ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/எந்த ஆப்பரேஷன் நல்லது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchஎந்த ஆப்பரேஷன் நல்லது?

நாடு நலம் பெறவும், நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் நலம்பெறவும் ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு மூன்று குழந்தைகட்கு அதிகமாகப் பெறலாகாது என்று அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அரசாங்கத்தாரும் அவ்விதமே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அப்படியானால் எல்லோரும் காதலின்பம் அனுபவிப்பதை விட்டுத் துறவிகளாக ஆகிவிட வேண்டுமோ, அது எல்லோர்க்கும் சாத்தியப்படுமோ ? என்று சிலர் கேட்கிறார்கள். இரண்டு மூன்று குழந்தைகள் போதும் என்று கூறுவோர் யாரையும் துறவுகொள்ளச் சொல்லவில்லை. காதலின்பத்தை விட்டுவிடவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள்

காதல் காதல் காதல்-இல்லையாயின்
சாதல் சாதல் சாதல்

என்று பாரதியார் பாடியதை அறிவார்கள், அதைச் சரியென்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள்.

அவர்கள் காதலின்பம் வேண்டாம் என்று கூறவில்லை, அதிகக் குழந்தைகள் வேண்டாம் என்றே கூறுகிறார்கள். காதலின்பம் துய்த்தால் கருத்தரிக்குமே என்றால் காதலின்பம் துய்த்தாலும் கருத்தரியாமல் இருப்பதற்கான வழிகளை டாக்டர்கள் கண்டு பிடித்திருக்கிருர்கள். கணவனோ மனைவியோ ஒரு ஆப்பரேஷ்ன் செய்துகொண்டால் கருத்தரியாது என்று கூறுகிறார்கள்.

டாக்டர்கள் கூறும் இந்த ஆப்பரேஷன்கள் சிறியவை, எளிதில் செய்யக் கூடியவை, எவ்வித அபாய மும் இல்லாதவை, காதலின்பம் கடுகளவும் குறையாது. குழந்தை மட்டும் பிறக்காது. ஆப்பரேஷன் செய்து கொள்பவர்க்கு உடல்நலம் முன்னிலும் சிறந்ததாக இருக்கும். இந்த ஆப்பரேஷனை வெள்ளைக்கார நாடு களில் கிழவர்கள் பலமாக இருப்பதற்காகச் செய்து கொள்கிறார்கள்.

இத்துணைச் சிறந்த ஆப்பரேஷன்கள் யாவை என்று அறிவதற்குமுன் கருப்பம் எவ்வாறு உண்டாகின்றது என்று அறிந்துகொண்டால் நல்லது.

கருப்பம் உண்டாவதற்கு வேண்டிய விந்துயிர்கள் கணவனுடைய விதைகளில் உற்பத்தியாகின்றன. அவை மிக மெல்லிய விந்துக் குழாய்கள் வழியாகச் சென்று விந்துப் பைகளில் தங்குகின்றன. கலவி செய்யும்போது கணவனுடைய கோசத்தில் ஒரு. வழ வழப்பான விந்து நீர் சுரக்கும். விந்துப் பைகளிலுள்ள விந்துயிர்கள் அந்த விந்து நீரில் மிதந்து கோசத்தின் வழியாகக் குய்யத்தில் பாயும். பின் அவை கருப்பப் பை வழியாகச் சென்று சினைக்குழாயினுள் செல்லும்.

ஒவ்வொரு மாதமும் சினைப் பையிலிருந்து ஒரு முட்டை வெளியாகி சினைக் குழாய்க்கு வந்து சேரும். இந்த மாதம் வலது பையிலிருந்து வலது குழாய்க்கு வந்தால் அடுத்த மாதம் இடது பையிலிருந்து இடது குழாய்க்கு வந்து சேரும். விந்துயிர்கள் சினைக் குழாயில் நுழையும்போது அங்கு முட்டை இருக்குமாயின் அதனுடன் கலக்க முயலும். ஏதேனும் ஒரு விந்துயிர் முட்டையுடன் கலந்துவிடுமாயின் அதுவே கருவாகும். உடனே மற்ற உயிர்கள் இறந்துபோகும். கருவானது கருப்பப் பைக்கு வந்து தங்கி வளர்ந்து பத்து மாதங்கள் சென்றதும் குழந்தையாகப் பிறக்கும்.

ஆகவே குழந்தை உண்டாவதற்கு, கருப்பம் தரிப்ப தற்கு இரண்டு காரியங்கள் நடைபெறவேண்டும். 1. கோசத்தின் வழியாகக் குய்யத்துள் பாயும் விந்து,நீரில் விந்துயிர்கள் இருத்தல் வேண்டும். 2. சினைப் பையிலிருந்து முட்டை சினைக் குழாய்க்கு வந்து சேர வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் நிகழ்ந்தால்தான் விந்துயிர் முட்டையுடன் கலந்து கரு உண்டாகும். ஆதலால் கரு உண்டாகாதிருக்க வேண்டுமாயின் 1. விந்துயிர் குய்யத்துள் வந்து சேராதபடி தடுத்துவிடவேண்டும். அல்லது 2. முட்டை, சினைப் பையிலிருந்து சினைக் குழாய்க்கு வந்து சேராதபடி தடுத்துவிட வேண்டும்.

