இருண்ட வீடு/அத்தியாயம்-4
4
தலைவி எழுந்தாள். சாணமிட்டாள். கோலமிட்டாள்.
அவளைக்கண்ட பகலவன் நடுங்கினான்.
நாயின் அலறல் நற்பசுக் கதறல்
பானையின் படபடா பையனின் ஐயோ -
இத்தனை முழக்கில் ஏந்திழை புரண்டு
பொத்தல் மரத்தில் புழுப்போல் நெளிந்தே
எழுந்தாள் அவளோ, பிழிந்து போட்ட
கருப்பஞ் சக்கையின் கற்றைபோல் இருந்தாள்.
இதுதான் பாதை எனும் உணர்வின்றி
மெதுவாய் அறையினின்று வெளியில் வந்தாள்
பாதி திறந்த கோதையின் விழியோ
பலகறை நடுவில் பதிந்த கோடுபோல்
தோன்றிற்று! மங்கை தூக்கம் நீங்காது,
ஊன்றும் அடிகள் ஓய்ந்து தள்ளாடினாள்
உடைந்த பெட்டிமேல் கிடந்த பிட்டைத்
தொடர்ந்து நாய் தின்பதும் தோன்றவில்லை
நடந்து சென்றவள் நற்பசு வுக்கெதிர்
கிடந்த சாணியைக் கிளறி எடுத்து
மீந்தபாற் செம்பில் விழுந்து கரைத்துச்
சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
தெருவின் குறட்டில் தெளித்தாள்! அவள் குழல்
முள்ளம் பன்றி முழுதுடல் சிலிர்த்தல் போல்
மேலெழுந்து நின்று விரிந்து கிடந்தது!
வாலிழந்து போன மந்தி முகத்தாள்
கோல மிடவும் குனிந்தாள்; தாமரை
போல எழுதப் போட்ட திட்டம்
சிறிது தவறவே தேய்ந்த துடைப்பம்
அவிழ்ந்து சிதறுமே, அப்படி முடிந்தது
பொன்னிறக் கதிரொடு போந்த பகலவன்
இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்!
கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்
காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின!