ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

ரியப் பார்ப்பனர்கள் அளவில் சிறிய இனத்தவராயினும், அவர்கள் இந்தியாவை - குறிப்பாகத் தமிழ்நாட்டைக் கெடுப்பது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லை. அரசியலிலாகட்டும் பொது வாழ்வியலிலாகட்டும் அவர்களின் திருவிளையாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவைபற்றி ஏற்கனவே பலமுறை பலவாறு விரித்து எழுதியிருந்தாலும், அவர்களைப் பற்றிய தனி ஆய்வு இது. பொதுவாழ்வில் அவர்களால் மற்ற இனங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அல்லது அவர்களின் தலையீடுகள், அவற்றால் விளையும் கேடுகள் அளவுக்கு மீறி நடைபெறுவதால் இத்தகைய ஒரு தொகுப்பு நோக்கு தேவைப்பட்டது.

ஆரியப் பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் எனப்படுவோர்க்கு இந்நாட்டில் ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு என்றாலும், அஃதெல்லாம் ஓர் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகாலச் சிறப்புடையதே. ஆனாலும் அவர்கள் வேதங்களிலும் பழங்கதைகளிலும் இத்தொடர்பு ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் ஆண்டுகள் என்று கட்டியுரைக்கப் பெற்றுள்ளது. இதனால் பிற்காலத்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இவர்களைப் பற்றி உண்மை வரலாறு தெரியாமல், பலவகையிலும் தம்முள் வேறுபட நேர்ந்தது. வேதங்கள் அனைத்தும் கட்டு உரைகளே! அவற்றில் வரும் செய்திகள் யாவும் இவர்களின் வளமிகுந்த கற்பனை உரையாடல்களே! இந்நாட்டுப் பழங்குடிகளிடம் இவர்கள் நடத்திய போராட்ட வெறுப்புணர்ச்சிகளே இருக்கு வேத, அதர்வ வேத மந்திரங்களாக விளங்குகின்றன. எதிரிகளை வெல்வதற்கும் கொல்வதற்கும் இவர்கள் கொண்ட முயற்சிகளே – இவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு உணர்ச்சிகளே எசுர் வேத வேள்விகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் காணப் பெறும் சில பச்சையான அருவருப்பு நிகழ்ச்சிகளைக் கொக்கோக நூல்களிலும் காண்பதரிது. காட்டு விலங்காண்டிகள் போல் அவர்கள் நடந்துகொண்ட முறைகள் அவ்வேதங்களில் நன்கு வண்ணிக்கப் பெறுகின்றன. எனினும் இவர்கள் அவ்வேதங்களைத் தோற்றுவிக்கப் பெறாதவை (அநாதி) என்றும், தொன்றுதொட்டு வருவன என்றும்; இறைவனுக்கு முந்தித் தோன்றியவை என்றும் பொய்யுரையும் புளுகுரையும் கூறிப் பழங்கால மக்களை ஏமாற்றிவந்தனர்; இன்று வரை அவற்றையே திரும்பத் திரும்பக் கூறிக் கற்றவர்களையும் அறிஞர்களையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். வரலாற்றாசிரியர்கள் சிலரும் இவர்களின் மதிமயக்குப் பேச்சுகளில் நம்பி உண்மையைப் பறிகொடுத்துள்ளனர். வேதங்களை நேரிடையாகப் படிப்பவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது. இருப்பினும் அவ் ‘வேத “புராண” இதிகாசங்’களை வைத்துக்கொண்டு ஆரிய இனத்தவரில் பெரும்பாலோர் பிழைத்து வருகின்றனர்.

தொடக்கக் காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அரசியலையும் வாழ்வியலையும் கெடுத்து வந்தமைக்கு அளவிறந்த சான்றுகள் உண்டு. இந்திய வரலாற்றில் அரசர்களின் வீழ்ச்சி குறிக்கப்படும் இடத்திலெல்லாம் பார்ப்பனியம் நடத்திய திருவிளையாடல்களை நன்கு உணரலாம். காலம் செல்லச் செல்ல இவர்களின் மேலாண்மைகள் ஓரளவு குறைந்துகொண்டே வந்தாலும், இன்றும் தனிப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆரியப் பார்ப்பனனும் வேத கால ஆரியத்தினின்று எவ்வகையிலும் மாறுபட்டவன் அல்லன். அவன் மனத்திலும் நடவடிக்கைகளிலும் என்றும் தான் எல்லாரினும் படைப்பால் உயர்ந்தவன் என்பது பிறர் எல்லாரும் தனக்குக் கீழானவர் என்பதுமே காணக் கிடக்கின்றன.

அரசியல் நிலையில் அவர்கள் செய்கின்ற கீழறுப்பு வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆட்சியைப் பொறுத்த அளவில் பார்ப்பனர்கள் எக்காலத்தும் இருபிரிவினராகவே பிரிந்து செயல்படுகின்றனர். ஒரு பிரிவு ஆளுங்கட்சியைச் சார்ந்து நிற்கும். மறுபிரிவு எதிர்க்கட்சியைச் சார்ந்து இயங்கும். இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் ஒரு பகுதியினரால் மற்ற பகுதியினருக்கு மறைமுகமான நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். (பிற இனத்தவர்க்கோ இவர்களால் என்றும் தொல்லைதான்) ஆட்சிக்கு எதிரான பிரிவு மக்களிடையே எப்பொழுதும் ஒரு வகையான நிறைவில்லாத தன்மையை உருவாக்கிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் குழப்பத்தையும் அந்நிலை தோற்றுவிக்கும். இதற்கு இக்காலத்தில் ஒர் எடுத்துக்காட்டு தரவேண்டுமாயின் ‘ஆனந்த விகடனை'யும் ‘துக்ளக்'கையும் சொல்லலாம். ஆனந்தவிகடன் அச்சகத்திலேயே துக்ளக் அச்சிட்டு வெளிப்படுத்தப் பெறுகின்றது, மேலும் இரண்டாவதன் பொறுப்பும் முதலாவதைச் சேர்ந்ததே! அவ்வாறிருக்கையில் ‘ஆனந்த விகடன்’ அரசியல் கொள்கை ‘துக்ளக்'கால் தாக்கப்பெறும். ‘துக்ளக்'கின் போக்கை கண்டித்து ஆனந்தவிகடனில் கட்டுரை வரும். இரண்டு நிலைகளையும் இரண்டு வேறுபட்ட போக்குகளாகக் கொண்டு இளிச்சவாய்த் தமிழர்கள் அவ்விதழ்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படித்து வருவார்கள். இத்தகைய ‘சகுனி’ ‘சாணக்கிய’ வேலைகள் ஆரியத்தின் தலையாய மந்திர முறைகளில் ஒனாறும். இதனால் அவ்வினம் பெறுகின்ற நேரடி மறைமுக ஊதியங்களுக்கு அளவே இல்லை.

இன்றும் இந்தியாவில் மேலைப் பைதிரத்தில் உள்ள ‘அகில பாரத ஆரிய சபா’ முதற்கொண்டு தில்லியிலுள்ள ‘பாரதிய சனசங்கம்’ வரையுள்ள ஏறத்தாழ எண்பது அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவற்றில் பார்ப்பனர்களே முகாமையாக இருந்து வேலை செய்கின்றனர். அவர்களின் பழமைக் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரிடையான பொதுவுடைமைக் கட்சிகளிலும்கூட அவர்களே மேல் வரிசைத் தலைவர்களாக விளங்குகின்றனர். எனின், அவர்களின் அரசியல் நரித்தனங்களைப் பற்றி மிகுதியும் விளக்கத் தேவையில்லை.

இன்னும், தங்களுக்கு வேண்டாத பிற இனத்தவரின் ஆட்சி ஏற்பட்டு விடுமானால் இவர்களின் வெறுப்பு வேலைகளுக்கும், பொறுப்பற்ற மனப்போக்குக்கும் அளவே இல்லை. இக்கால் தமிழக அரசு தங்களுக்குத் துணையாக இல்லை அல்லது தங்களில் ஒருவரையும் அவர்கள் அமைச்சராக அமர்த்தவில்லை என்பதற்காகவே, பாப்பனர்கள் செய்யும் குழிபறிப்பு வேலைகள் எண்ணற்றன. இக்கால் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள், கையூட்டு வாங்குதல், வேலைகளைச் சுணங்கப் போடுதல், வேண்டாதார்க்குப் பலவகையிலும் இருட்டடிப்புச் செய்தல், வேண்டியவர்க்குச் சலுகைகள் காட்டுதல் முதலிய பெரும்பாலான சீர்கேடுகளுக்கும் பார்ப்பனர்களே மிகுதியும் பொறுப்பாவார்கள். வேண்டுமென்றே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் மக்களுக்கு அரசின்மேல் ஒருவகை வெறுப்பு ஏற்படட்டும் என்பதே இவர்களுடைய எண்ணமாகும். இதைப் பலவகையிலும் மறைப்பதற்காகத் தாங்களாக இக் குற்றச்சாட்டுகளில் முந்திக் கொள்கின்றனர். காலஞ்சென்ற இராசாசி முதல் கல்வி அலுவலகக் கடைசிப் பார்ப்பான்வரை இதை அறிந்திருந்தும் மிகவும் நேர்மையானவரைப் போலவே நடித்துப் பேசி வருகின்றனர்.

இக்கால் அரசு அலுவலகங்களில் பார்ப்பனப் பெண்கள் பணியாற்றவது மிகுந்து வருகின்றது. அப் பெண்களின் நடைமுறைகளில் உள்ள பண்பாட்டுக் குறைவான செய்தியைக் கூறுவதற்கே நாக் கூசும். பார்ப்பன வழக்கறிஞர்கள் சிலர்தம் பெண்டு பிள்ளைகளை வைத்தே வழக்குகளை வெற்றியாக நடத்திக் காட்டிய வரலாறும் உண்டு. தம் இனத்தான் ஒருவன் அலுவலக மேலதிகாரி யாகவோ, அத்துறைச் செயலாளராகவோ வந்துவிட்டால் அவர்களின் கீழ்ப் பணியாற்றும் அனைத்துப் பார்ப்பனர்களும் அவர்களுக்கு எப்படி ஒத்துழைக்கின்றனர் என்பதையும், அவ்வாறில்லாவிடத்து அவர்கள் எப்படிக் கீழறுப்பு வேலை செய்கின்றனர் என்பதையும் அவ்வத்துறைகளில் பணியாற்றும் பிற இன அலுவலர்கள் நன்கு அறிவர்.

அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்கள், பிள்ளையார் கோயில்கள், அவற்றுக்கான பூசனை, வழிபாடுகள், திருவிழாத் தண்டல்கள் முதலிய யாவும் ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகளின் தூண்டுதல்களே. அந்நிகழ்ச்சிகளால் அவ்வதிகாரிகளின் ஒழுக்கக் கேடுகள், கையூட்டு, ஊழல் நடவடிக்கைகள், இனச் சலுகைகள் பெரிதும் மறைக்கப்படுகின்றன. அவ்வலுவலகங்களில் உள்ள தமிழர்களோ, பிற இனத்தவர்களோ கடந்த காலங்களில் இவற்றைக் கண்டுங் காணாதவர்போல் இருந்து வந்தனர். இக்கால் அவற்றை ஆங்காங்குக் கண்டிக்கத் தொடங்கி யுள்ளனர். எனவே அவர்களுக்குத் துணைபோகும் அரசை அப் பார்ப்பனர்கள் தூற்றத் தொடங்கியுள்ளனர்.

பொய்த்துத் தள்ளும் செய்தித்தாள்கள் !

கல்வித்துறையில் அவர்களால் ஏற்படும் சீர்கேடுகளுக்கோ வரைமுறையே இல்லை. பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ – என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில் ஊழல்கள் என்று பேசப் பெறுகின்றவற்றுள் பெரும்பாலானவை ஆரியப் பார்ப்பனர்களால் செய்யப் பெறுவனவே! பிற இனத்தவரை அமைதியாக ஆளவிடக் கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். இவர்களுக்குப் பக்கத்துணையாக நிற்பவை அவர்களிடம் உள்ள ஆங்கில, தமிழ்ச் செய்தித்தாள்களே! அவை பொய்த்துத் தள்ளுவதற்கு ஓர் எல்லையே இல்லை.

பார்ப்பனர்களின் கையுள் வலிவான செய்தித்தாள்கள் இருப்பதாலேயே அவர்கள் பொதுமக்களிடம் தங்களுக்குச் சார்பான கருத்துகளை எளிதாக உருவாக்க முடிகின்றது. இந்து, எக்சுபிரசு, மெயில் போலும் ஆங்கில நாளிதழ்களிலும் சுதேசமித்திரன், தினமணி, தினமலர் போலும் தமிழ் நாளிதழ்களிலும், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தீபம், கலைமகள், துக்ளக் போலும் கிழமை, மாத இதழ்களிலும் அவர்கள் எழுதும் எழுத்துக்களே இந்நாட்டை ஒரு நிலையான ஆட்சிக்குக் கொண்டு வரமுடியாமல் செய்கின்றன என்றால் அது மிகையாகச் சொல்லப்பெற்ற தாகாது.