டாக்டர்கள் விந்துபிரைத் தடுப்பதற்காகக் கணவனுடைய விந்துக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். இந்த ஆப்பரேஷனை “விந்துக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த ஆப்பரேஷன் செய்தால் விதையில் உற்பத்தியாகும் விந்துயிர்கள் விந்துப் பைக்குச் செல்ல முடியாது. அதனால் அவை குய்யத்துக்குள் வந்து சேர வழியில்லை. விந்துயிர் குய்யத்துள் வராவிட்டால் கருப்பம் எப்படித் தரிக்க முடியும்? முடியாது.

 இதில் சினைக் குழாய் வெட்டியது தெரிகிறது.

டாக்டர்கள் முட்டையானது சினைக் குழாய்க்கு வருவதைத் தடுப்பதற்காக இரண்டு சினைக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்து விட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். அதனால் முட்டை சினைக் குழாய்க்கு வராது. விந்துயிர்கள் மட்டும் வந்து பயனில்லை. கருப்பம் தரிக்காது. இந்த ஆப்பரேஷனைச் 'சினைக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த இரண்டு ஆப்பரேஷன்களில் எதைச் செய்து கொண்டாலும் கருப்பம் உண்டாகாது, குழந்தை பிறக்காது. ஆனால் சிலர் என்னிடம் இரண்டு ஆப்பரேஷன் கள் கூறுகிறீர்களே, அவற்றுள் எந்த ஆப்பரேஷன் நல்லது என்று கேட்கிறார்கள். எந்த ஆப்பரேஷனைச் செய்வதிலும் கஷ்டமில்லை, அபாயமுமில்லை, எதைச் செய்தாலும் குழந்தை பிறக்காது. ஆதலால் இரண்டு ஆப்பரேஷன்களும் நல்லவைகளே. ஆயினும் எதைச் சிபார்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் கணவன் செய்யும் ஆப்பரேஷனையே சிபார்சு செய்வேன். அதற்குரிய காரணங்கள் இவை:-

1. கணவன் எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். மனைவி குழந்தை பெற்று மூன்றாவது நாளே செய்யலாம். மற்ற வேளைகளில் செய்வதானால் வயிற்றைக் கீறியே செய்யவேண்டும். அதையும் அபாயமில்லாமலே டாக்டர்கள் செய்கிறார்கள். ஆயினும் அது அவசியமில்லை, குழந்தை பெற்றவுடன் செய்வதே நல்லது. அப்போது வயிற்றைக் கீறவேண்டாம். குய்யம், கருப்பப் பை முதலியவை குழந்தை வெளிவரக் கூடிய அளவு விரிந்திருக்குமாதலால் அதன் வழியாகவே ஆப்பரேஷனை எளிதில் செய்துவிடுவார்கள்.

2. கணவனுக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றுக்கு வெளியே நடப்பது. ஆனால் மனைவிக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றினுள்ளே நடப்பது. அதனால் கணவன் ஆப்பரேஷன் மனைவி ஆப்பரேஷனை விட எளிது.

3. ஆதலால் கணவன் வைத்தியசாலையில் படுத்திருக்க வேண்டியதில்லை. ஆப்பரேஷன் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடலாம். வீட்டிலும் நாலைந்து நாள் அதிகமாக நடக்காமலிருந்தால் போதும். படுத்திருக்க வேண்டியதில்லை.

ஆகவே இரண்டு மூன்று குழந்தைகள் உடைய தந்தை மார்களே! எவ்விதத் தயக்கமுமின்றி ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலெல்லாம் இலவசமாகவும் மிகுந்த கவனமாகவும் ஆப்பரேஷன் செய்கிறார்கள். ஆப்பரேஷனைச் செய்து உங்களுக்கும் உங்கள் மனைவி மார்க்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நலம் தேடுமாறு: வேண்டிக்கொள்கிறேன்.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும், வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார் என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆகவே, மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ளுகிறவர்கள் இந்த ஆப்பரேஷனை இம்மியும் அச்சமின்றிக் செய்து கொள்ளலாம். செய்து, கொண்டால் நன்மையே அடைவார்கள்.


ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச்சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவசாலைக்குச் சென்றதும் மருத்துவரிடம் ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்துவிடுவார். குழந்தை பெற்றதற்காக. எத்தனை நாள் அங்கே இருக்கவேண்டுமோ அத்தனை நாள் இருந்தால் போதும். அதிகநாள் இருக்க வேண்டியதில்லை.

2, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை இந்தக் கட்டுரையைப் படித்தவுடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். அரசாங்க மருத்துவ இல்லங்களில் இலவசமாக ஆப்பரேஷனும் செய்வார்கள். ஆப்பரேஷன் செய்தபின் முப்பது ரூபாயும் தருவார்கள்.

ஆப்பரேஷன் செய்தபின் தந்தை மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும். படுத்திருக்க வேணடியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒருவாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சகோதரர்களே! சகோதரிகளே! நீங்களும் உங்கள் மூலமாக நாட்டிலுள்ளவர்களும் சுகமாக வாழ வேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் என்று மனத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.