ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/நமக்குத் தெரிய வேண்டியவை
கமலம்: என்னாங்க இவ்வளவு நேரம், ஏதேனும் கூட்டத்துக்குப் போனீர்களோ, எங்கே என்ன கூட்டம், இராத்திரி பத்து மணிக்கு மேலாச்சே.
சுந்தரம்: ஆமாம் கமலம், கூட்டத்துக்குத்தான் போய் வந்தேன். பத்திரிகை படிக்க வாசகசாலைக்குப் போனேன், அங்கே கூட்டம் என்று சொன்னார்கள், போனேன்.
கமலம்: கூட்டம் எங்கே, யார் பேசினார்கள்?
சுந்தரம்: பஞ்சாயத்து ஆபீசுப் பக்கத்தில் பாரதி மைதானம் இருக்கிறதல்லவா, அங்குதான் கூட்டம், சென்னையிலிருந்து ஒரு பெரியவர் வந்து பேசினார்.
கமலம்: என்ன பேசினார், காங்கிரசைப் பற்றியா, காங்கிரசுக்கு விரோதமாகவா? எப்போதும் இந்த இரண்டு பேச்சுத்தானே.
சுந்தரம்: ஆமாம் இரண்டு விஷயங்கள் தான். ஆனால் இன்று அவர் காங்கிரசைப் பற்றியும் பேசவில்லை, காங்கிரசுக்கு விரோதமாகவும் பேசவில்லை.
கமலம்: பின் வேறு எதுபற்றிப் பேசினார்?
சுந்தரம்: அவரே சொன்னார், அவைகளைப் பற்றிப் பேச வரவில்லை, எல்லோர்க்கும் பொதுவான --- எல்லோரும் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய --- ஒரு விஷயம் பற்றியே பேசப் போகிறேன் என்று சொன்னார். கமலம்: அது என்ன கட்டாயமாக அறிய வேண்டிய விஷயம்? விளங்கவில்லையே.
சுந்தரம்: ஒவ்வொரு குடும்பத்தாரும் தாங்களும் தங்கள் குழந்தைகளும் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும், குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
கமலம்: ஆமாம் அப்படித்தான் ஆசைப்படுகிறோம், அதற்காக அவர் என்ன சொன்னார்?
சுந்தரம்: ஆசைப்படுவதில் குற்றமில்லை, அவ்விதம் தான் ஆசைப்பட வேண்டும், ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.
கமலம்: ஏன் சிந்திப்பதில்லை. சிந்தித்துத் தானே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்கப் பாடுபடுகிறார்கள். பணம் இருந்தால்தானே சந்தோஷமாக வாழலாம், நல்லவிதமாகக் குழந்தைகளை வளர்க்கவும் படிப்பிக்கவும் முடியும்?
சுந்தரம்: ஆமாம் கமலம், அதையே தான் அந்தப் பெரியவரும் கூறினார். பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் ஏராளமாகச் சம்பாதித்துவிட முடியாது. அவரவர் சக்திக்குத் தக்க படிதான் சம்பாதிக்க முடியும்.
கமலம்: அது என்னவோ உண்மைதான். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள், ஆனால் எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியாக மார்க்கு வாங்கிவிடுவதில்லை.
சுந்தரம்: அதனால் அந்தப் பெரியவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? ஒவ்வொருவரும் தாம் எவ்வளவு சம் பாதிக்க முடியும் என்று முதலில் யோசிக்க வேண்டும். பிறகு தாம் சம்பாதிப்பதைக்கொண்டு எத்தனை குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும் என்று கூறினார்.
கமலம்: ஆமாம் அது உண்மைதான். அதிக வருமானமில்லாவிட்டால் அதிகக் குழந்தைகளை வளர்க்க முடியாது தான். எதிர்த்த வீட்டு அண்ணாவுக்கு வருமானம் குறைவு, அதனால் ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் படுகிற பாடு கடவுளுக்குத்தான் தெரியும்.
சுந்தரம்: அந்தக் குழந்தைகளைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமாயிருக்கிறது. நல்ல உணவில்லை, நல்ல உடையில்லை. எலும்பும் தோலுமாக இருக்கின்றன. எப்போது பார்த்தாலும் ஒன்று மாறி ஒன்றுக்கு நோய்; டாக்டர் ஆஸ்பத்திரியில் இல்லாத மருந்து ஏதாவது எழுதிக்கொடுத்தால் அதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
கமலம்: ஆமாம், ஆனால் அடுத்த விட்டு அண்ணாவுக்கும் அதே வருமானம் தான். ஆனால் மூன்று குழந்தைகளே யிருப்பதால், அவைகள் நன்றாக இருக்கின்றன. அழகான சட்டை, அழகான பாவாடை வாங்கிக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் செழிப்பாகக் கொழு கொழு என இருக்கின்றன. அவைகளை வாரி எடுத்து முத்தவேணும் போல் இருக்கிறது. நீங்கள் இல்லாத வேளையில் அவைகளைக் கூட்டி வைத்துத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
சுந்தரம்: இதைத்தான் அந்தப் பெரியவர் பல விதமாக எடுத்து விளக்கினார். நீ வரவில்லையே என்று தோன்றிற்று. கமலம்: அப்படியானால் அதிக வருமானம் உடையவர்களே அதிகக் குழந்தைகள் பெறலாம் என்று தோன்றுகிறது.
