இந்தியக் கலைச்செல்வம்/கலைச் சின்னங்கள் - செப்பு விக்ரகங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11
கலைச் சின்னங்கள் -
செப்பு விக்ரகங்கள்


நாட்டில் தர்மம் அருகி, அதர்மம் பெருகுகிறபோது தர்ம சம்ரக்ஷணார்த்தம் நான் அவதாரம் செய்கிறேன்” என்றார் பகவான் கீதையில். அதைப் போலவே நாட்டில் கலையின் - கலை உருவங்களின் உண்மைப் பொருளை அறியாது, அறிய மறுத்துத் தூற்றுவார் தொகை பெருகுகிறபோது, மண்ணுக்குள் மண்ணாய் மறைந்து கிடக்கும் பழைய கலைச் சின்னங்கள் பல இன்று வர ஆரம்பித்திருக்கின்றன.

பொன்னியென்னும் தெய்வத் திருநதி பாய்ந்து பெருகும் அந்தச் சோழவள நாட்டிலே அன்று கலை வளர்த்தார்கள் சோழ மன்னர்கள். ‘எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது’ கட்டினான், சோழன் கோச்செங்கணான். அவனைப் பின்பற்றி அவன் கால்வழியில் வந்த மற்ற சோழ மன்னர்களும் அற்புதம் அற்புதமான கலைக் கோயில்களை முழுக்க முழுக்கக் கல்லாலேயே கட்டினார்கள் பழையாறை முதலிய பழைய ஊர்களில். பொன்னியின் செல்வன் - ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில்  தமிழ் நாட்டில் நீண்டு நிமிர்ந்த பெருங்கோயிலாக இன்றும் நின்று நிலவுகிறது. அவன் மகன் ராஜேந்திரன், கங்கையையும் கடாரத்தையும் வென்று புலிக்கொடி நாட்டியதோடு அமையாது கங்கை கொண்ட சோழீச்சுவரம் என்ற கோயிலை உருவாக்கியிருக்கிறான். எண்ணரிய எழிலாலும் அளவாலும் தந்தை கட்டிய கோயிலை விடப் பெரிய கோயிலை கட்ட முனைந்திருக்கிறான் இந்தத் தனயன். இவன்தன் மகன் ராஜராஜன் கட்டிய கோயில்தான் தாராசுரத்து ஐராவதேஸ்வரர் கோயில். இன்றும் இதுபோன்று எத்தனை எத்தனையோ கோயில்கள் சோழநாடு முழுவதும் நிறைந்து அந்தக் கலை வளர்த்த காவலர்களின் பக்திக்கும், கலை அறிவுக்கும் சான்று பகர்கின்றன.

இந்தக் கோயில்களில்தான் எத்தனை எத்தனை மூர்த்திகள் - கல்லிலும், செம்பிலும் நர்த்தன விநாயகரும், நடனராஜரும், அர்த்தநாரியும், பிக்ஷாடனரும், கஜம்சம்ஹாரரும், திரிபுராந்தகரும், வீணாதரரும், கங்காதரரும், விஷ்ணுவும், துர்க்கையும் இன்னும் எண்ணற்ற மூர்த்திகளும் அன்று இந்தக் கோயில்களில் நிறைந்திருந்தார்கள். காலகதியில் இவைகளில் பல கவனிப்பாரற்று தத்தம் நிலை இழந்திருக்கின்றன. அயலாருடைய ஆவேச மதவெறிக்கு உட்பட்டு மூக்கிழந்தனவும், முடி இழந்தனவும் சில. என்றாலும் இந்தச் சிலை உருவங்களின் அருமையை உணர்ந்த அன்பர் சிலர், அன்றே இவைகளை இந்தக் கலை உணர்வில்லாத மாக்கள் கையில் அகப்படாதவாறு காப்பாற்ற முனைந்திருக்கிறார்கள். இப்படித்தான் பல அற்புதமான செப்பு விக்ரகங்கள் கோயில்களில் உள்ள நிலவறைகளிலும், கோயிலுக்கு வெளியே உள்ள வயல்களிலும் புதைத்து வைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றன. புதை பொருள்கள் இருந்த இடத்தைப் பின்னர் தெரிந்துகொள்ள அந்த இடங்களில் குறிப்பாக மரங்களை நட்டிருக்கின்றனர். கல்லில் அடையாளம் பொறித்திருக்கின்றனர்.

