இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/அடக்கமுள்ள அரசன்
8. அடக்கமுள்ள அரசன்
அடக்கத்தை ஆபரணமாக பூண்டவர்களே மேலானவர்கள். அவர்கள் உலகத்தில் நல்லாரால் போற்றப்படுவார்கள். முன் ஒரு காலத்தில் ‘இராபர்ட்டு’ என்பவர் ஒருவர் இருந்தார். அவர் நார்மன் வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவர் அடக்கம், பொறுமை, உண்மை, வீரம் முதலிய நற்குணங்கள் வாய்ந்தவர். அவர் நற்குணங்களை உலகத்தில் இருந்த அரசர் யாவரும் அறிந்தனர். அவர் ஏழைகளிடத்தும், பிரபுக்களிடத்தும் வித்தியாசம் பாராட்டுவதில்லை. அவர் எப்பொழுதும் எளிய உடையே உடுத்துக் கொண்டிருப்பார். அவர் அரசர் என்பது பலருக்குத் தெரியாது. அவர் பல சந்தர்ப்பங்களில் தம் நற்குணங்களைச் செய்கைகளின் வாயிலாக உலகத்திற்கு அறிவித்துள்ளார், அவரது பெருமையைக் கிரேக்க நாட்டரசன் கேள்வியுற்றான். ஜனங்கள் அவரைப்பற்றிச் சொல்வன எல்லாம் உண்மையா என்பதை அறிய அந்த மன்னன் ஆசைப்பட்டான்.
அவன், ஒரு நாள் தன் அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு இராபர்ட்டை வரவழைத்தான். எல்லாக் கனவான்களும் சென்றிருந்தார்கள். அரசன் வேண்டுகோளின் மேல், விருந்திற்கு வந்த யாவரும் ஆசனங்களில் அமர்ந்தார்கள். ஆனால், இராபர்ட்டுத் துரைக்கு ஓர் ஆசனமும் இல்லை. மேலும், இராபர்ட்டும், அவர் வீரர்களும் வந்தால், அங்குள்ளவர் எல்லாரும் அவர்களைக் கவனியாதவர் போல இருந்து விட வேண்டும் என்றும் கிரேக்க அரசன் கூறியிருந்தான்.
விருந்து ஆரம்பமாகும் நேரத்தில், இராபர்ட்டும் அவர் மெய்காப்பாளரும் அரண்மனையில் நுழைந்தனர். அங்கே ஓர் ஆசனமாவது காலி இல்லாதிருப்பதை இராபர்ட்டுக் கண்டார். தவிர, அவரை ஒருவரும் அங்கே கவனிக்கவில்லை; அவருக்கு ஓர் ஆசனம் கொடுப்பாரும் இல்லை. உடனே அவர் ஒன்றும் பேசாது, நேராக அந்த அறையின் மூலைக்குச் சென்று, தாம் அணிந்து வந்த விலையுயர்ந்த மேலங்கியைக் கழற்றி, நன்றாகச் சுற்றி, அதைக் கீழே வைத்து, அதன் மேல் உட்கார்ந்து கொண்டார். அவர் மெய்காப்பாளரும், தம் அரசர் செய்தவாறே செய்தனர்.
இவ்விதமாய் ஒருவித ஆடம்பரமுமில்லாமல் அவர்கள் அமைதியுடன இருந்து, விருந்து உண்டார்கள். உண்ணும் போது, அவர்கள் முகத்தில் கோபக் குறியாவது, அதிருப்திக் குறியாவது காணப்படவில்லை. எல்லாரும் அதிக சந்தோஷத்துடனே உண்டனர்.
விருந்து முடிந்தது. இராபர்ட்டு அரசரும், அவர் மெய்காப்பாளரும் எழுந்தனர். பின்பு, அவர்கள் அங்குக் கூடியிருந்தவர்களிடம் விடை பெற்று நடந்து சென்றார்கள். அவர்கள் கழற்றி வைத்த விலையுயர்ந்த மேலாடைகள் அவர்கள் சாப்பிட்ட இடத்திலேயே இருந்தன. அவர்கள் அவற்றை எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் வந்தது முதல் சென்றது வரையில் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த கிரேக்க அரசன். மிகவும் ஆச்சரியப்பட்டான். பின்பு அவன், தன் ஆட்களுள் ஒருவனை இராபாட்டுப் பிரபுவிடம் அனுப்பி, கீழே வைத்து விட்ட உடைகளை அணிந்து கொள்ளச் சொன்னான். இராபர்ட் பிரபு அச்சேவகனை நோக்கி, ‘நார்மன் வமிசத்தார் தாம் உட்காருவதற்கு உபயோகப்படுத்திய எப்பொருளையும் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று உன் அரசனிடம் கூறு,’ என்று கூறி விட்டுச் சென்றார்.
சேவகன் கிரேக்க அரசனிடம் வந்து, இராபர்ட்டுப் பிரபு கூறியதைச் சொன்னான். அது கேட்டு அரசன் வெட்கம் அடைந்தான்; சாந்த குணமும், அடக்கமும் வாய்ந்த புண்ணிய சீலரான இராபர்ட்டுப் பிரபுவை வரவேற்று, உபசரிக்காததற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டான்.
கேள்விகள்:
1. இராபர்ட்டு அரசரின் அருங்குணங்கள் யாவை?
2. கிரேக்க நாட்டரசன் விருந்து ஏற்படுத்தியது எப்படி?
3. இராபர்ட்டு அரசன் கிரேக்க மன்னரின் விருந்தில் எவ்வாறு நடந்து கொண்டான்?
4. இராபர்ட்டின் அடக்கமான குணத்தைக் கிரேக்க மன்னன் எப்படி அறிந்தான்?
5. இராபர்ட்டின் மெய்காப்பாளரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?