உள்ளடக்கத்துக்குச் செல்

இருண்ட வீடு/அத்தியாயம்-20

விக்கிமூலம் இலிருந்து


20

தலைவர் கோபித்துக்கொண்டு புறப்படுகிறார்.


வீட்டுக்காரர் மேலும் தொடங்கினார்
இந்தாடி என்றே எடுத்தடி வைத்துப்
பந்தா டிடுவேன் பார்எனக் குதித்துப்
பல்லைக் கடித்தே பரக்க விழித்தே
கொல்லைக் கோடிக் கோலைத் தேடி
விட்டே னாஎன்று மீசை முறுக்கிச்
சட்டென இதுதான் தக்க தென்று
துண்டை எடுத்து தோளில் போட்டுச்
சுண்டெலி வால்போல் தொங்கும் தலைமயிர்
கோதி நுணாக்காய்க் குடிமி முடித்துக்
காதில் தொங்கும் கடுக்கனைத் கிடைத்துச்
சாப்பிட மாட்டேன் சற்றும் இங்கிரேன்
கூப்பிட நினைத்தால் கொன்று போடுவேன்
இங்கு நான் இரேன் சங்கிலி, தெரிந்ததா?
எங்கே பையன்? இரடா இங்கே
என்று கூறி - எங்கே? செருப்பும்
ஒன்று தானா? என் றதை அணிந்து
சென்று பின்பு திரும்பி வந்து
கன்றையும் மாட்டையும் நன்று கருதுநீ
உன்னிடம் குழந்தையை ஒப்பித்து விட்டேன்
சங்கிலி இன்னும்நான் சாற்றுவதைக் கேள்
இப்போ தேநான் இவ்விடம் விட்டுச்
செட்டித் தெருவில் தென்னை மரத்தோ
டொட்டி இருக்கும் ஒருவீட் டருகில்

குட்டிச் சுவரின் கோடியி லிருக்கும்
இரிசி வீட்டின் எதிர்த்த வீட்டில்
இருப்பேன் நீயோ என்னை அங்கு
வந்து கிந்து வருவாய் கிருவாய்
என்று கூப்பிட எண்ண வேண்டாம்
அந்த வீட்டெண் அறுபத் திரண்டுதான்
தெருப் பக்கத்தில் இருக்கும் அறையில்
இருப்பேன் அழைத்தால் வரவே மாட்டேன்
என்று தலைவர் இரைச்சல் போட்டு
நடை வரைக் கும்போய் இடையில் திரும்பி
அழைப்பார் இல்லை ஆதலால் மீண்டும்
திரும்பிப் பார்த்துத் தெருவோடு சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-20&oldid=1534762" இலிருந்து மீள்விக்கப்பட்டது