உள்ளடக்கத்துக்குச் செல்

இருட்டு ராஜா/6

விக்கிமூலம் இலிருந்து

6

தங்கராசு திரிபுரசுந்தரியைப் பற்றி அதிகம் நினைத்தான். அவன் துாக்கம் கெட்டுப் போனதுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அந்நாட்களில் அவள் வகுப்பு பெண்களின் தலைவி மாதிரி செயல்பட்டாள். அவளுக்குப் பதின்மூன்று  வயசிருக்கும். தன்னையொத்த பெண்களைச் சேர்த்துக் கொண்டு குதியாட்டம் போடுவதில் அவள் கெட்டி.

அவள் வீடு அடுத்த தெருவில் இருந்த போதிலும், தங்கராசு வீட்டில் வந்து குழுமிக் கொட்டமடிப்பதில் திரிபுரம் ஒவ்வொரு நாளின் பெரும் பகுதியையும் செலவிட்டு வந்தாள். தங்கராசுவின் சகோதரி ஒருத்தி வீட்டோடு இருந்தாள். அவள் ஊர்ப்பெண்களை எல்லாம் விளையாடக் கூட்டிக்கொள்வாள்.தாயக்கட்டம், பல்லாங்குழி, ஊஞ்சல் விளையாட்டு என்று வீடு எப்ப பார்த்தாலும் கலகலப்பாக இருக்கும்.

திரிபுரம் பையன்களைக் கேலி செய்யவும் தயங்க மட்டாள். தங்கராசு என்றாலும் சரி, முத்துமாலை ஆனாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவள் துணிச்சலாகப் பரிகாசம் பண்ணுவாள். வம்புக்கிழுத்து வாயடி அடிப்பாள்.

பையன்களும் அவளையும் அவள் தோழிகளையும் ‘கோட்டா பண்ணி’க் களிப்பதில் உற்சாகம் காட்டினார்கள்.

ஒரு சமயம், திரிபுரமும் சிநேகிதிகளும் தங்கராசு வீட்டு முன்னே தொட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். “கண்ணாம் பூச்சி ஆட்டம்” திரிபுரம் தான் கண்ணைக் கட்டியவாறு, கைகளை நீட்டிக் கொண்டு, தொடுவதற்கு ஆளைத் தேடி அலைந்து வந்தாள். சுற்றிலும் பெண்கள் கூச்சலிட்டும் குரவையிட்டும் துள்ளிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது முத்துமாலையும் தங்கராசும் இன்னொருவனும் அங்கே வந்தார்கள். “இப்ப ஒரு தமாஷ் பண்ணலாம்” என்று சொல்லி, முத்துமாலை விளையாட்டு வட்டத்துக்குள் புகுந்து விட்டான். குரல் கொடுக்காமல், திரிபுரத்தின் அருகில் போய் மெது மெதுவாக நகர்ந்தும் நடந்தும் காலடி ஓசை எழுப்பினான்.  இதர பெண்களுக்கும் விளையாட்டு குஷி. எல்லோருமே பன்னிரண்டு, பதின்மூன்று வயசுக்குட்பட்டவர்கள் தான் வேடிக்கை பார்க்கும் துடிப்பில் அவர்கள் சந்தோஷம் அதிகரித்தது.

திரிபுரம் கைகளை நீட்டி முத்துமாலையைப் பிடித்து விட்டாள். “ஆ,புடிச்சாச்சு” என்று சொல்லி, இரண்டு கைகளாலும் பற்றினாள்.

“ஆமா புடிச்சாச்சு” என்று சொல்லி அவளை நன்றாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

ஒரே கூச்சலும், கைதட்டலும், குலவையுமாக ஏக கலாட்டா. “அஞ்சு மூணும் எட்டு-அத்தை மகளைக் கட்டு!” என்று சில பெண்கள் ராகம் போட்டார்கள்.

திரிபுரசுந்தரி முத்துமாலைக்கு அத்தை மகள் தான். அந்த உரிமையில் தான் அவன் துணிச்சலாக அவளிடம் ரகளை பண்ணி வந்தான்.

அவள் இதற்குள் கண்ணைக் கட்டியிருந்த துணியை. அவிழ்த்தெறிந்தாள். நிலையை உணர்ந்து திமிற விடுபட்டாள். அவள் முகம் வெட்கத்தாலும் கோபத்தாலும் செக்கச் சிவந்துவிட்டது. அவள் நல்ல சிவப்பு. ஆத்திரத்தோடு பழிப்புக்காட்டி “வவ்வவ்வே” என்றாள்.

“பெயினண்கள் விளைனளையாடுற இயினடத்திலே, தயினடி மாயினடு புயினகுந்து வியினட்டது!” என்று. கத்தினாள். எயினருமை மாயினடுகள்!” என்றும் சொன்னாள்.

