ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/வடஇந்தியாவும் தென்இந்தியாவும் கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. வட இந்தியாவும்

தென் இந்தியாவும்

(கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை )


ஆபஸ்தம்பரும் பௌத்தாயனரும்

சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசி சூத்திரகாரராகிய ஆபஸ்தம்பர், கோதாவரி ஆற்றின் மேலைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யஜுர் வேத தாஷினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டு போகப்படுவாரல்லர். (Sacred Text Books of the East 11, page: XXXVII - XLII) அவரைக், குறைந்தது, மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு போய் நிறுத்த விரும்புகிறேன். காரணம் பாரதப் பெரும் போருக்கு ஐந்து தலைமுறைக்குப் பிற்பட்ட அதாவது, கி.மு. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஸ்வேதகேதுவை, ‘'அவர்’ அதாவது அண்மையில் வாழ்ந்தவராக, அவர் பேசுகிறார். (Pargiter: Ancient Indian Historical Tradition, Page : 330) மேலும், ‘'ஆப்ஸ்தம்பர், பாணினியின் இலக்கண நெறியைப் பின்பற்ற வில்லை”, “அவர் அதை அறிந்திருப்பதும் நடைபெறாத ஒன்றாம் என்றும் திருவாளர் பூலர் கூறுகிறார். (Sacret Text Book of the East. 11, page:XLII) பெரும்பாலும், அவர், பாணினிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவராவர். கி.மு. நான்காம் நூற்றாண்டு வாழ்ந்தவர் பாணினி என்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தையும், திருவாளர்கள் “கோல்டுஸ்டக்கர்’ அவர்களும் பி.ஆர். பந்தர்கார் அவர்களும், தகர்த்துவிட்டு, அவருடைய காலம், கி.மு. ஏழாம் நூற்றாண்டுதான் என்பதை வலுவாக உறுதி செய்யும் எண்ணற்ற சான்றுகளைக் கொடுத்துள்ளனராகவும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலோர், பாணினி கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற தவறான முடிவிலிருந்து, தங்கள், இன்னமும் விடுவித்துக் கொண்டாரல்லர். ஆபஸ்தம்பர், பாணினிக்கு முற்பட்டவராயின், அவருடைய காலம், நான் மேலே கருத்துத் தெரிவித்த காலத்திலும் முற்பட்ட காலமாதல் வேண்டும். ஆபஸ்தம் பரைப் போலவே, "சாகா" என்ற வேதக்கொள்கையின் விளக்கவுரைகாரராகிய பௌதாயனர், அவரைவிட இருநூறாண்டு மூத்தவராவர், இவ்விரு சூத்ரகாரர்களும் (Soothrakaaras) கிருஷ்ண யஜுர் வேதத்தின் கதைத்திரிய" சாகா பிரிவைச் சேர்ந்தவராவர்.

