இருட்டு ராஜா/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7

அன்று சாயங்காலம். தங்கராசு வீட்டுக்கு ஒருத்தி வந்தாள். தூக்குச் சட்டியும் கையுமாக. “ஆச்சி, மகன் வந்திருக்காளே, வடை பஜ்ஜி எதுவும் வேணுமா” என்று கேட்டுக் கொண்டு. “வா, தனபாக்கியம்! இருக்கிறதை கொடுத்திட்டுப் போயேன்!” என்றாள் பார்வதி அம்மாள்.

வந்தவள் சட்டியைத் திறந்து, வடைகளும் பஜ்ஜிகளும், கொடுத்துவிட்டுக் காசுகள் வாங்கிப் போனாள்.

“தினம்கொண்டாந்து கொடுத்திட்டு போபாக்கியம்” என்று அம்மா வழி அனுப்பினாள்.

அவள் போனதும், “இது யாரு, இந்த ஊரிலே புதுசா வியாபாரம் பண்ண வந்திருக்காளா?” என்று தங்கராசு கேட்டான்.

“இவதான் முத்துமாலை கூட இருக்கறவ” என்று அம்மா சொன்னதும் அவன் திகைப்படைந்தான். அன்றொரு நாள் அம்மா, கெட்டலைந்த கழுதை எவளோ என்று சொன்னாளே, அது இவள்தானா என அதிசயித்தது அவன் மனம். இவள் ஒண்னும் மோசமாத் தெரியலியே என்றும் நினைத்தது.

அவள் சராசரிக் குடும்பத்தில் வளர்ந்து வாழ்கிற சாதாரணப் பெண் போல் தான் இருந்தாள். பகட்டோ, மினுக்கோ எதுவும் அவளிடம் இல்லை. நடையிலோ, பார்வையிலோ கூட சந்தேகத்துக்குரிய குறிகள் ஒன்றும் தென்படவில்லை. பின்னே அம்மா அப்படிச் சொன்னாளே.

“இவ பேரு தனபாக்கியமா? எந்த ஊர்க்காரியோ?” என்று சாதாரணமாகக் கேட்பவன் போல் கேட்டு வைத்தான்.

“எந்த ஊரோ கேடோ! இது மாதிரிக் கழுதைகளுக் கெல்லாம் எல்லா ஊரும் சொந்த ஊர் தான். திடீர்னு ஒரு நாள் முத்துமாலை இவளை கூட்டிக்கிட்டு வந்தான். ரயிலடியிலே பார்த்தேன்னு சொன்னான். அதிலேருந்து அவ இங்கே தான் இருக்கிறா. நல்லபடியா இருக்கா. தப்புத்தண்டாவா நடந்துக்கிட்டா முத்துமாலை விட்டா வச்சிருப்பான்? வெட்டிப் தொங்கவிட்டுருவானே பாவி. அந்தப் பயமும் இவளுக்கு இருக்கும். இதிலிருந்து பாரு இடிவிழுவான் காரியத்தையின்னு, கூட இருந்தே அவன் குணத்தை, போக்கை எல்லாம் தான் கண்டுக் கிட்டிருப்பாளா சும்மாவா!” என்றாள் அம்மா.

“அவன் தான் வடை பஜ்ஜி வியாபாரம் பண்ணும் படி சொன்னானாமா?”

“இல்லே இல்லே. அவன் இவளை அருமையாத்தான் வச்சிருக்கான். வரவர, அவன் நிலைமை மோசமாயிட்டுது. வரவு இல்லாமெ தாம் துாம்னு செலவு செய்தா,இருக்கிற சொத்துதான் எத்தனை நாளைக்கு வகும்? இருந்த சொத்துப் பூராவையும் வித்துத் தின்னாச்சு. ஒரு வீடு இருக்கு. அது மேலேயும் கடன் வாங்கியாச்சு, ஒரு நாள் வீட்டுத் திண்ணையிலேயே பலகாரக்கடை, டீ காப்பியோடு ஆரம்பிச்சான். இவ தான் ஆலோசனை சொல்லியிருப்பா. இவ பலகாரமெல்லாம் சுசிருசியா நல்லாக் செய்வா...”

