இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/‘சொல்லாமற் செய்வர் பெரியர்’
11. ‘சொல்லாமற் செய்வர் பெரியர்.’
இங்கிலாந்து தேசம் மிகவும் அழகானது. அதில் லண்டன் மாநகரம் மிகவும் அழகு வாய்ந்தது. அது வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நகரம். பல பக்கங்களிலிருந்து வர்த்தகர்கள் அந்நகரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அந்நகரத்திலிருந்தும் பல பிரயாணிகள் வேற்றூருக்குப் போவது வழக்கம். இவ்வாறு செல்வதற்கும், வருவதற்கும் தபால் வண்டிகள் அந்நகரத்தில் ஏற்பட்டிருந்தன.
ஒரு நாள், லண்டன் நகரத்தை விட்டு ஒரு வண்டி புறப்பட்டது. அவ்வண்டியில் பிரயாணிகள் உட்கார்ந்திருந்தார்கள். பிரயாணிகளுள், சிலர் ஏராளமான பணம் வைத்திருந்தனர். அவர்கள் செல்லும் வழியோ, கள்ளாகள் கொள்ளையடிக்கத் தக்க வசதிகள் அமைந்தது.
வண்டி போய்க் கொண்டிருக்கையில், பலர் பல வித விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவன், “நாம் போகும் வழி திருடர் இருக்கும் வழியாயிற்றே! யாராயினும் ஒரு திருடன் வந்து நம்மைத் துன்புறுத்தினால், என்ன செய்வது?” என்றான். அப்போது ஓர் இளம் பெண், ‘என் வசததில் உள்ள நோட்டுகளை என் செருப்பில் வைத்துத் தைத்திருக்கிறேன். அவற்றை எடுத்துச் செல்லக் கள்வனால் ஆகாது,’ என்றாள். இவ்வாறு அவர்கள் பல விதமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள்.
பொழுது சாய்ந்தது. காரிருள் தன் ஆட்சியைச் செலுத்தத் தொடங்கியது. தபால் வண்டி ஒரு காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தது. திடீரென்று கள்வர் சிலர், அங்குத் தோன்றி, அந்த வண்டியை நிறுத்தினர். அவர்கள் பிரயாணிகளைப் பார்த்து, “உங்களிடத்தில் உள்ள பொருள்களைத் தந்து விடுங்கள். இன்றேல், உங்கள் அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவோம்!” என்று பயமுறுத்தினார்கள்.
திருடர்கள் பலரைச் சோதனை செய்தார்கள். அவர்கள் விரும்பிய பொருள் இல்லை. ஏனென்றால், பிரயாணிகளுள் பலர் ஏழைகள். அதனால், அக்கள்வர்களின் தலைவன் ஒரு தந்திரம் செய்தான். அவன் அந்த வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் எவ்விதத்திலும் நூறு வராகன் கொடுக்க வேண்டும். அல்லாவிடில், உங்கள் எல்லாரையும் சுட்டுக் கொன்று விடுவோம்!" என்றான்.
வண்டியின் உட்புறத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் மிக்க கலக்கத்துடனிருந்தார்; கள்வன் சொன்னதைக் கேட்டார். அவர், செருப்பில் நோட்டை வைத்திருந்த பெண்ணைக் கள்வனுக்குக் காட்டி, “இவள் செருப்பைப் பரிசோதித்தால், உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும்,” என்றார். உடனே கள்வர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு அவள் செருப்பைப் பரிசோதித்தார்கள்; அதனுள்ளே இருந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முந்நூறு வராகன் மதிப்புள்ள நோட்டுகளைக் கவர்ந்து சென்றார்கள்.
பணம் இழந்த பெண், தனது மாளிகையில் அதிக துக்கத்துடன் வீற்றிருந்தாள். அப்போது தபாற்காரன், அவளுக்கு யாரோ பணம் அனுப்பி இருப்பதாகச் சொன்னான். அவள் அதிசயங் கொண்டாள்; தனக்குப் பணம் அனுப்பக் கூடியவர் யாரும் இல்லையே என்றெண்ணினாள். அறுநூறு வராகன் அவளுக்கு வந்திருந்தது. அதனுடன் ஒரு கடிதமும் வந்தது. அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: “அம்மா, நான் நீ வந்த வண்டியில் உட்கார்ந்திருந்த கிழவன். உன்னைக் கள்வரிடம் காட்டிக் கொடுத்தவன் நானே. நான் அயல்நாடு சென்று, பதினாயிரம் வராகன் சம்பாதித்துக் கொண்டு, நீ வந்த வண்டியில் வந்தேன். கள்வர்கள் என்னைப் பரிசோதித்திருந்தால், என் பொருள் முழுவதையும் எடுத்துப் போயிருப்பார்கள். உன்னிடம் இருந்தது முந்நூறு வராகன். அவ்வளவோடு அக்கள்வர் தொலைந்தால் போதும் என்று நான் எண்ணினேன். அதனாலேதான், உன்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்தேன். நீ இழந்த தொகையை விட, முந்நூறு வராகன் அதிகமாக அனுப்பியிருக்கிறேன். இதைப் பெற்று இன்புறுவாயாக. என்னை மன்னிக்க.”
அக்கடிதத்தை வாசித்தாள் அம்மங்கை. அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அவள் கடவுளின் அருளை நினைத்துப் புகழ்ந்தாள். அவள் அப்பெரியவரது அரிய குணத்தை எண்ணி மகிழ்ந்தாள்.
கேள்விகள்:
1. தபால் வண்டியில் சென்று கொண்டிருந்த பிரயாணிகள் பேசிக் கொண்டதென்ன?
2. தபால் வண்டியை நிறுத்திய கள்வர்கள் கூறிய கண்டிப்பான வார்த்தை என்ன?
3. தபால் வண்டியில் சென்று கொண்டிருந்த பெரியவர் கள்வரிடமிருந்து எவ்வாறு தப்பினார்?
4. பணத்தை இழந்த பெண்மணிக்குப் பெரியவர் என்ன கடிதம் எழுதினார்?
5. பெரியவர் சொல்லாமல் செய்த காரியம் என்ன?