இக்கொள்கை, விந்தியத்திற்குத் தெற்கிலேயே சிறப்பாகப் பரவியிருந்தது. வட இந்தியாவில், இந்நெறியைப் பின்பற்று பவர், கடந்த ஆயிரம் ஆண்டுகால எல்லைக்குள் வடநாட் டிற்குக் குடிபெயர்ந்த தென் இந்தியப் பிராமணர்களின் வழிவந்தவராவர். ஒரு பிரிவு "சாகா"வைப் (வேதக் கொள்கை ஒன்றை பின்பற்றுவோர் அனைவரும், தாங்கள் வாழ்ந்திருந்த இடத்தில் வாழ்ந்திருந்தமைக்கான சிறு அடையாளம் தன்னையும் விட்டுவைக்காமல், வடக்கிலிருந்து தெற்கே குடிபெயர்ந்துவிட்டனர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும் நம்மால் இயலாது. ஆதலின், 'தைத்திரீய" சாகா, தனி சாகாவாகப் பிரிந்து வழங்கிய காலந்தொட்டு, அத் தைத்திரீய" சாகா, தென்னிந்திய சாகாவாக ஆகி யிருத்தல் வேண்டும். (பாண்டவர் பக்கம் இருந்து போரிட்ட தென்னாட்டவருள் பதித்திரி" என்பார்களும் இருந்தனர். அவர்களின் சாகா, தைத்ரேயம்" என அழைக்கப்பட்டது என்றும், வைசம்பாயனர், யாக்ஞவல்கியரின் எச்சிலை விழுங்கியது குறித்த கட்டுக்கதை, ஒரு பறவையின் பெயர், சாகா என வழங்கப்படுவதற்கான பிற்காலக் கற்பனை என்றும் எண்ணுகின்றேன். இது போலும் பேரழிவு சார்ந்த நிகழ்ச்சிக்கான சிறுகுறிப்பு தானும் புராணங்களிலோ, அல்லது மரபு வழிச் செய்திகளிலோ காணப்படவில்லை. ஆகவே, கிருஷ்ண யஜுர் வேதம், தஷிண பிராமணர்களின் "சாகா"வாசு ஆதற்குப் போதுமான போக்குவரத்து, கி.மு. 14, கி.மு.13 நூற்றாண்டு காலத்தில், தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் இடையில் இருந்துவந்தது. இச்சமய நெறிக்கான விதிமுறைகளை, முதன்முதலில் வகுத்த ஒருவர், பௌதாயனர் ஆதலின் அவரை, கி.மு 900இல் கொண்டு நிறுத்த விரும்புகின்றேன். இக்காலம், பாரத்தாயனார்க்குப், பொருத்தம் அற்ற பழங்காலமாகத் தோன்றக்கூடும், ஆனால், கோதாவரி ஆற்றங்கரையில், இராமர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியர் இருந்து வந்தனர் என்பதையும், தென்னிந்தியாவை, இராமன் அமைதி நிலவும் இடமாக மாற்றியது, ஆங்கு ஆரியர்கள் மேலும் பரவுவதற்கு வழிசெய்தது என்பதையும், வேதவியாசர் மற்றும் வைசம் பாயனர் காலத்தில், கிருஷ்ண யஜுர் வேத மாணவர்கள், அந்த ஆற்றை அடுத்திருந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இருந்தனர் என்பதையும், அச்சாகாவின், முதுபெரும் சூத்ரகாரர் பௌதாயனர் ஆவர் என்பதையும் நினைவில் கொண்டால், மேலும், பாணினி கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதையும், ஆபஸ்தம்பர், பாணினியின் சமகாலத்தவர் அல்லது சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பதையும், பௌதாயனர், ஆபஸ்தம்பரை விட, குறைந்தது இரண்டு நூற்றாண்டுகாலம் முற்பட்டவர் என்பதையும் ஏற்றுக் கொண்டால், பௌதாயனர் காலம் பற்றிய என்னுடைய மதிப்பீடு எவ்வாறு மறுக்கப்படும் என்பதைக் காண முடியவில்லை. ஆனால், பௌதாயனர், அத்துணைப் பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும், அவர் பெயரால் வழங்கப்படும் சூத்திரங்களுக்கு அப்பழங் காலத்தைக் கொடுக்க இயலாது; ஆபஸ்தம்பரின் சூத்திரங்களைப் போல் அல்லாமல், பெளதாயரின் சூத்திரங்கள், அவரைப் பின்பற்றுவோர்களில், மிகமிகப் பிற்பட்ட காலத்தவரால், பெரும் அளவில் புதியன புகுத்தலுக்கும் திருத்தங்களுக்கும் ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. காரணம் : அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு நெறிகள், அவை மிகமிகப் : பிற்பட்டன ஆதல் கூடுமோ என்ற ஐயுணர்வை எழுப்புமளவு அத்துணை விரிவாக உள்ளன. வான்கோள்களை, அவை ஆட்சிபுரியும் வார நாட்களின் வரிசையில் குறிப்பிட்டிருப்பது, அச்சூத்திரங்கள், பிற்காலத்தில், வரன்முறையின்றித் திருத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

வடஆரியப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான தென்னாட்டவர் பழக்க வழக்கங்கள்

தென்னாட்டுப் பிராமணர்களின் வாழ்க்கைமுறைகளுக்கான விதிகளை வகுக்கும் போது, பௌதாயனர், ஆரிய வர்த்தத்து ஆரியர்களுக்கு, ஒருவகையில் வெறுப்பூட்டுவனவும், தென்னாட்டவர்களுக்கே உரியனவுமாய வழக்கங்களை இயல்பாகவே விவாதிக்கிறார். தென்னிந்தியர்கள், ஆரிய வழிபாட்டு நெறியை ஏற்றுக் கொண்டு, ஆரிய வாழ்க்கை முறைகளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட பின்னரும், கைவிட்டு விடாது, மேற்கொண்டிருந்த பழைய, தஸ்யூவழக்கங்கள் ஐந்து, பௌதாயனரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : சமயதீக்கை பெறாதவரோடு உடன் இருந்து உண்ணல். மகளிரோடு இருந்து உண்ணல் ; பழைய உணவை உண்ணல், ஒருவன், தன் தாய்வழி அம்மான் மகளோடும், தந்தையோடு உடன் பிறந்தாள் மகளோடும், காதல் உறவு கொள்ளுதல்; கூறிய இவ்வழக்கங்கள் ஒவ்வொன்றிற்கும், அந்நாட்டு நடைமுறை விதியே, அதிகார உரிமை யுடையதாகக் கருதப்பட வேண்டும். (யத்தத் அனுபதென ஸஹபோஜனம், ஸ்திரியா ஸஹபோஜனம், பர்யுஷித போஜனம்; மாதுல் பித்ருஸ்வஸ்ற்துஹிதிர் கமநம் ; இதி... தத்ர தேசப்ராமாண்யம் எவள்யாத் - Baudhayana Dharma Sutras. 1:1, 2, 3, 6) வடநாட்டு வாழ்க்கைச் சட்ட வல்லுநராகிய கௌதமர், உள்நாட்டு வழக்கங்களை, அடிப்படை ஆதார மாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பௌதாயனர் அறிந்திருந்தார். (Mithyaitaditi Gawtaman. 1:1,2,7) அவரால் முடிந்திருந்தால், இப்பழக்க வழக்கங்களைப் பௌதாயனர் அகற்றி இருப்பார் என்பதை இது காட்டுகிறது.

