இருட்டு ராஜா/8

விக்கிமூலம் இலிருந்து



8

ராத்திரி, பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும்.

“கூகூ” என்று ஒரே கூச்சல்.

தங்கராசு விழித்துக் கொண்டான். அம்மா விழித்த படிதான் இருந்தாள்.

“என்னமோ ஒரே கூச்சலா இருக்கு.ஏதோ கலாட்டா போலிருக்கு!” என்றான்.

“தெக்குத்தெரு மூலையிலேதான் கேட்குது. என்னமும் சண்டையாயிருக்கும்.”

தங்கராசு விளக்கை எரிய விட்டான். திண்ணைக்குப் போக அடி எடுத்தான்.

“ஏ ராசு, நீ ஏன் வெளியே போகப் போறே? பேசாம உள்ளேயிரு. அந்தக் குடிகாரமட்டை முத்துமாலை தான் ஏதோ வம்பிலே இறங்கியிருக்கான். அவன் சீட்டி அடிக்கிற சத்தம் தான் அதிகமாக் கேட்டுது. இப்ப கூடக் கேட்குது. கவனிச்சியா?” என்று அம்மா பொரிந்து கொண்டிருத்தாள்.

பலரது இரைச்சலுக்கும் மேலாக ஓங்கி ஒலித்தது. முத்து மாலையின் “ஹ்விட்டோ ஹ்வீட்” சீட்டி.

“வேறே என்னமோ நடத்திருக்கணும் அம்மா. அது தான் பெரிய இரைச்சலா இருக்கு” என்று தங்கராசு சொன்னான்.

“என்னமும் இருந்துட்டுப் போகுது. விடிஞ்சா தானாத் தெரியும்” என்று அம்மா அவனைத் தடுத்தாள். அவள் அநாவசியமாகப் பயப்படுகிறாள், வீணாக பயப்படுத்துக்றாள் என்று அவன் எண்ணினான். ஆயினும் விளக்கை அனைத்து விட்டுப் படுத்தான்.

அவ்வேளையில் தெற்குத் தெரு மூலையில் பரபரப்பான ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்திருந்தது.

அந்தத் தெருவின் கடைசி வீட்டில் கம்பி அளிபோடப் பட்டிருந்த திண்ணையில் வீட்டுக்காரி படுத்திருந்தாள். எவனோ திருடன் புகுந்து, அவள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியிருக்கிறான். விழித்துக் கொண்ட அவள், “ஐயோ சங்கிலி போச்சே... திருடன், திருடன்...ஐயோ சங்கிலி திருடன்” என்று. அலறலானாள்.

பக்கத்து வீடுகளில் உள்ள ஆண்கள் எழுந்து வந்தார்கள். திருடன் வைக்கோல் படப்புகள் இருந்த தோட்டத்தினுள் குதித்து ஓடினான். “ஏய், விடாதே-பிடி” என்று கத்திக் கொண்டு மற்றவர்கள் தெருவிலேயே நின்றார்கள். அவர்களுக்குப் பயம்

கூச்சலைக் கேட்டு அந்தப் பக்கமாக விரைந்து வந்தான் முத்துமாலை. வழக்கமான சீட்டியை தொடர்ந்து அடித்துக்கொண்டு, அவன் சகாக்களும் ஓடி வந்தார்கள்.

தோட்டத்துக்குள் திருடன் குதித்து ஓடினான் என்று தெரித்ததும் முத்துமாலையும் அவன் ஆட்களும் உள்ளே பாய்ந்தார்கள். ஒருவன் “டார்ச் லைட்” வைத்திருந்தான். அதனுடைய ஒளி தாவித்தாவிப் பாய்ந்தது.

ஒரு படப்பின் பின்னால் பதுங்கி நின்ற திருடன் ஒடத் தொடங்கினான். தோட்டத்துக்கு அப்பால் பள்ளமான வயல் பரப்புகள் தான்.

வயல்களில் பயிர் கிடையாது. அறுவடை முடிந்து காய்ந்து கிடந்தது. ஒடுவதற்கு வசதி தான். அவன் ஒட “டேய் மரியாதையா நின்னுரு. நாங்க துரத்திப்புடிச்சோம்னா உன்னை தொலிஉரிச்சிடுவோம். ஜாக்கிரதை” என்று முத்துமாலை கத்தினான்.

“அடேய் பக்கத்திலே வந்தா ஆள் குளோஸ். நான் யாரு தெரியுமாடா? ஒரு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போய் இருந்திட்டு வந்தவன்டா. இன்னொரு கொலைக்கு அஞ்சமாட்டேன்” என்று திருடன் சவால் விட்டான்.

“ஒகோ, நீ தானா! வெளியே வந்ததிலேயிருந்து பெரிய சூரன் மாதிரி அலையிதியே. இன்னிக்கு மாட்டிக் கிட்டே. டேய், சுத்திவளைச்சு வாங்கடா” என்று முத்து மாலை கூவினான்.

இதற்குள் அவன் ஆட்கள் திருடனை நெருங்கிக் கொண்டுதாணிருந்தார்கள். ஊர் ஆட்களும் விளக்குகள், கம்புகள் சகிதம் வந்தார்கள்.

திருடன் ஒரு கத்தியை எடுத்துக்காட்டிக்கொண்டே இருட்டை நோக்கி ஒடலானான்.

முத்துமாலை ஒரு அறிவிப்பு போல் என்று விசிலடித்தான். அதே வேகத்தில் அவனுடைய அரிவாள் முன்னே பாய்ந்தது. குறிபார்த்து அவன் வீசிய அரிவாள் திருடனின் காலில் பலமாக இறங்கியது.

“அம்மாடி” என்று கத்திக் கொண்டு திருடன் காலைப் பிடித்தபடி கீழே உட்கார்த்து விட்டான்.

சகாக்கள் அவனைப் பற்றிக்கொண்டார்கள். ஒருவன் அவன் கைக்கத்தியைத் தட்டிப் பறித்தான். முத்துமாலை தன் அரிவாளை எடுத்துக் கொண்டான். அவனுடைய மடியைச் சோதித்து தங்கச் சங்கிலியையும் எடுத்து விட்டான்.  மற்ற ஆட்களும் வந்து சேர்ந்தார்கள். திருடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு தெருவை அடைந்தார்கள். வழி நெடுக அவனுக்குச் சரியான பூசைக்காப்பு கிடைத்தது.

“அப்பா செயிலுக்குப் போயிட்டு வந்த சூரப்புலியே எந்த இடத்திலே வாலாட்டனும்னு உனக்கு யாரும் கத்துக் குடுக்கலியாக்கும். இதை மறக்காதே. இந்தா என்று சொல்லி முத்துமாலை கையை மடக்கிக் கொண்டு முஷ்டியால் அவன் முதுகில் கும்மென்று ஒரு குத்து விட்டான்.

“அம்மா தான் செத்தேன்!” என்று திருட்டுப் பயல் அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான்.

வீட்டுக்கார ஐயாவும் அம்மாளும் நின்றார்கள். “ஐயா இந்தாங்க! உங்க நகை. திருடனைப் போலீசில் ஒப்படைக்கிறதோ அல்லது அடிச்சுப் பத்தறதோ உங்க இஷ்டம்” என்று அவரிடம் முத்துமாலை தெரிவித்தான்.

“நம்ம பொருளு நம்ம கைக்கு வந்துட்டுது. அந்தப் பயலுக்கு அரிவாள் வெட்டும், பட்ட அடியும் குத்தும் இந்தச் சென்மத்துக்கு போதும்னு தோணுது. கேசு கீசுன்னு போனாலும், வீண்தொரட்டு” என்று இழுத்தார், ஐயர்.

அதுவும் சரிதான். இந்தப் பயலை ராத்திரிக்கு இந்தத் தென்னமரத்தோடு சேர்த்துக் கட்டி வச்சிருப்போம். பல பலன்னு விடியற் நேரத்துக்கு அவுத்துப் பத்திருவோம்” என்று ஒருவர் யோசனை சொன்னார்.

அவ்வாறே செயல்படுத்தப்பட்டது.

“வேய் செயிலுக்குப் போயிட்டு வந்த குரப்புலியே! இந்த ஊர்பக்கம் இனி அடி எடுத்து வச்சே, அவ்வளவு தான். அடுத்ததடவை என் அரிவாள் உன் காலை நோக்கி  வராது. உன் கழுத்தைத்தான் பதம் பார்க்கும். ஞாபகம் வச்சுக்கோ” என்று முத்துமாலை அறிவுறுத்தினான். பின் தன்வழியே போனான்.

பலர் மரத்தைச் சுற்றிக் காவல் இருந்தார்கள். அதி காலையில் அவிழ்த்து விட்டு, கொசுறு ஆகப் பல அடிகள் கொடுத்து, ஊருக்கு வெளியே அவனை அனுப்பி வைத்தார்கள்.

அவன் நொண்டிக் கொண்டே போய்ச் சேர்ந்தான்

இந்த விவரம் மறுநாள் தங்கராசுக்குத் தெரிய வந்ததும், “அடடா நானும் வந்து பார்க்காமல் போனேனே!” என்று வருத்தப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/8&oldid=1143551" இலிருந்து மீள்விக்கப்பட்டது