ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியர் கூத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆரியர் கூத்து


ண்மையில் தில்லி அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “1965-66-ஆம் ஆண்டில், சமற்கிருத வளர்ச்சிக்கெனப் பொருள் உதவி கோரிச் சமற்கிருதக் கழகங்கள், சமற்கிருதப் பள்ளிகள், சமற்கிருத நிலையங்கள் ஆகியவை, நடுவணரசுக் கல்வி அமைச்சரகத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். கையெழுத்துப் படிகள் புத்தகங்கள் வெளியீட்டுக்கும், சமற்கிருதத் தாளிகைகளுக்கும் இந்த உதவியைக் கோரலாம். சமற்கிருதக் கழகங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகச் சமற்கிருத மொழியிலுள்ள சிறந்த நூல்களின் படிகளை இந்திய அரசு நிறைய வாங்குகிறது” - என்பதாகும் அந்த அறிக்கை.

ஏறத்தாழ நாற்பது கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில், அரசினர் கணக்குப்படி ஏறத்தாழ 555 பெயர்களே பேசுவதாகக் கணக்கிடப் பெற்று, கோயில்கள், ஆரிய நான்மறை வகுப்புகளிலன்றிப் பிறவிடங்களில் முற்றிலும் பேச்சு வழக்கற்று இறந்துபட்ட மொழியாகிய, சமற்கிருத மொழியின் வளர்ச்சியில் அரசு எத்துணையளவு கருத்துக் கொண்டுள்ளது என்பதைக் கல்வி அமைச்சரகம் வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிக்கை தெளிவாக உணர்த்துகின்றது. இந்திய ஒருமைப்பாடு என்ற பொருந்தாக் காரணம் கூறித் திணிக்கப்படும் இந்தி மொழிக்குத், தென்னாட்டிலும் வடநாட்டிலும் ஏற்பட்டு வரும் எதிர்ப்புணர்ச்சி வலுவடையும் இந்த நேரத்தில், அரசின் அமைச்சரகங்களிலும், பிற அதிகாரங்களிலும் உள்ள பார்ப்பனர்கள் வடமொழி வளர்ச்சிக்கென மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து வருவதை, அவர்தம் அடிவருடிகள் போக மற்றவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகின்றோம். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதுபோல் இந்தி பேசும் வடநாட்டினரால் பிற மொழியாளர் மேல் வலிந்து திணிக்கப்படும் இந்திமொழியின் காரணமாக, இந்தியைத் தேசிய மொழியாக ஒப்புக்கொண்டவர்களும், ஒப்புக் கொள்ளாதவர்களுமாக இரு கொள்கையை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் இக்கால், இறந்துபட்டதாக அல்லது பேசத் தகுதியற்றதாகக் கருதப்படும் ஆரிய மொழியான சமற்கிருத மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அரசினர்தம் வ்ரிப் பணத்தைப் பயன்படுத்துவது, பார்ப்பனர்தம் அரசியல் விரகாண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பார்ப்பனர்களின் காவலர்களான திரு. சி.