ஆனால், நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் உள்ள ஆரியர்களை, அவர்களின் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடத் தூண்டுவதற்கான வலுவற்றவராக அவர் இருந்தார். பண்டைய பழக்கவழக்கங்கள், அத்துணை எளிதில் அழிந்துவிடுவதில்லை. உண்மையைக் கூறுவதாயின், அவை என்றுமே அழிவதில்லை . மாறாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுவரையும், ஒன்று, இருந்தது இருந்தவாறே, அல்லது சிறிதே திரிந்த நிலையில் இறவாது இடம் பெற்றிருக்கும்.

‘'பௌதாயன தர்ம சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ண ன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘'மாவல பித்ர்ஸ் வரர் துஹித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும். இற்றைய நாளில், தெலுங்கு பிராமணர்களிடையே, உண்மையில், இது கட்டாயமாம்; ஏனைய தென்னிந்திய பிராமணர்களிடையேயும் இதுவே பெரும்பாலான வழக்கமாம். தெலுங்கு பிராமணரல்லா தாரிடையே, தென்னாட்டுப் பிராமணரிடையே நன்கு தெரிந்த வழக்கமாம், ஒருவன் தன் உடன்பிறந்தாள். மகனை மணங்கொள்வது பொதுவான வழக்கமாம். அதனால், பிராமணரல்லாதாரால் பேசப்படும் தெலுங்குக் கிளைமொழியில், ‘'கோடலு” என்ற சொல், உடன்பிறந்தார் மகள் என்றும் பொருள்படும். மனைவி என்றும் பொருள்படும்), உடன் பிறந்தான் மகனுக்கும், உடன் பிறந்தாள் மகளுக்குமிடையேயான திருமணமே, வழக்கமான திருமணமாம்; ஆதலின், அவைபோலும் திருமணம் நிகழாத போது, அவ்வுடன் பிறந்தாள் மக்கள், இழந்த அந்நல்வாய்ப்பினுக்கு ஈடுசெய்துகொள்ள முயல்வர். அது, வேறுபிற சூழ்நிலைகளில், நனிமிகக் கொடிய ஒழுக்கக் கேடோடு கூடிய கயமையாகக் கருதப்படுவதுபோல், கருதப்படுவதில்லை . உடன்பிறந்தான் மகனும் உடன் பிறந்த தாள் மகளும், ஒருவரையொருவர் மணந்து கொள்ளா நிலையிலும், சமுதாயப் பெரும்பழிக்கு ஆளாகா நிலையில், ஒழுக்க நலனைப் புண்படுத்தவல்ல, கேலியொடு கூடிய இன்ப விளையாட்டு, அவர்களிடையே பரிமாறிக் கொள்ளப்படுவதும் உண்டு. உடன்பிறந்தார் மக்களிடையேயான திருமண வழக்கத்தில் மற்றொரு விளைவு, தமிழில் “அத்தான்” என்ற ஒரே சொல், தந்தையொடு உடன் பிறந்தாள் மகனை யும், மனைவியொடு உடன் பிறந்தவனையும், தமக்கையின் கணவனையும் ஒரு சேரக்குறிப்பதாம்".

பர்யுஷித போஜனம்" என்பது, பழையது உண்பதாம். ஆக்கிய சோற்றை, ஓர் இரவு, நீரில் இட்டுவைத்து உண்பது; உயிர்ச்சத்தும், ஊட்டச்சத்தும், அரைபட்டுப் போகாப் புழுங்கல் அரிசியாயின், அது ஓர் உடல் நலம் காக்கும் நல்ல வழக்கமாம். இவ்வழக்கம், வடநாட்டு ஆரியர்களால், அருவருப்போடு மதிக்கப்பட்டு, புனிதமற்ற செயலாகக் கருதப்பட்டது. ஆனால், ஆரிய எதிர்ப்பு இருந்தாலும், தமிழர்களால், அது விடாது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், வாழ்க்கைச் சட்டம் வகுப்போர், ஏதும் செய்ய மாட்டா செயல் இழந்து போனதைப் பர்யுஷித அன்னத்திற்கு அதாவது பழைய உணவிற்குப் பதிலாக உடல் உணர்வுகளுக்கு ஊக்கம் ஊட்டுவனவாய், காபி, சூட்டோடு புதிதாகப் பண்ணப்படும் அரிசி ஆப்பம் ஆகியவற்றை, மாற்றுப் பொருளாக்கித் தரும் நவநாகரீகம் செயல்படுத்திவிட்டது.

பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்

இக்காலத்தைச் சேர்ந்த, தென்னிந்திய பிராமணர், வட இந்திய பிராமணர்களைப் போலவே இறைச்சி உண்பவர்களாம். புலால் உண்ணும் விலங்குகள், பழகிய பறவைகள், பழகிய சேவற் கோழி, மற்றும் பன்றி ஆகியவை உண்ணப்படாதவை. ஆடுகள், ஐந்து ஐந்து கால்விரல்களைக் கொண்ட விலங்குகள் பஞ்ச பஞ்ச நகஹாறு முள்ளம்பன்றி, உடும்பு, முயல், முள்ளெலி, ஆமை, பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட ஐந்து விலங்குகள், (த்விகுரிஹை ), " நீல்காய்', புள்ளி இல்லா மான், புள்ளிமான், எருமை, காட்டுப்பன்றி, கால்களால் கிளறித் தின்னும் ஐவகைப் பறவைகள், கௌதாரி, பாறைகளில் கூடுகட்டி வாழும் புறா, "கபிஞ்சா', "வார்த்ஹராண்ஸ, மயில், கஹஸ்ரதம்ஷ்ட்ரி ', "சிலிசிம்', "வர்மி", "ப்ரஹச்சிரஸ்", "மஷ்கரி', "ரொஹிக" மற்றும் ராஜி" போலும் மீன் வகைகள், ஆகிய இவை உண்ணப்படலாம் எனப் பௌதாயனர் கூறுகிறார். இந்நீண்ட பட்டியலோடு, காண்டாமிருகமும், கருப்பு மறிமானும் எதிர்ப்புக்களிடையே சேர்க்கப்பட்டன (Baudhayana Dharma Sutras. 15, 2:18) ஆபஸ்தம்பர், தின்னக்கூடாத விலங்குகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். ஆனால், இறைச்சி உண்பது. பற்றிய அவர் கொள்கைகள், பால் தரும் பசுக்கள், காளைகள் ஆகியனவும் தின்னப்படலாம் எனக் கூறும் தனியான ஒரு சூத்திரத்தைக் கொண்டிருப்பதோடு, மற்ற வகையில், பௌதாயனர் கொள்கையோடு ஒத்துள்ளன. (Apasthamba Dharma Sutras 1,3,17,30) .

‘'வாஜகனேயர்'’ அவர்கள், ‘'காளை மாட்டின் இறைச்சி படையலுக்கு உரியது'’ எனப் பலர் அறிய வெளிப்படுத்திய கருத்தைத் தாம் கூறியதோடு இணைத்துக் கொள்வது பொருந்தும் என ஆபஸ்தம் பாயனர் கருதினார் என்பதிலிருந்து, மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான, உணர்வுபூர்வக் கருத்து தென்னாட்டில், தானாகவே கைவிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (யாஞ்யவல்கியர், ‘'பசு, காளைகளின் இறைச்சி முதிரா இளமையவாயின், அவற்றை உண்போரில் நானும் ஒருவன்” (Sat. Brah. 3:1,2,21) எனக் கூறுகிறார்.

ஆபஸ்தம்பர் கூற்றுப்படி, இறந்த முன்னோர்களை மகிழ்விக்கவும், செய்வோர்க்குப் பல்வேறு வகையான பலன்களை ஈட்டுவதற்கும், ஸ்ரார்த்தங்கள் ஒவ்வொரு மாதத்திலும் பிற்பகுதியில் செய்யப்படுதல் வேண்டும். அவர்கள் மனநிறைவு கொள்ளும் கால அளவு, படைக்கும் இறைச்சியின் வகைக்கேற்ப அமையும். அவ்வகையில், மாட்டிறைச்சி, அவர்களை ஓராண்டு காலத்திற்கு மனநிறைவு கொள்ளச் செய்யும். எருமை இறைச்சி, மேலும் நீண்ட காலத்திற்கும், காண்டா மிருகத்தின் இறைச்சி, அவற்றினும் நீண்ட காலத்திற்கும் மன நிறைவினைத் தரும். ‘சதபலி” என்ற மீன் வகையும், ‘'வார்தரானஸ்” எனப்படும் நாரை இனமும் நீண்ட காலத்திற்கு மனநிறைவைத் தரும். (Yajanavalkia’s Sat. Brah. 27, 16:4,726 - 28, 17:1-3)

தென்னிந்திய பிராமணர்கள், எப்போது, ஏன், இறைச்சி உண்ணலைக் கைவிட்டனர் என்பது ஒரு சுவையூட்டும் நிகழ்ச்சியாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நான் கருதும் தமிழ்ப்புலவர் கபிலர், புலால் நாறும் கொழுத்த கறி இறைச்சித் துண்டங்களை, பூமணம் நாறும் புகை எழத் தீ கொளுத்திச் சமைத்த ஊனையும், துவையலையும், கறியையும், சோற்றையும் உண்டு வருந்தும் செயல் அல்லது, வேறு செயல் அறியாவாகலின், பாடுவார் கைகள் மென்மையுடையவாயின எனக்கூறியுள்ளார். பிறிதோரிடத்தில், தம் பாடற்காம் பரிசிற் பொருளாக, மது இருந்த சாடி வாய் திறப்பவும், ஆட்டுக் கிடாய் வீழ்ப்பவும், சமைக்கப்பட்டுக் குவிந்து கிடக்கும் கொழுவிய துவையலையும், ஊனையும் உடைய சோற்றையுமே" விரும்பியுள்ளார்.

"புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ, ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா வாகலின், நன்றும்
மெல்லிய பெரும் ! --
- பாடுநர் கையே,
மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு"
புறம் - 14:12-19; 1113-13

கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில், விஷ்ணு, சிவன் மீதான பக்திப் பெருவெள்ளம், தமிழ்நாட்டில் பெருக்கெடுத்து ஓடிற்று. இவ்வழிபாட்டு நெறிகள், சமணர் வழிகாட்டு நெறியோடு போரிட வேண்டியதாயிற்று. சமணத் துறவிகளாம் ஆசிரியர்கள்தாம், சமய உணர்வு. வாய்க்கப் பெறாத் தம் மாணவர்களுக்கு, இறைச்சி உணவினைக் கைவிடுமாறு முதன்முதலில் வற்புறுத்தினர். வைஷ்ணவ, சைவ வழிபாட்டு நெறிகள். இறைச்சி உணவு உண்டலைக் கைவிடாது போனால், சமணவழிபாட்டு நெறிக்கு எதிராக இருந்து, வெற்றி பெறல் இயலாது. ஆகவே, இறைச்சி உண்ணல், கள் உண்ணல் ஆகியவற்றிலிருந்து. ஒதுங்கி நிற்பதைத் தங்களின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக மேற்கொண்டனர். தென் இந்தியாவில் வைஷ்ணவ , சைவ ஆகமங்களின் முதல் ஆசிரியர்களாக விளங்கிய பிராமணர்கள், இறைச்சி உணவினைக் கைவிட்டமைக்கு இதுவே காரணம் என யூகிக்கிறேன்.


வருணங்கள்

தென்னிந்திய சூத்ரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரிய பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ அளவினவே ஆம். ஆரியர்களின் நால்ஜாதி அமைப்பு (சாதுர் வர்ணயம்) வேதகாலத்தில், ஆரிய வர்த்தத்தில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்று. மகாபாரதப் போருக்குப் பின்னர் அர்ஜுனன் எதிர்பார்த்தது போல், வட இந்தியாவில் பெரும் சாதிக்குழப்பம் (வர்ணசங்கரம்) நிலை கொண்டுவிட்டது. (பகவத் கீதை 7.47 - 43). தென் இந்தியாவில் சாதுர்வர்ணயம் , எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது என்றும் நடைமுறையில் இருந்தது இல்லை. காரணம், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் பிராமணர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முழுமையாக வேறுபட்டே இருந்தது. ஆரியச் சமய நெறிகள், தமிழ்நாட்டில் பரவுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னர், தமிழ்நாட்டு மக்கள் கற்கால அளவில், பாலை, மலை, கடல், காடு ஆறு ஆகிய நிலங்களில் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, முறையே, நாடோடும் மறவர், வேட்டுவர், மீனவர், ஆயர், உழவர் என ஐவகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இப்பழங்குடியினர் ஐவரும், ஆரியப் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளிலிருந்து, பல வட இந்தி... கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை 93 நிலைகளிலும் வேறுபட்ட, தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் வளர்த்துக் கொண் டனர். ஆரிய வாழ்க்கை நெறிகள், தமிழர் வாழ்க்கை நெறிகளைப் பாதிக்க இயலவில்லை . ஆகவே, தமிழரின், அம்மண்ணுக்கே உரிய நாகரீகப் பெருவெள்ளமும், வந்து புகுந்த ஆரிய நாகரீகச் சிற்றருவியும், யமுனையும், கங்கையும், பிரயாகை தொடங்கி, பலகாவதம் இரண்டின் வெள்ளமும், ஒன்றொடொன்று கலக்கப் பெறாமலே, ஓடி வருவது போல், அடுத்தடுத்து ஓடுவவாயின. நமக்கு இப்போது கிடைத்துள்ள தமிழ்ப்பாக்களில், நன்மிகப் பழைய பாக்கள், பலநூறு ஆண்டுக்காலம் வரையும், தமிழ்ப் பிராமணர்கள், தமிழரின் தேசீயப் பெருவாழ்வாம், வெள்ளப் பெருக்கிலிருந்து பெருந் தொலைவு ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர். தமிழ்ப்பாக்களின் போக்கை ஆட்கொண்டிலர் என்பதை உணர்த்துகின்றன.

பாணினியும், தென் இந்தியாவும்

மகாபாரதப் போர் முடிவிற்கும், இந்த அரசு இனம் ஆட்சியமைப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரு - பாஞ்சா லம், மகதம், அவந்தி மற்றும் பிற வட இந்திய நாடுகளில், அரச இனங்கள், வண்ணம் மாற்றிக் காட்டும் கண்காட்சி போல், மாறிமாறி ஆட்சி ஏறிய நிகழ்ச்சியில் தமிழரசர் பங்கு சிறிதே அல்லது அறவே இல்லை எனலாம். ஆகவே, பாணினி போலும், முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த, வட இந்திய சமஸ்கிருத நூலாசிரியர்கள், தென்னாட்டவரை, அறவே குறிப்பிடவில்லை , நான் எண்ணுவது போல், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கிய பாணினி, அஷ்மகம்" ஒன்று தவிர்த்து, நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டாரல்லர். " இதிலிருந்து, திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள் தென்னிந்திய நாடுகளின் பெயர்களே பாணினிக்குத் தெரியாது எனஉய்த்துணர்கிறார். அஷ்டாத்தியாயி' யைக் கற்ற, அறிவார்ந்த ஆசிரியன் எவனும், பாணினி, ஒரு பொறுப்பற்ற, அல்லது ஏதும் அறியாத இலக்கண ஆசிரியன் ஆவன் எனக் கூறுமளவு துணிவு பெற்றவனாக மாட்டான், ஆனால் நாம் பெற்றிருப்பது ஒரு சொல் அன்று. பாண்டியா, சோழா, கேரளா என்று மூன்று சொற்கள். ஆழமாகவும், முழுமையாகவும் ஆய்ந்து காணும் இலக்கண ஆசிரியன் எவனும் அச்சொற்களை அவன் அறிந்திருந்தால், தவறாமல் செய்திருக்க வேண்டிய, அச்சொற்களின் அமைப்பு பற்றிய விளக்கம் பாணினியால் அளிக்கப்படவில்லை. ஆகவே, தென்னிந்திய நாடுகளின் பெயர்கள் பாணினிக்குத் தெரிந்திருக்கவில்லை. அல்லது, வேறு வகையில் கூறுவதாயின், கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்றே முறையான முடிவு ஆகும்” எனக் கூறுகிறார்.

பந்தர்க்கார் (Carmichael Lectures: 1918. page :4-7) இக்காரணகாரியங்களின் பொருத்தத்தை என்னால் ஏற்றுப் பாராட்ட இயலாமைக்கு வருந்துகின்றேன். பாணினி, அச்சொற்களை அறிந்திருக்க முடியும்; ஆனால், அவற்றைச் சமஸ்கிருதச் சொற்களாக மதித்திருக்க முடியாது. (உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள்) நாம், இப்போது பஞ்சாப் என்றும், ஆப்கானிஸ்தான் என்றும் பெயரிட்டு அழைப்பனவும், அவற்றிற்குத் தெற்கில் உள்ள மேலும் சிலவுமான, அவர் நேரிடையாகத் தெரிந்திருந்த அண்டை மாவட்டங்களில் உள்ள இடங்கள், ஆறுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டு ஆய்வு செய்திருப்பது நடைபெற்றுளது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய அஷ்டாத்தியாயியை, அவருக்குத் தெரிந்திருந்த இந்திய நிலப்பரப்பில், முழுமையான நில இயல் நூலாக மதிப்பது சரியாகாது. தம்முடைய இலக்கண நூலில் குறிப்பிடாத நாடுகளின் பெயர்கள் அவருக்குத் தெரியாது என்று கூறுவதும், மேலும் ஒரு படி சென்று அவர் காலத்து ஆரியர்கள், அப்பெயர்களை அறிந்திருக்கவில்லை என நிலைநாட்டுவதும், அதைப் பெரும் நகைப்பிற்குரிய ஒன்றாகத் தள்ளிவிடுவனவாம்.

“இந்தியாவின் நனிமிகச் சிறப்பியல்பு வாய்ந்த மரமாம் ஆல், ரிக் வேத்தில் குறிப்பிடப்படவில்லை . ஆகவே, ரிக் வேதப் பாராயணப் பாடல்கள் பாடப் பெற்றபோது, ஆல் போலும் ஒரு மரம் இந்தியாவில் இல்லை என ஒருவன் மிகவும் ஆணித்தரமாக வாதிடவும் கூடும்" எனக் கூறுவதன் மூலம், இவ்வாதத்தை எள்ளி நகையாடியுள்ளார் திருவாளர் பர்கிதர் அவர்க ள் (Pargiter's Ancient Indian Historical Tradition: Page: 625) "அது, ஆல் குறித்தும் உப்பு குறித்தும், இன்றைய ஆய்வாளர் முடிவுப்படி, ஆரியர்கள் சென்று தங்கியிருந்த பாரியாத்திரா . மலைக்குன்றுகள் (ஆரவல்லி மலைத் தொடர்) குறித்தும் ரிக்வேதம் ஊமையாகவே இருப்பதை ஒருவன் கருத்தில் கொண்டவழி , விந்தியமலை, மற்றும் பிற நில இயல் கூறுகள் குறித்து அவை ஏதும் கூறாதிருப்பது, அது, அவற்றை ரிக்வேதம் அறிந்திலது என்பதை உணர்த்துவதாகாது என்று, மேலும் அவர் கூறியுள்ளார். (Pargisers Ancient Indian Historical Traditions - Page : 299). இருவரில், ஒருவர், பெரும்பாலும், பாணினியின் சமகாலத்தவரும், பிறிதொருவர், அவர் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் சிறப்புற வாழ்ந்தவரும் ஆகிய பௌதாயனரும், ஆபஸ்தம்பரும் தென்னிந்தியாவில் வாழ்ந்து, வாழ்க்கைச் சட்ட திட்டங்களை வரைந்தனர். அவர்கள், ஆரியர்கள் தாம் உறுதியாக, மேலும் பாணினி எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல பெருமை சார்ந்த, முழுமை யான பல்பொருள் அறிவு நிரம்பியவராயின், தங்களுடைய வார்த்திகத்திலும், மகாபாஷ்யத்திலும், பாணினியின் இலக்கணக் கொள்கைகளை, மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை, முறையே காத்தியா யனர்க்கும், பதஞ்சலிக்கும் நேர்ந்திருக்காது.