வடபழனியில் உள்ள பிள்ளையார் கோயிலின் ஒரு செங்கல் இடிந்து விழுந்தாலும் அந்தச் செய்திதாள்களில் முதல் பக்கத்தில் முதல் வரியில் செய்தி வரும். தலைமைத் தமிழன் ஒருவன் வீடோ நிலமோ பறிபோனாலும் அச்செய்தி வராது. எங்காவது ஒர் எளிய ஆரியப் பார்ப்பானோ ஒரு பார்ப்பன நாட்டிய நங்கையோ இறந்து போனால் ஊரே கொள்ளையில் அழிந்துபோனது போல், பெரிய அளவில் இறந்துபோனவர்களின் படம், வரலாறு, அவர்களின் பண்பு நலன்கள் ஆகிய அனைத்து விளக்கங்களுடனும், அவர்களின் இழவால் இந்நாட்டுக்கோ, கலைக்கோ ஏதோ நேரமுடியாத இழப்பு ஏற்பட்டுவிட்டது போலவும் இட்டுக்கட்டி - பூனையை யானையாக்கிச் செய்தி வரும். ஆனால் தமிழினத் தலைவர்களில் பாவேந்தர் பாரதிதாசனைப் போன்றவர்கள் மறைந்து போனாலும் எங்கோ ஒரு மூலையில் ஓரிரண்டு வரிகளில்தான் அவற்றில் செய்தி போடுவார்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டையில் உள்ள பார்ப்பனப் பேராசிரியர் ஒருவர் அடிபட்ட செய்தி பார்ப்பன இதழ்களில் நாள் தவறாமல் பெரிதுபடுத்தி எழுதப்பெற்று, அல்லோல கல்லோலப்படுத்தப் பெற்றது. அதன் கரணியமாகப் பல கல்லூரிகளும் மூடப்பெற்றுக் குழப்பங்கள் விளைந்தன. அதுவுமன்றி, அண்மையில் முழுக்க முழுக்கத் தமிழர்களாகவே உள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் நெடுநாளைய விருப்பப்படியும் வடவர் செய்த இரண்டகச் செயல்களின்படியும் இரண்டாக உடைந்ததைப் பயன்படுத்தி எதிர்ப்பாளராகிய ம.கோ. இராவிற்கு இவர்கள் தரும் விளம்பரங்களும், அவர் கருத்தைப் பெரிதுபடுத்திப் பொதுமக்களுக்குத் தி.மு.க.வின் மேல் வெறுப்புண்டாகும்படி செய்யும் முயற்சிகளும் மேலே கூறிய கருத்துரைகளை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும். சூத்திரர்கள் ஆட்சியில் பிராமணர்கள் வாழக்கூடாது என்பதும், அவ்வாட்சியைத் திட்டமிட்டுக் கவிழ்த்தல் வேண்டும் என்பதும் இவர்களின் வேத, புராணங்கள் பறைசாற்றுங் கொள்கை. அக்கொள்கை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் இவர்களை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

அண்மையில் இராசாசி இறந்துபோனதை ‘ராஜாஜி அமரரனார்’ என்று தினமணி தலைப்பிட்டு எழுதியதுடன் அந்த (26.12.1972) நாளில் வந்த இதழின் எட்டுப்பக்கங்களிலும் அவர்களுடைய தலைவரைப் பற்றிய செய்தியே நிறைந்திருந்தது. அவரை என்னென்ன சொற்களைக் கொண்டு புகழ முடியுமோ, எவ்வெவ்வகையில் அவர்க்கு உயர்ச்சி காட்ட முடியுமோ, அவ்வச் சொற்களால் அவ்வவ் வகையிலெல்லாம் வானளாவப் புகழ்ந்து தள்ளியிருந்தது தினமணி. ‘மாமலை சாய்ந்தது’ என்னும் தலைப்பிட்டுத் தினமணிச் சிவராமன் எழுதிய அன்றைய ஆசிரியவுரையைப் படித்தவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நல்லறங்களும், நலன்களும் இராசாசியோடு பறிபோய்விட்டதாகவே உணர்வார்கள். ‘விடுதலை வீரர், அபார இராசதந்திரி, சிறந்த நிர்வாகி, தீண்டாமை ஒழிப்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு பாடுபட்ட தீரர், ஆன்மீக உயர்வினால் ராசரிசியாகத் திகழ்ந்தவர். ஏழைபங்காளர். குணநலன்களின் உறைவிடம், தலைசிறந்த பண்பினர், அறநெறியின் உருவம், சனநாயகத்தின் காவலன், சமாதானப் பிரியர், முன்னணி எழுத்தாளர், மாமேதை, பாரதப் பண்பின் உயர்நிலைகளை வாழ்ந்து காட்டியவர். இத்தகைய சிறப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வேறு எவரிடமும் காணமுடியாது. அவர் தமது சாதனைகளால் யுக புருசர்கள் வரிசையில் இடம்பெறக் கூடியவர்’ – இவ்வாறு எழுதியது, தினமணி.

இங்குக் கூறப்பெற்ற புகழுரைகளுக்கு இராசாசி உரியவரா அல்லரா என்பதன்று நம் கேள்வி. இத்தகைய உரை இராசாசிக்காகத்தான் எழுதப்பெறும் என்பதன்று. பார்ப்பன இனத் தலைவராக உள்ள எவருக்கும் – காஞ்சி காமகோடிப் புதுப்பெரியவாள் மறைந்தாலும் அவருக்கும் எழுதப்பெறும் ஒரு வேட்கை உரையாகும். இராசாசி மறைந்தபொழுது திரு. ஈ.வெ. இரா அவரை ஒரு பெரியார் என்று சொன்னதற்காகவே ஈ.வெ. இராமசாமி நாய்க்கர் என்பதைத் தவிர வேறுவகையாக எழுதாத தினமணி அன்று ஈ.வெ. இராமசாமி பெரியார் என்று எழுதியிருந்ததை ஆழ்ந்து நோக்குவார்க்கு அவாளின் இன நலவுயர்ச்சி நோக்கம் விளங்காமல் போகாது. இராசாசி இருக்கும்பொழுது அவரின் அரசியல் கருத்துரைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தலைமை அமைச்சர் இந்திராகாந்திகூட, ‘அவர் ஒரு மேதை; சிக்கல்களை அலசி ஆராயும் திறனுள்ளவர்; அவர் பெரிய அரசதந்திரி என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார். அத்தகைய அறிவு வன்மையாளரின் அறிவுரைகளை அம்மையார் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது ஏனோ?

இத்தகைய நிகழ்ச்சிகளால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னெனின், பார்ப்பனர்களுக்கு வேண்டியதானால் துரும்பும் துரணாகும்; வேண்டாதெனில் தூனும் துரும்பென்று இழித்துரைக்கப் பெறும். அதற்கான ஆற்றல்கள் செய்தித்தாள் வன்மைகள் அவர்களிடம் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது என்பது தான். அத்துடன் நாம் இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. தினமணி, மித்திரன், கல்கி, விகடன், இந்து, எக்சுபிரசு போன்ற இதழ்களின் கையோங்கிய ஓரின நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கால் பல இழிவான பாலியல் இதழ்கள் வேறுமாணவர்களை பாசக் கயிறுகள் போல் பிணித்துக் கொண்டுள்ளன. அவற்றின் பெயர்களே தமிழ்மொழியை இழிவுபடுத்துவது போல் அமைந்திருக்கும். எழுத்து என்பது ஓரிதழின் பெயர். கசடதபற என்பது மற்றோர் இதழின் பெயர். ஓரிதழின் பெயர் புள்ளி. தலையெழுத்து என்றும் ஓரிதழ் வருகின்றது. இவ்வாறு பற்பல இதழ்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இவையன்றி அனுராதா, காரிகை, காமம், துக்கடா, மல்கோவா, சரசி, வாலிபம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் போலும் இதழ்கள் குப்பைத் தொட்டியில் மொய்க்கும் ஈக்களைப் போல் நாளுக்கு நாள் மிகுதியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை பார்ப்பனரின் தூண்டுதலால் நடத்தப்பெறும் இதழ்களே! இவை தமிழ்மொழியை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் அதில் உள்ள இலக்கிய இலக்கண அமைப்புகளைக் கிண்டல் செய்து தகர்த்தெறியும் எண்ணத்துடனும் பார்ப்பன விடலைகளால் வெளியிடப் பெறுவன ஆகும்.

அவற்றில் வெளிவரும் கதைகளில் வரும் பாலியல் செய்திகளை மற்றொருவரிடம் படித்துக் காட்டவோ, படிக்கக் கொடுக்கவோ முடியாது எனின், அவற்றைப் பற்றி வேறு என்ன சொல்வது? அவற்றின் தலையாய நோக்கம் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுக்க வேண்டுமென்பதும், தமிழ் இலக்கியங்களையும் நெறிநூல்களையும் அழித்துவிட வேண்டும் என்பதுமே ஆகும். மற்றும் அவ்விதழ்களில் வரும் படங்களோ இழிவின் கழிவறைகள், குமுகாயக் கேடர்களின் வெறியாட்ட உடலுறவுச் செய்திகள். அமெரிக்க நாகரிகத்தை இங்கு வேரூன்றச் செய்யும் நோக்கத்தோடு மட்டும் வெளியிடப்பெறுவன அல்ல. மறைந்துவரும் ஆரிய வேத, புராண, இதிகாசங்களுக்கு மீண்டும் மதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடும் வெளியிடப் பெறுவனவாகும். மனவுயர்வை அழித்துவிடும் ஒரு கெடும்பு நிலையில் மக்களைப் படிப்படியாகக் கொண்டு ஆழ்த்திடும் அதேநிலையில், இராசாசி, காஞ்சிப் புதுப் பெரியவாள் போன்றவர்கள் சொல்லும் இராமாயண பாரத, இதிகாச விளக்கங்களும், வேத, புராண, கீதைப் பொழிவுகளும் அமிழ்ந்து போகும் உள்ளங்களுக்குக் கலங்கரை விளக்கங்கள் போல் கருத்திலும் கண்ணிலும் படவேண்டும் என்பதே அவர்கள் உட்கருத்தாகும்.

ஒழுக்கக் கேடுகளுக்குத்
தூண்டுகோல்!

இக்கால் மாணவர்களுக்கிடையில் உள்ள போராட்ட உணர்ச்சிகளுக்கும் பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கும் பெரும்பாலும் பார்ப்பன மாணவர்களே தூண்டுகோலாயிருக்கின்றனர். கிருதா வைத்துக்கொள்ளுதல் முதல் தலைமயிரை அலங்கோலமாய்க் கலைத்து விட்டுக் கொள்ளுதல், உடைகளைப் பல வண்ணங்களிலும் வகைகளிலும் தைத்துக் கொள்ளுதல், இப்பி போல் நடந்து கொள்ளுதல் வரை அனைத்துக் கோமாளிக் கூத்துகளுக்கு நிலைக் களனாக இருப்பவர் பார்ப்பன மாணவர்களே. இத்துறையில் பார்ப்பனப் பெண்களும் விலக்கல்லர். நோய் குடிகொண்டுள்ளதற்குப் பார்ப்பனர்களின் அமெரிக்கப் பாலியல் வெறியே அடிப்படைக் கரணியம். சென்னையில் பார்ப்பன இளைஞர்கள் சிலரிடம் உள் வெளிநாட்டுப் பாலியல் இதழ்கள், படங்கள், திரைப்படச் சுருள்கள் முதலியவை இருப்பதாகக் கேள்விப்பட்டு மிக வருந்த நேரிட்டது. இவ்வாறு நாட்டை அழிம்பு நிலைக்குக் கொணரும் பார்ப்பன இனம், அதற்கு வேறு எவரையோ கரணியங் காட்டித் தம் சமயத்துறைக்கு மறைமுகமாக நல்ல வரவேற்பைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

சமயத்துறையில் ஆரியப் பார்ப்பனர் செய்யும் அடாத செயல்களுக்கு அளவே இல்லை. கடவுளர்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள்போல் இவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் மற்ற இனத்தாரை வெறுப்படையச் செய்கின்றன. அலுவலகங்களில் நிகழ்த்தப் பெறும் கருவிப்பூசை (ஆயுத பூசை) கலைமகள் பூசை (சுரசுவதி பூசை) முதலியவற்றிற்கும் அவர்களே கரணியம். விளக்கணி விழா (தீபாவளி) நாட்களில், குறைந்தது பத்து பதினைந்து நாட்கள் தெருக்களில் நடமாட முடியாமல் செய்யும் வகையில் குவியல் குவியலாக வெடிகளைக் கொளுத்திப் போட்டுக் காட்டுத்தனமாக வெறிக்கூச்சல் இட்டுக்கொண்டு ஊரையே அலைக்கழிப்பதும் அவர்களே ! நம் மக்களில் ஒரு சில செல்வக் குடும்பங்களே அவர்களை பின்பற்றி அவ்வாறு செய்கின்றன. இவர்கள் விளக்கணி விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப் பாடிக்கொண்டு தெருவலம் வருவதும் ஊரை இவர்களுக்காகவே ஆக்கிக் கொள்வதும் போல இல்லையா? அக்கால் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கவும் இடையூறு நேர்வதை அரசும் கவனிப்பதில்லை. இந்தப் பாவைப் பாடல் வழக்கம் தேவைதானா? இந்தப் பாடலைப் பாடாத நாட்களில் விடிவதே இல்லையா? இவர்களின் இதழ்களும் விளக்கணி விழாவுக்காக மலர்கள் வெளியிடுகின்றனவே தவிர, பொங்கலுக்கு வெளியிடுவதில்லை.

பொது வாழ்க்கையில் இவர்களின் கட்டுப்பாடு தனி. இவர்கள் வாழும் பகுதிகளில் வேறு இனத்தவர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு வீடுகள் கிடைப்பதே அரிது. பல குடியிருப்புகள் கொண்ட பெரிய வீடுகளில் இவர்களைத் தப்பித் தவறிக் குடியமர்த்தினால் ஒரிராண்டுகளில் அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டுப் பார்ப்பனர் குடும்பங்களாகவே பார்த்துக் குடியமர்த்திக் கொள்ளுதல் இவர்கள் பழக்கம். சில வீட்டுப் பகுதிகளில் பிராமணர்களுக்கே வீடு விடப்படும். (To let only for Brahmins) என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம். இவர்கள் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்களை இவர்கள் என்றும் மதிப்பு வைத்தே அழைப்பதில்லை. அவர்களையும் சரி, பார்ப்பன அதிகாரிகளின்கீழ்ப் பணியாற்றும் பணியாட்களையும் சரி, அடே, அடி என்னும் சொற்களால்தாம் அழைக்கின்றனர். அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களும்கூட அவர்களை வாய்கூசாமல் ‘அடே, அடி’ எனக் கூப்பிடுவதைக் கண்டு மனம் நோக வேண்டியுள்ளது.

நிலா மண்டிலம் போகும் இக்காலத்திலும் பிற இனத்தவரைத் தொட்டால் தீட்டு என்று கடுமையாகக் கருதும் பார்ப்பனர்கள் பெரும் பகுதியும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் வீடுகளில் பிற இனத்தவரை உள்ளேவிட இன்றுகூட இசைவதில்லை. இராசாசியின் தீண்டாமைப் போராட்டத்தைப் பாராட்டும் தினமணிச் சிவராமன்கள் இவ்வகையில் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கண்டால், இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கே என்பது தெற்றெனப் புலப்படும். துக்ளக்கில் இவர்களுக்காகப் பரிந்து எழுதிவரும் அரைப் பிராமணனான செயகாந்தனுக்குப் பார்ப்பன இனத்தவரின் முழுக்கேடுகளும் தெரிய வழியில்லை. அவர்களின் நச்சுத்தனத்தை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அகற்ற வழியில்லையானால் அவர்களை எப்படித் தமிழ் இனத்தோடு ஒப்ப எண்ணுவது? தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் என்று கருதப்பட வேண்டும் என்றால், ஆங்கிலம் பேசுகின்ற தமிழரை ஆங்கிலேயர் என்றன்றோ கருதுதல் வேண்டும்? ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கரைக்கூட ஆங்கிலேயர் என்று அவர்களே ஒப்புக்கொள்ளாதபோது, தமிழ் பேசும் எவரும் எப்படித் தமிழர் ஆவார்? வேண்டுமானால் செயகாந்தன் என்னுடன் வரட்டும்; எனக்குத் தெரிந்த ‘சமசுக்கிருத’ ஆசிரியர் பலர் தமிழர்களாய் உள்ளனர். அவர்களை ‘பிராமணர்கள்’ என்று அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று பார்ப்போம். சமசுக்கிருதம் பயிற்றும் ஆசிரியர் ஒருவர் தமிழராகவிருந்தார் என்பதற்காக, அவரிடம் அம்மொழியைக் கற்க விரும்பாத பார்ப்பன மாணவர்கள் அத்தனை பெயரும் இந்தி வகுப்புக்குச் சென்றதை நானறிவேன். இப்பொழுதும் நிலை மாறிவிடவில்லை. அண்ணாமலையில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த ஒருவர், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தும் பார்ப்பனர் அவரைப் போற்றவில்லை.

