ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/பார்ப்பன எழுச்சி
திராவிடர் கழகத்திற்குச் சில வலிவான கொள்கைகள் உண்டு. திராவிட இனக் காப்பு, சாதி, மத, மூட நம்பிக்கை முதலியன ஒழிப்பு, தமிழின நலமீட்பு, தமிழ்நாடு விடுவிப்பு முதலியவை அவை. இவற்றுள் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையை அக் கழகம் பெரியாருக்குப் பின் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. மற்ற கொள்கைகளில் அது முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இது பின்பற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது பெரும்பாலும் இந்து மதம் என்னும் வேதமதக் கருத்துகளை முன் வைத்ததான ஒரு கொள்கை மற்றபடி, அறிவியலுக்கு மிகப் பொருந்துவதான மெய்ப்பொருள் கொள்கையில் அவர்கள் அதிகம். கருத்துச் செலுத்துவதில்லை என்பதைத் தவிர, வேறு எதிரான கொள்கையை அது கொண்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை. அது தவிர, தமிழ்மொழி நலன் பற்றிய கூறுகளிலும் அவர்கள் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஓரிரு கருத்து வேறுபாடுகளைத் தவிர, நமக்கும் அக்கட்சியினர்க்கும் பெருத்த மாறுபாடுகள் வேறு. இருப்பனவாக நாம் கருதுவதற்கில்லை. எனவே இப்பொழுதுள்ள கால நிலையில், தமிழர்கள் தங்களுக்குள் மாறுபாடான கருத்துக்கள் எவை யெவை என்பதை ஆராய்ந்து அலசிப் பார்த்துக் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதைவிட, நாங்கள் ஒன்றுபடுவதற்குரிய அடிப்படைக் கருத்துகள் எவை என்பதைப் பற்றி எண்ணிப்பார்ப்பது இனநலத்துக் குகந்ததாக இருக்கும் என்று நாம் கருதுவதால், அதையொட்டிய சில எண்ணங்களை இங்குத் தெரிவிக்க முன்வந்துள்ளோம்.
பெரியாருக்குப் பின், அவர் அமைத்துக் கொடுத்த கட்சியமைப்பில் சிற்சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், பெரியாரின் திராவிடர் கழகத்தில் பெரும்பங்கைப் பற்றிக் கொண்டிருப்பதான, திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட திராவிடர் கழகமே தாய்க்கழகமாகவும், மக்களிடையில் அவ்வகையில் மிகுந்த சாய்கால் உள்ளதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்து, செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, இற்றை நிலையில் பொதுவாக, திராவிடர் கழகம் என்பது திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட கழகத்தையே குறிக்கும். அவ்வாறு குறித்துக் கொண்டுமிருக்கின்றது.
இனி, திராவிடர் கழகம் தந்தை பெரியார் காலத்திலும் சரி, திரு. விரமணி அவர்களின் காலத்திலும் சரி, மக்கள் நலம் கருதும் செயல்களில், குறிப்பாகத் தமிழினத்திற்குப் பாடுபடும் செயல்களில் அதுவே இங்குள்ள பிற அரசியல், பொதுநலக் கட்சிகளை விட மிகுந்த அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கட்சியாக இருந்தது; இன்னும் இருக்கிறது. ஒரு கட்சி, தன் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கின்ற மாநாடுகளும், போராட்டங்களுமே, அதன் செயற்பாட்டைப் போதுமான அளவில் மக்கள் உணர்ந்துகொள்ளத் துணைசெய்வன ஆகும். அவ்வாறு பார்க்கையில், திராவிடர் கழகம் பெரியார் காலத்திலேயே நடத்தி வந்துள்ள தன் கட்சி மாநாடுகளைத் தவிர அது நடத்திய பகுத்தறிவு மாநாடு, பெண்கள் நலவுரிமை மாநாடு, இந்தி