இறைவர் திருமகன்/குத்தகைக்கு விட்ட தோட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
12. குத்தகைக்கு விட்ட தோட்டம்

ஆலயத்தினுள் இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். அப்போது பெரிய குருமார்களும் முதிய பெரியோர்களும் அவரிடம் வந்தனர்.

“எந்த அதிகாரத்தின் பேரில் நீர் இச் செயல்களைச் செய்து வருகிறீர் ! உமக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர் யார்?” என்று கேட்டார்கள்.

"நான் உங்களை ஒன்று கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அதன் பின் நான் எந்த அதிகாரத்தின் பேரில் இச் செயல்களைச் செய்து வருகிறேன் என்பதைக் கூறுகிறேன்" என்று பதிலளித்தார் இயேசு நாதர்.

"ஜான் திருமுழுக்காட்டும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? விண்ணுலகிலிருந்தா? அல்லது மக்களிடமிருந்தா?" என்று கேட்டார் அவர்.

இந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று அவர்கள் சிந்தித்தார்கள். 'விண்ணுலகிலிருந்து கிடைத்தது என்று சொன்னால், அப்படியானால் நீங்கள் ஏன் ஜானை நம்பவில்லை என்று கேட்டுவிடுவார். மக்களிடமிருந்து கிடைத்தது என்று சொன்னால், மக்களின் பகையை அடைய நேரிடும். ஏனெனில் ஜான் இறைவனால் அனுப்பப்பட்ட முன்னறிவிப்பாளர் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு மாறுபாடாக நம் பதில் இருக்குமானால், நாம் அவர்களிடையே உள்ள செல்வாக்கை இழக்க வேண்டி வரும்.

இவ்வாறு குழம்பிய அவர்கள் நாங்கள் இதற்குப் பதில் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டார்கள். நானும் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கில்லை என்று மறுமொழி கூறினார் இயேசுநாதர்.

தொடர்ந்து இயேசுநாதர் ஒரு கதை கூறினார்.

ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒருநாள் தந்தை தன் மூத்த மகனிடம் சென்று “மகனே என் திராட்சைத் தோட்டத்தில் போய் வேலை செய்" என்று கூறினான்.

“நான் வேலை செய்ய முடியாது" என்று மறுத்துவிட்டான் அவன். ஆனால் தந்தை சென்றபின் தான் அவ்வாறு கூறியதற்காக வருத்தப்பட்டு, போய் வேலையைச் செய்தான்.

தந்தை தன் இளைய மகனிடம் சென்று திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யச் சொன்னான். "இதோ போகிறேன் அப்பா!" என்று கூறினான் இளையவன். ஆனால் அவன் வேலை செய்யப் போகவேயில்லை.

“இந்த இருமக்களில் யார் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவன்" என்று கேட்டார் இயேசுநாதர்.

"மூத்த மகன்!" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

"ஜான் உங்களுக்கு நேர் வழியைப் போதித்த போது நீங்கள் அதை ஏற்க மறுத்தீர்கள். ஆனால் பாவிகளாகிய வரிவசூல் செய்பவர்களும் தீயவர்களும் அதை நம்பினார்கள். தங்கள் தீச்செயல்களுக்காக வருந்தினார்கள். நீங்கள் உங்கள் தவறுகளுக்காக வருந்துவதாகவே தெரியவில்லை. நீங்கள் அவரை நம்பவேயில்லை. எனவே பாவிகளும் தீயவர்களும் உங்களுக்கு முன்னால் இறைவனின் பேரரசை எய்துவார்கள்” என்று கூறிய இயேசுநாதர் மற்றுமொரு கதை கூறினார்.

குடித்தனக்காரன் ஒருவன் திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைத்தான். அதைச் சுற்றி வேலி கட்டினான். சாறுபிழியும் பொறி ஒன்றை அமைத்தான். ஒரு கோபுரமும் கட்டினான். அதைத் தன் பண்ணையாட்களிடம் விட்டு விட்டு அவன் வேறொரு நாட்டுக்குச் சென்று விட்டான்.

பழுக்கும் பருவத்தில் அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பித் திராட்சைப் பழங்களைக் கொண்டுவரும்படி சொன்னான்.

வந்த வேலைக்காரர்களை அந்தப் பண்ணையாட்கள் கொடுமைப்படுத்தினார்கள். ஒருவனை அடித்து விரட்டினார்கள். மற்றொருவனைக் கொன்று போட்டார்கள். இன்னொருவனைக் கல்லெறிந்து விரட்டி விட்டார்கள்.

மீண்டும் அந்தக் குடித்தனக்காரன் அதிக எண்ணிக்கையில் வேலைக்காரர்களை அனுப்பினான். அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது.

கடைசியில் அவன் தன் மகனை அனுப்பினான். "என் மகனுக்கு அவர்கள் மரியாதை காட்டுவார்கள்" என்று அவன் நினைத்தான்.

ஆனால் அந்தப் பண்ணையார்கள் “இவன் அவனுடைய வாரிசு. வாருங்கள் இவனைக் கொன்று போட்டு வாரிசுரிமையை நாமே அடைவோம்" என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

அவனைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியில் இழுத்துச் சென்று வெட்டிக் கொன்று விட்டார்கள்.

"பண்ணைச் செந்தக்காரன் வரும்போது இந்தப் பண்ணையாட்களை என்ன செய்வான்?" என்று கேட்டார் இயேசுநாதர்.

"அந்தக் கொடியவர்களை ஒழித்துக் கட்டி, தன் பண்ணையை, ஒழுங்கான வேறு ஆட்களிடம் ஒப்படைப்பான்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

"கட்டிட வேலைக்காரர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே, மூலைக்கு முதற்கல்லாக அமைந்தது. என்று நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா? இதுதான் இறைவனின் செயல். இதுதான் நமக்கு ஆச்சரியம் தருவது.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற இறைவனின் பேரரசு பறிக்கப்படும் அது பயன் கொடுக்கும் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

“இந்தக் கல்லின் மேல் விழும் யாரும் உறுப்பொடிந்து போவார்கள். யார் மேல் இந்தக் கல் விழுகிறதோ அவர்கள் நசுங்கித் தூளாகிப் போவார்கள்."

இந்தக் கதைகள் தங்களைத் தான் குறிக்கிறதென்று பெரிய குருமார்களும் பழைமைவாதிகளும் கண்டறிந்தார்கள்.

ஆனால் அவர்கள் இயேசுநாதரின் மேல் கை வைக்க அஞ்சினார்கள். ஏனெனில் மக்கள் இயேசுநாதரின் பக்கம் இருந்தார்கள். அம் மக்கள் இயேசுநாதரை ஆண்டவன் அனுப்பிய முன்னறிவிப்பாளராகக் கொண்டாடினார்கள்.