உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/புண்டரீகர்-I

விக்கிமூலம் இலிருந்து

இராஜன்
சிறுவர்க்குரிய கதைகள்

1. புண்டரீகர்-1

‘லோக தண்டம்’ என்னும் பட்டினத்தில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் மனைவி மிகவும் நல்லவள். அவ்விருவருக்கும் நெடுங்காலம் வரையில் பிள்ளை பிறக்கவில்லை. பிறகு ஓர் ஆண் மகவு பிறந்தது. அவர்கள் அதற்குப் ‘புண்டரீகன்’ என்னும் பெயர் இட்டார்கள்.

புண்டரீகர் சகல கலைகளும் கற்றுத் தேறினார். வாலிபரானதும், அவர் ஓர் அழகிய பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டார். அவர் சிறிது காலம் நற்குணம் உடையவராகவே இருந்தார்; பின்னர், தீயவர்களோடு கூடிக் கள் குடித்தல், சூதாடுதல் முதலிய கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டார். அவருடைய அடாத செயல்களைக் கண்ட தாய் தந்தையர், அவருக்குப் பல விதத்திலும் புத்தி புகட்டினர். எனினும், புண்டரீகர் அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை. அதனுடன் நில்லாது, அவர் அவர்களை வைவதும், அடிப்பதுமாயிருந்தார். சில நாட்கள் கழிந்த பின்னர், அவர் தம் பெற்றோருடன் இருக்கப் பிரியப்படாமல், தம் மனைவியை அழைத்துக் கொண்டு வேறோர் இடத்திற்குப் போய் விட்டார்.

அவர் பெற்றோரும், தம் கொடிய புத்திரர் முகத்தில் விழிப்பது சரியன்று என்று எண்ணி, வேறெங்கேனும் சென்று உயிர் விடத் தீர்மானித்தனர். அப்போது பலர் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு, அவ்விருவரும் நடந்து சென்றனர். புண்டரீகரும், தம் மனைவியுடன் காசிக்குப் பிரயாணமானார். அவர், வழியில் நடந்து செல்லும் பெற்றோரைக் கண்டும், மனம் இளகவில்லை. அவரும், அவர் மனைவியும் இரு பரிகளின் மேல் ஏறிச் சென்று, காசிக்குப் பக்கத்தில் உள்ள குக்குட முனிவரின் ஆச்சிரமத்தை அடைந்து, அம்முனிவரைக் கண்டனர். ‘காசி எவ்வளவு தூரத்தில் உள்ளது?’ என்று புண்டரீகர் முனிவரைக் கேட்டார். முனிவர் அது தமக்குத் தெரியாதென்று கூறி விட்டார். அதைக் கேட்ட புண்டரீகர் முனிவரை மிகவும் இழிவாக நினைத்தார்.

அன்று நடு நிசியில் கோரமான உருவத்துடன் மூன்று பெண்டிர், முனிவரது ஆச்சிரமத்தில் நுழைந்து, உள்ளே இருந்த குப்பைகளை அகற்றி, மெழுகிக் கோலமிட்டனர். பின்னர், அழகிய உருவத்தோடு வெளியில் வந்தனர். அவர்களைக் கண்டார் புண்டரீகர்; ‘பெண்களே, கோரமான உருவத்துடன் உள்ளே சென்ற நீங்கள், அழகிய உருவம் பெற்று வருகிறீர்களே! அவ்வுருவத்தை எப்படிப் பெற்றீர்கள்?’ என்று அவர்களை வினவினார்.

அவர்களுள் ஒருத்தி அவரை நோக்கி, ‘அடா பாவி, நல்லவர்கள் வெறுக்கத்தக்க கொடியவன் நீ; பெற்றோர்களைக் காப்பாற்றாத சண்டாளன். எங்கள் முன் நீ வருதல் தகுமோ?’ என்று கோபித்துக் கொண்டாள்.

புண்டரீகர் பயந்து விட்டார். அவர் தாம் செய்த கெட்ட காரியங்களை நினைத்து வருந்தினார்; பின்பு அப்பெண்ணின் பாதங்களில் வீழ்ந்து, தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். அவள், அவரை ஆசீர்வதித்து, ‘நானும், மற்றைப் பெண்களும் புண்ணிய நதிகளின் வடிவாயிருக்கும் தெய்வ மாதர்கள். நீராடிச் செல்லும் மக்களின் பாவங்கள் எங்களைச் சேர்கின்றன. அதனால், நாங்கள் கோரமான ரூபத்தை அடைகிறோம். நாங்கள் இவருக்குப் பணி செய்வதால், எங்கள் பாவங்கள் நீங்குகின்றன. அதனால், நாங்கள் தினந்தோறும் அழகிய உருவமும் பெறுகிறோம்,' என்றாள்.

அம்மங்கை கூறிய வார்த்தைகளைக் கேட்ட புண்டரீகர், ‘அம்மணி, சிறந்த தெய்வங்களான நீங்கள், இவரை வணங்குவதேன்? இவருக்கு வேலை செய்வது ஏன்?’ என்று கேட்டார்.

அவள், ‘அன்பனே, இப்பெரியார் வயது முதிர்ந்த தம் தாய் தந்தையரையே தெய்வமாகக் கொண்டாடி வருகிறார். அவர்கள் அடியால் இட்ட வேலையை இவர் தமது முடியால் செய்து முடிக்கிறார். அதனால், இவர் பெருந்தவம் உடையவரானார். கடவுளை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும், பெரியார்களைக காணுவதும் ஆகிய இவற்றால் ஒருவன் அடையும் பயனை விட, தன் தாய், தந்தையரை ஒரு முறை வணங்குவதால் அடையும் பயன் மேலானதாகும். ஆதலால், தாய், தந்தையரை வணங்கிக் காப்பாற்றுபவரே உலகில் சிறந்த உத்தமர். அத்தகைய பெரியார் இம்முனிவர். ஆதலால், இவருக்கு நாங்கள் பணி செய்து, எங்கள் பாவங்களை நீக்கிக் கொள்கிறோம்,' என்றாள்.

கேள்விகள்:

1. புண்டரீகர் என்பவர் யார்?

2. புண்டரீகரின் பெற்றோர் ஏன் வேற்றிடம் சென்று உயிர் விடத் தீர்மானித்தனர்?

3. புண்டரீகர் குக்குட முனிவரை ஏன் இழிவாக நினைத்தார்?

4. குக்குட முனிவரின் ஆச்சிரமத்துக்கு வந்த மூன்று பெண்டிர் யாவர்?

5. வினவிய புண்டரீகர்க்குக் கோபங்கொண்ட பெண் கூறியது என்ன?

6. பாதங்களை வணங்கி வேண்டிக் கொண்ட புண்டரீகர்க்கு அப்பெண் கூறிய மொழி யாது?

7. குக்குட முனிவரைப் பற்றித் தெய்வப் பெண் கூறியது என்ன?

8. புண்டரீகர் கதையால் நீ அறிந்து கொண்ட நீதி யாது?