உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் கலைச்செல்வம்/நல்லுறவுப் பாலம் அமைப்போம் கலை விற்பன்னர்

விக்கிமூலம் இலிருந்து

12
நல்லுறவுப் பாலம் அமைப்போம்
கலை விற்பன்னர்

விஞன் பாரதி எத்தனை எத்தனையோ கனவுகளைக் கண்டிருக்கிறான். அதில் ஒரு கனவு இமயம் முதல் குமரி வரை, பெஷாவர் முதல் மணிப்புரி வரை இந்த அகண்ட பாரத நாடு முழுவதும் ஒரே சமுதாயமாக வேண்டும். அச்சமுதாயம் ஒரே கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நாட்டு இளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

என்று அவன் பாடியிருக்கிறான் என்றால் எல்லா மக்களிடத்திலேயும் நல்லுறவு வளர வேண்டும் என்ற ஒரே அவாவினால் தூண்டப்பட்டுத்தான். இப்படி ஒரு சமுதாயம், அச்சமுதாயத்திற்கு ஒரே கலாச்சாரம் - இதை எப்படி உருவாக்குவது என்பதையும் அவன் சிந்தித்திருக்கிறான்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

என்று மார் தட்டியிருக்கிறான். உண்மையில் இப்படி வியாபாரத் துறையில், பொருளாதாரத் துறையில் ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டுவிட்டால் மக்களிடையே நல்லுறவு வளர்ந்துவிடுமா? என்று சிந்திக்கிறான். சிந்திக்கச் சிந்திக்க அவனுக்கு தோன்றியிருக்கிறது இப்படிப்பட்ட வியாபாரப் பரிவர்த்தனையால் மட்டும் நல்லுறவு வளர்ந்துவிடாது என்று.

உடனே தாம் செய்த தவறை எண்ணி விரலைக் கடித்திருக்கிறான். மறுபடியும் சிந்தித்திருக்கிறான். உண்மை விளங்கியிருக்கிறது. வியாபாரத்தாலோ, இல்லை மற்றைய பொருளாதார முறையாலோ வளராத நல்லுறவை, கலை மூலம் வளர்த்துவிடலாம் என்று கண்டிருக்கிறான். அப்போது வந்திருக்கிறது பாட்டு அவனுக்கு.

சிங்கம் மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

என்று உற்சாகமாகவே பாடியிருக்கிறான். கங்கை நதிப்புறத்து கோதுமையையும், காவிரி வெற்றிலையையும், பரிவர்த்தனை பண்ணி வளர்க்க முடியாத நல்லுறவை, சேர நாட்டுத் தந்தச் சிற்பங்களையும், மராட்டியரது கவிதைக் கனிகளையும் பரிவர்த்தனை செய்து வளர்த்துவிடலாம் என்று கண்டிருக்கிறான்.

பாரதி கண்ட கனா அகண்ட பாரதத்தோடு நின்றுவிடுகிறது. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவதோடும், சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் அமைப்பதோடும் அவன் திருப்தி அடைந்துவிடுகிறான். உண்மையில் இதுபோதுமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றல்லவா பாடினான் நமது பண்டைத் தமிழன், கடலும் மலையும் அவன் வளர்க்க விரும்பிய நல்லுறவுக்கு குறுக்கே நிற்கவில்லையே; கடல் கடந்து, மலை கடந்து, கட்டுத் தறி கடந்து எல்லாத் துறைகளிலும் பரிவர்த்தனை செய்து நல்லுறவை வளர்க்க அல்லவா முனைந்திருக்கிறான் அவன். ஏதோ யவனவர்களுடன் வியாபாரம் நடத்தியது போதும் என்றிருக்கவில்லை. சிங்களம், புட்பகம், சாவகம், தீவு பலவினும் சென்றேறி அங்கு தங்கள் புலிக் கொடியையும், மீன் கொடியையும் நிலை நாட்டியதோடு திருப்தியடைந்து விடவில்லை. கடல் கடந்து சென்ற தமிழர்கள், தமிழ் அரசர்கள் தங்கள் தங்கள் நாட்டிலிருந்து கலைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்ற சென்ற இடமெல்லாம் கலைக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஜாவாவிலும், மலேயாவிலும், போராபுதூரிலும், பாங்காங்கிலும் தமிழகத்துக் கோயில்களையும் சிற்ப உருவங்களையும் நம்மால் இன்றும் காண முடியவா போகிறது? இப்படியெல்லாம் நல்லுறவை கலைஞர்கள் மூலம் வளர்த்திருக்கிறார்கள் நமது பண் டைய மன்னர்கள்.