பெண்கள் தங்களுக்குள் “குழுஉக்குறி” வைத்துப் பேசினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் முதல், எழுத்துக்குப்பிறகு அநாவசியமான இரண்டு எழுத்துக்களை அடுக்கி, வேகமாகப் பேசுவார்கள். கேட்கிறவர்களுக்கு. ஏதோ புது பாஷை போல் ஒலிக்கும் அது. பழக்கம் இல்லாதவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.  திரிபுரமும் அவள் தோழிகளும் ஒவ்வொரு சொல்லிலும் ‘யின’ சேர்த்து வேகமாகப் பேசப் பழகியிருந்தார்கள். பையன்களுக்கு அந்த பாஷை புரியாது என்ற நினைப்பில், அவர்களைப் பழித்தும் பரிகசித்தும் தங்களுக்குள் வார்த்தை பரிமாறிக் களிப்பதுமுண்டு.

இப்போது அவள், “பெண்கள் விளையாடுகிற, இடத்திலே தடிமாடு புகுந்து விட்டது”என்றும், “எருமை மாடு” என்றும் சொன்னதும், அவளே எதிர்பாராத விதத்தில் முத்துமாலை பேசினான்.

“வியினளையாட்டில் தோயினத்துப் போயின. செயினங் குயினரங்கை பாயினருங்கே. காயினள் காயினள்னு கயினத்துது!”(விளையாட்டில் தோத்துப் போன செங்குரங்கை பாருங்கே, காள்காள்ன்னு கத்துது)

திரிபுரத்துக்கு அழுகை வந்து விட்டது. விம்மி விம்மி அழுது கொண்டே, “பாரு பாரு. அப்பா கிட்டே சொல்றேன்” என்று சொல்லியவாறு போனாள்.

விளையாட்டு வினையில் முடிந்தது.

அவள் தன் அப்பாவிடம் சொல்ல.அவர் முத்துமாலையின் பெரியப்பாவான பாபநாசம் பிள்ளை,தங்கராசுவின் அப்பா பிச்சு மணியா பிள்ளை, மற்றும் பல பெரியவர்களிடமும் சொல்லிவைத்தார். “பையன்களை கண்டிச்சு வையுங்க!” என்றார். தன் மகளிடமும் அடக்க ஒடுக்கமாக இருக்கும்படி உபதேசித்தார்.

முத்துமாலைக்கு அப்போது பதினாலு வயசு. பெரியப்பாவிடம் அரிவாளைத் துாக்கி வந்து கலாட்டா பண்ணுவதற்கு முந்தி நடந்தது இது.

பாபநாசப் பிள்ளை, “ஏன் இதுமாதிரி எல்லாம் பண்ணுறே, முத்து? நல்லப் பிள்ளைன்னு பேரு எடுப்பியா  இப்படி சல்லிப் பயல்னு பட்டம் வாங்குவியா?” என்று உபதேசித்தார்.

தங்கராசுவின் அப்பா, பையன் ஊரோடு இருந்தால் யோக்கியமா வளரமாட்டான். படிப்பையும் கெடுத்து, தானும் கெட்டுப் போவான் என்று எண்ணி, அவனைப் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்த்து விட்டார்.

அவன் காலேஜ் படிக்கிற காலத்தில் அவர் செத்துப் போனார்.

தங்கராசு பிறகு இரண்டு மூன்று தடவைகள் திரிபுரத்தைப் பார்த்தது உண்டு. அழகான பெண் என்று எண்ணியதுண்டு.

பின்னர் அவளைப் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவில்லை. அவளும் பருவம் எய்தி வீட்டுக்குள் ஒடுங்கி போனாள்.

“உரிய காலத்தில் அவளுக்கும் கல்யாணம் நடத்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டான் தங்கராசு. “முத்துமாலை அவளைப்பற்றி திடீர்னு என்னிடம் விசாரிப்பானேன்?” என்று அவன் மனம் அரித்தது.

“அதுதான் காரணம் சொன்னானே; மெய்யாலுமே அதுதான் விஷயமாயிருக்கும்” என்றும் அவன் மனமே சமாதானமும் கூறிக் கொண்டது.

இருந்தாலும், மறுநாள் அம்மாவிடம் கேட்டான்: “முத்துமாலை நேத்து ராத்திரி அவனோட அத்தை மகள் திரிபுரத்தைப் பற்றி என்கிட்டே கேட்டான். வடக்கே எங்கேயோ இருக்காளாமே தெரியுமா,எப்பவாவது பாத்தியான்னு கேட்டான். அவ எங்கே இருக்கா, மெட்ராசிலேயா? எனக்குத் தெரியாதே!”

