ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/மதமென்னும் பெயரால்

விக்கிமூலம் இலிருந்து

மதமெனும் பெயரால் நடைபெறும் பொதுத் தொல்லைகளை அரசு தடுத்து நிறுத்துதல் வேண்டும்

நாம் வாழும் இவ்விந்திய நாடு வறுமை மிகுந்த நாடு; அத்துடன் அறியாமை நிறைந்த நாடு. ஆனால் மக்கள் பெருக்கமுடைய நாடு. நாட்டு மக்களில் எண்பது விழுக்காட்டினர் வறுமை மிக்க ஏழையராகவும், தொண்ணூறு விழுக்காட்டினர் அறியாமை நிரம்பிய மூடநம்பிக்கைகள் மிகுந்தவர்களாகவும் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். எனவேதான், இங்குப் பணம் படைத்தவர்களும் மதச் செருக்கர்களுமே பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றியும் சுரண்டியும் அடிமைகளாக்கியும், இதனை ஒரு கொடுமைமிக்க நாடாக ஆக்கி வருகின்றனர். அறியாமையும் ஏழைமையும் மிகுந்த நாட்டிற்குக் குடியரசுரிமை கிடைத்தது, செல்வக் கொள்ளையர்களுக்கும், மதக் கொள்ளையர்களுக்குமே வாய்ப்பாக அமைந்தது. அவ்விரு வகையினரும் மக்களை நசுக்கிப் பிழிந்து, அவர்களின் உழைப்பைப் பெற்றுத் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், அவர்களை மத மூட நம்பிக்கைகளில் வீழ்த்தி அறியாமையினின்று மீள முடியாதவர்களாக அழுத்தி வைக்கவும் முடிகிறது. இவ்விரு நிலையினரே பதவிகளைக் கைப்பற்றவும்

அதிகாரங்களைப் பெறவும் வாய்ப்புகள் அமைகின்றன. இவர்களுக்குத் துணைபோகும்படி இங்குள்ள சட்ட அமைப்புகளும், காவல்துறைக் கண்காணிப்புகளும் கலைத்துறை வாய்ப்புகளும் அரண்களாக அமைந்துள்ளதை எவரும் மறுத்தல் இயலாது. எனவே தான் இங்குத் தொழில்கள் வளர்வதில்லை. வேளாண்மைச் செழிப்பு ஏற்படுவதில்லை; பொதுமை மலர்வதில்லை; பொதுவுடைமை நாற்று விடுவதில்லை. இவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளிய வல்லாண்மையையும், மத ஆளுமைகளையும் ஒழித்தாலொழிய அண்மை எதிர்காலத்தில் இங்குத் தோன்றி வளரும் மறுமலர்ச்சி நிலைகள், தலைதூக்கிச் செழிப்பது அருமையிலும் அருமை!