ஜாதக கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்

பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதை களின் தொகுப்பாகிய ஜாதக கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தர்மவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதை களின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக இருந்திருக்க வேண்டும். அக்கதைகளில் ஒரு சில, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான போக்குவரத்து, அக்காலத்திற்கு முன்னரும் பின்னரும் போலவே, நெருக்கமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. அக்கதைகள், தம் இனத்தைத் தாமே கொன்று தின்னுபவராக நம்பப்படும் பழங்குடியினர் என்றும் பெண் பூதங்கள் என்றும் அழைக்கப்படும் “யக்கினீஸ்கள் ‘'ஸ்ரிபவத்து” நகரில் வாழும் ‘'தம்பண்ணி “ தீபத்தோடு (இலங்கை) நடைபெற்ற வணிகர்களின் கடற்பிரயாணங்கள் பற்றிப் பேசுகின்றன. அவ்விடத்திற்கு அண்மையில் வணிகர்களின் கலங்கள் உடைந்துவிடும்போது, யக்கினீஸ் என்ற அவர்கள் அவ்வணிகர்களுக்கு உணவும், மதுவும் அளித்து அவரைக் காத்து மணந்து கொள்வதும் செய்து, இறுதியில் அவர்களைத் தின்றுவிடுவதும் செய்வர்.

இந்த யக்கினீக்கள், இரைதேடி, கல்யாணி ஆறு முதல் நாகதீபம் வரை கடற்கரையில் அலைந்து திரிவர். (Valahassa Jataka No.196. நாகதீபம் என்பது, ஈழம் மலபார் கடற்கரைகளைக் குறிக்க வழங்கப்படும் அத்தீவு யக்கினீக்களால் இலங்கையின் நெருக்கமாக அகப்படுத்தப்பட்டிருந்தது. பழங்குடியினர் பற்றிய பழைய இராமாயணக் கட்டுக்கதைகளின் நினைவுச் சின்னம் இவை என்ற உண்மை ஒருபால் இருக்க, ஒரு பிரிவு மக்கள், இலங்கைக்குப் பயணம் செய்து, ஆங்குச் சந்நியாசிகள் ஆயினர். (Hatripala Jataka. 509: Mugapakka Jataka - 538), சிறிய வில்லாளனாகப் பிறந்த புத்தர்தாமும், தக்கசீலத்தில் வேதங்களைக் கற்றுத் தம் கல்வியை நிறைவு செய்துகொண்டு, வாழ்க்கை அனுபவங்களைப் பெற ஆந்திர நாட்டிற்குச் சென்றார். (Bhima Sena Jataka. 80) அவர் ஆங்குப் பெற்ற அனுபவம் குறித்து நாம் பொருட்படுத்தவில்லை. அவருடைய பிறவிகளில் பிறிது ஒன்றில், சேரி என்ற நாட்டில் அவர், ஒரு மண்பாண்டம் வணிகர். அவர் சேரிவன் என அழைக்கப்பட்டார். இச்சேரி, பெரும்பாலும் சேரநாடு ஆம். விலை கூவி விற்கும் வணிகனாக, ஊர் ஊராகச் செல்லும் அவர் பயணத்தில், அவர் தெலவாஹ" ஆற்றைக் கடந்து அந்தபுரா'வை அடைந்தார். அதாவது அந்த ஆந்திர நாடு, சேர நாட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை. (சேரிவாண்ய ஜாடகா எண் - 3)

போதிசத்தரின் பிறிதொரு அவதாரத்தில், அவர் பிராமண மகாகால"ரின் மகன் " அகித்தி" ஆகப் பிறந்தார். அவர் துறவியாக மாறி உடன் பிறந்தவளான "யசவதீ" என்பாளுடன் பெனாரஸிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள ஓரிடத்திற்குப் போய்விட்டார், ஆனால், அவர் மீது அன்புகாட்டுவாரின் அன்புத் தொல்லைகளிலிருந்து விடுபட, அவ்விடத்தை அவராகவே விடுத்து, தமிலா" நாட்டை அடைந்து, காவேரி பட்டணத்திற்கு அருகில் இருந்த, ஒரு மலர்த் தோட்டத்தில் (உய்யானம்) தங்கியிருந்தார். இதிலிருந்து இந்நாட்டுப் புறக்கதைகள் வழக்கில் இருந்த போது, காவேரிப்பட்டணம், சோழர்களின் தலைநகர்களில் ஒன்று (அக்கதையில் சோழர்கள் பெயர் சுட்டிக் கூறப்படவில்லை. என்றாலும்) என்பதும், வட இந்தியக் கிளைமொழிகளில் அது, 'காவெரபட்டன" மாக மாறி வழங்கப்பட்டது என்பதும், ஆற்றுப் பெண் தெய்வத்தின் தந்தை பெயர் கவெரரிஷி" என்றும், கட்டுக்கதை பெரும்பாலும் வழக்கத்தில் இருந்தது என்பதும் உய்த்துணரப்படும். ஈண்டும் அகித்தி' அன்பு செலுத்து வோரால், அன்புத் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். அதனால், ' அஹிதீய" என அழைக்கப்படுவதும், பெரும் பாலும், நாகதீபம்" போன்றதே ஆனதும், தம்ப பண்ணி " (ஈழம்) என்ற தீவிற்கு அண்மையில் நாகர்களின் நாடாம் மல பார்க் கடற்கரையான "காரதீபம்" என்ற இடத்திற்குச் சென்று விட்டார். அங்கு, "அகித்தி" அதாவது போதிசத்தர் நிறை பேரறிவு பெற்று விட்டார். "அகித்தி" ஒருசிலரால், நிலபேறுடைய காரணம் ஏதும் இன்றி, அகஸ்தியராகக் கருதப்பட்டார்.