சுந்தரம்: அப்படியில்லை, கமலம்! விரலுக்குத் தக்க வீக்கம் என்று சொல்வதில்லையா. ஏழைவீட்டுக் குழந்தை பள்ளிக்கூடத்துக்கு நடந்துபோகும். பணக்கார வீட்டுக் குழந்தை வண்டியில் போகும். அதனால் அவரவர் அந்தஸ்துக்குத் தக்கபடி செலவு செய்ய வேண்டும்.
கமலம்: அப்படியானால் பணக்காரர்கள் கூட அதிகக் குழந்தைகள் பெறக்கூடாது என்று சொல்லுகிறாரோ?
சுந்தரம்: ஆமாம் கமலம்! அப்படித்தான் சொல்லுகிறார். ஏழையோ பணக்காரரோ மூன்று குழந்தைகள் போதும் என்கிறார். அப்படியானால்தான் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று சொல்லுகிறார்.
கமலம்: நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றபின் எல்லோரும் சன்னியாசியாகிவிட வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.
சுந்தரம்: நீ சொல்லுவது சரிதான். சன்னியாசியாகச் சொன்னால் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் அந்தப் பெரியவர் யாரையும் சன்னியாசியாகச் சொல்லவில்லை.
கமலம்: எனக்கு நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை. சன்னியாசிபோல் இருக்காமல் எப்படிக்குழந்தை பெறாமல் இருக்க முடியும் என்று தெரியவில்லை.
சுந்தரம்: அந்தப் பெரியவர் சொல்லுகிறார். மூன்று குழந்தைகள் பெற்றபிறகு சன்னியாசி யாகாமல் கணவனும் மனைவியும் எப்போதும் காதலராக வாழ்ந்து கொண்டு குழந்தை பெறாமலிருக்க முடியும், அதற்காக டாக்டர்கள் ஓர் ஆப்பரேஷன் கண்டுபிடித்திருக்கிறார்களாம். கணவனாவது மனைவியாவது செய்துகொண்டால் பிறகு குழந்தை உண்டாகாதாம். குழந்தைதான் உண்டாகாதே தவிர வேறு எந்த வித்தியாசமும் ஏற்படாதாம். கணவனும் மனைவியும் முன்போலவே சந்தோஷமாக வாழ்வார்களாம்.
கமலம்: ஆனால் ஆப்பரேஷன் என்கிறீர்களே? ஆப்பரேஷன் என்றால் அறுப்பதல்லவா? அதை யார் செய்ய முடியும், வேறு வழி யில்லையா? வேறு வழி சொன்னால்தான் யாரும் கேட்பார்கள்.
சுந்தரம்: கமலம்! உன் மாமாவுக்குப் பல் சொத்தையாகி நோவாயிருந்ததே ஞாபகமிருக்கிறதா?
கமலம்: ஆம், அதற்கு மாமா டாக்டரிடம் கொண்டு காட்டினார். டாக்டர் அந்தப் பல்லுக்குப் பக்கத்திலே ஏதோ கொஞ்சம் மருந்து குத்தினாராம், அப்போது மட்டும் சுருக்கென்று இருந்ததாம். பிறகு பல்லைப் பிடுங்கியபோது நோவே யில்லையாம். அதற்கும் நீங்கள் சொல்லும் ஆப்பரேஷனுக்கும் என்ன சம்பந்தம்?
சுந்தரம்: சம்பந்தமா ? குழந்தை பெறாமலிருப்பதற்காக டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆப்பரேஷனும் அதைப்போல எளிதாம். அறுக்கும்போதும் பிறகும் நோவாதாம். கால்மணி நேரத்தில் முடிந்து விடுமாம். ஆணுக்குச் செய்தால் அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்க வேண்டாம், வீட்டுக்கு வந்து வீட்டிலும் படுத்திருக்க வேண்டாம், ஏழெட்டு நாள் ஓய்வாக இருந்தால் போதும். கமலம்: அப்படியானால் பெண்ணுக்குச் செய்யும் ஆப்பரேஷன் கஷ்டமானதோ?
சுந்தரம்: இல்லை, அதுவும் எளிதானது தான். ஆனால் ஆணுக்கு எந்த நேரமும் செய்யலாம். பெண்ணுக்கு என்றால் அவள் குழந்தை பிரசவிக்கும் பொழுதுதான் செய்வார்கள். அப்போது அவளுக்குக் கொஞ்சமும் நோயில்லாமலே செய்துவிடுவார்கள்.
