இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/குமண வள்ளல்
7. குமணவள்ளல்
முன் காலத்தில் நம் இந்தியாவில் கேட்பாருக்கு இல்லை என்னாமல், கொடுக்கும் பெரியார் பலர் இருந்தனர். அவர்கள் தங்கள் உயிரையே கேட்டாலும், தயங்காமல் கொடுக்க வல்லவர்கள். அவர்களுக்கு வள்ளல்கள் என்பது பெயர். அவ்வள்ளல்களுள் ஒருவன் ‘குமணன்’ என்பவன். அவன் நற்குணங்களுக்கு உறைவிடம் போன்றவன். கொடையில் கன்னனை யொத்தவன்; எக்காலத்தில், யார் வந்து, எதைக் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மன வலிமை படைத்தவன். பல தமிழ்ப் புலவர்கள் அவனிடம் சென்று கவி பாடிப் பொருள் பெற்றுச் செல்வார்கள். அவன் கவிவாணர்களைத் தன் உயிர் போல எண்ணி வந்தான்.
இத்தகைய நற்குணக் குன்றுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன் என்பது. அவன் கல்வியறிவு இல்லாத மூடன். அவனுக்குப் பல துஷ்ட நண்பர்கள் இருந்தார்கள். அத்துஷ்டர்கள் அவனுக்குப் பல துர்ப்போதனையைச் செய்து வந்தார்கள்; ‘ஐயா, உம் தமையனார் யாவர்க்கும் பொருளை இல்லை என்னாமல் கொடுக்கிறார். கஜானாவில் உள்ள பொருள் அனைத்தையும் அவர் செலவழித்து விடுவார். அவர் திடீரென இறக்க நேரிட்டால், நீர் அல்லவா அரசாள்வீர்? அப்போது நீர் பணத்திற்கு என்ன செய்வீர்? உம் சகோதரருக்குப் புத்தி சொல்லும்,’ என்று கூறி வந்தார்கள்.
இளங்குமணன் தருமத்தின் பெருமையை அறியாத மூடனாகையால், தன் அண்ணன் மீது பகைமை கொண்டான்; குமணனைக் கொன்று விடவும் யோசனை செய்தான். இதனை அறிந்தான் குமணன். உடனே அவன் நள்ளிருளில், தன்னை ஒருவரும் அறியாதபடி காட்டிற்கு ஓடி விட்டான்.
தனக்குப் பயந்து தன் அண்ணன் எங்கேயோ ஓடி விட்டான் என்று இளையவன் களிப்படைந்தான்; தான் அந்நாட்டிற்கு அரசனானான். குடிகள் அவனை வெறுத்தார்கள். அவர்கள் குமணனை நேசித்து வந்தார்கள். குமணனை மீளவும் அழைத்து வந்து நாட்டை ஆளச் செய்ய வேண்டும் என்று அவர்கள் முயன்றார்கள்.
இளங்குமணன் தன் தமையனது தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பரிசு கொடுப்பதாகப் பறையறைவித்தான். ‘அந்தோ ! இஃது என்ன கொடுமை!’ என்று குடிகள் மனம் வருந்தினார்கள். சிலர் மூட அரசனுக்குத் தெரியாமல் குமணனுக்கு உணவு கொடுத்து வந்தனர்.
ஒரு நாள் கவிவாணர் ஒருவர் குமணனைத் தேடிக் காட்டையடைந்து, அவனைக் கண்டார்; கண்டு, தம் வறுமையைத் தெரிவித்தார். குமணன் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லாததை நினைந்து வருந்தினன்; பின்னர்ச் சிறிது நேரம் ஆலோசனை செய்து, ‘ஐய, என் தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பொருள் கொடுப்பதாக என் தம்பி வாக்களித்துள்ளான். ஆதலால், எனது தலையை அறுத்து எடுத்துச் செல்லும். ஏராளமான பொருள் பெறுவீர். அதனைக் கொண்டு உமது வறுமையைத் தீர்த்துக்கொள்ளும்,’ என்றான்.
வள்ளல் கூறிய மொழிகளைக் கேட்ட கவிவாணர் மனம் நொந்தார். அவர் அவனை வெட்டத் துணிவரோ! ஒரு போதும் துணியாரல்லவா? அவர் ஓர் உபாயம் செய்தார்; ஒரு செவ்வாழைக் கிழங்கை எடுத்துக் குமணன் தலை போலச் செய்தார்; சிறந்த சிற்பியால் அதற்கு வர்ணமிடுவித்தார்; பின்னர் அதனை எடுத்துக் கொண்டு இளங்குமணனிடம் சென்றார்.
தன் சகோதரன் தலையைக் கண்டான் இளங்குமணன். கண்டதும், அவனது உடம்புகவிவாணர் உடனே காட்டிற்கு ஓடினார். குமண வள்ளலிடம் நடந்ததை நவின்றார். குமணன் பெருங்களிப்படைந்தான். பாவலர் குமணனை அழைத்துச் சென்றார். இளங்குமணன் தன் அண்ணன் கால்களில் வீழ்ந்தான்; தான் செய்த மூடச் செயலுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்; அரசை அண்ணனுக்கே தந்தான். அன்று முதல் அவன் துட்டர்களோடு சேருவதை ஒழித்து விட்டான். அவன் தன் சகோதரனிடம் இருந்து கொண்டு, அவனது வேலைகளைப் பார்த்து வந்தான். பாவலர் பொருள் பெற்றுச் சென்றார்.
கேள்விகள்:
1. குமண வள்ளலின் குணம் என்ன?
2. இளங்குமணனுக்கு அவனுடைய நண்பர்கள் கூறி வந்தது என்ன?
3. குமண வள்ளல் ஏன் ஒருவரும் அறியாதபடி காட்டிற்கு ஓடினார்?
4. இளங்குமணன் மன்னன் ஆனதும் செய்தது யாது ?
5. காட்டை அடைந்த கவிவாணர்க்குக் குமண வள்ளல் கூறியது என்ன?
6. காட்டை அடைந்த குமண வள்ளல் மீண்டும் எப்படி மன்னர் ஆனார்?