உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/கடமையே சிறந்தது

விக்கிமூலம் இலிருந்து

12. கடமையே சிறந்தது.

ஏழாம் ஹென்றி’ என்னும் அரசர் ஒரு நாள் வேட்டையாடச் சென்றார். சென்றவர், நெடுநேரம் வேட்டையாடினார். அவர் மிகுந்த களைப்புற்று, ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாறினார். அவருக்குத் தாகம் அதிகரித்தது. அருகில் ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு நின்றான். அரசர் அவனை அணுகி, “சிறுவனே, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும். இங்கு சமீபத்தில் ஏதேனும் ஊர் இருக்கிறதா?” என்று கேட்டார்.

பையன்: ஐயா, பக்கத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்குச் சென்றால் நீர் கிடைக்கும்.

அரசர்: பையா, நீ போய் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொண்டு வா. நான் இங்கிருக்கிறேன்.

பையன்: ஐயா, என் எசமானர் விலை உயர்ந்த இவ்வாடுகளை என் வசம் விட்டிருக்கிறார்; என்னை முற்றிலும் நம்பியுள்ளார். நான் இவற்றை விட்டுச் செல்வேனாயின், சில ஆடுகள் ஓநாய்களுக்கு இரையாகுமே!

அரசர்: அப்பா, நீ வரும் வரையில் ஆடுகளை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். உன் ஆடு ஒன்றேனும் களவு போகாதபடி நான் காவல் காப்பேன். நீ அச்சம் இல்லாமல் செல்லலாம்.

பையன்: ஐயா, என் கடமையைச் செய்யாமல் யான் செல்லலாகாது. அப்படிச் சென்றால், என்னை நம்பிய எசமானர்க்கு நம்பிக்கை மோசம் செய்தவனாவேன். நீங்கள் சென்று வாருங்கள். ஆடுகள் காணாமற் போனால், என்ன செய்வது? நான் உங்களைக் கேட்க முடியுமா? என் கடமையாயுள்ள வேலையை நான செய்து முடிக்க வேண்டாவா? தயவு செய்து என்னைத் துன்பப்படுத்த வேண்டா.

அரசர் அவன் கூறியவற்றைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். சிறுவன் அவ்வளவு புத்தியுடையவனாய் இருப்பான் என்று அவர் எண்ணவேயில்லை. அவர் பின்னும் அவனைச் சோதிக்க எண்ணி, “அப்பா, நான் இவ்வூர் அரசன். எனக்குத் தாகமோ அதிகமாய் இருக்கிறது. நீ சென்று, தண்ணீர் கொண்டு வர மாட்டேன் என்கிறாயே!” என்றார்.

அது கேட்ட சிறுவன், “ஐயா, நீங்கள் அரசராயின், மிகவும் சந்தோஷம்! உங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். யாராயிருந்தாலும் ஆபத்தில் உதவ வேண்டுவதுதான் கடமை. குதிரை மேல் வீற்றிருக்கும் நீங்கள் இந்நேரம் போய் வந்திருக்கலாம். உங்கள் நீர் வேட்கையும் சாந்தியாயிருக்கும். உங்களை யான் அவமதிப்பதாக நீங்கள் எண்ணலாகாது. யான் என்ன செய்வேன்! என் கடமையே எனக்குச் சிறந்தது. என் ஆடுகளை விட்டு யான் செல்லேன். நீங்கள் நீர் வேட்கையால் வருந்துகிறீர்கள். உங்களுக்காக யான் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு இருக்கும் போது, இன்னொருவர் யாரேனும் வந்து, தமக்கு நீர் வேட்கை அதிகமாயிருக்கிறதென்றும், நீங்கள் நீர் கொண்டு வரும் வரையில், அவர் இங்கு இருப்பதாகவும் சொன்னால், நீங்கள் என்னைப் போல, நீரைத் தேடிப் போக வேண்டும். அத்தருணத்தில் இரண்டோர் ஆடுகள் நிச்சயமாகக் களவு போய் விடும். நான், என்னை நம்பிய எசமானருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன். இவற்றை எல்லாம் அறிவிற் சிறந்த நீங்கள் யோசிக்க வேண்டும். என்னைத் தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்,” என்று கூறி வேண்டினன்.

அரசர் அவனை நோக்கி, “பையா, யான், யார் வந்து என்ன கேட்டாலும், இதை விட்டு நகர மாட்டேன். நீ கவலைப்பட வேண்டா; சென்று வருக.” என்றார்.

பையன் நகைத்து, “ஐயா, உங்களுக்கிருக்கும் தாகத்தைப் போலவே, பிறருக்கும் இருக்கும். உங்களுக்கு நீர் வேட்கை அதிகமாகவும், மற்றொருவர்க்குக் குறைவாகவும் இருப்பதுண்டோ? நன்று, நன்று! நீங்கள் பிறருக்கு உதவி செய்யாவிடில், பிறர் உங்களுக்கு எவ்வாறு உதவி புரிவர்?” என்றான்.

பார்த்தார் அரசர்; சிறுவன் மிகவும் கெட்டிக்காரன் என்பதை உணர்ந்தார். உடனே தமது குதிரையை விட்டு இறங்கி, அவனைத் தழுவிக் கொண்டார். “அப்பா, நீ புத்திசாலி. உன்னைப் போன்ற யோக்கியனை யான் கண்டதில்லை. கடமையான வேலையைச் செய்பவர் எவருக்கும் அஞ்சார். அது போல, நீயும் உன் கடமையைச் செய்து முடிப்பதால், அரசனாகிய என்னையும் மதிக்கவில்லை. உனக்கு யான். உயர்ந்த வேலை தருகிறேன்," என்று கூறி, பையனை அழைத்துச் சென்று, தம் அரண்மனையிலேயே வைத்துக் கொண்டார்.

கேள்விகள்:

1. ஏழாம் ஹென்றி அரசர் எப்போது ஆடு மேய்க்கும் சிறுவனைச் சந்தித்தார்?

2. “நான் இங்கு இருக்கிறேன்; நீ போய் நீரைக் கொண்டு வா” என்று கூறிய அரசர்க்குச் சிறுவன் கூறிய பதிலென்ன?

3. அவனை மேலும் சோதிக்கத் தன்னை அரசன் என்று கூறிய போது, சிறுவன் சொன்ன பதில் யாது?

4. தன்னை மதியாமல், தன் கடமையைச் செய்த சிறுவனை அரசர் என்ன செய்தார்?