பி. இராமசாமி, திரு. இராசாசி, குடியரசுத் தலைவராக வல்லதிகாரம் பெற்றுள்ள திரு. இராதாகிருட்டினண் ஆகியவர்களின் உள்நோக்கமெல்லாம் பார்ப்பனர்தம் ஆட்சியே ஓங்கவேண்டுமென்பதும், வடமொழி மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்பதுமே ஆகும். இவ் உள்நோக்கங் கருதியே திரு. இராசாசி அவர்களும் இந்தி மொழியை எதிர்க்கின்றார். இந்தி மொழியைத் தென்னாட்டவர்கள் ஒரு நாளு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதும், இக் காரணங்காட்டிச் சமற்கிருத மொழியைத் தேசிய மொழியாக்க வடவரிடம் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்வதும் இராசாசி போன்றவர்களின் மொழித் திட்டமாகும். இந்தியைத் தமிழ்நாடு ஒருபொழுதும் ஏற்காது’ என்று தம் கட்சியின் மொழித் திட்டத்துக்குப் புறம்பாகக் கூறிவருவதும் இக்காரணம் பற்றியே! “வட மொழியே தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்ற மொழி” என்று திரு. சி.பி. இராமசாமி அவர்கள் கூறி வருவதும் இதுபற்றியே! இன்னமும் தெளிவாகக் கூறுவதானால், திரு. காமராசர் போன்ற தமிழுணர்வு கொஞ்சமேனும் உள்ளவர்கள், இந்தியைக் கொண்டுவரும் நோக்கமும் அதுதான். “இந்தியை இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்கத் தவறினால், பிற்காலத்தில் பார்ப்பனர்தம் வலிவாலும் சூழ்ச்சியாலும் சமற்கிருதமே தேசிய மொழியாக ஆகிவிடக்கூடும்” என்பதே காமராசரின் அச்சமாகும். மற்றபடி இந்தியினால் ஏற்படப் போவதாகப் பேசப்பட்டு வருகின்ற தேசிய ஒருமைப்பாடுபற்றிக் காமராசரைவிட இராசாசியே மிக நன்றாக அறிவார். பெரியார் திரு. இராமசாமி அவர்கள் காமராசரின் கொள்கைகளுக்குத் துணைநிற்கும் காரணமும் இதுவே! ஆனால் தன்னம்பிக்கையற்ற இத்தகைய அச்சங்களுக்கெல்லாம் நாம் மதிப்பளிக்கப் போவதில்லை. இவ் வச்சங்கட்கு அடிப்படைக் காரணம் நம் தலைவர்களுக்கு மொழிப் பற்றும் மொழியறிவும் இல்லாமையேயாகும்.

திரு. இராசாசி, திரு. சி.பி. இராமசாமி அவர்களின் திட்டங்கட்கு, அவர்கள் கருதுகின்ற அடிப்படைக் காரணம், “தமிழும் வடமொழியும் ஏற்கனவே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட மொழிகள் கழகக் காலந் தொட்டே தமிழ்நாடு வடநாடு ஈடுபாடு கொண்டு, பல்லாயிரக் கணக்கான சொற்களையும் சொல் மூலங்களையும் கொண்டும் கொடுத்தும் வந்துள்ளன. தமிழின் பிள்ளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய தலையாய திரவிட மொழிகள் பிரிவதற்குக் காரணமாக இருந்ததும் சமற்கிருதமே. சமற்கிருதத் தொடர்பால் தோன்றிய பிற - திரவிட மொழிகளின் சிதைவே இக்கால வடநாட்டு மொழிகளிலும் பரவிக் கிடக்கின்றது. ஆகவே சமற்கிருத மொழி தென்னாடு வடநாடு இரண்டிற்கும் மாறுபாடில்லாத ஒரு மொழி. எனவே அம்மொழியே தேசிய மொழியாவதற்கு ஏற்ற மொழியாகும்” என்பதே! இக்கொள்கை இந்தியா முழுவதிலுமுள்ள பார்ப்பனர் எல்லார்க்கும் ஏற்ற கொள்கையாகும். இக்கொள்கைக்குத் துணையாக, ஆங்காங்கே அரசினர் அலுவலகங்களிலும், அமைச்சரகங்களிலும் வலிந்த அதிகாரங்களில் உள்ள பார்ப்பனர்கள் இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். பார்ப்பனரின் இக் கொள்கைப் போருக்குப் படைக்கருவிகளாக இருப்பன - செய்தித்தாள்கள், வானொலி, பொழுதுபோக்கு மன்றங்கள், மாதர் நலத்துறை முதலிய