அறியாமையும் ஏழைமையும் மக்களை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்லும் இரண்டு கீழ்நிலைக் கோட்பாடுகள், பண்டைய அரசர்களாட்சிக் காலங்களில் இவ்விரு கோட்பாடுகளும் மக்களில் ஒரு பகுதியினரிடையே தேவை யென்றே கட்டிக் காக்கப்பெற்றன. ஏனெனில், அவர்கள் இவ்விரு அழிவுக் கூறுகளினின்றும் விடுபட்டு மேம்பாடும் வலிமையும் பெறுவார்களானால், தங்கள் மன்னர் மரபாட்சிக்கு அழிவுநேரும் என்பது அவர்கள் அச்சம். எனவே இவை அரசர்க்குரிய கோட்பாடுகளாக, சூழ்ச்சி மிகுந்த செல்வர்களாலும் மத வல்லாண்மை மிக்க புரோகித க் குருமார்களாலும் அறிவுறுத்தப்பெற்றுச், சாணக்கியம், மாக்கிய வல்லியம் முதலிய பொருள்நூல்களிலும், சுக்கிரநீதி, மனுநீதி முதலிய அறநூல்களிலும் வலியுறுத்தப் பெற்றன. இன்றுள்ள இந்திய அரசமைப்பும் மேற்கண்ட நூல்களுக்குப் பெரும்பாலும் மாறுபடாதவாறு வகுக்கப் பெற்றுள்ளதாலேயே, இந்நாட்டில் செல்வர்களுக்கும் மதவாளுளமைக்காரர்களுக்கும் இவ்வளவு கொடிய ஆளுமையும் அதிகாரங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நாடு உண்மையிலேயே முன்னேறி, மக்கள் சமநிலையும் நிகரமையும் பொதுவுடைமையும் எய்தி, மேம்பட்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் ஆளுமை இங்கேற்பட வேண்டுமானால், செல்வர்களுக்குக் கையோக்கம் தருவதும், மதவாளுமைக்காரர்களுக்கு நடைத் தாராளம் ஏற்படுத்துவதுமான இப்பொழுதுள்ள அரசியல் திருடர்களினதும், குமுகாயக் கொள்ளையர்களினதுமான போலிக் குடியரசு ஆளுமை அறவே ஒழிக்கப்படல் வேண்டும். அதுவரை, தப்பித்தவறிப் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நாம் அனுப்பிவைக்கும் நல்லவர்கள் சிலரால், சிற்சில வேளைகளில், பற்பல கட்டுத் திட்டங்களையும் எதிர்ப்புகளையும் மீறிக் கொணரப் பெறும் சட்டதிட்டங்களும், நடைமுறைத் திருத்தங்களும் செயலற்ற வெறும்

ஊமைச் சட்டங்களாகவும் நடைமுறைக்குதவாத நொண்டித் திட்டங்களாகவுமே போகும் என்பதை, அரசியல் குமுகாய மாற்றங்களை விரும்பும் சிற்சில நல்லவுள்ளங்கள் உறுதியாகக் கருதிக் கொள்ளுமாக

இனி, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திரவிடராட்சி யென்றும், தமிழராட்சியென்றும் சிற்சிலரால் கடந்த காலங்களிலும் இக்காலும் அமைக்கப்பெற்றதும், பெற்றுவருவதுமான ஆட்சியும் அதே வகையில் செல்வர்கள் சாய்கால் உடையதும், மதங்களின் மேய்ப்பர்களால் ஆட்டிவைக்கப் பெற்றதும் பெறுவதுமான ஆட்சியே என்று கூறாம லிருப்பதற்கில்லை. எத்துணைப் பகுத்தறிவு வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஏழையர்மேல் இரக்கமுடையவர்களாக இருந்தாலும் முதலாளியத்திற்கும், மதங்களுக்கும் அஞ்சி, இவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும், திட்டங்களையும் சட்டங்களையும் கைநெகிழ்த்தே வந்துள்ளனர்; வருகின்றனர். சிற்றூர்ப்புறங்களில் வாழும் ஏழைமக்களைக் கொள்ளையடித்துப் பட்டணத்தில் உள்ளவர்களுக்கு ஒர் ஆரவாரமான வாழ்வுவாழக் கற்றுக் கொடுக்கும் சூதாட்டமே இன்றுள்ள அரசியலாகும். அதேபோல், அறியாமை மிகுந்த ஏழைமக்களை ஏமாற்றிப் பணம்பறித்து நகர்ப்புறங்களில் வேடிக்கைகளும் விழாக்களும் நடத்துவதே இன்றுள்ள மதக்கோட்பாடாகும். ஒருநாள் வரும் விளக்கணி(தீபாவளி) விழாவில், மதம் என்னும் பெயரால் புகைக்கப் பெறும் விலைமதிப்பற்ற எரிபொருள்களின் பொருளியல் மதிப்பு எவ்வளவு? வெடி மருந்துகளின் அளவு எவ்வளவு? அவற்றை நாட்டுக் காவல்நிலைக்கும், பிற உள்நாட்டு ஆக்கத்திற்கும் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவ் விழாவுக்கு ஏன் தடைபோட அஞ்சுகிறது அரசு? தேவையெனில், எண்ணெய் முழுக்கும், தின்பண்டத் தீனிகளும், புத்தாடைப் புனைவுகளுமே நாட்டு நலம் கருதா அக் கொண்டாட்டக் கொடும்பர்களுக்கும் குறும்பர்களுக்கும் போதாவா? வெடிகள், பொறிப் புகைச்சல்கள் ஒரு கேடா? அவை இருந்துதான் ஆக வேண்டுமா? எந்த மடயன் எந்த ஆராய்ச்சியால் இத்தகைய வீண் ஆரவாரப் பொருளியல் கேடான விழா வேண்டுமென்று அரசுக்குச் சொன்னான்? இவ்வாரவார விழாவால் ஏற்படும் பொருள் கேடுகள் எவ்வளவு? எத்தனைக் கல்லெடை வெடிமருந்துகள்! எத்தனைக் கல்லெடைத் தாள்கள்! இரும்புகள்! மரங்கள்! வண்ணங்கள்! எத்துணை அழிவுகள்? எத்துணைப் பெருந் தொல்லைகள்! அமைதிக் கேடுகள்! எத்துணை வேலை வினைக்கேடுகள்! செல்வச்செருக்கர்கள் கொளுத்தும், அல்லது வெடிக்கும். ஆயிரக்கணக்கான உருபா

