உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/அன்னதானமே அனைத்தினும் சிறந்தது

விக்கிமூலம் இலிருந்து

13. அன்னதானமே அனைத்தினும் சிறந்தது.

ஒரு கிராமத்தின் மூன்று பக்கங்களில் காடுகள் அதிகம் இருந்தன. அந்தக் கிராமவாசிகள் பரம துஷ்டர்களாய் இருந்தார்கள். அந்நியர் யாரேனும் வந்து அன்னம் கேட்டால், அவ்வூரார் அடித்துத் துரத்துவர். அவர்கள் கொடுமையான காரியங்களையே செய்து வந்தார்கள். அதே ஊரில், ஒரு கிழவனும், அவன் மனைவியும் இருந்தனர். அவர்கள் யார் வந்தாலும், அன்னம் இடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள். கணவனும், மனைவியும் ஒத்த அன்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஓர் இரவு கடவுள் அவ்வூரார்களைப் பரிசோதிக்க எண்ணி, ஒரு தூதனோடு மனித உருவுடன் அந்தக் கிராமத்திற்கு வந்தார். அவர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி அன்னம் படைக்கும்படி வேண்டினார். பலர் அவர்களை வைது அனுப்பினர். பலர் அடித்துத் துரத்தினர். முடிவில் அவர்கள் கிழவனும், கிழவியும் இருந்த குடிசையை அடைந்தார்கள். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. கிழவனும், அவன் மனைவியும் தமது வீட்டிற்கு வந்தவர்க்கு அமுது படைத்தனர். அன்னம் மேலும், மேலும் அதிகப்பட்டுக் கொண்டே இருந்தது. அதைக் கண்டு கிழவனும், கிழவியும் ஆச்சரியம் அடைந்தார்கள். பின்பு, அவர்கள் அவ்விருந்தினர் வானுலகத்தவரோ என்று சந்தேகித்தார்கள்.

முடிவில் கடவுள் தமது சுயரூபத்தை அவர்களுக்குக் காட்டி, ‘அன்பர்களே, இவ்வூர்க் குடிகள் மகா பாவிகள். அவர்கள் எங்களை அடித்துத் துரத்தினார்கள். ஒரு பிடி அன்னம் அளிக்க அவர்கள் மனம் துணியவில்லை. மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் எங்களை உபசரித்து அமுது படைத்த நீங்களே உத்தமர்கள். உங்களுக்கு ஒரு குறைவும் வாராது. நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்,’ என்றார்.

கணவனும், மனைவியும் கடவுளையும் அவர் தூதனையும் பணிந்து, ‘நீங்கள் இந்த ஏழைகளைப் பொருட்படுத்தி வந்ததற்கு நாங்கள் செய்த பாக்கியமே காரணம். நாங்கள் விருந்தினர்க்கு எப்போதும் அமுது படைக்கும்படி அருள வேண்டும். இருவரும் ஒன்றாகவே இறக்குமபடி வரம் தர வேண்டும்,’ எனறு வேண்டினர்.

கடவுள், ‘அன்பர்களே, உங்கள் எண்ணம் பரிசுத்தமானதாய் இருக்கிறது. உலகத்தில் மக்கள் தங்கட்குப் பொருள் வேண்டும் என்றும், தாங்கள் சுகமாக வாழ வேண்டும் என்றும் வரம் கேட்பார்கள். நீங்களோ, மிக எளிய வரத்தைக் கேட்டீர்கள். நீங்கள் கேட்டதை அருளினோம். நீங்கள் நீடூழி வாழ்ந்து, முடிவில் எம்மை அடையுங்கள்,' என்று கூறி ஆசீர்வதித்து, தம் தூதனுடன் மறைந்தார்.

கிழவர் குடிசை பொற்குடிசை ஆனது. அக்குடிசையில் எல்லாப் பொருள்களும் குறைவற நிறைந்து கிடந்தன. முப்பத்திரண்டு தானங்களிலும் அன்ன தானமே சிறந்தது என்பதை அப்போதே சதிபதிகள் உணர்ந்தார்கள். நெடுங்காலம் இருவரும் குறையின்றி வாழ்ந்து வந்தனர். முடிவில், ஒரு நாள் மாலை அவ்விருவரும் வெளியே உலவச் சென்று ஓரிடத்தில் உட்கார்ந்தனர். உடனே அவர்கள் ஆவி இறைவரின் இனிய அடிகளைச் சேர்ந்தது. அவர்கள் உட்கார்ந்து உயிர் விட்ட இடத்தில், இரண்டு அழகிய பூஞ்செடிகள் உண்டாயின. அவர்கள் இருந்த வீடு, இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. என்னே கடவுள் செயல்!

கேள்விகள்:

1. கடவுள் மனித வடிவுடன் ஏன் வந்தார்?

2. கிழவனும், கிழவியும் மனித வடிவுடன் வந்த கடவுளை எப்படி உபசரித்தார்கள்?

3. கிழவனும், கிழவியும் வாழ்ந்த அக்கிராமத்தார் எப்படிப் பட்டவர்கள்?

4. தம்மை உபசரித்த கிழவனையும், கிழவியையும் கடவுள் எவ்வாறு பாராட்டினார்?

5. அன்னதானம் செய்த கிழவனும், மனைவியும் பெற்ற நன்மை என்ன?