“வடை நல்லாத்தானிருக்கு. ஆமவடை மொறு மொறுன்னு ருசியா இருக்கு. உளுந்த வடை மெத்து மெத்துன்னு பூப்போலே இருக்கு. அநேகமாக வீடுகளிலே செய்கிற உளுந்து வடை மெதுவாகவே அமைக்கிற தில்லே. கல்லு மாதிரித்தான் இருக்கும். இது ரொம்ப மெதுவாயிருக்கு...”

“எல்லாம் அறைக்கிறதிலே இருக்கு. சில பேரு கைக்கே பலகாரங்களிலே தனி ருசியும் வாகும் ஏற்பட்டிடும்.தனபாக்கியம் கை அப்படிப்பட்டகை என்று அம்மா தாராளமாக ஸர்டிபிகேட் வழங்கினாள்.

பரவால்லே, அம்மாவுக்கு இவ பேரிலே வெறுப்பு இல்லை. வெறுப்பு இருந்தால் அவளை நடையேற விட மாட்டாள்; அவள் கைராசியைப் புகழ்ந்து பாராட்டவும் மாட்டாளே என்று மகன் எண்ணிக் கொண்டான்.

அம்மா விஷயத்தை மறந்து விடவில்லை. தொடர்ந்தாள். “வீட்டோடு ஆரம்பிச்ச பலகாரக் கடை நல்லாத் தான் நடந்தது. காலையிலே இட்டிலி, உப்புமா, காப்பி சாயங்காலம் வடை, பஜ்ஜி, காப்பின்னு ஒரே அமக்களம் தான். இவ அலுக்காம உழைச்சா, ஒரு வருஷத்துக்கு மேலேயே நடந்திருக்கும். பிறகு, கடையைமூடிட்டாங்க”

“ஏனாம்.”

“வர்ற பணத்தை எல்லாம் செலவு பண்ணிக்கிட்டே இருந்தால், கடை எப்படி நடக்கும்? கடைக்கு சாமான்கள் வாங்கப் பணம் வேண்டாமா?”

“ஊர்லே பல பேரு கடன் சொல்லி வாங்கித் திண்ணுருப்பாங்க. அப்புறம் கடனை அடைச்சிருக்க மாட்டாங்க.”

“வழக்கமா அப்படி நடக்கிறதுதான். ஆனா முத்துமாலைகிட்டே அந்தக் கதை நடக்கலே. அவன் ஏசியும் பேசியும், அடிச்சும் மிரட்டியும் பாக்கியை எல்லாம் வசூல் பண்ணிப் போட்டான். கடையை ஒழுங்கா நடத்துறதுக்குக் கையிலே முதல் இல்லே. அது தான் காரணம். அதுக்குப் பிறகு தனபாக்கியம் அவ்வப்போது இதுமாதிரி பலகாரம் செய்து வீடு வீடாகப் போய் கேட்டு விக்கிற வேலையை செய்து வாறா. காலையிலே இட்டிலி வியாபாரம் உண்டு. தேவையானவங்க, வீடு தேடிப் போயி வாங்கி வருவாங்க. எப்படியோ கதை நடக்குன்னு வய்யி!” என்று முடித்தாள் அம்மா.

“முத்துமாலை பாடு கஷ்டம்தான்னு சொல்லு. கொஞ்சமாவது வசதி இருக்கும்னு நெனைச்சேன்” என்று தங்கராசு. முணு முணுத்தான்.

“அநேகம் பேரு எப்படி வாழ்க்கை நடத்துறாங்க என்பதே புரியவில்லை. வெளிப்பார்வைக்கு எல்லாம் வெளிச்சமாத்தானிருக்கு உள்ளுக்குள்ளே, ரொம்பவும் டல் அடிச்சுப் போயிருக்கும்கிறது நெருங்கிப் பார்த்தால் தான் தெரியுது அவன் மனம் பேசிக்கொண்டது.

‘நல்லவள ஒருத்தி வந்து சேர்ந்ததும் முத்து மாலை அதிர்ஷ்டம் தான்’ என்றும் எண்ணினான் அவன்.

அவள் வந்து சேர்ந்த கதையைப் பின்னர் தங்கராசு தெரிந்து கொள்ள முடிந்தது. ஒருவன் விஸ்தாரமாகச் சொன்னான். முத்துமாலை சொல்லியிருந்ததைத்தான் அவன் சொன்னான்.

