இறைவர் திருமகன்/எளிமையில் கிடைக்கும் உயர்வு

விக்கிமூலம் இலிருந்து
7 எளிமையில் கிடைக்கும் உயர்வு

“இறைவனின் பேரரசை நிலைநாட்டவே நான் வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் கூறிவந்தார். இதைக் கேட்ட அவருடைய பன்னிரண்டு சீடர்களும், உண்மையிலேயே பூவுலகில் அவர் ஓர் அரசாட்சியினை நிறுவப் போகிறார் என்று எண்ணினார்கள். எத்தனையோ நாட்கள் அவர் கூடவே இருந்தும் அவர்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. ரோமானியர்களை விரட்டிவிட்டு அவர் ஜெருசலத்தின் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த எண்ணம் அவர்கள் மனத்தில் பல கற்பனைகளை உருவாக்கியது. புதிய அரசில் நம் நிலை என்ன? என்று அவர்கள் மனக்கோட்டை கட்டத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் வீடு வாசலைத் துறந்து இயேசு நாதரின் பின்னே சுற்றிக் கொண்டிருந்ததற்கு தக்க பரிசு கிடைக்காமல் போகாது என்று அவர்கள் நம்பினார்கள். நம்மிலே யாருக்குப் பெரிய பதவி கிடைக்கும்? என்று அவர்கள் ஆலோசித்தார்கள்.

தங்களுக்குள் அவர்கள் பலவாறு பேசிக் கொண்டாலும், இயேசுநாதரிடம் எதுவும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

தனக்குச் சிறிது தொலைவில் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டு வந்ததெல்லாம் அவர் காதில் விழவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணங்களை அவர் அறிந்து கொண்டார்.

கேப்பர்நவும் நகருக்கு சென்று ஓய்வாக இருக்கும்போது இயேசுநாதர் அவர்களைத் தம் அருகில் அழைத்தார். "அன்பர்களே, வழியில் என்ன பேசிக் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்.

அவர்களுக்குத் தாங்கள் பேசிய செய்தியைச் சொல்லக் கூச்சமாயிருந்தது. யாரும் வாய் திறக்கவில்லை.

பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை அவர் கூப்பிட்டார். அது ஆவலோடு ஓடிவந்தது.

அவர் தம் பன்னிரண்டு சீடர்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "உங்களில் யாராவது பெரியவராக வேண்டுமானால், அவர் எல்லாருக்கும் ஊழியராக இருக்க வேண்டும். இந்த உலகில் யார் மிகவும் எளியவராக இருக்கிறாரோ அவரே விண்ணுலகப் பேரரசில் மிகப் பெரியவராக இருக்க முடியும். ஆனால், நான் உங்களுக்கு ஒன்று கூறுவேன்: நீங்கள் பணிவு மிக்கவர்களாகவும், இந்தக் குழந்தையைப் போல என்னிடம் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லாவிட்டால், நீங்கள் விண்ணுலகப் பேரரசில் இடம்பெறவே முடியாது" என்று கூறினார்.

பன்னிரண்டு அன்பர்களும் வாய் திறவாமல், இயேசுநாதரையும் அந்தச் சிறு குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருக்குத்தான் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு !