழுங்காகச் செய்தால் போதும். தொந்தி உண்டாகாது. உண்டாகியிருந்தால் மறைந்து விடும், நோய் வராது. பெண்களுக்குப் பிரசவத்தில் கஷ்டமிராது.

(2) குழந்தைகளை நன்றாக வளர்க்க விரும்பினால் இரண்டு மூன்றுக்கு அதிகமாகப் பெறலாகாது. அதற்காகக் கணவராவது மனைவியாவது ஆப்பரேஷன் செய்துகொள்ள வேண்டும்.  (3) இக்காலத்தில் உயிர்க்கு ஆபத்து எப்போது நேருமென்று தெரியாதாகையால் குடும்பநலனைப் பாதுகாப்பதற்காகவும், இக்காலத்தில் சேமித்து வைக்க முடியாத அளவு பணச் செலவு அதிகமாவதால் முதுமைக் காலத்தில் கஷ்டப்படாதிருப்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் இன்ஷூர் செய்வது அவசியம்.

இந்த மூன்று யோசனைகளையும் கேட்பவர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி யோசனை பற்றியும் இன்ஷூரன்ஸ் யோசனை பற்றியும் சந்தேகம் எதுவும் கேட்பதில்லை. ஆப்பரேஷன் யோசனை பற்றியே கேட்கிறார்கள்.

ஆப்பரேஷன் என்பது உடலில் அறுப்பதாயிருப்பதால் யாரும் அஞ்சக்கூடியதுதான். ஆப்பரேஷன் செய்யும்படி கூறுகிறீர்களே, அதனால் அபாயம் ஒன்றும் ஏற்படாதா என்று கேட்கிறார்கள். இந்த ஆப்பரேஷன் மிகவும் சிறியது, மயக்க மருந்து எதுவும் கொடுக்கவேண்டியதில்லை. ஏதேனும் சொத்தைப் பல்லைப் பிடுங்கும்போது நோவு தெரியாமலிருப்பதற்காக அந்த இடத்தில் சிறிது மருந்தை ஊசி குத்தி வைப்பது போல் ஊசி குத்தி வைத்துக்கொண்டு அறுப்பார்கள். 15 நிமிஷ நேரத்தில் ஆப்பரேஷன் செய்து கட்டுக் கட்டி விடுவார்கள். அப்போதும் நோவு தெரியாது.

ஆப்பரேஷன் நடந்தபின் படுத்திருக்க வேண்டியதில்லை. மெதுவாக நடந்து வந்து வண்டியில் ஏறி வீட்டிற்கு வரலாம். வீட்டிலும் மெதுவாக நடக்கலாம். பாரங்களைத் தூக்கக்கூடாது. மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வுகொள்ள வேண்டும். பத்தாம் நாள் மருத்துவர் நூலை உருவி விடுவார். அவ்வளவுதான். ஆதலால் இந்த' ஆப்பரேஷன் செய்வதில் எவ்வித அபாயமுமில்லை ; கஷ்டமுமில்லை. நண்பர்கள் இதைக் கேட்டவுடன், "அபாயமில்லை; குழந்தையும் உண்டாகாது. ஆனால் நாங்கள் இளைஞர்கள். காதல் இன்பத்தை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட முடியுமா? என்று கேட்கிறார்கள். சரியான கேள்விதான். எல்லோரும் துறவிகளாக ஆகிவிட முடியாது. ஆனால் நண்பர்கட்கு இந்த அச்சம்

வேண்டியதில்லை. ஆப்பரேஷன் செய்தபோதிலும் இன்பம் துய்க்கலாம். அதில் எவ்வித மாறுதலும் உண்டா

காது. குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் கிடையாது.

குழந்தை எப்படி உண்டாகிறது ? ஆண்மகனுடைய விதையில் பெண்ணிடமுண்டாகும் முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாக்கும் விந்துயிர்கள் உண்டாகின்றன. அவை ஒரு மெல்லிய குழாய் வழியாகச் சென்று விந்துப் பை என்ற பையில் சேர்கின்றது. கலவி சமயத்தில் அவை வேறு சில சுரப்பு நீர்களுடன் சேர்ந்து கோசம் (ஆண் குறி) வழியாக வெளியேறுகின்றன. அவை பெண்ணின் கருப்பை வழியாகச் சினைக் குழாய்க்குள் நுழைகின்றன. சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் அவ்வுயிர்களுள் ஒன்று கலந்துவிடுகிறது. அதைத்தான் கரு உண்டாவதாகச் சொல்லுகிறோம்.