பார்ப்பனப் பெண்களில் சிலர் நம் தமிழ இளைஞர்களை வறிதே வந்து மணந்துகொள்கின்றனர். பார்ப்பன வீடுகளில் பணியாற்றும் தமிழ இளைஞர் சிலர் பார்ப்பனப் பெண்களை விரும்பி மணந்து கொள்வதையும் பார்க்கின்றோம். எனினும் பார்ப்பன இளைஞர்கள் தமிழ்ப் பெண்களை மணந்துகொண்ட செய்தி மிகவும் அரியது. தமிழ் இளைஞர்கள் பார்ப்பனப் பெண்களை மணந்துகொள்ளும் வகையில் பல அடிப்படைக் கோளாறுகளே கரணியங்களாக இருக்கின்றன. அவ்வாறு மணந்து கொண்ட பெண்களும் அவ் விளைஞர்களின் கொள்கைகளையும் போக்குகளையும் அறவே திசைதிருப்பி விட்டு விடுகின்றனர். இவற்றிற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். பார்ப்பனத் தமிழினக் கலப்பு தவிர்க்க முடியாததே! அதனால் பார்ப்பனர்கள் தமிழர்களைத் தழுவிக் கொண்டனர் என்று கூற முடியாது. மக்களினம் எல்லாம் ஒன்றுதான். அதை வரவேற்கவே செய்வர். ஆனால் கொள்கை வேறுபாடு போன்றவையே இன, மொழி வேறுபாடுகள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றினாலன்றி ஒரு நிலத்தில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை ஓரினத்தவர் என்று கூறிவிட முடியாது.

பார்ப்பனர்களை நாம் தமிழர்கள் என்று ஒப்பினாலும் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பதுபோல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார் பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செருமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதைச் செயகாந்தன்கள் உணரவேண்டும்.

ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத கரணியத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியின் பரிமாறி (Butllor) பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். 'காவிரி ஜலம், கலாசார பலவினம்', ‘பாரத ஞானபூமி' என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்’ ‘இருதய வீக்னசு’ ‘பாரத நாலெட்ச் பூமி’ என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், ‘வாய்மை மேவ் செய்தா’ ‘பண்பாட்டு ஞானீபட’ என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!

தமிழ்மொழியை மட்டும் அவர்கள் வந்து ஒண்டுதற்குரிய குட்டிச் சுவராக்கலாம். அவர்கள் மொழியான சமசுக்கிருதத்தை மட்டும் சிதைக்கக்கூடாது என்பதில் என்ன நடுநிலை உள்ளது? மொழித் துய்மையும் இனத் தூய்மையும் எல்லா மொழிக்கும் இனத்துக்கும் தானே. மொழியிலும் இனத்திலும் தூய்மை பார்க்க வேண்டா என்பதும் எல்லா மொழிக்கும் இனத்துக்குமான பொது அறமாகத் தானே இருத்தல் வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குச் சார்பானவர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தங்களுடைய மனம் போனவாறு எழுதவும், மக்களிடையே எளிதில் பரப்பவும் ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே பிறர் கருத்து வலிவிழந்து போய் விட்டதாகக் கருதிவிட முடியுமா?

தேசிய மொழித் திருட்டு விளையாடல்!

இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63-இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளத்தங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் பேசுபவர் ஏறத்தாழ ஐநூறு பேர்களே ! இந்த ஐநூறு பேர்களின் மொழியைக் கற்றுக்கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்பிக்க 12 பல்கலைக் கழகங்கள் இதுதான் தேசிய மொழித் திரு(ட்டு)விளையாடலா?

மேலும் தமிழ்மொழிப் புலமையிலும் வேறுபாடு காட்டப் பெறுகின்றது. வடமொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழ்மொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழே தெரியாத சமசுக்கிருதப் பார்ப்பனப் புலவராகிய சுனிதிகுமார் சட்டர்சி போன்றவர்கள் தமிழுக்கதிகாரிகள்! தமிழையும் பிற திரவிட மொழிகளையும் சமசுக்கிருதம், இலத்தீன், கிரேக்கம், சாக்சானியம் போன்ற மொழியிலக்கணங்களையும் பழுதறக் கற்ற பாவாணர் போன்றவர்கள் வெறும் தமிழ்ப்புலவர்கள். இந்த வேறுபாட்டு நிலை உள்ள வரை பார்ப்பனர்களைத் தமிழர்களோடு மொழி, இன நிலையில் இணைத்துக் கருதமுடியுமா?

மொழித் தூய்மையைப் பார்ப்பனர்களும் அவர் அடிவருடிகளும் ஒப்புக்கொள்வதே இல்லை. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு மொழி கற்க வரும் மாணவ அறிஞர்களிடம் தங்களுக்குள்ள மேனிலை வாய்ப்புகளால் பிறரினும் முந்திக் கொண்டு போய்த் தாங்கள் பேசுவதே மொழியென்றும் எழுதுவதே எழுத்து என்றும் அவர்களிடம் இட்டுக்கட்டி உரைப்பதும், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தீபம் முதலிய தமிழ்க்கொலை செய்யும் ஏடுகளையே இலக்கிய ஏடுகள் என்று அவர்களிடம் காட்டி விதந்துரைப்பதும், அம் மாணவ அறிஞர்களின் பரிவால் மொழி ஆய்வுக்கென்றும் இலக்கிய வளர்ச்சிக் கென்றும், அமெரிக்கா, செருமனி முதலிய மேலை நாடுகளினின்று அனுப்பப் பெறும் அளவிறந்த பொருளுதவிகளைத் தாங்களே அமுக்கிக் கொள்வதும் அன்றாட நடைமுறைகளாகவிருக்கின்றன. இத்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் கள்ளத்தனங்களுக்கும், முல்லை மாறித்தனங்களுக்கும் ஒரு வரம்பே கிடையாது. சாகித்திய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி என்றும் நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீடப் பரிசு என்றும், பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் இனத்தவர்க்கே தேடிப் பிடித்துத் தரப்பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப் பெறுவதானாலும் அவர்களின் அடிமைகளுக்கே தரப்பெறுகின்றன.

இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறானவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறுபட்ட நாடக வடிவில் உள்ளதுமான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு - அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே சாகித்திய அகாடமி பரிசு கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் அவர்தம் ஆற்றல்களையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கியத் திறனிலும், பா வன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும் அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப்பெறும் வகையில் உள்ள மாறுபாடுகளுட்ம கொஞ்ச நஞ்சமல்ல.

மேலும், தேசிய விருதுகளாகிய ‘பாரத ரத்னா’, ‘பத்மவிபூசண்’ ‘பத்மபூசண்’ போலும் உயர்ந்த பாராட்டுகளும் பெரும்பாலும் அவர் இனத்தவர்களுக்கும் வடநாட்டவர்களுக்குமே கொடுக்கப் பெறுகின்றன. எங்கேனும் தகுதி வாய்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு அவ்வரிசையில் கடைநிலையதான ‘பத்மஸ்ரீயே’ தரப் பெறுகின்றது. இதுவரை மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா'வை பெற்ற பதினைவரில் ஒருவரும் தமிழரல்லர். தமிழ் பேசுபவராகக் கருதிக் கொடுக்கப் பெற்ற திரு. இராசாசியும் பிராமணரே. மற்றுத் தமிழர் தொடர்புள்ள திரு. இராதாகிருட்டிணன் அவர்களும் சி.வி. இராமனும் கூடப் பிராமணர்களே. இந்தியா விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரிலும் பாரத மணியாகத் திகழத் தக்கவர் ஒருவரும் இலர் என்று அவர்கள் கருதுவார்களானால், இந்தத் தமிழர்களும், தமிழ்நாடும் வடநாட்டுத் தலைமையின்கீழ் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில் என்ன கட்டாயம் இருக்கின்றது?

தனிப்பட்ட ஒருவர் செய்யுந் தீங்கைவிடக் கொடியது. குறிப்பிட்ட ஓரினம், பொதுவான ஒருவகை மொழி, இன வெறுப்புடன், பல நூற்றாண்டுகள் இத் தமிழகத்தில் இயங்கி வருவது பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராக வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர் திறத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்! இவை யெல்லாவற்றையும் விடுத்து, மாந்தர் குலம் எல்லாமும் ஒன்றுதான் என்றால் மத, இன, குல வேறுபாடுகளும் மாந்தரின் உயர்வு தாழ்வு முறைகளும் அடியோடு தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

வானொலிக் கொட்டங்கள் !

வானொலித்துறை அவர்கள் கைகளில் கிடைத்துவிட்டது என்பதற்காக அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிக்கும் கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும் அருள் வாக்கு என்னும் பெயரால் அவர்களின் வேத, புராணப் பொய்யுரை புளுகுரைகளே பெரிதும் பரப்பப்படுகின்றன. இல்லை திணிக்கப்பெறுகின்றன என்றே சொல்லலாம். பிற சமயச் சமன்பாடு என்னும் போர்வையில் ஓரிரு கால் இசுலாமிய, கிறித்தவ மதக் கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. எனினும் அவற்றை யெல்லாம் எடுத்து விழுங்கும் அளவுக்கு இவர்களின் வேத புராணக் கருத்துகள் வலிந்து ஒலிபரப்பப் பெறுகின்றன. அதுவுமின்றி இடையிடையே ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளும் கருத்தளவிலோ மொழியளவிலோ தமிழ் இனத்திற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றன. அவற்றில் வரும் கதைகள், பாட்டுகள், நாடகங்கள், உரையாடல்கள் அனைத்தும் பார்ப்பனர் வீட்டுப் பழக்க வழக்கங்களை அடியொட்டியும், அவர் வழங்கும் சிதைவுச் சொற்களையும், இழுப்புச் சொற்களையும் கொண்டுமே விளங்குகின்றன.

வானொலிப் பாடல்களைக் கேட்கவே முடியவில்லை. திரைப்படங்களில் வரும் இழிந்த, அருவருப்பான இருபொருள் கொண்ட இழுப்புப் பறிப்பான கெக்கலிசை முக்கல் முனகலோசை கொண்ட பாடல்களாகவே பொறுக்கியெடுத்து ஒலிபரப்பப்படுகின்றன. அதுவும் இரவு நேரங்களில் படுக்கையறைத் தொடர்பாகப் பச்சையான பொருள் தரக்கூடிய பாடல்களையே அங்குள்ள பார்ப்பனர்கள் தேர்ந்து ஒலிபரப்புகின்றனர். தமிழில் இசையும் இல்லை, நல்ல கருத்துள்ள பாடல்களுமில்லை என்று மக்கள் தாமே உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அப்படிச் செய்கின்றனர். தமிழ்மொழியை, இசை, உரை, நாடகம் அனைத்துத் துறையிலும் இழிவுபடுத்த வேண்டுமென்பது இவர்கள் கருத்து. கருநாடக இசை என்பதாகக் கூறித் தெலுங்குத் தியாகராயர் பாடல்களே திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்படுகின்றன. இவை இரண்டையும் மாறி மாறி ஒலிபரப்புவதில் அவர்களுக்கு ஒர் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறலாம். தமிழ் மொழிப் பாடல்களைப் பகடி செய்வது போலும், தமிழ்ப் பாடல்கள் என்றால் இப்படித் தான் கீழ்த்தரமாக இருக்கும் என்று காட்டுவது போலும், மிகவும் இழிவான பொருள் தரும் இழுப்பிசைப் பாடல்களையே பொறுக்கி ஒலிபரப்புவது, அவர்களின் சமயக் கருத்துகள் நிறைந்த தெலுங்கிசைப் பாடல்களில் ஒர் உயர்ச்சியைக் காட்டுவதற்காகவே ஆகும். இல்லெனில், இக்காலத் திரைப்படப் பாடல்களிலேயே ஒரளவு உயர்ந்த பொருள் கொண்ட பாடல்களும் இருக்க அவற்றை விட்டு விட்டு, இழிந்த இசையும் பொருளும் கொண்ட பாடல்களையே பொறுக்கிப் போடுவார்களா?

நம்மவற்றின் இழிவையும் அவர்களின் சிறப்பையுமே விளம்பரப் படுத்துவது அவர்களின் பல்வேறு தந்திர முறைகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு எது பிடித்ததோ, சார்பானதோ அதைப் பனிமலை என்பார்கள். அவர்களுக்கு எதைப் பிடிக்காதோ, எது சார்பு இல்லாததோ, அதைக் குப்பைமேடு என்பார்கள். அவர்கள் கதைகளும் அவ்வாறான நோக்கில் வரைந்தவைதாம். இராமனை மாந்தருள் மிகவுயர்ந்தவனாகக் கற்பிப்பார்கள். இராவணனை (அவன் ஆரியர்களுக்கு மாறானவன் என்பதால்) மிகவும் தாழ்ந்தவனாகக் கற்பித்து உரைப்பார்கள். வானொலிப் பாடல்கள் தேர்விலும் அதில் வரும் கதை, நாடகங்கள், பாட்டுகள் இவற்றைக் கொண்டும் இவர்களுக்குத் தமிழ்மொழியின் மேல் உள்ள வெறுப்பையும் சமசுக்கிருதத்திலும் இவர்களின் வேத, புராண, இதிகாசங்களில் கொண்ட வெறியையும் நன்கு தெரிந்துகொள்ளலாம்.

தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு இவர்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்த ஒன்று. எப்பொழுது இராசாசியின் வாழ்த்தை மட்டும் பெற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியைத் தி.மு.க.வினர் புறக்கணித்தனரோ அன்றிலிருந்தே தி.மு.க. அழிந்துபோக வேண்டும் என்பது இவர்கள் குறிக்கோள். கடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இவர்கள் இல்லாத கடவுளர்களை யெல்லாம் வேண்டாத வேண்டுதல் செய்ததைத் தன்மானத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கலாம். வானொலியிலும் இதே வகை வெறுப்பை அன்றாடம் இவர்கள் உமிழ்ந்து வருவதை அறிகையில் நாம் அவர்களின் அழிம்புகளை மற்தது, அவர்கள்மேல் அன்பு காட்ட முடியாது. திரு. ம.கோ. இராமச்சந்திரன் இவர்களுக்கு வேண்டியவராக என்றும் இருந்ததில்லை. திரைப்படங்களில் அவரின் ஆடல் பாடல்களும் உரையாடல்களும் தி.மு.கவைச் சார்ந்திருந்தமையால் அவரை இந்தப் பார்ப்பனர் என்றுமே வெறுத்து வந்துள்ளனர். ஆனால், அண்மையில் திரு. ம.கோ. இராமச்சந்திரன் ஆளுங்கட்சியாகிய தி.மு.க.வை வேறு சில அரசியல் காரணங்களுக்காகக் கண்டித்து வெளியேறி, வேறொரு கட்சியை அவர்களுக்கு எதிராகத் தொடங்கிக் கொண்டார் என்பதற்காகவே, அந்தப் பிரிவு ஏற்பட்ட நேரத்திலும் சரி, அதற்குப் பின்னும் சரி, திரைப்படங்களில் அவர் பாடுவன போல் உள்ள பாடல்களாகவே பார்த்துப் பொறுக்கி அவற்றையே ஒலிபரப்பி வந்ததையும் வருவதையும் உணர்கின்றவர்கள். இவர்களின் மனக் காழ்ப்பையும் நடுநிலை திறம்பிய குறும்புத் தனங்களையும் நன்றாக அறியலாம்.

