உள்ளடக்கத்துக்குச் செல்

இருண்ட வீடு/அத்தியாயம்-19

விக்கிமூலம் இலிருந்து


19

தலைவர் எரிச்சல். இருவர் சண்டை.

வந்த அண்ணனும் போய்விட்டான்.


எப்போது வந்த திந்தக் கடிதம்
என்று தலைவர் எரிச்சலாய்க் கேட்டார்.
ஏழெட்டு நாள்முன் இங்கு வந்தது
திருமணத் துக்குச் செல்லமாட் டீர் என்று
அடுப்பங் கரையில் அதனை வைத்தேன்
இதனா லென்ன என்றாள் தலைவி.
இதுவா திருமணம் என்றார் தலைவர்.
மஞ்சள் கடிதம் மணமா அல்லவா
என்று கூறினாள் எல்லாம் தெரிந்தவள்.
பதரே என்று பல்லவி தொடங்கினார்.
அடக்கென் றெடுத்தாள் அவள் அநுபல்லவி !
"எங்கிருந் தாயடி என்குடிக் கிப்படி
மங்கிப் போக வைத்தாய் காலடி
பொங்க லாண்டி யாகப் போம்படி
புரிவ தெல்லாம் மிகவும் அழும்படி"
எனவே இப்படி முடித்தார் முதலடி!
தானும் தொடங்கினாள் தாளத் தின்படி.
ஊருக் கழித்தாய் உருப்படவா நீ
நாட்டுக் கழித்தாய் நலம்படவா நீ

இனியும் ஊரில் எடுபடவா நீ
என்று கூறி எழுந்தாள் அம்மை.
இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன்
வந்த அண்ணன் வந்த வழியே
சந்தடி யின்றிச் சடுதியிற் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-19&oldid=1534761" இலிருந்து மீள்விக்கப்பட்டது