உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/திருமலை நாயகர்

விக்கிமூலம் இலிருந்து

10. திருமலை நாயகர்

தென்னாடு, தமிழ் நாடு எனவும் பெயர் பெறும். அதனைப் பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு என்று மூன்று பிரிவுகளாகச் செய்து, பாண்டியர்களும், சோழர்களும், சேரர்களும் ஆண்டு வந்தார்கள். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் பின்பு, அவர்கள் நாட்டை நாயகர் என்ற ஒரு வமிசத்தார் ஆண்டனர். இவர்கள் விஜயநகர வமிசத்து அரசர்கள். மதுரையில் ஆண்ட நாயகர்களுள் மிகவும் பிரபலமானவர் திருமலை நாயகர் என்பவர். இவர் வைணவர்.

திருமலை நாயகர் எம்மதத்தினரையும் பகைக்கவில்லை. இவர் காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிகள் இந்தியாவில் தங்கள் மதத்தைப் போதித்துப் பரவச் செய்தார்கள். கட்டடங்களைக் கட்டினார்கள். இவர் காலத்தில் குடிகள் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் பயமின்றி வாழ்ந்து வந்தார்கள்.

திருமலை நாயகர் முத்துக்கிருஷ்ண நாயகரின் புதல்வர். ‘முத்து வீரப்ப நாயகர்’ என்பவர் திருமலை நாயகருக்குத் தமையனார். அவர் அரசாண்ட பின்னரே, இவர் அரசாண்டார். இவர் திருச்சிராப்பள்ளியைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்; சில காலம் கழிந்த பின்னர், மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டிக் கொண்டு, அதில் வசித்து வந்தார்; அப்போது மதுரை தலைநகரம் ஆயிற்று. இவர் மதுரையில் வசித்து வந்த அரண்மனைக்குத்தான் திருமலை நாயகர் மஹால் என்பது பெயர். இது மிக்க அழகிய வேலைப்பாடு அமைந்த கட்டடம். இதில் இப்பொழுது பல கச்சேரிகள் இருக்கின்றன.

இவர் திரண்ட பொருளைச் செலவிட்டு அழகிய பல கட்டடங்களைக் கட்டினர்; மதுரையில் பெரிய தெப்பக்குளம் ஒன்றை வெட்டுவித்துப் படித் துறைகளை அழகாக அமைத்துள்ளார்; அக்குளத்தைச் சுற்றிலும் கைப்பிடிச் சுவர்களை எழுப்பியுள்ளார். இத்திருமலை நாயகர் கோடை காலத்தில் வசிப்பதற்காக வைகையாற்றின் வடகரையில் ஒரு சிங்கார மாளிகை நிருமித்துள்ளார்; ஸ்ரீரங்கம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முதலான இடங்களில் அழகான பல கட்டடங்களை அமைத்தார். இவர் கட்டுவித்த கட்டடங்களில், இவர் உருவச் சிலைகள் காணப்படுகின்றன ; மதுரைச் சொக்கேசர் ஆலயத்திற்கு ஏராளமான பொருள் தந்துள்ளார். அக்கோவிலில், திருமலை நாயகரின் உருவச் சிலையும், இவர் பட்டமகிஷியின் உருவச் சிலையும் இருக்கின்றன.

இவர் குடிகளது நன்மையிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தார்; குடிகளுக்குத் தம்மாலும், தம் பரிசனத்தாலும், வேற்றரசராலும், கள்வராலும், விலங்குகளாலும் உண்டாகக் கூடிய துன்பங்களைப் போக்கினார். இவர் அடக்கம், பொறுமை, உண்மை முதலிய சகல நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரது நாட்டில், ஒவ்வொரு மூலை முடுக்கும் இவருக்குத் தெரியும். இவர் இரவில் மாறு வேடம் பூண்டு, நகரி சோதனை செய்து வந்தார். குடிகளுக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டால், எந்த நேரத்திலும் தம்மிடம் வந்து தெரிவிக்கலாம் என்று பறையறைவித்தார்; பிரயாணிகளுக்கும், மிருகங்களுக்கும் நிழல் தரும் மரங்களைப் பாதைகளில் வைத்து வளர்ப்பித்தார்; பாதைகளில் அங்கங்கே அன்ன சத்திரங்களை உண்டாக்கினார். இவரது நாட்டுக் குடிகள் தங்கள் வீடுகளை மூடுவதே இல்லை. திருடர் பயம் இருந்தால் அல்லவோ வீடுகளை மூட வேண்டும்?

இவரது சமஸ்தானத்தில் இரு பெருங்கவிஞர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் வைணவ மதத்தினர். அவர் பெயர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பது. மற்றொருவர், சைவ சமயத்தினர். அவர் பெயர் குமரகுருபரர் என்பது.

நாயகர் பல கவிவாணர்களை ஆதரித்து வந்தார்; ஏழைகளையும், பணக்காரர்களையும் சமமாகப் பாவித்து வந்தார்; நியாய பரிபாலனம் செய்யப் பல பஞ்சாயத்துக்காரரை நியமித்தார். இவர், தமது எழுபத்தைந்தாவது வயதில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

கேள்விகள்:

1. திருமலை நாயகர் எப்படிப்பட்ட குணமுடையவர்?

2. திருமலை நாயகர் குடிமக்களை எவ்வாறு ஆண்டார்?

3. திருமலை நாயகர் கட்டடப் பிரியர் என்பதை எவ்வாறு அறியலாம்?

4. திருமலை நாயகர் மஹாலைப் பற்றிச் சிறிது கூறு.

5. திருமலை நாயகரது உருவச் சிலைகளை எங்கெங்குக் காணலாம்?

6. திருமலை நாயகரது சம்ஸ்தானத்தில் இருந்த இரு-பெரும் கவிஞர் யாவர்?