உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/நாய் காட்டிய வீரச் செயல்

விக்கிமூலம் இலிருந்து

3. நாய் காட்டிய வீரச் செயல்

ஒரு சண்டைக் கப்பல், பல பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு, ஒரு துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. அதில், பணக்காரர் ஒருவரும், ஒரு வியாபாரியின் மனைவியும், அவள் குழந்தையும், அக்குழந்தையின் செவிலித் தாயும் ஏறினர். வர்த்தகன் மனைவி, தன் தாய் வீட்டிற்குப் போகப் பிரயாணமானாள். அவள் தன் குழந்தை மேல் அதிக அன்புடையவள். அவளுக்கு இருந்தது ஒரே குழந்தை. அதனால், அவள் அதைத் தன் உயிரினும் மேலாகக் காப்பாற்றி வந்தாள்.

ஒரு நாள், அக்கப்பல் ஒரு நகரத்தின் துறைமுகத்தை அடைந்தது. அந்நகரத்தின் வினோதங்களைப் பார்ப்பதற்குச் செவிலித் தாய், குழந்தையை எடுத்துக் கொண்டு கப்பலை விட்டு இறங்கினாள். அப்போது அவள் கையிலிருந்த குழந்தை தவறி, நீரில் விழுந்து, மறைந்து விட்டது.

குழந்தை விழுந்ததால், கப்பலில் குழப்பம் உண்டாயிற்று. உடனே நீரில் குதித்துக் குழந்தையை எடுப்பவர் ஒருவரும் இல்லை. அக்குழப்பத்தைக் கண்ணுற்ற பிரபு அங்கு

வந்தார். அவருடன் அவர் நாயும் வந்தது. கனவான் நீரில் விழுந்த குழந்தை அணியும் சட்டை ஒன்றைக் கேட்டார். செவிலித் தாய் உடனே ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தாள். அவர், அச்சட்டையையும், குழந்தை விழுந்த இடத்தையும் நாய்க்குக் காட்டி ஒரு சைகை செய்தார். உடனே, நாய் நீரில் குதித்து மூழ்கி விட்டது. நெடு நேரம் வரையில், நாயைக் காணவில்லை. அந்த நாயும், குழந்தையும் நீரில் இறந்து விட்டன என்றே யாவரும் எண்ணினர்.

பின்பு கரையில் இருந்த சிலர், ‘குழந்தையின் பிணத்தையாவது எடுத்து வரலாம்,’ என்று எண்ணிப் படகுகளில் ஏறிப் புறப்பட்டனர்; அவ்வாறு புறப்பட்டுப் போகும் போது, சிறிது தூரத்திற்கு அப்பால், பிரபுவின் நாய் ஏதோ ஒன்றைக் கவ்விக் கொண்டு மேலே வருவதைக் கண்டனர்; உடனே, அதிக வேகமாகப் படகுகளைச் செலுத்தி, அந்நாயினருகில் சென்றனர். நாய், தன் வாயில் இருக்கும் குழந்தையின் கனத்தால், மெல்ல மெல்ல நீந்திக் கொண்டு வந்தது. படகில் இருந்தவர்கள் நாய் நீந்தும் இடத்திற்குச் சென்று நாயையும், குழந்தையையும் படகில் ஏற்றிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்திற்குள் படகுகள் கரையை அடைந்தன. குழந்தை உயிருடன் இருந்தது. அதனைக் கண்ட வர்த்தகன் மனைவி ஆனந்தம் அடைந்தாள்; தன் உயிரினும் இனிய குழந்தையைக் காப்பாற்றிய நாயைத் தன் இரு கரங்களாலும் அன்புடன் எடுத்து, அணைத்துக் கொண்டாள்; அந்த நாய்க்குத் தான் என்ன உபகாரம் செய்வது என்பதை அறியாமல் தயங்கினாள்.

பின்பு, அவள் அந்நாய்க்கு உரிய பிரபுவை அடைந்து, ‘கனவானே, ஆபத்தில் உதவி புரியும் அருங்குணச் செல்வரே, என் குழந்தையைக் காப்பாற்றிய இந்நாய் என்னிடமே இருக்க விடுவீரா? என் சொத்தில் பாதியை இந்நாய்க்குப் பதிலாக உமக்குத் தருகின்றேன்,’ என்று பணிவுடன் கேட்டனள்.

கனவான், அம்மங்கை தம் நாயின் மேல் 'கொண்ட ஆசைக்காகச் சந்தோஷம் அடைந்தாரென்றாலும், தம் நாயைக் கொடுக்க விரும்பவில்லை. அவர், ‘அம்மா, எனக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும், இந்த நாயைக் கொடேன்; உமக்கு உமது குழந்தை எவ்வளவு சிறந்ததோ, அவ்வளவு இந்த நாய் எனக்குச் சிறந்தது’ என்றார்.

நாயும் அவர்கள் பேசியதை அறிந்து கொண்டது. ‘எங்கள் இருவரையும் பிரிக்க முடியவே முடியாது!’ என்று குறிப்பால் உணர்த்துவது போல அது குரைத்தது.

வர்த்தகன் மனைவி நாயின் அன்பையும், கனவான் அன்பையும் பெரிதும் பாராட்டினள். பின்பு அவள் கனவானுக்கு வந்தனம் அளித்து, மகிழ்ச்சியுடன் சென்றாள்.

கேள்விகள்:

1. ஒரு நாள் துறைமுகத்தில் வந்து தங்கிய கப்பலில் உண்டான குழப்பம் என்ன?

2. நீரில் விழுந்து விட்ட குழந்தையை எடுக்கக் கப்பலில் உள்ளவர் என்ன செய்தனர்?

3. நீரில் விழுந்து மறைந்த குழந்தை எப்படிக் காப்பாற்றப்பட்டது?

4. குழந்தையைக் கொண்டு வரச் சென்ற நாய், எவ்வாறு கரையை அடைந்தது?

5. தன் குழந்தை நாயால் காப்பாற்றப்பட்டதை அறிந்த வர்த்தகன் மனைவி என்ன செய்தாள்?

6. நாயைக் கொடுக்கும்படி கேட்ட குழந்தையின் தாய்க்குக் கனவான் கூறியது என்ன?

7. நாய் செய்த செயல் என்ன?