இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/உத்தம சகோதரன்
6. உத்தம சகோதரன்
நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன் சேர நாட்டை ஆண்டு வந்தான். அவன் செங்கோல் மன்னன். அம்மன்னன் எல்லா அரசர்களையும் வென்று, அரசர்க்கு அரசனாய் விளங்கினன். அவன் மனைவி நற்சோணை என்பவள். அவளுக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். மூத்தவன் பெயர் செங்குட்டுவன்; இளையவன் பெயர் இளங்கோ. அவ்விருவரையும் சேரலாதன் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒரு நாள், அரசன் இரு பிள்ளைகளையும் தனக்கு இரு புறங்களிலும் உட்கார வைத்துத் தான், அவர்களுக்கு மத்தியில் ஓர் ஆசனத்தில் கொலு வீற்றிருந்தான். அப்போது அங்கு ஒரு சோதிடன் வந்து, அரசனைப் பணிந்தான். அவன் இரு சிறுவர்களையும் கூர்ந்து பார்த்தான். பிறகு, அவன் அரசனை நோக்கி, ‘அண்ணலே, இவ்விருவருள் இளைய பிள்ளையே பட்டத்திற்குரிய இலட்சணங்கள் பொருந்தியவன். அவனிடம் நாட்டை ஒப்புவிப்பீர்களானால், நாடு செழித்தோங்கும். மூத்தவனிடம் ராஜ லட்சணங்கள் காணப்படவில்லை,’ என்றான்.
அம்மொழிகளைக் கேட்ட செங்குட்டுவனது முகம் வாடியது. இளங்கோவின் கண்கள் சிவந்தன. அவன் கோபத்தால் பற்களைக் கடித்தான். அவன் சோதிடனைப் பார்த்து, ‘அறிவற்ற சோதிடனே, நீ சிறிதும் யோசிக்காமல், இதைச் சொல்லி விட்டாய். உத்தம அரசர் மரபில் உதித்த நாங்கள், அவ்வாறு முறை தவறிய காரியம் செய்யோம். தசரத மைந்தனாகிய உத்தம பரதன் பட்டமேற்றானா? மூத்தவன் இருக்க, இளையவன் பட்டம் அடையலாமா? சகோதர வாஞ்சையற்ற பாவிகள் அல்லவோ அவ்வாறு செய்வார்கள்? என்னையும் என் உத்தம சகோதரரையும் பகையாக்கவோ நீ இவ்வார்த்தைகளைச் சொன்னாய்? உனது நாவை இப்போதே அறுத்தெறிவேன்!’ என்று கூறிக் கோபித்தெழுந்தான்.
சேரலாதன் அவனது கோபத்தை அடக்கினான். சோதிடன் மிகவும் பயந்து விட்டான். பின்னர், இளங்கோ சோதிடனை நோக்கி, ‘சோதிடனே, நான் சொல்வதைக் கேள்; என்னிடம் அரசர்க்குரிய உத்தம லட்சணங்கள் இல்லை; துறவிக்கு வேண்டிய லட்சணங்களே உள்ளன. யான் இல்லறத்தை விரும்பவில்லை; துறவறத்தையே பெரிதும் விரும்புகின்றேன். அதுவே யான் மேற்கொள்வது. இது சத்தியம்! சத்தியம்! முக்காலும் சத்தியம்!’ என்றான்.
தன் இளைய புதல்வன் மொழிகளைக் கேட்ட தந்தை, பதைபதைத்துக் கண்களில் நீர் சோர நின்றான். பின்பு, அவன், ‘என் அருமைச் செலவ, முன் பின் யோசியாமல் சத்தியம் செய்து விட்டனையே! நான் என் செய்வேன்!’ என்றான்.
இளங்கோ, ‘அப்பா, யான் ஆய்ந்து பார்த்தே, சத்தியம் செய்தேன். யான் என் தமையனாருடன் இருந்தால், பல துஷ்டர் என்னை அரசனாக்க விரும்புவர். அவர்களோடு சேர்ந்து என் புத்தி மாறினும் மாறும். அப்போது நான், என் சகோதரர் மனம் நோகுமாறு செய்தவனாவேன். வெள்ளம் வருவதற்குள், அணை போட்டு வைப்பது நல்லதல்லவா? பின் வரக் கூடியவற்றை ஆலோசித்தே, யான் துறவறம் மேற்கொண்டேன். என் தமையனார் இவ்வுலக ஆட்சியைப் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நீங்கள் வருந்தலாகாது,’ என்று கூறினன்.
இளங்கோவின் மொழிகளைக் கேட்ட தந்தை அவனைக் கட்டித் தழுவினன். பின்பு, அவன், ‘என் அருமைக் குழந்தாய், உன் அறிவை மெச்சினேன்! நீயே உலகில் உத்தம சகோதரன்! உன்னால் நம் மரபு மேம்பட்டது,’ என்று கூறி முத்தமிட்டான்.
இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செங்குட்டுவன், தன் தம்பியை அணைத்துக் கொண்டான். அவனது மனம் அன்பால் குழைந்தது. அதனால், அவன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். ‘என் அருமைத் தம்பீ, என் பொருட்டுத் துறவறம் மேற்கொண்ட செல்வமே, நீயே உத்தம சகோதரன்! நீ என்னை விட்டுச் சென்று விடுவாயானால், யான் உயிர் தரியேன்! உத்தம குண பரதனை ஒத்த நீ, என்னை விட்டுப் பிரியாமல் இருந்து, நாட்டை ஆள வேண்டும். உன்னைத் தம்பியாகப் பெற்ற எனக்குக் குறைவு உண்டோ!' என்று கூறிச் சந்தோஷப்பட்டான்.
இளங்கோ, அன்று முதல் 'இளங்கோ அடிகள்' எனப்பட்டார். அவரைச் ‘சேர முனிவர்’ என்றும் சொல்லுவார்கள். அவர் தம் சகோதரன் கேட்டுக் கொண்டபடி, அவனை விட்டுப் பிரியாமல் இருந்தார்.
கேள்விகள்:
1. நெடுஞ்சேரலாதன் யாவன்? அவன் எவ்வாறு கொலு வீற்றிருந்தான்?
2. கொலுவில் இருந்த நெடுஞ்சேரலாதனுக்குச் சோதிடன் கூறியது என்ன?
3. சோதிடனுக்கு இளங்கோ கூறிய மொழி யாது? செய்த சத்தியம் யாது?
4. இளங்கோ செய்த சத்தியத்தைக் கேட்ட மன்னன் என்ன கூறினான்?
5. துறவறம் கொண்டதற்கு இளங்கோ கூறிய காரணம் என்ன?
6. இளங்கோ அடிகளைச் சேரன் செங்குட்டுவன் எப்படிப் பாராட்டினான்?
7. இளங்கோ அடிகள் யார் ? அவர்க்கு அப்பெயர் எப்படி வந்தது?
8. உத்தம சகோதரன் என்ற பெயரை இளங்கோ எப்போது பெற்றார்?