இறைவர் திருமகன்/பாதகன் வீட்டு விருந்து

விக்கிமூலம் இலிருந்து
9. பாதகன் வீட்டு விருந்து

ஜெரிச்சோ என்ற நசரின் வழியாக இயேசு நாதர் சென்று கொண்டிருந்தார். ஊருக்கு வெளியே வந்து கொண்டிருக்கும்போதே, அவர் வரப்போகும் செய்தி ஊரெங்கும் பரவிவிட்டது. வழிநெடுகிலும் மக்கள் கூட்டங் கூட்டமாக நின்று அவரை வரவேற்கவும் அவர் வாழ்த்தைப் பெறவும், அவர் வருவதைக் காணவும் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

வீதி ஓரங்களில் இடித்து நெருக்கிக் கொண்டு நிற்பவர் பலர்; சாளரங்களிலும் வாயிற்படிகளிலும் ஏறிநின்று அவரை நன்றாகப் பார்க்க முயன்றவர் பலர்; வீட்டுக் கூரைகளிலேயே நின்று கொண்டு காணவிரும்பியவர் பலர்; இப்படியாக அவரைப் பார்க்கும் ஆவலுடன் மக்கள் கூடிநின்றார்கள். வழியில் வீதியோரமாக நின்ற ஒரு பெரிய மரத்தைக் கூர்ந்து நோக்கினார் இயேசுநாதர்.

அந்த மரக்கிளை யொன்றிலிருந்து இயேசு நாதரைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். இயேசுநாதரும் அவனைப் பார்த்து விட்டார்.

அந்த மனிதன் பெயர் சாச்சியஸ். ஜெரிச்சோ நகர் முழுவதும் அவனையறியும். ஆனால், மக்களில் ஒருவர் கூட அவனை விரும்பியதில்லை. அத்தனை பேரின் வெறுப்புக்கும் ஆளாகிய அவன் ஒரு வரி வசூல் அதிகாரி அவன் மிகவும் குட்டையானவன். எனவே, தன்னை வெறுக்கும் கூட்டத்தின் இடையில் புகுந்து முன் செல்ல முடியாமல் அவன் மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து அவன் இயேசு நாதரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இயேசுநாதர் தன்னைக் கவனிப்பார் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. "சாச்சி யஸ், விரைவில் கீழே இறங்கி வா. இன்று நான் உன் வீட்டில்தான் தங்கப் போகிறேன்" என்று இயேசுநாதர் கூறியவுடன் அவன் வியப்பு மேலும் பெருகியது.

யாருக்கும் கிடைக்காத பேறு பாவியாகிய தனக்குக் கிடைத்ததை எண்ணி அவன் உள்ளம் களிபொங்கியது. மகிழ்ச்சியுடன் பரபரவென்று அவன் மரத்தினின்றும் இறங்கினான். இயேசுநாதருக்கு விருந்து ஏற்பாடு செய்வதற்காகவும், அவர் வரும் போது தானே முன்னின்று வரவேற்பதற்காகவும் அவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

சாச்சியசுக்கு அது அவன் வாழ்விலே ஒரு பெரிய நாள். எதிர்பாராத இன்பத் திருநாள். அவன் ஒரு பெரிய பணக்காரன்தான்; அருமையான வீட்டையுடையவன்தான். ஆனால் அவன் ஒரு பாவி. மக்களால் வெறுக்கப்படும் வரி வசூல் அதிகாரி. தன் அதிகாரத்தை அவன் முறையோடு செலுத்தியவனும் அல்லன். தன் அதிகாரத்தைத் தவறான வழிகளிலேயே பயன்படுத்தி மக்களைக் கசக்கிப் பிழிந்த மாபாதகன். அப்படிப்பட்ட தீயவனாகிய அவன் வீட்டுக்கு இயேசுநாதர் எழுந்தருள முன் வந்தது வியப்பாகவேயிருந்தது.

இயேசுநாதர் அவன் வீட்டுக்கு வந்து விட்டார். அவருடைய சீடர்கள் பன்னிருவரும் கூடவே வந்துவிட்டார்கள். சாச்சியஸ் அவர் எதிரில் வந்தான். அவன் உள்ளம் குறுகுறுவென்றது. எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றான். தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். தன்னைப் பற்றிய அருவருக்கத்தக்க உண்மையை வாய்விட்டுக் கூறினான்.

"பெருமானே, உண்மையில் நான் ஒரு பாவி, என் செல்வம் அனைத்தும் தீயவழியில் சேர்க்கப்பட்டவை. பெருமானே, என் சொத்துக்களில் பாதியை நான் ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். தவறான முறையில் நான் சேர்த்த ஒவ்வொரு காசுக்கும் நான்கு காசு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று இயேசுநாதரின் முன் வீழ்ந்து வணங்கினான்.

"அப்பா, நீ உண்மையிலேயே திருந்திவிட்டாய்! ஆண்டவன் உன்னை மன்னிப்பார்" என்று திருவாய் மலர்ந்து அருள் புரிந்தார் இயேசுநாதர்.

வீட்டுக்கு வெளியே நின்ற யூதர்களோ, பாவியொருவன் வீட்டிலே சென்று இயேசு நாதர் தங்குவதைப் பற்றித் தமக்குள் வெறுப்புடன் பேசிக் கொண்டனர். அவருக்குத் தங்குவதற்கு வேறு இடமா கிடைக்கவில்லை என்று கேட்டுக் கொண்டனர்.

சாச்சியஸ் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரமாயிருந்தது. தன் பாவங்களை யெல்லாம் அவன் உணர்ந்து ஒப்புக்கொண்டு விட்டான் இயேசுநாதரின் மூலமாக அவன் ஆண்டவனின் மன்னிப்பைப் பெற்றுவிட்டான். இயேசுநாதரோ, வரி வசூலிப்பவனாகிய அவனுடன் உட்கார்ந்து சாப்பிட முன்வந்ததன் காரணமாக, விண்ணுலகப் பேரரசில் ஒருவனைச் சேர்க்கும் பேறு பெற்றார்.

இந்த இன்ப மாற்றத்தினை வெளியில் இருந்த கூட்டம் உணரவில்லை!.