இறைவர் திருமகன்/உழைத்தவர் பெற்ற உயர்வு

விக்கிமூலம் இலிருந்து
13. உழைத்தவர் பெற்ற உயர்வு

ஆலயத்திலிருந்து புறப்பட்ட இயேசு நாதர் பெத்தானிக்குப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு மலைச்சரிவில் சிறிது நேரம் தங்கினார்.

அங்கிருந்து பார்க்கும்போது ஜெருசலம் ஆலயம் அழகாகத் தோன்றியது, வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அதன் அழகிய கோபுரம் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன் “ஆலயத்தைப் பாருங்கள்! உயர்ந்த கற்களால் அது எவ்வளவு அழகாகக் கட்டப் பெற்றிருக்கிறது!" என்று அழகுணர்ச்சியுடன் கூறினான்.

இதைக் கேட்ட இயேசுநாதர், துயரத்துடன், “இங்கே ஒரு கல்லின் மேல் மற்றொன்று நில்லாத நாள் வரப் போகிறது" என்றார்.

சீடர்கள் திகைத்து நின்றார்கள். "தலைவரே இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?" என்று கேட்டார்கள்.

“ஒரு நாட்டுக்கெதிராக மற்றொன்று கிளர்ந்து எழும். ஓர் அரசுக்கெதிராக மற்றொன்று புறப்படும்! போர்க்குரல்கள் எங்கும் ஒலிக்கும்! எங்கும் பஞ்சம் பரவும்! கொள்ளை நோய் கூத்தாடும்! நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடுநகரங்கள் சரியும்.

"ஏமாற்றுக்காரர்கள் பலர் தோன்றுவார்கள். நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்.

"அரசர்கள் அதிகாரிகள் முன்னால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். அடித்துச் சிறையில் தள்ளப்படுவீர்கள். எனக்காக நீங்கள் எல்லா மனிதர்களாலும் வெறுக்கப்படுவீர்கள். ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை புனித ஆவி உங்களுக்குச் சொல்லும். இறுதிவரை உறுதியாக நிற்பவன் காப்பாற்றப்படுவான்.

"இறுதி நாளிலே நான் தேவதூதர்கள் சூழ வருவேன். அப்போது அவரவர்க்குரிய தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று எந்த மனிதராலும் சொல்ல முடியாது. விண்ணுலகத் தேவ தூதர்களாலும் விளம்ப முடியாது.

"இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்திருக்கிறான். சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்த சிறப்பான திறமைகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறான். அத்திறமைகளை ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தித் தத்தமக்குரிய வேலைகளை ஒழுங்காக முடிக்க வேண்டும்"

இவ்வாறு கூறிய இயேசுநாதர் இதற்கொரு கதை சொன்னார்.

ஒரு மனிதன் வெளிநாடு போக வேண்டியிருந்தது. அவன் தன் வேலைக்காரர்களை அழைத்து அவர்களிடம் தன் பொருள்களை ஒப்படைத்தான்.

ஒருவனுக்கு அவன் ஐந்து நிறை பொன் கொடுத்தான்; மற்றொருவனுக்கு இரண்டு நிறை பொன் அளித்தான்; மூன்றாமவனுக்கு ஒரு நிறை பொன் வழங்கினான். "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொருளை வீண் செலவு செய்யாமல் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுர்கள். நான் திரும்ப வரும்போது கணக்குச் சொல்ல வேண்டும்" என்று கூறி விட்டுச் சென்றான்.

முதல் வேலைக்காரன் தனக்குக் கிடைத்த பொன்னைக் கொண்டு வாணிபம் செய்தான். தன் திறமையினால் அவன் மேலும் ஐந்து நிறை பொன்னீட்டினான்.

இரண்டாவது வேலைக்காரனும் தனக்குத் தெரிந்த ஒரு வாணிபத்தைச் செய்து மேலும் இரண்டு நிறை பொன்னைச் சேர்த்தான்.

மூன்றாவது வேலைக்காரன் ஒரு சோம்பேறி. ஆகவே, அவன் தனக்குக் கிடைத்த ஒரு நிறை பொன்னைப் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்தான்.

நெடுநாள் சென்று அவர்களுடைய முதலாளி திரும்பி வந்தான். ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளுக்குக் கணக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.

“தலைவரே தாங்கள் எனக்கு ஐந்து நிறை பொன் கொடுத்தீர்கள். நான் மேலும் ஐந்து நிறை ஈட்டியிருக்கிறேன், இதோ பாருங்கள்" என்று பத்து நிறை பொன்னைக் காட்டினான் முதல் வேலைக்காரன்.