சென்னை, திருச்சி, புதுவை ஆகிய மூன்று வானொலி நிலையங்களிலும், தில்லியில் உள்ள ‘விவித பாரதி'யிலும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனர்களே கொட்டமடித்து வருகின்றனர். அவற்றில் உள்ள பார்ப்பனத்திகள் பேசுகின்ற திண்ணைப் பேச்சுகளைத் தன்மானமுள்ள எந்தத் தமிழனாலும் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மொழிப் பற்றும், இனப் பற்றும் அற்ற தமிழின முண்டங்கள் சிலரின் தலையாட்டுதல்களே தமிழர்களின் ஒருமித்த கருத்துகளாகிவிட முடியாது.

புதுவை வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் ‘கிள்ளைகளே கேளுங்கள்’ என்னும் பகுதியில் அங்குள்ள பார்ப்பனத்தி ஒருத்தி ஒருநாள் கீழ்வருமாறு பள்ளி செல்லும் பிள்ளைக்கு அறிவு(!)றுத்தினாள்.

என்ன குழந்தைகளே! காலையில் ஸ்நானம் பண்ணி டிரஸ், செய்துகொண்டு ஸ்கலுக்குப் புறப்பட்டுட்டீங்களா? உங்கள் புக்ஸ், நோட்புக்ஸ், பென்சில், பேனாக்களை யெல்லாம் டயம் டேபிள் பிரகாரம் கரெக்டா எடுத்து வச்சீட்டிங்களா? டிபன் சாப்பிடறதுக்குள்ளே நான் சொல்றதையுங் கேளுங்க’ என்று தொடங்கி ‘அவாள்’ பார்ப்பனச் சேரி மொழியிலே இரண்டு மூன்று நிமையயங்களிலே நஞ்சையே கொட்டினாள். இப் பார்ப்பனப் பெண் ஏதோ ஆங்கிலேயக் குழந்தைகட்குச் சொல்வது போல் தோன்றியதே தவிர, தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குச் சொன்னதாகத் தெரியவில்லை. குளித்தலை ஸ்நானம் என்றதையும், உடையுடுத்தலை டிரஸ் செய்தல் என்றதையும், பொத்தகங்களையும், சுவடிகளையும் புக்ஸ், நோட்புக்ஸ் என்றதையும் பிற சொற்களையும் கேட்கும்பொழுது இவள் தமிழைக் கெடுப்பதற்காக வேண்டுமென்றே சொன்னதாகத் தெரிகின்றதே தவிர, அங்குள்ள ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் அவளுக்குத் தெரியாமல் அப்படிச் சொல்லிவிட்டாள் என்று நினைக்கத் தோன்றவில்லை. இன்னொரு முறை அதே வானொலியில் அந்தப் பார்ப்பனத்தியே ‘மார்கழி’ மாதம் அதிகாலையில் எழுந்து குளித்துப் பாவைப் பாடல்களைப் பாராயணம் பண்ணினா, புயல் அடிக்காது; கடல் பொங்காது; பசுக்களெல்லாம் குடங் குடமாகப் பால் பொழியும்; பயிர்களெல்லாம் வானத்தளவு வளர்ந்து பயன் தரும்” என்று கூறுவதைக் கேட்க நேர்ந்தது.

அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் தமிழகம் கடுமையான புயலாலும், மழையாலும் மிகவும் துன்புற்றது. அந்த நேரத்தை எவ்வாறு தம் பழங் கருத்துகளுக்குப் பக்கத் துணையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் பார்ப்பனர் என்பதைப் பாருங்கள். இராமாயண, பாரதக் காலத்தில் உள்ள மக்களாக நம்மை கருதிக் கொண்டு அவள் புளுகினதைக் கேட்கையில் ஒருபுறம் எரிச்சலும், ஒருபுறம் வருத்தமும் வந்தன. இவ்வளவு உயர்ந்த கருவி இவர்களின் கைகளில் கிடைத்துக் கொண்டு, எவையெவற்றிற்கோ பயன்பட்டுச் சீரழிகின்றதே என்பதில் எரிச்சலும், நிலவு மண்டிலக் காலத்திலும் நம்மவர்களை இந்த ஆரியப் பார்ப்பனர்கள் இப்படி ஏமாற்றுவார்களானால் நம் முன்னோர்களை எப்படி ஏமாற்றியிருப்பார்கள் என்பதில் வருத்தமுமே எஞ்சின.

மேலும் வானொலியில் நடக்கும் அழிம்புகளைச் சொல்வதானால் ஏடே கொள்ளாது. அதில் கொள்ளை போகும் பணம் தமிழ்மொழியை அழிக்கவும், தமிழர்களை ஒடுக்கவுமே செலவிடப்பெறும் தமிழர் பணமாகும். அப்பணத்தைப் பார்ப்பனர்கள் பங்குபோட்டுக் கொள்ளும் வகைகளைச் சொல்லி முடியாது. எவ்வளவு சிறந்த மொழிப் புலவரானாலும் இசைப் புலவரானாலும் தன்மானமுள்ள தமிழர்களானால் அவ் வானொலி நிலையங்களின் முற்றங்களிலும் ஒதுங்க முடியாது.

தமிழகத்தின் தனிப்பெரும் புலவர்களாகிய மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரின் குரல்களை இவ் வானொலி நிலையங்கள் ஒருமுறைகூடப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. ஆரியப் பார்ப்பனரின் தமிழ் அடிவருடிகளே வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கு அங்காந்து கிடந்து இடம்பிடிக்கின்றனர். பார்ப்பனரின் யானை வாய்களுக்குத் தப்பி விழும் எச்சில்களே இவ் வெறும்புகளுக்கு நல்லுணவாகப் பயன்படுகின்றன. அப்பெருமையில் இவர்கள் தலை கால் புரியாமல் நடந்துகொள்ளுகின்ற வகைகள், இவ் வேதுங்கெட்ட தமிழர்களுக்கும், அவர்களின் கைகளில் உள்ள உலகின் உயர்ந்த மொழியாகிய தமிழுக்கும் மறைமுகமாக கேடுகளாகவே விளங்குகின்றன. இவ்வானொலிப் புலவர்கள் வடமொழிப் பெயர்களாகக் காட்டுகின்ற இசைப்பெயர்கள் முழுவதும் திரிக்கப் பெற்ற தூய தமிழிசைப் பெயர்களே என்பதைத் தமிழிசை வல்லோர் நன்கு உணர்வர். இசைப்பேரரசு, பண்ணாராய்ச்சிப் பாவாணர், குடந்தை சுந்தரரேசனார் இவ்வகையில் செய்துவருகின்ற ஆய்வுரைக்கு எந்தப் பார்ப்பானும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முந்தைய விபுலானந்த அடிகளின் அரும்பெரும் ஆய்வுரைகளும் புறக்கணிக்கப் பெறுகின்றன. இற்றைக் கருநாடக இசை முழுவதும் தூய தென்தமிழ் இசையேயாகும் எனத் தம் துண்மாண் நுழைபுல வன்மையால், உரக்கப் பேசி மெய்ப்பித்து வருகின்றார் என்னும் கரணியத்தாலேயே, இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனார்க்கு வானொலியிலும், பிற இசை நிகழ்ச்சிகளிலும் இப் பார்ப்பனர்கள் இடம் தருவதே இல்லை. இதையறிந்து ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் தமிழுக்கோ தமிழினத்திற்கோ ஆக்கம் உண்டாகும்படி பட்டிமன்றமோ, மாநாடோ ஊரே வியக்குமளவிற்கு நடத்தி வானொலித் துறைக்குச் செய்தியறிவித்துக் கொண்டாலும்கூட, அவர்கள் வந்து அதைப் பதிவதும் இல்லை; வானொலியில் ஒலிபரப்புவதும் இல்லை. ஆனால் அவர்கள் இன ஆக்கத்திற்கும் பெருமைக்கும் உகந்தவாறு, இராமாயணச் சொற்பொழிவோ, பாரதக் கதைப் பட்டிமன்றமோ, போன்று ‘அவாள்’ இன நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடுவதில்லை. எங்கேனும் ஒரு சிறிய இடிந்த கோவில் புதுப்பிக்கப் பெற்றுக் குடமுழுக்குச் செய்யப் பெற்றால்கூட அதன் மேளதா சங்கள் உட்பட அத்தனை நிக்ழச்சிகளையும் ஏதோ ஒர் ஊசைப் பார்ப்பானையோ, பார்ப்பனத்தியையோ விட்டு நேர்முக வண்ணனை செய்து வானொலியில் போட்டுவிடுவார்கள். ஒருமுறைக்கு இருமுறைகூட அத்தகைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பெறுவதை ஊன்றிக் கவனிப்பார் அறிந்திருக்கலாம். அவர்கள் வீட்டுச் சமையல் திறங்கள் கூட, அம்மாமிகளால் அன்றாடம் வானொலியில் திக்கித் திக்கிச் சொல்லப் பெற்று அமர்க்களத்தப்படுகின்றது என்றால், பிறவற்றிற்குக் கேட்கவே வேண்டியதில்லை.

‘கிரிக்கெட்’ என்னும் மட்டைப்பந்து விளையாட்டின் நேர்முக வண்ணனையை வானொலியில் போடுவதுங்கூட அவாள் இனத்துக்கான ஒரு பொழுதுபோக்கிற்காகவே ஆகும். அக்காலங்களில் சிறிய வானொலிப் பெட்டியும் கையுமாக அலையும் அவாள் இனச் சில்லுண்டிகளும் இப்பி இளைஞர்களும் இளம் பெண்டிரும் தெருவுக்குத் தெரு, அலுவலகத்திற்கு அலுவலகம் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லை. நம் இளைஞர்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதே இல்லை. சிற்சில இடங்களில் அவர்களுடைய பகடிப் பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் தமிழின இளைஞர்களைக் கூட அரிதாகத்தான் பார்க்கவியலும். அண்மையில் தஞ்சையில் உ.த.க. நடத்திய தமிழன் பிறந்தகக் கருத்தரங்குச் செய்தியை வானொலிக்கும் செய்தித்தாளுக்கும் அறிவித்திருந்தும் அதைப்பற்றி ஒரு செய்தியும் போடாத வானொலியும் பார்ப்பன இதழ்களும் திருவனந்தபுரத்தில் ஐந்து நாட்கள் நடத்திய இராமாயண ஆராய்ச்சி மாநாட்டைப் பற்றிய செய்திகளை மிகுந்த அளவில் விளம்பரப்படுத்தின. மொத்தத்தில் சொன்னால் வானொலி நிலையங்கள் பார்ப்பான் வீட்டுச் சமையலறைகள்! அவாள் இனம் சேர்ந்து அரட்டையடிக்கும் தெருத் திண்ணைகள்! அவர்கள் ஒருங்குகூடிப் பொழுதுபோக்கும் திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பகுதிகள் என்று சொல்லலாம்.

பொதுவாக வானொலித் துறையிலும் சரி, கலை, இசை, நாடகத் துறையிலும் சரி ஒன்றால் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவனடி தழுவிய தமிழக் கேடர்களாகவோ, அவன் வேத, புராண, இதிகாசக் கருத்துகளைப் பரப்பும் வகையில் பாடுபடுபவனாகவோ இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் முன்னுக்கு வரமுடியும்; அப்பொழுதுதான் அவனை அவர்களுடைய தாளிகைகள் புகழும்; வானொலிகள் இடந்தரும்; நாடக மேடைகள், திரை மேடைகள் அவனுக்கு வழிவிடும். இல்லெனில் அங்கங்கே அவனுக்குத் தாழிடப்படும்.

திரைப்பாட்டாசிரியர் கண்ணதாசன், தி.மு.க.வினின்று விலகி அவர்களைத் தழுவிக்கொண்ட பின்னரும், ஏ.பி. நாகராசன் அவர்களின் புராணக் கருத்துக் கதைகளையே தொடர்ந்து படமெடுத்த பின்னரும், நாடக நடிகர் மனோகர் அவர்களைச் சார்ந்து அரங்கேற்றின பிறகும், திருவாட்டி இசைப்பேரரசி எம்.எசு. சுப்புலட்சுமி அவர்கள் இனமாகவே மாறிய பிறகுந்தான் அவர்களைப் பார்ப்பனர்கள் வானளாவப் புகழத் தொடங்கினர். ம.கோ. இராமச்சந்திரனை இராசாசி வாழ்த்திய பின்னரே பார்ப்பனர் இதழ்கள் அவருக்கு விளம்பரங்கள் கொடுத்தன. அவர்களின் இனத்தில் ஒரு சிறுவனோ சிறுமியோ கலையுலகத்தில் கால் வைத்தாலும் சரி, அவர்களைப் பற்றி அவர்களின் இதழ்கள் எழுதுகின்ற பாராட்டுரைகளும், புகழ்ச்சி மாலைகளும், நம் இனத்தவரின் மிகச் சிறந்த கலைஞர் ஒருவருக்குக் கூடக் கிடைப்பதில்லை. இவ்வாறு கலைத்துறையும் வானொலித்துறையும் பார்ப்பனரின் அனைத்ததிகார வல்லாண்மையின் கீழ், நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் அவர்களின் சூழ்ச்சிக்கிடையில் சிக்குண்டு ஆட்பட்டிருப்பதைப் பார்த்தால், தமிழர்கள் இனி எதிர்காலக் கலையுலகத்தில் இடம்பெறுவார்களா?, பெற்றால் முன்னுக்கு வருவார்களா என்று எண்ணவே அச்சமாகவிருக்கின்றது.

நூல் வெளியீடுகளிலும் பார்ப்பனர்கள் நுழைந்து குழப்பாமல் இல்லை. செய்தித்தாள் துறையில் இவர்கள் எப்படி உள்ளே புகுந்து குட்டை குழப்புகின்றனரோ, அப்படியே நூல் வெளியீட்டுத் துறையிலும் மிக மும்முரமாக ஈடுபட்டுத் தம் பழைய வேத, புராண, இதிகாசங்களுக்கே மிகுந்த விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். பொதுவாகவே இவர்கள் எழுதுகின்ற தமிழ்நடையோ கருத்துகளை வெளிப்படுத்தும் முறையோ தனி அந்நடையைக் கொண்டே கருத்துகளை வெளிப்படுத்தும் முறையைக் கொண்டே இவர்களின் உட்கிடையை உணர்ந்துகொள்ளலாம்.

