இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/புண்டரீகர்-II
2. புண்டரீகர்-II
புண்டரீகர், ‘அந்தோ! யான் என் தாய், தந்தையரை அடித்து, வசை மொழிகளைப் பகர்ந்தேனே! அவர்கள் மனம் நோகும்படி நடந்தேனே! ஐயோ! வயது முதிர்ந்த அவர்கள் நடந்து வர, பாவியாகிய யான் குதிரை மேல் ஏறி வந்தேனே! என்னைப் போன்ற பாவியுளனோ! புண்ணிய தலங்களைப் பூசிப்பது மேலானது என்று எண்ணியல்லவோ காசிக்கு வந்தேன்! என்னே என் அறிவீனம்!’ என்று பெரிதும் வருந்தினார்.
அவர் படுந்துன்பத்தைக் கண்ட அத்தெய்வ மங்கை, ‘அப்பா, உன் தாய் தந்தையரிடம் நீ இக்கணமே சென்று, அவர்கள் மலரடிகளில் வீழ்ந்து மன்னிப்புப் பெற்றுக் கொள்; இனியாவது, அவர்கள் மனம் நோகாவண்ணம் நடந்து கொள். பெற்றோர்களைப் பூசிப்பதால், நீ பெரும் பயனை அடைவாய்; இம்மை, மறுமை நலன்களைக் குறைவில்லாமல் பெறுவாய்; சிறிது காலத்திற்குள் கடவுள் அருளைப் பெறுவாய்,’ என்று கூறிப் போயினள்.
பின்னர், புண்டரீகர் குக்குட முனிவரை வணங்கினார். அம்முனிவர் அவரை அன்புடன் ஆசீர்வதித்தார். புண்டரீகர் தம் தாய், தந்தையரை அடைந்து, அவர்கள் மலரடிகளில் வீழ்ந்து வணங்கினார்; தாம் செய்த பிழைகளை மன்னிக்குமாறு வேண்டினார். பெற்றோர் மனம் மகிழ்ந்து, ‘எங்கள் செல்வமே, உனக்கு நற்புத்தி வந்ததைப் பற்றி நாங்கள் சந்தோஷப்படுகின்றோம்!
தாய், தந்தையர்க்கு நற்குணம் வாய்ந்த பிள்ளைகளே சிறந்த செல்வம். நீ நீடிய ஆயுளைப் பெற்றுச் சுகமாக வாழ்வாயாக!’ என்று ஆசி கூறினர்.
புண்டரீகர், தம் பெற்றோரைத் தாமும், தம் மனைவியும் ஏறி வந்த இரு புரவிகள் மீது ஏற்றி, தம் மனைவியுடன் கால் நடையாகச் சென்றனர். எல்லாரும் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முடிவில் ஊரை அடைந்தனர். புண்டரீகர் தம் பெற்றோர்களின் மனக் குறிப்பை அறிந்து, ஏற்ற பணிவிடைகளைச் செய்து வந்தார். அவரை அந்நகரத்தார் எல்லாரும் புகழ்ந்தனர்.
ஒரு நாள், அவர் தம் பெற்றோர்க்கு, வேலை செய்து கொண்டிருக்கையில், புண்டரீகர் என்னும் பெயருடைய கடவுள் அங்குத் தோன்றினர். பகவான் வந்திருத்தலை அறிந்தும், புண்டரீகர் அவருக்கு உபசாரம் செய்யாமல், ஒரு செங்கல்லை விட்டெறிந்து, ‘சுவாமி, அதன் மேல் நின்று கொண்டிரும்; சீக்கிரம் வருகின்றேன்,’ என்று கூறி விட்டுத் தம் பெற்றோர்க்கு வேண்டிய வேலையைச் செய்தார். பெருமான், அவரது செயலுக்கு வியந்து, அன்பு கொண்டு அவரை ஆசீர்வதித்துச் சென்றார்.
கேள்விகள்:
1. தெய்வப் பெண் முனிவரைப் பற்றிக் கூறியதும், புண்டரீகர் அடைந்த வருத்தம் என்ன?
2. புண்டரீகர் படும் துன்பத்தைக் கண்டு, தெய்வ மங்கை கூறியது என்ன?
3. குக்குட முனிவரை வணங்கிய பின், புண்டரீகர் என்ன செய்தார்?
4. தம்மை வணங்கிய மகனுக்குப் பெற்றோர் கூறிய ஆசி மொழி என்ன?
5. பெற்றோர்க்கு வேலை செய்து கொண்டிருக்கையில், வந்த கடவுளை எப்படி உபசரித்தார்?
6. பெற்றோர்க்குப் பணிவிடை செய்து வந்த புண்டரீகர் பெற்ற பலன் யாது?