யெதிர்ப்பு மாநாடு, திருக்குறள் மாநாடு, சாதி யொழிப்பு மாநாடு, வகுப்படிப்படையில் பங்கு ஒதுக்கீட்டு மாநாடு (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மாநாடு) முதலிய பொது நலக் குறிக்கோளைக் கொண்ட மாநாடுகளும் வீரமணி காலத்தில் நடைபெறும் இந்தியெதிர்ப்பு மாநாடு, பார்ப்பன வல்லாண்மை (ஆதிக்க) எதிர்ப்பு மாநாடு, அண்மையில் குடந்தையில் நடந்த ‘பார்ப்பன வல்லாண்மை ஒழிப்பு மாநாடு’ முதலிய மாநாடுகளும், அக்கழகக் கொள்கையில் உறுதிப்பாட்டை நன்கு விளக்குவன ஆகும். இன்னும் பெரியார் நடத்திய போராட்டங்களும், வீரமணி நடத்தி வரும் போராட்டங்களும் இந்தி யெதிர்ப்புப் போராட்டம், ‘பிராமணர்’ சொல்லழிப்புப் போராட்டம், கருவறைப் போராட்டம் முதலியன) முழுவதும் தமிழின நலங் கருதியவையே ஆகும். இவ்வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், பதவி நலமும் அரசியல் ஊதியமும் கருதிப் போகையில், திராவிடர் கழகம் ஒன்றே முழுக்க முழுக்க தமிழின நலமும், தமிழர் இன இழிவு நீக்கமும் நாடிப் போகின்ற தமிழர் இயக்கமாக நமக்குத் தென்படுகின்றது. எனவே, திரு. வீரமணி அவர்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நம் முழு
ஆதரவையும் தரவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த வகையிலேயே, அண்மையில் குடந்தை நகரில் திராவிடர் கழகம் நடத்திய, பார்ப்பனர் வல்லாண்மை ஒழிப்பு மாநாட்டில் நாம் கலந்துகொண்டு, அதைத் தொடக்கி வைக்கவும் நேரிட்டது என்க.
இனி, இக்கால் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களின் இன நல வுரிமைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் இடங் கொடுக்காத வகையில், நாடு முழுவதும் போராடி வருவது, மிகுந்த வருத்தத்துடனும், அக்கறையுடனும் கவனிக்க வேண்டியதும் உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுமான நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்ப்பனர் எழுச்சி நம்மையெல்லாம் விழிப்புக் கொள்ளச் செய்திருக்கின்றது. நூற்றுக்கு மூன்று அல்லது ஐந்து பேராக உள்ள அவர்கள், பிற திரவிட இனத்தவரின் அனைத்து நலன்களையும் முற்றூட்டாகவும் முழுவுரிமையாகவும் கைப்பற்றி நுகர்ந்து வருவது அடாவடித்தனமும், அறக் கொடுமையானதும் ஆகும். புராண, இதிகாச கால முதல் இன்று வரை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும், பார்ப்பனர்கள் வாழ்வு நலந்தரும் அனைத்துத் துறைகளிலும் வல்லாளுமை(ஆதிக்கம்) செய்து வரும் கொடுமையும் துன்பமும், அதன்கீழ் உழன்று, இழிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் கிடக்கின்ற திரவிட இன மக்களுக்குத்தான் தெரியுமே தவிர, பிற இனத்தார்க்கோ, வெளிநாட்டவருக்கோ இம்மியும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெற வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் கோரிக்கை என்பது, அண்மையில் நடந்து வரும் குசராத்து, இராசத்தான் முதலிய வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களால் தெரிய வருகிறது. இனி, தென்னாட்டிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவை போன்ற போரிாட்டங்களைத் தொடங்குவதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுளம் முயற்சியும் முனைப்பும் செய்வதாகத் தெரியவும் வருகிறது.