கமலம் : அது சரி, அப்படியானால் அதற்காக அவள் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் ?
சுந்தரம் : குழந்தை பெற்றவள் ஏழெட்டு நாள் படுத்திருப்பாள் அல்லவா? அது போல் படுத்திருந்தால் போதும், ஆப்பரேஷன் செய்ததற்காக அதிக நாள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதில்லை.
கமலம் : இந்த ஆப்பரேஷன்கள் இவ்வளவு எளிதாக இருக்கும்போது ஏன் எல்லோரும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சுந்தரம் : இப்படி ஒருவர் வந்து எளிதாக விளக்கிச் சொன்னால்தானே தெரியும். அதோடு ஆப்பரேஷன் என்றவுடன் நீ பயப்பட்ட மாதிரி மற்றவர்களும் விஷயம் அறியாமல் பயப்படுவார்கள் அல்லவா ?
கமலம் : ஆனால் இப்போது நமக்கு விஷயம் விளங்கி விட்டதால் நாம் இந்த யோசனைப்படியே நடப்போம். அடுத்த பிரசவ சமயத்தில் ஆப்பரேஷன் நான் செய்து கொள்கிறேன்.
சுந்தரம் : அது வேண்டாம் கமலம், உனக்குக் குழந்தை உண்டானவுடனே நானே போய்ச் செய்து கொண்டு வருகிறேன். ஆண்கள் ஏன் பெண்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று அந்தப் பெரியவர் கூறினார். அவர் கூறுவது சரிதானே. கமலம் : சரி உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள், கடைசியாக அந்தப் பெரியவர் என்ன சொல்லி முடித்தார் ?
சுந்தரம் : அவர் மூன்று விஷயங்கள் கூறி அவற்றை எல்லோரும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கமலம் : அந்த விஷயங்கள் என்ன ?
சுந்தரம் : முதலாவதாக ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளுக்கு அதிகமாகப் பெறுவதில்லை என்று முடிவு செய்துகொள்ளவேண்டும். முடிவு செய்து கொண்டு அந்த முடிவுப்படியே நடப்பேன் என்று நாள் தோறும் மனத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்.
கமலம் : ஆமாம். அப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று இப்போது விளங்குகிறது. அவர் அடுத்த விஷயம் என்ன சொன்னார் ?
சுந்தரம் : அடுத்த விஷயமா ? ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் மனைவி அடுத்த பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்விட வேண்டும். போனதும் டாக்டரிடம், எனக்கு இனிமேல் குழந்தை வேண்டாம் ஆப்பரேஷன் செய்துவிடுங்கள் ' என்று கூறவேண்டும். டாக்டர் குழந்தை பிறந்த மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் ஆப்பரேஷனை எவ்விதக் கஷ்டமுமில்லாமல் செய்துவிடுவார்.
கமலம்: அதைத்தான் நானும் சொன்னேன், நமக்கு சொர்ணமும் பொன்னியும் இருக்கிறார்கள், போதும். மூன்றாம் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கும் போய் ஆப்பரேஷன் செய்து கொள்வேன். ஆனால் நீங்கள் செய்து கொள்வதாகச் சொல்லுகிறீர்கள், அதுவும் சரிதான்.
சுந்தரம்: அந்தப் பெரியவர் மூன்றாவது விஷயம் என்ன கூறினார் தெரியுமா? 'ஏற்கனவே மூன்று குழந்தைகளிருந்தால் கணவன் உடனே நாளையே ஆஸ்பத்திரிக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். ஒருநாள் கூடக் காலதாமதம் செய்யக் கூடாது, மெத்தனமாய் இருந்துவிடலாகாது என்று கூறினார்.
கமலம்: ஆமாம் அவர் கூறுவது சரிதான். என்றைக்குக் குழந்தை உண்டாகும், என்றைக்கு உண்டாகாது என்று எவராலும் கூற முடியாது அல்லவா?
சுந்தரம்: இந்த மூன்று விஷயங்களையும் எல்லோரும் ஞாபகத்தில் வைத்து நடந்தால் நாட்டுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லித் தம்முடைய உரையை முடித்தார்.
கமலம்: அவர் கூறுவது முழுவதும் உண்மை; அதில் சந்தேகமே இல்லை.
இந்தியா சுதந்திரம் அடையுமுன் டக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த ஸர் பிலிப் ஹார்ட்டாக் மனைவியார் (ஹார்ட்டாக் சீமாட்டி) இந்தியா பற்றி எழுதியுள்ளநூலில் கூறுவது :
குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் குடும்பத்தின் செல்வ நிலையை உயர்த்த முடியாது என்று அறிந்து மக்களிடையே குடும்பக்கட்டுப்பாடு முறைகளைப் பரவச் செய்யும் அரசாங்கம் இந்த உலகத்தில் இந்திய அரசாங்கம் ஒன்றே.