விந்து விந்துப்பைக்குச் செல்லும் குழாயை விந்துக் குழாய் (Vas) என்பர். ஆப்பரேஷன் செய்யும்போது டாக்டர் அந்தக் குழாயின் நடுப்பாகத்தில் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு வெட்டுப்பட்ட இருமுனைகளை இறுகக் கட்டி விடுகிறார். அதனால் இந்த ஆப்பரேஷன் விந்துக் குழாய் வெட்டல் (Vasectomy) எனப் படும்.

விந்துக் குழாயில் அரை அங்குலம் வெட்டி எடுத்து விடுவதால் விதையிலிருந்து விந்து விந்துப்பைக்குப் 'போய்க் கலவிச் சமயத்தில் குய்யம் (பெண் குறி) உள்ளே சென்று கரு உண்டாக்குவது தடைப்பட்டு விடுகின்றது.

விதையானது விந்துயிர்களை மட்டும் உண்டாக்குவதில்லை. அது விதை ஹார்மோன் என்னும் ஒருவித சுரப்பு நீரை உண்டாக்குகின்றது. அந்த நீர் உண்டாகாவிட்டால் விந்து உண்டானாலும் பயனில்லை. அந்த நீர்தான் ஆண்மை தருவது. ஆண்மை என்பது ஆண் குறி பெண் குறிக்குள் நுழையக்கூடிய அளவு கட்டியாகி நிற்பதாகும்.

விந்துக் குழாயை வெட்டிவிட்டால் விந்துயிர்கள் வெளிப்படா. விந்து நீர் சுரப்பது நிற்பதில்லை. அதனால் ஆப்பரேஷன் செய்துகொள்பவர்கள் முன்போலவே கலவி இன்பம் துய்ப்பார்கள். அதில் எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.

நான் இவ்விதம் விளக்கிச் சொன்னபோதிலும் சில நண்பர்களுக்கு அச்சம் விட்டு விலகுவதில்லை. இந்த ஆப்பரேஷன் செய்தால் மூளைக் கோளாறு ஏற்படுமாமே என்று கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம் சில டாக்டர்கள் தான்.

என்னுடைய நண்பர் ஒருவரிடம் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள டாக்டர் ஒருவரும், கோவையிலுள்ள டாக்டர் ஒருவரும் கூறியதுண்டு என்பதை அறிவேன்.

இவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் விந்துக் குழாய் வெட்டும் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள் என்று விளங்கவில்லை.

ஆனால் விஷயம் யாதெனில் மருத்துவ நிபுணர்கள் எல்லோரும் மூளைக்கோளாறு உண்டாகாது என்று மட்டும் கூறவில்லை. மனோசக்தி பெருகும் என்றே உலகப் பிரசித்தி பெற்ற அறுவை வைத்திய நிபுணர் சர். ஆர்பத்நெட் லேன், உலகப் புகழ் பெற்ற காம நூல் அறிஞர் ஹாவ்லக் எல்லிஸ் போன்றவர்கள் கூறுகிறார்கள். (இங்கிலாந்து எலிசபெத் இராணியின் மருத்துவர் ஹார்டர் பிரபு பதிப்பாசிரியராகவிருந்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் மருத்துவக் கலைக் களஞ் சியம் 11-ஆம் தொகுதி 579-580 பக்கங்கள் பார்க்க). உண்மையிலேயே மனிதன் கலை, இசை, இலக்கியம் போன்ற படைப்புத் தொழில் செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிப்பது விதையில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு நீரேயாகும். ஆதலால் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று கூறுவோர்க்கே மூளைக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே நண்பர்களே ! ஆப்பரேஷன் செய்வதால், அபாயம் எதுவும் உண்டாகாது. காதல் இன்பம் முன் போலவே துய்க்கலாம். ஆண்மை என்பது அணுவளவும் குறையாது. அறிவு கெட்டுப் போகாது. அறிவு சக்தி அதிகப்படவே செய்யும்.

குழந்தை மட்டும் பிறக்காது. மூன்று குழந்தைகள் போதும். அவர்களை அறிவறிந்த நன்மக்களாக வளர்க்கும் பெரும்பேற்றுடன் இன்பமாய் வாழுங்கள். அது உங்களுக்கும் நன்மை. உங்களைப் பெற்றெடுத்த நாட்டிற்கும் நன்மை.


குறிப்பு

(1) அரசாங்க மருத்துவ இல்லங்களில் இந்த ஆப்பரேஷனை இலவசமாகச் செய்கிறார்கள்.

(2) அரசாங்க ஊழியர்கள் செய்து கொண்டால் சம்பளத்துடன் ஏழு நாள் ரஜா பெறுவார்கள்.