இரண்டாவது வேலைக்காரன் தனக்குக் கிடைத்த இரண்டோடு தான் சேர்த்த இரண்டையும் சேர்த்து நான்கு நிறை பொன்னைக் காட்டினான்.

"நன்றாகப் பயன்படுத்தினாய், நீயே உண்மையான வேலைக்காரன்" என்று அவர்கள் ஒவ்வொருவரையும் முதுகில் தட்டிக் கொடுத்தான் முதலாளி, தான் கொடுத்ததையும் ஈட்டியதையும் அவர்களையே வைத்துக்கொள்ளும்படி கூறினான்.

மூன்றாவது வேலைக்காரன் முதலாளி வந்து விட்டார் என்று அறிந்ததும் தான் புதைத்து வைத்திருந்த பொன்னைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். "தலைவரே, நீங்கள் பொல்லாதவர் என்பது எனக்குத் தெரியும். செலவழித்துவிட்டால் சும்மா விடமாட்டீர்கள் என்று அறிவேன். ஆகவே, நீங்கள் தந்த ஒரு நிறை பொன்னையும் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்திருந்தேன். இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன் ஒரு காசு கூடக் குறையவில்லை; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான்.

“ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிப் பயலே! நான் பொல்லாதவன் என்றுதான் உனக்குத் தெரியுமே, என் பணத்தை ஒன்றுக்கும் பயனில்லாமல் வீணாக வைத்திருந்தாயே அறிவற்றவனே. வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருந்தாலும் வட்டி வரும்படியாவது வந்திருக்குமே." என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பி வாங்கினான். அதைப் பத்து நிறை வைத்திருந்த முதல் வேலைக்காரனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான்.

கதையைக் கூறி முடித்த இயேசுநாதர் தீர்ப்பு நாளிலும் இதே கதை தான் நடக்கும். ஆண்டவன் தங்களுக்குக் கொடுத்த ஆற்றலையும் திறமையையும் நன்கு பயன்படுத்தியவர்கள் அவனுடைய பாராட்டைப் பெறுவார்கள். திறமையைப்பயன்படுத்தாது சோம்பேறியாகக் காலங் கழித்தவர்கள், அவன் சினத்துக்கே ஆளாவார்கள்.

"அந்தத் தீர்ப்பு நாளில் உங்கள் அரசர் நல்லவர்களை அழைத்து 'ஆண்டவன் அருளைப் பெற்றவர்களே, உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் பேரரசுக்கு வாருங்கள். நான் பசித்திருந்தபோது நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள். நான் தவித்திருந்த போது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் அயலவனாக வந்த போது நீங்கள் விருந்தினனாக ஏற்றீர்கள். உடுத்தத் துணியில்லாதிருந்த போது ஆடைகள் வழங்கினீர்கள். நோயுற்றிருந்த போது என்னை வந்து பார்த்தீர்கள். சிறைப்பட்டிருந்த போதும் தேடிவந்தீர்கள் நல்லவர்களே. இச்செயல்களை யெல்லாம் நீங்கள் என் உடன் பிறந்த மிக எளிய மனிதனுக்குச் செய்தாலும் அது எனக்குச் செய்ததையே ஒப்பாகும்" என்று கூறுவார்.

நேர்மையும், திறமையுமுள்ள நல்லவர்களுக்கு நிலையான பேரின்பவாழ்வு கிடைக்கும் என்பதை விளக்கிக் கூறிய இயேசுநாதர் தம் சீடர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பெத்தானிக்குச் சென்றார். அங்கு இரவு அமைதியாகக் கழிந்தது. மறுநாள் விடிகாலையில் எல்லாரும் ஜெருசலம் வந்து சேர்ந்தார்கள்.

இயேசுநாதர் மக்களிடையிலே நடமாடினார்; அவர்களுக்கு நல்லறிவுரைகள் போதித்தார். குருமார்களும் பழைமைவாதிகளும் அவரைக் கண்டு பொருமினார்கள் - புகைந்தார்கள். மக்கள் நடுவில் அவரைத் தொடவும் அஞ்சினார்கள். ஏதாவது மறைவிடத்தில் அவரைத் தனியாகப் பிடிக்கத் திட்டமிட்டார்கள். அவருடைய சீடர்களிலே ஒருவனை வசப்படுத்திவிட்டால் அவரை எளிதாகப் பிடிக்கலாம் என்று எண்ணினார்கள்.