இப்படித்தான் கற்சிலைகள் பல தத்தம் நிலை இழந்து வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் கவனிப்பாரற்றுக் கிடந்தன. இந்தத் தஞ்சை ஜில்லாவில், அந்தக் கலைச் செல்வம் எல்லாம் அழிந்துபோகாதவாறு அவைகளையெல்லாம் மிக்க சிரமத்துடன் சேகரித்து, அவற்றைத் தஞ்சையிலுள்ள அரண்மனைக் கட்டிடங்களுக்குக் கொண்டுவந்து, அங்கு ஒரு அற்புதமான கலைக்கூடம் நிறுவினார் கலை ஆர்வம் உடைய அரசாங்க உயர் அதிகாரி ஒருவர். நம்மைச் சேர்ந்த கற்சிலைகளுக்கே யோகம் பிறந்துவிட்டதே, இனி நாமும் சும்மா இருத்தல் கூடாது என்று மண்ணில் மறைந்து கிடந்த செப்பு விக்ரகங்களும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துவிட்டன இந்தச் சமயத்தில்.

சில வருஷங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியை அடுத்த தில்லைவிளாகத்தில் கிடைத்த கோதண்ட ராமரும், நாதாந்த நடனரும், இன்று தமிழ்நாட்டில் பிரசித்தமானவர்கள். இதை அடுத்த பட்டிச்சுவரத்தில் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் கிடைத்தவைகளும் கண்டு மகிழத்தக்கவையே. இந்த முறையிலேதான் சென்ற இரண்டு வருஷ காலத்தில் தஞ்சையை அடுத்த புதுக்குடியிலும், கும்பகோணத்தை அடுத்த சிவபுரத்திலும், மாயூரத்தை அடுத்த திருவாலங்காட்டிலும், பட்டுக்கோட்டையிலும், கந்தர்வக் கோட்டையை அடுத்த காயாவூரிலும், சீர்காழியை அடுத்த திருவெண்காட்டிலும் அற்புதமான சிலைகள் மண்ணுக்குளிருந்து வெளிவந்திருக்கின்றன. புயலால் அடிபட்டு விழுந்த மரத்தை வெட்டி எடுத்தபோது வெளிப்பட்டவை சில. வயலை வெட்டி நிலத்தைத் திருத்தியபோது வெளிவந்தவை சில. இடிந்து விழுந்த நிலவறைகளைச் செப்பம் செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டவை பல. இவைகளில் எல்லாம் சிறந்தவை திருவெண்காட்டிலிருந்து கிடைத்துள்ள எட்டு விக்ரகங்கள்தான். அவைகளின் கலை அழகில் ஒரு கோடி காட்டுவதே இன்று என்னுடைய முயற்சி.

1952ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஒருநாள் கிராமக் காவலர்கள் இருவர் காலை வேளையில் திருவெண்காட்டைச் சேர்ந்த சன்னதித் தோட்டத்தின் வயல் வெளிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது விநாயகரின் வாகனமான மூஷிகம் ஒன்று ஒரு பொந்தில் நுழைந்தது. மூஷிகத்தைப் பிடிக்கும் ஆத்திரத்தில் அது நுழைந்த பொந்தையே வெட்டினர் கையிலிருந்த மண்வெட்டியால். காவல்காரர் வெட்ட வெட்ட கணீர் கணீர் என்ற ஓசை கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து வெட்டியபோது ஒரு சிறு அம்பிகையின் இடது கை, இன்னும் தொடர்ந்து பாருங்கள் என்று சொல்லும் தோரணையில் லாவகமாக நீட்டப்பட்டிருந்தது. காவல்காரர்கள் அம்பிகை காட்டிய வழியே தொடர்ந்து வெட்டினார்கள். வெட்ட வெட்ட பெரிய பெரிய விக்ரகங்கள் வெளிவர ஆரம்பித்தன. விஷயம் பரவிற்று ஊர் முழுவதும். கிராம அதிகாரிகள் வந்த னர், வெட்டியான் தலையாரிகளுடன். வெண்காடர் கோயில் நிர்வாகிகள் வந்தார்கள் கொட்டு முழக்கத்துடன். விக்ரகங்கள் எல்லாம் முதலில் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு அதன்பின் சீர்காழி கஜானாவை நோக்கி நடந்தன. பின்னர் அவை தஞ்சை ஜில்லாவின் ஹுசூர் கஜானாவில் பத்திரமாகப் பாதுகாப்பில் அடைந்திருக்கின்றன.