மதிப்புடைய சுடர்ப்புகைகளுக்கும் வெடிகளுக்கும் ஆசைகொண்டு உள்ளம் ஏங்கும் ஏழைமக்களுக்கு எத்துணை மனச்சலிப்பு ஏற்படும்? அம் மனவேக்கம் கொண்ட குழந்தைகளை நிறைவுசெய்யும் பொருட்டு, அவற்றின் ஏழைப்பெற்றோர்கள் படும்பாடு எத்துணைப் பெரிது! கொடியது! மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எத்துணை இரைச்சல் கேடுகள்! ஏத அழிவுகள்! சேத இழப்புகள்! ஏன் இந்த மூளைகெட்ட முண்ட அரசியலாளர்களுக்கு இது. விளங்கவில்லை? அல்லது, விளங்கினாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த ஏன் துணிவில்லை ? அடுத்த முறை முதலாளியர்களினதும், சங்கராச்சாரிக் கூட்டக் குளுவான்களினதுமான ஆதரவு கிடைக்காது என்கின்ற அச்சந்தானே! நாட்டுமக்கள் நலங்கருதாமல் அவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுடுகாட்டுப் பதவி எதற்கு? அதற்கு ஏன் ஆளுமைக் கட்டிலில் போய் அமரவேண்டும்? ‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்று திருவள்ளுவர் எழுதியது உந்து வண்டிகளில் பொறிப்பதற்குத்தானோ ? அல்லது பெரியார் நூற்றாண்டு கொண்டாடுவதற்குதானோ?

