இருண்ட வீடு/அத்தியாயம்-3

விக்கிமூலம் இலிருந்து


3

பையன் காலைக்கடன் முடிக்காமல்

உணவுண்ணத் தொடங்கினான்;

இரண்டு பற்களின் மறைவு.


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே.
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்.
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்.
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்.
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது!


வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்,
வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது.
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிக விரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்களை எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-3&oldid=1534744" இலிருந்து மீள்விக்கப்பட்டது