ஒரு முக்கிய அலுவலாக ஏதோ ஒரு ஊருக்குப்போய் விட்டு முத்துமாலை ராத்திரி ரயிலில் வந்து இறங்கினான். பத்தரை மணி.

ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் துாரம் நடக்க வேண்டும் ஊருக்கு ஆள் நடமாட்டம் இராத, வழியில் வீடுகள் குடியிருப்பு எதுவும் இராத, விளக்குகள் இராத பாதை ரஸ்தாதான்.

மற்றவர்களானால் ராத்திரி வேளையில், தனியே அந்த வழியாக வர பயப்படுவார்கள். வழியில் ஒரு ஒடை உண்டு. அந்த ஒடை பள்ளத்தில், பாலத்தடியில் திருடர் பதுங்கியிருப்பர். ரோட்டில் வருகிற ஆட்கள், வண்டிகளை மறித்து வழிப்பறி செய்வர் என்ற பேச்சு வெகு காலமாக நிலை பெற்றிருந்தது. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதாக இடைக்கிடை செய்திகள் எழுவதும் வழக்கம்தான்.

கையில் பணம்,பொருள் எதுவும் எடுத்துவராதவனை வழிமறித்தால், அவனிடம் ஒன்றுமே இல்லை என்று கண்டு கொண்டதும் ஏண்டாஒண்னுமே எடுத்துவராமே வந்தே என்று இரண்டு அறைகொடுத்து அனுப்புவார்கள் திருடர்கள்; அப்படிச் செய்துமிருக்கிறார்கள் என்றும் ஊரில் பேசிக் கொள்வது வழக்கம். முத்துமாலை அதற்கெல்லாம் பயந்தவனா! என்ன? அவன், தோளில் கிடந்த துண்டை உதறித் தலைப்பா கட்டிக் கொண்டு, கால்கரண்டை வரை தொங்கிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வேகமாக நடக்கலானான்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பான். அவனுக்குப் பின்னே யாரோ ஒடி வருவது போல் காலடி ஓசை கேட்டது. அவன் நின்றதும் அந்தச் சத்தம் நின்றது.

அவன் திரும்ப நடக்கத் தொடங்கியதும், சரட்-சரட் என்று மணலில் அடி எடுத்து வைக்கும் சத்தம் மீண்டும் கேட்டது.

முத்துமாலை பேய் பிசாசுகளில் நம்பிக்கையில்லாதவன் தான் இருப்பினும், அந்த நேரத்தில் பேய்-பிசாசு நினைப்புதான் அவன் மனசில் எழுந்தது. பிறகு துணிந்து “யாரது?” என்று அதட்டலாகக் கேட்டான், நின்றான்.

ஒரு ஆள் நெருங்கி வருவது தெரிந்தது. இருட்டுத் தான் என்றாலும், இருளில் பழகிவிட்ட அவன் கண்களுக்கு அது “ஒரு பொம்பிளை” என்று புலனாகியது.

இந்த நேரத்திலே யாருடா இது! மோகினிப் பிசாசு என்பார்களே, அதாக இருக்குமோ என்று துணுக்குற்றது அவன் மனம். ஆயினும் சுதாரித்துக் கொண்டு காறித் துப்பினான். “யாரம்மா அது? எந்த ஊருக்குப் பேகணும்?” என்று கேட்டான்.

“இந்த ரோடு எந்த ஊருக்குப் போகுது ஐயா?” என்று கேட்டாள் அவள். தீனமாக ஒலித்தது அவள் குரல்.

சாியாபோச்சு போ! எந்த ஊருக்குப் போற வழியின்னு தொியாமத்தான் நடக்கிறியா? ஊர் தவறி, ராத்திரி நேரத்திலே, ஸ்டேஷன் தெரியாமல் இங்கே இறங்கிட்டியா? ராத்திரி தனியா இப்படி வரலாமா? அதுவும் ஒரு பொம்பிளே. இந்த வழியிலே ராத்திரி நேரத்திலே ஆம்பிளைகளே நடக்க பயப்படுவாங்க. பொம்பிளை இப்படி வரலாமா?” என்று முத்துமாலை அனுதாபத்தோடு பேசினான்.

அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கோடு, இயல்பாக தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறவன் போல. மடியிலிருந்து ஒரு பீடியை எடுத்து வாயில் கல்விக் கொண்டு, தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியைக் கிழித்தான். வெடித்த வெளிச்சத்தில் அவளைச் சிறிது கவனிக்க முடிந்தது.

சாதாரணமான ஒரு பெண். வறுமையின் பாதிப்பு. தெரிந்தது. சோகமும் பயமும் அவள் முகத்தில் குடியிருந்தன.

“நீ எங்கிருந்து வர்றே? இந்த ஸ்டேஷனிலே ஏன் இறங்கினே?” என்று கேட்டான் முத்துமாலை.

அவள் ஒரு ஊரின் பெயரைச் சொன்னாள். அம்மா சாகக்கிடக்கிறாள். மகளை வைத்து எப்படியோ காப்பாற்றிவிட்டாள். அவளை எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்து, அவளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டு நிம்மதியாகச் சாகவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றித் தருவதுபோல் பாசாங்கு செய்தான் சகுனி மாமனான ஒருவன். அம்மாவுக்கு ஏதோ ஒரு வழியில் அண்ணன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி வருவான். மதுரையில் பழக்கடை வைத்திருப்பதாகச் சொன்னான். மதுரையில் தனக்குத் தெரிந்த நல்ல மாப்பிள்ளை இருப்பதாகவும், செலவு எதுவுமே இல்லாமல் தனபாக்கியத்தைக் கட்டிக்கொடுத்து விடுவதாகவும், தனது பொறுப்பில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றும் அம்மாவிடம் இனிப்பாகப் பேசினான். அவளும் நம்பி, மகளை அவனோடு அனுப்பி விட்டாள். அவன் ஒரு எத்தன், குடி கெடுப்பவன். எத்தனையோ பெண்களை வஞ்சித்து, தான் பணமும் சுகமும் தேடிக் கொண்டிருப்பவன். அதெல்லாம் அவளுக்கு பிற்பாடுதான். தெரிந்தது. சகுனி மாமா அவளை நேரே மதுரைக்கு அழைத்துப் போகவில்லை. கன்னியாகுமரிக்குக் கூட்டிப் போனான். அங்கே அவளிடம் பசப்பி மயக்கி, அவளை உபயோகித்தான். அவனே தன்னைக் கட்டிக்கொள்வான் என்று தான் அவள் முதலில் நம்பினாள். ஏமாந்தாள்.

கிழவன் மாதிரி இருந்த எவனோ ஒருவனிடம் மாமா அவளை ஒப்படைத்தான். “நான் உன் அம்மாவிடம் கூறிய ஆள் இவர்தான், இவர் உன்னை நல்லபடியா வச்சுக்கிடுவார்; இவருக்கு நல்லவளாக நடந்து கொள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அந்த ஆளிடம் மாமா கணிசமாகப் பணம் வாங்கியிருந்தான் என்பதை அவன் சொல்லி அவள் தெரிந்து கொண்டாள்.

அவனும் நம்பகமானவன் அல்ல என்று அவள் சந்தேகித்தாள். இரண்டு மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் தங்கியபிறகு, அவன் அவளை அழைத்துக் கொண்டு. குற்றாலம் போனான். பிறகு திருச்செந்துாருக்கு வந்தான். மதுரை போகலாம் என்று ரயிலேறினான் அவளோடு.

இவனும் மாமா மாதிரி தன்னை வேறு எவனுக்கோ விற்றுவிடத் திட்டமிட்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. ஆகவே, அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்கு அவள் பிளான் பண்ணிக் கொண்டேயிருந்தாள்.

ரயிலில் அவன் அயர்ந்து தூங்கிவிட்டான். சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவள் இந்த ஸ்டேஷனில் ரயில் நின்றதும் ஒரு ஆள் இறங்குவதைக் கண்டதும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து இறங்கிவிட்டாள். “உங்களைத் தவிர வேறு யாரும் இறங்கலே, நீங்க பேர்றபடி உங்க பின்னாடியே வரலாம்னு நினைச்சு வந்தேன். நீங்க வேகமா நடந்ததனாலே நான் ஒடி வர வேண்டியதாச்சு” என்றாள்.