இனி, நளி(கார்த்திகை) மாதம் தொடங்கினால் போதும், ஐயப்பன் பெயரைச் சொல்லிக்கொண்டு, திருடர்களும், கொடியர்களும், கொள்ளையர்களும், அரம்பர்களும் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. ஒலிபெருக்கிக்கான ஒழுங்குமுறைகள் நடைமுறையிலிருந்தும், காலை 4.30 மணிக்கே எழுந்து, ஊரே அலறும்படி ஒரேபடியான பாடல்களை 40, 45 நாட்கள் திருப்பித் திருப்பி வைப்பதால், அண்டையயலில் உள்ள பொதுவுணர்வாளர்களுக்கு எத்துணைத் தொல்லை! அக்காலம் அரையாண்டுத் தேர்வுக் காலமாகையால் அதிகாலையில் எழுந்து படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இவற்றால் எத்துணை இடையூறு! இடர்ப்பாடு! ஐயப்பா, ஐயப்பா என்று ஒலிபெருக்கி அலறுவதால் பத்திமை வளருமா? இறையருள் கிட்டுமா? அல்லது அவ்வாறு கத்திக்கமறும் அந்தக் கொண்டாட்டக் கூத்தாடிகளுக்குத்தான் நன்மை கிடைக்குமா? இவற்றுக்கெல்லாம் இறைவன் ஏமாறி இரங்கி அருள் தருவான் என்றால், அந்த இறைவனும் இவர்களைப் போல் ஒரு கொள்ளையனாகவும், கொடியவனாகவுமன்றோ இருத்தல் வேண்டும்? இஃது என்ன மூடநம்பிக்கை! ‘ஒலிபெருக்கியைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து, இசைத்தட்டுகளைப் போடுவதுதான் ஐயப்பன் திருவிழாவா? பூசையா? நோன்பா? மலைச்செலவுகளுக்கும் ‘மகா விளக்கு’ பார்ப்பதற்கும் அணியப்படுத்தும் ஊக்கவுரைகளா? அவ் வாறானால் அந்நோன்பு நோற்காதவர்களுக்கும், அம்

'மகாவிளக்கு’ பார்க்கப் போகாதவர்களுக்கும் அவ் வொலிபெருக்கி இரைச்சல் எதற்கு? இல்லை, அரசு, நாட்டிலுள்ள அனைவருமே, நாடு நகரங்களை வெறுமையாக்கி விட்டு விட்டு அங்குப் போய், அந்த ‘மகாவிளக்கு’க் காட்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறதா?

இனி, இதுபோலவே, சிலை(மார்கழி) மாதத்தில் மிகுகாலைப் பொழுதில் அலறுகின்ற ஒலிபெருக்கிகளில் ஒரிரு திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மட்டும் வைத்துவிட்டு, அவற்றைத் தொடர்ந்து, இழிவும் இழுப்பும் நிறைந்த கழிகாமத் திரைப்படக் குக்கலிசைகள் ஆரவாரிப்பது எந்த அமைச்சருடைய காதுகளையும் புண்படுத்தவில்லையா? அல்லது அவர்கள் நகருக்கு வெளியே தன்னந் தனியிடத்தில் அளாவிக்கட்டிய வளமனைகளில், வளிநிலைப்பாட்டு அறைகளில் படுத்துத் துரங்கும் வாய்ப்புகளால் கொண்ட புறக்கணிப்பா? ஏன் இந்நிலைகளைத் தடைசெய்யக் கூடாது? ஏற்கனவே வீட்டுக்கு வீடு, அண்டையயல் வீட்டுக்காரர்கள் விரும்பியோ விரும்பாமலோ, அலறியடிக்கும் வானொலிப் பெட்டிகளின் இரைச்சலுடன், தெருவுக்குத் தெரு கதறியெடுக்கும் ஒலிபெருக்கிகளின் வல்லிரைச்சலும் சேர்ந்து நகரத்தையே நரகலாக்கிக் கொண்டிருக்க வில்லையா? இதை ஏன் அரசு கவனிக்கவில்லை? மதக்கொழுப்பர்களின் மனம் புண்படக் கூடாது என்பதாலா? அல்லது அவர்களே மதமூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டதாலா? இத் தவிர்க்க வியலாக் கொடுமைச் சூழல்களால் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் பிறருடைய மனங்களும் செவிகளும் புண்படாவா?