திருவெண்காடு சீர்காழிக்குத் தென் கிழக்கில் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிறிய ஊர். அது பட்டினத்தடிகளின் பிறந்த ஊர் என்பது பிரசித்தம். சரித்திரப் பிரசித்தியும், இலக்கியப் பிரசித்தியும் பெற்ற காவிரிப்பூம்பட்டினமும் இந்த ஊரை அடுத்ததுதான். அங்குள்ள ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் வெண்காடர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றவர். வெண்காடரைவிடப் பெருமை உடையவர் அங்குள்ள அகோரசிவம். இதற்கும் மேல் பிரசித்தி உடையது கோயிலுக்குள் இருக்கும் சோம, சூர்ய, அக்னி தீர்த்தங்கள்.

வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார்
அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்றல்லவா பாடியிருக்கிறார் சம்பந்தர்.

இப்படிப்பட்ட ஒரு பாடல் பெற்ற க்ஷேத்திரத்திலிருந்துதான் இந்தச் செப்பு விக்கிரகங்கள் கிடைத்திருக்கின்றன. இவைகளில் மிகவும் முக்கியமானவை, நல்ல கலாரசனையுடன் உருவானவை என்று நான் கருதுவது கல்யாணசுந்தரர் திருக்கோலம்தான். சிவபெருமானும், பார்வதியும் அவர்களைத் தாங்கி நிற்கின்ற பீடமும் ஒரே வார்ப்பால் உருவானவை. பார்வ தியைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வந்திருக்கும் அவர் தன் சகோதரர் விஷ்ணு அடக்கமாகவே கொஞ்சம் விலகி நின்றாலும், அவருடைய தர்மபத்தினி சீதேவி, நாணிக் கோணும் பார்வதிக்குத் தகுந்த தோழிப் பெண்ணாக அமைகிறாள். மிக்க ஆதுரத்துடன் இடக்கையால் அவளை அணைக்கும் பாவனையில் அவள் நிற்கிறாள். இது என்னுடைய கற்பனையல்ல. இரண்டு பீடங்களும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைக்கும் அளவில் அமைத்திருக்கிறான் சிற்பி. அந்த அமைப்பைப் பூர்த்தி செய்து பார்த்தபோது கண்ட அழகுதான் அது. இந்த நான்கு உருவங்களும் அளவில் சிறியவைதான். மணக்கோலத்தில் நிற்கும் இறைவனும், இறைவியும் இரண்டு மூன்றடி உயரமே. அதற்கேற்ற உயரத்திலேதான் நாராயணனும், சீதேவியும்.