“உன் பேரு தனபாக்கியமா?” என்று கேட்டான்.

“ஊம்” என்றாள் அவள்.

“ஊருக்குப் போய் சேர்ந்ததும் என்ன செய்யலாம் என்று எண்ணினே?”

“நான் ஒண்ணுமே எண்ணிப்பார்க்கலே, அந்தக் கிழக்குரங்கு கிட்டேயிருந்து தப்பிக்கனுமே, எப்படிடா தப்பிக்கலாம் என்கிற ஒரே நெனப்பிலேயே இருந்த தனாலே, வேறு எதைப் பத்தியும் யோசிக்க நேரமில்லே, மனசும் ஒடலே.”

அவர்கள் நின்று நின்றும், மெதுவாக நடந்தும் பேசியவாறே முன்னேறினார்கள்.

“ராத்திரிப் பொழுது கழிஞ்சிட்டா, விடிஞ்சப்புறம் ஏதாவது வழி தேடிக் கொள்ளலாம். இந்த ஊரிலேயே இருந்து விட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்காரி தேவைப்படும் வீடுக இல்லாமலா போகும்? இந்த ஊரிலே இல்லேன்னு போயிட்டா பக்கத்து ஊர்களிலே முயற்சி பண்ணலாம். கையும் காலும் திடமா இருக்கையிலே , உழைக்கவும் தயாராக இருக்கையிலே. பிழைப்பு நடத்த முடியாமலா போயிடும்?” என்று அவள் தன்னம்பிக்கை யோடு பேசினாள்.

அவளுடைய மன உறுதி முத்துமாலைக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு இருபது இருபத்திரண்டு வயது இருக்கும் என்று நினைத்தான்.

“உனக்கு வயசு என்ன ஆகுது?” “இருபது முடிஞ்சிட்டுது.”

“அதுக்குள்ளே எவ்வளவோ அனுபவங்கள்! இல்லையா?” என்றான்.

அவள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வீடு சேர்ந்தார்கள்.

“பெரிய வீடாக இருப்பதை அவள் பார்த்தாள். நான் இங்கே இந்தத் திண்ணையிலேயே படுத்துத்துகுறேன்” என்றாள்.

“வீட்டிலே எத்தனையோ அறைகள் இருக்கு. நீ ஒரு அறைக்குள்ளே படுத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பயம் இல்லாமல் தூங்கலாம். வீட்டிலே வேறே ஆள் யாருமே இல்லையேன்னு நீ பயப்பட வேண்டாம். என்னாலே உனக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாது” என்று முத்துமாலை அறிவித்தான்.

“அய்யய்யோ!” என்று பதறி, தன் கையினால் வாயைப் பொத்திக் கொண்டாள் அவள். “உங்களைப் பற்றி நான் தப்பா எதுவும் நினைக்கலே. நீங்க நல்லவங்க என்கிறது இருட்டிலே இவ்வளவு தொலைவு தனியா நடந்து வரும் போதே நல்லாத் தெரிஞ்சிட்டுது. கெட்ட எண்ணம் கொண்டவங்கன்னா உங்களை மாதிரி கேட்டுக் கிட்டு சும்மா நடந்து வந்திருக்க மாட்டாங்க. நீங்க விலகி விலகியே நடந்தீங்க...”

“சரி எனக்குத் தூக்கம் வருது. விடியக்காலம் பேசிக் கிடலாம்” என்று அவளை ஒரு அறைக்குள் அனுப்பிவைத் தான் அவன்.

காலையில் அவள் சீக்கிரமே எமுந்து விட்டாள். வீட்டுக்குள்ளேயே கிணறு இருந்தது. அதில் நீர் இறைத்து வசதியாகக் குளித்தாள். மாற்றுடை அவளிடமே இருந்தது, ஒரு துணிப்பையில் எடுத்து வந்திருந்தாள். முத்துமாலை எழுந்திருக்கவில்லை. நல்ல தூக்கம்.

அவள் வாசல் தெளித்து, கோலம் போட்டாள். வீட்டைப் பெருக்கினாள். அடுப்படியை ஆராய்ந்தாள். தேவையான பொருள்கள் எல்லாம் இருந்தன. தயக்கமின்றி எடுத்து, காப்பி போட்டு உப்புமாவும் தயாரித்து முடித்தாள்.

“என்ன, வாசனை வீட்டையே துக்கிட்டுப் போகுதே!” என்ற வியப்போடு எழுந்த முத்துமாலை அடுக்கலைக்குள் எட்டிப்பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“பல் தேச்சுட்டுவாங்க காப்பி சாப்பிடலாம்” என்று உபசரித்தாள் அவள். “உங்களுக்கு குளிக்க வெந்நீர் போடணுமா?” என்று கேட்டாள்.

“உனக்கு வேண்டிய வேலையை நீயே தேடிப்பிடிச்சுக் கிட்டே இல்லையா?” என்று சிரித்தான் முத்துமாலை.

வெட்கமும் மகிழ்ச்சியும் விளையாடிய அவளுடைய முகம் வசீகரமாகத் தான் காட்சி தந்தது.

“சரி, நீ இஷ்டப்பட்டால், உனக்கு இங்கே இருக்க பயம் எதுவும் இல்லையானால், தாராளமா நீ இந்த வீட்டின் வேலைகளைச் செய்து கொண்டு இங்கேயே இருக்கலாம். வீட்டின் பின் பகுதி தனிக்குடித்தனத்துக்கு லாயக்கானது தான். எங்க அம்மா இருந்தபோது சில சமயம் யாருக்காவது வாடகைக்கு விட்டது உண்டு. அதுக்குப்பிறகு நான் யாரையும் வாடகைக்குக் குடி வைக்கலே. அந்தப் பகுதியிலே நீ தங்கியிருக்கலாம். என்னைப் பத்தி ஊரிலே பலவிதமாப் பேசுவாங்க. எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு மனசுக்குப் பிடிக்கிற காலம் வரை நீ இங்கே வசிக்கலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சே பணையும் இல்லே” என்று சொல்லிவிட்டு அவன் பல் விளக்கப் போனான். பிறகு உப்புமா தின்னு, காப்பி குடித்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டினான். “தனபாக்கியம், உன் பழையகதை எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். அதை நான் மறந்திட்டேன். என்னைப் பொறுத்த வரையிலே நீ நல்லவ. புதுசா வேலைக்கு வந்திருக்கிறே, அவ்வளவுதான். நீ உன் பழைய கதையை இந்த ஊரிலே யாருகிட்டேயும் சொல்லிக்கிட்டிருக்க வேண்டியதில்லே. அதனாலே நன்மை எதுவும் ஏற்படாது.உனக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும், அவ்வப்போது நீ என் கிட்டே கேட்டு வாங்கிக்கிடலாம். இந்த வீட்டை விட்டு எப்போ போகணுமினு தோணினாலும், என்னிடம் சொல்லிக்கிட்டே போகலாம். என்னாலே உனக்கு ஒரு தீங்கும் ஏற்படாது” என்று உறுதியாகக் கூறினான்.

அவளுக்குக் கண்களில் நீர் சுரந்தது. அவள் நன்றிப் பெருக்கோடு அவன் முன்னே விழுந்து கும்பிட்டாள்.

“சேச்சே என்ன தனபாக்கியம் இது!” என்று அவன் தடுமாறினான்.

இந்த விதமாகத்தான் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது. வெகு விரைவிலேயே நெருக்கமான உறவாகப் பின்னிப் பிணைந்து கொண்டது. அதற்காக அவனோ அவளோ வருத்தப்படக் கூடிய சந்தர்ப்பம் இதுவரை ஒன்று கூட ஏற்படவில்லை.

அவர்கள் இரண்டு பேரும் எட்டு வருஷங்களாகச் சேர்ந்து வாழ்கிறார்கள் அவர்களுக்குக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. அதற்காக அவர்கள் வருத்தப்படவுமில்லை.

இதை அறிந்ததும், “முத்துமாலை பெரிய ஆளுதான். உண்மையிலேயே ரொம்பப் பெரியவன்” என்று தங்கராசு தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/7&oldid=1143550" இருந்து மீள்விக்கப்பட்டது