இவை தவிர ஆடவை, கடக (ஆனி, ஆடி) மாதங்களில் தெருக்கள் தோறும், சந்து பொந்துகளிலும் மூலை முடுக்குகளிலும், நெடுஞ்சாலை ஓரங்களின் இடையிலும் முளைத்துக் கிடக்கும் மாரியம்மன்களுக்கு, மாறி மாறி விழாவெடுக்கும் நோக்கத்துடன், கொட்டு முழக்குடன் கூடிய ஒலிபெருக்கி இரைச்சல்களுக்கு அளவுண்டா? இன்னும் அவ்விழாக்களை நடத்தும் குடிகாரர்களும், குடிகேடர்களும், கொடிய அரம்பர்களும், மூடநம்பிக்கை மூஞ்சூறுகளும், அண்டையிலும் அயலிலும் உள்ள குடியிருப்புக்காரர்களிடம் கும்பல் கும்பலாகப் போய் ஐந்து, பத்தென்றும், தெருக்களில் வருவோர் போவோரிடமும், சாலைகளில் வ்ரும் போகு ர்டிகளில் உள்ளோரிடமும், உண்டியல்களை ஏந்தியும் கொள்ளையடித்தும், வழிப்பறித்தும், இடர்ப்படுத் ல்களை என்னென்று சொல்வது? இதைவிட எப்படி எழுதிக்காட்டுவது? ஏன் இது பொதுத் தொல்லை (Public Nuisance) ஆகாது? இது பற்றி அமைச்சர்களுக்கு

ஏன் சூடு சுரணை இல்லை? இவற்றைக் கேட்பதால் பூணுரல் திருமேனிகள் பொங்கியெழும் என்பதனால் வரும் ஊமைத்தனமா? அல்லது தமிழின மூடக் களஞ்சியங்களின் எதிர்ப்பு வரும் என்னும் தொடை நடுங்கித்தனமா? சிங்கப்பூர் முதலிய முன்னேறிய நாகரிகங் கொண்ட நாடுகளிலும்கூட, அண்டை வீட்டாருக்குக் கேட்கும்படி வானொலியை வைத்தாலும் குற்றம், அதற்குத் தண்டம், என்பது இங்குள்ள ஆட்சியாளர் அனைவரும் இல்லையாயினும், ஒரு சிலராகிலும் அறிந்திருக்க மாட்டார்களா ? இனி, அங்கு ஒலிபெருக்கிகளே தெருவில் கட்டக்கூடாது என்பது சட்டமன்றோ? அப்படி யெல்லாம் பொதுவொழுங்கைச் சரி செய்வதற்கு இங்கு என்ன நொட்டை அல்லது நோப்பாலம் வந்தது? இவர்கள் மேல் நாடுகளும் கீழ்நாடுகளும் போவது எதற்கு? வேடிக்கை பார்க்கவா? அல்லது இரவுநேரக் காட்சிகளைக் கண்டு நாக்கைச் சப்புவதற்கா? ஏன், அங்குள்ள சீர்திருத்தங்களை, பொதுவொழுங்கு நடைமுறைகளை. இங்கும் கொண்டுவரக் கூடாது? இதில் என்ன தயக்கம் அல்லது மயக்கம்.

இனி, கலைமகள்விழா வென்றும், கருவிப்பூசை யென்றும், இங்குள்ள அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பார்ப்பனியர்களினதும், பார்ப்பன அடிமைகளினதும் தொல்லை கொஞ்சமா? அவற்றைப் பகுத்தறிவு பேசும் இவர்கள் ஏன் பின்பற்றக் கூடாது? தமிழ் எழுத்துகளில் மட்டுந்தானா - தமிழ் திறந்தமடம் என்பதாலும் - அது ஏதிலி போட்ட பிள்ளை என்பதாலும் கைவைத்துச் சிதைப்பது பகுத்தறிவு என்று கருதிக்கொண்டார்கள்!

இவை தவிர வேறு எத்தனை எத்தனை மத மூடச் செயல்கள் இங்கு நடைபெறுகின்றன! அவற்றால் அரசுக்கு எத்தனை இழப்பு! பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்ற பொதுவான செயல்களை மட்டும் ஊக்கி, அவரவர் விருப்பத்திற்கு அவரவர் வீடுகளிலோ அறைகளிலோ கவனித்துக்கொள்ள வேண்டிய மதச் செயல்களுக்கும், பொது இடையூறுகளுக்கும் ஏன் தடையிடக் கூடாது?