நாணம் என்ற உணர்ச்சி இருக்கிறதே, அதைச் சொல்லில் உருவாக்கிக் காட்டுகிறதே சிரமம் என்கிறார்கள் கலா ரசிகர்கள். உள்ளத்துக்குள்ளே கிளுகிளுக்கும் ஒரு இன்பம் வெளிப்பட விரும்புகிறது. அதைப் பிறர் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அறிவு அந்த உணர்ச்சிக்கு அணை போடுகிறது. இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் வெளிப்படுகின்ற உணர்ச்சிதான் நாணம். இந்த அற்புதமான உணர்ச்சியைத்தான் சிற்பி அந்தப் பர்வதராஜன் மகளுடைய ஒவ்வொரு அங்க அசைவிலும், தலை சாய்த்து, உடல் வளைத்து நாயகன் கையைப் பற்றி நிற்கின்ற நிலையிலும் காட்டியிருக்கிறான். ‘ஒயில் - ஒயில்’. இந்த வார்த்தைக்குப் பொருள் என்ன என்றே பலருக்கும் பல வருஷ காலங்களாக விளங்காதிருக்கிறது. அந்த ஒயில் உயிர் பெற்று வந்ததுபோல் நிற்கிறாள் இவள். வலதுகை நீண்டு வளைந்து இறைவனின் வலக்கரத்தைப் பற்றி மகிழ, இடக்கரம் லாவகமாய் மேல் நோக்கி நாணும் தலைக்குப் பக்க பலமாக இருக்க அதற்கேற்ற முறையில் காலும் உடலும் இடையும், கழுத்தும் துவண்ட நிலையிலே நிற்கிறாள் மணப்பெண். இத்தகைய அழகியைத் துணையாகப் பெற்ற இறைவனின் நடையில் ஒரு மிடுக்குக் காண்பதில் அதிசயமில்லைதான். அரையில் கட்டிய அரைக்கச்சும் தோளில் அணிந்துள்ள வாகுவலயமும், மார்பில் இயங்கும் யக்ஞோபவீதமும் அவர் அழகை அதிகப்படுத்துகின்றன. அவருடைய கம்பீரத்தைத் தலையில் அமைந்திருக்கும் நீண்டுயர்ந்த கிரீடமே காட்டுகிறது.

மலையரையன் பொற் பாவை
வான் நுதலாள் பெண் திருவை
உலகறியத் தீ வேட்டவனுடைய

அழகு முழுவதையும் அல்லவா இந்த இறைவன் திருவுருவில் வடித்தெடுத்திருக்கிறான் சிற்பி. மணக்கோலத்திலிருக்கும் இந்த நாயகன் நல்ல செல்வந்தர் என்றும் தெரிகிறது. இல்லாவிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிறந்த அணிகள் இவர்களுக்கு எங்கே கிடைக்கப்போகிறது?

பார்வதிக்குப் பக்கபலமாக நிற்கும் சீதேவி நல்ல திருமணத் தோழியாக இருக்கிறாள். அவளும் நல்ல செல்வச் சீமாட்டிதான். அவள் மார்பகத்தைக் கச்சு கட்டிக் கிடக்கிறது. அவள் இடது கையால் மைத்துனியைத் தழுவி நிற்கிறாள். வலது கையாலும் அணைக்க விரும்பும்போது அவள் உள்ளத்தில் பரிவு தோன்றுகிறது. புதுமணத் தம்பதிகளை நேராகப் பார்த்தால் அவர்கள் மேலும் நாணுவார்களே என்று எண்ணி முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக்கொள்கிறாள் இந்த சீதேவி. தங்கைக்கு ஏற்ற மணவாளர் கிடைத்துவிட்டார் என்ற பெருமித உணர்ச்சியோடு கொஞ்சம் எட்டியே நிற்கிறார் விஷ்ணு. வலது மார்பிலே தனதேவதை தங்குகிறாள் என்பதைக் காட்ட மார்பில் கொஞ்சம் தங்கத்தையே பதித்திருக்கிறான் சிற்பி. இறைவன், இறைவி, சீதேவி சிலைகளில் உள்ள பூரணப் பொலிவு இந்தச் சிலையில் இல்லை என்றாலும், சாந்தமூர்த்தியாய் நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி கொடுக்கிறார்.

இந்த நான்கு சிலைகளின் அழகைக் கண்டபின் நம் கவனத்தைக் கவர்வது, ரிஷப தேவர் திருவுருவம்தான். இந்தச் சிலைதான் உருவத்தாலும், உயரத்தினாலும், தோற்றப் பொலிவாலும், சிறந்த விக்ரகம். ரிஷபம் பின்னால் இல்லை என்றாலும் அது இல்லை என்ற உணர்ச்சியே நம் உள்ளத்தில் உண்டாவதில்லை. ரிஷபம் இருந்தால் அதன் மேல் இவர் சாய்ந்து நின்றால் எப்படி நிற்பாரோ அப்படியே நிற்கிறார். கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தோற்றம், அருமையான சடை அலங்காரம், அணிந்திருக்கும் அணிமணிகள் எல்லாம் அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. சடையைச் சுற்றிக் கட்ட படங்குறைந்த சிறிய நாகங்களை உபயோகித்திருக்கிறான் சிற்பி. இந்த ரிஷப தேவர் பக்கத்தில் அவருடைய துணைவி உமையும் மிக்க எழிலோடு நிற்கிறாள். கணவனுக்கு ஏற்ற மனைவிதான். வழக்கமாக அம்பி கையை உருவாக்கும் முறையிலேதான் உருவாக்கியிருக்கிறது. எல்லாம் மூன்று, மூன்றரை அடி உயரத்தில்.

இனிக் காணலாம் பிக்ஷாடனரை. படங்கொள் நாகத்தைச் சென்னி சேர்த்ததோடு அமையாது அரையிலும் சேர்த்துக் கட்டி, மனைகள் தோறும் தளிகை ஏந்தி விடங்கர் ஆகித் திரியும் இந்த மூர்த்தி வேலை சூழ் வெண்காடர்தான். பெரிய ஜடை, தூக்கிய கையில் துடி, ஏந்திய கையில் கபாலம், இடையில் படமெடுத்தாடும் பாம்பு முதலியவை எல்லாம் அழகுக்கு அழகு செய்கின்றன. “நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெவே வந்து எனது நெஞ்சங் கொண்டார்” என்று அப்பர் வர்ணிக்கும் வெண்காடு மேவிய விகிர்தர்தானோ இவர் என்று கேட்கத் தோன்றுகிறது, சிலையைப் பார்த்தால்.

இப்படியெல்லாம் மணக்கோல நாதராகவும், ரிஷப தேவராகவும், பிக்ஷாடனராகவும் சாந்த நிலையிலே வெண்காட்டிலே உறையும் இறைவனே பயங்கர நிலையில் காலபைரவராகவும் உருவாகியிருக்கிறார். இந்தக் காலபைரவர் ‘எண்தோள் முக்கண் எம்மானாக’ காட்சி கொடுக்கிறார். எரி பறக்கும் சடையும், கபால மாலையும் கண்மூடி நிற்கும் நிலையிலும் ஒரு பயப்பிராந்தியையே உண்டாக்குகிறது. இந்தச் சிற்பம் ரிஷப தேவர், கல்யாண சுந்தரரைப் போல் சிறந்த சிற்ப வடிவம் அல்லாவிட்டாலும், பார்த்து அனுபவிக்கத்தக்கதே.

இத்தகைய அற்புத சிற்பங்களின் முன்னால் நிற்கும்போது, இந்த சிற்பங்களை உருவாக்கிய சிற்பி கள், அவர்களை ஆதரித்த அரசர்கள், அந்த அரசர் பெருமக்கள் நிறைந்த அந்தப் பழைய தமிழகம் எல்லாம் நம் கண் முன்னால் வராமல் போகா. புதிதாகச் சிற்ப உருவங்களை அதிலும் இப்படிப்பட்ட அற்புதச் சிற்பச் செல்வங்களை இன்று வடித்தெடுப்பது என்பது இயலாத காரியம். அந்தத் தலைமுறைச் சிற்பிகளே இன்று நாட்டில் இல்லை. இந்தச் சிலை உருவங்களைப் போற்றிப் பாதுகாக்கவாவது தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அப்படிப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதுதான் தஞ்சை கலைக்கூடம். அதனால்தான் இந்த மூர்த்திகள் இன்று தற்காலிகமாக இந்தக் கலைக்கூடத்தில் மின்னும் மின்சார விளக்குகளிடையே அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அழகை எல்லாம் கண்டுகளிக்க வேண்டுமானால் நீங்கள் தஞ்சை செல்ல வேண்டும்.