ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/சுகமாய் வாழ மூன்று குழந்தைகள் போதும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சுகமாய் வாழ
மூன்று குழந்தைகள் போதும்


நமது இந்திய நாடு இரு நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்க்கு அடிமையாகி எங்கும் காண முடியாத வறுமையில் ஆழ்ந்து வாடியது. காந்தியடிகள் போதனையின்படி காங்கிரஸ் மகாசபை செய்த பெரு முயற்சியின் காரணமாக இந்திய மக்கள் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திரம் பெற்றார்கள்.

இந்திய மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புவது போலவே சுகமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்கு வறுமை ஒழிய வேண்டும்; வருமானம் பெருக வேண்டும். அவ்வாறு செய்வதற்காக அரசாங்கத்தார் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

ஆயினும் அவற்றால் நன்மையை உடனே பெற்று விடமுடியாது. பல ஆண்டுகள் செல்லும். அதுவரை ஒவ்வொருவரும் தம்முடைய சக்திக்கும் சமய சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமே தேட முடியும்.

அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தாயும் தந்தையும் ஒருவாறு அதிகக் கஷ்டமின்றி வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டிய வழிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வகுத்து வாழ்க்கையைச் சுகமாக நடத்த விரும்புகிறவர்கள் மூன்று காரியங்கள் செய்ய வேண்டும். 
முதலாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனால் உண்டாகக். கூடிய நன்மைகள் பல. அவற்றுள் முக்கியமானவை இவை:--

1. தாய் பலமுறை பிரசவித்தால் அவளுடைய உடல் நலம் குன்றும். மூன்று குழந்தைகள் போதும் என்று தீர்மானித்துக் கொண்டால் அவள் தன் குழந்தைகளை நன்றாகக் கவனித்து வளர்ப்பதற்கு வேண்டிய ஆற்றலும் ஆரோக்கியமும் உடையவளாக இருப்பாள்.

2. தந்தை அதிகக் குழந்தைகள் ஆய்விட்டதே, எவ்வாறு வளர்க்கப் போகிறோம் என்று கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்களை நல்லவிதமாக அதிகக் கஷ்டமின்றி வளர்க்க முடியும்.

3. குழந்தைகள் சத்தான உணவும், சுத்தமான உடையும் நல்ல விதமான சூழ்நிலையும் பெறுவார்கள். நோய் நொடியின்றி வளர்வார்கள். தங்கள் சக்திக்கு, ஏற்றவிதமான கல்வியைப் பெற்று சந்தோஷமாக வாழ்வார்கள்.


இரண்டாவதாக

ஒரு குழந்தை பெற்று மூன்று ஆண்டுகள் சென்ற. பிறகே அடுத்த குழந்தை உண்டாக வேண்டும் என முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்விதமானால் தாயின் உடல் நன்கு தேறி பலம் பெறும், குழந்தையை, நன்றாகக் கவனிக்க முடியும், குழந்தையும் நன்கு, வளரும். அந்த மூன்று ஆண்டுகளில் குழந்தை உண்டாகாமல் இருப்பதற்காக இரண்டு வழிகள் இருக்கின்றன. 1. மாதவிடாய் கண்டபின் பத்தாம் நாள் முதல் இருபதாம் நாள்வரை காதல் செய்யாமல் இருக்க வேண்டும். மற்ற நாட்களில் காதல் செய்யலாம். இந்த வழியை மேற்கொண்டால் அநேகமாகக் குழந்தை உண்டாகாது.

2. சலவை செய்த மெல்லிய மிருதுவான பழந் துணியைக் கிழித்துப் பெண் உறுப்பில் இறுக்கமாக நுழைக்கக் கூடிய அளவாகப் பந்துபோல் சுருட்டி அது பிரிந்து போகாதபடி நூலால் கட்டவேண்டும். நூல் ஒரு சாண் நீளம் தொங்க வேண்டும். இந்தப் பந்துகள் நாலைந்து செய்து சுத்தமான டப்பாவில் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய் இரண்டு பங்கு, வேப்ப எண்ணெய் ஒரு பங்காகக் கலந்து ஒரு குப்பியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காதல் செய்யுமுன் எண்ணெய்யில் துணிப் பந்தைத் தோய்த்துப் பெண் உறுப்பில் கடைசி வரைத் தள்ளி வைக்க வேண்டும். கணவரும் ஆண் உறுப்பில் இந்த எண்ணெய்யைத் தடவ வேண்டும்.