இதெல்லாம் பழைய கதை. இன்று எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந் நாட்டு மன்னர் ஆதலால் இனி நல்லுறவை வளர்ப்பது மன்னர்கள் கடமையல்ல; மக்கள் கடமை. உலக மக்களிடையே நல்லுறவை எப்படி வளர்ப்பது என்பதுதான் பிரச்னை, அந்தப் பிரச்னையை கலை நிபுணர்களுடைய பரிவர்த்தனை தீர்த்து வைக்குமா என்பதுஎன் கேள்வி.

“நான் சிறுவனாக இருந்தபோது இத்தாலிய சிற்பங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பொழுது அந்தப் புகழ் பெற்ற சித்திரங்கள் விசித்திரத் தோற்றங்களாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டேன். பின்னால் இத்தாலிக்கே சென்று அந்தச் சித்திரங்களைப் பார்த்த பொழுது. அவை ஒன்றும் அப்படி விசித்திரமாக இருக்க வில்லை. சித்திரத்தில் காட்டியுள்ள உருவங்கள் எல்லாம் நாம் கண்முன் தினசரி நடமாடுகின்றவைகளாகவே இருந்தன. இதே உண்மையைத்தான் நேப்பிள்ஸ் சித்திரக் கூடத்திலும், ரோம் நகரத்திலும், ரப்பேல், மைக்கேல் ஆஞ்சலோ, லியனார்டோ டாவின்சியின் சிருஷ்டிகளிலும் கண்டேன். இப்படிப்பட்ட ஒரு பொதுத் தன்மைதான் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இருக்க வேண்டும்” என்றார் ஓர் அறிஞர். இந்த அறிஞர்தான் ஆர்.டபிள்யூ எமர்சன். அவர் கூறுகிற பொதுத் தன்மை கலையுலகில் சாத்தியமாவது எங்ஙனம்? கலைஞன் தான் வாழும் தேசம், காலம், சம்பிரதாயம், மரபு இவற்றின் துணை கொண்டுதான் தன் சிருஷ்டியில் ஈடுபடுவான். உலகமோ பலவிதம். ருசியோ எண்ணற்றவை. இப்படியிருக்கக் கலையில் ஒரு பொதுத் தன்மையை பெறுவது எப்படி? ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சிருஷ்டியும் ஒவ்வொரு விதமாகவே இருந்தாலும் இவற்றையெல்லாம் ஊடுருவி நிற்கும் அடிப்படை, அந்த மனிதத் தத்துவம், மனித உணர்ச்சியாகத்தான் இருக்கும். அந்தத் தத்துவத்தை, அந்த உணர்ச்சியை ஒருமுகப் படுத்தி வளர்த்தால், உலக மக்களுடன் ஒரு ஒத்த கலையறிவு உண்டாகும். அதன் மூலம் அவர்களிடம் நல்லுறவு வளரும். இதைச் சாத்தியமாக்கத்தான் கலை நிபுணர்கள் பரிவர்த்தனை வேண்டும். நல்லெண்ணத் தூது கோஷ்டிகளின் சேவையைவிட இந்தப் பரிவர்த்தனை எவ்வளவோ சிறந்ததாகவும் இருக்கும்.

சமயத் துறையில் விவேகானந்தரும், அரசியல் துறையில் மகாத்மா காந்தி அடிகளும் உலக மக்களிடையே நல்லுறவைப் பரப்பிய பெரியோர்கள். ஆனால், கலைத் துறையிலோ ரவீந்திரநாத் தாகூர்தான் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தவர். செய்து முடித்தவர். வங்காளத்திலே பிறந்து கலைக்கூடமான சாந்திநிகேதனத்தை உருவாக்கி கவிதைக்கு நோபல் பரிசு பெற்று, தள்ளாத வயதிலும் இங்கிலாந்து - அமெரிக்காவோடு நின்று விடாமல் ஜப்பான் முதலிய உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று கவிதையின் மேன்மையை, கலையின் உயர்வைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி கலையுறவை வளர்த்திருக்கிறார். இவருடைய வங்கக் கவிதையின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துப் பார்த்து விட்டே டபிள்யூ பி. ஈட்ஸ் என்ற மேல் நாட்டுக் கவிஞன், “இவர்தான் கீழை நாட்டு கலாச்சாரத்தின் ஏக பிரதிநிதி, ராஜதூதன்” என்று பாராட்டுகிறார். தாகூரின் சாந்தி நிகேதனம், ஆண்டுரூஸ் முதலிய அறிஞர்களை மேல் நாட்டிலிருந்து இங்கு இழுத்திருக்கிறது. அபனிந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ் போன்ற கலைஞர்களை உருவாக்கி, அவர்கள். ஆக்கித் தந்த கலைச் செல்வங்களைக் கப்பலேற்றி மேல் நாட்டுக்கு அனுப்பியிருக்கிறது.