ஸஹபாஹு

ஜாதகா கதைகளில் காணப்படும், தென்னிந்தியா பற்றிய இவைபோலும் குறிப்புகள், கி.மு. முதல் ஆயிரத்தாம் ஆண்டின் மத்தியில், தென் இந்தியா, வட இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடவில்லை. இந்தியாவின் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையில் அரசியல் அல்லாத பிற உறவுகள், எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவே இருந்து வந்தன என்பதை உறுதி செய்கின்றன. புத்தர் இறந்த, பெளத்தர் சொல் நடையில் கூறு தாயின், உலகப் பேரிறைவன் “பரினியான” படுக்கையில் படுத்துவிட்ட அன்று (பரினி பான பஞ்சம்ஹி நிபன்னெ லொகநாயகொ - மகாவம்சம் :7:1) சிங்கப்படை கொண்ட ஸஹாபாஹவின் மகன் விஜயன், தன்னைப் பின்பற்றுவோர் ஏழுநூறு பேருடன், “லாள'’ (ராத - கிழக்கு வங்காளம்) நாட்டிலிருந்து அவனுடைய தீயொழுக்கத்திற்காக, அவனுடைய தந்தையால் நாடுகடத்தப்பட்டு, சிலோனில் அடியிட்டான். கலத்தில் ஏற்றிக் கடலில் விடப்பட்டான். அவன் கடற்பயணம் பற்றிய நிலவியல், வழக்கம்போல் நம்புதற்கு இயலாத ஒன்றாம் . அவன் வட பம்பாயைச் சேர்ந்த இன்றைய ஸோபராவாம் “ஸப்பர காவில்” கரை இறங்கினான். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரிபுளுஸ் என்பவரால், ஸோபட்மா என்பது கீழ்க்கடலைச் சேர்ந்த துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுளது. ஆதலின், இது பெரும்பாலும் ஒரு தவறு ஆகும். வங்காளக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சிலோனுக்குச் செல்ல வேண்டிய ஒரு கலம், ஸோபாவுக்குச் செல்வது இயலாத ஒன்று. அங்கிருந்து, அவன் மீண்டும் கலம் ஏறிச் சிலோனுக்கு வடக்கில் இருந்த தம்பபண்ணியில் கரை இறங்கினான். ஆங்கு வாழ்ந்திருந்த மக்களாம் ‘'யக்கர்"களை (யக்ஷ) வென்று அழித்து, அந்நாட்டின் அரசன் ஆகிவிட்டான். தனக்கும், தன் உடன் வந்தவர்க்கும் மனைவியர் வேண்டி, பண்டு அரசன் மகளை இசைவிப்பதற்காகவும், ஏனையோர்க்கும் மனைவியர்களைப் பெறும் பொருட்டும், பரிசில் பொருள் களோடு, ஆன்றோர் சிலரை தக்சின (தென் இந்தியா) நாட்டில் உள்ள மதுரைக்கு அனுப்பிவைத்தான். (மதுரை அரச்ன “பண்டவ'’ என அழைக்கப்பட்டான். பதஞ்சலி, பாண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டிய என்ற சொல்லைத் தோற்றுவிப்பது போல, பாலி மொழி எழுத்தாளர்கள், “பாண்டியா” என்ற சொல்லை, அவர்களுக்கு நன்கு தெரிந்த பாண்டவர் என்ற சொல்லாகக் கருதுவர்). எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், அணிகளால் ஒப்பனை செய்யப்பெற்று, யானைகளும், குதிரைகளும், பொதிநிறை வண்டிகளும் பின்தொடர் சிலோன் சென்றனர். இந்தக் கதை, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான . மிகப்பழைய போக்குவரத்து, தொடர்ந்து இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. இது பாண்டியர்களும், வடநாட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகா அந்நியர் அல்லர், மாறாக வழக்கமான நிகழச்சிபோல, பாண்டியர் மகள் ஒருத்தி, விஜயனுடைய கைப்பிடிக்க, ஆணையிட்டுப் பெறுமளவு ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர் என்பதையும் உறுதி செய்கிறது. அர்ச்சுனன், சித்ராங்கதா வையும் மணந்து கொண்டு, நாகர் மகள் உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விஜயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினியாம் "குவண்ண" என்பவளோடு அவன் கொண்ட உறவு, போன்றதன்று. மாறாக, புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே

“ததொ ஸோ விஜயொ ராஜ பண்டுராஜஸ்ஸ துஹிதரம் மஹதா பரிஹாரெண மஹேசித்தே ப்ஹிஸேசயி
-மகாவம்ஸோ - 7:72”