‘காவிரித் தண்ணிர்’ என்று இவர்கள் எழுதுவதே இல்லை. ‘காவிரி ஜலம்’ என்றுதான் தினமணி எழுதும். அண்மையில் தினமணியில் பொங்கல் திருவிழா மகர சங்கராந்தி என்றே குறிக்கப் பெற்றது, இராசாசி நினைவாலயத்துக்கு இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக்கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிபட்ட இடங்களையெல்லாம் புண்ணிய தலமாகக் கருதவேண்டும்’ என்று ‘சுதந்திர’க் கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளியிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண்பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள்.... மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் துய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத்தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது. இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த இந்த ‘பூமி’யை இறைவன் காப்பாற்றட்டும்″.

– எப்படி? துக்ளக் ‘சோ’வின் தூக்கி வைத்துப் பேசும் தன்மை, ‘அவாள்’ இனத்துத் தலைவர் என்றால் உலகத்துக்கே தெய்வம்; அவர்களைவிட மேம்பட்டவன் ஒருவனும் இருக்க முடியாது; அல்லது இருக்கவும் கூடாது என்பது பார்ப்பனர்களின் ஒருமித்த கருத்து. இராசாசிக்கென்றே சில தனித்தன்மைகள் உண்டு. அவை அவருக்குத் தான் சொந்தம். அவர் தன்மைகள் பிறர்க்கு எப்படி வரும்? பெரியார் இராமசாமியின் தனித்தன்மைகள் எப்படி துக்ளக் இராமசாமிக்கு வரமுடியாதோ, அப்படியே இராசாசியின் தன்மைகள் ஒரு கந்தசாமிக்கு வரமுடியாது. மற்றபடி இராசாசி என்ன உலகத்துக்கே, அல்லது இந்தியாவுக்கே தெய்வமா? அவரைப் போல் நாட்டிற்கு உழைத்தவர்கள் இல்லையா? பார்ப்பன இனத்தலைவர் ஒருவர் இறந்துபோனால், அவர் வாழ்ந்ததற்காக இறைவன் இந்தப் பூமியைக் காப்பாற்றட்டும் என்றால் அவர் இருந்தபோது ஏன் இதைக் காப்பாற்றவில்லை? ‘துக்ளக்’ சோ ஏன் இறைவனிடம் அப்பொழுது பரிந்துரை செய்யவில்லை. இறைவன் என்றால் அவன் பார்ப்பன இனத்துக்கு மட்டுந்தானா சொந்தம்? அவர்களுடைய பாட்டனா அவன்?

இவற்றிலிருந்தெல்லாம் என்ன தெரிய வருகிறது என்றால் அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அச்சாகி வருவதற்கான வாய்ப்புகளை அவர்கள் வலிய ஏற்படுத்திக்கொண்டு, மக்களை எந்த அளவில் என்றென்றும் மடயர்களாகவே, தங்கள் நல்வாழ்வுக்குத் துணை போகின்றவர்களாகவே மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்பதுதான். சொல்வதைச் சொன்னால் கேட்பாருக்குக் கொஞ்சமேனும் மதி இருக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லுவதைக் கொஞ்சம் கவனித்தால் போதும்; எந்த நோக்கத்தில் அவர்கள் சொல்லுகின்றார்கள். எந்த நோக்கத்திற்காகச் சொல்கின்றார்கள் என்பனவெல்லாம் விளங்கிக்கொள்ள முடியும்.

தமிழர்களுக்கு இழிந்த பெயர்கள்!

‘துக்ளக்’ இராமசாமி எழுதி வரும் வாசிங்கடனில் நல்லதம்பி எனும் தொடர்கதையில் வரும் கதைத்தலைவனாக இப்பொழுதுள்ள முதலமைச்சரைத்தான் கிண்டல் செய்து எழுதுகின்றார் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாகத் தெரியும். அதைப் பற்றிய ஆய்வுகள் இருக்கட்டும். ஆனால் அதில் நல்லதம்பிக்குத் துணையாக வருபவர்களின் பெயர்களையும் அவர்கள் பேசிக் கொள்கின்ற தமிழ் (!) உரையாடல்களையும் பார்த்தாலே ‘சோ’ என்னும் இருபதாம் நூற்றாண்டுப் பார்ப்பானுக்குத் தமிழினத்தின் மேல் எவ்வளவு எரிச்சல் – வெறுப்பு இருப்பதைக் கண்டுகொள்ளலாம். நல்ல தம்பியின் நண்பன் பிசாசு, முக்கண்ணனாம்! இன்னொருவன் உலக்கைக் கொழுந்தாம். எப்படி! வேடிக்கைக்காக இப்படி எழுதுவதாகக் கூறிக்கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவதும் தமிழ் மொழியைத் தாழ்த்துவதுந்தான் ‘துக்ளக்’கின் நோக்கம். தனக்கு நேர் எதிரிடையான ஓர் இன அரசனின் பெயரைத் தனக்கே உரிய ‘கிண்டல்’ மனப்பான்மையுடனும் கோமாளித்தனமாகவும் சூட்டிக்கொண்டு, இப் பிராமண வழக்கறிஞன் எழுதிவரும் கதைகளைப் போலத்தான் அன்றைய இராமாயண, மகாபாரதங்கள் எழுதப்பெற்றன. நல்லதம்பிக் ககதையில் வரும் இட்சுகாக், பர்ட்டன், நிக்சன் கீசிங்கர் முதலிய உண்மை மாந்தர்களையும், நல்லதம்பி, பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய உறுப்பினர்களையும் எதிர்கால மக்கள் படிக்க நேர்ந்தால், முன்னையவர்களின் வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு பின்னையவர்களும் வாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்வார்களா இல்லையா? அப்படிக் கருதிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தக் கோமாளியின் நோக்கம். மேலும் இந்தத் ‘துக்ளக்’ இராமசாமி வைத்த பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய பெயர்களைப் போலத்தான் இராமாயணத்திலும் தமிழர்களுக்கு இழிந்த பெயர்களே சூட்டப் பெற்றிருக்கின்றன. கும்பகர்ணன் (கும்பம் – குடம். கர்ணன் - காதன் = குடக்காதன்) மண்டோதரி (மண்டை - பானை, உதரம் - வயிறு - பானை வயிறி) சூர்ப்பநகை, (சூர்ப்பம் - முறம், நகை - பல் = முறப்பல்லி) இராவணன் (இரவு வண்ணன் - கறுப்பன்) முதலிய பெயர்களும் இழிவான பொருள் தரும்படி வைக்கப் பெற்றிருக்கின்றன.

நாம் அப் பெயர்களில் உள்ள இழிவுகளை அறியக்கூடாது என்பதற்காக அவை வடமொழியில் வைக்கப் பெற்றுள்ளதை அறியுங்கள். அந்த இராமாயண, மகாபாரதக் கதைகளிலெல்லாம் உள்ள இழிவுகளை எடுத்தெழுதினால் இவ்வேடு கொள்ளாது. இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே சென்னையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனன், நம் இனத்தைப் பார்த்து இவ்வாறு கிண்டல் செய்து எழுதுவதும், அதை நாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் நேருமானால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வினத்தினால் நேர்ந்த – முன்னோர் பட்ட – பாடுகளை நினைத்தும் பார்க்க முடியாதன்றோ? அக்காலக் கதைகளைச் சொல்லி இக்காலத்தில் அவர்களை வஞ்சம் தீர்க்க முடியாமற் போயினும், இக்காலத்தில் நம் கண்முன் நிகழும் அக் கொடுமைகளை நாம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? எனவே நமக்கு அவர்கள் மேல் வளர்ந்துகொண்டு வரும் வெறுப்புணர்ச்சிக்குங்கூட அவர்களேதாம் பொறுப்பன்றி நாமோ நம் செயல்களோ பொறுப்பாவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவற்றை உணர்ந்தோ உணராமலோ இரக்கத்துக்குரிய திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் என்னும் தமிழ்க் குடி(!)மகன் ‘துக்ளக்’ இதழின் மூன்றாம் ஆண்டு விழாவில், அங்குக் கூடியிருந்த கோமாளிக் கூட்டத்தைப் பார்த்து, “வரும் தேர்தலில் முறையாக முடிவுக்கு வர, துக்ளக் உங்களுக்கு வழிகாட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கின்றார். இதைவிட வெட்கங்கெட்ட தனம் வேறு என்ன இருக்க முடியும்? காமராசர் என்னும் தூய தமிழினத் தலைவனுக்குத் துக்ளக் என்னும் ஆரியப் பார்ப்பானைப் பரிந்துரைக்கச் சொல்லித் தான் ஒப்போலை தேடவேண்டுமா? வெட்கம்! வெட்கம்!

இத்தகையதொரு நிலைக்கு வந்ததால்தான் தி.மு.கவை. முன்பே தென்மொழி கண்டித்தது: குற்றமும் சாட்டியது. இன்று தி.மு.க. அதன் விளைவையும் உணர்ந்து திருத்திக்கொண்டு வருகின்றது. மேலும் தி.மு.க. தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய நிலைகளும் பலவுள. ஆனால் திருந்தாத தமிழனைவிடத் திருந்திவரும் தமிழனால் தமிழுக்கும் தமிழினத்திற்கும் ஓரளவேனும் ஆக்கம் பிறக்கும் என்னும் கருத்திலேயே தி.மு.க.வைத் தென்மொழி பாராட்டிக் காக்க முனைந்துள்ளது. (இந் நிலைக்குத் தென்மொழி மேல் கொதிபபடையும் ‘கண்ணதாச’த் தமிழர்கள் ஆழ்ந்து எண்ணி முடிவு கட்டுவார்களாக!).

நூல்கள் எழுதி வெளியிடுகின்ற வகையில் ஆரியப் பார்ப்பனர்கள் ஐந்து வகையான தந்திரங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவை:

வேத புராணங்கள்
வேறுவேறு வடிவில்!

ஒன்று தங்கள் புராண இதிகாசக் கருத்துகளைக் காலத்துக்கும் இடத்திற்கும் தக்கவாறு, வேறு வேறு வடிவங்களுடனும் முறைகளுடனும் மாற்றி எழுதி, அல்லது எழுதுவித்து வெளியிட்டுக் கொண்டேயிருப்பது.

இக்கால் அண்மையில் இறந்துபோன இராசாசிசுடப் பழைய இராமாயண, மகாபாரதக் கதைகளை ஒரு புதிய வகையில் படிப்பதற்கு விருப்புடனும், சுருக்கமாகவும் ஆரியர்க்குச் சார்பான இடங்களை மேலும் சிறிது கவர்ச்சியுடனும், விளக்கத்துடனும் எழுதி வெளியிட்டதும், அவற்றைக் கல்கியினத்தவர்கள் உலக முழுதும், பொதுவுடைமை நாடான உருசியாவிலும்கூடப் பரப்பி, இலக்கக் கணக்கான படிகளை விற்று வருவதும் இக்கருத்தை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். இதுதவிர லிப்கோ எனும் வெளியீட்டுக் குழுமமும் பலவகைகளில் இராமாயண மகாபாரதங்களையும் புராணப் புளுகுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

வெளிநாடுகளில் வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவன் இராசாசி போல் இராமாயண மகாபாரதங்களையா பிழைப்புக் கெட்டுப் போய் உட்கார்ந்து எழுதிக்கொண்டு கிடப்பான்? பிழைப்புக் கெட்டவன் கழுதையைப் பிடித்து சிரைத்தது போல, வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துச் சட்ட துணுக்கமும், அரசியல் அறிவும், ஆட்சியியல் பட்டறிவும், கட்சித் தலைமையும் உள்ள ஒருவர் அத்துறைகளில் நூல்கள் எழுதி நாட்டின் ஆளுமையறிவை வளர்க்க முயலாமல், மாம்பலத்து மகாலிங்க அய்யர் இராமாயணம் போல் பாகவதங்களையா மக்களுக்குச் சொல்லிக் கொண்டு கிடப்பது? ஆனால், அவ்வாறு அவர் எழுதுகிறார் என்றால், அதில் ஒரு வரலாறே அடங்கியிருக்கின்றது. பார்ப்பனருக்கு நாட்டு நடப்புகளைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ இருக்கும் கவலைகளெல்லாம், தங்களுக்கு வழிவழியாக உள்ள சாய்காலைத் துர்த்துவிடக் கூடாதே என்பதும் மேலும் அவர்களுக்கு அவ்வகையில் எவ்வாறு வலிவு சேர்த்துக்கொள்வது என்பதுந்தான்.

தமிழ்நூல் அழிப்பு!

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.

இக்கருத்தை நாம் சொல்வதில்கூட அவர்களுக்கும் அவர்தம் அடிமைகளுக்கும் எரிச்சல் இருக்கலாம். அவர்கள் இனத்தவரும், அவர்களின் தன்மைகளையெல்லாம் ஒருவாறு அறிந்து கொண்டவருமான வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்ற பரிதிமாற் கலைஞரே அவரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் நூலில் இக்கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர் எழுதுகின்ற சில பகுதிகளைப் பாருங்கள்.

“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து, அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர் (பிராமணர்) அரசர் (ஷத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர். இன்னும் அவர் தம் புத்தி நலங்காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமர்ந்துகொண்டனர்” (பக்கம்-33).

“தமிழரிடத்திருந்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” (பக்கம் 33).

இனி. இவ்வாறு தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் முழுவதும் தெளித்து விட்டிருப்பது ஆரியர்தம் திருவிளையாடல்களில் ஒன்று. தமிழர்களுக்குச் சார்பாகவும் நடுநிலையாளர் போலும் சில வரலாற்றுக் கருத்துகளை ஒருபக்கம் எழுதுவது; மறுபக்கம் அவர்களுக்குக் கேடானவும் முற்றும் ஆரியர்களுக்கே ஏற்றந் தருவனவுமான பல கருத்துகளை அதே நூலில் சொல்லி விடுவது. இவ்வாறு அவர்கள் எழுதுவது ஏனெனில், படிப்பவர்கள் தங்களை நடுநிலையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் கருதிக் கொள்ளட்டும் என்பதே! மேலும் திரு. வி.கோ. சூ அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தருமாறு, வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ்மொழி பெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக் கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்! ஆனாலும் அவர் கொட்டிய பிற நச்சுக் கருத்துகளை நாம் நினைவுகூரும் பொழுது, அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத் தானோ அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார் என்றும் கருத வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் அவரினத்துக்குச் சார்பாகவும் ஏற்றம் தரும் வகையிலும் அதே நூலில் கூறிய கருத்துகளையும் தெரிந்துகொள்வது நலம். அவற்றையும் கீழே காணுங்கள்:

“பல்லாயிர வாண்டுகளுக்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது – அக்காடுகளில் தீய விலங்குகள் திரிந்து கொண்டிருந்தன – அங்கும் இங்கும் காட்டு மனிதர்கள் சிலர் கரடிகளெனக் குகைகளில் வசித்தனர் – அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறியவுடலினர்... அவர்கள் கற்கால மனிதர் எனப்படுவர்... கொஞ்சங் காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக்கப்பால் இருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சமவெளிகளிற் கண்ட இக் காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேக காலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் நாகர்கள் எனப்படுவோர். இவர்களில் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர். இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவர். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். தங்கள் ஆடு மாடுகளுக்காகப் புல்லைத் தேடிக் கொண்டு ஊரூராய்த் திரிந்தவர்கள்”. (மேற்படி நூல் பக்கம் 21-23).

“வடமொழி தமிழ்மொழியோடு கலக்கப் புகுமுன்னரே முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டு வழக்கு ஒன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் (வடமொழி)ச் சொற்கள் பின்னதன்(தமிழின்)கண் சென்று சேருமே யன்றிப் பின்னதன்(தமிழின்) சொற்கள் முன்னதன் (வடமொழியின்) கண் சென்று சேரா. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கண் புகுந்தன. தமிழ்ச் சொற்களில் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. (மேற்படி நூல் பக். 35).

“தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும் தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர். (நூல் 1903-இல் எழுதப்பெற்றது). இவ்வாறு இருவரும் ஒத்தியங்கும் இடத்துத் தமிழ்ச்சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பாஷையிற் புகுதலும் இயற்கையே! இதனைத்தடுக்க முடியாது தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமே அன்றி வேறில்லை. பேச்சுத் தமிழில் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிக்கைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின்கண் ஏற்றப் புகுந்தன. மதுரைப் பழந்தமிழ்ச் சங்கத்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமை யாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே... இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையில் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும் நலமே!...” மேற்படி நூல் பக். 136-137).

- எப்படி, தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படுபவரின் உள்நோக்கம்? இந் நூலில் இவர் ஒரோவோர் இடங்களில் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியென்றும், சிறந்த மொழியென்றும் கூறியிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அஃது அவருடைய கருத்தாக நாம் கொண்டு பெருமைப்பட முடியாது. ஏனெனில் தமிழ்மொழிக்கு இயல்பாகவே உள்ள இத்தன்மைகளை இவர்போலும் உள்ள பிராமண நூலாசிரியர்கள் பலர் மாற்றியும், மறைத்தும், குறைத்துமே மதிப்பிட்டுப் போந்தனர். அவ்வாறின்றி இவர் தமிழ் மொழி பற்றிய உண்மையான கருத்துகளைச் சொன்னது பாராட்டுக்குரியதே! ஆனாலும், அவர் அவற்றைச் சொல்லு முகத்தான் தம் உள்நோக்கத்தை மறைத்துவிட முடியவில்லை என்பதற்காகவே இதனை இங்கெடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. இவ்வகையில் இவ்வினத்தவரும் இவரடித் தமிழ்க் கோடரிக் காம்புகள் சிலரும் ஆங்காங்குப் புகுத்திய நச்சுத்தனமான கருத்துகளை யெல்லாம் எடுத்தெழுதின் அவை ஒரு நூலாகவே விரியும். எனவே இதை இவ்வளவில் நிறுத்திக்கொண்டு அவர்களின் மூன்றாவது தந்திர முறையினைப் பார்ப்போம்.

ஆரியத்துக்குத் துணைபோவார்க்குப்
பாராட்டுகளும் உதவிகளும் !

அது, வடமொழி ஏற்றத்துக்கும், ஆரியர்தம் பெருமைக்கும் துணை நின்று நூலெழுதும் தமிழ்ப் புலவர்களைத் தாங்கிப் போற்றிப் பாராட்டுதலும், உதவிகள் முதலியன செய்தலும், அவ்வாறல்லாத பிறரை அந்தத் தமிழ்ப் புலவர்களைக் கொண்டே தாக்கித் தூற்றி எழுதுவதும் மறைமுகமாக இடர் விளைவிப்பதும் ஆகும்.

இத் தந்திரத்திற்காட்பட்டு இவர்களின் பாராட்டுக்கும், உதவிக்கும், அங்காந்துதான், வையாபுரி, தெ.பொ.மீ., சேது முதலிய பெரும் புலவர்கள்கூடத் தம் புலமையை அவர்களுக்குச் சார்பாக விலைபேசியும் விற்றும், பெயரும், புகழும், பெரும் பணமும் பெற்று வந்திருக்கின்றனர். இவ் வழியில் அவர்களைத் தொடர்ந்து போகாதவர்கள் போல் வெளிக்குக் காட்டி, அவர்களின் கருத்துகளை எதிர்த்துப் போகாமல் தம்மை நல்ல பிள்ளைகளாக ஆரியத்துக்குக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர்கள் சிலர் உளர். அவர்கள் தமிழர்களுக்கும் சில நேரங்களில் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதும், அதனால் தமிழராட்சியுள்ள இக்காலத்தில் பல்கலைக் கழகத்துணைக் கண்காணகர்போலும் பெருமையும் பெரும்பொருள் வருவாயும் உள்ள பதவிகளில் அமர்த்தப் பெறுவதும் உண்டு. அத்தகையார் எழுதும் நூல்களில், ஆரியர் குறும்புகளை அவை எத்துணைதாம் அளவிறந்து காணப்படினும் அவற்றைச் சுட்டிச் சொல்லவே அஞ்சுவதையும், தமிழர்களின் அல்லது தமிழின் உண்மையான வரலாற்றுக் கருத்துகளை அவை எத்துணைதாம் உயர்வாகவும் உண்மை சான்றனவாகவும் இருப்பினும் அவற்றை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதையும், ஆனால் மறைத்துவிட முடியாமல் மேலோட்டமாகவே எழுதி அவற்றின் வலுவைக் குறைத்துவிடுவதையும் தெளிவாகக் காணலாம். இதனால் இவர்கள் இருபுறத்தாராலும் பாராட்டப் பெற வேண்டுமென்பதும், இவர்கள் நூல் நன்கு பரவவேண்டும் என்பதும் இவர்களின் உள்நோக்கமாக விருக்கலாம்.

அவ்வகையில் வெளிவந்ததாக அண்மையில் பண்டாரகர் மு. வரதராசனார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலைக் குறிப்பிடலாம். இந்நூலில் திராவிடர்களின் வரலாறே துரானியர்களின் வரவிலிருந்துதான் தொடங்குகின்றது. அவர்கள் வருகையைப் பற்றிய காலக் குறிப்பீடும் இல்லை. தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று பலவிடங்களில் திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கின்றார். தமிழ் எழுத்துத் தோற்றத்தை ஏனோ தானோ என்று மேலோட்டமாகவே குறித்திருக்கின்றார்.

“தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்புத் தந்து போற்றவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழே வீட்டில் பேசித் தமிழராகவே வாழ்ந்த வடமொழியறிஞர்கள் தேவாரம், திருவாசகம் முதலான தமிழ்நூல்களையும் படிக்காமல் புறக்கணித்தார்கள்” என்று, அடிவாங்கி அழுது கொண்டு வீட்டுக்கு வரும் சோணிப்பிள்ளை போல் முணகித் தொலைத்திருக்கின்றார். தெ.பொ.மீ அமர்ந்த இடத்தில் தாம் அமர்த்தி வைக்கப்பெற்றதன் பின் (1972இல்) வெளிவந்த நூல் இதுவாகையால், அவர் சாயலில் ஆரியத்தை முட்டுக் கொடுத்துத் தாங்கி வலிக்காமல் குட்டியிருக்கின்றார். இவர்தம் கைகள் வலிக்கும் என்று கருதினாரோ, அல்லது அவர்களின் மண்டை வலிக்கும் என்று கருதினாரோ தெரியவில்லை.

கழகக் காலத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள பகுதி இவரை வெறும் ஓர் இலக்கியப் பேராசிரியர் என்னும் அளவில்தான் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதற்குப் போய் ‘வரலாறு’ எழுதுவானேன். கழகப் பாடல்களில் உள்ள கருத்துரைகளை யெல்லாம் பல தலைப்புகளில் திரட்டிப் பல்சுவைத் திரட்டுகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கலாமே! வரலாறு என்பதை எப்படி எழுதுதல் வேண்டும் என்பதை மொழி மூதறிஞர் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம் முதலிய நூல்களைப் பார்த்தேனும் மு.வ. உணர்ந்து கொள்ளுதல், அவர்க்கும் நல்லது அவர் எதிர்காலத்துக்கும் நல்லது என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். ஆரியத்தைத் தழுவிக் கொள்வதும் அதன் அடிப்படுப்பதும், இத்தகைய வரலாற்று நூல்கள் சாகித்திய அகாடமி வழியாக வருவதற்கும், வீடுகளும், தெருக்களும் மலைத் தோட்டங்களுமாகவே வாங்கித் தள்ளுவதற்கும் ஒருவேளை பயன்படலாம். அல்லது மு.வ.வின் வையாபுரித்தனத்தை எதிர்காலத் தமிழ் மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகவும் பயன்படலாம். ஆனால், இத் தொடை நடுங்கித்தனமெல்லாம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் இன்னும் எவ்வளவோ நடை போட வேண்டிய தமிழ்க் குமுகாய அடிமை நீக்கத்திற்கும் துளியும் பயன்படாது.

மேலும், தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கருத்துகள் இவர் மனக் கசண்டை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளன. இவர் போலும் வெறும் கதைகள் கட்டுரைகளாகவன்றி, தமிழையே கட்டிக் காத்துத் தமிழ்ப் பேரினத்தின் தாழ்ந்த நிலையை நிமிர்த்துகின்ற தனிச்செந்தமிழ் ஆராய்ச்சி நூல்களாகப் பலவற்றை இந்நூற்றாண்டில் எழுதிக்காட்டிய மொழிநூல், மூதறிஞர், தனித்தமிழ் ஞாயிறு பாவாணரைப் பற்றி இப்பகுதியிலோ, நூலிலோ ஓரிடத்திலும் பெயரளவிலும் இந்நூலில் குறிக்கப்பெறவில்லை. நேற்றுப் பிறந்த மொட்டைப் பயல்களையெல்லாம் இலக்கிய ஆசிரியர்களாகக் காட்டியிருக்கும் இவர், இவருக்கு 1959இலிருந்தே தொடர்ந்து பல்லாண்டுகள் தென்மொழி இலவயமாக அனுப்பப்பெற்றிருந்தும் அதன் செம்மாப்பான இலக்கிய வெளியீடுகளையும், மொழித் தொண்டையும், இனப்போராட்ட எழுத்தாண்மையையும் இவர் தெளிவாக அறிந்திருந்தும், அவற்றைப் பற்றி ஒரு சொல் தானும் இவர் பரந்த (!) உள்ளம் இசைந்து எழுதிவிடவில்லை.

மறைமலையடிகளைப் பற்றி ஒரு பக்கமும், திரு.வி.க.வைப் பற்றி இருபக்கங்களும், பாரதிதாசனைப் பற்றி ஐந்தரைப் பக்கங்களும், பாரதியாரைப் பற்றிப் பதிமூன்றரைப் பக்கங்களும் தன் மனம் போனவாறு, விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆட்பட்டு, சொல்மிடையல் செய்துள்ளார், பர். மு.வ. அவர்கள். கண்ணதாசன் முதல் சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி ஈறாக அனைத்துப் புலமைக் குஞ்சுகளையும் அடிமுடியறக் காட்டிய பண்டாரகர்க்குத் தனித்தமிழ் இயக்க எழுத்தாளர்களைக் கண்டு கண்கள் கூசினவோ என்னவோ? பாவாணரையும், அவர் வழியைப் பின்பற்றுபவர்களையும் தம் பகைவர்களாகவே மு.வ. நினைத்துப் புறக்கணித்துவிட்டாரோ? அல்லது இவர்களால் தமக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று கருதி ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டாரோ என்னவோ, அவருக்குத்தான் வெளிச்சம் ! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகி அதுவும் இல்லாமற் போன கதையாக மு.வ. தேய்ந்து தெ.பொ. மீ.யாகி அப்புறமும் தேய்ந்து வையாபுரியாக மாறி வருகிறாரோ, தெரியவில்லை; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

துணிக் கூடாரங்கள்
நிலையான வீடுகளாகா !

இனி, நூல் எழுதுகின்ற வகையிலும் அதன் வெளியீட்டு வகையிலும் ஆரியரும், அவரடிமைகளும் கடைப்பிடிக்கின்ற நான்காவது தந்திரமுறை இது.

கூடியவரை இலக்கியத் துறையையும், செய்தித்தாள் துறையையும் என்னபடியான வாணிகத் தந்திரங்களைக் கைக்கொண்டேனும் கைப்பற்றிக் கொள்வதும், பற்றிக் கொண்டது கைநெகிழ்ந்து விடாமல் கவனமாக நடந்து நிலைநிறுத்திக் கொள்வதுமாகும்.

இத்துறையில் ஆரியப் பார்ப்பனரை அடித்துக் கீழே தள்ள அஃதாவது விஞ்ச - தமிழரில் ஆளேயில்லை. பெரியார் எத்தனை பேசினாலும் கரடியாய்க் கத்தினாலும் இந்த ஒரு தந்திரத்தை அவர் சரியாக விளங்கிக் கொள்ளாத கரணியத்தால், அவர் கொள்கைகளுக்கு நேர்ந்த - நேர்கின்ற இழப்புகள் பல. என்ன கரணியத்தாலோ அவர் மூளைக்கு இஃது எட்டவே இல்லை. தினமணி போலவோ, மெயில், எக்சுபிரசு போலவோ, ஒரு செய்தித் தாளை அவர் தொடங்கியிருந்தால் அவர் வீணான நடைகளில் பெரும்பகுதி மிச்சப்பட்டிருக்கும் அவர் சுற்றுச் செலவு வண்டியும் தேயாது.