தாகூரைப் போலவே கவிக்குயில் சரோஜினி தேவியும், தோருதத்தும் தங்கள் தங்கள் கவிதை மூலமாகக் கீழ்நாட்டிலும் மேல் நாட்டிலும் கலை உறவை வளர்த்திருக்கிறார்கள்.

பல வருஷங்களுக்கு முன் இந்தியாவிற்கு கவர்னர் ஜெனரலாய் வந்திருந்த லார்ட் கர்ஸான் இந்தியக் கலைகளைப் பற்றி ஒரு நாள் கலை வளர்க்கும் ராயல் சொசைடியார் முன்பு பேசியிருக்கிறார். அப்போது அவர் இந்திய நாட்டில் காணும் சில உருவங்கள் எல்லாம் விகாரமானவை, விந்தையானவை, விபரீதமானவை (Bizarre, Grotesque and Clumsy) என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே எண்ணம்தான் ஆங்கிலேயர் பலரது மனதில் அன்று இருந்திருக்கிறது. இந்தியக் கலை வளர்ச்சிக் கழகத்தில் அக்கறை அதிகம் காட்டிய லார்ட் ரோனால்ட் ஷேயும் இதைப் பற்றியே குறிப்பிடுகிறார், “இந்தியச் சிற்பம், சித்திரம் எல்லாம் வெள்ளைக்காரருக்கு விகாரமுடையதாகவேபடுகின்றன. இந்தியக் கலையில் எவ்வளவோ ஆர்வம் காட்டும் ஒரு மேலைநாட்டானும் எலிபென்டாவில் உள்ள மூன்று முகம் கொண்ட திருமூர்த்தி சிலையின் முன் வந்ததும் மலைத்துவிடுகிறான் - இயற்கைக்குப் பொருத்தமாக சிலை அமையவில்லையே" என்று, இப்படித்தான் அங்கலாய்க்கிறார் அந்த ரோனால்ட் ஷேயும்.

ஆனால், இந்தியக் கலையின் அருமை பெருமை களை, அபூர்வத் தத்துவங்களையெல்லாம் இன்று மேல் நாட்டார் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனந்த நடராஜ மூர்த்தியின் அற்புத சிலை உருவத்தைக் கண்டு அப்படியே அதிசயித்து நிற்கிறார்கள். எத்தனை பவுன் விலையென்றாலும் அத்தனை விலையையும் கொடுத்து அந்தச் சிலையை வாங்கி தங்கள் தங்கள் கலைக் கூடங்களில் வைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்: கங்காதரனையும், பிக்ஷாடனரையும், அர்த்த நாரியையும் கண்டு என்ன அபூர்வமான கற்பனை என்று மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள் உள்ளத்திலே கோயில் ஒன்று கட்டி அங்கு இறைவனையே பிரதிஷ்டை செய்த பூசலார் நாயனார் கதையைக் கேட்டு, இது ‘மனித சிந்தனையின் சிகரம்’ என்கிறார்கள். சாஸ்திரம், சமயக்கலை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தல்லவா இந்த நாட்டில் கூத்தாடுகிறது என்று பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். லண்டனில் இந்தியக் கலைப்பொருள் கண்காட்சி நடக்கிறது. பாஸ்டனில் நடக்திறது.