இவ்வேதுங்கெட்ட இந்திய நாட்டில், இங்குள்ள மக்கள் பெருக்கம் போலவே மதப் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறதே! இந்து மதம் என்ற இழவெடுத்த பார்ப்பன மதத்தில் மட்டும், சிவனியம்(சைவம்), காளியம் (சாக்தம்), மாலியம்(வைணவம்), முருகியம்(கௌமாரம்), ஆனைமுகவம் (காணபத்தியம்), கதிரவம்(சௌரம்) என்னும் வைதீகச் சார்பு மதங்களுக்கும், கபிலம், கணாதம், பதஞ்சலியம், அட்சபாதம், வியாசம்,

சைமினியம் ஆகிய வேதாந்த மதங்களும்; பெளத்தம், வைரவம்; காளாமுகம், சூனியவாதம், உலோகாயுதம், சமணம் ஆகிய புறமதங்களும்; வாமம், மாவிரதம் முதலிய அகச் சமயங்களும்; தார்க்கியம், மீமாம்சம், ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலிய சிறு சிறு கலவை மதங்களும், ஆக முப்பத்தாறு மதங்களும்; இன்னும் கிறித்துவ மதத்தில் உரோமன் கத்தோலிக்கம், உலூதரம், புரோட்டசுடன்டியம், உரோமானியம், பாப்டிசம், வேசுலியனம், வொயிட்பீல்டி சுடியம், கால்வனிசுட்டம், ஆண்டினோமியனியம், பிரசு பிடேரியனியம், யூனிடேரியனியம், இலண்டனியம், இசுகாட்டியம், சுவீடன் பர்கீயனியம், பிரிமேசனியம், கிரேக்கியம், கீனியாயம் முதலிய பத்தொன்பது சிறு மதப் பிரிவுகளும்; இசுலாம் மதத்தில் சியாம், சுன்னி என்னும் இரு மதப் பிரிவுகளும், இவையன்றிப் பாரசிகம், கான்பூசியம், சாயியம், இராமகிருட்டிணம், அரே இராம அரே கிருட்டிணம், துவைதம், அத்துவைதம், துவைதாத்வைதம், மத்துவம் முதலிய எண்ணிறந்த மதங்களும் தோன்றி நடைமுறையிலுள்ளனவும், தோன்றிக்கொண்டே இருப்பனவும், இந்நாட்டு மக்களின் மூளைகளையும் நெஞ்சங்களையும் என்றென்றும் மேம்பாடடையச் செய்யாமல் அழுத்தி வைத்துக்கொண்டுள்ள நிலை எத்துணை இரங்கத்தக்கது! இனி, இவையல்லாமல் சிற்றூர்ப்புறங்களில் உள்ள காட்டேரி, கருப்பன், வீரபத்திரன், மதுரைவீரன் முதலிய சிறு குலதெய்வங்கள் எத்தனை! எத்தனை! இவற்றுக்கெல்லாம் செய்யப்பெறும் வேடிக்கைகள் எத்தனை! விழாக்கள் எத்தனை ! இவற்றா லெல்லாம் பொது மக்கள் அனைவர்க்கும் எத்தனை யெத்தனைத் தொல்லைகள்! இடையூறுகள்! இடர்ப்பாடுகள்!

ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி போதவில்லை என்று வாய் கிழியக் கத்துவது! கூச்சலிடுவது! மறுபுறம் மக்களை இன்னும் காட்டு விலங்காண்டித்தனத்திலேயே நிலைபெறும்படி அழுத்தி வைத்திருப்பது! எத்தனை முரண்பாடான போக்கு இந்த நாட்டில் போடப்பெறும் முன்னேற்றத் திட்டங்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் வகையில் இங்குள்ள மதப் பெருக்கங்களை - மூட நம்பிக்கைகளை மக்களிடம் பெருக்குவதை எவர் மறுக்க முடியும்! காஞ்சி காமகோடியார் போலும் சங்கராச்சாரியார்கள், அறிவு வளர்ந்தாலும் வளராவிட்டாலும், மக்களிடம் உள்ள மத மூடநம்பிக்கைகள் போய்விடக் கூடாதே என்னும் கவலையினாலும் கருத்தினாலும், எவ்வளவுக்ககெவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பன அடிமைக் கும்பல்களை வைத்துக்கொண்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் (வண்டியில் போனால்

இடையிலுள்ள சிறுசிறு ஊர்கள் விட்டுவிடும் என்பதால்) நடந்து போய், மதத்தின் நச்சு வித்துகளை ஊன்றி வருவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இங்குள்ள மகாலிங்கச் செல்வர்களும், முத்தையச் செல்வர்களும் அன்றாடம் வாய்க்கரிசி போட்டு வழிநடத்தி வருகின்றனர். இவ்வாறு மதத்திற்கு முதலாளிகள் காப்பாகவும், முதலாளிகளுக்கு மதங்கள் காப்பாகவும் இருக்கும் இந்நிலையில் மக்கள் முன்னேற்றம் எப்படி நடைபெறும்?

இறைமை என்பது மதங்களின் மூட நம்பிக்கைகளால் வளர்வதன்று. மாந்த இனத்தின் மீமிசை மனவியற் கோட்பாடு அது. அவ்வுணர்வு முழுவதையும் பார்ப்பனச் சார்புடையதாக்கி, முதலாளிய வாழ்வுக்கு அடித்தளமாக்கி, மக்களைச் சேறாக்கிக் குழப்பும் இந்நிலைகளிலிருந்து அவர்கள் மீட்கப்பெற்றே ஆகல் வேண்டும். அரசியலறம் எவ்வாறு தூய்மையானதோ அவ்வாறே இறைமையறமும் தூய்மையானது. ஆனால், அவ்வரசியலை எப்படி நூற்றுக்கணக்கான கட்சிகள் பங்குபோட்டுக்காலில் மிதித்துக் கொண்டு தங்கள் நலமே குறிக்கோளாக மக்களை அலைக்கழிக்கின்றனவோ, அப்படியே இறையறத்தையும் ஆயிரக் கணக்கான மதங்கள் கூறுறபோட்டுக்கொண்டு, மக்கள் மனங்களையும் மூளைகளையும், இருட்புழைகளாகவும், நாற்றச்சேறாகவும் மாற்றிவருகின்றன. தூய்மையான இறையுணர்வு ஆரவாரமற்றது! மூட நம்பிக்கையற்றது! வானம் போலும் களங்கமில்லாதது! கதிரவன் போலும் இருண்மை நீங்கியது! மழைநீர் போலும் தெளிவானது! அதுதான் அறம்! அதுதான் இன்பம்! அதுதான் பொதுமை! அதுதான் பொதுவுடைமை! அஃது, இவ்வுலகில் பிறந்த எல்லார்க்கும் உணவு, உடை, உறையுள் சமமாகக் கிடைக்க வேண்டும் என்னும் கோட்பாட்டினது! இதுதான் தமிழ்ச் சான்றோர் கொள்கை! எனவே, இதற்கு மாறான அனைத்து மத ஆரவாரங்களையும், மூட நம்பிக்கைகளையும் நேர்மையான அரசு துணிந்து எதிர்த்தல், தடுத்து நிறுத்தல் வேண்டும்! அஞ்சுதல் கூடாது! ஆட்சிக்காக, பதவிக்காகக் கொள்கையன்று கொள்கைக்காகவே பதவி ஆட்சி! முயற்சி வெல்க!

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்!
- மணிமேகலை : 25-228-31
- தென்மொழி, சுவடி : 17. ஓலை : 4, 1980