உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/மங்கையர்க்கரசியார்

விக்கிமூலம் இலிருந்து

14. மங்கையர்க்கரசியார்

பெண்கள் ஆண்களைப் போலவே, நல்ல நூல்களைக் கற்க வேண்டும்; நல்லொழுக்கமும், தெய்வ பத்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். கணவர் சொல்லை மீறாது நடக்கும் உத்தமியாய் ஒவ்வொரு மனைவியும் இருத்தல் அவசியம். கணவனே தெய்வம் என்று நினைத்துப் பூசிக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மணிமுடிச் சோழர் என்னும் ஓர் அரசர் இருந்தார். அவர் மிகுந்த நல்ல ஒழுக்கங்களை உடையவர். அவருக்குக் கடவுள் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘மங்கையர்க்கரசி’ என்று பெயரிட்டனர். அவ்வம்மையார் வயது ஆக ஆக, நல்லொழுக்கத்துடன் விளங்கினர். அவர் சிவபெருமானிடத்தில் நீங்காத அன்புடையவர்; தயை, சாந்தம், பணிவு முதலிய நற்குணங்கள் ஒருங்கே அமையப் பெற்றவர்.

அவர் மணத்திற்குரிய பருவம் அடைந்தார். அரசர் அவருக்குத் தகுந்த மணாளனைத் தேட முயன்றார். அவ்வாறு இருக்கையில், மதுரையை ஆண்டு வந்த கூன் பாண்டியர் என்பவர், சோழ நாட்டின் மீது படை எடுத்து வந்து, சோழரைத் தோற்கடித்தார். பின்பு, அவர் சோழரின் அருஞ்செல்வியாராகிய மங்கையர்க்கரசியாரை மணம் புரிந்து கொண்டார். சோழர் குலப் பெண்மணி சைவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் கணவரோ, சமண மதத்தைச் சேர்ந்தவர். எனினும், தாம் எவ்விதத்திலும் கணவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் அரசியார். சோழ அரசர், தம் மகளாருடன் குலச்சிறையார் என்னும் தம் அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பினர்.

மங்கையர்க்கரசியார், ‘குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்,’ என்றபடி, பாண்டிய மன்னர் மனம் போல நடந்து வந்தார்; அவரே தமக்குக் கடவுள் என்றும் எண்ணினார். என்றாலும், அரசர், சமண மதத்தில் சேர்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர் ஓர் அந்தணர் மூலமாகச் சீர்காழிப் பதியில் இருந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு வந்து சைவத்தை நிலைநாட்டுமாறு வேண்டினர்.

அவ்வாறே, திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களோடு மதுரைக்கு வந்து, சோமசுந்தரக் கடவுள் ஆலயத்தைத் தரிசித்து, அருகிலே இருந்த மடம் ஒன்றில் தங்கினர். அவர் வந்து தங்கியதைக் கண்ட சமணர் பயந்தனர்; அவர் தமது மதத்தைப் பொய்ப்பித்து விடுவரோ என்று ஏங்கினர்; அரசரைச் சைவராக்கி விடுவரோ என்றும் சந்தேகித்தனர். பின்பு அச்சமணர் அரசரிடம் சென்று, 'அரசே, சைவத்தைத் தழுவுபவன் ஒருவன் இங்கு வந்துளன்; அவன் ஒரு மடத்தில் தங்கியிருக்கிறான். நமது மதத்தைக் கெடுக்க வந்தான் போலும்! அவன் தங்கியுள்ள மடத்தில் நெருப்பை வைத்து விடுவோம்,’ என்றனர். அரசரும் அதற்கு உடன்பட்டனர். உடனே அச்சமணர் அவ்வாறே செய்தனர்.