இதெல்லாம் எப்படிச் சாத்தியம் ஆயிற்று ஒரு சில வருஷங்களுக்குள்ளே என்றால் அதிலேதான் இருக்கிறது ரகசியம். கலை நிபுணர்களின் பரிவர்த்தனைதான் இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. பெர்கூஸன், ஹாவல், கெராட், பெர்சிபிரௌன், கிளாட்ஸ்டன், சாலமன் முதலிய கலை நிபுணர்கள் கப்பலேறி இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். பம்பாயிலும், கல்கத்தாவிலும் உள்ள கலை வளர் கழகங்களின் தலைமைப் பதவிகளை ஏற்றிருக்கிறார்கள். இந்தியக் கலையின் அடிப்படையை விளக்கமாகக் கற்றிருக்கிறார்கள். அதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதே சமயத்தில் நாமும் சும்மா இருக்கவில்லை. நம்மில் ஒருவரான ஆனந்தக் குமாரசாமியைக் கப்பலேற்றி மேல் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரும், சரோஜினி தேவியும் கவிதைத் துறையில் உலக மக்களின் நல்லுறவை வளர்க்க எவ்வளவு தொண்டு புரிந்தார்களோ, அவ்வளவு சேவையைக் கலையுலகில் இந்த ஆனந்தக் குமாரசாமி செய்திருக்கிறார். சிவனது நடனம், ராஜபுத்திர ஓவியக் கலை, பௌத்த சிலை சாஸ்திரம், வேதங்களை உணரப் புதிய மார்க்கம், இந்தோனேஷியாவின் கலை, சரித்திரம் இவைகளைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியிருக்கிறார். பெரிதாக எழுதியிருக்கிறார். இந்திய நாட்டு அருங்கலை ரசமற்றது. விகாரமானது என்று சொல்லிய மேல் நாட்டார்களுக்கெல்லாம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார். இந்தியக் கலையின் அரிய தத்துவங்களையும், மகோன்னத உயர்வையும் எடுத்து விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே என்று பெயர் பெற்றிருக்கிறார்.

கேவலம் காமம், பணம் முதலிய லௌகீகத்தில் ஈடுபடாமல் தெய்வீகத் தன்மையோடு தத்துவ அறிவாற்றலையும் பெற்றவர்கள் இந்தியக் கலைஞர்கள் என்றும், அவர்கள் - வாழ்க்கையையே அவர்கள் வளர்த்த கலைமூலம் எக்காலத்தும். எல்லோரும் கண்டு களிக்கும்படி சிலை, சிற்பம், ஓவியம் மூலம் செய்திருக்கிறார்கள் என்றும், இந்தக் கலை எவ்வளவு புராதனமானது. எவ்வளவு புனிதமானது என்றும், உலகம் முழுவதுமே பறைசாற்றியிருக்கிறார், அப்படி இல்லாமலா இவரை பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலைக் காட்சி சாலையில் இந்திய இரானியப் பகுதிக்கு நிரந்தரத் தலைவராக நியமிப்பார்கள்? அமெரிக்கர்களும் இவருடைய கலையறிவைப் புகழ்ந்திருக்கிறார்கள். இவரைப் பார்த்த ஒரு அமெரிக்க பிரபு, “அடே இவரே உயரமாய், அழகாய், பொன் வண்ண மேனியுடையவராய்; சந்தன மரத்தில் செதுக்கிய கடவுளுடைய உருவம் போலவே இருக்கிறாரே” என்று வர்ணிக்கிறார். Tall, handsome of sovereign colour, the image of the God carved in sandal wood என்பதுதான் அவருடைய வர்ணனை. உலக மக்களிடையே கலை மூலம் நல்லுறவைப் பரப்பிய பெரியார்களில் இவர் தலைசிறந்தவர் என்று சொன்னால் அதை ஒருவரும் மறக்க முடியாது.

சரிதான், நம்மிடையே இன்று இல்லாத தாகூரையும், சரோஜினியையும், ஆண்ட்ரூஸையும், ஆனந்தக் குமாரசாமியையும் பற்றியே சொல்லித் தீர்த்துவிட்டால், நமது பரம்பரையிலே இந்தக் கலையுறவை அதன் மூலம் நல்லுறவை வளர்க்கும் கலைஞர்கள், கலை நிபுணர்கள் இல்லையா என்று அன்பர் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. உண்டு ஐயா உண்டு.

கல்கத்தா சித்திர கலாசாலையில் பெர்ஸிபிரௌனின் மாணவர்களாயிருந்து சித்திரக் கலையில் தேர்ச்சி பெற்ற பாபேஸ் ஸன்யால், அபனீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ் இவர்களால் உருவாக்கப்பட்டு ரவீந்திரநாத், அவருடைய மனைவி ஜாமுதத், திரேன் காந்தி, நவீன் காந்தி, சமார்கோஸ் முதலியவர்கள் எல்லாம் இன்று சித்திரக் கலையை வளர்க்கிறார்கள். இவர்களில் பலர் கடல் கடந்து அயல் நாடுகளுக்குச் செல்லாவிட்டாலும், இவர்களுடைய சித்திரங்கள் கலைப்பொருள்கள் கடல் கடந்து செல்கின்றன.