பார்வதிஅம்மாள், அவளது இயல்பின்படி பேசினாள்: “என்ன இருந்தாலும் அத்தை மக்கள் அம்மாள் மக்கள் இல்லேன்னு போயிடுமா? ரத்தபாசம் விட்டிடுமா?  அதிலும், அவன் திரிபுரத்தைக் கட்டிக்கிடணும்னு ஆசையா யிருந்தான். வடிவும் பூமியாபிள்ளை கிட்டே கேட்கத்தான் செஞ்சா. பொண்ணு கொடுக்கும்படி. திரிபுரத்தோட அப்பா பேரு பூமிநாதபிள்ளை, பூமியா பிள்ளைன்னு சொல்லுவோம். அவரு பூமிக்கும் மானத்துக்குமாக் குதிச்சாரு உன்மகனுக்காவது நானாவது என் மகளையாவது கொடுக்கிறதாவது அவன் வெறும்பயலாக்கும். சல்லிப் பயலாக்கும், உருப்படாத பயலாக்கும், அப்படியாக்கும் இப்படியாக்கும்னு கூப்பாடு போட்டாரு. உள்ளுர் சம்பந்தமே கூடாது . இந்தச் சில்லாவே கூடாதுன்னு துரா தொலையிலே மாப்பிள்ளை தேடிப் பிடிச்சாரு. மாப்பிள்ளைக்கு சொந்த ஊரு மதுரைப் பக்கம் எங்கேயோன்னு சொல்லிக்கிட்டாக. அவனுக்கு பம்பாயிலே வேலைன்னோ; இல்லை, கல்கத்தாவிலே இருக்கான்னோ சொன்னாக, மொத்தத்திலே, வடக்கே எங்கேயோ இருக்கான். அதுதான் தெரியுது!”

“திரிபுரம் அப்புறம் இந்த ஊருக்கே வரலியா?”

“வராம என்ன! வந்தா வந்தா. அவ அப்பா செத்த போது ஒரு சமயம் வந்தா. பிறகு ரெண்டு மூணு தடவை வந்தா...”

“அவ ஒண்ணும் சொல்லலையா?”

“அவ என்னத்தைச் சொல்லுவா! அவளுக்கு வந்து இறங்கியிருக்கிற ராங்கியும் கெருவமும், யாருகிட்ட கல கலப்பா அவபேசினா? ஏதோ, நல்லபடியா இருந்தால் சரிதான்” என்றாள் பெரியவள்.

மேலும் தொடர்ந்தாள்:

“திரிபுரம் தனக்குக் கிடைக்காமப் போயிட்டாளேங்கிற ஏமாற்றமும் வருத்தமும்தான் முத்துமாலையை ஒரே அடியா மாத்திப் போட்டுதுன்னு நான் சொல்லு வேன். நம்ம அத்தை மக நமக்குத்தான்னு அவன் நம்பிக்கையோடு இருந்தான். அவ மேலே ஆசை வச்சிருந்தான். அந்த நம்பிக்கையிலே மண்ணு விழுந்து, ஆசை முறிஞ்சு போனதும், அவனுக்கு விரக்தி ஏற்பட்டுப்போச்சு. மாமன் பூமியா பிள்ளையும், பெரியப்பன் பாபநாசம் பிள்ளையும் அவன் உருப்படமாட்டான், சல்லிப்பய, வீணப்பயல் என்று மந்திரம் மாதிரி உச்சரிச்சுக்கிட்டே இருந்தாங்களா? அது வேறே உள்ளுக்குள்ளே வேலை செய்திருக்கும். திரிபுரத்துக்கு வேறே இடத்திலே கல்யாணமாகிப் போச்சு. இவனுக்கோ வேறே யாரும் பொண்ணு கொடுக்கத் தயாராயில்லை. சரி,இனிஒழுங்கா யோக்கியமா இருந்து என்னத்துக்கு; இவனுக முன்னாலேயே வீணப்பயலாவும் போக்கிரியாவும் நடமாடி இவங்களை ஆட்டம் காட்டலாமேன்னு அவன் வக்கிரிச்சுக் கிளம்பிட்டான். எனக்கு அப்படித்தான் பட்டுது” என்று அம்மா முடித்தாள்.

தங்கராக அவளை ஆமோதிக்கவும் இல்லை; அவள் எண்ணத்தை மறுத்துக் கூறவும் விரும்பவில்லை.

“அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தால் என்ன? முத்துமாலை வித்தியாசப்பட்ட ஒருவனாக வளர்ந்து விட்டான். மற்றவங்களுக்கு மாறுபாடான முறையிலேயே நடந்துகொண்டு வருகிறான்” என்று அவன் நினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/6&oldid=1143549" இலிருந்து மீள்விக்கப்பட்டது