நடத்தினால் தமிழனுக்குத் ‘தினத்தந்தி’ போலும் ஒரு கழிசடைத் தாளைத்தான் நடத்தத்தெரியும்; அன்றால் அச்சிட்டுப் பெரும்பகுதி விற்பனையாகாமல் திரும்பி வரும் ‘விடுதலை’ போலத்தான் நடத்தத் தெரியும் என்று வரலாறே உருவாகும்படி யானதற்குப் பெரியாரும் ஒரு கரணியம் என்று சொல்வதில் பிழையிருப்பதாகத் தெரியவில்லை. அவரிடம் உள்ள ஏந்துகளுக்கு விடுதலை என்பது சுற்றறிக்கை! அப்படியே, ஆதித்தனாரிடம் இருந்த தமிழ்ப்பற்றுக்குத் தினத்தந்தி என்பது ஒரு குப்பைத்தொட்டி, இவையிரண்டாலும் தமிழனுக்குச் சில அரசியல் பொறுக்குகளும், சில மேலோட்டமான பயன்களும் கிடைக்கலாமே தவிர, அவர்கள் விரும்புகின்ற அடிப்படையான நன்மைகள் கிடைத்துவிடும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. இன்னுஞ் சொன்னால் ‘விடுதலை’யால் பெரியார் எங்கிருக்கிறார் என்பதையும், ‘தினத்தந்தி’யால் ஆதித்தனார் எப்படி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார் என்பதையுந்தாம் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றபடி அவை வங்காள வீரர்களைப் போல் ஓர் ஆயிரம் பேர்களைக்கூட உருவாக்கிட முடியாது. மற்றபடி வழிபோக்குக்காகப் போட்டுக் கொள்ளப் பெறும். துணிக் கூடாரங்களைப் போன்றவை அவை நிலையாகத் தங்கிக்கொள்ளும் வீடுகளாக அவை பயன்பட முடியாது.

பதிப்பு வேலையில் திரிப்பு!

இனி, ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

இவ்வகையில் பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த அரிய தொண்டுகளைச் செய்தவர் பர். உ.வே. சாமிநாதர் என்ற ஆரியப் பார்ப்பனர் என்பதை நாம் நன்றி உணர்வுடன் நினைக்கின்ற அதே பொழுதில், அவர் அவ்வாறு பதிப்பிக்கையில், அவர் இனத்தின் மேம்பாட்டுக்கென்று திட்டமிட்டுச் செய்த சில செயல்களை மறந்துவிடவும் கூடாது. உ.வே. சா அவர்களின் தொண்டு அளப்பரிய தொண்டு. அதை எவரும் மறுக்க வில்லை. நாமும் அதை நன்றியுடனும் மதிப்புடனும் போற்றவே செய்கின்றோம். அதன் பொருட்டுத் தென்மொழி தொடக்கத்திலேயே அவர் வரலாற்றையும் நடுநிலையினின்றெழுதித் தன் நன்றியை அவர்க்குத் தலைதாழ்த்தித் தெரிவித்துக் கொண்டது. இன்னும் அத் தென்கலைக்குரிசில் தமிழ்மேல் காட்டிய அன்பை நினைந்து நினைந்து வியப்புறுகின்றது தென்மொழி. அவரின் அரிய முயற்சியாகிய குறுந்தொகை உரைப்பதிப்பின் முன்னுரையில் மனங்கசிந்து,

“பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையெழுதிய இந் நூலுக்கு உரையெழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை யென்பதையும், என் முதுமையாலும் பல்வேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்குண்டாகியுள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும், இளமை தொடங்கி, இவ்வுலகில் யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருவதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ங்ணமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி யருள்வானென்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன”.

- என்றெழுதியுள்ள பகுதி அவர் தமிழ்மேல் கொண்ட அன்பைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இருப்பினும் அவரின் சமசுக்கிருதப் பற்றும் ஆரிய மேலாண்மை உணர்வும் அவருடைய இக்கூற்றை மெய்ப்பிக்கவில்லை.

இவர் நூல்களில் எங்கும் தமிழ்ப்பாஷை என்றெழுதுவாரே தவிர தமிழ்மொழி என்று எழுதவே மாட்டார். நூல்களைப் புஸ்தகங்கள் என்றெழுதுவதே இவர் வழக்கம். தமிழில் வடமொழிச் சொற்களை விழிப்பாகவும் அவற்றை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவையின்றித் தமிழே இயங்காது என்பதை உண்மைபோல் மற்றவர்களுக்குப் புலப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் இவர் எழுதும் உரைநடைகளிலெல்லாம், அளவிறந்து கலந்து எழுதியது இவரின் வடமொழி உயர்வு மயக்கத்தைத் தெளிவாகக் காட்டும். ஒருகால் ஒரன்பர் இவரிடத்து ‘வணக்கம்’ என்று சொல்லி வணங்கியும் அதனை ஏற்றுக்கொள்ளாது ‘நமஸ்காரம்’ என்று கூறச்சொல்லி, அதனை ஏற்று நிறைவடைந்த நிகழ்ச்சியை அறிந்தால் உ.வே.சா. அவர்களின் வடமொழி யுயர்த்தமும், ஆரிய இன மேம்பாட்டு நினைவும் அவரை விட்டு அகலவே இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது - எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையிரே’என்று தொடங்கும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

‘ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

தமிழ் மொழிக்கு மிகவுழைத்தவரெனச் சொல்லப்பெறும் பர். உ.வே. சாமிநாதர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற் பதிப்புகளுக்காக அவர் ஊரூராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந் நூல் ளிலெல்லாம் ஆரிய நச்சுக் கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவர்க்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றந்தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக்கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக் கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸ்-சர் ஸ்மஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றுரட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதைத் துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களைப் பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாகவிருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப் புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக விருப்பினும் ஒரோவிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருளெழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியை யென்றும், மருந்தென்பதற்கு பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குத் தரித்ததென்றும், ஒம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.”

- என்று எழுதியுள்ளார். புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம். புறநானூற்று உரையாசிரியரையும் ஒர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோ வாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றுாட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும். சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப் பற்றையும், ஒரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் 'அந்தணத் திலகன்' என்றும் 'கௌண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்' என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறுகுறிப்பைக் கொண்டே சிலரை இவரினத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவர்க்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனாரை இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்னும் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன் - அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது இப்பெயர் குடிப்பெயர்; இதனால் அவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க் குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்குக் கிழக்கே உள்ளதோரூர்; வேம்பத்துரரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது” என்னும் குறிப்பெழுதி, கடைச்சங்கப் புலவர் காலந் தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார் என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனச் சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் துது செல்லுதற்குரியன் என்பது இவர் பாடலால் தெரியவருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல்தரையில் இவர் தம் இனப்பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

இனி, இவரைப் பின்பற்றித்தான் இவர் மாணாக்கர் கி.வ. சகந்நாதன் அவர்களும் அவரினும் மேலாக ஆழமாக இயங்கி வருகின்றார். அவர் பேசப்புகும் சில கூட்டங்களில் முன்னுரையாக “என் குருநாதராகிய மகாமகோபாத்தியாய தாகூவினாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் இட்ட பிச்சையால் சிறந்து விளங்கும் இத் தமிழ்மொழி” என்னுந் தொடரைப் பயன்படுத்தி வருகின்றார். ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் எத்துணை ஆழமாகத் தம் இனப் பெருமையை வேரூன்ற வைத்துள்ளார்கள் என்பதை அறிந்தால், நாம் நம் தமிழ்மொழிக்கே உரித்தான சிறப்பியல்களை எத்துணை ஆயிரம் முறை சொன்னாலும் பிழையில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

நாளிதழ்களிலும் நச்சு வேலைகள் !

ஆரிய நச்சுக் கருத்துகளை அவர்கள் நூல்களில் போன்றே அன்றாடம் அவர்கள் நடத்தும் நாளிதழ்களில் பலவகைகளிலும் பல துறைகளிலும் இன்னும் விடாப்பிடியாக நுழைத்து வருகின்றனர். தினமணி, சுதேசமித்திரன், விகடன், கல்கி, கலைமகள், கதிர், துக்ளக் முதலிய ஆரியக் கும்பல் இதழ்கள் தமிழ்மொழியையும், பண்பாட்டையும் திட்டமிட்டே அழித்து வருகின்றன.

‘கல்வி வாய்ப்புகளை விரிவாக்க முடிவு’ - என்பதைக் ‘கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு என்றும்,

‘கோவையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. என்பதை ‘கோவையில் ஸ்டிரைக் வாபஸ்’ என்றும்,

‘மன்னார்குடியில் உழவர்கள் ஊர்வலம்’ - என்பதை, ‘மன்னார்குடியில் கிஸான் ஊர்வலம்’ என்றும்,

முதல்வரிடம் வேண்டுகோள் என்பதை, ‘முதல்வரிடம் மகஜர்’ என்றும்,

‘முசுலீம் லீக் செயற்குழு தீர்மானம்’ - என்பதை முஸ்லிம் லீக் காரியக் கமிட்டி தீர்மானம்’ என்றும்,

‘பாதுகாப்புத் துறை மறுப்பு’ - என்பதைப் பாதுகாப்பு இலாகா மறுப்பு’ என்றும்,

மேட்டுர் நீர்மட்டம் - என்பதை மேட்டுர் ஜலமட்டம் என்றும்,

‘சரியாகக் கடைப்பிடிக்கவும் - என்பதைச் ‘சரியாக அனுஷ்டிக்கவும் என்றும் ‘ஆலைச்சிக்கல்’ என்பதை, ‘ஆலைத் தகராறு’ என்றும்,

‘கொள்ளைக்கூட்டம் பிடிபட்டது’ என்பதைக் ‘கொள்ளைக் கோஷ்டி பிடிபட்டது’ என்றும்,

- இன்னும் பலவாறும் வேண்டுமென்றே அவ்விதழ்கள் எழுதுவதைப் பார்த்தால், தமிழ்மொழியை எவ்வகையானும் அழிப்பதும், அதன் தனித்தன்மையையும் தூய்மையையும் கெடுத்து அதனை ஒரு புன்கலவைமொழி என்று ஆக்குவதுமே அவர்களுக்குத் தலையாய நோக்கம் என்று தெரியவில்லையா? தகராறு என்னும் சொல்லையோ இலாகா, கமிட்டி, கிஸான் என்னும் சொற்களையோ சமசுக்கிருத நூல்களில் ஆரியப் பார்ப்பனர்கள் பயன்படுத்துவார்களா என்பதைச் சுப்பிரமணிய, பத்தவச்சலத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்மொழியின் தனித்தன்மையை அழித்து ஆரிய மொழியான சமசுகிருதத்திற்கு அடிமையாக்கி, அதன் வழித் தமிழினத்தை என்றென்றும் ஆரியத்திற்கு அடிமையாக்கி வைத்திருப்பதே அவர்களின் உள்ளக்கருத்து என்பதைக்கூட உணராமல், தலைக்கொழுப்பு மண்டிய சுப்பிரமணியன்கள் தில்லிச் சப்பாத்திக்கும், ஆரிய வெள்ளைத் தோலுக்கும் அடிமையாகி, ‘தனித்தமிழ் முயற்சி ஓர் அறியாமை முயற்சியே’ என்று தம்மை எல்லாம் அறிந்தவர்போல் கருதிப் பேசிக் கொண்டிருக்கும் பேதைமையை என்னென்பது!

வழக்கறிஞர் படிப்புப் படித்துவிட்டு, நடுவணரசில் ஒர் அமைச்சனாகிவிட்டால், உலகத்து அறிவெல் லாம் தன் மூளையிலேயே ஏறிவிட்டது என்று எண்ணித் தனக்குத் தொடர்பில்லாத் துறைகளிலும் வாய்வைத்துக் கருத்தறிவிக்கும் அக்குயக்கொண்டான் தனத்தை இன்னும் எவ்வாறு சூடேறும்படி சுட்டிக்காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் தமிழ்மொழி யழிவையே சமசுக்கிருத மொழியின் வளர்ச்சியாகக் கருதியிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் இனம் வெளியிடுகின்ற இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படியை எடுத்து ஒரு சேரத் தொகுத்துப் பார்த்தாலே போதும்; நன்கு விளங்கும். அடிமை உள்ளந் தவிர நடுநிலையான எந்த உள்ளமும் அச்சூழ்ச்சியை நன்கு உணரமுடியும்,

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பார்ப்பனர்க்குத் தமிழ் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியும், தமிழர்மேல் ஒரு பகையுணர்ச்சியும் கட்டாயம் இருந்தே வருவதைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியாது, மாந்தன் நிலாக்கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் சென்று கொண்டிருக்கின்ற இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலுங் கூட, அவர்கள் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறார்க ளென்றால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்களின் போக்கு தமிழ்க் குமுகாயத்திற்கே எப்படி மாறுபட்டு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாது.

தமிழ்த்துறையில் அவர்களின் கைவரிசை மறைமுகமாகவே காட்டப்பெற்றது. தமிழை வளர்ப்பது போலும் தமிழ்மேல் பற்றுக் கொண்டிருப்பது போலும் அவர்கள் வெளிப்படையாக ஈடுபட்டாலும், மறைமுகமாக அவாக்ள் இனத்துக்கும் மொழிக்குமே ஏற்றந் தந்து எழுதியிருக்கின்றனர்; பாடியிருக்கின்றனர். அந்நிலையில் பெரும் புலவர்களாக விளங்கிய பர், உ.வே. சாமிநாதர் அவர்களையும் பரிதிமாற் கலைஞர் அவர்களையும் ஒருசில எடுத்துக்காட்டுகளால் பார்த்தோம். அவற்றிலிருந்து அவர்களின் உள்ளக் கிடக்கைகள் எவ்வாறு தமிழ்க்கும் தமிழர்க்கும் மாறுபட்டு விளங்கியிருந்தன என்பது காட்டப் பெற்றது.

பார்ப்பனர் என்பதற்காகவே
அளவிறந்த போற்றுறதல்!

இனி, பாட்டுத்துறையில், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதையும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகல்வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனை யாற்றலை வேண்டுமானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் கற்பனையாற்றல் இருப்பவர்களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை யீடுபாடோ சூழலால் அமைவதாகும்.

பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஒரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடனத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால் கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடேயொழிய இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில் இராமாயணத்தில்தான் வேறு எந்த நூலையும்விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்தமுடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.

பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் ; தமிழ் மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.

ஸூர்யோதத்திலேயும் ஸூகிர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”.

- பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்

இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும் என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.

“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத் தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்”.

- பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்

மேலே காட்டப்பெற்ற இரு குறிப்புகளே பாரதியார் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இனத்தைப் பற்றியும் என்ன கருத்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டப் போதுமான சான்றுகளாகும். ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உயர்வு தாழ்வுகளுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் தாம் பொறுப்பாளிகள் என்றால் மானமுள்ள எந்தத் தமிழன் அவரை வெறும் பாட்டுத் திறனுக்காகவோ கற்பனைத் திறனுக்காகவோ பாராட்டுவான்? தன் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும், அவை யழிக்கப் பெற்ற வரலாறு பற்றியும் அவை புதுப்பிக்கப் பெற வேண்டிய முயற்சி பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாத ஆரிய அடிமைகளே அவரை ஒரு பாவலர் என்பதற்காகப் பாராட்டுவார்கள். வெறும் பாவலர் என்பதற்காகப் பாராட்டுப் பெற வேண்டியவர்கள் நம் இனத்தில் ஏராளம்! தடுக்கி விழுந்ததற் கெல்லாம் பாட்டு உண்டு. இங்கே, தமிழ் இலக்கியங்களில் உள்ள பாட்டுச்செறிவு போல் வேறு இந்திய மொழிகள் எவற்றிலும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பாவலர்களுக்குப் பஞ்சம் என்றும் இருந்ததில்லை. எனவே, அதற்காகப் பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.