காதல் முடிந்ததும் பந்தை எடுக்கக் காலையில் நூலைப் பிடித்து இழுத்து வெளியே எடுத்து எறிந்து விடவேண்டும். இந்த வழியைச் சிரமம் பாராமல், தவறாமல் கையாண்டால் குழந்தை நிச்சயமாக உண்டாகாது.

இந்த இரண்டு வழிகளும் மிகவும் எளியவை, கொஞ்சமும் கஷ்டமில்லாதவை, இவற்றால் எவ்விதத் தீமையும் ஏற்படாது நன்மையே உண்டாகும்.


மூன்றாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்வோர் மீண்டும் குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்குத் துணையாக மருத்துவர்கள் ஒரு சின்னஞ் சிறிய ஆப்ப ரேஷனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது இருபது நிமிஷத்தில் முடிந்து விடும். மயக்க மருந்து தரமாட்டார்கள். வலி கொஞ்சமும் தெரியாது. ஆப்பரேஷனால் எவ்விதக் கெடுதலும் உண்டாக மாட்டாது.

இந்த ஆப்பரேஷனைக் கணவனாவது மனைவியாவது செய்து கொண்டால் போதும். குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் இருக்காது. கணவனும் மனைவியும் முன்போலவே இன்பத்தை அனுபவிக்கலாம். அதில் அணுவளவுகூடக் குறைவு ஏற்படாது.

மேனாட்டில் முதியவர்கள் இளைஞர்கள் போல பல முடையவராக இருப்பதற்காக இந்த ஆப்பரேஷனைத் தான் செய்து கொள்கிறார்கள். அதனால் கணவனோ மனைவியோ ஆப்பரேஷன் செய்து கொண்டால், ஆப்பரேஷனுக்குப் பின்னால் அதிக பலமே உண்டாகும்.

ஆறு மாதங்களுக்குமுன் திரு. கிருஷ்ணன் என்பவர் ஒருவர் தாம் ஆப்பரேஷன் செய்து கொண்டதால் ஆண்மையை இழந்து விட்டதாகத் தினத்தந்தி பத்திரிகையில் எழுதினார். நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் என்னிடம் வந்தார். விபரங்களைக் கூறினார். அவர் ஆண்மை இழந்ததற்குக் காரணம் ஆப்பரேஷன் செய்ததல்ல, ஆப்பரேஷன் செய்ததால் ஆண்மை போய்விடுமோ என்று அவர் அஞ்சியதே யாகும் என்று விளக்கிச் சொன்னேன்.

அவர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தாம் ஆண்மையை மீண்டும் பெற்றுவிட்டதாகவும் அதனால் என்னைத் தமது குலதெய்வமாகப் போற்றுவதாகவும் கடிதம் எழுதினார். ஆகவே, ஆப்பரேஷனால் எவ்விதக் கேடும் உண்டாகவே மாட்டாது.

இந்த ஆப்பரேஷனை ஆங்கில மருத்துவர்களே கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் இதைப் பற்றி ஏதேனும் அறிய விரும்பினால் அந்த மருத்துவ நூல்களையே பார்க்க வேண்டும். அந்த மருத்துவ நூல் எதுவும் ஆப்பரேஷனால் கேடு உண்டாகுமென்று கூற வில்லை. எல்லா நூல்களும் நன்மை உண்டாக்கும் என்றே கூறுகின்றன.

ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யூனானி போன்ற இதர வைத்திய முறைகளுக்கு இந்த ஆப்பரேஷனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே, அந்த வைத்தியர்களிடம் இதைக் கேட்பதில் பயனில்லை.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும் வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார். என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச் சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்து விடுவார், குழந்தை பெற்றதற்காக மருத்துவச்சாலையில் இருக்க வேண்டிய நாள் இருந்தால் போதும்.

2. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை உடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ளவேண்டும்.

ஆப்பரேஷன் செய்தபின் மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும் படுத்திருக்க வேண்டியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒரு வாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சுகமாக வாழவேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.