விளம்பரத் துறைகளும், அமைச்சரகம், செயலகம், பிற நாடுகளிலுள்ள ஒற்றரகங்கள், பிற நாட்டு நூல், தாளிகை வெளியீட்டு அகங்கள், இந்நாட்டுப் பிரிட்டிசு, அமெரிக்க உருசிய ஒற்றரகங்கள் முதலிய அதிகாரமும் ஆக்கமும் உள்ள துறைகளும், தமிழறியாத மொழி, இலக்கிய, அரசியல் வல்லடிமைகளும் அவர்தம் இரந்து குடிக்கும் மனப்பான்மைகளுமேயாகும். இங்கிருந்து உருசியாவுக்கும் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் போகும் பார்ப்பனர்கள் ஆங்காங்குள்ள மொழி, இலக்கிய, அரசியல் தொடர்பாக உள்ள பணிகள் அத்தனையிலும் தலையிட்டுச் சமற்கிருதமே உலக மொழிகளில் பெரும்பாலாக உள்ள மொழிக் குடும்பத்தின் சிறந்த மொழியென்றும், அதுவே இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் பறைசாற்றுகின்றனர். அதற்குத் தக ஆங்காங்குள்ள மொழிகளில் இவைத் தொடர்பாக உள்ள ஓரிரண்டு சொற்களையும் எடுத்துக்காட்டி, அச் சொற்களுக்கான மூலவடிவம் தங்கள் மொழியாகிய சமற்கிருதத்தில் உள்ளதாகவும் எடுத்துக்கூறி, அவர்களை வியப்பிலாழ்த்திப் பொருளும், மதிப்பும், ஏந்துகளும் தேடிக்கொள்கின்றனர். இங்கிருந்து தமிழ்த் தொடர்பாக வெளிநாடுகள் செல்லும் மீனாட்சிசுந்தரங்களும், சோமசுந்தரங்களும் வெளிநாடுகளில் ஏற்கனவே - பரவியுள்ள தவறான மொழிக் கொள்கைகளுக்கு ஏற்பவே தமிழைத் தாழ்த்தியும், வடமொழியை உயர்த்திப் பேசியும் வையாபுரியின் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இத்தனைத் துறைகளிலும் ஈடுபட்டுத் தம் ஆரிய மொழியாகிய சமற்கிருதத்தையும், ஆரியப் பண்பாட்டையும் பரப்பிவருகின்ற காரணத்தாலும், தமிழர்களின் விழிப்பின்மை, ஒற்றுமையின்மை, மொழியறிவு, உணர்வின்மை, துணிவின்மை - முதலியவற்றாலும் இன்று தமிழ்மொழிக்கென ஒரு பெரும் போராட்டமே நடத்திக் காட்ட வேண்டிய அளவுக்கு, வடமொழி ஊடுருவலும், இந்தித் திணிப்பும் - ஏற்பட்டுவிட்டன; ஏற்பட்டு வருகின்றன. தேவையும் பொழுதும் வாய்க்கையில் இப் புறச்செயல்களுக்கெல்லாம் உள்ளீடு காட்டி விளக்குவோம். இக்கால் சொல்வழக்கற்ற சமற்கிருதத்திற்கு மட்டும் சலுகைகள் பல காட்டிப் பரிந்து காக்கும் அரசினரைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், அப் பரிவு வேண்டுவதொன்றே ஆயின், அத்தகைய சலுகைகளைப் பிறமொழி வளர்ச்சியிலும் நேரடியாகக் காட்டும்படி நடுவணரசையும், மாநில அரசையும் கேட்டுக் கொள்கின்றோம். இத்தகைய முயற்சிக்கு ஆங்காங்கே அரசினர் தொடர்புள்ள தமிழ் அதிகாரிகளும் எழுத்தாளர்களும் செய்தித்தாள்களும் துணைநிற்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். ‘ஆரியர் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பர்’ என்ற முதுமொழியை நினைவூட்டி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவும், ஏமாளிகளாகவும் உள்ள தமிழ் மக்கள் இனியேனும் எல்லாத்துறைகளிலும் விழிப்புற் றெழுவார்களாக என்று பல்லாற்றானும் வலியுறுத்துகின்றோம்.

-தென்மொழி சுவடி : 3, ஓலை : 6, 1965