ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/காஞ்சி காமகோடி பீடத் தலைவர் ஒரு குமுகாயக் குற்றவாளி.
தெருவிலே ஒர் ஒரத்திலே நாடாவைச் சுற்றி விளையாடும் சூதாட்டத்தைப் பார்த்திருப்போம். சுற்றி நிற்பவர்களில், அந்த நாடாவைச் சுற்றி சூது செய்பவனைச் சேர்ந்தவர்கள், அந்த நாடாவில் ஒரு குச்சியைச் செருகுகையில், அது அதில் சிக்கிக் கொள்ளும். உடனே அவர்கள் வைத்த பந்தயக் காசுக்கு இருமடங்குக் காசு கிடைக்கும். இதைப் பார்த்த மற்றவர்கள், அஃதாவது அந்த நாடாச் சூதைபற்றி ஒன்றுமே தெரியாத பொது மக்கள், அதே மாதிரி, பந்தயத்தில் வெற்றிபெறும் நோக்குடன், தாங்களும் அதில் பந்தயங்கட்டி, கட்டிய காசை இழந்து போவதுடன் மேலும் மேலும் தங்கள் கையிலுள்ள, மடியில் உள்ள காசு, பணத்தை யெல்லாம் இழந்துகொண்டே வந்து, இறுதியில் ஒட்டாண்டியாக வீடு திரும்புவார்கள். எனவே, இவ்விளையாட்டை ஒரு சூதாட்டமாகக் கருதி இதை அரசு தடைசெய்கிறது.
இதேபோன்ற சூதாட்டமான போக்குதான், காஞ்சி காமகோடி பீடத்தலைவர் அவர்கள் செய்துவரும் மதச்சூதும். அவர் ‘உலக குரு’ என்று தம்மை அறிவித்துக்கொள்வதும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும அவர் ‘ஒரு நடமாடும் தெய்வம்’ என்று ஒன்றுமறியாத, ஆனால் மதப்பித்தம் பிடித்த ஏழை, எளிய
மக்களிடம் விளம்பரப் படுத்துவதும், அவர் கூறும் மதவியல் கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’ என்று அவரைச் சார்ந்த சிலர் அச்சிட்டு வெளிப்படுத்துவதும், ஏமாற்று நிறைந்த ஒரு குமுகாயக் குற்றமேயாகும்.
இந்தியாவைப் பொறுத்த அளவில், இஃது ஒரு மதப்பித்தமும் மூடநம்பிக்கையும் நிறைந்த நாடு என்பதை எவருமே மறுக்க முடியாது. இங்குள்ள மக்களிடம் தெய்வம் ‘கடவுள்’ என்று சொன்னால், அவற்றுக்கு ‘ஓர் இலக்கணம்,’ ‘ஒரு வடிவம்’ ஏற்கனவே கற்பிக்கப் பெற்றுள்ளது. எனவே மக்களில் யார் தன்னைக் ‘கடவுள்’ ‘தெய்வம்’ என்று கூறிக்கொண்டாலும், மக்கள் அவரை நம்பவே செய்வார்கள். அவர், இவர்களை ஏமாற்றுகிறாரோ இல்லையோ, இவர்களாகவே அவருக்கு ஏமாறக் காத்திருக்கிறார்கள். அவ்வாறு தெய்வம் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்களின் காலடியில் எவ்வளவு செல்வத்தையும் கொட்டுவதற்குக் காத்து நிற்பார்கள். அவர்களின் எந்த ஒரு சொல்லையும் தெய்வம் சொன்னதாகவே நம்புவார்கள். இந்த வாய்ப்பான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அத்தகைய மதத் தலைவர் ஒருவர் தமக்குச் சார்பாகவோ, அல்லது தம்மைச் சேர்ந்தவர்களுக்குச் சார்பாகவோ, எதனையும் செய்து கொண்டுவிடவோ, தம் சாய் காலை நிலைநிறுத்திக் கொள்ளவோ முடியும். இவ்வகையில் நாம் முதலில் சொன்ன சூதாட்டத்திற்கும் இதற்கும் எள்ளளவும் வேறுபாடு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
எனவே, தம்மை ஒருவர் ‘தெய்வம்’ என்றும், தாம் பேசுவது தான், ‘தெய்வத்தின் குரல்’ என்றும் சொல்வது ஒரு குமுகாயக் குற்றமாகக் கருதப்பெறல் வேண்டும். மக்களில் வேண்டுமானால் ஒருவர் உயர்ந்த அறிவு பெற்றவராகவோ, நல்ல மனவுணர்வு வாய்க்கப் பெற்றவராகவோ இருக்கலாம். அதற்காக அவர் தம்மைத் தெய்வம் என்று சொல்வாரானால், மக்கள் அவரை உண்மையாக ஏற்கனவே தாங்கள் அறிந்துகொண்ட தெய்வத்துக்குச் சமமாகவே கருதிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. இனி, மக்கள் அப்படிக் கருதுவதற்குத் துணையாக தூண்டுகோலாக - இன்னொரு வாய்ப்பும் நம் நாட்டில் உள்ளது. அஃதாவது, இந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஆட்சித் தலைவர்கள்கூட, அஃதாவது குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர்கள்கூட, அத்தகைய மதக்குருமார்களைப் போய்க் கண்டுவருவதும், அரசியல் நடைமுறைகளுக்கு அவர்களிடம் கருத்துக் கேட்பதும், மக்களுக்கு ஒரு தவறான நடைமுறையை, ஒரு வழிகாட்டுதலைப்
புகட்டுவதாகும். இதுவும் இந்த நாட்டில்தான் நடைபெற முடிகிறது. அரசனே, மக்களில் ஒருவரைத் ‘தெய்வம்’ என்றும், அவர் பேசுவதைத் ‘தெய்வத்தின் குரல்’ என்றும் ஏற்பதனால், மதிப்பதனால், மக்கள் அவரைப்பற்றி என்ன தான் நினைக்க மாட்டார்கள்? இந்த நிலை மக்களின் அறிவு முன்னேற்றத்திற்கும், வாழ்வியல் முயற்சிகளுக்கும் எத்துணைத் தடையாக அமைந்துவிடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
எனவே, இக்கொடுமையான ஏமாற்றுப் போக்கு, ஒரு குமுகாயக் குற்றமாகக் கருதப்பட்டு அரசியல் சட்டத்தால் தடைசெய்யப் பெறுதல் வேண்டும். தடுக்கப்பெறுதல் வேண்டும் என்பதை அரசுக்கும், அறிஞர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். பொது மக்களும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக!
- தமிழ்நிலம், இதழ் எண் : 13, 1983