லண்டன், சிகாகோ, மியூனிச் முதலிய மேல் நாட்டுக் கலைக் கூடங்களை அலங்கரிக்கின்றன. இந்தியன் நேஷனல் காங்கிரசின் முதல் தலைவர் டபிள்யூ ஸி. பானர்ஜியின் அருமை மகள் ஷீலா ஆடஸ் 22 வயதிலேயே மியூனிச் சென்றிருக்கிறாள். லண்டன் சென்றிருக்கிறாள். அங்கெல்லாம் தன் கலைத் திறனைக் காட்டியிருக்கிறாள். விளம்பரக் கலை - சித்திரம் தீட்டுவதில் நல்ல பெயரும் பெற்றிருக்கிறாள்.

இப்படி நாம் மட்டும்தான் கலைஞர்களை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதில்லை. மேல்நாட்டில் இருந்து நம் நாடு தேடி வந்த கலை நிபுணி ஜேம்ஸ் கஸின்ஸையும், சித்திரக்காரர் சைமன் ஏல்லீசையும், ரால்டரையும், நிக்காலஸ் ரோரிச்சையும், ஸ்ரீ மதி ஸ்டெல்லா கிரேம்ரிச்சையும் ஆதரித்திருக்கிறோம். பாராட்டியிருக்கிறோம். அவர்கள் நம் நாட்டுக் கலை வளர்ச்சியில் காட்டுகின்ற அக்கறையை எல்லாம் மதித்திருக்கிறோம், சிற்பக் கலையைப் பொருத்தமட்டில் சென்னை சித்திரக் கலாச்சாலைத் தலைவர் தேவி ப்ரசாத்ராய் சௌத்திரியின் புகழ் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. அவரது சிலைகள் எல்லாம் இத்தாலியிலேயே வார்க்கப்படுகின்றன. இப்படி எல்லாம் பரிவர்த்தனை, சித்திரம், சிற்பம் முதலிய துறைகளில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்துடன் இன்று நடனம், பேசும் படம் முதலிய கலை வளர்ச்சியிலும் இந்தப் பரிவர்த்தனை சிறப்பாகவே நடைபெறுகிறது. கதகளியும், பரதநாட்டியமும் அன்றைக்கே வெளிநாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டன. அனிபெசண்டும், அருண்டேலும் நமக்களித்த பிரம்மஞானத்திற்கு எல்லாம் ஈடாக, ருக்மணி தேவியையும் அவர் தம் நாட்டியக் கலையையும் மேல்நாட்டாருக்கு உதவியிருக்கிறோம். உதயசங்கரையும், அவரது மனைவி அமலா நந்தியையும் இந்திய நடன உலகின் பிரதிநிதிகளாக் எல்லா நாட்டிலுமே சென்று வர விடுத்திருக்கிறோம்.

இவ்வளவுதானா? பூலோக் சுவர்க்கம் என்றும் ஹாலிவுட்டில் இருந்து வரும் கிரேட்டா கார்போ, டோரதிலாமூர், மெர்லி ஆபிரான் முதலியவர்கள் நடித்த படங்களை எல்லாம் கண்டு களித்த நாம் நமது யானைப்பாகன் மகன் ஸாபுவையும் அந்த ஹாலிவுட்டிற்கே அனுப்பியிருக்கிறோம். அவன் நடித்த யானைச் சிறுவன், முரசு என்னும் படங்களோ உலக முழுவதுமே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. சினிமாக் கலை இப்படி நக்ஷத்திர பரிவர்த்தனை மூலம் சிறப்பாக வளர்ந்து வருகிறது.

புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடு நம் நாடு. நம் நாட்டின் ராஜப் பிரதிநிதிகளாக பலரை இன்று வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். இவர்கள் எல்லோரும் கலை நிபுணர்கள் அல்ல. கலை நிபுணர்களையே தேர்ந்தெடுத்து நம் நாட்டின் ராஜப் பிரதிநிதிகளாக பிற நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து அதே விதமாக கலை நிபுணர்களையே அந்த அந்த நாட்டுப் பிரதிநிதிகளாகப் பெறுவோமானால் நாடுகளுக்குள் கலையறிவு வளரும். அதனால் நல்லுறவு பெருகும். போர் ஒடுங்கும். புகழ் ஓங்கும்.