திருஞானசம்பந்தர், தம் மடத்தில் தீப்பற்றியதைக் கண்டார்; சிவபெருமானைக் குறித்து ஒரு பதிகம் பாடினார். உடனே அந்நெருப்பு அம்மடத்தை விட்டு விலகி, அரசரை வெப்பு நோயாகப் பற்றியது. நோயின் துன்பம் பொறுக்க மாட்டாமல் அரசர் அலறினார். மங்கையர்க்கரசியாரும் பெரிதும் வருந்தினர். அரசர்க்குண்டான வெப்பு நோயைத் தீர்க்கப் பல வைத்திய நிபுணர் சென்றனர். ஒருவராலும் சுகமாக்க முடியவில்லை. பிறகு சமணர் தம் மந்திரங்களைச் செபித்தனர். அதனாலும், பயன் பட வில்லை. சமணர் நிலை கலங்கினர். அரசர் பட்ட துன்பம் சொல்லுதற்கு இயலாதது.

மங்கையர்க்கரசியார், ‘சம்பந்தரைத் துன்புறுத்தியதாலேதான் இவர்க்கு இந்நோய் வந்தது!’ என்று எண்ணி, தம் கணவரை நோக்கி, ‘நாதரே, இந்நோய் திருஞானசம்பந்தரால் நீக்கப்படும். அவரை வரவழையுங்கள்,’ என்று பணிவுடன் கூறினர். அரசரும் அதற்கு உடன் பட்டார்.

திருஞானசம்பந்தர் அரசரை அடைநதார். சமணர்களும் அங்கு இருந்தார்கள். உடனே அரசர், திருஞான சம்பந்தரைத் தமக்கு உற்ற நோயைத் தீர்க்குமாறு வேண்டினர். அப்போது சமணர், அரசரது இடப்புறத்தில் உள்ள நோயை மாத்திரம் தமது மந்திர வலியால் நீக்க உடன் பட்டனர். அது பயன் படவில்லை. ஆனால், சம்பந்தர் திருநீற்றை எடுத்து ஒரு பதிகம் பாடிச் சிவபிரானை நினைந்து, அரசரது வலப்புறத்திலே தடவினர். உடனே, அங்கிருந்த நோய் அகன்றது. இடப்புறத்தில் அதிக நோய் உண்டாய் விட்டது.அங்குள்ள நோயைச் சமணர்களால் நீக்க முடியவில்லை. பின்னர்ச் சம்பந்தரே, இடப்புற நோயையும் நீக்கினார்.

அரசர் சம்பந்தரின் மகிமையை அப்போதுதான் அறிந்தார். சமணர் சம்பந்தர் மீது பொறாமை கொண்டு, அவரை வாதுக்கழைத்தனர். அவரும் அதற்கு உடன்பட்டனர். இரு திறத்தாரும், அவரவர் கொள்கைகளை ஏடுகளில் எழுதி நெருப்பிலிட்டனர். சமணரது ஓலை எரிந்து விட்டது. சம்பந்தரது ஓலை எரியவில்லை மீண்டும் அவர்கள் தத்தம் சித்தாந்தங்களை ஓலையில் வரைந்து, வைகையாற்றின் வெள்ளத்தில்இட்டார்கள். சம்பந்தர் எழுதிய ஓலை நீரோட்டத்தை எதிர்த்து நின்றது. சமணர் தீட்டிய ஓலை ஆற்றோடு போய் விட்டது. இவ்வாறு மூன்று வாதங்களிலும் சமணர் தோற்றனர். உடனே அரசர் சைவத்தைத் தழுவினார்.

ஏற்கெனவே, சைவப் பெண்மணியாயிருந்த அரசியாருக்கு, அரசரும் தம் மதத்கைத் தழுவியது பேரானந்தத்தை விளைத்தது.

கேள்விகள்:

1. மங்கையர்க்கரசியார் பாடத்தில் பொதுவாகப் பெண்கள் எப்படி வாழ வேண்டும்?

2. மங்கையர்க்கரசியார் எத்தகைய சிறந்த குணமுடையவர்?

3. மங்கையர்க்கரசியார் திருமணம் எவ்வாறு நடந்தது?

4. கூன்பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவியது எவ்விதம்?

5. ஞானசம்பந்தர் சமணர்களை எவ்வாறு வென்றார்?

6. ஞானசம்பந்தரைப் பற்றிச் சமணர்கள் அரசரிடம் கூறியதென்ன?

7. ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்த வரலாற்றை எழுது.

8. கூன்பாண்டியனது வெப்பு நோய் எவ்வாறு நீங்கியது?