பாவலன் ஒருவனால் எதிர்காலத்திற்குக் கிடைத்த கருத்துகள் எவை? அவற்றால் அந்த மொழிக்கும், மக்களுக்கும், அந்நாட்டுக்கும் வந்து சேரும் பயன்கள் எவை? - என்பன பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டுமே தவிர ஒருவர் ஒரு பாவலர் என்பதால் மட்டுமே நமக்குப் பெருமை வந்துவிடப் போவதில்லை. பாரதியாரின் உள்ளம் ஆரியர்க்காக எண்ணிய உள்ளம்; அவர் இந்த நாட்டை ஆரிய நாடு என்பதனாலேயே பெருமை கொள்வதாக அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்வரும் பாடலடிகளைப் பாருங்கள். .

பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்று அறி”
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்”
சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்”

"- எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவி"

வீரிய வடிவம் - என்ன
வீரிய வடிவம் - இந்த
ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”
எங்கள் ஆரிய பூமி”
ஆரிய பூமியில் தாரிய ரும்தர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்”
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”
ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெத்தாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”

- எப்படி பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப்பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை. இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில்தான் அவர்க்குப் பெருமையிருந்திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்தாலும் தாழ்வில்லை. ‘அவர் உண்மையைத்தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மைகளையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமையுடையது என்றால் இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.

‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இன்னொருவர்க்குச் சொந்தமான ஒரு வீட்டை அல்லது பொதுவான ஒரு சாவடியை ஒருவன் தன் வீடு என்று சொன்னாலும் தாழ்வில்லை; தன் இனத்தாருடைய வீடு என்று சொல்வானானால் அவன் தன் இனத்தார்க்கு அதன் பெருமை அனைத்தும் வந்து சேர வேண்டும் என்று நினைக்கின்றவனா இல்லையா ? இதை எவரேனும் மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொதுநோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.

ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”
வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்
ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”

ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம், வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.

ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”
ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருயின்!”

- என்று பலவாறாக ஆரியர்களையே - அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமையான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.

தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்கொள்வதில்லை. ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்தபின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப் பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.

ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

அகத்தியர் அகத்தியம் என்னும் இலக்கணத்தையும் நாரதர் பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலையும் இயற்றியது உண்மைதான். தமிழில் ஏற்கனவே இருந்த நூல்களை ஒட்டியும் தழுவியுமே அந்நூல்கள் எழுதப் பெற்றன. அவ்வாறு செய்தது தம் ஆரியக் கருத்துகளைத் தமிழ்மொழியின் மூல நூல்களான இலக்கண நூல்களிலேயே நுழைத்தற்கு வேண்டியே தவிர, தமிழை வளர்க்க வேண்டியன்று. இம்முயற்சி இக்காலத்தும் நடந்து வருகின்ற வெளிப்படையான முயற்சியாகும். தஞ்சை ‘சரசுவதி மகாலில்’, பழைய ஓலைச் சுவடிகளைப் பெயர்த்தெழுதுகின்ற முயற்சியில், இவ்வாறு பழந்தமிழ்ச் சுவடிகளினின்று வடமொழியில் பெயர்க்கப் பெற்ற பின், அச்சுவடிகளையே அழித்துவிடுகின்ற இரண்டகச் செயல் இன்றும் நடந்துவருவதாக அங்கிருந்து பணியாற்றிய புலவர்களே அறிவிக்கக் கேட்டிருக்கின்றோம். இந்தக் கொடுமை மாந்தன் நிலாக்கோளில், இறங்கிய காலத்தும் துணிவாகவும் சூழ்ச்சியாகவும் நடைபெறுகின்றதெனில் அக்காலத்தில் நடைபெற்றிருக்க முடியாதென்று ஒரு கருத்துக் குருடனும் ஒப்பமாட்டான். மேலும் உ.வே.சா, போலும், பாரதியார் போலும் தமிழ்த்திறமும் ஈடுபாடும் கொண்டவர்கள் வாயிலிருந்தே இத்தகைய கருத்து வருவதற்கு வேறு பக்க வலிவுகளே தேவையில்லை.

அவ்வாறு அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்தபின்தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.

ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

- என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எளிய புலவர்கள் இவ்வாறு உண்மைக்கு மாறாக எழுதினாலும், பாரதியார் போலும் ஓரளவு சிறந்து விளங்கிய தேசியப் புலவர்கள் இவ்வாறு கற்பனைகளை உண்மைபோல் எழுதக்கூடாது. இப்படி எழுதுவதால் வரலாறு சிதைக்கப் பெற்று, உண்மை நிலைகள் உணரக் கூடாமற் போய்விடுகின்றன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர். அவர்கள் கற்பனை, வரலாற்றைத் தழுவிய கற்பனையாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றுக்கு மாறான கற்பனையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அத்தகைய கற்பனைகளால் எதிர்காலம் சிதைக்கப்படும் என்பதை உணர்தல் வேண்டும்.

இனி, தமிழர் தமிழ்மொழி சிறந்தது, உயர்ந்தது என்று பாராட்டிப் புகழ்ந்து எழுதுவதைப் போல், பாரதியாரும் ஆரிய மொழியையும் ஆரிய இனத்தையும் அவ்வாறு எழுதியிருக்கக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். பாரதியார் அவர் இனத்தையும் மொழியையும் எவ்வளவு உயர்வுக்கேனும் தூக்கட்டும். அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால் அதை வரலாறாக்கக் கூடாது. அவர் தூக்கிப் பேசுகின்ற தன்மை இன்னொரு மெய்ப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசப் பெறுகையில்தான் வரலாறு சிதைக்கப் பெறுகின்றது. இந்திய வரலாற்றுச் சிதைவுக்கு ஆரியரின் இந்தக் குழப்ப நிலைகளே கரணியங்கள். அவர்களின் தொன்மங்களிலும், தொல் கதைகளிலும் உள்ள அரசர் பெயர்களில் சிலவும், நிகழ்ச்சிகளில் சிலவும் உண்மையே! ஆனால் அவ்வுண்மையைச் சார்ந்தவாறு பொய்ம்மைகளும் புளுகுகளும் நிரம்பப் படைக்கப் பெற்று அவற்றுள் இணைக்கப் பெற்றுவிட்டன. எனவே உண்மை எது பொய்யெது என உணரமாட்டாமல் வரலாற்று மயக்கங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு, மக்களைப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இந்நிலைகள் மிகுதி. அதற்குக் கரணியம் ஆரியப் பூசல்களே !

பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை வெளித்திசை மிலேச்சர் என்று இழித்தும் அயன்மைப்படுத்தியும் கூறுகின்றார். மற்றும்,

‘தெள்ளிய அந்தணர் வேதம்” - என்றும்,
“ஒதுமினோ வேதங்கள்
ஓங்குமினோ! ஓங்குமினோ!” - என்றும்,
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்.இது போலே?” - என்றும்,
‘நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுளடை யாள்” - என்றும்,
“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் - உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ - என்றும்,
“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை -
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!” - என்றும்,
“மீட்டுமுனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி
வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!” - என்றும்,
வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்திந்த நாடு;
சேதமில் லாத ஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!” - என்றும்,

அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறைசாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?”

- என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதிமயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும். மேலும் இவரைப் பற்றியும் இவர் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துகள் பற்றியும் இன்னும் பிறரைப் பற்றியும் கூறுவதென்றால் இக்கட்டுரை அளவிறந்து நீளும் என்பதால் இக்கருத்துரைகளை இவ்வளவில் நிறுத்திக் கொள்வோம்.

மொத்தத்தில் நாம் குறிப்பிட வந்தது, ஆசியப் பார்ப்பனர்கள் தமிழ் நிலையிலாயினும் சரி, குமுகாய நிலையிலாயினும் சரி, அரசியல், தொழில், சமயம் முதலிய எந்த நிலைகளிலாயினும் சரி. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, தமிழர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடவில்லை என்பதையும்; அவர்கள் தவிர்க்கவியலாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்களிடையில் தமிழர்களைப் போன்றே வாழ நேரிட்டாலும், அவர்கள் மனநிலையில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் இன்றும் தங்களை உயர்ந்தவர்களாகவும், தங்கள் மொழியையே தேவமொழி அதுவே உலகிற்கு மூலமொழியென்று நம்புபவர்களாகவும், அப்படி நம்பச் செய்பவர்களாகவும், அப்படி நம்புகின்ற பிற இனத்தவரையே தாங்கிப் போற்றிக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதையும்; அந்த நிலைகளுக்கு உ.வே. சாமிநாதர் போலும் தமிழறிஞர்களும், பரிதிமாற்கலைஞர் போலும் தனித்தமிழ் வழிகாட்டிகளும், பாரதியார் போலும் பாவலர்களுங்கூட விலக்கல்லர் என்பதையும் உணர்த்த வேண்டியே ஆகும்.

காப்பாக வைத்துப் பேணப்பெறும்
வலிந்த கருவிகள்!

இறுதியாக, இவர்களின் இனவுணர்வு மிகவும் பாராட்டக் கூடியதாகும். இவர்களுக்குள்ளே இன்னொருவரைப் போற்றிக் கொள்ளும் தன்மையால் தான் இவர்கள் சிறிய அளவினராயிருப்பினும், இவர்களின் தனித்தன்மைகளை இன்று காறும் எவராலும் அழிக்கமுடியாமல் இருக்கின்றது. இவர்களைப் பார்த்துப் பிற இனத்தினர், குறிப்பாகத் தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய - பின்பற்றக்கூடிய தன்மைகள் - பண்புகள் மிகுதியாகும். தாய்மொழிப் பற்று, இனப்பற்று, தன் இனத்தாரைப் பேணிக் கொள்ளும் தகைமை, தம்முள் ஒருவர் எவ்வளவு தாழ்ந்திருந்தாலும் அவரைப் பழித்துரையாமையும், காட்டிக் கொடாமையும், பிறருடன் ஒத்துப் போகவியலா விடத்துப் பழி கூறாமல் ஒதுங்கிவிடும் தன்மை, எந்த நிலையிலும், எவ்விடத்தும் தம் இனத்தவனைப் போற்றிக் கொள்ளும் தன்மை, உண்மையான திறமையுள்ளவனை மனம் விட்டுப் பாராட்டிப் பெருமை செய்யும் பரந்த பண்பு முதலிய அருங்குணங்களே ஓரினத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவனவும், காக்கின்றனவுமான வலிந்த கருவிகளாகும். அக்கருவிகள் இவ்வாரிய இனத்தாரிடம் இன்றளவும் காப்பாக வைக்கப்பெற்றுப் பேணப் பெற்று வருகின்றன.

தமிழர்களிடம் இவற்றுக்கு நேர்மாறான இழிந்த தன்மைகள் மிகப் பலவாகும். இவை பண்டைத் தமிழரிடம் இருந்தனவாகக் குறிப்பில்லை. இடையிடையே வந்த வேற்றினத்தவரிடமிருந்து கற்றுக் கொண்ட தீய பண்புகள் இவை. பன்னாடைகள் போல் நல்லனவற்றை விட்டு விட்டு அல்லனவற்றைத் தமக்கொவ்வாதனவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை தமிழினத்தின் கள்ளங் கவடற்றப் போக்கால் ஒட்டிக் கொண்டதாகும். இவ்விழி தகைமைகளை அறவே விலக்கினால் தவிரத் தமிழர் முன்னேற்றம் என்பது இந்தத் தலைமுறையில் மட்டுமன்று, இனி எந்தத் தலைமுறையிலும் கருதிப் பார்க்க முடியாத வொன்றாகும். இந்த மனமாற்றத்தை வலிந்தேனும் தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளவே இக்கட்டுரைக் கருத்துகள் பயனளிக்க வேண்டும். மற்றபடி ஆரியப் பார்ப்பனர் மேல் நமக்கு எவ்வகை வெறுப்பும் இல்லை. அவர்களை மட்டுமன்று, எத்திறத்தினரையும் நம்மவர்களாக ஏற்றுக் கொள்ளும் பண்பில் தமிழர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களல்லர். ஆனால் அதன் பொருட்டு, தங்கள் இனத்தை வேண்டுமென்றே தாழ்த்தி வைக்கும் நிலைக்கு - மிகவும் சிறந்ததும் உலக மொழிகளுக்கே தாயானதுமான தங்கள் மொழியை இழித்து ஒழிக்கும் நிலைக்குத் தமிழர்கள் தங்களை இனியும் ஆளாக்கிக் கொள்ளக்கூடாது. தமிழர்களின் இம்முயற்சியை ஆரிய இனம் மட்டுமன்று, உலகின் அனைத்து இனங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அவர்களாக உணராவிடத்து, தமிழர்கள் எவ்வகையானும் இதனை உணர்த்த, பறைசாற்றச் சிறிதும் தயங்கக் கட்டாது.

தமிழர்க்கென்று ஒரு தனிமொழி, தனிப்பண்பாடு, தனி நாகரிகம், தனிநாடு என்பன என்றும் உண்டு. அவற்றை வலியுறுத்துவதே தனித்தமிழியக்கத்தின் கொள்கை. அவை ஊறுபடுத்தப் பெறுங்கால், அல்லது சிதைக்கப் பெறுங்கால் அந் நிலைகளால் ஏற்படும் எதிர் விளைவுகளைத் தொடர்புள்ள அனைவருமே எண்ணிப் பார்க்க வேண்டுமேயல்லாமல், தமிழர் மட்டுமே எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது நடுநிலையற்ற ஒரு சார்பான - ஓரினத்தை மற்றோர் இனம் அழிக்கின்ற ஒரு அழிவுக் கொள்கையாகும். அந்நிலையை எத்தகைய மாந்த உணர்ச்சியுள்ளவனும் - அல்லது அவ்வுணர்ச்சியுள்ள எந்த ஓரினமும் பொறுத்துக் கொள்ள முடியாது. பிறிதோரினத்தினும் தங்களை ஓரினம் உயர்த்திக் கொண்டு பேசுவது, எழுதுவது, நடப்பது, மற்ற இனம் அதைப் பொறுத்துக்கொண்டு தான் கிடக்க வேண்டும் என்பது உடலில் நல்ல அரத்தம் ஓடாத கண்ணதாச அல்லது சுப்பிரமணிய அல்லது பக்தவத்சலத் தமிழர்களின் மானங்கெட்ட தன்மையாக விருக்கலாம். அது மற்றவர்களுக்கும் இருக்கத்தான் வேண்டும் என்னும் வெண்டைக்காய் அறிவுரை அறவுரையன்று; தமிழினத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் காட்டிக் கொடுப்பு உரை யாகும். அந்நிலைக்குத் தமிழர்கள் தாழக் கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

— தென்மொழி சுவடி : 11, ஒலை : 2-10,11, 1973