கடந்த காலங்களில் பார்ப்பனர்களால் தமிழர்களுக்கும் பிற திரவிட இனத்தவர்க்கும் நேர்ந்த துன்பங்களும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமன்று. கல்வி, தொழில், கலை, பண்பாடு, சட்டம், ஆளுமை, பதவி, அதிகாரம் முதலிய ஆட்சித் தொடர்புத் துறைகளிலும், செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி முதலிய பொதுமக்கள் தொடர்புத்துறைகளிலும் பார்ப்பனர்களின் மேலாளுமையே பல நூறு மடங்கு மேலோங்கியுள்ளது. இதன் உண்மையை அவ்வத்துறைகளின் புள்ளி விளத்தங்களைப் பார்த்தால் நன்கு விளங்கும். பார்ப்பனரைத் தவிர மற்ற இனங்களுக்கோ, அஃதாவது சூத்திரர்களுக்கோ ‘பார்ப்பனனைப் பணிந்து அவனுக்குப்
பணிவிடை செய்து மகிழ்ச்சியூட்டுவதே மேலான அறம் (தர்மம்) மற்றவையெல்லாம் பயனில்லாதவை’ (மனு10 : 123) என்றும், சூத்திரன் ‘சுவர்க்க’த்திற்காவது, பிழைப்பிற்காவது பார்ப்பனனையே தொழ வேண்டும்’ (மனு 10 122) என்றும் கூறப் பெற்ற குமுகாய வரைமுறைகளின் படியே இன்னும் நடந்துவர வேண்டும் என்று ஆரியப் பார்ப்பனர்கள் விரும்புவது எத்துணை கொடுமையானது! சட்டம் என்னும் அரசியல் நெறிமுறையும், அறம் (தர்மம்) என்னும் குமுகாய நெறிமுறையும் பார்ப்பனர் நலத்துக்கே சார்பாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். ‘இந்த தேசத்தில் பிறந்த பிராமணர்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லா ‘தர்மத்’தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மனுநூலின் கொள்கையாக (மனு 2 : 20) இருப்பதற்கு இந்நாட்டு அமைச்சர்களின் எவரேனும் அமைவு சொல்ல முடியுமா? அல்லது அவ்வாறு இல்லை என்று மறுத்துத் தருக்கமிட முடியுமா?
இந்த நிலையில் கீழே வீழ்த்தப் பெற்ற திராவிட இன மக்கள், நீண்ட நெடுங்காலத் துயிலினின்று, இன்று, ஒருவாறு விழித்துக் கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு, தென்னாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், தந்தை பெரியாரின் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத் தொண்டாலும், வடநாட்டில் பேரறிஞர் பர். அம்பேத்கார் போன்றோரின் அரு முயற்சியாலுமே ஏற்பட்டு, இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை எவரும் மறுறத்துவிட முடியாது. இனி, இவ் வெழுச்சி யுணர்வு இந்தியா முழுவதுமே இக்கால், கிளர்ந்து பரவி வருகின்ற தெனினும், தென்னாட்டில் அது தீ வடிவில் பரவிப் புயலாக வருகின்ற தென்றே சொல்லுதல் வேண்டும். பெரியார் இல்லாத காலத்திலும், அவரால் ஊட்டப் பெற்ற இவ்வினைவுணர்வு, இவ்வாறு கொழுந்து விட்டுப் படர்ந்து பற்றி எரிவது, இன்றுள்ள திராவிடர் கழகத்தின் தொடர்ந்த செயற்பாடுகளாலும், அதன் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணி அவர்களாலுமே என்பது சிறிதும் மிகையான கூற்றாக இருக்க வியலாது. தமிழர் நலம் கருதி, அவ்வப் பொழுது நம் இனவுணர்வு கிளர்ந்தெழும் வண்ணம் அவர் ஆற்றி வரும் அன்றாடச் சொற்பொழிவுகளும், எழுதி வரும் எழுத்துகளுமே நம் கூற்றுக்குச் சான்று பகரும். தமிழ்நாட்டில் பெரியாரை விட வேறு எவரும், மக்களுக்கு அறிவூட்டும் முயற்சியில் இவ்வளவு மிகுதியாகப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை; அதற்கடுத்தபடி அன்பர் வீரமணி அவர்கள் பெரியாரின் அப்பணியை அதே வகையில் தொடர்ந்து வருவது நமக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டுவதாகும்.
எவ்வாறேனும், இந்நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவேனும், தமிழினம் முழு மீட்சி பெற்றாக வேண்டும். மொழியியல் வரலாற்றில் தாய்த் தமிழைத் தொடர்ந்து, பிற திரவிட மொழிகள் எவ்வாறு படிப்படியாய்த் தோன்றி விரிவடைந்து பெருகினவோ, அவ்வாறே, தமிழினத்தில் ஏற்படப்போகும் இவ்வின மீட்சியுணர்வு வளர்ச்சியுற்று, பிற திரவிட இனங்களையும் மிக விரைவில் பற்றுவது மிகவும் உறுதியும், நடைபெறப் போகும் உண்மையுமாகும். அப் பெரும்புரட்சிக்குப் புறநிலையில், நண்பர் திரு. வீரமணி அவர்களின் உழைப்பு மிகவும் உறுதுணையாக நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த உண்மையைக் கண்ணுக்கு கண்ணாக நாம் குடந்தையில் இரண்டு நாட்களிலும் நடைபெற்ற மாநாடுகளில் காண நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவரின் இந்த இன மீட்சிப் போராட்டத்திற்கு தோளுக்குத் தோளாக நின்று ஊக்கமளிப்பது என்றும் நாம் உறுதி பூண்டோம்.
மொழி, நிலையில் நம் பாதை, திராவிடர் கழகத்தினர்க்குச் சற்று மாறுபட்டதுதான் எனினும், மொழியை அடியொட்டிய இனநலத்திலும், நாட்டு வரலாற்று மீட்சியிலும் நமக்கும் அவர்களுக்கும் நூற்றுக்கு நூறு ஒப்பமுடிந்த இணைவான பாதையாகவே உள்ளது. எப்படியும், பார்ப்பனியம் கடந்த மூவாயிரமாண்டுகளாகக் கால் வைத்துப் பரப்பிக் கொண்டுள்ள கொடுநிலையை இத்தலைமுறையிலேயே அகற்றியாகல் வேண்டும். அதன் ஆணிவேரையும் பக்க சல்லி வேரையும் வேரடி மண்ணையும் அடியோடு கல்லி எடுத்து எரித்துச் சாம்பலாக்கியே ஆகல் வேண்டும். அதன் முடிவு தமிழினத்தின் அழிவாகவும் இருக்கலாம்; அல்லது தன் கூரிய நச்சுப் பற்களால் இத்திரவிட இனத்தைக் குறிப்பாகத் தமிழினத்தைக் கவ்விப் பிடித்தபடி, அனைத்து நிலையிலும் அதன் வாழ்வியல் நலக் குருதியை உறிஞ்சி உயிர் குடிக்கும் பார்ப்பனியக் கொடும் பாம்பைச் சாகடிப்பதாகவும் இருக்கலாம். இவ்வரும் பெரும் பணிக்கு மற்ற தலைவர்களெல்லாம் காலெடுத்து வைக்கவும் அஞ்சும் போராட்டக் களத்தில், யார்ப் பரணி பாடிக் கொண்டு இறங்கித் தம்மையே ஈகம் செய்து கொண்டுள்ளார் திருவாளர் கி. வீரமணி அவர்கள். அவர்களின் தமிழின மீட்புக்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாம் தோள் தருவோம் என்று உறுதி கூறுகிறோம். அத்துடன் இறுதியாகத் தமிழினத்திற்கு நாம் சொல்லிக் கொள்வது, இது: வீரமணி தமிழ் இனத்திற்குக் கிடைத்த ஒரு வயிரமணி! அவர் முயற்சி வெல்க!
- தென்மொழி, சுவடி : 17. ஓலை 9, 1981